Monday, May 10, 2010

நாட்டின் கல்வி வளர்ச்சியை தடுக்க சிபிஐ சதி ?


நாட்டின் கல்வி வளர்ச்சியை தடுப்பதற்கு மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ முயற்சி செய்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் எழுந்துள்ளன.


இந்தியா போன்ற, வளர்ந்து வரும் நாடுகளில், கல்வி மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. மேலும், அடிப்படை மருத்துவ வசதிகள் மிக மிக குறைவாக உள்ளன. பெரும்பாலான மக்களுக்கு, மருத்துவ வசதிகள் இல்லாமல் அல்லல் படுகின்றனர்.
சரிவர மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தாலேயே, பலர் இறக்க நேரிடுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


இது போன்ற அவல நிலையை தடுப்பதற்காகவே, இந்தியாவின் மருத்துவ கவுன்சிலின் தலைவராக இருந்த, கேதன் தேசாய் என்பவர், இந்தியாவின் மருத்துவக் கல்வியை மேம்படுத்துவதற்காக அரும்பாடுபட்டு வந்திருக்கிறார்.


கேத்தன் தேசாய்



இந்தியாவில் பள்ளிப் படிப்பை முடித்து, பல பாடங்களில் பெயிலாகி, டாக்டராக முடியாமல் அவஸ்தைப் படுபவர்கள், தங்களின் பண பலத்தால், ரஷ்யா சென்று படித்து டாக்டராகி வருகின்றனர். இவ்வாறு பலர் ரஷ்யா செல்வதால், இந்தியாவின் பணம், ரஷ்ய நாட்டுக்கு செல்கிறது. இதையும் தடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், அருமை மருத்துவர் கேத்தன் தேசாய், பல்வேறு திட்டங்களை வகுத்து, இந்தியாவில் மருத்துவக் கல்வி மிகச் சிறப்பாக வளர, இவர் மேற்கொண்ட திட்டங்களை, மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ, தீய உள்நோக்கத்துடன் தடுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேத்தன் தேசாய் மேற்கொண்ட அற்புதமான திட்டங்களில் சில.
ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிப்பில், அறிவியல் பாடங்களையே படிக்காத, த்ரேசியா கோக்கட்டு என்பவரை, மருத்துவராக பதிவு செய்திருக்கிறார்.

வெறும் ஹோம் சைன்ஸ் பாடத்தை படித்த, மரீனா ஃப்ரான்சிஸ் என்பவரை மருத்துவராக பதிவு செய்திருக்கிறார். ஏப்ரல் 2003ல், உச்ச நீதிமன்றம், ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கையில், அறிவியல் படிப்புகளான, உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) ஆகிய படிப்பை படிக்காதவர்கள், மருத்துவர்களாக ஆக இயலாது என்று வழங்கிய தீர்ப்புக்குப் பிறகும், இவ்வாறு, கேத்தன் தேசாய், அனைவரையும், மருத்துவர்களாக பதிவு செய்ய அனுமதி அளித்திருப்பதன் மூலம் எத்தனை பெரிய சேவையை ஆற்றியிருக்கிறார் தேசாய் ?

பொறுக்குமா இந்த சிபிஐக்கு ?

இது மட்டுமல்ல. ப்ளஸ் டூ படிக்கையில் தியரி பாடங்களில் பெயில் ஆனவர்களை கூட, டாக்டர்.தேசாய், மருத்துவர்களாக பதிவு செய்ய அனுமதித்திருக்கிறார்.


மருத்துவ பட்டப் படிப்புக்கான விதிமுறைகளின் படி, முதலாண்டு, படிக்கும் எம்பிபிஎஸ் மாணவர், நான்கு வாய்ப்புகளுக்குள், தன்னை தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது, முதல் ஆண்டு எம்பிபிஎஸ் ல் பெயில் ஆனால், நான்கு முறைகளுக்குள், பாஸ் செய்யலாம் என்பது விதி.

அதற்காக, நான்கு முறை பெயில் ஆன ஒரு மாணவர் டாக்டராகவே ஆக முடியாது என்பது எப்படிப் பட்ட ஒரு சமூக அநீதி ? அதனால்தான், டாக்டர்.தேசாய், நாக்பூர் அரசு மருத்துவ கல்லூரி, என்கேபி.சால்வே மருத்துவக் கல்லூரி மற்றும் பல்வேறு கல்லூரிகளில் பயின்ற மாணவர்களை ஏழாவது, எட்டாவது முறை கூட, தேர்வு எழுத அனுமதித்து உள்ளார்.

இது என்ன இப்படிப்பட்ட ஒரு விதி அநியாயமாக உள்ளதே என்று உணர்ந்த டாக்டர் தேசாய், 2003ம் ஆண்டு, வெறும் நாலே நாலு அட்டெம்ப்டுகள்தான் என்று இருந்த இந்த விதியையே எடுத்து விட்டார்.


இவ்வாறு, இந்தியாவில் உள்ள அனைவரையுமே (பணம் உள்ளவர்கள்) மருத்துவர்களாக ஆக்க வேண்டும், இந்தியாவின் கல்வித் தரத்தை ரஷ்யாவுக்கு இணையாக உயர்த்த வேண்டும், இந்தியாவின் மருத்துவத்தை மேம்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் செயல்பட்ட டாக்டர் தேசாய் மீது அநியாயமாக வழக்கு பதிவு செய்து, கைது செய்துள்ளது இந்த சிபிஐ.

இந்த தேசாய் மீது அப்படி என்னதான் குற்றச் சாட்டு ? ஒன்றும் பெரிய குற்றச் சாட்டு இல்லை. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாகாணத்தில், மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரி, அகில இந்திய மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. இந்த கல்லூரியை ஆய்வு செய்த, மருத்துவக் கவுன்சிலின் ஆய்வுக் குழு, ஆய்வுக்குப் பின் இந்தக் கல்லூரியில், அனுமதி அளிப்பதற்கு போதுமான வசதிகள் இல்லை. அதனால், அனுமதி வழங்க இயலாது என்று முடிவெடுக்கப் பட்டுள்ளது.

அந்த மருத்துவக் கல்லூரியின் துணைத் தலைவர், நம் கேத்தன் தேசாயிடம் உங்களுக்கு லஞ்சம் தருகிறேன், கல்லூரிக்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்டுள்ளார். தேசாயும், மிக மிக குறைந்த அளவு லஞ்சத் தொகையாக வெறும் இரண்டு கோடியை கேட்டுள்ளார். இந்த இரண்டு கோடி தொகையானது, டெல்லியைச் சேர்ந்த ஒரு இடைத் தரகரிடம், தேசாய்க்கு கொடுக்கும் படி, கொடுத்தனுப்பப் பட்டுள்ளது.

இது பொறுக்கவில்லை சார் சிபிஐக்கு… !
யாருமே புகார் கொடுக்காமல், இடைத் தரகர், மருத்துவக் கல்லூரியின் துணைத் தலைவர், கேத்தன் தேசாய் அப்புறம் அந்தக் கல்லூரியின் இன்னொரு அலுவலர் ஆகிய நால்வரையும், கைது செய்து விட்டது சார்…

என்ன அநியாயம் பாருங்கள் ?
ஒரு லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தி விட்டு, மீண்டும், தொலைத் தொடர்புத் துறைக்கே அமைச்சராக வந்து உட்கார்ந்திருக்கிறார் நமது “தலித்“ ராஜா. வெறும் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் என்று, இந்தியாவை மருத்துவக் கல்வியில் முன்னேற்ற வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்திற்காகவே உழைத்த, ஒரு மகானைப் போய் கைது செய்திருக்கிறது

பாருங்கள் சிபிஐ ?


என்ன கொடுமை சரவணன் இது ?

சவுக்கு


Sunday, May 9, 2010

பேராசைக் காரனடா பார்ப்பான்






பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்
பெரியதுரை என்னினுடல் வேர்ப்பான்
யாரானாலும் கொடுமை இழைப்பான் - துரை
இம்மென்றால் நாய்போல உழைப்பான்.

என்று பாரதி சொன்னது எத்தனை சத்தியமான வார்த்தைகள் ? இந்தப் பதிவு எந்த பார்ப்பானைப் பற்றித் தெரியுமா ? இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலராக உள்ள என்.சீனிவாசன் என்பவரைப் பற்றித் தான் ?

இந்திய சிமென்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருக்கும் இந்த என்.சீனிவாசனின் பேராசைப் பற்றித் தான் இன்று இப்பதிவு விவாதிக்கப் போகிறது.
இந்த என்.சீனிவாசன், தொடக்கம் முதலே, கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமாக அறியப் பட்டவர். ஜெயந்திரர் கைதின் பொழுது, அவரைக் காப்பாற்ற, சீனிவாசன் எடுத்த முயற்சிகள், வெற்றி பெறாமல் போனது. ஆனால், கருணாநிதி குடும்பத்துடன், எப்போதும் நெருக்கமாக அறியப்படுபவர் தான் இந்த என்.சீனிவாசன்.

சமீபத்தில் ஒலிபரப்பப் பட்ட தொலைபேசி உரையாடலின் போது, கனிமொழி சொன்னது போல், வெளிப்படையாக பேசுவது ஒன்று, உண்மை நிலை வேறு என்று சொன்னது, கனிமொழியின் தந்தைக்குத் தான் பொருந்தும். ஊருக்கு, பார்ப்பன எதிர்ப்பு, பெரியார் அரசியல், உள்ளுக்குள், பார்ப்பனர்களோடு கள்ள உறவு. இதுதான் கருணாநிதி.

சமீபத்தில், ஐபிஎல், சர்ச்சை எழுந்ததும், முதலில், கொச்சி அணி ஏலம் எடுத்ததில் சிக்கல் என்று இந்த பிரச்சினை தொடங்கியது. பிறகு, லலித் மோடி, இதில் ஏதோ விளையாடி விட்டார், ஏகப்பட்ட கருப்புப் பணத்தை சேர்த்துள்ளார் என்ற செய்தி வெளி வந்தது. பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஷஷாங்க் மனோகரும், செயலர் என்.சீனிவாசனும், கூட்டணி அமைத்து, லலித் மோடிக்கு எதிராக களம் இறங்கினர். திடீரென, லலித் மோடி எப்படி பிசிசிஐன் பெரிய எதிரியாகிப் போனார் என்பது அதிசயம். மோடி மீது நடவடிக்கை எடுக்கப் படுமா, படாதா என்ற சர்ச்சைகள் எழுந்து, விவாதிக்கப் பட்டுக் கொண்டிருந்த போதே, மனோகர், சீனிவாசன் அணி, லலித் மோடிக்கு எதிராக பேட்டி கொடுக்க ஆரம்பித்தது.




லலித் மோடி, ஒன்றும் சத்தியச் சந்திரன் இல்லை. பெரிய யோக்கியன் ஒன்றும் இல்லை. ஆனால், இத்தனை ஆண்டுகள், ஐபிஎல், 1, 2 எல்லாம் நடக்கும் போது, அமைதியாக இருந்த மனோகர், சீனிவாசன் கூட்டணி, இப்போது, திடீரென சீறி எழுந்ததற்கான காரணம் என்ன ? இந்த திடீர் கோபத்தில் சாதிய உள்ளீடுகள், இருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. (லலித் மாடி, கொஞ்சம் கருப்பா வேற இருக்கார்)
லலித் மோடி மீது எழுந்த முக்கிய குற்றச் சாட்டு, “முரண் விருப்பம்“ (Conflict of interest). அதாவது, கொச்சி அணியிலும், இதர அணிகளிலும், மோடிக்கும், அவர் உறவினர்களுக்கும் பங்குகள் உள்ளன என்பது.

இந்தக் குற்றச் சாட்டை முகத்தளவில் (face value) எடுத்துக் கொண்டால் கூட இதில் மோடியை விட, மோசமான குற்றத்தை புரிந்தவர் என்.சீனிவாசன். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர், என் சீனிவாசன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதலாளி, என்.சீனிவாசன். இந்திய செஸ் பெடரேஷனின் தலைவர் என்.சீனிவாசன்.
லலித் மோடி செய்வது முரண் விருப்பமென்றால், சீனிவாசனின் நடவடிக்கைகளுக்கு என்ன பதில் ?


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மிக மிக அயோக்கியத்தனமான ஒரு அமைப்பு. இதற்கு வசதியான போது, பொதுத்துறை நிறுவனம் என்று அழைத்துக் கொள்ளும். வசதி இல்லாத போது, தனியார் நிறுவனம் என்று அழைத்துக் கொள்ளும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, பிசிசிஐ டம் கேள்வி கேட்டால், தனியார் நிறுவனம் என்று கூறிக் கொள்ளும். மத்திய அரசிடம் வரி விலக்கு கேட்க வேண்டும் என்றால் மட்டும், பொதுத் துறை நிறுவனம் என்று கூறிக் கொள்ளும்.

இப்படிப் பட்ட ஒரு அதி பயங்கரமான ஊழல் நடப்பதை, பல ஆண்டுகளாக இந்த ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் இருந்ததற்கு காரணமே, இந்த விளையாட்டினால், ஊடகங்கள் அடையும் கொள்ளை லாபம் தான். இந்த லாபங்களினால், ஊடகங்கள், இதில் நடைபெறும் ஊழலை கண்டு கொள்ள வில்லை.

இந்த ஊழலை வெளிக் கொண்டு வந்ததில், சசி தரூருக்கு, பெரிய பங்கு உண்டு. இவ்விவகாரத்தில், சசி தரூர் மட்டும் சிக்கவில்லை என்றால், இந்த விவகாரம், இத்தனை தூரத்திற்கு வெளியில் வந்திருக்காது.



தற்பொழுது, பல்கேரியா நாட்டில், சதுரங்க போட்டிக்கான, ஆனந்த் டோபலோவ், போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தங்கள் நாட்டில் நடத்துவதற்கு பல்கேரியா நாடு செலவிட்ட தொகை 13 கோடி. விஸ்வநாதன் ஆனந்துக்கு, இந்தப் போட்டியை இந்தியாவில் நடத்த விருப்பம். ஆனால், “காசேதான் கடவுளடா“ இல்லையா ? ஸ்பான்சர்கள் கிடைக்காத காரணத்தால், இப்போட்டி, பல்கேரியா நாட்டுக்கு சென்றது.
என்.சீனிவாசன், சதுரங்க பெடரேஷனின் தலைவராக பொறுப்பேற்ற பிறகுதான், சதுரங்க பெடரேஷன், இப்படிப் பட்ட சரிவைச் சந்திருக்காது என்று கூறுகிறார்கள். 2009 அன்று உள்ளபடி, வரிக்கு பிந்தைய இந்தியா சிமென்ட்சின் வருமானம் எவ்வளவு தெரியுமா 511 கோடி. இந்த சதுரங்கப் போட்டிக்கான ஸ்பான்சராக இந்தியா சிமென்ட்சே பொறுப்பேற்றிருந்தால், 13 கோடி என்பது ஒரு பெரிய விஷயமல்ல. மேலும், இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெற்றிருப்பது, சதுரங்க விளையாட்டுக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருந்திருக்கும்.

ஆனால், என்.சீனிவாசன், சதுரங்க பெடரோஷனின் தலைவராக பொறுப்பேற்ற பிறகுதான், இந்த பெடரேஷன் இப்படிப் பட்ட ஒரு சரிவை சந்தித்தது என்று தெரிகிறது.



என்.ராமச்சந்திரன்


அடுத்து, இந்தியாவின் ஸ்குவாஷ் பெடரேஷனின் தலைவர் யார் தெரியுமா ? என்.சீனிவாசனின் சகோதரர், என்.ராமச்சந்திரன். இந்திய விளையாட்டு அமைச்சகத்தின் அங்ககாரம் பெற்ற அமைப்பாக இருப்பதால், இந்த பெடரேஷனுக்கு வரும் நிதி அத்தனையையும் நிர்வாகம் செய்யும் பொறுப்பு என் ராமச்சந்திரனுக்குத் தான்.




இப்போது ஒரு நம்பிக்கை கீற்றாக, உச்ச நீதிமன்றம், விளையாட்டை வைத்து, பணம் சம்பாதித்து, தற்போது சம்பாதிக்க இயலாமல், உள்ள இன்னொரு பண முதலை, ஏ.சி.முத்தையா தொடர்ந்த வழக்கில், என்.சீனிவாசனுக்கும், பிசிசிஐக்கும், நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இப்போது சொல்லுங்கள்.
பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்
பெரியதுரை என்னினுடல் வேர்ப்பான்
யாரானாலும் கொடுமை இழைப்பான் - துரை
இம்மென்றால் நாய்போல உழைப்பான்.

பாரதியின் இந்தப் பாட்டு சரிதானே ?



சவுக்கு

Saturday, May 8, 2010

மானங்கெட்ட ராசா ?





மீண்டும், ஸ்பெக்ட்ரம் என்னும் பூதம், ராசாவையும், திமுகவையும், பிடித்து ஆட்டத் தொடங்கியிருக்கிறது.



மத்திய புலனாய்வு நிறுவனம், சி.பி.ஐ, தொலைத்தொடர்பு அலுவலகத்தையும், இது தொடர்பாக மேலும் பல்வேறு அலுவலகங்களிலும் சோதனை நடத்தியிருக்கிறது. இச் சோதனைகள், ஆ.ராசா ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சராக இருக்கையிலேயே, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஐ ஆல் நடத்தப் பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.




ராசா சமுதாயத்தின் அடித்தட்டு வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், பத்திரிக்கைகளாலும், டெல்லி வட்டாரங்களாலும் அவர் குறி வைத்து தாக்கப் படுகிறார் என்று கருணாநிதி தன் “நா”நயத்தால் உரைக்கக் கூடும்.



ஸ்பெக்ட்ரம் இந்தியா சந்தித்த மிகப் பெரிய ஊழல்களில் ஒன்று என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. தோராயமான கணக்கின்படி கூட, 60,000 கோடிக்கு குறையாமல், அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று பத்திரிக்கைகள் கூறுகின்றன.

இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலில் என்னதான் நடந்தது ? ஜனவரி 2008ல் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு, முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் லைசென்சுகள் வழங்கப் பட்டன. ஒரு லைசென்சின் விலை 1651 கோடி. இதில் என்ன தவறு ?



இந்தத் தொகை எப்படி நிர்ணயிக்கப் பட்டது தெரியுமா ? ஜனவரி 2001ல் ஏலம் விடப்படுகையில் என்ன தொகைக்கு போனதோ, அதே தொகைக்கு 7 ஆண்டுகள் கழித்து நிர்ணயிக்கப் பட்டது. 2001ல் இருந்ததை விட 2008ல் ஆறு மடங்கு விலை கூடியிருந்தும், பழைய விலைக்கே ராசா ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வழங்கியுள்ளார்.


ஆறு மடங்கு விலை உயர்ந்து விட்டது என்று எப்படி கூறுகிறார்கள் ? எப்படியென்றால் ராசாவின் தாராள குணத்தால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் ஆகிய இரு நிறுவனங்களும், தாங்கள் பெற்ற ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒரு சில மாதங்களிலேயே ஆறு மடங்கு லாபம் வைத்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றன.

இதில் அடுத்த முறைகேடு என்னவென்றால், இவ்வாறு ஒதுக்கீடு செய்யப் பட்டது திறந்த ஏலம் அடிப்படையில் நடக்கவில்லை. “முதலில் வருபவருக்கே முன்னுரிமை” என்ற முறையில் நடந்தது. இந்த முறையிலும் கூட, ராசா விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளை, தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்றினார் என்றும் குற்றச் சாட்டு உள்ளது.

இந்த ஊழல் முதலில் வெளிவருகையில், கருணாநிதி குடும்பம் பிளவு பட்டிருந்தது. இதனால், தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியை இழந்த தயாநிதி மாறன் சன் டிவி மூலம், இந்த ஊழலை மிகப் பெரிதாக பிரச்சாரம் செய்தார். உடனே, ராசா, எனக்கு முன் இருந்த மந்திரி (தயாநிதி மாறன்) எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் பட்டதாக தெரிவித்தார். உடனே, சன் டிவி, மாறன் இந்த கொள்கை முடிவை எடுக்கவேயில்லை, அவர் காலத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கு விடப்படவேயில்லை என்று மறுப்பு கூறியது.

உடனே ராசா, தொலைத் தொடர்பு ஒழுங்கு ஆணையம் (டிராய்) எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் பட்டதாக தெரிவித்தார். ஆனால் ட்ராய், உடனடியாக மறுப்பு தெரிவித்தது.

டிசம்பர் 2008ல் பிரிந்த குடும்பம் ஒன்று கூடியதும், கருணாநிதிக்கு “இதயம் இனித்தது, கண்கள் பனித்தது”. சன் டிவிக்கும், கருணாநிதிக்கும், ஸ்பெக்ட்ரம் ”ஊழல் முடிந்தது”.



பொதுத்தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றதும், முன்பை விட, அதிக இடங்கள் கிடைத்ததும், திமுகவின், பலம் சோனியா காந்தியிடம் குறைந்தது. 2004ல், தமிழ்நாடு இல்லத்திற்கு வந்து கருணாநிதியை சந்தித்து ஆதரவு கேட்ட சோனியா, 2009ல் தன்னை தள்ளு வண்டியில் வந்து பார்க்க வைத்தார். கேட்ட இலாக்காக்கள் ஒதுக்கப் படாததால், கோபித்துக் கொண்டு, கருணாநிதி, தள்ளுவண்டியிலேயே திரும்பி வந்தார்.

ஆனால், தனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்கால், ராசாவுக்கு, மீண்டும் தொலைத் தொடர்புத் துறையை பெற்றுத் தந்தார்.

ஆனால், இம்முறை மீண்டும், தொலைத்தொடர்புத் துறையை பெற்ற ராசா, ‘பல் பிடுங்கிய பாம்பாக’ ஆக்கப் பட்டார். எந்த விஷயத்திலும், தனித்து முடிவெடுக்க முடியாமல், கண்காணிக்கப் பட்டார். இதெல்லாம், கருணாநிதிக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும், ஒன்றும் செய்ய முடியாமல், பல்லைக் கடித்துக் கொண்டிருக்கிறார்.



ராசா மீது, இந்தக் குற்றச் சாட்டு மட்டுமல்ல. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ. ராசா மீது 2ஜி மற்றும் 3ஜி வழங்கியது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுக்கள் மக்கள் மனத்திலிருந்து இன்னும் நீங்காத நிலையில், தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டினை ‘தி பயனீர்‘ நாளிதழ் சுமத்தியிருக்கிறது. இந்த தடவை, BSNL நிறுவனம் வைமாக்ஸ் சர்வீஸ் (WiMax services) தொடர்பாக, அமைச்சரின் தொகுதியான பெரம்பலுரைச் சேர்ந்த அமைச்சருக்கு மிகவும் நெருங்கிய நண்பருக்கு வழங்கப்பட்டிருப்பதாக அது குற்றம் சாட்டியிருக்கிறது.


இந்தியாவில் BSNL நிறுவனத்தின் கீழ் 16 சர்க்கிள்கள் இருக்கின்றன. இவற்றில் வருவாய் அதிகம் வரக்கூடிய ஏழு சர்க்கிள்களுக்கு வெல்காம் கம்யூனீகேஷான்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடேட் (Wellcom Communication India Private Ltd) என்னும் நிறுவனம் உரிமங்கள் கோரி விண்ணப்பித்திருக்கிறது. இந்த நிறுவனம் உரிமங்களைப் பெற்றபின், முன் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக லாபத்திற்கு விற்றது போல், தற்போது விற்றிடலாம் என்று நிறுவனத்தின் முக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



BSNL நிறுவனமே நேரடியாக வைமாக்ஸ்சை அளித்திடக்கூடிய அளவிற்கு வல்லமை பெற்றிருக்கூடிய சூழ்நிலையில் இதனை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்று அவர்கள் கோருகின்றனர். வைமாக்ஸ் தொழில்நுட்பம் மூலமாக வருங்காலத்தில் மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்களுக்குக்கான ஒயர்லஸ் இண்டர்நெட் வசதி, வாயிஸ் மெயில் வசதிகளைப் பெற்றிடமுடியும். முதலாம் ஆண்டில் சுமார் 50 ஆயிரம் வைமேக்ஸ் இணைப்புகளுக்கான சந்தாதாரர்கள் கிடைத்து விடுவார்கள் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் சந்தாதாரர்களாக உயர்ந்துவிடும் என்றும் கூறுகிறார்கள்.

2008 நவம்பரில் வெல்காம் கம்யூனீகேஷன்ஸ் உரிமங்களுக்கு விண்ணப்பித்தது. சென்னையை மையமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனம் ஆரம்பத்தில் சிறிய அளவிலான இன்ஜினியரிங் மற்றும் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டிருந்தன. இந்த நிறுவனம் 2006 டிசம்பரில் வெறும் 10 லட்சம் மூலதனத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. இது 2008 நவம்பரில் 10 கோடி ரூபாயாக உயந்துவிட்டது. வைமாக்ஸ்க்கான போட்டியில் ஈடுகொட்டுப்பத்தற்காகவே இவ்வாறு இன்நிருவனம் மூலதனம் உயர்த்தப்பட்டிருக்கிறது.



வெல்காம் கம்யூனீகேஷன்ஸ் கம்பெனியில் டி. சில்வா ராஜூ என்பவரால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறது. இவருக்கு இக்கம்பெனியில் 15 சதவிதப் பங்குகள் இருக்கின்றன. இக்கம்பெனியின் மற்ற இரு இயக்குநர்கள் டாட்டொ விஜயகுமார் ரத்னவேலு மற்றும் டி.குணசேகரன் தியாகராஜன் என்பவர்களாவார்கள். இருவரும் மலேசியப் பிரஜா உரிமை கொண்டுள்ள தமிழர்கள். டாட்டொ விஜயகுமார் ரத்னவேலு இதே பெயரில் மலேசியாவிலும் ஒரு கம்பெனியை நடத்தி வருகிறார்.


டி சில்வா ராஜூ அமைச்சர் ராசாவின் பெரம்பலுர் தொகுதியைச் சேர்ந்தவர். அமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவர் இவர் டாக்டர் சி. கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு மிகவும் நெருக்கமானவர். அமைச்சர் ராசா, அமைச்சராவதற்கு முன்பு இந்த சி.கிருஷ்ணமூர்த்தியின் கட்டத்தில்தான் தன் வழக்கறிஞ்ர் தொழிலை ஆரம்பித்தார். சில்வராஜூ தற்சமயம் மத்திய பொதுப் பணித்துறையின் (CPWD) கீழ் சப்-கான்ட்ராக்டராக இருந்து வருகிறார். இவர் மேற்படி கிருஷ்ணமூர்த்திக்கு, தற்சமயம் என்எச்45 -சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின்கீழ் நடந்துவரும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கான ஒரு குவாரியிலிருந்து ஜல்லி வழங்கிவருகிறார்.


இந்த கிருஷ்ணமூர்த்தி, ராசாவின் அண்ணன் மற்றும் அக்கா மகன்கள் மற்றும் மகள்களுடன் இணைந்து கோவை செல்டர்ஸ் என்ற பெயரில் ஒரு ரியல் எஸ்டெட் கம்பெனியை நடத்திவறுவதாக ‘தி பயனீர்‘ ஏற்கனவே கூறியிருந்தது. மேலும் கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸ் (பிரைவேட்) லிமிடெட், மற்றும் ஈக்வாஸ் எஸ்டேட்ஸ் (பிரைவேட்) லிமிடெட்
ஆகிய கம்பெனிகளும் ஆ. ராசா அமைச்சரான பின் உருவாயின. இந்த இரு நிறுவனங்களிலும் அமைச்சர் ராஜாவின் மனைவி பரமேசுவரி ஓர் இயக்குநராக உள்ளார் என்பது கொசுறு செய்தி.

BSNL இது தொடர்பாக ஓராண்டுக்கு முன்பே உரிமதாரர்களைக் கோரியிருந்த போதிலும், அதன்மீது இறுதிப்படுத்தும் முறையை, அமைச்சரின் வற்புருத்தலின் காரணமாக BSNL நிறுவனம் தள்ளிப்போட்டுக் கொண்டேவந்தது. அமைச்சர் ராஜாவின் நிர்ப்பந்ததின் காரணமாக நிறுவனத்தின் தலைவரும் மேலான் இயக்குநருமான குல்தீப் கொயல் உரிமங்கள் வழங்கும் பணியினை ஜனவரி மத்தியவாக்கில் தொடங்கினார்.



இந்த ஏலத்தில் 20 கம்பெனிகள் பங்கெடுத்திருந்தன. இவற்றில் பிஎஸ்என்எல், 5 நிறுவனங்களை தேர்ந்தெடுத்தது. விசாரணையில், இவற்றில் 5 நிறுவனங்களின் முதலாளியும் ஒரே நபர் என்றும், அரசை ஏமாற்றும் நோக்கத்துடன் இவ்வாறு WiExpert Communications, SV Telecom Systems, Digitelco Communications, Spectrus Communications and Technotial Infoways என்ற ஐந்து கம்பெனிகள் பெயரில் டெண்டரில் பங்கேற்றார் என்ற விபரமும் வெளியானது.

இந்த ஐந்து நிறுவனங்களின் முதலாளி சஞ்சய் கபூர் என்பவராவார். இந்த சஞ்சய் கபூர், ராசாவுடன் மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இறுதியாக, புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன், ராசா அமைச்சரான பிறகு, பிரதமர் மன்மோகன் சிங், WiMaxக்கான இந்த டெண்டரையே ரத்து செய்து, புதிய டெண்டர் வெளியிட ஆணையிட்டார்.

இது போகவும், ராசா சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியை மிரட்டினார் என்ற குற்றச் சாட்டும் சமீபத்தில் எழுந்து அடங்கியது.

நீதிபதி ரகுபதி

இதில், ராசாவுக்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் வக்காலத்து வாங்கியதால், ராசா தலை தப்பியது.

இது போல், பல்வேறு ‘சிறப்பு’ களுக்கு சொந்தக் காரரான ராசாவின் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியிருப்பது, ராசாவின் மகுடத்தில் சூட்டப்பட்ட, மேலும் ஒரு மாணிக்கம்.
தற்போது, “ஹெட்லைன்ஸ் டுடே“ தொலைக்காட்சி ஊடகம், ராசாவுக்கும், பவர் ப்ரோக்கர் நீரா ராடியாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் விபரங்களை வெளியிட்டது. இது குறித்து ஆ.ராசாவிடம் கருத்து கேட்கப் பட்ட போது, “இது என்னுடைய குரல் இல்லையே… “ என்று, ஆணவமாக பதில் அளித்தார்.
மறுநாள் ஹெட்லைன்ஸ் டுடே, ஊடகம், ராசாவுக்கும், நீரா ராடியாவுக்குமான உரையாடல்களையும், ராடியாவுக்கும், கனிமொழிக்கும் இடையிலான உரையாடலையும், வெளியிட்டது. இதில் ராசா மற்றும் கனிமொழியின் குரல், மறுக்க முடியாத அளவுக்கு தெளிவாக உள்ளது.

இது குறித்து, நேற்று இரவு, சென்னை விமான நிலையத்தில் கருத்துக் கேட்க சென்ற, ஹெட்லைன்ஸ் டுடே செய்தியாளர் பிரியம்வதா மற்றும், என்டிடிவி ஹின்டு செய்தியாளர் இருவரையும், ராசா, கையைப் பிடித்துத் தள்ளுகிறார். ராசாவுடன் வந்த அல்லக்கைகள், ராசாவுக்கு மேல், இரண்டு பங்கு, மிரட்டுகின்றனர்
இதையெல்லாம் மீறியும், ராசாவுக்கு, கருணாநிதி பாதுகாப்பு கொடுப்பதற்கு காரணம், ராசா ஒரு “தலித்தாம்“. எப்படி இருக்கிறது நியாயம் ?

செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன்னுடைய முந்தைய அமைச்சரவை சகாவான திமுக தலித் தலைவர் ஓ.பி.ராமனின் மைத்துனியை அழகிரி திருமணம் செய்தபோது, கருணாநிதி நிலைகுலைந்து போனதையும், அழகிரியை மதுரைக்கு சென்றுவிடுமாறு கட்டளையிட்டதையும் மூடி மறைத்துவிட்டார்.

இதன் காரணமாகத்தான், திமுகவில் இரண்டாம் இடத்திற்கான போட்டியில் அழகிரி பின்னுக்குத் தள்ளப்பட்டு, தன்னுடைய இனத்திலேயே பெண் எடுத்த இளைய மகன் ஸ்டாலினை அந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் கருணாநிதி.

இது போன்ற தவறான எண்ணத்தையும், அறுவெறுப்பையும் தலித் இனத்தவர் மீது கொண்டுள்ள அதே கருணாநிதி தான், ஊழல் கறை படிந்துள்ள ராசாவை எதிர்த்து குரல் எழுப்பும் எதிர்க்கட்சிகள் மீது, அவர் தலித் என்பதாலேயே அவருக்கு எதிராக குரல் எழுப்புவதாக குற்றம் சுமத்துகிறார். “ என்ற குற்றச் சாட்டுகளில் உண்மை இல்லாமல் இல்லையே ?


இவ்வளவு நடந்த பிறகும், ராசாவை காப்பாற்றும் கருணாநிதியைப் பெற இந்நாடு என்ன தவம் செய்திருக்க வேண்டும். இதை எதிர்த்துப் போராட்டம் நடத்தாமல், அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளை பெற நாம் என்ன தவம் செய்திருக்க வேண்டும்.

வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சிபிஐ, தன்னுடைய அமைச்சரவையின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடத்தியும், தனக்கு கீழ் பணியாற்றும், பணியாற்றிய அதிகாரிகள் மேல் வழக்கு பதிவு செய்தும், பதவி விலக மாட்டேன் என்று அடம் பிடிக்கும் ராசாவை, இன்று முதல் “மானங்கெட்ட ராசா” என்று அழைத்தால் என்ன ?

(இது அக்டோபர் மாதம் எழுதப்பட்டது. சிறிது, மாற்றம் செய்து மீள் பதிவு செய்யப் படுகிறது. ஆறு மாதங்களாக இந்த விஷயத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதை விட, வருத்தமான விஷயம் என்ன இருக்க முடியும் ?




சவுக்கு

Thursday, May 6, 2010

இரும்புக் கோட்டை திரைப்பட விமர்சனம்




அறிவாலயம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் புதிதாக வெளி வந்திருக்கும் திரைப்படம்தான்

இரும்புக் கோட்டை கிழட்டுச் சிங்கம்


படத்தின் தலைப்பிற்கேற்றார்போல், கதாநாயகன் சிறு வயது தொடங்கி, தள்ளாத வயது வரை, எவ்வளவு வயதானாலும் விடாப்பிடியாக நான்தான் கதாநாயகனாக இருப்பேன் என்று பிடிவாதமாக நடித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் வரும் முதல் கௌபாய் படம் இது. ஆங்கிலத்தில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற 100 Rifles, The Good, The Bad, The Ugly, McKenna’s Gold போன்ற படங்களை விஞ்சும் விதத்தில் எடுக்கப் பட்டுள்ளது.

கதாநாயகநாக நடித்திருக்கும் கருணாநிதி பாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கருணாநிதியே தேர்ந்தெடுப்பதால், அநேகமாக இவ்வாண்டின் சிறந்த நடிப்புக்கான மாநில அரசின் விருது கருணாநிதிக்கே வழங்கப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கௌபாய் படத்தை எதிர்ப்பார்த்து செல்லும் ரசிகர்களை திருப்திபடுத்தும் அளவுக்கு காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு நிறைந்து எடுக்கப் பட்டிருக்கிறது இரும்புக் கோட்டை கிழட்டுச் சிங்கம்.

சாதாரணமாக தன் வாழ்க்கையை தொடங்கும் ஒருவன் எப்படி மிகச்சிறந்த துப்பாக்கி வீரனாகி தமிழ்நாட்டை கொள்ளையடிப்பதில் முதலிடத்தைப் பிடிக்கிறான் என்பதுதான் படத்தின் “ஒன் லைன்“.

கதாநாயகம் கருணாநிதி குழந்தையாக ஒரு சாதாரண குடும்பத்தில் பிறக்கிறான். சிறிது விபரம் தெரிந்தவுடன் அண்ணாதுரை என்ற ஒருவர் துவக்கும் கொள்ளைக் கூட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறான். அண்ணாத்துரை தான் துவக்கும் “கேங்“ மிகப்பெரிய அளவில் வளரப் போகிறது என்பது தெரியாமலே கேங்கை துவக்குகிறார். தமிழ்நாட்டில் அது வரை இருந்து வந்த காங்கிரஸ் கேங்கை தனது சாமர்த்தியத்தால் விரட்டி அடிக்கிறார்.
அன்று அண்ணாத்துரையால் விரட்டியடிக்கப் பட்ட காங்கிரஸ் கேங், படத்தின் இறுதி வரை பலம் பெறாமலேயே இருப்பதாக கதை அமைக்கப் பட்டிருப்பதால் இப்படத்தில் வில்லனாக இருப்பதற்கு காங்கிரஸ் கேங்குக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது.

காங்கிரஸ் கேங்கை விரட்டியடித்து மொத்த தமிழ்நாட்டையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வரும் அண்ணாத்துரை நீண்ட நாள் தன் கொள்ளைக் கூட்டத்தை வழிநடத்தாமல் உடல் நலிவடைந்து இறந்து போகிறார்.



கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கிய அண்ணாத்துரை


அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு ரசிகர்கள் கொள்ளைக் கூட்டத்தின் இரண்டாம் கட்ட தலைவராக, அண்ணாதுரைக்கு நெருக்கமாக இருக்கும் நெடுஞ்செழியன் தலைவராக ஆகப் போகிறார் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு ட்விஸ்ட் வைக்கிறார் இயக்குநர்.

கருணாநிதி கொள்ளைக் கூட்டத்தில் சேரும் முன்பே இரண்டாம் கட்ட தலைவர்களாக அக்கூட்டத்தில் இருக்கும் சீனியர்களையெல்லாம் ஓரங்கட்டி விட்டு கொள்ளைக் கூட்டத்தின் தலைமைப் பொறுப்பை பிடிப்பது, ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இருந்தாலும் இந்த இடத்தில் திரைக்கதை விறுவிறுப்பை அடைகிறது.

கொள்ளைக் கூட்டத்தின் உறுப்பினர்களின் மத்தியில் தன் சாகசங்களால் பாப்புலராக உள்ள எம்ஜிஆரின் துணையுடன் கருணாநிதி தலைவர் பொறுப்பை பிடிக்கிறார். நெடுஞ்செழியனை ஓரங்கட்டிவிட்டு அநாயசமாக, தலைமை பொறுப்பை பிடித்து விட்டு, கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு கருணாநிதி ஒரு அலட்சியச் சிரிப்பு சிரிக்கும் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது.



கதாநாயகன் வாழ்வில் ஹீரோயின்களுக்கு பஞ்சமே இல்லை. மூன்று ஹீரோயின்களுடன் டூயட் பாடிக்கொண்டே ஆனந்தமாக கதாநாயகன் பொழுதைக் கழிக்கையில் திடீரென்று நண்பனாக இருந்த எம்ஜிஆர் உருவில் பிரச்சினை உதிக்கிறது. எம்ஜிஆர் கொள்ளைக் கூட்ட உறுப்பினர்களிடையே மிகவும் பிரபலமாகி வருவதை கண்டு பொறுக்காத கதாநாயகன், குரங்கு ஆப்பசைத்த கதையாக, கொள்ளைக் கூட்டத்தில் மொத்தம் எத்தனை துப்பாக்கிகள் என்று எம்ஜிஆரைப் பார்த்து கணக்கு கேட்கிறார்.

துப்பாக்கி கணக்கு கேட்டதால் கடும் கோபம் அடையும் எம்ஜிஆர் கதாநாயகக் கருணாநிதியிடம் இருந்து பிரிந்து தனியே ஒரு கொள்ளைக் கூட்டத்தை தொடங்குகிறார்.

எம்ஜிஆர் தொடங்கிய கொள்ளைக் கூட்டம் மிகவும் பிரபலமாகி தமிழ்நாட்டின் நம்பர் கூட்டமாகிறது. இதனால் கதாநாயகன் கருணாநிதி மிகப் பெரிய பின்னடைவை சந்திக்கிறார். அவருக்கு தேவையான ஆயுதங்கள் குறைந்து கொள்ளைக் கூட்டத்தை நடத்த முடியாமல் திணறுகிறார். தினந்தோறும் கொள்ளையடித்துப் பழகி, கொள்ளையடிக்க வாய்ப்பே இல்லாமல் கதாநாயகன் ஏறக்குறைய பைத்தியம் பிடித்த நிலைக்கு தள்ளப் படும்போது, கொள்ளைக் கூட்ட தலைவன் எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டு இறக்கிறார்.

எம்ஜிஆர் இறந்ததும் ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், எம்ஜிஆர் என் நண்பர், அவர் இல்லையென்றால் நான் கொள்ளைக் கூட்டத் தலைவன் ஆகியிருக்க முடியாது என்று மழுப்புகிறார்.

எம்ஜிஆர் இறந்ததும் போட்டிக்கு ஆளே இல்லாமல் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் கொள்ளைக் கூட்டத் தலைவனாக ஆகிறார் கதாநாயகன் கருணாநிதி. நிம்மதியாக கொள்ளையடித்து பொழுதை ஓட்டலாம் என்று இருக்கையில் களத்தில் குதிக்கிறார் ரிவால்வர் ரீட்டா.

எம்ஜிஆரின் கொள்ளைக் கூட்டத்தில் நீண்ட காலம் இருந்த ரிவால்வர் ரீட்டா நலிவடைந்திருந்த எம்ஜிஆரின் கேங்குக்கு புத்துணர்ச்சி ஊட்டி, கேங்குக்கு தலைமை ஏற்கிறார்.

இதைக் கண்டு கதாநாயகன் கருணாநிதி அதிர்ச்சி அடைந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இதனால் தனக்கு எவ்வித அச்சமும் இல்லை என்பது போல இருக்கிறார். இந்நிலையில் டெல்லியில் உள்ள அகில இந்திய கொள்ளைக் கூட்டத் தலைவர்கள் சம்மேளனத்தில் புகார் செய்து கருணாநிதியின் தலைவர் பதவியை பறிக்கிறார் ரிவால்வர் ரீட்டா. செய்வதறியாது திகைக்கும் கருணாநிதி மீண்டும் எப்படியாவது தலைவர் ஆகி விடலாம் என்று நினைக்கையில் அகில இந்திய கொள்ளைக் கூட்டத் தலைவன் ராஜீவ் காந்தி ஒரு வெடி விபத்தில் மரணமடைகிறார்.

இதனால் ரிவால்வர் ரீட்டாவுக்கு அடிக்கிறது யோகம். உடனடியாக தலைமைப் பதவியை பிடித்து தமிழ்நாட்டின் நம்பர் ஒன் கொள்ளைக் கூட்டத்தின் தலைவியாகிறார். இவர் கொள்ளைக் கூட்ட தலைவியானதும், தன் கூட்டத்தில் உள்ள ஒருவரை வளர்ப்பு மகனாக தத்தெடுக்கிறார்.

தத்தெடுத்ததோடு நில்லாமல் கொள்ளைக் கூட்ட வரலாறிலேயே இல்லாத அளவுக்கு தான் தத்தெடுத்த வளர்ப்பு மகனுக்கு மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்கிறார். இதைக் கண்ட கதாநாயகன் கருணாநிதி வயிற்றெரிச்சலில் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புலம்பும் காட்சி காண்போர் நெஞ்சை உருக்குகிறது.

ரிவால்வர் ரீட்டா நெம்பர் ஒன் பொசிஷனில் ஐந்தாண்டு இருந்த பிறகு மீண்டும் கருணாநிதி தன் சாதுர்யத்தால் நெம்பர் ஒன் பொசிஷனை தட்டிப் பறிக்கிறார். நெம்பர் ஒன் பொசிஷனுக்கு வந்த பிறகு ரிவால்வர் ரீட்டாவை சிறையில் அடைக்கிறார் கருணாநிதி. ஆனால் ரிவால்வர் ரீட்டாவுக்கு இருக்கும் ஆதரவை குறைத்து மதிப்பிட்டு விடுகிறார் கருணாநிதி. சில ஆண்டுகள் கழித்து மீண்டும் நெம்பர் ஒன் பொசிஷனுக்கு ரிவால்வர் ரீட்டா வருகிறார்.

ரிவால்வர் ரீட்டா நம்பர் ஒன் பொசிஷனில் வந்தவுடன், தான் ஒரு காலத்தில் கொள்ளைக் கூட்டத்திற்கே தகுதியில்லாத பண்டாரங்கள் என்று விமர்சித்த அகில இந்திய கொள்ளைக் கூட்டத்தோடு கூட்டணி வைத்து சில நிர்வாகிப் பதவிகளை கைப்பற்றுகிறார் கருணாநிதி.

வந்ததும் கருணாநிதியை பழிவாங்கும் விதமாக அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார் கருணாநிதி. கைது செய்யப் படுகையில் “அய்யோ கொலை பண்றாங்க“ என்று அலறுகிறார் கருணாநிதி. ஆனாலும் கருணாநிதியால் ஐந்தாண்டுகளுக்கு நம்பர் ஒன் பொசிஷனை பிடிக்க முடியவில்லை.




அய்யோ கொலை பண்றாங்க


கருணாநிதியின் கொள்ளைக் கூட்டம் நலிவுற்றிருந்தாலும், அகில இந்திய கொள்ளைக் கூட்டத்தில் கருணாநிதியின் கூட்டத்தைச் சேர்ந்த 7 பேர் நிர்வாகிப் பதவியில் இருப்பதால் சிறிது காலம் சமாளிக்கிறார் கருணாநிதி.

சிறிது காலம் போராடிய பிறகு, தமிழ்நாட்டில் உள்ள உதிரி கொள்ளைக் கூட்டம் அனைத்தையும் ஒன்று சேர்த்து கூட்டணி அமைத்து மீண்டும் நம்பர் ஒன் பொசிஷனுக்கு வருகிறார் கருணாநிதி.




கருணாநிதியிடம் நம்பர் ஒன் பொசிஷனை தவற விட்ட ரிவால்வர் ரீட்டா செய்வதறியாமல் திகைக்கிறார். எப்படியாவது மீண்டும் நம்பர் ஒன் பொசிஷனை பிடிக்க வேண்டும் என்று பகீரதப் பிரயத்தனம் செய்கிறார் ரீட்டா. கருணாநிதிக்கு வயதாகி விட்டதால் அவரை எப்படியாவது துப்பாக்கிச் சண்டையில் ஜெயித்து விட வேண்டும் என்று திட்டமிடுகிறார் ரீட்டா.

துப்பாக்கிச் சண்டையில் கருணாநிதியை எப்படியாவது வெற்றிப் பெற வேண்டும் என்று ரீட்டா தொடர்ந்து முயற்சிக்கிறார். ஆனால் கருணாநிதிக்கோ வயதாகி, தள்ளு வண்டியில் போகும் நிலைக்கு ஆளாகிறார். இதனால் தைரியம் அடைந்த ஜெயலலிதா, துப்பாக்கிச் சண்டையில் ஜெயிக்கலாம் என்று தன்னை தயார் செய்து கொண்டு வரும் வேளையில் கருணாநிதி புதிய தந்திரத்தை கையாளுவதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.



துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு, குண்டடிப்பட்டு அனைவரும் செத்து விழுவார்கள் என்று எதிர்ப்பார்க்கையில், சண்டையில் ஈடுபடுபவர்கள் அனைவருக்கும் 5000, 10,000 என்று கவரில் கருணாநிதி பணத்தை வழங்குகிறார். கவரில் பணத்தை பெற்றுக் கொண்ட அனைவரும், குண்டடி படாமலேயே செத்து விழுந்தது போல் நடிக்கிறார்கள்.

இதைக் கண்ட ரிவால்வர் ரீட்டா செய்வதறியாமல் திகைத்து அவரும் கவரில் பணம் வழங்கும் தந்திரத்தை கையாண்டாலும் அவரின் தந்திரம் எடுபடவில்லை. கருணாநிதி வழங்கும் கவரைத்தான் அனைவரும் விரும்பி குண்டடி பட்டது போல செத்து விழுகிறார்கள்.

இதற்கு நடுவே, கருணாநிதியின் கொள்ளைக் கூட்டத்தில் குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. தன் கொள்ளைக் கூட்டத்தின் நெருக்கடி தாளாமல், தன் மகனை கொள்ளைக் கூட்டத்தின் துணைத் தலைவராக்கி நம்பர் 2 பொசிஷனுக்கு கொண்டு வருகிறார். இதைக் கண்ட இன்னொரு மகன் தான்தான் நம்பர் 2 பொசிஷனுக்கு வர வேண்டும் என்று சண்டை போடுகிறார்.



கருணாநிதியின் மகள்


இன்னொரு மகள், தனக்கு நம்பர் 3 பொசிஷன் வேண்டும் என்று வரிந்து கட்டுகிறார். ஆனால் நம்பர் 3 பொசிஷனை மகளுக்கு தர முடியாத வண்ணம், மருமகனின் பேரன்கள் சண்டை போடுகின்றனர்.

இதனால் கருணாநிதியின் கொள்ளைக் கூட்டத்தில் பெரும் கலவரம் உண்டாகிறது. தள்ளு வண்டியில் உள்ள வயது முதிர்ந்த கதாநாயகன், வயது முதிர்ந்தாலும் உடல் தளர்ந்தாலும், தன் நம்பர் ஒன் பொசிஷனை விட்டுத் தராமல் இறுதி வரை போராடுகிறார்.



தள்ளுவண்டியில் வயது முதிர்ந்த கதாநாயகன்


இறுதிக் காட்சி 2011ல் நடைபெறுகிறது. நம்பர் ஒன் பொசிஷனுக்காக தொடர்ந்து போராடும் ரிவால்வர் ரீட்டா ஜெயிக்கிறாரா, தள்ளுவண்டியில் உள்ள கருணாநிதி ஜெயிக்கிறாரா, அல்லது அவரது மகனோ அல்லது மகளோ ஜெயிக்கிறார்களா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
விறுவிறுப்பான திரைக்கதையும், சுறுசுறுப்பான எடிட்டிங்கும் படத்துக்கு சுவை கூட்டுகின்றன.

தேவையான இடத்தில் தேவைப்படாத காட்சிகளை வெட்டியெறிந்து, படத்துக்கு விறுவிறுப்பு கூட்டும் வகையில் படத்தை எடிட்டிங் செய்திருப்பவர் அந்தோனியோ மொய்னோ சோனியா காந்தி. இவர் இத்தாலியில் எடிட்டிங் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஒளிப்பதிவு பேராசிரியர் அன்பழகன். கேமரா பாய்ந்து பாய்ந்து ஒளிப்பதிவு செய்ய வேண்டிய இடங்களிலெல்லாம் மங்குணி போல நகராமல் உட்கார்ந்திருப்பது ரசிகர்களை எரிச்சலாக்குகிறது.


ப்ரொடக்ஷன் மேனேஜர் ஆ.ராசா. வசனங்களை கதாநாயகன் கருணாநிதியே எழுதியிருக்கிறார். சட்டமன்ற வளாகத்தில் கருணாநிதி ரிவால்வர் ரீட்டாவைப் பார்த்து “நீங்கள் கௌபாய் ஆக முடியாது, ஏனென்றால் பெயரிலேயே “பாய்“ இருக்கிறது, நீங்கள் பெண்“ என்று சொல்லுவதும் அதற்கு ரிவால்வர் ரீட்டா, அந்தச் சொல்லின் முதல் எழுத்தே “கௌ“ தான். கௌ என்றால் பசு என்று பொருள், பசு பெண்பால் ஆகையால் நான்தான் உண்மையான கௌபாய்“ என்ற வசனங்களுக்கு தியேட்டரே அதிர்கிறது.


பல இடங்களில் துப்பாக்கிச் சண்டை துவங்கும் முன்பே, எனக்கு, எனக்கு என்று போட்டி போட்டுக் கொண்டு கவரை வாங்கி, குண்டடி பட்டது போல மக்கள் செத்து விழும் காட்சி இந்திய சினிமா வரலாற்றில் புதுமையான காட்சி.


சண்டைக் காட்சிகள் துரை முருகன். அதிரடியாக சண்டை காட்சிகள் அமைப்பார் என்று எதிர்ப்பார்த்தால் ரிவால்வர் ரீட்டாவின் சேலையை பிடித்து இழுப்பது போல் காட்சி அமைத்திருக்கிறார். தியேட்டரில் பெண்கள் துரை முருகனை வெளிப்படையாக திட்டுவது நன்கு கேட்கிறது. இனி துரை முருகன் இது போன்ற காட்சிகளை அமைப்பதை தவிர்ப்பது நல்லது.


சவுண்ட் ஆற்காடு வீராசாமி. பல இடங்களில் ஒலி மந்தமாக இருக்கிறது ஒலிப்பதிவாளரின் கோளாறே. உடைகள் தமிழச்சி தங்க பாண்டியன். இசை அருட்தந்தை ஜெகத் கஸ்பர். இவர் இசையில் பல பாடல்கள் போலியானதாகவும், காப்பியடித்தது போலவும் இருக்றது. இவர் இசையமைப்பதை விட்டு விட்டு பேசாமல் போதகர் தொழிலுக்கே போகலாம் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.

வைரமுத்து, வாலியின் பாடல் வரிகள் கருணாநிதியை புகழ்வதை மட்டுமே கருத்தில் கொண்டு எழுதப் பட்டது போல் இருக்கிறது.

மக்கள் தொடர்பை கருணாநிதி மகன் அழகிரியே கவனித்துக் கொள்கிறார். நகைச்சுவைக்கு ஆவுடையப்பன் என்ற புதிய கதாபாத்திரத்தை அறிமுகப் படுத்தியுள்ளனர். இவர் நடுநிலையோடு நடந்து கொள்வது போல் நடித்து பல நேரங்களில் சிரிப்பை ஏற்படுத்துகிறார். ஆவுடையப்பன் தவிர்த்து கதாநாயகன் கருணாநிதியே பிரமாதமான காமெடி செய்வதால் தனி காமெடி ட்ராக் தேவையே இல்லை.


எவ்வளவு பெரிய கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருந்தாலும், கொள்ளைக் கூட்டத்தை விட குடும்பமே பெரிது என்ற மெசேஜை படம் பார்க்கும் எவ்வளவு பேர் புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.


மொத்தத்தில் நீண்ட நாட்கள் கழித்து வந்திருந்தாலும், ஒரு சிறந்த கௌபாய் படம் பார்த்த திருப்தி படம் பார்த்து விட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும் அனைவர் முகத்திலும் தெரிந்தது.

இது ஒரு மீள் பதிவு


சவுக்கு

Sunday, May 2, 2010

நாடாளுமன்றத்தில் நடந்த சூப்பர் விவாதம்...





2006-2007 அன்றைய கணக்குப்படி மக்கள் பிரச்னைகள் பற்றி பேசி, விவாதம் நடத்தி மக்களுக்கு ’நல்லதை’ மட்டுமே செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டு வரும் நாடாளுமன்றத்தை நடத்த ஒரு நிமிடத்துக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

ரூபாய் 22,089. இதே 2007-2008-ல் ரூபாய் 26,000.

நடப்பு ஆண்டுக்கு நிமிடத்துக்கு ரூபாய் 34,000 என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின் படி, ஒரு எம்.பி-க்கு மாதச் சம்பளம், 16,000. மாதாந்திர ஓய்வூதியம் 8000. தொகுதிப் படியாக மாதம் 20,000.

நாடாளுமன்றம் நடக்கும் நாட்களில் தினப்படியாக ஒரு நாளைக்கு 1000 ரூபாய். பயணப்படி ஒரு கிலோமீட்டருக்கு 8 ரூபாய்.

இது தவிர ஒரு மாதத்துக்கு, எழுது பொருட்கள் வாங்க மற்றும், கடிதங்கள் அனுப்புவதற்காக ரூ.14,000.

ஒவ்வொரு எம்.பி-யும், மனைவி அல்லது, இன்னொரு உதவியாளருடன், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும், முதல் வகுப்பில் ரயிலில் இலவசமாக பயணம் செய்ய முடியும்.


ஆண்டுக்கு 40 முறை, மனைவி அல்லது உதவியாளருடன், விமானத்தில் முதல் வகுப்பில் இலவசமாக செல்லலாம். டெல்லியில் வி.ஐ.பி-க்கள் குடியிருக்கும் பகுதியில், பெரிய பங்களா ஒதுக்கப்படும். அதற்கான மாத வாடகை ரூபாய் 2000.

ஆண்டுக்கு, 50,000 யூனிட்டுகள் மின்சாரம் இலவசம்.

தண்ணீர் இலவசம்.

ஒவ்வொரு பங்களாவிலும், குளிர்சாதனப் பெட்டிகள், ஃப்ரிட்ஜுகள், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இலவசமாக ஒவ்வொரு எம்.பி-க்கும் வழங்கப்படுகிறது. இதற்கான பராமரிப்பு இலவசம்.

சோபா மற்றும் படுக்கை விரிப்புகளை துவைப்பது உட்பட அரசால் இலவசமாக செய்து தரப்படுகிறது.

இதற்காக ஒரு எம்.பி-க்கு சராசரியாக ஆகும் செலவு ஆண்டுக்கு ரூ.1,40,000.
ஒவ்வொரு எம்.பி-க்கும் மூன்று தொலைபேசிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.


ஆண்டுதோறும் 1,70,000 இலவச அழைப்புகள் உண்டு. உபயோகப்படுத்தப்படாத இலவச அழைப்புகளை மொபைல் போனுக்கு மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு.


ஒவ்வொரு எம்பியும் அலுவல் ரீதியாக வெளிநாடு பயணம் செல்கையில், முதல் வகுப்பு விமான டிக்கெட் இலவசம். இதுபோக, தங்கும் நாட்டைப் பொறுத்து, தினப்படி உண்டு.
அனைத்து எம்.பி-க்களுக்கும், இலவச மருத்துவ சிகிச்சை வசதிகள்.

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் தவிர, மாநிலங்களவை உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நடப்பு நாடாளுமன்றத்தில் எம்.பி-க்களாக இருப்பவர்களைத் தவிர, ஏற்கெனவே எம்.பி-க்களாக இருந்து சேவையாற்றியவர்கள் என்று கணக்கிட்டால் ஆயிரக்கணக்கில் எம்.பி-க்கள் பட்டியல் வரும்.

அவர்கள் அவ்வளவு பேருக்கும் அரசு சார்பில் செலவிடப்படும் மக்கள் வரிப்பணம் மட்டும் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகளைத் தொடும். இத்தனை தூரம் கோடிகளாக மக்கள் வரிப்பணம் தண்ணீராக செலவழிக்கப்பட்டுக் கொண்டிருக்க, மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந் தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்குச் செல்லும் அவர்களெல்லாம் முறையாக மக்கள் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கிறார்களா? என்று யாராவது கேட்டால், அவர்களுக்கு கடந் த 29-ம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடந்த ஒரு விவாதமே நல்ல சாட்சி...

உதாரணம். அந்த விவாதம் இதுதான் -

டாக்டர் மைத்ரேயன் எம்.பி.(அ.தி.மு.க): ’’மாநில அரசு சட்டவிரோத ஒட்டுக் கேட்பை செய்யாது என்று நம்புகிறேன். 2008-ல் ஒரு காவல்துறை அதிகாரியின் மனைவிக்கு சொந்தமான டி3டி டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் சட்ட விரோத ஒட்டுக் கேட்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

வசந்தி ஸ்டான்லி எம்.பி(தி.மு.க): ’’எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்?’’

அவைத் துணைத் தலைவர்: ’’நீங்கள் உங்கள் இருக்கையில் அமருங்கள்.’’

டாக்டர் மைத்ரேயன் எம்.பி.(அ.தி.மு.க): ’’ஆதாரங்களை வைத்துத்தான் சொல்கிறேன்.’’

அவைத் துணைத் தலைவர்: ’’அனைவரும் உட்காருங்கள். அவர்(மைத்ரேயன்) எல்லை மீறினால் நான் பார்த்துக் கொள்கிறேன்.’’



திருச்சி சிவா, திமுக எம்.பி

திருச்சி சிவா(தி.மு.க): ’’எப்படி அவர் அவ்வாறு சொல்லலாம்?’’

அவைத் துணைத் தலைவர்: ’’முதலில் நீங்கள் உட்காருங்கள். டாக்டர் மைத்ரேயன், உங்கள் கட்சிக்காரர்களை அமரச் சொல்லுங்கள். சிவா, உங்களுக்கு என்ன எதிர்ப்பு?’’

திருச்சி சிவா: ’’எப்படி அவர் சட்ட விரோட ஒட்டுக் கேட்பு தமிழ்நாட்டில் நடைபெறுகிறது என்று சொல்லலாம். அதற்கான ஆதாரங்களை கொடுக்க வேண்டும்.’’

அவைத் துணைத் தலைவர்: ’’அது அவர் கருத்து. நீங்கள் வேண்டுமானால் அதை மறுக்கலாம். உங்களுக்கு அந்த உரிமை இருக்கிறது.

திருச்சி சிவா:: அதற்காக இப்படியான புகார்களை சொல்லக்கூடாது.’’

அவைத் துணைத் தலைவர்: ’’அது அவர்கள் கருத்து. எந்த ஒரு தனி நபரைப் பற்றியும் புகார் கூறவில்லை. பல மாநில அரசுகளைப் பற்றி புகார் வந்துள்ளன. இந்த அவைக்கு வந்து, தன்னை தற்காத்துக் கொள்ள வாய்ப்பு இல்லாதவரைப் பற்றி புகார் கூறுவது பற்றி விதிகள் உண்டு. நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அமருங்கள்.’’

திருச்சி சிவா: ’’சார்(அவைத் துணைத் தலைவரைப் பார்த்து), நாங்கள் உங்களிடம் தான் பேசுகிறோம். நீங்கள்தான் எங்களை உட்காரச் சொல்லலாம். அவர்களிடம் சொல்லுங்கள். அவர்கள் இந்தப் பக்கம் திரும்பி கமென்ட் அடிக்கிறார்கள். கமென்ட் அடிக்கக் கூடாது என்று சொல்லுங்கள்.’’

அவைத் துணைத் தலைவர்: ’’டாக்டர் மைத்ரேயன், நீங்கள் என்னிடம் தான் பேச வேண்டும். உங்கள் கட்சிக்காரர்களை மற்றவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லுங்கள்.’’

வசந்தி ஸ்டான்லி எம்.பி(தி.மு.க): ’’இவர் எப்போது பார்த்தாலும் தமிழ்நாட்டைப் பற்றியே பேசுகிறார்.’’

டாக்டர் மைத்ரேயன் எம்.பி.(அ.தி.மு.க): ’’நான் தமிழ்நாட்டை பிரதிநிதித் துவப்படுத்துகிறேன்.ஆனால், அவர் தமிழ்நாட்டை பிரதிநிதித் துவப்படுத்துவதில்லை.’’



வசந்தி ஸ்டான்லி, திமுக எம்.பி



வசந்தி ஸ்டான்லி எம்.பி(தி.மு.க): ’’இது என்ன விவாதம். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்.’’

அவைத் துணைத் தலைவர்: ’’மைத்ரேயன் சீக்கிரம் விவாதப் பொருளுக்கு வாருங்கள்.’’

டாக்டர் மைத்ரேயன் எம்.பி.(அ.தி.மு.க): ’’(மீண்டும் தொலைபேசி ஒட்டுக் கேட்பு பற்றி பேசுகிறார்) மத்திய அமைச்சர்கள் அழகிரி, தயாநிதி மாறன் போன்கள் கூட ஒட்டுக் கேட்கப்படுகிறது.’’

திருச்சி சிவா: ’’சார், இதற்கு இவர் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.’’

டாக்டர் மைத்ரேயன் எம்.பி.(அ.தி.மு.க): ’’நான் ஆதாரங்களை சமர்ப்பிக்கிறேன் என்று கூறி தொடர்ந்து பேசுகிறார்.’’

வசந்தி ஸ்டான்லி எம்.பி(தி.மு.க): சார் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அவைத் துணைத் தலைவர்: ’’அனைவரும் அமருங்கள். எல்லோரும் பேசினால் கேட்காது. கனிமொழி, உங்களில் ஒருவருக்கு வாய்ப்பு தருகிறேன்.’’

திருச்சி சிவா: ’’சார், நீங்கள்தான் என்னை உட்காரச் சொல்ல வேண்டும். இவர்(மைத்ரேயன்) சொல்லக் கூடாது. இன்னொரு உறுப்பினரைப் பார்த்து. அதுவும் ஒரு பெண் உறுப்பினரைப் பார்த்து...’’

அவைத் துணைத் தலைவர்: ’’என்ன விஷயம் என்று கூறுங்கள்.’’

திருச்சி சிவா: ’’சார், கனிமொழியை(தி.மு.க.)ப் பார்த்து உட்காரச் சொல்கிறார்.’’

டாக்டர் மைத்ரேயன் எம்.பி.(அ.தி.மு.க): ’’சார், இது போன்று குறுக்கீடு செய்யக்கூடாது. சபை மரபுகளை பின்பற்றாமல் நடந்து கொள்கிறார்கள்.’’

திருச்சி சிவா:: ’’சார், பெண் உறுப்பினரைப் பார்த்து உட்கார் என்று சொல்வது, தவறான வார்த்தைப் பிரயோகம்.’’

அவைத் துணைத் தலைவர்: ’’டாக்டர் மைத்ரேயன், நீங்கள் என்னைப் பார்த்து பேசுங்கள்.’’

திருச்சி சிவா: ’’சார், இது மீண்டும் மீண்டும் நடக்கிறது.’’

அவைத் துணைத் தலைவர்: ‘’அனைவரும் உட்காருங்கள். கனிமொழி, உங்களுக்கு என்ன வேண்டும்?’’




கனிமொழி(தி.மு.க): ’’சார், உறுப்பினர் இளவரசன்(அ.தி.மு.க) அவையில் மன்னிப்புக் கேட்க வேண்டும்.’’

டாக்டர் மைத்ரேயன் எம்.பி.(அ.தி.மு.க): ’’மன்னிப்பு கேட்க முடியாது. எதற்காக கேட்க வேண்டும். கேட்கவே முடியாது.’’

அவைத் துணைத் தலைவர்: ’’அனைவரும் அமருங்கள். நான் ஆவணங்களை பார்க்கிறேன். ஏதாவது ஆட்சேபகரமாக இருந்தால், அவைக் குறிப்பிலிருந்து நீக்குகிறேன்.’’

டாக்டர் மைத்ரேயன் எம்.பி.(அ.தி.மு.க): ’’சார், விஷயத்தை திசைத் திருப்ப விரும்புகிறார்கள். அதனால்தான் பேச விட மாட்டேன்கிறார்கள்.’’

அவைத் துணைத் தலைவர்: ’’யாராவது ஒருவர் பேசுங்கள். அனைவரும் ஒரே நேரத்தில் பேசாதீர்கள்.’’

டாக்டர் மைத்ரேயன் எம்.பி.(அ.தி.மு.க): ’’எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.’’

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரித்திவிராஜ் சவுகான்: ’’ஏதோ தமிழில் ஆட்சேபகரமான வார்த்தையை சொல்லியிருக் கிறார்கள். தமிழ் என்பதால் என்ன என்று தெரியவில்லை.’’

அவைத் துணைத் தலைவர்: ’’கனிமொழி, நீங்கள் பேசுங்கள்.’’

கனிமொழி: ’’சார், இளவரசன், வசந்தி ஸ்டான்லி பக்கம் திரும்பி, ஆட்சேபகரமான வகையில் உட்காரச் சொன்னார்.’’

டாக்டர் மைத்ரேயன் எம்.பி.(அ.தி.மு.க): ’’உட்காரத்தானே சொன்னார்? அதில் என்ன ஆட்சேபத்துக்குரியதை கண்டுபிடித்தீருக்கிறீர்கள்?’’

அவைத் துணைத் தலைவர்: ’’அனைவரும் அமருங்கள்.’’

கனிமொழி: ’’சார், இளவரசன் உங்களைப் பார்த்து பேசாமல், வசந்தி ஸ்டான்லியைப் பார்த்து, தமிழில் “உட்காரு“ என்று சொன்னார். அது ஆட்சேபகரமானது.’’

அவைத் துணைத் தலைவர்: ’’சரி, நான் ஆவணங்களைப் பரிசீலிக்கிறேன். அனைவரும் அமருங்கள்.’’

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம், உக்காரு என்பது தொடர்பாக விவாதம் நடந்தது.

நாடாளுமன்றத்தை நடத்த ஒரு நிமிடத்திற்கு 34,000 ரூபாய் செலவாகிறது என்பதை மேலே சொன்ன விவரங்களையெல்லாம் இந் த விவாதத்தோடு நினைத்துப் பாருங்கள்.
’வயிறு எரிகிறது...’ என்றுதானே சொல்கிறீர்கள். பின்னே?


நன்றி. நம் தினமதி நாளிதழ்

சவுக்கு

Saturday, May 1, 2010

டெல்லியில் கருணாநிதி சோனியா சந்திப்பு. நடந்தது என்ன ?




(கருணாநிதி இன்று டெல்லி சென்று, சோனியா, மற்றும் மன்மோகன் சிங்குடன், சிறப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். அப்பேச்சு வார்த்தையில் நடந்தது என்ன என்று சவுக்கு புலனாய்வு செய்ததில், கிடைத்த தகவல்கள், சவுக்கு வாசகர்களுக்கு)

கருணாநிதி வணக்கம். தியாகத் திருவிளக்கே. இந்திரா குடும்பத்தின் குலவிளக்கே. ராஜீவின் குத்து விளக்கே. இந்தியாவின் கலங்கரை விளக்கே. கார்த்திகை மாதத்து அகல் விளக்கே. சரவண பவன் கை முறுக்கே…

சோனியா. போதும் கருணாநிதிஜி. போதும். பிரயாணம் எல்லாம் நல்லா இருந்துச்சா ?

கருணாநிதி எனக்கு என்னங்க பிரயாணம். தள்ளு வண்டில ஏறி உக்காந்தா தள்ளிட்டுப் போகப் போறாங்க. நிறுத்துன்னா நிறுத்துவாங்க. ஏதோ என்னால முடிஞ்ச வரைக்கும், தமிழுக்கும், தமிழ் கூறும் நல்லுலகுக்கும் சேவை செய்யத் தானே நான் இருக்கேன்.

சோனியா. சொல்லுங்க கருணாநிதிஜி. என்ன விஷயம்.

கருணாநிதி வேற என்னங்க கேக்கப் போறேன். எனக்குன்னு பெரிய ஆசைல்லாம் ஒன்னும் இல்லங்க. சின்ன வயசுலேர்ந்து செல்லமா வளர்ந்த புள்ள. அவன் ஆசைய நெறவேத்தி வைக்கணும் இல்லயா ? இல்லன்னா நாளைக்கு வரலாறு குத்தம் சொல்லும் பாருங்க…



சோனியா. கருணாநிதிஜி. நீங்க கேட்டத எல்லாம்தான் கொடுத்துட்டோமே. ஏதும் பாக்கி வைக்கலயே.. உங்க பையனைத்தான், கெமிக்கல் மினிஸ்டர் ஆக்கிட்டோமே.. ஆனா, உங்க பையன்தான் வேலைக்கே வரமாட்றாரு. பாருங்க. பார்லிமென்ட்டுக்கு வராததால, எதிர்க்கட்சியெல்லாம் கேள்வி கேக்கறாங்க.

கருணாநிதி எனக்கும் என் பையனுக்கும் ஒரு பழக்கங்க. என் அன்புத் தம்பி ரஜினிகாந்த் நடிச்ச படத்தில, இப்போ மந்திரியா இருக்கற அன்பு இளவல் நெப்போலியன் ஒரு வசனம் பேசிருப்பாரு. “சாவு வீட்டுக்கு போனா… …. நான்தான் பொணமா இருக்கணும். கல்யாண வீடுன்னா… நான்தான் மாப்ளையா இருக்கணும் னு ஒரு வசனம் பேசுவாரு. “ நானும் என் பையனும் அப்படித்தாங்க. சொன்னா நம்ப மாட்டீங்க.. ஒரு நாள் பாராட்டு விழா நடத்துலன்னாலும், எனக்கு தூக்கம் வரமாட்டேங்குது தெரியுமா ? நேத்து பெண் சிங்கம் ஒலி நாடா வெளியீட்டு விழா இருந்துச்சு… அதனால சமாளிச்சுட்டேன். முந்தா நாள் எந்த விழாவும் இல்லையா… வேற வழியில்லாம, என் வீட்டுக்கு பக்கத்துல இருந்த இளநி விக்கறவன், செருப்பு தைக்கிறவன், பக்கத்துல இருந்த பெட்ரோல் பங்குல பெட்ரோல் போடற தம்பி, எல்லாரையும், வீட்டுக்கு கூப்புட்டு, 2 மணி நேரம் என்னை பாராட்டிப் பேச சொன்னதும் தான் எனக்கு தூக்கம் வந்துச்சு.

சோனியா. சரி. விஷயத்துக்கு வாங்க…..

கருணாநிதி மத்திய அமைச்சரா இருந்து, கூட்டத்தோட கூட்டமா ஒக்கார்ரது நம்ம அழகிரிக்கு பிடிக்கலங்க. பேசாம அவன பிரதமர் ஆக்கிடுங்க. அதச் சொல்றதுக்குத் தான் டெல்லி வந்தேன். பிரதமர் ஆக்கிட்டீங்கன்னா, ரெகுலரா பார்லிமென்டுக்கு வரச் சொல்றேன்.


சோனியா. அவ்ளோதானா.. வேற ஏதாவது இருக்கா.




கருணாநிதி வேற என்னங்க கேக்கப் போறேன். கனி மொழிய துணைப் பிரதமர் ஆக்கிட்டீங்கன்னா சிஐடி காலனி போய் நைட் தூங்கறது பிரச்சினை இருக்காது. எனக்கு வேற என்னங்க ஆசை.


சோனியா. அப்போ மன்மோகன் சிங்க என்னங்க பண்றது ?


கருணாநிதி அவர மன்மோகன் சிங்குனு சொல்றத விட மங்குணி சிங்குன்னு சொல்லுங்க. என்னா அரசியல் பண்றாரு அந்த ஆளு. பார்லிமெண்டுல கண்ட பயல்லாம் கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கான். இந்த ஆளும் பொறுப்பில்லாம பதில் சொல்லிக்கிட்டு இருக்காரு ? நம்ப தம்பி அழகிரிய பிரதமர் ஆக்குங்க. கூடவே அட்டாக் பாண்டிய வச்சுகிட்டு இருப்பான். அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் எல்லாம் இருக்கும் போது, ஒரு பய கேள்வி கேப்பானா ? அவன் பேரே அஞ்ச நெஞ்சன்ங்க. அதுனாலத்தான் சொல்றேன். பேசாம நம்ப அழகிரிய பிரதமர் ஆக்கிடுங்க.


சோனியா. அப்போ என் பையன என்ன பண்றது ?



கருணாநிதி என்னங்க. கொஞ்ச நாள்… ஒரு 20 வருஷத்துக்கு என் பையன் பிரதமரா இருக்கட்டும். அப்புறம், நம்ப ராகுல் தம்பிய துணைப் பிரதமரா ஆக்கிடுறேன்.

சோனியா.அப்புறம் இந்த ராசா விவகாரம்….

கருணாநிதி சமுதாயத்தில், தாழ்த்தப்பட்ட வகுப்பிலே பிறந்து, தன்னை முன்னேற்றிக் கொண்ட ஒரு ஏழை அமைச்சரை அவதூறாகப் பேசுவதென்பது, அறிஞர் அண்ணா…

சோனியா. மிஸ்டர் கருணாநிதி. லிசென் டு மி. ராசா ஒரு லட்சம் கோடி ஆட்டயப் போட்ருக்காரு. ஒரு ரூபா ரெண்டு ரூபா இல்ல…. ஒரு லட்சம் கோடி… சட்டம் தன் கடமையை செய்யும்.


கருணாநிதி என்னங்க. வர்ற அசெம்பிளி எலெக்ஷன்ல, காங்கிரசுக்கு 100 சீட் கொடுத்துட்டு, நீங்க சொல்ற ஆளுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கலாம்னு இருந்தேன். நீங்க இப்படி பேசுறீங்க…


சோனியா. சட்டம் தன் கடமையை செய்யும்னா என்ன ? வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால, வழக்கு வைவிடப்படுகிறதுன்னு, உச்ச நீதிமன்றத்துல, சிபிஐ இயக்குநர மனு தாக்கல் பண்ணச் சொல்றேன். இதே சிபிஐ, கொட்ரோக்கியை காப்பாத்தி, அவர் அக்கவுண்ட்ல இருந்த பணத்த ரிலீஸ் பண்ணல ?


கருணாநிதி இதனால்தான் நான் உங்களை தியாகத் திருவிளக்கு என்று கூறுகிறேன். அன்றே கூறினார் அண்ணா…


சோனியா. போதும் மிஸ்டர் கருணாநிதி. இது தமிழ்நாடு சட்டசபை இல்ல.


கருணாநிதி இன்னொரு விஷயம்.


சோனியா. என்ன, அழகிரி பையன உள்துறை மந்திரி ஆக்கணுமா ?


கருணாநிதிஅய்யய்யோ… நான் அப்படியெல்லாம் ஆசைப் பட மாட்டேங்க… இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் மாதிரியே… 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தையும், நம்ப தம்பி ராசாவையே நடத்த சொன்னீங்கன்னா, இந்திய தொலைத் தொடர்புத் துறை வரலாற்றுலயே, அது ஒரு மைல் கல்லா இருக்கும்.


சோனியா. நோ. நாட் பாசிபிள். ரொம்ப ஆசைப்படாதீங்க. அப்புறம், உங்கள மாதிரியே நான் “தெற்கு வாழ்கிறது. வடக்கு வழுக்குகிறது“ ன்னு பேச வேண்டியிருக்கும்.


கருணாநிதி இன்னும் ஒரே ஒரு விஷயம்.


சோனியா. சொல்லுங்க.


கருணாநிதி மெட்ராஸ் ஹைகோர்ட்டுல, சில நீதிபதிகள், நீதிபதிகள் மாதிரி நடந்துக்கறாங்க. நியாயமான தீர்ப்புகளை வழங்கும், கழக உடன் பிறப்புகளைப் பார்த்தும், சரியான முறையில் அவர்கள் கற்றுக் கொண்டதாய் தெரியவில்லை. இந்த மாதிரி அவங்க நீதிபதிகள் மாதிரி நடந்துகிட்டா, நான் எப்படி ஆட்சி நடத்துறது ? நீங்கதான் மனசு வச்சு, கழக உடன்பிறப்புகளாய்ப் பார்த்து, மெட்ராசுல நீதிபதிகளாய் நியமிக்கனும்.


சோனியா. ஓகே. வி வில் சீ.

சந்திப்பு முடிந்தது.

(பத்திரிக்கையாளர்களை சந்தித்த கருணாநிதி, பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாவை இந்தியாவிற்குள் அனுமதித்து, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுமாறு, சோனியாவைப் பார்த்து மன்றாடி கேட்டுக் கொண்டதாகவும், சோனியா அந்த கோரிக்கையை கருணையோடு பரிசீலிப்பதாக தெரிவித்ததாகவும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, கூடுதல் நீதிபதிகளை நியமிக்கும் கோரிக்கையையும், சோனியாவிடம் தெரிவித்ததாகவும், தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போதும், நிலைநாட்டுவதே, திமுகவின் வேலை என்றும், அந்த வரலாற்றுக் கடமையிலிருந்து திமுக என்றுமே வழுவாது என்றும் கூறினார்.)



சவுக்கு

தலைவா வா…. தலைமையேற்க வா… தமிழகம் காக்க வா…



என் அன்புத் தலைவா.

தமிழ்நாட்டை உய்விக்க உன்னை விட்டால் ஆளில்லை என்பதால்தான் உனக்கு இந்த அழைப்பு. இன்று தமிழ்நாடு இருக்கும் நிலையில் யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத, யாருடைய கருத்தையும் வெளிப்படையாக கூற இயலாத, சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள், மியூசியத்தில் பாடம் செய்யப் பட்ட விலங்குகளாய் ஆன நிலையில், பத்திரிக்கைகள், அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டால், விளம்பரம் நிறுத்தப் பட்டோ, கைது செய்யப் பட்டோ, முடமாகிப் போன நிலையில், உன்னை விட்டால் இத்தமிழ்நாட்டை காப்பாற்ற யார் இருக்கிறார் ?


ஒரு காலத்தில், தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், எழுச்சி மிகுந்த பேச்சாளராகவும், தன் அரசியல் வாழ்வில் பளிச்சிட்டுக் கொண்டிருந்த வைகோ, இன்று இருக்கும் இடம் தெரியாமல், நான்கு பேரை வைத்து கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.



திமுகவை விட்டு வெளியேற்றப் பட்ட பின், திமுகவோடு என்று கூட்டணி வைத்தாரோ, அன்றே தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்தார்.


இடது சாரிகள் என்று ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை ஏற்படுத்திக் கொண்டிருந்தவர்கள், இன்று எந்த தாராளமயக் கொள்கையை எதிர்த்தார்களோ, அதே தாராளமயக் கொள்கையால், தங்கள் தரவுகளை இழந்து, திருமணம் ஆகாத முதிர்கன்னியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.




திராவிடக் கட்சிகளுக்கு பல்லக்கு தூக்கியே, தங்கள் பாதங்களை தேய விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது பத்தாது என்று, தங்கள் கட்சியிலேயே இருக்கும் கொஞ்ச நஞ்ச நேர்மையானவர்களையெல்லாம், தற்கொலைக்குத் தூண்டி விட்டு, நேர்மையானவர்களுக்கு இந்தக் கட்சியில் இடம் இல்லை என்பதை பகிரங்கப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.


பத்து ஆண்டுகளுக்கு முன், “அடங்க மறு, அத்து மீறு“ என்ற முழக்கதோடு கட்சியை தொடங்கி, ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய தொல்.திருமாவளவன் இன்று, திமுகவின் தலித் பிரிவுத் தலைவராக மாறிப் போய் இருக்கிறார். பிரபாகரனின் அம்மாவை விமானத்தை விட்டு இறங்க விடாமலேயே திருப்பி அனுப்பியதன் சூத்திரதாரி யார் என்பது தெரிந்தும், அது மத்திய அரசுதான், கருணாநிதி நினைத்தால், இந்தியாவுக்குள் பார்வதி அம்மாளை கொண்டு வருவார் என்று கருணாநிதியிடமே மனு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.




அவர் கட்சி எம்எல்ஏ, திமுகவின் தலித் பிரிவு செயலாளராக மாறிப் போய், திமுகவினரை விட, கருணாநிதி புகழ் பாடுவதில், நான்தான் நம்பர் ஒன் என்று நிரூபிக்க கடும் போட்டியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.


பாட்டாளி மக்கள் கட்சி. வன்னிய மக்களின் உயிர்த் தியாகத்தில் உருவான கட்சி இது. இந்தக் கட்சி ஆரம்பத்தில் உருவாவதற்கு, தங்கள் உழைப்பை நல்கிய, பேராசிரியர் தீரன், பேராசிரியர் கல்யாணி, குணங்குடி அணீபா இன்னும் பலர் திட்டமிட்டு கட்சியை விட்டு விரட்டப் பட்டனர். வன்னிய மக்களின் நலனுக்காக துவங்கப் பட்ட கட்சி, ராமதாசின் குடும்ப நலனுக்கானது என்று மாற்றப் பட்டது.




கட்சியின் தலித் முகமாக அடையாளம் காணப்பட்டு மத்திய சுகாதரத் துறை அமைச்சராக பணியாற்றிக் கொண்டிருந்த தலித் எழில்மலை, திட்டமிட்டு ஓரங்கட்டப் பட்டார். மாறி மாறி, கூட்டணி சேர்ந்து, நாங்கள் கூட்டணியில் இல்லாத அணி வெற்றி பெறாது என்ற மாயையை உருவாக்கி, அந்த மாயையை ராமதாசே நம்பி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் மண்ணைக் கவ்வி, வருமானம் குறைந்து, மீண்டும் அறிவாலயம் பக்கம் திருவோட்டை ஏந்தி மறைந்து நின்று கொண்டிருக்கிறார். கட்சியில் மத்தவனுக்கு பதவி இல்லாமல் இருந்தால் பரவாயில்லை. ஆனால் சொந்த மகனுக்கு பதவி இல்லாவிட்டால் ?



அதனாலும், சமீபத்தில் மருத்துவக் கவுன்சில் தலைவராக இருந்து சிபிஐ வலையில் சிக்கியுள்ள கேதன் தேசாய் வீட்டில் இருந்து கைப்பற்றப் பட்ட 1500 கிலோ தங்கமும்,



1800 கோடி ரூபாய் ரொக்கமும், இந்த கேதன் தேசாய் இவ்வளவு நாட்கள் இவ்வாறு சட்ட விரோதமாக சம்பாதித்ததில், அரசியல் தலைவர்களுக்கு இருக்கும் தொடர்பு குறித்தும் விசாரிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணிக்கும் இந்த ஊழலில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. மேலும், போலி மற்றும் காலாவதியான மருந்துகள் வழக்கில், சிபி.சிஐடி போலீசாரின் விசாரணையிலும் அன்புமணியின் தொடர்புகளை துருவத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





இதன் பொருட்டும், மருத்துவர் அய்யா, அடக்கி வாசித்து, பம்மி, அறிவாலயத்தின் பக்கம் சரணடைய முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இக்கட்சியினரின் சட்டசபை செயல்பாடுகளை கூர்ந்து கவனிப்பவர்கள், ஏறக்குறைய அறிவாலயத்தில் கால்களில் மருத்துவர் அய்யா சரணடைந்து விட்டார் என்றே கூறுகின்றனர்.

அடுத்து கேப்டன். திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மாற்று என்ற பரபரப்போடு கட்சியை துவக்கிய கேப்டனின் கப்பல், தேர்தல் செலவுகளுக்க பணமில்லாமல், தள்ளாடத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மின் வெட்டை தடுப்பதற்கான யோசனை தனக்குத் தெரியும், ஆனால் சொன்னால் கருணாநிதி காப்பியடித்து விடுவார், அதனால் சொல்ல மாட்டேன் என்பது போன்ற அரை வேக்காட்டுத் தனமான வார்த்தைகளால், அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழந்து கொண்டே வருகிறார்.




மேலும், முக்கியமான பிரச்சினைகளிலெல்லாம், குழம்பி குழம்பி, ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தவிப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவருடைய கட்சியும், இவரது மைத்துனர் மற்றும் மனைவியின் அசுரப் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. இது போகவும், கட்சிப் பதவிகளுக்கே பணம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்று சூழல் நிலவுவதாக தெரிகிறது. அதனால், தமிழகத்தை விடுவிப்பது கேப்டனால் இயலாத காரியம்.

பிஜேபி எல்லாம், அவதார் படத்தில் வருவது போல, இன்னும் 1500 ஆண்டுகள் ஆனாலும், தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பது ஆகாத காரியம் அதனால், பிஜேபியைப் பற்றிப் பேசி வார்த்தையை வீணடிக்க வேண்டாம்.

அடுத்து காங்கிரஸ் கட்சி. அது ஒரு கருமம் பிடித்த கட்சி. அந்த கட்சியைப் பற்றி பேசுவது நேரம் வேஸ்ட்.


அடுத்தபடியாக இருக்கும் ஒரே கட்சி, அ.தி.மு.க. அதிமுக தானே பெரிய கட்சி. அந்தக் கட்சி மீது நம்பிக்கை வைத்தால் என்ன என்ற கேள்விக்கும், அவநம்பிக்கைதான் விடையாக வருகிறது. ஏனென்றால், ஆட்சியில் இல்லாத இந்த 4 ஆண்டுகளாக அதிமுகவின் செயல்பாடுகளைப் பாருங்கள்.



தமிழ்நாட்டில் போராடுவதற்கு பிரச்சினைகளா இல்லை ? ஆனால் இந்தக் கட்சியின் தலைவி, நாடே சுபிட்சமாக இருப்பது போல, கொடநாட்டில் வருடத்தில் ஆறு மாதங்கள் ஓய்வெடுப்பதும், அங்கிருந்து அறிக்கை வெளியிடுவதும், அக்கட்சியின் எம்எல்ஏக்களும், என்ன பேசினால் சரி, என்ன பேசினால் தவறு என்று புரியாததால் பேசாமல் இருப்பதே உத்தமம் என்று இருப்பதும், இக்கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கு எடுக்கும் முயற்சிகள் போதுமானதல்ல என்றே தோன்றுகிறது. மேலும், திமுகவின் திருமங்கலம் ஃபார்முலாவில், அதிமுக கதிகலங்கிப் போய் நிற்பதாகத்தான் தெரிகிறது.

நடுவில் நடந்த இடைத் தேர்தல்களில் போட்டியிடுவது இல்லை என்ற அதிமுகவின் முடிவு, இக்கட்சிக்கு ஒரு பெரிய சறுக்கல். மேலும், கூட்டணி கட்சிகளை அரவணைத்துப் போவது, கூட்டுப் போராட்டங்களை நடத்துவது என்ற எவ்விதமான அணுகு முறையும் இல்லாத காரணத்தால், இக்கட்சி பழம் நழுவி பாலிலும், பிறகு வாயிலும் விழும் என்ற கற்பனா வாதத்தில் அடங்கிப் போய் உள்ளதாகவே தெரிகிறது. இந்தக் கட்சி, போராட்டங்கள் நடத்தி, அரசியலில் தனக்கென ஒரு இருப்பிடத்தை பிடிப்பதைக் காட்டிலும், காளிகாம்பாள் கோயிலிலும், போயஸ் தோட்டத்திலும் யாகங்களும், பூஜைகளும் நடத்துவதன் மூலமே ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற கனவில் இருக்கிறது.


அதனால், அதிமுக தமிழ்நாட்டை இருட்டிலிருந்து மீட்டு எடுக்கும் என்ற நம்பிக்கையும் வலுவிழந்து உள்ளது.
சரி. அப்போது யார்தான் தமிழ்நாட்டைக் காப்பாற்றுவது ? ஒருவருமே இல்லையா என்றால், இருக்கிறார். ஒரே ஒருவர் இருக்கிறார்.

அவர்தான், அஞ்சா நெஞ்சன் அழகிரி.
அவரை விட்டால் தமிழ்நாட்டை இருட்டிலிருந்து மீட்டு எடுக்க ஒருவருமே இல்லை. அழகிரியால் மட்டுமே, திமுக என்னும் தீய சக்தியை உடைக்க இயலும். தறி கெட்ட காட்டாறாக இன்று அலை பாய்ந்து கொண்டிருக்கும், திமுகவை கட்டுப் படுத்த அஞ்சா நெஞ்சனால் மட்டுமே இயலும்.


60 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் இருக்கும் பேராசிரியர் அன்பழகன் ஆகட்டும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு மிகப் பெரிய செல்வாக்கோடு இருக்கும் துரை முருகனாகட்டும், வன்னிய மக்கள் மத்தியில் செல்வாக்கோடும், மேற்கு மண்டலத்தை தனது இரும்புக் கோட்டையாக வைத்திருக்கும் வீரபாண்டி ஆறுமுகமாகட்டும், நெருக்கடி நிலையில் சிறை சென்று, தனக்கென்று ஒரு ஆதரவாளர் கூட்டத்தை வளர்த்து வைத்திருந்தும், இன்று ஒன்றும் செய்ய முடியாமல், பிரசவ வேதனையில் தவிக்கும் பசு மாட்டைப் போல உட்கார்ந்திருக்கும் அவரது தம்பி ஸ்டாலினாகட்டும்.

அத்தனை பேரையும் அநாயசமாக சமாளித்து இன்று நான்தான் கட்சி என்று திமுகவின் அத்தனை மூத்த தலைகளையும் ஓரம் கட்டி, சிங்கம் போல சிலுப்பிக் கொண்டிருக்கும் அஞ்சா நெஞ்சனை விட்டால் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேறு யார் இருக்கிறார்கள்.




திமுகவின் ஒரு முக்கியத் தலைவரின் கொலைக்கு காரணம் என்று கொலை வழக்கை சந்தித்து அதிலிருந்து வெளியில் வந்த லாவகம் ஆகட்டும், அப்பாவி ஊழியர்கள் மூன்று பேரை தனது ஆதரவாளர்களை விட்டு, எரித்துக் கொன்றதாகட்டும், மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலையில் சம்பந்தப் பட்டவர்களை ஏழே ஆண்டுகளில் சிறையிலிருந்து வெளியில் கொண்டு வந்த திறமை ஆகட்டும், சன் டிவி என்ற பெரிய சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருந்த, மாறன் சகோதரர்களை மண்ணைக் கவ்வ வைத்து சரணடைய வைத்த திறமையாகட்டும், அஞ்சா நெஞ்சன் அஞ்சா நெஞ்சன் தான்.






அஞ்சா நெஞ்சனால் மட்டுமே, திமுகவை உடைத்து, திமுகவிற்கு இன்று இருக்கும் வாக்கு வங்கியை சிதற வைக்கும் திறமை இருக்கிறது. திமுக வாக்கு வங்கி சிதறினால், தானாக அதிமுகவோ, வேறு கட்சிகளோ ஆட்சியைப் பிடித்து விடும். அதனால், தமிழ்நாட்டுக்கு விமோசனம் கிடைக்கும்.

அதனால், அனைவரும், ஒன்று சேர்ந்து அஞ்சா நெஞ்சனின் கரத்தை வலுப்படுத்துவோம்.
தலைவா வா… தலைமையேற்க வா… தமிழகம் காக்க வா…..


சவுக்கு