சவுக்கு இன்று மூன்று லட்சம் ஹிட்டுகளைத் தொட்டுள்ளது. சவுக்கை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும், சவுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளது. திட்டினாலும், அநானியாக வந்து அவதூறு பேசினாலும் அவர்களும் சவுக்கு வாசகர்கள் தானே ? அந்த வாசகர்களின் ஆதரவு இல்லாமல் சவுக்கு ஏது ?
நிற்க. 21 ஏப்ரல் 2009ல் தொடங்கிய சவுக்கு, அவ்வளவாக பிரபலமில்லாமல் தான் இருந்தது. காவல்துறையினரைப் பற்றிய சில பிரத்யேக செய்திகள் வந்தவுடன், காவல்துறையினரால் கவனிக்கப் பட்டது. மெள்ள மெள்ள சவுக்கு வாசகர் வட்டம் விரிவடைந்து கொண்டே இருந்த நிலையில் தான், அருமை நண்பர், ஜாபர் சேட், பல கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத விளம்பரத்தை சவுக்குக்கு தேடிக் கொடுத்தார். ஒரு பொய் வழக்கு சவுக்கை பல ஆயிரம் வாசகர்களிடம் ஒரே நாளில் சேர்த்தது. பல ஆயிரம் வாசகர்கள் சேர்ந்தாலும், சவுக்குக்கு பெரும் மகிழ்ச்சி, காவல்துறையில், கீழ் நிலையில் உள்ள காவலர்களும், தலைமைக் காவலர்களும், தங்கள் உயர் அதிகாரிகளைப் பற்றி வரும் செய்திகளை படித்து மகிழ்வது தான். தங்களால் செய்ய முடியாததை யாரோ ஒரு முகம் தெரியாதவன் செய்கிறான் என்ற மகிழ்ச்சியை, உளவுத் துறையிலேயே பணியாற்றும், காவலர்கள், மற்றும் தொழில் நுட்ப பணியாளர்களிடம் காண முடிந்தது. என்னவெல்லாம் சொல்லி என்னைத் திட்டியிருப்பாய். இப்போது பார், உன்னை ஒருவன் கிழி கிழியென்று கிழிக்கிறான் என்று அவர்கள் மகிழும் போது, சவுக்குக்கு இதை விட பெரும் மகிழ்ச்சி வேறு என்ன கிடைக்க முடியும் ?
மூன்று லட்சம் ஹிட்டுகளைத் தொட்டிருக்கும் இந்த நேரத்தில் அதற்கு உதவி செய்த ஜாபர் சேட்டைப் பற்றி எழுதாவிட்டால், பொருத்தமாக இருக்குமா ? அதற்காகத் தான் இந்தப் பதிவு.
ஜோசப் ஃபெலிக்ஸ் என்றதும், யாரது புதிய கேரக்டராக இருக்கிறதே என்று சவுக்கு வாசகர்கள் வியக்கக் கூடும். இவர் நமக்கு புதிய கேரக்டர் தான். ஆனால் ஜாபர் சேட்டுக்கு ரொம்ப பழைய கேரக்டர். அவர்தான் ஜாபர் சேட்டின் பள்ளி ஆசிரியர். அந்த ஆசிரியர் பார்த்தால் ரொம்ப நல்ல மாதிரிதான் தெரிகிறார். ஆனால் இப்படி ஒரு தறுதலை மாணவரை எப்படி அவர் உருவாக்கினார் என்பதுதான் எல்லோருக்கும் ஆச்சர்யம். சவுக்கு உட்பட. அதனால் அவருக்கே ஒரு மனந்திறந்த மடல் எழுதி கேட்டு விடலாம் என்று சவுக்கு முடிவெடுத்துள்ளது.

அன்புள்ள அய்யா ஜோசப் ஃபெலிக்ஸ் அவர்களுக்கு,
சவுக்கு எழுதிக் கொள்வது. தாங்கள் நலமாக இருக்கிறீர்களோ இல்லையோ தெரியாது. ஆனால், தமிழக மக்களும், சவுக்கும் நலமாக இல்லை. இந்த நலமின்மைக்கு காரணம், நீங்கள் உருவாக்கிய தறுதலை மாணவர் ஜாபர் சேட் என்ற சொன்னால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.
நீங்கள் சவுக்கை தொடர்ந்து படித்து வந்திருப்பீர்களேயானால், உங்கள் மாணவன் யார் என்பதும், அவரது வண்டவாளங்கள் என்ன என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் நீங்கள் சவுக்கு படிப்பதில்லை என்றுதான், உங்கள் நண்பர்கள் சொல்கிறார்கள். சவுக்கை படிக்கச் சொல்லுங்கள் என்று சொன்னால், உங்களுக்கு இணையம் பரிச்சயம் இல்லை என்று சொல்கிறார்கள் உங்கள் பழைய மாணவர்கள். இந்த மனந்திறந்த மடல் உங்களை வந்து சேரும் என்ற நம்பிக்கையிலேயே சவுக்கு உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறது.
நீங்கள், நல்லதையே உருவாக்கியிருக்கிறோம் என்ற தவறான நம்பிக்கையில் உள்ளீர்கள். ஆனால் நீங்கள் ஒரு விஷ விருட்சத்தை வளர்த்து உள்ளீர்கள் என்பது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.
சமீபத்தில் திண்டுக்கல்லில் உங்கள் பள்ளியில் நடந்த விழாவில் பவ்யமாக உங்களை வகுப்பு எடுக்கச் சொல்லி விட்டு, “ரெக்கார்ட் டான்ஸை” வேடிக்கை பார்ப்பது போல உட்கார்ந்திருக்கிறாரே…. ?

அந்த ஜாபர் சேட், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், நமது அழைப்பை ஏற்று உடனடியாக பள்ளி விழாவுக்கு வருகை தந்துள்ளாரே என்று நீங்கள் பெருமை பட்டிருக்கக் கூடும். அவர் வந்தது பள்ளி விழாவுக்கா, திண்டுக்கல் ”மோட்டலில்” பஞ்சணையில் பள்ளி கொள்ளவா என்பதை உங்கள் மாணவரிடமே கேளுங்கள். அவரிடம் பதில் இருக்காது.

ஊருக்கெல்லாம், ரமலான் நோன்பிருக்கும் ஒரு நல்ல அதிகாரி போல வேஷம் போட்டுக் கொண்டு, திண்டுக்கல் மோட்டலில் என்ன செய்தார் என்பதை கேளுங்கள் உங்கள் மாணவரிடம். ஆனால், ”அதற்கும்” ரகசிய நிதியைப் பயன்படுத்தினார் என்பது எவ்வளவு கேவலமான விஷயம் ? அவர் எத்தனை மணிக்கு மோட்டலுக்குள் சென்றார், எத்தனை மணிக்கு வெளியில் வந்தார், மோட்டல் அறைக்குள் என்ன செய்தார், என்ன பேசினார் என்பது உட்பட சவுக்குக்குத் தெரியும் என்றாலும், அதையெல்லாம் சவுக்கு எழுத விரும்பவில்லை.
இவர் மாநில உளவுப் பிரிவு தலைவராக இருக்கலாம். ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டன்றோ ?
அய்யா ஆசிரியரே….. என்னதான் கற்றுக் கொடுத்தீர்கள் ஜாபர் சேட்டுக்கு ?
ஆசிரியர்கள் என்பவர்கள் இந்த தேசத்தை கட்டுபவர்கள் என்பது சவுக்கின் கருத்து. சவுக்கு, சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாவது வகுப்பு படிக்கும் போது, கேஎன்டி என்று அழைக்கப் படும், கே.என்.தேசிக்காச்சாரி அவரது ஒரு பயண அனுபவத்தைச் சொன்னார். அது இன்று வரை சவுக்கின் வாழ்வை வழி நடத்திக் கொண்டிருக்கிறது.
அவர், திருச்சிக்கு அவசர வேலையாக செல்ல வேண்டியிருந்தது. அப்போது ரயிலில் அவ்வளவாக கூட்டம் இல்லையென்றாலும், முன் பதிவு செய்ய அவருக்கு அவகாசம் இல்லை. அதனால், முன்பதிவு இல்லாத பயணச் சீட்டு எடுத்துக் கொண்டு, ரயிலில் ஏறுகிறார். ரயிலில் பல பெர்த்துகள் காலியாக இருந்தாலும், டிக்கட் பரிசோதகருக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெர்த் கிடைக்கும் என்ற நிலை.
அந்த தேசிக்காச்சாரி என்ன செய்தார் தெரியுமா ? கையில் வைத்திருந்த இந்து நாளிதழை (இந்து நாளிதழுக்கான சரியான பயன்பாடு) தரையில் விரித்து, ஒரு ஜெப்ரி ஆர்ச்சர் நாவலை படித்துக் கொண்டே பயணத்தை முடித்து விட்டதாக கூறினார். சவுக்கு அவரிடம் ”ஏன் சார் டிடிஆருக்கு லஞ்சம் கொடுத்து பெர்த் வாங்கவில்லை (அப்பவும் இதே அதிகப் பிரசங்கித் தனம்) என்று கேட்ட போது அவருக்கு நான் கொடுக்கும் லஞ்சத்தை நான் நியாயப் படுத்தினால், உங்களுக்கு ட்யூஷன் வைத்து லஞ்சம் வாங்குவதும் எனக்கு நியாயமாகப் படும், இது என்னைத் தொடர்ந்து பல ஊழல்களைப் புரிவதற்கு தயார் படுத்தும் என்று கூறினார்.
அது இவ்வளவு தெளிவாக அப்போது புரியாவிட்டாலும், லஞ்சம் கொடுப்பதும் தவறு என்பதை ஏறக்குறைய சவுக்குக்கு அப்போது புரிய வைத்தவர் கே.என்.தேசிக்காச்சாரி. பின்னர் ஒரு நாள் பள்ளிக்கு அவரைக் காண சென்ற போது அவர் இறந்து விட்டார் என்று செய்தி கிடைத்தது.
ஆனால் ஃபெலிக்ஸ் அய்யா, நீங்கள் ஒரு மிக மிக மோசமான ஒரு அயோக்கியனை மாணவனாக உருவாக்கி, இந்த தேசத்தில் நடமாட விட்டிருக்கிறீர்கள் என்றே சவுக்கு கருதுகிறது.
இவ்வளவு திறமையாக ஒட்டுக் கேட்பை செய்யும் இந்த நபர் தனது ஒட்டுக் கேட்கும் கலையை பள்ளிப் பருவத்திலேயே தொடங்கியிருப்பார் என்றே சவுக்கு கருதுகிறது.
அவர் வகுப்பில் படிக்கும் போதே இது போல ஒட்டுக் கேட்பில் ஈடுபட்டாரா என்பதை நீங்கள்தான் அய்யா தெளிவு படுத்த வேண்டும்.
கக்கூஸை புதுப்பிக்க ரகசிய நிதி, வாஸ்து மீன் வாங்க ரகசிய நிதி, சோபா செட் வாங்க ரகசிய நிதி, மளிகை சாமான் வாங்க ரகசிய நிதி, ஒட்டுக் கேட்க ரகசிய நிதி, சொத்து வாங்கிப் போட ரகசிய நிதி என்று ரகசிய நிதியை தனது நிதியாக, கருணாநிதி போல செலவு செய்ய நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?
அய்யா நீங்கள் ஒரு கிறித்துவர். ஏசுபிரான், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று சொல்லியிருக்கிறார். உங்களில் எவன் பாவஞ் செய்யாதவனோ, அவன் இவள் மீது முதல் கல்லேறியட்டும் என்று ஒரு விலைமகளை பாதுகாத்திருக்கிறார். அப்படிப்பட்ட கிறித்துவ மதத்தை விரும்பி ஏற்றுக் கொண்ட ஆசிரியரான நீங்கள் உருவாக்கிய மாணவனா 30க்கும் மேற்பட்ட உயிர்களை போலி என்கவுண்டரில் பறித்தது ? என்ன அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ஜாபர் சேட்டுக்கு ?
தனக்கு தொழில் பங்குதாரராக இருந்தால் பல காரியங்கள் நடக்கும் என்று தொழில் பங்குதாரராக சேர்த்துக் கொண்டு, அவரோடு நட்பு பாராட்டி, அவரால் பல காரியங்களை சாதித்து விட்டு, ஆளுநர் மாளிகை இடைத்தரகர் நஜிமுத்தீன், கூடுதல் ஆணையர் ஷகீல் அக்தர் மனைவியோடு சேர்ந்து கொண்டு சென்னையில் 30க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி நிலையங்களை திறக்கப் போகிறார் என்று இவர் கீழ்ப்பாக்கத்தில் ஓசியில் உடற்பயிற்சி செய்யும் ஜிம் முதலாளியிடம் சொல்லவில்லை ? இதுதான் இவரை நம்பிப் பழகி வரும் நஜிமுத்தீனுக்கும், இவரை நம்பிக் கொண்டிருக்கும் ஷகீல் அக்தருக்கும் இவர் காட்டும் நன்றியா ?
இப்படிப் பட்ட நன்றி கெட்டத் தனத்தையா சொல்லிக் கொடுத்தீர்கள் அய்யா ?
எந்நன்றி கொன்றாலும், உய்வுண்டு, செய்நன்றி கொன்றால் உய்வே இல்லை என்கிறானே வள்ளுவன். செய்நன்றியை மறந்து அவர்கள் முதுகில் குத்தவா கற்றுக் கொடுத்தீர்கள் ஃபெலிக்ஸ் அய்யா ?
தன்னோடு நெருங்கிப் பழகி, உண்டு உறவாடி, தொழில் பங்குதாரராக இருக்கும் குருமாராஜின் தொலைபேசியை ஒட்டுக் கேட்கும் அளவுக்கு, கீழ்த்தரமாக தரங்கெட்டவராகவா உருவாக்கினீர்கள் உங்கள் மாணவரை ?
தன்னை விட மூத்த அதிகாரியாக இருந்தாலும், தனது காலில் வந்து மண்டியிட வேண்டும் என்ற அதிகார வெறி எப்படி அய்யா வந்தது ஜாபருக்கு ? தன்னை விட மூத்த அதிகாரிகளைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி கருணாநிதியிடம் அவர்களுக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுப்பேன் என்று மிரட்டுவதற்கு நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?
நீங்கள் இத்தனை ஆண்டுகாலம் கழித்து வகுப்பு எடுக்கும் போது, அமைதியாக உட்கார்ந்திருக்கிறாரே … ….. இந்த வகுப்பில் இவரைப் போலவே இன்னும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இருப்பார்களேயானால், இது போல அமைதியாக இந்த ஜாபர் சேட் உட்கார்ந்திருப்பாரென்றா நினைக்கிறீர்கள் ?
ஐபிஎஸ் படித்து முடித்து நல்ல அதிகாரியாக உருவாகி, மக்களுக்கு நற்பணி ஆற்றுவார் என்று எதிர்பார்த்தால், ஊர் முழுக்க சொத்து வாங்கிப் போடவும், ஊழல் செய்யவும், அதிகார வெறி தலைக்கு ஏறி ஆணவம் பிடித்து ஆடவும் நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?
உளவுத் துறைக்கு கூடுதல் டிஜிபியாக யாரை நியமித்தாலும், தனது அதிகாரம் குறையும் என்பதால், இவ்வாறு நியமிக்கப் பட்ட ஒவ்வொரு கூடுதல் டிஜிபியையும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி மாற்றி விட்டு உளவுத் துறைக்கு தான்தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்ற ஆணவத்தை நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?
நாட்டின் பாதுகாப்புக்காக சிலரின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கலாம். ஆனால் தனது பதவியை பாதுகாத்துக் கொள்வதற்காக, நண்பன், விரோதி என்று பார்க்காமல், ஒருவரையும் விட்டு வைக்காமல், பத்திரிக்கையாளர்கள் முதற்கொண்டு அனைவரது தொலைபேசிகளையும் ஒட்டுக் கேட்டு, அவர்களது ரகசியங்களையும் அந்தரங்கங்களையும் அறிந்து கொண்டு, இதை ஆளும் வர்க்கத்திடம் சொல்லும் இந்த கேவலத்தை நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?
ஒருவனின் உரையாடலை ஒட்டுக் கேட்பது என்பது அடுத்தவனின் படுக்கையறையில் எட்டிப் பார்ப்பதாகாதா ? என்ன கலாச்சாரத்தை கற்றுக் கொடுத்தீர்கள் ஜாபர் சேட்டுக்கு ?

குருமாராஜோடும், போலிப் பாதிரியோடும் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டில் ஒரு இடம் பாக்கி இல்லாமல், வசூல் வேட்டையில் இறங்க நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?
ஆளும் வர்க்கத்திற்கு வசூல் செய்து தரும் ஏஜென்ட்டாக செயல்படும் கலையை நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?
ஜாபர் சேட்டை உங்கள் கல்வி பண்படுத்தவில்லை. அவரது மதம் பண்படுத்தவில்லை. ஐபிஎஸ் பயிற்சி பண்படுத்தவில்லை. இப்படி எதுவுமே பண்படுத்த இயலாத ஒரு ஜந்துவை எப்படி அய்யா நீங்கள் உருவாக்கினீர்கள் ?
ஜாபருக்கு அளித்த கல்வியில் தான் நீங்கள் தோற்று விட்டீர்கள். உங்களால் முடிந்த தொகையை அவருக்கு மணி ஆர்டராக அனுப்பினாலாவது, திருவான்மியூரில் அவர் வீடு கட்டும் பணி, தொடர்ந்து நடக்கும். இந்த தளத்திலேயே இருக்கும் முகவரிக்கு உங்களால் முடிந்த ஒரு தொகையை உடனடியாக அனுப்பி அவர் வீடு கட்டும் பணி நிறைவடைய உதவுங்கள் அய்யா.