Tuesday, December 15, 2009

திமுகவின் புதிய மாவட்ட செயலாளர் SS.கிருஷ்ணமூர்த்தி IPS


எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஐபிஎஸ்




சமீபத்தில் தேர்தல் ஆணையத்தால் மாறுதல் செய்யப் பட்ட, எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஐபிஎஸ், திமுகவின் புதிய மாவட்ட செயலாளராக உருவெடுத்துள்ளார்.

திமுகவின் மாவட்ட செயலாளர்களை விட விசுவாசமாக, அழகிரிக்கும், கருணாநிதிக்கும் செயல்பட்டு வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக வின் மூத்த நிர்வாகிகள் கூட, திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி இடைத் தேர்தலில் காட்டாத அக்கறையை கிருஷ்ணமூர்த்தி காட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கட்சியின் மூத்த நிர்வாகிகளை விட, அழகிரிக்கும் கருணாநிதிக்கும் விசுவாசமாக செயல்பட்ட காரணத்தினாலேயே கிருஷ்ணமூர்த்தியை அதிரடியாக தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


யார் இந்த கிருஷ்ணமூர்த்தி, இவரது பின்புலம் என்ன என்று சவுக்கு புலன் விசாரணையில் இறங்கிய போது, பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால், க்ரூப் 1 சர்வீசில், டிஎஸ்பி யாக தேர்ந்தெடுக்கப் பட்டு, இன்று பதவி உயர்வில் ஐஜியாக பணி புரியும் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பணியில் சேர்ந்த நாள் முதலாக தனது அடாவடி (High handed) நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


கீரனூரில் டிஎஸ்பி யாக பணி புரிந்த போது மூன்று பேரை போலி என்கவுண்டரில் சுட்டுக் கொன்றவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக காட்டிக் கொள்வதில் மிகுந்த பெருமை அடைபவர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.


பிறகு சில நாள் சிபிஐல் பணியாற்றினார். சிபிஐல் பணியாற்றுகையில் ராஜீவ் கொலை வழக்கு விசாரிக்கும் குழுவில் இருந்தார். இவரது கட்டுப்பாட்டில் இருந்துதான் கோடியக்கரை மிராசுதார் சண்முகம் தப்பிச் சென்று தூக்கிலிட்டுக் கொன்றதாக புகார் எழுந்தது. இவர் மீது எடுக்கப் பட்ட துறை நடவடிக்கை 2001ல் தனது அரசியல் செல்வாக்கால் முடிவுக்கு வந்தது.



பிறகு பதவி உயர்வில் எஸ்.பியாக ஆகி, மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் தென் மண்டல எஸ்.பியாக பதவி வகித்தார். பிறகு சில நாள் சிபி.சிஐடி பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றிய பின் லஞ்ச ஒழிப்புத் துறையில் மத்திய சரக காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.


லஞ்ச ஒழிப்புத் துறையில் எஸ்.பியாக பணியாற்றிய காலத்தில் தான், அத்துறை, தமிழகமெங்கும் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் நுழைந்து அரிசியை கைப்பற்றி ஜெயலலிதா திமுக அரசு மீது சுமத்திய புழுத்துப் போன அரிசி என்ற குற்றச் சாட்டை மெய்ப்பிக்கப் பார்த்தது. இதன் பிறகு, கிருஷ்ணமூர்த்திக்கும், அவருக்கு மேலதிகாரிகயாக பணியாற்றியவருக்கும், மோதல் வெடித்தது.


லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிக் கொண்டு மருத்துவ விடுப்பில் இருந்த காலத்தில் தனக்கு அலுவலகப் பணிக்காக வழங்கப் பட்டிருந்த TN-01-G-2001 என்ற குளிர் வசதி செய்யப் பட்ட அம்பாசிடர் காரை தனது உறவினர்களுடன் திருப்பதி சென்று வர பயன்படுத்தினார் என்று அவரது மேலதிகாரி குற்றம் சாட்டினார்.


அலுவலக காரை துஷ்பிரயோகம் செய்வது அனைத்து காவல்துறை அதிகாரிகளும் செய்வதுதான் என்றாலும், லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து கொண்டு கிருஷ்ணமூர்த்தி இந்த வேலையைச் செய்ததுதான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.


மேலதிகாரியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக, இதற்கு அடுத்து, சென்னை கீழ்ப்பாக்கத்தின் துணை ஆணையராக நியமிக்கப் பட்டார் கிருஷ்ணமூர்த்தி. இதன் பின் மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப் பட்டார். இந்தக் காலத்தில் அப்போது மாநகர காவல் ஆணையராக இருந்த விஜயக்குமாருடன் மிகுந்த நெருக்கமானார்.


தமிழகத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்த காலத்தில், பல ஊழியர்கள் மேல் வழக்கு பதிவு செய்யப் பட்டு, தங்கள் வீடுகளில் இருந்து நள்ளிரவில் கைது செய்யப் பட்டார்கள் நினைவிருக்கிறதா ? இந்தப் பணிகளையெல்லாம் திறம்பட செய்து முடித்தவர் இந்த கிருஷ்ணமூர்த்திதான்.


வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப் பட்டார் நினைவிருக்கிறதா ? அந்த வெங்கடேச பண்ணையாரை சுட்டுக் கொன்றவர் இந்த எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திதான். ஒரு உயிரைக் கொல்கிறோமே என்ற எந்த வித குற்ற உணர்வும் இல்லாமல் பல கொலைகளைச் செய்தவர்தான் இந்த கிருஷ்ணமூர்த்தி.


லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து மாறுதல் ஆகிச் சென்றவுடன், இவரது ரகசிய ஆண்டறிக்கையில் 35 குற்றச் சாட்டுகள் இவரது மேலதிகாரிகளால் எழுப்பப் பட்டன. அத்தனை குற்றச் சாட்டுகளையும், தனது அரசியல் செல்வாக்கால் ரத்து செய்தார் கிருஷ்ணமூர்த்தி.




இதற்கு பிறகு, பதவி உயர்வில் டிஐஜியாக திண்டுக்கல் சரகத்தில் பணியாற்றிய காலத்தில்தான், திமுக முக்கிய புள்ளிகளுக்கு நெருக்கமானார் கிருஷ்ணமூர்த்தி. பிறகு, ஐஜியாக பதவி உயர்வு பெற்று, தென் மண்டல ஐஜியாக நியமிக்கப் பட்டார்.


தென் மண்டல ஐஜியாக ஆனதும், மதுரை அதிகார வட்டத்திற்கு மிக நெருக்கமானார். அழகிரியின் அல்லக்கைகளுக்கு ஐஜி அலுவலகம் சத்திரம் போல் ஆனது. என்ன பிரச்சினை என்றாலும், “அண்ணன்“ பெயரைச் சொல்லி ஐஜியிடம் காரியம் சாதித்துக் கொள்ளத் துவங்கினார்கள் அழகிரியின் அல்லக்கைகள். பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி போன்றவர்கள் எல்லாம் கிருஷ்ணமூர்த்திக்கு மிக நெருக்கமாக ஆனார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜனவரி 2009ல் வந்தது திருமங்கலம் இடைத் தேர்தல். இத்தேர்தலில், தமிழகம் இது வரை சந்திக்காத அளவுக்கு பணப் பட்டுவாடா நடந்ததை தமிழகமே அதிசயித்துப் பார்த்தது. இந்தப் பணப் பட்டுவாடாவை முன்னின்று நடத்தத் தொடங்கினார் கிருஷ்ணமூர்த்தி. தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, நேரடியாக ஆய்வு செய்து, உடனடியாக கிருஷ்ணமூர்த்தியை மாறுதல் செய்ய உத்தரவிட்டதன் அடிப்படையில் தென் மண்டல ஐஜி பொறுப்பிலிருந்து கிருஷ்ணமூர்த்தி மாற்றப் பட்டார்.


தேர்தல் முடிந்ததும், “அண்ணனின்“ ஆணைப்படி, மீண்டும் தென் மண்டல ஐஜியாக பதவியேற்றார் கிருஷ்ணமூர்த்தி.


திருச்செந்தூர் இடைத் தேர்தல் வந்ததும், மீண்டும் தனது கரைவேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, களத்தில் இறங்கினார் கிருஷ்ணமூர்த்தி. ஆளும் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்கிறார்கள் என்று புகார் எழுந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் செங்கோட்டையன், ராஜ.கண்ணப்பன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தங்கியிருந்த ஓட்டலில் சோதனை நடத்தினார் கிருஷ்ணமூர்த்தி.

இந்தச் சோதனைக்கு, மேலதிகாரிகளிடமோ, தேர்தல் பார்வையாளரிடமோ, மாவட்ட தேர்தல் அதிகாரியிடமோ எவ்வித முன் அனுமதியோ, தகவலே தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், மதுரையில் தனது அலுவலகம் உள்ள நிலையில், திருச்செந்தூர் சென்று, தானே முன் நின்று இந்த சோதனையை கிருஷ்ணமூர்த்தி நடத்தியுள்ளார்.

இந்த சோதனை, “அண்ணனின்“ மனதை குளிர்விப்பதற்காகத் தான் என்று தகவல் வந்துள்ளது.


செங்கோட்டையன் உள்ளிட்டோர் அளித்த புகார்களை அடுத்து, தேர்தல் ஆணையம், கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக அருகாமையிலுள்ள ஐஜியிடம் பணியை ஒப்படைத்து விட்டு, பணியிலிருந்து விடுவித்துக் கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்தது.



இடைத் தேர்தல் முடிந்ததும், மீண்டும் கிருஷ்ணமூர்த்தி, தென் மண்டல ஐஜியாக நியமிக்கப் படுவார் என்பதில் எவ்வித ஐயமும் வேண்டாம்.

தேர்தல் ஆணையம், மாறுதல் உத்தரவோடு நின்று விடாமல், அனுமதி பெறாமல் சோதனை நடத்தியதற்காக ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆனால், எத்தனை ஒழுங்கு நடவடிக்கைகள் வந்தால் என்ன ? “அண்ணன் காட்டிய வழியம்மாஆஆஆஆ“ என்று நடப்பவருக்கு ஒழுங்காவது நடவடிக்கையாவது

இந்திய அரசியலமைப்பின் பால் உண்மையாகவும், பற்றுடனும், மனசாட்சியுடனும், நடந்து கொள்வேன் என்று உறுதி மொழி எடுத்து விட்டு, அதிகார மையத்திடம் உண்மையாகவும், விசுவாசமாகவும், உளச்சான்றின்படியும் நடந்து கொள்ளும் கிருஷ்ணமூர்த்தி போன்ற ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கும் வரை, அரசியல் அமைப்புச் சட்டம், புழுதியில் எறியப் பட்ட “நல்லதோர் வீணைதான். “



சவுக்கு

Sunday, December 13, 2009

தெலங்கானா பிரச்சினைக்கு தீர்வு. சோனியாவுக்கு யோசனைகள்.



ஆழம் தெரியாமல் காலை விட்டு மாட்டிக் கொண்டு விழிக்கிறார் சோனியா. ராஜசேகர ரெட்டிக்கு பிறகு, ஆந்திராவில் ஒரு பெரிய தலைவர் இல்லை என்பதால், 2014ல் பிரதமராக இருக்கும் தன் மகனுக்கு ஆதரவு வேண்டும் என்ற கனவில், நள்ளிரவில், தெலங்கானா அமைக்கப் படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.


இந்த அறிவிப்பு பூதாகரமான பிரச்சினைகளை கிளப்பியுள்ளது. மேற்கு வங்கத்திலிருந்து கோர்காலாந்து, பீகாரிலிருந்து மிதிலாஞ்சல், கர்நாடகாவிலிருந்து கூர்க், குஜராத்திலிருந்து சவுராஷ்டிரா, மகாராஷ்டிராவிலிருந்து விதார்பா, மத்தியப் பிரதேசம் உத்திரப்பிரதேசத்திலிருந்து ஹரித் பிரதேஷ் என தினம் ஒரு அறிவிப்பு வெளி வந்த வண்ணம் உள்ளன.

இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று சோனியா குழம்பிய வண்ணம் உள்ளார்.




இப்பிரச்சினையை சமாளிக்க, சோனியாவுக்கு “சவுக்கு“ சில யோசனைகளை தெரிவிக்கிறது.

1) பாப்ரி மசூதி இடிப்பை விசாரித்த, மன்மோகன் சிங் லிபரான் தலைமையில், தெலங்கானா அமைப்பது தொடர்பாக ஒரு கமிஷனை அமைக்கலாம். 18 ஆண்டுகள் கழித்து, லிபரான் அறிக்கை சமர்ப்பிக்கையில் 2028 ஆகி விடும். அப்போது, தெலங்கானா பற்றி அனைவரும் மறந்து விட்டிருப்பர்.


2) அடுத்து, சந்திரசேகர ராவ் தெலங்கானா கோரிக்கை வைப்பது போலவே, ரோசைய்யாவும், தெலங்கானா கோரிக்கையை முன் வைக்க வேண்டும். முதலில், ரோசைய்யா 15 வயதாக இருக்கும் போதே, தெலங்கானாவைப் பற்றி பேசியவர் என்ற புதுக் கதையை உருவாக்க வேண்டும்.


3) அடுத்து, சந்திரசேகர ராவ், தெலங்கானாவின் எதிரி என்ற பிரச்சாரத்தை அவிழ்த்து விட வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன், சந்திரசேகர ராவ், எப்போதாவது ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியை திரித்து, 1980 லேயே, சந்திரசேகர ராவ், தெலங்கானாவுக்கு எதிராக பேட்டியளித்திருக்கிறார் என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும்.





4) தற்போதைய ஆந்திர முதலமைச்சர் ரோசைய்யா பெயரில், “ரோசைய்யா டிவி“ என்ற புதிய சேனலை தொடங்க வேண்டும். இந்த டிவிக்கு போட்டியாக, ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியை வைத்து “நன்னா டிவி“ (அப்பா டிவி) என்ற டிவியை தொடங்க வேண்டும்.


இரண்டு டிவிக்களுக்கும் கடும் போட்டி என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டும். “தெலுங்கு தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக“ என்று பல திரைப்படங்களை போட்டி போட்டுக் கொண்டு இரண்டு டிவிக்களும் ஒலிபரப்ப வேண்டும்.

5) புதிய செய்தித் தாள் ஒன்றை “மன்ச்சி பத்ரிகா“ என்ற பெயரில் உருவாக்கி அதில் ரோசைய்யா தினந்தோரும் கவிதை எழுத வேண்டும். சாம்பிள் கவிதைகள்.

மன்ச்சி வாடு
தார் ரோடு
மன நாடு
பெத்த வீடு
வாடு வஸ்தாடு
டப்பு இஸ்தாடு

அடுத்த கவிதை

ரூப் தேரா மஸ்தானா
நாக்கு காவாலி தெலங்கானா
மீரு நேனு கொட்டிஸ்தானு
நேனு நின்னை ப்ரேமிஸ்தானு


6) அடுத்து, தெலங்கானா தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ரோசைய்யா கூட்ட வேண்டும். இதில் எப்படியும், சந்திரசேகர ராவ் கலந்து கொள்ள மாட்டார். உடனே, தெலங்கானாவின் துரோகி என்று சந்திரசேகர ராவை திட்டி அறிக்கை வெளியிட வேண்டும்.


7) அடுத்த கட்டமாக, சோனியாவுக்கு தெலங்கானா அமைத்துக் கொடுங்கள் தாயே என்று உருக்கமாக கடிதம் எழுதி, அதை பத்திரிக்கைகளில் வெளியிட வேண்டும்.


8) தெலங்கானாவுக்கான போராட்டங்கள் தீவிரமடையும் நேரத்தில், மனிதச் சங்கிலி போராட்டம் என்று ரோசைய்யா அறிவிப்பு வெளியிட்டு ஒரு நல்ல மழை நாளாக பார்த்து, மனிதச் சங்கிலியை ஏ.சி காரில் அமர்ந்து பார்வையிட வேண்டும்.


9) மனிதச் சங்கிலி போராட்டம் முடிந்ததும், சட்டசபையில் இறுதி வேண்டுகோள் என்று, தீர்மானம் இயற்ற வேண்டும். இந்த தீர்மானத்திற்கு, சந்திரபாபு நாயுடு, சிரஞ்சீவி, சந்திரசேகர ராவ் போன்றோர் எதிர்ப்புத் தெரிவித்தால், தெலுங்கினத்தின் துரோகிகள் என்ற பட்டத்தை அவர்களுக்கு அளித்து, சட்டசபையில் வசை மாறி பொழியலாம்.


10) இந்தப் போராட்டங்கள் தீவிரமடையும் நேரத்தில், ஆந்திர அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கலாம். அந்த விருதுகளில், முன்னணி தெலுங்கு நடிகைகளான இலியானா, திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா போன்றோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கலாம். நடிகர்களில் முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் (சிரஞ்சீவி உட்பட) விருதுகள் வழங்கலாம். இந்நிகழ்ச்சியை ரோசைய்யா டிவியில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்.


11) தெலங்கானா கேட்டு தொடர்ந்து போராடி வரும் ஓஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களையும், வழக்கறிஞர்களையும், திடீரென்று ஒரு நாள் காவல்துறையை விட்டு, கடுமையாக தாக்கலாம். இத்தாக்குதல் காரணமாக, போராட்டம் தெலங்கானா கோரிக்கையிலிருந்து, காவல்துறை மீது நடவடிக்கை எடு என்ற வேறு வடிவம் எடுக்கும்.


12) ரோசைய்யா டிவியில் “மானாட்டா, மயிலாட்டா“ என்ற தலைப்பில், கவர்ச்சிகரமான குத்தாட்ங்களுக்கான போட்டிகளை நடத்தலாம். இப்போட்டிகளுக்கு நடுவர்களாக, பழைய ஹீரோயின்களான ரோஜா, ரம்யா கிருஷ்ணன், விஜய சாந்தி போன்றோரை நடுவர்களாக போடலாம்.








இந்நிகழ்ச்சி, தெலங்கானா போராட்டத்தை பெருமளவில் கட்டுப் படுத்தும்.

13) தெலங்கானா போராட்டம் நடந்து கொண்டிருக்கையில், ரோசைய்யாவுக்கு வாரம் இரண்டு பாராட்டு நிகழ்ச்சிகளை நடத்தலாம். எதற்கு பாராட்டு என்றே தெரியாமல், மக்கள் குழம்பிப் போவார்கள். இந்த பாராட்டு விழாக்களில் பேசுகையில், தெலங்கானாவுக்காக, ரோசைய்யா நடத்திய போராட்டங்களைப் பற்றி விரிவாக பேசலாம்.


இது போல, தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பேசிக் கொண்டிருந்தால், மக்கள் பொறுமை இழந்து, தெலங்கானாவே வேண்டாம் என்று கதறும் நிலைமையும் வரக் கூடும்.

14) இதையும் மீறி, போராட்டம் தொடர்ந்தால், ஆந்திராவில் ஒரு நல்ல தனியார் மருத்துவமனையை தேர்ந்தெடுத்து, அம்மருத்துவமனையிடம், விளம்பரத்திற்கு நல்ல பணம் வாங்கிக் கொண்டு, முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை என்று அங்கே படுத்துக் கொள்ளலாம். யாரும் முதல்வரை பார்க்க வர வேண்டாம் என்று அறிவிப்பு வெளியிடலாம்.

மருத்துவமனையில் இருந்த படியே, மன்ச்சி பத்திரிகாவில், தம்புடுக்கு கடிதம் எழுதலாம். “சாலா காலமு, வெள்லி வஸ்தானு“ என்று கடிதத்தை முடிக்கலாம். முதல்வருக்கு உடல் நிலை சரியில்லையே என்ற வருத்தத்தில் போராட்டத்தின் வேகம் குறையும்.

14) தெலங்கானா கோரிக்கையை வலியுறுத்தி, பொதுக் கூட்டங்கள் நடத்தி அக்கூட்டங்களில் சோனியாவை வந்து பேச வைக்கலாம். சோனியா பேசுகையில், சம்பந்தமே இல்லாமல், ரோசைய்யா போன்ற தலைவரைப் பெற ஆந்திரா என்ன தவம் செய்திருக்க வேண்டும் என்றும், மன்மோகன் சிங் போன்ற சிறந்த பிரதமரை நாடு இது வரை கண்டதில்லை என்றும் பேச வேண்டும்.

மக்களுக்கு இந்தக் கூட்டம் எதற்காக என்றே புரியாமல் குழம்புவார்கள். இந்த நேரத்தில் ரோசைய்யா, சோனியாவின் காலில் விழுந்து, மன்றாடுகிறேன் தாயே, தியாகத் திருவிளக்கே, தெலங்கானாவை காப்பாற்றுங்கள் “நன்னு ஷமிக்ஷண்டி, நேனு ஏமி செய்யாலி, எக்கடக்கி வெள்ளாலி, நேனு எவரனி சம்ப்ரதிச்சாலி, மீரு நாக்கு சகாயம் செய்யண்டி“ என்று புலம்ப வேண்டும்.

15) ரோசைய்யாவின் கூத்துரு மற்றும் கொடுக்குகளுக்கு (மகள் மற்றும் மகன்) மன்ச்சி பதவி தந்து, எதிர்க்கட்சிகளின் கோபத்தை கூட்டலாம். இதனால், தெலங்கானாவை மறந்து, குடும்ப அரசியல் என்ற கோஷத்தை எதிர்க்கட்சியினர் முன்னெடுப்பார்கள்.

16) இறுதியாக, "அகில லோகா தெலுகு பாஷா மகா சம்மேளனா" என்ற செம்மொழி மாநாடு நடத்தப் படும் என்று அறிவிக்கலாம். தெலங்கானா போராட்டம் நடக்கும் இந்த வேளையில் மொழி மாநாடா என்று எதிர்ப்புகள் கிளம்பும். கவலைப் படாமல் மொழி மாநாட்டு வேலைகளை தொடர்ந்து கவனித்தால், மாநாடு வேண்டுமா, வேண்டாமா என்ற இந்த விவாதத்தில் தெலங்கானா மறக்கப் படும்.

இந்த யோசனைகளையெல்லாம் கையாண்டால், இன்னும் 150 ஆண்டுகள் ஆனாலும், தெலங்கானா அமைய வாய்ப்பே இல்லை. ராகுலுக்குப் பிறகு, ப்ரியங்காவின் மகள் பிரதமராகும் வரை, தெலங்கானா ஒரு முடிவுக்கும் வராது. சோனியா நிம்மதியாக இருக்கலாம்.

குறிப்பு

இந்த யோசனைகளுக்கு, சவுக்குக்கு கட்டணம் ஏதும் தர வேண்டியதில்லை.





சவுக்கு

Friday, December 11, 2009

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள். சவுக்கின் ப்ரத்யேக ஆல்பம்

படத்தை பெரிதாக்க படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள்.












படத்தை பெரிதாக்க படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள்.




சவுக்கு

Thursday, December 10, 2009

40 நாட்களில் 11,000 ஹிட்டுகள். நன்றி வாசகர்களே!




சவுக்கு, ப்ளாகாக www.savukku.blogspot.com என்ற பெயரில் கடந்த ஏப்ரல் 2009ல் தொடங்கப் பட்டது சவுக்கு.

முதல் கட்டுரையாக "தொலைபேசி ஒட்டுக் கேட்பும், கருணாநிதியின் கபட நாடகமும்" என்ற தலைப்பில், தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் வெளிவந்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றதை ஒட்டி, இக்கட்டுரை எழுதப் பட்டது. இந்தக் கட்டுரை பலரால் படிக்கப் பட்டாலும், கருத்து எழுதுபவர்கள் குறைவாகவே இருந்தனர்.

ஆனாலும், நண்பர்கள் அளித்த ஊக்கத்தினால், தொடர்ந்து கட்டுரைகள் எழுதப் பட்டு வந்தன.

ஹிட்டுகள் அதிகம் ஆக வேண்டும் என்பதற்காக, கவர்ச்சிகரமாக, ஆர்வத்தை தூண்டும் விதமாக தலைப்புகள் வைக்க வேண்டும் என்று சில நண்பர்கள் சொன்ன ஆலோசனை நிராகரிக்கப் பட்டது. இணையத்தில் எழுதினாலும், எழுத்தில் கண்ணியத்தையும், தரத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்பதில் சவுக்கு உறுதியாக இருக்கிறது.

சவுக்கில், நகைச்சுவைக்கு இடம் இருந்தாலும், வெறும் நகைச்சுவையோடு நின்று விடக் கூடாது, முக்கிய பிரச்சினைகளைப் பற்றி எழுத வேண்டும் என்பதில் சவுக்கு தீர்மானமாக இருக்கிறது.

நவம்பர் மாதம், ப்ளாகிலிருந்து, சவுக்கு இணைய தளமாக மாறியது.


கடந்த 31.10.2009 அன்று, சவுக்கை பார்த்தவர்களின் எண்ணிக்கை, 10,000 த்தை தொட்டது.

40 நாட்களுக்குள், சரியாக 11.12.2009 அன்று, சவுக்கின் ஹிட்டுகள் 21,000த்தை கடந்து இன்னும் சென்று கொண்டிருக்கிறது.

தொடர்ந்து சவுக்கில் கட்டுரைகள் வெளிவருவதற்கான முக்கிய காரணம், தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி, கட்டுரைகளுக்கு பின்னூட்டம் இட்டு, வாக்கும் அளித்து, சவுக்கின் கட்டுரைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் அன்பார்ந்த வாசகர்கள்தான்.

வாசகர்களின் பின்னூட்டங்கள், ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளித்து, இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.

சவுக்கின் எழுத்துக்களுக்கு, தொடர்ந்து வாக்களித்து, பின்னூட்டம் இட்டு, ஆதரவு தரும் வாசகர்களுக்கு முதல் நன்றிகள்.

சவுக்கு பதிவுகளைப் படித்து, திருத்தங்கள் சொல்லி, தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வரும், மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

ஆலோசனைகளை வழங்கி, எழுத்துக்களுக்கு ஊக்கம் கொடுத்து வரும், பத்திரிக்கையாளர் மற்றும் எனது வழக்கறிஞர் நண்பருக்கும் எங்கள் நன்றிகள்.

சவுக்கு பதிவுகளை, தங்கள் நண்பர்களுக்கு forward செய்து, தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும் எங்கள் நன்றிகள்.

சவுக்கின் பதிவுகளை ரகசியமாக படித்து, யார் இந்த சவுக்கு என்று விசாரித்து வரும், உளவுத்துறை அதிகாரிகளுக்கும், சவுக்கை படித்து தங்கள் சக நண்பர்களுக்கு ரகசியமாக பரிந்துரை செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கும் எங்கள் நன்றிகள்.

சவுக்கின் பதிவுகளை, தங்கள் திரட்டியில் இணைத்து, சவுக்கு நிறைய பேரை சென்று சேர ஆதரவு அளித்து வரும், அனைத்து திரட்டிகளுக்கும் எங்கள் நன்றிகள்.

தொடர்ந்து எழுதுவோம். சமூகங்களின் அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம்.




சவுக்கு

Wednesday, December 9, 2009

கருணாநிதி திடீர் ஓய்வு அறிவிப்பு ! வெளிவராத பின்னணி தகவல்கள்.





கடந்த டிசம்பர் 6ம் தேதியன்று, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில், முதல்வர் கருணாநிதி “அரசியல், அமைச்சர் பதவி இவைகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு உங்களிலொருவனாக நான் என்னை இணைத்துக்கொள்வேன்“ சட்டமன்ற புதிய கட்டிடம் திறக்கப் பட்டதும், அண்ணா நினைவு நூலகம் திறக்கப் பட்டதும், கோவையில் செம்மொழி மாநாடு நிறைவு பெற்றதும் இவ்வாறு பதவிகளை துறந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.


கருணாநிதியின் இந்த அறிவிப்புக்கு பலமான பின்னணி இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நெடுங்காலமாகவே குடும்பத்தில் இருந்து வந்த புகைச்சல், இப்போது, கருணாநிதிக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்ததால், அந்நெருக்கடியிலிருந்து விடுபடவே, கருணாநிதி, தன் குடும்பத்தினரை எச்சரிக்க சூசகமாக இத்தகவலை விழாவில் வெளியிட்டதாக சவுக்கிடம் தகவல் வந்துள்ளது.


2006ம் ஆண்டு முதலே, கருணாநிதி குடும்பத்தில், புகைச்சல் ஆரம்பமாகி விட்டது. இரண்டு பெண்டாட்டி கட்டிய அனைத்து கணவர்களுக்கும் இருக்கும் அதே பிரச்சினை கருணாநிதிக்கு கூடுதலாகவே உண்டு.

ஏனெனில், பல இரு தார குடும்பங்களில், சண்டை போட்டுக் கொள்ள, சொத்துக்கள் குறைவாகவே இருக்கும். ஆனால், கருணாநிதி குடும்பத்தில் சொத்துக்களுக்கு பஞ்சம் இல்லை.

ஆனால், அதிகாரம் தொடர்பான பிணக்குகளும், சண்டைகளும், மன உளைச்சல்களும் மனஸ்தாபங்களும், கோபங்களும், தாபங்களும் மிக அதிகம்.


2004ம் ஆண்டு, மத்தியில் காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க திமுக வின் எம்பிக்களை பெரிதும் நம்பியிருந்ததால், கருணாநிதியின் செல்வாக்கு, டெல்லியில் கொடி கட்டிப் பறந்தது. குடும்பத்தின் வருமானத்துக்கும் குறைவில்லை.

கப்பல் போக்குவரத்து, தொலைதொடர்பு, சுற்றுச் சூழல் மற்றும் வனம் என்று அதிகாரம் படைத்த அனைத்து துறைகளையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்தனர்.


2006ல் மாநிலத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், குடும்பத்தின் குழப்பம் தீவிரமடைந்தது. மற்ற அமைச்சரவைகள் போல் இல்லாமல், முழுப் பெரும்பான்மை இல்லாமல் காங்கிரசின் தயவை கருணாநிதி நம்பி இருந்ததால், அவர் ஆசைப்பட்ட பல விஷயங்களை செய்ய முடியாமல் போனதும், கூட்டணிக் கட்சிகளின் இழுப்புக்கெல்லாம் இழுபட்டபடி இருப்பதும் வாடிக்கையாகிப் போனது.


முதல் மனைவி பத்மாவதியின் மகன், மு.க.முத்து, குடிப் பழக்கம் ஏற்பட்டு, மற்ற இரு குடும்பங்களின் அதிகாரப் போட்டியில் பங்கேற்காமல், மாதந்தோறும் செலவுக்கு பணம் வாங்கிச் செல்லும் அளவுக்கு தடம் மாறிப் போனதால், முத்துவையோ அவர் வாரிசையோ, யாரும் போட்டியாகவே கருதியதில்லை.


இரண்டாவது மனைவி தயாளு, அவர் வாரிசுகள் மற்றும் ராசாத்தி அம்மாள் அவர் வாரிசு ஆகியோருக்கு இடையேதான் போட்டி. ராசாத்தி அம்மாளுக்கு தயாளு அம்மாளின் வாரிசுளுக்கு கிடைக்கும் அதிகாரம் தனக்கோ தன் மகளுக்கோ கிடைப்பதில்லை என்று மனக்குமைச்சல்.


கருணாநிதி, பகலில் ஆலிவர் சாலையில் உள்ள தயாளு அம்மாள் வீட்டிலும், இரவில் சிஐடி காலனியில் உள்ள ராசாத்தி அம்மாள் வீட்டிலும் தங்குவது வழக்கம். இரண்டு வீடுகளிலுமே, முதலமைச்சரின் வீடு என்பதற்கான தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், அவசர அலுவல்களை கவனிக்க 24 மணி நேர அலுவலகமும் உண்டு.

இரண்டு குடும்பங்கள் இருப்பதால், அரசுக்கு இத்தோடு செலவு முடிந்தது. ஐந்து குடும்பங்கள் இருந்தால் அரசுக்கு எத்தனை செலவு என்று யோசியுங்கள். “இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்“ என்ற அரசின் குடும்பக் கட்டுப்பாட்டு திட்ட வாசகத்தை, கருணாநிதி குழந்தைகளுக்கு பதிலாக குடும்பத்துக்கு என்று நினைத்து விட்டார் போலும். பரவாயில்லை, இரண்டோடு நிறுத்தினாரே.


ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் முதல் ஆட்சியில் ராசாத்தி அம்மாளின் மகள் கனிமொழியை அமைச்சராக்க வேண்டும் என்று சிஐடி காலனி தரப்பில் இருந்து கடும் நெருக்கடி வந்தது. இந்நெருக்கடியை தாங்க முடியாமல், ராஜ்ய சபைக்கு ஏற்பட்ட காலியிடத்தில், கடந்த மே 2007ல் கனிமொழியை ராஜ்ய சபை எம்.பி ஆக நியமனம் செய்தார்.


கனிமொழி எம்பி ஆனதும், அவரை அமைச்சராக ஆக்க வேண்டும் என்று கடும் நெருக்கடி ஏற்பட்டது. கனிமொழி மந்திரி ஆக வேண்டும் என்றால், கழகத்தில் நெடுநாட்களாக மந்திரியாக இருப்பவர்களின் பதவியை பறிக்க வேண்டும் என்பதால், மவுனம் காத்தார் கருணாநிதி.


இந்த நேரத்தில் தினகரன் நாளேடு, கருணாநிதியின் வாரிசு யார் என்ற சர்ச்சைக்குரிய கருத்துக் கணிப்பை வெளியிட, இதனால் ஆத்திரமடைந்த அழகிரியின் ஆதரவாளர்கள், மதுரையில் அந்நாளேட்டின் மூன்று ஊழியர்களை படு பொலை செய்தனர்.

இந்த வன்முறை சம்பவம் நடந்து கொண்டிருக்கையில், அப்போது மத்திய மந்திரியாக இருந்த தயாநிதி மாறன், தமிழக உள்துறை செயலாளர் மாலதியை தொலைபேசியில் அழைத்து, “கவர்மெண்ட் இருக்கனுமா டிஸ்மிஸ் பண்ணணுமா ? நடவடிக்கை எடுக்கப் போறீந்களா இல்லையா ? “ என்று மிரட்டியதாகவும், மாலதி இவ்வுரையாடலை பதிவு செய்து வைத்திருந்ததாகவும், கருணாநிதியிடம் இவ்வுரையாடலை வழங்கியதாகவும், இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கருணாநிதி, நான் பார்த்து வளர்ந்த பையன், என் கவர்மெண்டையே டிஸ்மிஸ் பண்ணுவேன்னு சொல்றானே என்று ஆத்திரமடைந்ததாகவும், இதனால்தான் குடும்பத்தில் பெரும் பூசல் வளர்ந்ததாகவும் கூறுகின்றனர்.


மாறன் சகோதரர்கள் பிரிந்து சென்றவுடன், கட்சியில் நீண்ட நாட்களாக அமைச்சர்களாக இருக்கும், ஆற்காடு வீராசாமி மற்றும் துரை முருகன் ஆகியோர் கருணாநிதிக்கு மிக நெருக்கமானதாகவும், குடும்பத்தினரையும் மீறி, இவர்கள் இருவருக்கும் செல்வாக்கு வளர்ந்ததாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.


குடும்பம் பிரிந்திருந்த நேரத்தில், புதிதாக கலைஞர் டிவி என்று ஒன்று தொடங்கப் பட்டதும், செயற்கை கோள் தொலைக்காட்சியில் மாறன் சகோதரர்களின் இரும்புப் பிடியை உடைக்க, அரசு கேபிள் கார்ப்பரேஷன் துவங்கப் பட்டதும் நடந்தது.


ஜனவரி 2008 தொடங்கியே, கனிமொழியை மந்திரி ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து, கருணாநிதி, பல நாட்கள் சிஐடி காலனி செல்வதையே தவிர்த்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், டெக்கான் க்ரோனிக்கிள் நாளிதழில், இரண்டு அதிகாரிகளுக்கிடையேயான உரையாடல் வெளியாகி, சட்டசபையில் பெரும் அமளியைக் கிளப்பியது. உடனடியாக இந்த விஷயத்தை மூட, கருணாநிதி, ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்தார்.

இந்தக் கமிஷன் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போதே, டாக்டர் சுப்ரமணியண் சுவாமி, அமைச்சர் பூங்கோதை, ஊழல் வழக்கில் சிக்கிய தன்னுடைய உறவினரை காப்பாற்ற, லஞ்ச ஒழிப்பு இயக்குநர் உபாத்யாயிடம் பேசிய உரையாடலை வெளியிட்டார்.
இந்த உரையாடல் வெளியானதும், அமைச்சர் பூங்கோதையிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை பெற்றார் கருணாநிதி.

இதே உரையாடலை வேறு யாராவது வெளியிட்டிருந்தால், கருணாநிதி, முரசொலியில் கடிதம் எழுதுவதோடு விஷயத்தை முடித்திருப்பார். ஆனால் சுப்ரமணியன் சுவாமி என்றால், கருணாநிதிக்கு நள்ளிரவில் கூட நடுக்கம் வரும். ஏனெனில், சுப்ரமணியன் சுவாமி யார் என்பதை நம் அனைவரையும் விட, நன்கு அறிந்தவர் கருணாநிதிதான். 1990ல் கருணாநிதி ஆட்சி கலைக்கப் பட்டதற்கு முழு காரணம், டாக்டர்.சுவாமிதான்.




இதனால் தான், ஏறக்குறைய 2 மாதங்களாக நீதிமன்ற புறக்கணிப்பு, கருணாநிதி, சோனியா படம் எரிப்பு உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி வந்த வழக்கறிஞர்களை கண்டு கொள்ளாமல் இருந்த கருணாநிதி, டாக்டர்.சுப்ரமணியன் சுவாமி மீது முட்டை வீச்சு என்றவுடன், ஆயிரக்கணக்கான போலீசை விட்டு, வழக்கறிஞர்கள் மீது கடும் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.


சுப்ரமணியன் சுவாமிக்குப் பதில், வேறு யாராவது ஒருவர் மீது, ஆசிட் வீசியிருந்தால் கூட கருணாநிதி கண்டு கொண்டிருக்க மாட்டார். வழக்கம் போல, ஒரு கவிதை எழுதி விட்டு கதையை முடித்திருப்பார்.


பூங்கோதையிடம் ராஜினாமா கடிதத்தைப் பெற்ற கருணாநிதிக்கு, அக்கடிதத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று சிஐடி காலனி தரப்பில் இருந்து கடும் நெருக்கடி. அந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கையில் ஒரு நாள் சிஐடி காலனியில் தங்கியிருந்த கருணாநிதி, கடும் சண்டையிட்டு விட்டு, நள்ளிரவில் கிளம்பி, ஆலிவர் ரோடு வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். கருணாநிதி.


நெருக்கடி முற்றியதும், பிரச்சினையை தள்ளிப் போட, ராமச்சந்திரா மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார் கருணாநிதி. அப்போதும் பிரச்சினை தீராததால், வேறு வழியின்றி, பூங்கோதையின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார் கருணாநிதி.



இதற்கு பிறகு, பூங்கோதையைத்தான் ராஜினாமா செய்து விட்டீர்கள், கனிமொழியை மந்திரி ஆக்குங்கள் என்று கடும் நெருக்கடியை சந்தித்து வந்துள்ளார் கருணாநிதி.
இதற்குப் பிறகு, 2008 டிசம்பரில் நடந்த மாநாட்டில் கழகக் பொருளாளராக இருந்த ஆற்காடு வீராசாமியிடமிருந்து அந்தப் பதவி பறிக்கப் பட்டு ஸ்டாலினிடம் வழங்கப் பட்டது.

ஸ்டாலினிடம் முதல்வர் பொறுப்பு வழங்கப் படும் என்ற பெரும் எதிர்ப்பார்ப்பு பொய்த்துப் போனது.


ஜனவரி முதல், ஈழத் தமிழர் பிரச்சினை தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டமாய் உருவெடுத்ததும், ஈழப் பிரச்சினையையும், தேர்தலையும் காரணம் காட்டி, குடும்பப் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு கண்டார் கருணாநிதி.


தம்பி பொருளாளர் ஆனதால் ஆத்திரமடைந்த அழகிரியை சமாதானப் படுத்த, அழகிரிக்கு பாராளுமன்ற தேர்தலில் எம்.பி பதவி அளித்து, பின்னர் மந்திரி ஆக்குகிறேன் என்று உறுதியளித்து சமாதானப் படுத்தினார்.

டிசம்பரில் மாறன் சகோதரர்கள் மீண்டும் கருணாநிதி குடும்பத்தோடு இணைந்தனர். இந்த இணைப்பு விழாவுக்கு, ராசாத்தி அம்மாளுக்கும், அவர் மகள் கனிமொழிக்கும் அழைப்பு வழங்கப் படவில்லை.

இதனால் தாங்கள் முழுவதும் புறக்கணிக்கப் படுவதாக சிஐடி காலனியினர் உணரத் தொடங்கினர்.




பிரிந்த குடும்பங்கள் இணைந்து, கருணாநிதிக்கு “இதயம் இனித்து, கண்கள் பனித்ததும்“ இதுவரை, கருணாநிதியோடு நெருக்கமாக இருந்த ஆற்காட்டாரும், துரை முருகனும் விலக்கப் பட தொடங்கினர்.


பிப்ரவரியில் குடும்பத்தில் நெருக்கடி முற்றத் தொடங்கியது. கனிமொழி கடும் அதிருப்தியில் இருந்தார். மாறன் சகோதரர்கள் கொஞ்ச கொஞ்சமாக தங்கள் அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டத் தொடங்கினர்.


இதனால் குடும்பத்தில் சிக்கல் அதிகமாவதை உணர்ந்த கருணாநிதி, குடும்பச் சிக்கலைத் தீர்க்கவும், தமிழகத்தில் தீவிரமாகி வரும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஆறப் போடவும், கடும் முதுகு வலி என்று ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதற்கு முதல்நாள், தனக்கு நடந்த பாராட்டு விழாவையும் கலை நிகழ்ச்சிகளையும், 4 மணி நேரம் உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.


இந்த நேரத்தில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கடுமையாக தாக்கப் பட்ட சம்பவம் நடைபெற்றது. தமிழகமே பரபரப்பாகி, தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதிக்க அனைத்து நீதிமன்றங்களும் ஸ்தம்பித்தன.


இந்த நேரத்தில் கருணாநிதிக்கு அறுவை சிகிச்சை என்ற தகவல் வந்தது. கருணாநிதியின் நாடகங்களை பல முறை பார்த்த அனுபவம் மிக்க வழக்கறிஞர்கள் கருணாநிதியின், சுயபச்சாதாபத்தையும், கழிவிரக்கத்தையும், ஒரு கிழட்டு நரியின் புலம்பலாக ஒதுக்கித் தள்ளி தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.


அந்த நேரத்தில் அவசர அவசரமாக கருணாநிதி செய்த காரியம் என்ன தெரியுமா ? மருத்துவமனையில் இருந்தபடியே மீண்டும் பூங்கோதையை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக ஆக்கியது தான்.

மருத்துவமனையில் இருந்த படியே, மீண்டும் கருணாநிதி செய்த காரியம் தான் அனைவரையும், எரிச்சல் மூட்டியது.


தமிழகம் முழுவதும், ஈழத் தமிழருக்கான போராட்டம் தீவிரமடைந்திருந்தது. ஈழத்தில் தமிழர்கள் மீது விஷவாயு குண்டுகள் வீசப்பட்டுக் கொண்டிருந்தன. தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தனர்.


இந்தச் சூழ்நிலையில் கருணாநிதி கலைமாமணி விருதுகளை அறிவித்தார். விருது பெற்ற கலைமாமணிகள் யார் யார் தெரியுமா ?


நயன்தாரா
அசின்
மீரா ஜாஸ்மின்
சரோஜா தேவி
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா
பரத்
அனு ஹாசன்

பட்டியல் எப்படி இருக்கிறது பார்த்தீர்களா ? இதுதான் கருணாநிதி மருத்துவமனையிலிருந்த படி வெளியிட்ட அறிவிப்பு.

மேலும் ஒரு திடுக்கிடும் தகவல். கருணாநிதிக்கு அறுவை சிகிச்சையே நடக்கவில்லை என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். ராமச்சந்திரா மருத்துவமனையில் பணியாற்றும் பணியாளர்கள் உட்பட ஒருவரும் கருணாநிதி இருக்கும் தளத்திற்கே அனுமதிக்கப் படவில்லை. கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு இந்த விபரம் நன்றாகத் தெரிந்தாலும், எப்படி பேசுவார்கள் ?


இலங்கைப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் கருணாநிதி இந்த “ஆபத்தான அறுவை சிகிச்சை” என்ற நாடகத்தை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.


தேர்தல் முடிந்ததும், தமிழகத்தில் ஓரளவுக்கு திமுக வெற்றி பெற்றாலும், காங்கிரஸ் அதிக இடங்களை பிடித்ததால் திமுகவுக்கு கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் கிடைத்த அதிகாரம் கிடைக்காது போனது.


தனது குடும்பத்தில் அனைவருக்கும் கேபினெட் அமைச்சர் பதவி என்ற கனவோடு டெல்லி சென்ற கருணாநிதி, காங்கிரசின் கெடுபிடியை பார்த்து, மனம் உடைந்து, பதவி ஏற்பு விழாவில் கூட பங்கேற்காமல் சென்னை திரும்பினார்.


அழகிரியை மந்திரி ஆக்காவிட்டால் மதுரை பற்றி எரியும். மாறனை மந்திரி ஆக்காவிட்டால், சன் டிவி கைவிட்டு விடும், ராஜாவை மந்திரி ஆக்காவிட்டால் ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் யாருக்குச் சென்றது என்ற விபரம் வெளியே வரும் என்பதால், சமாதான உடன்படிக்கையாக இவர்கள் மூவரை மட்டும் மந்திரி ஆக்கி விட்டு, கனிமொழிக்கு வழக்கம் போல, இதயத்தில் இடம் அளித்தார்.


ஈழத் தமிழர் மறுவாழ்வுக்காக இலங்கை சென்ற எம்.பிக்கள் குழுவில் இடம் பெற்றிருந்தாலும், மந்திரி சபையில் இடம் பெறாததால் கனிமொழி, காய்மொழியானார்.
மத்தியில் ராசாவுக்கு அதே தொலைதொடர்புத் துறை வழங்கப் பட்டாலும், பழைய மாதிரி எதுவுமே செய்ய முடியவில்லை என்பதால் கருணாநிதிக்கு மேலும் மனப்புழுக்கம் ஏற்பட்டது.


இந்நிலையில், மத்திய அமைச்சராக பதவியேற்ற அழகிரி டெல்லியில் தரையில் விழுந்த மீனாக துடித்துக் கொண்டிருக்கிறார் என்பது ஊரறிந்த விஷயம். ஆங்கில அறிவுக் குறைவாலும், இந்தி சுத்தமாக தெரியாததாலும், வளம் கொழிக்கும் துறையாக இருந்தாலும், ரசாயனம் மற்றும் உரத்துறையில் அழகிரியால் சம்பாதிக்க முடியாமல் போனது மட்டுமல்ல வேலையே பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


தனக்கு செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஏ.கே.விஸ்வநாதனை நியமித்தால் டெல்லியில் காலம் தள்ள முடியும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அழகிரியின் கனவில், மன்மோகன் சிங் மண்ணை அள்ளிப் போட்டார்.
ஊழல் புகார் காரணமாக ஏ.கே.விஸ்வநாதனின் நியமனத்தை மன்மோகன் சிங் தள்ளுபடி செய்தார்.



ஏ.கே.விஸ்வநாதன், ஐபிஎஸ்


இதனால், ஏற்கனவே தண்ணீரில் இருந்து தரையில் விழுந்த மீன், கொதி வெயிலில் காய்வது போன்ற நிலைக்கு ஆளானார்


பாராளுமன்றத்தில் அமைச்சர்களுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பேச அனுமதி என்ற விதி, அழகிரியின் வெந்த புண்ணில் உப்பைத் தேய்த்தது.

எழுத்து பூர்வமாக, தமிழில் பேச வேண்டும் என்று அழகிரி அளித்த மனுவும் விதிகளைக் காரணம் காட்டி நிராகரிக்கப் பட்டது. இதனால், பாராளுமன்றம் செல்வதையே அழகிரி தவிர்க்கத் தொடங்கினார்.

தனது அமைச்சரவை கேள்விகளுக்கு கூட பதில் சொல்லாமல் துணை அமைச்சரை அனுப்பினார் அழகிரி.


இதனால் மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்புவது என்று முடிவெடுத்த அழகிரி, திருச்செந்தூர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது என்ற தன் விருப்பத்தை கருணாநிதியிடம் தெரிவித்தார்.

அழகிரி, மாநில அரசியலுக்கு வந்தால், கருணாநிதிக்கு அறவே பிடிக்காத “சகோதர யுத்தம்“ தமிழகம் கண்டிராத அளவுக்கு தொடங்கி, மதுரையில் ரத்த ஆறு ஓடும் என்பதை நன்றாக அறிந்த கருணாநிதி, அழகிரியின் கோரிக்கையை நிராகரித்தார்.

மேலும், ஸ்டாலினுக்கு கைத்தடிகளை வைத்து ஆர்ப்பாட்ட அரசியல் பண்ணத் தெரியாது என்பதாலும், அழகிரி மாநில அரசியலுக்கு வந்தால், ஸ்டாலின் ஏற்கனவே இருப்பதை விட, மேலும் “மங்குணிப் பாண்டியாக“ ஆகி அரசியலை விட்டே ஒழிக்கப் படுவார் என்பதாலும், கருணாநிதி அழகிரியின் கோரிக்கையை மறுத்தார்.


அனிதா ராதாகிருஷ்ணன்


அழகிரியின் கோரிக்கையை நிராகரித்து விட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையின் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்த தப்பிக்க கட்சி மாறிய அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இடைத் தேர்தலில் வாய்ப்பு அளித்தார். கட்சி மாறுகையில், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்ற நிபந்தைனையை நிறைவேற்ற வேண்டும் என்பதால், அவ்வழக்கை முடிக்க லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.

இதற்கு நேர்மையான அதிகாரி ராமானுஜம் மறுத்ததாகவும் இதனாலேயே ராமானுஜம் மாற்றப் பட்டதாகவும், சவுக்குக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அழகிரி கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், குடும்பத்திலும், அழகிரியை மாநில அரசியலுக்கு அழைத்து விட்டு, கனிமொழியை மத்திய மந்திரி ஆக்க வேண்டும் என்ற நெருக்கடி அதிகரித்திருப்பதாலுமே, கருணாநிதி, இந்த “ஓய்வு“ அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் சவுக்குக்கு தகவல்கள் வந்துள்ளன.

கருணாநிதியின் ஓய்வு அறிவிப்பை பற்றி ஸ்டாலினிடம் கருத்து கேட்கப் பட்ட போது ஸ்டாலின் அளித்திருக்கும் பதில் கவனிக்கப் பட வேண்டியது. முதல்வர் பதவியை நீங்கள் ஏற்கத் தயாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு இந்தக் கேள்வியை முதல்வரிடமே கேளுங்கள் என்று பதிலளித்துள்ளார் ஸ்டாலின்.



ஆனால், புகழ்ச்சியையும், துதிபாடலையும், அதிகாரத்தையும், ஆக்சிஜன் போல சுவாசித்துக் கொண்டிருக்கும் கருணாநிதி, ஸ்டாலின் பேரனை இளைஞர் அணித் தலைவராக்கி அழகு பார்க்கும் வரை, கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெற வாய்ப்பே இல்லை என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.



சவுக்கு

Monday, December 7, 2009

ஊழல்களின் தேசம் !




நல்ல மனிதர்கள் ஒன்றும் செய்யாமல் இருப்பதே தீவினையின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

Edmond Burke



இன்று இந்தியாவில் ஊழல் ஒரு மிகச் சாதாரணமான ஒரு விஷயமாகிப் போய் விட்டது. ஊழலைப் பொறுத்தவரை நமக்கு மிக அதிகமான சகிப்புத் தன்மை வளர்ந்து, ஊழலை ஒரு பொருட்டாகவே நாம் கருதாத அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

ஊழல் என்ன அவ்வளவு பெரிய விஷயமா ? எல்லோரும்தான் ஊழல் செய்கிறார்கள், யார்தான் ஊழல் செய்யவில்லை என்று கேட்பீர்கள்.


1993 மும்பை குண்டு வெடிப்பின் போது


1993ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பை மறந்திருக்க மாட்டீர்கள்.

250 பேர் இறந்தார்கள். 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்கள். இந்த சதிச்செயலில் 1500 கிலோவுக்கும் மேற்பட்ட ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து பயன்படுத்தப் பட்டது.

1993 பிப்ரவரி 2 மற்றும் 8 தேதிகளில் 1500 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து, இந்திய கடல் வழியாக சட்ட விரோதமாக வருவதற்கு காரணம் யார் தெரியுமா ?

மும்பை மாநகரத்தின் கூடுதல் கஸ்டம்ஸ் கலெக்டராக இருந்த சோம்நாத் தாப்பா.

மும்பை ஸ்ரீவர்தன் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் விஜய் கிருஷ்ண பாட்டீல் கோந்கா செக்போஸ்டில், ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து வைக்கப் பட்டிருந்த வண்டியை இடை மறித்து, பணம் பெற்றுக் கொண்டபின் மும்பை செல்ல அனுமதித்தவர்.

அடுத்து கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவந்த் கவுரவ். இவர், வெடிப்பொருள் இருந்த வண்டியை, மும்பை நகருக்குள் வரும் வரை பாதுகாப்புக்காக தன்னுடைய காரில், வந்து விட்டுச் சென்றவர்.


இந்த அரசு அதிகாரிகள், லஞ்சம் வாங்காமல் தங்களுடைய கடமையைச் செய்திருந்தால் 250 அப்பாவி மக்கள் இறந்திருக்க மாட்டார்கள். 700 அப்பாவிகள் படுகாயமடைந்திருக்க மாட்டார்கள்.



சுதந்திர இந்தியாவில், ஊழலை இப்போதும், அப்போதும், தாலாட்டி சீராட்டி வளர்த்தெடுத்து, இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்பதற்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான்.



காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தொடங்கப் பட்ட கட்சிகள் அனைத்தும், இன்று காங்கிரஸ் அரவணைப்பில் இருப்பதற்கு காரணமும், காங்கிரஸ் கட்சியின் ஊழல் கலாச்சாரம்தான்.

நகைச்சுவையாக ஒரு கதை சொல்வார்கள். நேரு பிரதமராக இருந்த காலத்தில், கட்சிக்காக எவ்வளவு பணம் வாங்கப் படுகிறது என்பதே நேருவுக்கு தெரியாது. இந்திரா காலத்தில், இந்திரா பெட்டிகளை எண்ண ஆரம்பித்தார். ராஜீவ் காலத்தில் சில்லரைகளையும் எண்ண ஆரம்பித்தார் என்று காங்கிரஸ் கட்சியின் மதிப்பீடுகளின் வீழ்ச்சியை குறிப்பிடுவார்கள்.





1993 வி.கே.கிருஷ்ண மேனன்.


சுதந்திர இந்தியா சந்தித்த முதல் ஊழல் நேருவின் நம்பிக்கைக்கு பாத்திரமான நெருங்கிய நண்பரும், அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்த வி.கே.கிருஷ்ண மேனன் சம்பந்தப் பட்டது.

1948ம் ஆண்டில் இங்கிலாந்துக்கான இந்திய தூதராக கிருஷ்ண மேனன் இருந்தார். அப்போது, பாகிஸ்தானுடன் போர் துவங்கிய நிலையில, லண்டனைச் சேர்ந்த சந்தேகத்திற்குரிய ஒரு நிறுவனத்திடமிருந்து 2000 ஜீப்புகள் வாங்க பரிந்துரை செய்தார். அந்நிறுவனத்திற்கு, ஏறக்குறைய மொத்த பணமும் முன்பணமாகவே வழங்கப் பட்டது.

2000 ஜீப்புகளுக்கு பதிலாக வெறும் 155 ஜீப்புகள் மட்டுமே, அவையும் தரம் குறைந்ததாக வந்து சேர்ந்தது. இது பற்றி பத்திரிக்கைகளில் பெரிய அளவில் செய்திகள் வந்தும், நேரு கிருஷ்ண மேனனை பாதுகாப்புத் துறை அமைச்சராக்கினார். இந்த ஊழலில் மொத்த மதிப்பு ரூபாய் 80 லட்சம்.


1949ல் ராவ் சிவ பகதூர் சிங் என்பவர், ஒரு வைரச் சுரங்க உரிமத்தை புதுப்பித்து தருவதற்காக சச்சேந்திர பாரன் என்ற வைர வியாபாரியிடம் ரூ.25,000 லஞ்சம் பெற்றதற்காக 3 ஆண்டுகள் சிறையில் இருந்தார். இந்த ராவ் சிவ பகதூர் சிங் யார் தெரியுமா ? மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்த அர்ஜுன் சிங்கின் தந்தை.


அடுத்த ஊழல், 1951ம் ஆண்டில், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை செயலாளராக இருந்த எஸ்.ஏ.வெங்கட்ராமன் சம்பந்தப் பட்டது. ஒரே நிறுவனத்துக்கு சைக்கிளின் உதிரி பாகங்கள் அனைத்தையும் இறக்குமதி செய்ய ஆணையிட்டதில் ஊழல் நிரூபிக்கப் பட்டு, வெங்கட்ராமன் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார்.


அடுத்த ஊழல் 1958ம் ஆண்டு, வெளி வந்த “முந்த்ரா ஊழல்“ என்று அழைக்கப் பட்ட ஊழல் தான். இந்த ஊழலை வெளிக் கொண்டு வந்தது யார் தெரியுமா ?

நேருவின் மருமகனும், இந்திராவின் கணவருமான பெரோஸ் காந்தி.



1993 பெரோஸ் காந்தி


1957ம் ஆண்டு, கொல்கத்தாவைச் சேர்ந்த ஹரிதாஸ் முந்த்ரா என்பவர்தான் இந்த ஊழலுக்கு வித்து. கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர்தான் ஹரிதாஸ் முந்த்ரா. இவர் பங்குச் சந்தையிலும் ஹர்ஷத் மேத்தாவுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.

இவரது 6 தொழில் நிறுவனங்களின் பங்குகள், பங்குச் சந்தையில் அசுர வீழ்ச்சி அடைந்ததனால் இந்நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு நிறுவனமான எல்.ஐ.சி யை வாங்க வைத்தார். எல்ஐசியும், அப்போதைய நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியின் ஆலோசனையின் பேரில், 1.25 கோடிக்கு, முந்த்ராவின் ஆறு நிறுவனங்களின் பங்குகளை வாங்கியது.

ஆனால், வாங்கிய பங்குகள் அனைத்தும், விலை வீழ்ச்சியடைந்து, எல்ஐசியின் மொத்த முதலீடும் காணாமல் போனது. இது தொடர்பாக, பெரோஸ் காந்தி பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் 1958ம் ஆண்டு கேட்ட கேள்வி, இந்தியா முழுவதும் பெரும் புயலை கிளப்பியது.

இது தொடர்பாக சொல்லப் படும் ஒரு நகைச்சுவை கதை சுவையானது.

நேருவின் மருமகன் ஆனதால், நிதி அமைச்சல் டிடிகே, பெரோஸ் காந்தியை நேரு குடும்பத்தின் செல்ல நாய் என்று கூறுவது வழக்கம்.


முந்த்ரா ஊழல் தொடர்பாக தனது பேச்சை தொடங்கிய பெரோஸ் காந்தி “நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி என்னை நேரு குடும்பத்தின் வளர்ப்பு நாய் என்று கூறுகிறார். அவர் தன்னை பாராளுமன்றத்தின் தூண்களில் ஒருவர் என்று கூறிக்கொள்கிறார். ஒரு நாய், தூணைப் பார்த்தால் என்ன செய்யுமோ அதை நான் இப்போது செய்யப் போகிறேன்” என்று கூறிவிட்டு பேச்சைத் தொடங்கினார் என்று கூறுவார்கள்.


பெரோஸ் காந்தியின் குற்றச் சாட்டைத் தொடர்ந்து, நாடெங்கும் பெரும் அமளி கிளம்ப, நேரு, நீதிபதி சாக்லா என்பவர் தலைமையில் ஒரு விசாரணை கமிஷனை அமைத்தார். நீதிபதி சாக்லா தனது அறிக்கையை சமர்ப்பிக்க எடுத்துக் கொண்ட கால அவகாசம் என்ன தெரியுமா ? 24 நாட்கள்.

நீதிபதி லிபரான் தனது அறிக்கையை சமர்ப்பிக்க எடுத்துக் கொண்ட 18 ஆண்டுகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.

நீதிபதி சாக்லா தனது அறிக்கையில் இந்த ஊழலுக்கு அப்போதைய நிதித் துறை செயலர் ஹரிபாய் படேல், மற்றும் இரண்டு எல்ஐசி அதிகாரிகளே இந்த ஊழலுக்கு காரணம், அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.

நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி நிதித் துறைச் செயலரின் நடவடிக்கைகளுக்கு, நிதி அமைச்சர் என்ற வகையில் கிருஷ்ணமாச்சாரியும் பொறுப்பு என்று கூறினார். கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார்.

இதற்கு அடுத்த பெரிய ஊழல் 1958ம் ஆண்டில், இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் முதலாளி ராமகிருஷ்ண டால்மியாவை பற்றியது. ராமகிருஷ்ண டால்மியா தன்னுடைய காப்பீட்டு நிறுவனமான பாரத் இன்ஷுரன்ஸ் நிறுவனத்திலிருந்து, 2.5 கோடியை கையாடல் செய்தார்.


1962ம் ஆண்டு தேஜா கேப்பர் ஊழல் என்று அழைக்கப் படும் ஊழல். ஜெயந்தி தர்மா தேஜா என்பவர், ரூபாய் 200 முதலீட்டில் ஒரு கப்பல் நிறுவனத்தை துவங்கினார். இந்நிறுவனத்திற்கு அரசிடமிருந்து 200 கோடியை கடனாகப் பெற்றார்.

இந்நிறுவனத்தில் முதலீடு செய்த பங்குதாரர்களின் பணம் அனைத்தும், ஜெயந்தி தர்மா தேஜாவின் சொந்த வங்கிக் கணக்கில் முதலீடு செய்யப் பட்டது. 1970ல் லண்டனில் கைதான தேஜா, காவலில் இருந்து தப்பிச் சென்றார். இன்று வரை அவர் எங்கிருக்கிறார் என்ற விபரம் இல்லை.

1962ம் ஆண்டு, பஞ்சாப் முதல்வராக இருந்த பிரதாப் சிங் கேரோன் மீது அதிகார துஷ்பிரயோக குற்றச் சாட்டு எழுந்தது. இது பற்றி விசாரிக்க, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாஸ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப் பட்டது.

நீதிபதி தாஸ் தனது அறிக்கையில், ஒரு தந்தை, தனது மகன்கள் செய்யும் எல்லா காரியங்களுக்கும் பொறுப்பாக முடியாது என்றாலும் முதலமைச்சராக இருப்பவருக்கு தனது மகன்களின் செயல்களுக்கு தார்மீக பொறுப்பு உள்ளது என்று அறிக்கை அளித்தார். இதை ஏற்ற பிரதாப் சிங் கேரோன், உடனடியாக பதவி விலகினார்.


அடுத்த ஊழல், 1971ம் ஆண்டில் நகர்வாலா ஊழல் என்று பிரபலமாக அழைக்கப் பட்ட ஊழல். 1971ம் ஆண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பாராளுமன்ற தெரு கிளையின் தலைமை காசாளர் வேத பிரகாஷ் மல்ஹோத்ராவுக்கு இந்திரா காந்தியிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் 60 லட்சம் ரூபாயை எடுத்து, பங்களாதேஷை சேர்ந்த ஒரு நபருக்கு அளித்தார்.

பின்னர், விசாரணையில் இந்திய உளவுப் பிரிவைச் சேர்ந்த ரஸ்தம் சோரப் நகர்வாலா என்பர்தான் இந்திராவின் குரலில் பேசினார் என்று கண்டிறியப்பட்டது. கைது செய்யப் பட்ட நகர்வாலா, சந்தேகத்திற்குரிய முறையில் 1973ம் ஆண்டு, சிறையிலேயே இறந்தார்.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி காஷ்யப் மர்மமான முறையில் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார்.


1976ம் ஆண்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஹாங்காங்கைச் சேர்ந்த, இல்லாத ஒரு நிறுவனத்திடம் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்பட்ட நஷ்டம் 2.2 கோடி.


1981ல் மகாராஷ்டிராவின் அப்போதைய முதல்வர் பிசினெஸ் நிறுவனங்களிடமிருந்து பெற்ற பணத்தை, தனக்கு சொந்தமான ஒரு தனியார் ட்ரஸ்டில் டெபாசிட் செய்த தொகை 30 கோடி.


1987ல் ஜெர்மனியைச் சேர்ந்த நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் நிறுவனம், கப்பல் விற்பதற்காக இந்திய அரசியல்வாதிகளுக்கு கொடுத்த லஞ்சப் பணம் 20 கோடி.


1982ம் ஆண்டு மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்த அர்ஜுன் சிங், சுர்ஹத் குழந்தைகள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் லாட்டரி டிக்கட்டில் 5.4 கோடி ஊழல் புரிந்தார் என்று குற்றச் சாட்டு எழுந்தது. ஆனால், இந்த குற்றச் சாட்டு நிரூபிக்கப் படவேயில்லை.


இதற்குப் பிறகு, இந்தியாவை உலுக்கி, ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருந்த மிகப் பெரும் ஊழல் போபர்ஸ் ஊழல்.


1987 ஏப்ரல் 16ல், சுவீடன் வானொலி போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் இந்தியாவின் அரசியல்வாதிகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் பெரிய அளவில் லஞ்சம் கொடுத்து இந்த போபர்ஸ் பீரங்கி வாங்கப் பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, இந்தியாவில் பெரும் புயல் கிளம்பியது.


இந்த பேரத்தில் லஞ்சமாக 139 கோடி ரூபாய்கள் ராஜீவ் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான ஒட்டாவியோ கொட்டரோக்கியின் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள நார்ட்பினான்ஸ் வங்கியின் 18051-53 என்ற கணக்கில் போடப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்த ஊழல் வெளியானதால், ஆட்சியை இழந்த ராஜீவ், கடைசி வரை இந்த புகாரை மறுத்து வந்தார். கடும் போராட்டத்துக்கு பிறகு வி.பி.சிங் பிரதமாரான பிறகு, சிபிஐ, இவ்வழக்கில் விசாரணையை துவக்கியது. பல ஆண்டுகள் கடந்தும், இவ்வழக்கில் ஒருவருமே தண்டிக்கப் படவில்லை.


காங்கிரஸ் 2004ல் பதவியேற்றதும், முடக்கி வைக்கப் பட்டிருந்து கொட்டரோக்கியின் வங்கிக் கணக்குகள், ரிலீஸ் செய்யப் பட்டன. பத்திரிக்கைகளில் இச்செய்தி வெளியாகி, பரபரப்பாவதற்குள், கொட்டரோக்கி, மொத்த பணத்தையும், வங்கிக் கணக்கிலிருந்து எடுத்து விட்டார்.

இன்று, காங்கிரஸ் அரசாங்கம், இந்த வழக்கை மொத்தமாக மூட, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.


1990ல் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் போயிங் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யாமல், ஏர் பஸ் நிறுவனத்தோடு செய்த ஒப்பந்தத்தால் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு வாரத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் 2.5 கோடி.


இதற்குப் பிறகு இந்தியாவை உலுக்கிய மிகப் பெரிய ஊழல் 1992ம் ஆண்டு ஹர்ஷத் மேத்தா ஊழல். ஹர்ஷத் மேத்தாவின் பங்குச் சந்தை ஊழலின் மொத்த ஊழல் தொகை 5000 கோடிக்கும் மேல்.



ஹர்ஷத் மேத்தா


இந்திய பங்குச்சந்தையில் நாட்டுடைமையாக்கப் பட்ட வங்கிகளின் பணத்தை வைத்து, பல பங்குகளின் விலையை ஏற்றவும் இறக்கவும் செய்த ஹர்ஷத் மேத்தா ஊழல் வெளி வந்ததும், பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைக் கண்டது. ஹர்ஷத் மேத்தா, அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு 1 கோடி ரூபாயை லஞ்சமாக கொடுத்ததாக திடுக்கிடும் புகாரைக் கூறினார்.

இந்த பங்குச் சந்தை ஹர்ஷத் மேத்தா ஊழல் தொடர்பாக விசாரிக்க கூட்டுப் பாராளுமன்றக் குழு அமைக்கப் பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையில் அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் எஸ்.வெங்கட்ராமன், துணை கவர்னர்கள் அமிதவ் கோஷ் மற்றும் ஆர்.ஜானகிராமனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப் படவேண்டும் என்று பரிந்துரை அளித்தது.

மேலும், மத்திய அமைச்சர்கள் ராமேஷ்வர் தாகூர், சங்கரானந்த், மாதவராவ் சிந்தியா, மன்மோகன் சிங் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்களையும் வைத்திருந்தது. ஆனால், நரசிம்ம ராவ், இந்த பரிந்துரையின் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.



1993 முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ்


அடுத்து 1994ம் ஆண்டின் சர்கரை இறக்குமதி ஊழல். மார்க்கெட்டில், சர்க்கரை தட்டுப்பாடு ஏற்பட்டு, சர்க்கரை விலை உயர்ந்ததையடுத்து, க்யான் பிரகாஷ் விசாரணை கமிஷன் அமைக்கப் பட்டது.

இக்கமிஷன், சந்தையில் சர்க்கரை கிடைக்காமல் தட்டுப்பாட்டை ஏற்பட காரணம், மத்திய அமைச்சர் கல்பனாத் ராய்தான், சர்க்கரை ஆலைகளுக்கு விலையேற்றம் காரணமாக லாபம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில், கல்பனாத் ராய், இவ்வாறு செயல்பட்டுள்ளார் என்று பரிந்துரை செய்யப் பட்டது.

இந்த அறிக்கையின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கிடப்பில் போட்டார் நரசிம்ம ராவ்.
தொண்ணூறுகள் தொடங்கி, ஊழல்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.


1995ல் யுகோஸ்லாவியா தினார் ஊழல், மேகாலயா வன ஊழல்,

1996ல் உர இறக்குமதி ஊழல், .யூரியா இறக்குமதி ஊழல், பீகார் மாட்டுத் தீவன ஊழல்,

1997ல் சுக்ராம் ஊழல், லவ்லீன் திட்ட ஊழல், பீகார் நில பேர ஊழல், பன்சாலி பங்கு வர்த்தக ஊழல்,

1998ல் தேக்கு மரக்கன்று ஊழல்,

2001ல் யுடிஐ ஊழல், தினேஷ் டால்மியா பங்கு வர்த்தக ஊழல், கேத்தன் பரேக் பங்கு வர்ததக ஊழல்,

2002ல் சஞ்சய் அகர்வாலின் வீட்டு வர்த்தக ஊழல்,

2003ல் போலி முத்திரைத் தாள் ஊழல்,

2005ல் பங்கு வர்த்தக ஐபிஓ ஊழல், பீகார் வெள்ள நிவாரண ஊழல், ஸ்கார்ப்பீன் நீர்மூழ்கி கப்பல் ஊழல்,

2006ல் பஞ்சாப் சிட்டி சென்டர் ஊழல், உத்தரப் பிரதேசத்தில் தாஜ் காரிடார் ஊழல்,

2008ல் பூனேவைச் சேர்ந்த ஹசன் அலி கான் வருமான வரி ஏய்ப்பு, சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்ட்டிரா ஊழல், ஸ்விஸ் வங்கிகளில் இந்தியக் கருப்புப் பணம், ஜார்க்கண்ட் மருத்துவ உபகரணங்கள் ஊழல், அரிசி ஏற்றுமதி ஊழல், ஒரிஸ்ஸா சுரங்க ஊழல் மற்றும் இறுதியாக மது கோடாவின் ஊழல் என ஊழல்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.



இந்த ஊழல் வழக்கில் தண்டிக்கப் பட்டவர்கள் என்று எடுத்தால், 1 சதவிகிதத்திற்கும் கீழே. இருப்பார்கள்.

இந்த ஊழல் பட்டியலில் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் போது, எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் விலை கொடுத்து வாங்கப் படுவது சேர்க்கப் படவில்லை.

கடந்த மன்மோகன் சிங் ஆட்சியின் போது, ஒரு எம்பியின் விலை 25 கோடி என்று பத்திரிக்கைகளில் செய்தி வந்தது. தற்போது, எடியூரப்பா அரசாங்கத்தை காப்பாற்றவும், ஒரு எம்எல்ஏவின் விலை 25 கோடிக்கும் மேல் என்று தகவல்கள் வந்துள்ளன.


சுதந்திர இந்தியா சந்தித்துள்ள ஊழல்களின் மொத்த மதிப்பு 80 லட்சம் கோடியைத் தாண்டுகிறது.


இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழே, அதாவது மாதம் ரூபாய் 300க்கும் கீழே சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 30 கோடி. இந்தப் புள்ளி விபரம், இந்திய அரசின் கணக்கு. யதார்த்த நிலை இன்னும் மோசமாகவே இருக்கும்.


இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்ட நபர்கள், கட்சி வித்தியாசங்களை கடந்து அனைத்து கட்சிகளிலும் உள்ளனர். தேர்தலை சந்திக்கவும், கட்சித் தாவும் எம்எல்ஏ எம்பிக்களை விலைக்கு வாங்கவும், கருப்புப் பணம் பயன்படுவதால், ஊழலில் ஊறித் திளைக்க அரசியல் கட்சிகள் அஞ்சுவதே இல்லை.

சரி மக்கள் மனநிலையில் மாற்றம் வந்திருக்கிறதா ?

பெருமளவில் மக்கள் மனநிலையில் மாற்றம் வந்திருக்கிறது.

எந்த அளவுக்கு மாற்றம் என்றால், தேர்தல் வந்தால், பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்கும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.



இலவச டிவி கொடுத்தால், முண்டி அடித்துக் கொண்டு, வாங்கும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.




1993 கே.கே.நகரில் வெள்ள நிவாரணம் வழங்கும் போது நெரிசலில் சிக்கி தன் உறவினரை இழந்தவர்கள் கதறி அழுகின்றனர்


வெள்ள நிவாரணத் தொகை வழங்கினால் நள்ளிரவில் ஒருவரை ஒருவர் ஏறி மிதித்து, 42 பேரை கொன்று, 2000 ரூபாய் பெரும் அளவுக்கு மாறி இருக்கிறது.

ஹெல்மெட் கட்டாயம் போட வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால், ட்ராபிக் போலீஸ் காரருக்கு லஞ்சம் கொடுத்தாவது, ஹெல்மெட் போடுவதில்லை என்று பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.



டிஎன்பிஎஸ்சி தேர்வு வந்தால், யாரைப் பிடித்தாவது, லஞ்சம் கொடுத்து, அரசு வேலை வாங்கும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.

அடுத்தவன் குடியைக் கெடுத்தாவது தானும் தன் குடும்பமும் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் எனும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.

பேய்கள் அரசு செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள் என்றான் பாரதி. சாத்திரங்கள் பிணந்தான் தின்று கொண்டிருக்கின்றன.


சவுக்கு

Thursday, December 3, 2009

25 ஆண்டுகளாக … … …. …. ….



1984 டிசம்பர் 2 நள்ளிரவு 12.00 மணி. மத்திய பிரதேச மாநிலம். போபால் நகரம். எல்லாப் பொழுதுகளையும் போலேதான் அன்றைய பொழுதும் கழியும் என்று இயல்பாக வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பினர் மக்கள்.


அன்றாட வேலைகளை முடித்து விட்டு நிம்மதியாக மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். குழந்தைகள், விளையாடி முடித்த களைப்பில், தன் பெற்றோரின் அரவணைப்பில் இனிமையான கனவுகளோடு, ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.


இப்போது போல கேபிள் டிவியின் ஆக்ரமிப்பு இல்லாததால், ஊரே நிசப்தமாக இருந்தது. ஒரு சில இடங்களில் மட்டும், டிரான்சிஸ்டரில் கிஷோர் குமாரும், லதா மங்கேஷ்கரும் இனிய குரல்களில் இரவின் அமைதியை தாலாட்டிக் கொண்டிருந்தனர்.


போபால் மாநகரில், ஜெயபிரகாஷ் நகரில், ஹசீரா பீவி தனது கணவர், இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியாரோடு ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். திடீரென்று எழுந்த அவரது கணவர் கடுமையாக இருமத் தொடங்கினார். “யாரோ மிளகாய எரிக்கிறாங்க போல இருக்கு“ என்று கூறினார். ஹசீரா பீவிக்கும் இருமல் கடுமையாக வந்தது.

ஹசீரா தனது 11 மாதக் குழந்தையை ஒரு போர்வையில் சுற்றி கையில் எடுத்துக் கொள்ள, அவரது கணவர் இன்னொரு குழந்தையை எடுத்துக் கொள்ள, தனது மாமியாரோடு வீட்டை விட்டு வெளியில் வந்த ஹசீரா தெருவெங்கும் மக்கள் அலறிக் கொண்டு பல்வேறு திசைகளில் ஓடுவதைக் கண்டார். எங்கும் ஒரே குழப்பம். அலறல்.

மக்கள் கூட்டத்தோடு ஓடிய ஹசீரா மக்களோடு மக்களாக அருகில் இருந்த ஒரு கல்லூரிக்குள் சென்று அடைக்கலம் புகுந்தார். அங்கு சென்ற போதுதான் குழப்பத்தில் தனது 4 வயது மகனை வீட்டிலேயே விட்டு விட்டு வந்தது நினைவுக்கு வர மீண்டும் வீட்டுக்கு ஒடினால், இறந்து விட்டான் என்று நினைத்து தனது மகனை பிணங்களோடு வண்டியில் கிடத்தி வைத்திருந்ததை கண்டார்.


என்ன நடந்தது என்று உணர்வதற்குள்ளாகவே அன்று இரவே 4000 மக்கள் செத்து மடிந்தனர். யூனியன் கார்பைட் தொழிற்சாலைக்கு அருகாமையில் இருந்த குடியிருப்புகளான ஜெயப்பிரகாஷ் நகர், காஜி கேம்ப், சோளா கேன்ச்சி மற்றும் ரயில்வே காலனி பகுதியில் வசித்த அனைத்து மக்களும் கடும் பாதிப்புக் குள்ளாயினர்.



டைம் பத்திரிக்கையின் கவர் ஸ்டோரி


முதல் 72 மணி நேரத்திற்குள்ளாக 8000 மக்கள் செத்து மடிந்தனர்.

அடுத்த சில ஆண்டுகளுக்குள் 15000க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

மொத்தத்தில் இந்த விஷ வாயுக் கசிவினால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டுகிறது.

என்ன தான் நடந்தது அந்த மோசமான இரவில் ?

இந்தியாவில் பசுமைப் புரட்சியின் ஒரு பகுதியாக பயிர் உற்பத்தியை அதிகரிக்க உயர் விளைச்சல் விதைகளை பயன் படுத்தத் தொடங்கினர். இந்த உயர் விளைச்சல் விதைகளுக்கு அதிக உரங்களும் பூச்சிக் கொல்லிகளும் தேவைப்பட்டன.

உரங்களுக்கும் பூச்சி கொல்லிகளுக்குமான தேவை அதிகமானதால் 1969ம் ஆண்டு மத்திய பிரததேசம் போபால் மாநகரத்தில் “யூனியன் கார்பைட் இந்தியா லிமிட்டேட்“ என்ற பூச்சி மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாக்கப் பட்டது.

இந்த தொழிற்சாலை, மோசமான பூச்சிக் கொல்லியாக உருவெடுத்திருந்த, சர்ச்சைக்குரிய “டிடிட்டி“ எனப்படும் “டைக்ளோரோபினைல் ட்ரைக்ளோரோஈதேன்“ என்ற ரசாயனத்துக்கு மாற்றாக “கார்பரில்“ என்ற பூச்சிக்கொல்லியை தயாரிப்பதற்காக நிறுவப் பட்டது. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் ஸ்லோகன் என்ன தெரியுமா ? “விஞ்ஞானத்தின் உதவியோடு புதிய இந்தியா”


அமேரிக்காவை சேர்ந்த யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் கிளை நிறுவனமாக அமெரிக்க நிறுவனம் 51 சதவிகித பங்குகளை வைத்திருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தோடு தொடங்கப் பட்டது. இதற்கு முன் ராணுவத் திடலாகவும், சுற்றிலும், நெருக்கமான மக்கள் கூட்டம் இருந்த ஒரு இடத்தில் இத்தொழிற்சாலை தொடங்கப் பட்டது.


இந்தப் பூச்சிக் கொல்லி தயாரிக்க தேவையான முக்கியமான ரசாயனம் “மீதைல் ஐசோ சயனேடு” என்ற கொடிய விஷம். இந்த மீதைல் ஐசோ சயனேடு யூனியன் கார்பைடின் அமெரிக்கா மேற்கு விர்ஜினியா மாகாணத்தில் உள்ள தொழிற்சாலையிலிருந்து முதலில் இறக்குமதி செய்யப் பட்டு வந்தது.

பிறகு 1980 முதல் போபாலிலேயே தயாரிக்கப் பட்டது. ஆனால் மீதைல் ஐசோ சயனேடு போபாலிலேயே தயாரிக்கத் தொடங்கிய நேரம், யூனியன் கார்பைடின் பூச்சிக் கொல்லிக்கு சந்தையில் வரவேற்பு குறையத் துவங்கியது.

இறுதியாக 1984 டிசம்பர் முதல், இத்தொழிற்சாலையின் செயல்பாடுகள் நிறுத்தப் பட்டு, இத்தொழிற்சாலையை சுத்தமாக மூடி விட, யூனியன் கார்பைடு நிறுவனம் ஆலோசித்து வந்தது.


தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப் பட்டாலும், 60 டன்கள் மீதைல் ஐசோ சயனேடு இத்தொழிற்சாலையின் மூன்று தொட்டிகளில் இருப்பு வைக்கப் பட்டிருந்தது. இத்தொட்டிகளில் 610 என்ற எண் உள்ள ஒரே தொட்டியில் மட்டும், பாதுகாப்பு அளவுகளை விட மிக அதிகமாக 40 டன் சேமிக்கப் பட்டிருந்தது.


இந்த மீதைல் ஐசோ சயனேடின் கொதி நிலை 31.1 டிகிரி. சாதாரண தட்பவெட்பத்தில் ஒரு அறையில் வைத்திருந்தாலே காற்றில் பரவும் தன்மை கொண்டது. மேலும், இந்த ரசாயனம் மணம் இல்ல தன்மை கொண்டதால், காற்றில் பரவினாலும் உடனடியாக தெரிய வாய்ப்பில்லை. கண் மற்றும் தொண்டையில் ஏற்படும் எரிச்சலால் மட்டுமே தெரியும்.


இந்த மீதைல் ஐசோ சயனேட் வைக்கப் பட்டிருக்கும் தொட்டி, குளிர் நிலையில் வைக்கப் பட வேண்டும். யூனியன் கார்பைட் வழிகாட்டுதல் குறிப்பேட்டின் படியே ஐசோ சயனேட் வைக்கப் பட்டிருக்கும் தொட்டி 11 டிகிரி வெப்பத்தைத் தாண்டினால் அபாய ஒலி எழுப்பப் பட வேண்டும். ஆனால் போபாலில் இந்த அளவு 11 டிகிரிக்கு பதிலாக 20 டிகிரியாக வைக்கப் பட்டிருந்தது.


1984 டிசம்பர் 2 அன்று இரவு தொழிலாளர்கள் வழக்கமாக பைப்புகளை சுத்தம் செய்யும் வேலையை முடிக்கும் தருவாயில் 610 தொட்டியில் ஏராளமான தண்ணீர் புகுந்தது. தண்ணீர் மீதைல் ஐசோ சயனேடில் கலந்தவுடன், அது வைக்கப் பட்டிருக்கும் இரும்புத் தொட்டி கிரியாஊக்கியாக செயல் பட, ரசாயன மாற்றம் ஏற்பட்டு, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய விஷ வாயுவாக மாறி காற்றில் பரவியது.


அன்று இரவு காற்று வேகமாக வீசியதால், அருகாமையில் உள்ள மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் இவ்விஷ வாயு புகுந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களை மீளாத் துயிலில் ஆழ்த்தியது. இக்காற்றில் இருந்து தப்பிக்க, வேகமாக ஒடியவர்கள், வேகமாக இவ்விஷக் காற்றை சுவாசித்து, அதிவேகமாக மாண்டனர்.


இக்காற்று பரவத் தொடங்கியதும், இதை சுவாசித்த மக்கள் கண் எரிச்சலும், நுரையீரல் எரிச்சலும் அடைந்து சுருண்டு விழுந்தனர்.


1985ல் மத்திய சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் இந்த விஷ வாயுவை சுவாசித்த 36 கர்ப்பிணி பெண்களுக்கு உடனடியாக கருச்சிதைவு ஏற்பட்டது, 21 குழந்தைகள் குறையுடன் பிறந்தன, 27 குழந்தைகள் இறந்து பிறந்தன என்று தெரிவித்தார். இச்சம்பவம் நடந்து 3 மாதங்களுக்குப் பிறகு பெண்களை மருத்துவமனையில் ஆய்வு செய்ததில் 90 சதவிகித பெண்கள், கருப்பை சம்பந்தமான நோய்களுக்கு ஆளாகியுள்ளதும், 79 சதவிகித பெண்களுக்கு இடுப்பு எலும்பு வீக்கமடைந்த நோயும், 75 சதவிகித பெண்களுக்கு கழுத்து எலும்பு தொடர்பான நோய்களும், 35 சதவிகித பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் அதிகப்படியான ரத்தப் போக்கும், 59 சதவிகித பெண்களுக்கு, இதர பல்வேறு நோய்களும் வந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


மூச்சுத் திணறல் மற்றும், சுவாசப் பை தொடர்பான நோய்கள், ஏறக்குறைய அனைவரையுமே பாதித்திருந்ததாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த விஷ வாயுக் கசிவு எதிர்பாராமல் நேர்ந்த விபத்தா ?

யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கு பொறுப்பு இல்லையா ?


மீதைல் ஐசோ சயனேட் இருக்கும் தொட்டிகளை பராமரிக்க பட்டதாரிகளும், 6 மாத பயிற்சி பெற்றவர்களும் நியமிக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டு, பள்ளிக் கல்வி முடித்தவர்கள் ஆபரேட்டர்களாக நியமிக்கப் பட்டனர்.

ஓரு ஷிப்டுக்கு 12 ஆபரேட்டர்கள், 3 மேற்பார்வையாளர்கள், 2 பராமரிப்பு மேற்பார்வையாளர்கள் மற்றும் ஒரு தலைமை கண்காணிப்பாளர் இருக்க வேண்டிய இடத்தில் 6 ஆபரேட்டர்கள் மற்றும் ஒரு மேற்பார்வையாளர் மட்டுமே பணியில் நியமித்திரந்தது யூனியன் கார்பைட் நிறுவனம்.

தனியார் முதலாளிக்கு லாபம் மட்டும்தானே பிரதானம் ?


1982 மே மாதம் அமெரிக்க யூனியன் கார்பைட் நிறுவனத்திலிருந்து போபால் தொழிற்சாலையை ஆய்வு செய்ய வந்த, எல்.கே.கைல், ஜே.எம்.பவுலன் மற்றும் சி.எஸ்.டைசன் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு, போபால் தொழிற்சாலையில் பல குறைகளை சுட்டிக் காட்டினர்.

மேலும், மீதைல் ஐசோ சயனேட் வைக்கப் பட்டிருந்த தொட்டிகளில் சேப்டி வால்வ் மற்றும் அவசர நிலையில் வேலை செய்ய வேண்டிய பல பகுதிகள் பழுதாக இருந்ததை சுட்டிக் காட்டினர். ஆனால், இந்த நிபுணர் குழு சுட்டிக் காட்டிய எதுவுமே சரி செய்யப் படவில்லை.


அடுத்ததாக போபாலைச் சேர்ந்த ராஜ் குமார் கேஸ்வானி என்ற பத்திரிக்கையாளர் சப்தஹீக் என்ற இந்தி வார இதழில் 1982 செப்டம்பர், மற்றும் அக்டோபரில் வெளியான இதழ்களில் “தயவு செய்து இந்நகரத்தை காப்பாற்றுங்கள்“, “எரிமலையின் வாயிலில் போபால்“ மற்றும், “உங்களுக்கு புரியாவிட்டால், துடைத்தெரியப்படுவீர்கள்“ என்ற தலைப்பில், அமெரிக்க நிபுணர் குழுவின் பரிந்துரைகளையும், அவை சட்டை செய்யப் படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதையும், போபால் நகரம் எதிர்நோக்கியிருக்கும் ஆபத்துக்களையும் பட்டியலிட்டிருந்தார்.


மேலும் 1984 ஜுன் 14ல் மத்தியப் பிரதேச முதலமைச்சருக்கு என்று கூறி, இதே விஷயங்களை “ஜனசட்டா“ என்ற தினப் பத்திரிக்கையில் விரிவாக எழுதியிருந்தார். இந்த எச்சரிக்கையையும் ஒருவரும் கண்டு கொள்ள வில்லை.


இந்த பேரழிவுக்கு முன்னாலேயே யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் 4 விபத்துக்கள் நடந்திருக்கின்றன. 1981ல் அஷ்ரஃப் என்பவர் வாயுக் கசிவினால் இறந்திருக்கிறார். இவர் மரணத்தையொட்டி அமைக்கப் பட்ட குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்தது. மத்திய அரசுக் குழு அத்தொழிற்சாலைகளில் சில மாறுதல்களை செய்யச் சொன்னது.

ஆனால், அந்த மாறுதல்கள் இறுதி வரை செய்யப் படவேயில்லை.

எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாததால், தொழிலாளர்கள் நடத்திய போராட்டம், இரு தொழிற் சங்க தலைவர்களை பணி நீக்கம் செய்தததோடு முற்றுப் பெற்றது.


இவ்வாறு யூனியன் கார்பைடு நிர்வாகம் எவ்வித சட்டதிட்டங்களையும் மதிக்காமல் செயல்பட்டதற்கு காரணம் மாநில முதலமைச்சர் மற்றும் அதிகாரிள் நிர்வாகத்தின் கைக்குள் இருந்ததுதான்.

சியாமளா மலைத் தொடரில் அமைந்திருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் விருந்தினர் மாளிகை, முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்காகவே நடத்தப் பட்டது. மேலும், பெரும்பாலான அரசு அதிகாரிகள், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் லஞ்சப் பட்டியலில் இருந்தனர்.


20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த வழக்கின் இறுதியில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.62,200 ம் காயமடைந்தவருக்கு ரூ.25,000ம் உச்ச நீதிமன்றத்தில் 1989ம் ஆண்டு ஏற்பட்ட உடன்படிக்கையில் வழங்கப் பட்டது.

இந்த உடன்படிக்கை எந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் ஏற்பட்டது தெரியுமா ? யூனியன் கார்பைட் நிறுவனம் 470 மில்லியன் டாலர் வழங்கினால், அந்நிறுவனத்தின் மீது உள்ள சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என்று அரசு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் இந்த உடன்படிக்கை ஏற்பட்டது.


1991ல் பொதுமக்களிடையே எழுந்த கடும் கோபத்தின் காரணமாக, யூனியன் கார்பைட் நிறுவனத்தின் மீது இருந்த கிரிமினல் வழக்குகளை மீண்டும் விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


1992ல் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் மீது, பிடியில் வெளிவரமுடியா நிரந்தர பிடி வாரண்ட்டை போபால் நீதிமன்றம் பிறப்பித்தது.


வாரன் ஆண்டர்சன்


ஆனால், அமெரிக்காவில் வசிக்கும் இந்த ஆண்டர்சன் இன்று வரை சட்டத்தின் முன் நிறுத்தப் படவில்லை.

இந்த ஆண்டர்சனை சட்டத்தின் முன் நிறுத்த நடந்த முயற்சிகளும், அவர் ஏன் இன்று வரை இந்திய நீதிமன்றத்தின் முன் நிறுத்தப் படவில்லை என்பதும், தனிக் கதை.
1987 டிசம்பர் 3ல் விஷவாயுக் கசிவு நடந்ததும், டிசம்பர் 7ல் ஆண்டர்சன் இந்தியா வருகிறார். வந்தவுடன், காவல்துறையால் கைது செய்யப் படுகிறார்.

கைது செய்யப் பட்ட 6 மணி நேரத்திற்குள் ஆண்ர்சன் பிணையில் விடுவிக்கப் பட்டு, டெல்லியிலிருந்து அமெரிக்கா சென்ற அவர் இன்று வரை திரும்பவில்லை.


போபால் மக்களின் போராட்டம் ஒன்றில் ஆண்டர்சனின் படம்


1992ல் ஆண்டர்சன் மீது பிறப்பிக்கப் பட்ட பிடி வாரண்ட், இன்னும் நிலுவையில் உள்ளது. ஆண்டர்சனை இந்தியாவுக்கு கொண்டுவர இந்தியா இன்னும் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருப்பதாக, பாராளுமன்றத்தில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப் பட்டுள்ளன.


1992 ஏப்ரல் 10ல் ஆண்டர்சன் மீது பிடி வாரண்ட் பிறப்பிக்கப் பட்டது. 1993 செப்டம்பரில் சிபிஐ வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியது. 1995ல் வெளியுறவுத் துறை அமைச்சகம், சட்ட அமைச்சகத்தின் ஆலோசனையைக் கோரியது.

செப்டம்பர் 1996ல் சிபிஐ, ஆண்டர்சன் மீதான வழக்குப் பிரிவுகளில் மாற்றம் வேண்டும் என்று கூறியது. இது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு 2002ல் கருத்துரைக்காக அனுப்பப் பட்டது. அவர் கருத்துரைப் படி, மே 2002ல் போபால் நீதிமன்றத்தில் ஆண்டர்சன் மீதான வழக்குப் பிரிவை மாற்றுமாறு சிபிஐ கோரியது.

ஆனால் நீதிமன்றம் மாற்ற மறுத்தது. மீண்டும், வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் அமெரிக்க தூதரகம் தொடர்பு கொள்ளப் பட்டு ஆண்டர்சனை இந்தியா கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. இதற்குப் பிறகு நடந்ததுதான் பெரிய அயோக்கியத்தனம். அமெரிக்க தூதரகத்தின் யோசனைப்படி, அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் சட்ட நிறுவனத்தின் படி கருத்து கேட்கப் பட்டது.

அந்த சட்ட நிறுவனம், ஆண்டர்சனை இந்தியா கொண்டு வருவதற்கான முகாந்திரம் இல்லை என்றும், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, எந்தக் குற்றம் புரிந்திருந்தாலும், ஒரு நபரை பரிமாற்று ஒப்பந்தம் மூலம் இன்னொரு நாட்டுக்கு அனுப்புவதை தடுக்கும் அதிகாரம் உண்டு என்றும் கருத்து தெரிவித்திருந்தது.
ஒரு அமெரிக்க குற்றவாளியை இந்தியாவுக்கு கொண்டு வர, அமெரிக்க தனியாரி நிறுவனத்திடம் கருத்து கேட்கும் இந்திய அரசை என்னவென்று சொல்வீர்கள் ?

முதலாளிகளின் தந்திரங்கள் எப்படி இருக்கிறது பாருங்கள் ?


அமெரிக்க நிறுவனம் யூனியன் கார்பைடின் போபால் தொழிற்சாலை உட்பட அதன் இந்திய கிளை, 1994ல் “எவரெடி இன்டஸ்ட்ரீஸ்“ என்ற நிறுவனத்திற்கு விற்கப் பட்டது. அமெரிக்க நிறுவனம் யூனியன் கார்பைட், “டவ் கெமிக்கல்ஸ்“ என்ற மிகப் பெரிய நிறுவனத்தால் 2001ல் வாங்கப் பட்டது.

டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம், யூனியன் கார்பைடின் இந்திய நிறுவனத்தை அது வாங்காததால், போபால் விபத்து பற்றி அதற்கு பொறுப்பில்லை என்று அறிவிக்கிறது.
இந்த டவ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் வரலாறு இதை விட மோசம்.

அமெரிக்க வியட்நாம் போரின் போது, இந்த டவ் கெமிக்கல் நிறுவனம் அமெரிக்க ராணுவத்திற்கு வழங்கிய கொடிய ஆரஞ்சு கேஸ் எனப்படும் ரசாயன குண்டுகளை அமெரிக்கா வியட்நாம் மக்களின் மேல் வீசியதால் ஏற்பட்ட பாதிப்பு 30 ஆண்டுகளுக்கு பிறகு இன்னும் தொடர்கிறது என்று கூறுகிறார்கள்.



ஆரஞ்சு வாயு பாதிப்பால் உருமாறி பிறந்திருக்கும் குழந்தைகள்


நிகாரகுவா, கோஸ்டரிகா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு, டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் வழங்கிய பூச்சிக் கொல்லியை பயன்படுத்திய வாழை விவசாயிகள், இன்று வரை, கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.


டவ் கெமிக்கல் நிறுவனத்தின் பாதிப்பால் உருமாறி பிறந்திருக்கும் ராபர்டோ


இத்தனை கொடுமைகளுக்கு உள்ளாகிய போபால் மக்களுக்கு யூனியன் கார்பைடு நிறுவனம்,
வழங்கிய நிவாரணத் தொகை இறந்தவருக்கு ரூபாய் 62,200 மற்றும் காயமடைந்தவருக்கு ரூபாய் 25,000 மட்டுமே.


இது போன்ற மற்ற விபத்துகளில் வழங்கப் பட்ட நிவாரணங்களைப் பார்ப்போம்.
இந்தியாவில் உபகார் திரையரங்கு விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு வழங்கப் பட்ட நிவாரணம் ரூ15 முதல் 18 லட்சம்.


அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் ஒரு எண்ணைக் கப்பல் கடலில் கச்சா எண்ணையை கொட்டியதற்காக அமெரிக்க நீதிமன்றம் விதித்த அபராதம் 3975 கோடிகள்.


”மார்ல்பரோ” சிகரெட் பிடித்ததால் எனக்கு புற்று நோய் வந்தது, அந்த சிகரெட் தயாரிக்கும் நிறுவனம் இந்த விபரத்தை தெரிவிக்காததால் தான் நான் சிகரெட் பிடித்தேன், அதனால் எனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிய வழக்கில் அமெரிக்க உயர்நீதிமன்றம் வழங்கிய நஷ்ட ஈடு 1387 கோடிகள்.


நிலத்தடி நீரை ரசாயனத்தால் பாழ் படுத்தியதற்காக கெவ்ரான் நிறுவனத்திற்கு விதிக்கப் பட்ட அபராதம் 1955 கோடி.


ஆஸ்பெட்டாஸ் தயாரிப்புத் தொழிற்சாலை நடத்தியதால் காற்றில் ஏற்பட்ட மாசுக்காக ஜான்ஸ் மேன்வில்லி கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு விதிக்கப் பட்ட அபராதம் 2311 கோடி.

தவறான அறுவை சிகிச்சையால், பக்கவாதம் ஏற்பட்டதற்காக ப்ரஷான்த் தனாகா என்பவருக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய இழப்பீடு, ரூபாய் 1 கோடி.


9/11 சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அமெரிக்கா வழங்கிய நஷ்ட ஈடு எவ்வளவு தெரியுமா ? சராசரியாக ஒரு நபருக்கு 8.32 கோடி ரூபாய்கள்.

இப்போது, போபால் விஷ வாயுக் கசிவில் இறந்தவர்களுக்கு வழங்கப் பட்ட ரூபாய் 62,200ஐயும், காயமடைந்தவர்களுக்கு வழங்கிய ரூபாய் 25,000த்தையும் நினைத்து பாருங்கள்.
இன்றோடு போபால் விஷ வாயுக் கசிவு நடந்து 25 ஆண்டுகள் முடிந்து விட்டன.



வயது முதிர்ந்த ஆண்டர்சன்



இன்னும் இச்சம்பவத்திற்கு காரணமான வாரன் ஆண்டர்சன் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப் படவில்லை.

பாதிக்கப் பட்ட மக்களுக்கு எலும்புத் துண்டை வீசி விட்டு தன் நிறுவனத்தை விற்று விட்டு தப்பிச் சென்று விட்டது யூனியன் கார்பைடு நிறுவனம்.

பாதிக்கப் பட்ட மக்கள், யூனியன் கார்பைடு அளித்த பரிசான புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களோடு வாழ்ந்து வருகிறார்கள்.

இப்பிரச்சினைகளையெல்லாம் தீர்ப்பார்கள் என்று நாம் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து டெல்லி அனுப்பினோம். ஆனால் அங்கே கேள்வி நேரத்தில் கூட உறுப்பினர்கள் அவையில் இல்லாததனால் கேள்வி நேரமே ஒத்தி வைக்கப் படும் அவலம்.

இந்தப் படங்களைப் பாருங்கள்.




விஷவாயுத் தாக்குதலில் யாரென்று அடையாளம் தெரியாமல் புதைக்கப் பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளில் ஒன்று.




விஷவாயுத் தாக்குதலில் அடையாளம் காணப்பட்டு புதைக்கப் பட்ட சிறுமி லீலா




தனித்தனியே புதைக்க இடமின்றி மொத்தமாக புதைக்கப் படும் குழந்தைகள்




ஒட்டு மொத்தமாக கண் எரிச்சல் மற்றும் நுரையீரல் பாதிப்பால் பாதிக்கப் பட்ட ஒரு குடும்பம்




குடும்பத்தில் அனைவரையும் இழந்து, கடும் பாதிப்புக்குள்ளான ஒரு மூதாட்டி




யூனியன் கார்பைடு தொழிற்சாலையை தாண்டி இறந்த தன் மனைவியை சுமந்து செல்கிறார்




காணாமல் போனவர்கள் மற்றும் இறந்தவர்களைப் பற்றிய போஸ்டர். இந்நாள் வரை இறந்தவர்கள் எத்தனை பேர் என்ற சரியான கணக்கு இல்லை





விபத்து நடந்தவுடன் தாங்களும் பாதிக்கப் பட்டு தங்கள் குழந்தைகளை காப்பாற்றுவதற்கு ஹமீதா மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் பெற்றோர்.





புதைப்பதற்காக கிடத்தி வைக்கப் பட்டிருக்கும் குழந்தைகள்





எரிப்பதற்கு போதுமான விறகுகள் கிடைக்காததால், டயர்களை வைத்து பிணங்கள் எரிக்கப் பட்டன




ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக காத்திருக்கும் போபால் மக்கள்





தன் குடும்பத்தில் அனைவரையும் இழந்த சுபைதா பீவி. இந்த புகைப்படம் எடுத்த ஒரு வாரம் கழித்து இறந்தார்





விஷவாயு கசிவுக்கு மறுநாள், யூனியன் கார்பைட் தொழிற்சாலை வாசலில் நியாயத்திற்காக காத்திருக்கும் பாதிக்கப் பட்ட மக்கள்


சவுக்கு