Wednesday, March 31, 2010

காலம் 2012.


2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தோற்று, அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. காங்கிரஸ் அதிமுக கூட்டணி. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீண்டும் வெளி உலகிற்கு வந்து புலிகள் இயக்கத்துக்கு தமிழகத்தில் எண்பதுகளின் இறுதியில் இருந்தது போன்ற ஆதரவு உள்ளது. அப்போதும் (அப்போதுமா ?) சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக கருணாநிதி இருக்கிறார். ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு பெருகுவதைக் கண்டு, நளினியை சிறையில் இருந்து விடுதலை செய்கிறார் செல்வி.ஜெயலலிதா. இதைக் கண்டதும், கடுப்படைந்த கருணாநிதி, உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதம் இதோ..

உடன்பிறப்பே,
இன்று நளினியை அந்த அம்மையார் விடுதலை செய்ததை ஊடகங்கள் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன. கோபுரத்தின் மேல் உட்கார்ந்து எக்காளச் சிரிப்பு சிரிக்கிறார் அந்த அம்மையார். தன் கணவரை கொன்றவரை விடுதலை செய்தார் என்ற கோபம் சிறிதும் இல்லாமல், இவரோடு கூட்டணி வைத்துக் கொண்டு, இவர் கொள்ளைக்குத் துணை போகிறார் அந்த இத்தாலி கோமகள்.

பெரியார் பிறந்த மண்ணிலே, தமிழனுக்கு எதிராக தமிழிலேயே எழுதும் ஊடகங்கள், அந்த அம்மையார் நளினியை விடுதலை செய்ததை மகத்தான சாதனையாக கருதி தலையங்கங்கள் எழுதுகின்றன. இந்த ஏடுகள் அறியா நளினியை விடுதலை செய்ய நான் எடுத்த முயற்சிகள். தமிழகத்தையும், தமிழினத்தையும் இன்று பீடித்திருக்கும், இந்தப் பார்ப்பனீயக் கூட்டம் இன்று தமிழின ஆதரவு வேஷம் போடுவதை நாடு நெடுநாள் பொறுமையோடு பார்த்துக் கொண்டிருக்காது.


நளினிக்கு மட்டுமா ? இன்று புலிகள் இயக்கத்துக்கு தலைமை தாங்கி, புறநானூற்றுத் தமிழனின் வீரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கும், என் அருமைத் தம்பி பிரபாகரனுக்கு ஒரு நெருக்கடி என்று அறிந்தவுடன், நான்கு மணி நேரம், எனக்குப் பிடித்த நாட்டுக் கோழி குழம்பைக் கூட சுவைக்காமல், கடற்கரையிலே, அறிஞர் அண்ணா துயிலும் இடத்தில் அவர் காலடியிலே, ‘போர் நிற்க வேண்டும்‘ ‘என் அருமைத் தம்பியின் உயிர் காக்கப் பட வேண்டும்‘ என்பதற்காக 2009லேயே குரல் கொடுத்தவன் நான் என்பதை, இந்தப் பார்ப்பன ஏடுகள் மறந்திருந்தாலும், முன்னணி நாளேடான முரசொலியில் பதிவு செய்திருப்பதை காலம் காணத் தவறாது.

நான்தான் தமிழ் என்று நாள்தோறும் சொல்லி விட்டு, ஆங்கிலம் படித்து, அகந்தை பிடித்து, ஆட்சி இருக்கிறது என்று ஆணவத்தில் ஆடும் அந்த அம்மையாரை வாழ்த்திக் கொண்டிருக்கும், பதராகிக் போன என் அன்புத் தம்பி வைரமுத்து அறியாததா ஈழத் தமிழருக்காக நான் பட்ட இன்னல் ?


ஈழத் தமிழருக்காக என் உடல் பொருள் (தப்பு) ஆவி அனைத்தையும் அர்பணித்த என்னையா இந்த அற்பப் பதர்கள் கேள்வி கேட்கிறார்கள் ?

நளினியை விடுதலை செய்ய நான் எடுக்காத முயற்சிகளா ? 2010லே, நளினியை விடுதலை செய்ய ஆலோசனைக் குழுமத்தை அமைத்ததே கழக அரசுதான் என்பதை நாடு மறக்காவிட்டாலும் இந்த ஏடுகள் மறந்து விட்டது அந்த அம்மையாரின் சூழ்ச்சியல்லாமல் வேறு என்ன ?

ஆலோசனைக் குழுமத்தை அமைத்தவன் நான் என்றாலும், அதன் உறுப்பினர்கள், கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென்பதற் காகவே நளினியை விடுதலை செய்யக் கூடாது என்று பரிந்துரை செய்தது யார் குற்றம் ? குழுமத்தின் குற்றமா, குழுமத்தை அமைத்தவன் குற்றமா ?

நான் முதலமைச்சராக இருந்தபோதும், எனக்குக் கீழே பணியாற்றிய ராயப்பேட்டை ஆய்வாளர் நளினியை விடுதலை செய்தால், அமெரிக்க தூதரகத்துக்கு ஆபத்து என்று சொல்லியது நான் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்பதால் எனது ஆட்சிக்கு அவப்பெயர் தேடித்தர வேண்டும் என்ற காரணத்தைத் தவிர வேறு என்ன ?

இவ்வாறு அந்த ஆய்வாளர் அறிக்கை தருவார், அதற்கு என் வீட்டையும் பாதுகாப்புக் காரணத்துக்காக காட்டுவார், அதனால் ஒரு தமிழச்சியின் விடுதலை தடைபடும் என்ற காரணத்தினாலல்லவா நான் அமெரிக்க தூதரகம் பின்புறம் இருக்கும் எனது கோபாலபுரம் வீட்டை அரசுக்கு எழுதிக் கொடுத்தேன் ?


என்னுடைய தமிழையும், தமிழாய்ந்த அறிவையும், கற்றுக்கொள்ளாமல், என்னிடம் உள்ள காலித்தனத்தை மட்டும் கற்றுக் கொண்டு, என்னோடு, கோபலபுரத்தில் வசிக்கும், கழக உடன்பிறப்புகளால், நளினிக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க வேண்டும் என்றல்லவா நான் நளினி ராயப்பேட்டையில் வசிப்பதை தடுக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தேன்.

கோபாலபுரம் வீட்டை எழுதிக் கொடுத்தேன் என்ற ஒரே காரணத்துக்காக, அது என் மறைவுக்குப் பிறகு என்று அதன் கீழே நான் எழுதியிருந்த குறிப்பை படிக்காமல் இந்த அம்மையார் என் வீட்டை நர்சுகள் தங்கும் விடுதியாக அறிவித்திருப்பது நான் தமிழன் என்பதனால் அல்லாமல் வேறு எதனால் ?


வேறு யாருக்கும் சொல்லாத ரகசியம் ஒன்றை உனக்கு மட்டும் சொல்கிறேன் உடன்பிறப்பே. நளினி எனக்கு ரகசிய தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார். அத்தகவலில் வீரத் தமிழச்சி நளினி சொல்லியிருந்த சேதி என்னவென்று அறிவாயா ? “நான் இப்போது இருக்கும் சிறையில் இருந்து வெளியே வர எனக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், நீங்கள் என்னை வெளியே விட்டீர்கள் என்றால், கோடானு கோடி, கழக உடன்பிறப்புகளைப் போல, உங்கள் இதயத்தில் என்றென்றும் நான் சிறையிருக்க நேரிடும். அதனால் என்னை சிறையை விட்டு வெளியே விடாதீர்கள்“ என்ற தகவலை அந்த வீரத் தமிழச்சி எனக்கு அனுப்பியிருந்ததை, அந்த அம்மையார் அறிவாரா ?


என் அம்மாவோடு வசிக்கப் போகிறேன் என்று, நளினி கூறியதை, நான் அந்த அம்மையாரோடு வசிக்கப் போகிறார் என்றல்லவா தவறாகக் கருதி விட்டேன் ? அந்த அம்மையாரோடு வசிக்க மாட்டேன் என்று நான் அறிந்திருந்தால், அண்ணா அறிவாலயத்தில் அல்லவா அந்த வீரத்தமிழச்சிக்கு இடம் அளித்திருப்பேன் !


இந்திய அமைதிப் படை இலங்கையில் செய்த அட்டூழியங்களை அறிந்தவர்கள் கூட, அந்தப் படை திரும்பி வருகையில் வரவேற்க செல்லுகையில், அப்போது மத்தியிலே இருந்த அரசுடன் கூட்டணி இல்லாத காரணத்தால் அமைதிப் படையை வரவேற்கச் செல்லாமல் நான் இருந்ததை தமிழ் கூறும் நல்லுகம் மறக்குமா ,


இத்தாலிக் கோமகள் சோனியா கோபித்தாலும் பரவாயில்லை என்று, நளினியை விடுதலை செய்வதற்கு இரண்டு முறை ஆலோசனைக் குழுமம் அமைத்தது கழக அரசு அல்லவா ?
நளினியைச் சிறையிலிருந்து நான் விடுதலை செய்யவில்லை என்று கூறுகிறார்களே … …


நான் மட்டும் கோபாலபுரத்திலும், சிஐடி காலனியிலும், அறிவாலயத்திலும் நாள்தோறும் சிறையிருக்கவில்லையா ? இப்போது கூட நான் விரும்புவது என்ன ? தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அறையில் என்னை நிரந்தரமாக சிறை வையுங்கள் என்றுதானே கேட்கிறேன் ? எனக்கு மட்டுமா சிறைவாசம் வேண்டும் என்று கேட்கிறேன் ? எனது மகன்களை முதல்வர் அறைக்கு பக்கத்தில் துணை முதல்வர் அறையில், சிறையில் அடையுங்கள் என்றால் அவர்கள் இரண்டு பேரும், ஒரே அறையில் இருக்க மாட்டேன் என்கிறார்கள். நான் என்ன செய்வது ?


இப்போது மட்டும் மத்திய அரசு, இந்த அம்மையாரின் ஆட்சியை கலைத்து விட்டு, என்னை மீண்டும் முதல்வராக்கட்டும். மீண்டும் நளினியை கைது செய்து மீண்டும் விடுதலை செய்ய கழக அரசு என்றுமே தயங்காது என்பதை தமிழ் கூறும் நல்லுலகு அறியும். இதை நீ அறியமாட்டாயா உடன்பிறப்பே ?

அன்புடன் மு.க.


சவுக்கு

Sunday, March 28, 2010

வாழ்த்துக்கள் வசந்தபாலன்.




ஒரு படைப்பு என்பது என்ன ? பார்வை யாளனையோ, வாசகனையோ, சிந்திக்கத் தூண்டி, அவன் மனதில் என்ன விதமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் ?

நாம் எல்லோரும், சரவணா ஸ்டோர்சுக்கு பல முறை சென்றிருப்போம். அங்கே பணியாற்றும் பலரிடம் பொருட்கள் வாங்கியிருப்போம். “என்னதான் வெலை கம்மியா இருந்தாலும், மரியாதை தெரியாத பசங்க. கஸ்டமர்ஸ் வரும்போது, பொறுமையா எடுத்துக் காட்றாங்களா ? என்னதான் இருந்தாலும் பெரிய கடை, பெரிய கடைதான்“ என்று அலுத்துக் கொண்டு நமது மிடில் க்ளாஸ் மனசாட்சியை சமாதானப் படுத்திக் கொண்டு வருவோம்.

பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு முறை, சரவணா ஸ்டோர்சுக்கு, துணி வாங்கச் சென்ற போது, மூன்றாவது தளத்தின் நுழைவு அருகே, ஒரு பெண் நின்றிருந்தாள். அவள் இடுப்பில் ஒரு கைக்குழந்தை. அருகே ஒரு எட்டு வயது சிறுவன். அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் கழுத்தில் “இந்த சேலையை நான் திருடினேன் “ என்று எழுதப்பட்ட பலகை தொங்கிக் கொண்டிருந்தது. அந்தச் சேலை 150 ரூபாய் மதிப்புள்ள ஒரு சாதாரண சேலை. இது போல பல சம்பவங்கள் நடந்திருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். அந்தப் பெண்ணின் 8 வயது மகன் மனது என்ன பாடு படும் என்று யோசித்துப் பாருங்கள். தன் மகன் முன்பு இப்படி அவமானப் படுத்தப் பட்ட அந்தப் பெண் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.

இப்படிப் பட்ட கொடுமைக்காரர்கள் முதலாளிகளாக இருக்கையில், இப்படத்தில் எந்த இடத்திலும் மிகைப் படுத்தல் இருப்பதாக நான் கருதவில்லை.

அங்காடித் தெரு, பல முறை சரவணா ஸ்டோர்சுக்கு நீங்கள் சென்றிருந்தாலும், நீங்கள் பார்க்கத் தவறிய உலகத்தை, நீங்கள் உதாசீனப் படுத்திய மனிதர்களை, நீங்கள் அலட்சியத்தோடு புறந்தள்ளிய முகங்களை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தி, உங்களை வெட்கப் பட வைக்கிறது. உங்கள் மனதுக்குள் ஒரு முள்ளை எடுத்துக் குத்துகிறது. தொண்டைக் குழிக்குள் ஒரு உறுத்தல் உணர்வை ஏற்படுத்துகிறது.


இதுதான் வசந்தபாலனின் வெற்றி. பன்ச் டயலாக்குகளை கேட்டு கேட்டு பழகிப் போன காதுகளையும், மனங்களையும் உலுக்கி எடுத்து நிஜ உலகிற்கு கொண்டு வருகிறது அங்காடித் தெரு.

சிவாஜிகளையும், போக்கிரிகளையும், வேட்டைக்காரன்களையும், அசல்களையும் படம் பிடிக்க எத்தனையோ இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஆனால், நாம் கவனிக்க மறுத்த மனிதர்களை கதைக் களனாக்குவதில், நான் கடவுள் பாலாவுக்குப் பிறகு வசந்தபாலன் வெற்றிப் பெற்றிருக்கிறார்.


படத்தின் தொடக்கத்திலேயே பின் புலத்தில் சரவணா செல்வரத்தினம் கடையின் போர்ட்டை காட்டும் போது கதை எதைப் பற்றியது என்று நன்றாகத் தெரிகிறது. மேலும், ஸ்நேகாவை வைத்து விளம்பரம் எடுக்கும் காட்சியிலும், சந்தேகங்கள் தெளிவாக்கப் படுகின்றன.


தமிழின் தலைச் சிறந்த புதினமல்லாத எழுத்தாளர் பழ.கருப்பைய்யாவா அது ? வசந்த பாலனுக்கு எப்படி இவரை நடிக்க வைக்க வேண்டும் என்று தோன்றியது எனத் தெரியவில்லை. மிகச் சிறந்த பாத்திரப் படைப்பு. அவ்வளவு அழகாக நடித்திருக்கிறார்.



ஆனால், பழ.கருப்பையா தொடர்ந்து நடித்தாரேயானால் தமிழ் சினிமா, இவருக்கு இருக்கும் இலக்கியவாதி என்ற இமேஜை நாசப்படுத்தி விடும் என்பதில் சந்தேகம் இல்லை. கவனமாக இருங்கள் பழ.கருப்பையா அவர்களே.

சரவணா ஸ்டோர்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்வை, எப்படி அங்குலம் அங்குலமாக வசந்தபாலன் கவனித்திருக்கிறார் என்பது, படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகிறது. ஊரிலிருந்து வேலைக்கு வருபவர்களை கடை முதலாளி பழ.கருப்பையாவிடம் அறிமுகப் படுத்துவதிலாகட்டும், முதலாளி என்ற தோரணையுடன் கருப்பையா அலட்சியமாக வந்தவர்களுக்கு அறிவுரை வழங்குவதாகட்டும், ஆட்களை கூட்டி வந்தவர், ப்ரோக்கர் கமிஷன் கேட்பதாகட்டும், கடைகளை அண்ணாந்து வியந்து பார்க்கும் பாத்திரங்களின் தன்மையாகட்டும்,





இதற்கெல்லாம் மேல், முதல் தேதி ஆனவுடன், காவல்துறையின் உயர் அதிகாரி முதல், கீழ்நிலைக் காவலர் வரை பதவிக்கேற்றார்ப் போல வந்து சல்யூட் அடித்து மாமூல் பெற்றுச் செல்லும் காட்சியாகட்டும், மதிய உணவு இடைவேளையில் குறித்த நேரத்தில் கடைக்கு திரும்ப வேண்டுமேயென்று, அடித்துப் பிடித்துக் கொண்டு அரையும் குறையுமாக ஊழியர்கள் சாப்பிடும் காட்சியாகட்டும், கேரளாவுக்கு கறிக்கு அனுப்பப் படும் மாடுகளை நெருக்கமாக லாரியில் கட்டி எடுத்துப் போவது போல, இவர்கள் இரவு படுத்து உறங்கும் காட்சியாகட்டு… …. …. அற்புதம். மிகச் சிறப்பான கவனமான பதிவு.



இந்த உதாசீனப்படுத்தப் படும் மனிதர்களின் வாழ்வில் ஏற்படும் மகிழ்ச்சி, அவர்கள் நிலைமைக்குத் தக்க இருப்பது போல அமைத்திருக்கிறார். உதாரணத்திற்கு, இருட்டு கோடவுனில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களை மூன்றாவது தளத்திற்கு வேலைக்கு செல்லச் சொன்னதும், அந்தப் பாத்திரங்கள் “அய்யா… ஜாலி… ஏசி“ என்று மகிழ்வதாகக் காட்டுவது, எவ்வளவு இயல்பு ? இருட்டுக் கோடவுனில் இருந்து ஏசி அறைக்குச் செல்வது, அந்த விளிம்பு நிலை மனிதனுக்கு மகிழ்ச்சியைத்தானே தரும்.



கடையில் தவறு செய்த ஊழியரை திட்டிக் கொண்டே அடிக்கையில் “சவட்டு மூதி, உங்களுக்கெல்லாம் சம்பளம் குடுத்து, ஏசியப் போட்டு.. ..“ என்று மேனேஜர் பாத்திரம் சொல்வது, கஸ்டமர்களுக்காக போட்ட ஏசியை, ஏதோ அந்த ஊழியர்களுக்காக போட்டது போலச் சொல்வதாக எழுதப் பட்ட வசனம், அற்புதம். மேலும், கதாநாயகன் பாத்திரம் ஹீரோயினை மேனேஜர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாக சொல்லுகையில், “அவன் அப்படித்தாம்லே பண்ணுவான் மூதி“ என்று எவ்வித அதிர்ச்சியும் இல்லாமல் கடை முதலாளி சொல்வதாக இருக்கும் காட்சியும், மிக யதார்த்தம். எந்த முதலாளி, தொழிலாளிக்காக பேசப் போகிறான் ?

படத்தோடு இழையோடுவதாக நகைச்சுவை காட்சிகளை அமைக்க இயக்குநர் பிரயத்தனப்பட்டிருப்பது புரிந்தாலும், இந்த திரைப்படம் ஏற்படுத்தும் பாதிப்பில் மனம் இருப்பதால், இந்த நகைச்சுவை காட்சிகள் எரிச்சலையே ஏற்படுத்தின.

கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆட்பட்டுக் கொண்டிருந்தாலும், அந்த நெருக்கடியிலும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருக்கும், ஈர்ப்பையும், சிருங்காரங்களையும், பதிவு செய்திருப்பது, கவித்துவமாக இருக்கிறது.



ஒரு காதல் ஜோடி, மேனேஜரிடம் அகப்பட்டுக் கொண்டதும், அந்தப் பெண், தைரியமாக நான்தான் அது என்று சொல்வதும், அந்த ஆண் நான் காதலிக்கவில்லை என்று சொல்லி, “அய்யா வேலைய விட்டு தூக்கிடாதீங்கய்யா“ என்று மேனேஜர் காலில் விழுந்து கதறுவதும் இதயத்தை பிசைகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் கணவனும், மாதம் 75 ஆயிரம் சம்பாதிக்கும் மனைவியும், கார் எடுத்துச் சென்று, பாண்டி பஜாரில் காரை நிறுத்தி விட்டு, சரவணா ஸ்டோர்சுக்கு நடந்து சென்று, பர்சேஸ் செய்யும் குடும்பத்தை நான் அறிவேன். மாதம் ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் சம்பாதிக்கும் ஒரு குடும்பம், காசை மிச்சப் படுத்த வேண்டும் என்று, கருமித்தனமாக, சரவணா ஸ்டோர்ஸின் புழுக்கத்திலும், நெரிசலிலும் பர்சேஸ் செய்கிறார்கள் என்றால், அவர்கள், அந்த ஏழை உழைப்பாளிகளின் வாழ்வைப் பற்றி என்ன அக்கறை கொள்வார்கள் ?

அது போன்றவர்களின் மனசாட்சியை பிடித்து உலுக்குவதுதான் அங்காடித் தெரு.
புதுமுக நாயகனும், அஞ்சலியும், இயல்புத்தன்மை மீறாமல் நடித்திருப்பதும், அவர்களிடம்

இப்படி அற்புதமாக வேலை வாங்கியிருப்பதும், வசந்தபாலன், தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வசந்தம் என்றே சொல்லத் தோன்றுகிறது.



பொதுவாக தமிழ் சினிமா என்றால் கதாநாயகியும் சரி, துணைக் கதாபாத்திரங்களும் சரி, பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்ற மரபை மீறி, சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளில் நாம் பார்க்கும் சாதாரணமான முகங்களையே, பாத்திரங்களுக்கு பயன் படுத்தியிருப்பது, இம்மக்களின் மீதான வசந்தபாலனின் நேசத்தை காட்டுகிறது.

இத்திரைப்படம் தொடர்பான சவுக்கின் பரிந்துரை. “அவசியம் பாருங்கள்“

Sunday, March 21, 2010

அல்லி ராணி அடிமையும், தள்ளு வண்டி தனயனும்…





இன்று இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் அல்லி ராணி யார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த அல்லி ராணியின் அடிமையாகவும், பிரதிநிதியாகவும் இன்று பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும் தனது நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






இந்தியாவின் பல மாநிலங்களை தனது மகனின் பட்டம் சூட்டும் விழாவுக்கு சோதனைக் கூடங்களாக சோனியா பயன் படுத்திக் கொண்டிருப்பது குறித்த செய்திகளை நாம் பத்திரிக்கைகளின் காண்கிறோம்.

இந்தியா நேரு குடும்பத்துக்கு நிரந்தர லீசுக்கு விடப்பட்டது போல, அந்தக் குடும்பம் இன்றும், என்றும் நடந்து கொண்டே வந்திருக்கிறது.



உத்திரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் நடத்தப் பட்ட சோதனை நல்ல பயனை கொடுத்திருப்பதையடுத்து, காங்கிரஸ் பலவீனமாக இருக்கும், தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் தன்னை பலப்படுத்திக் கொள்வதற்கும், தனது மகன் பட்டம் சூட்டப் படும் நாளில், காங்கிரசுக்கு போட்டியாளர்களே இல்லாத ஒரு சூழலை உருவாக்கவும், காங்கிரஸ் தொடர்ந்து திட்டமிட்டு, செயல்படுத்தி வருகிறது.



இந்தியாவின் மிகப் பெரிய ஊழலாக உருவெடுத்த ஸ்பெக்ட்ரம் ஊழலை திமுகவுக்க நெருக்கடி கொடுக்க ஒரு அருமையான ஆயுதமாகவே காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது. 2009ல் காங்கிரஸ் கட்சிக்கு முன்பை விட அதிகமான அளவுக்கு எம்.பி.கள் கிடைத்ததும், திமுகவை அக்கட்சி 2004ல் நடத்தியதற்கும் தற்போது நடத்துவதற்கும் ஏராளமான வித்தியாசம் இருந்தது என்பதைக் கண்டோம்.


ராசாவுக்கு மீண்டும் தொலைத் தொடர்பு அமைச்சகம் வழங்கப் பட மாட்டாது என்று காங்கிரஸ் பிடிவாதம் பிடித்ததும், கருணாநிதி பிடிவாதமாக அத்துறைதான் வேண்டும் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து அத்துறையை பெற்றதும் நாம் அறிந்ததே.


கிராமங்களில் பொலி காளை என்று காளை மாட்டை வளர்த்து வருவார்கள். இன்று போல Artificial insemination டெக்னாலஜியெல்லாம் வளராத காலத்தில், பசு மாட்டோடு இனப்பெருக்கம் செய்வதற்கு இந்தப் பொலி காளைகள் மட்டும் தான். இந்தப் பொலி காளைகள், அடங்கவே அடங்காது. மாட்டு வண்டியில் பூட்டினால், தறி கெட்டு ஒழுங்காகச் செல்லாமல் அலையும். எப்போது பார்த்தாலும் ஊரைச் சுற்றிக் கொண்டு திரியும். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, இந்தப் பொலி காளையின் தொல்லை பொறுக்க முடியவில்லை என்றால் “காயடிப்பது” என்ற ஒரு தந்திரத்தை பயன்படுத்துவார்கள். இது என்னவென்றால் இந்தப் பொலிகாளையின் விதைப் பைகளை நசுக்கி, இந்தக் காளையை இனப்பெருக்கத்திற்கு தகுதியிழப்பு செய்து விடுவார்கள். காயடிக்கப் பட்ட காளை, சாதுவாக, வைக்கோலை மேய்ந்து கொண்டு சாதுவாக இருக்கும். வண்டியில் பூட்டினால் ஒழுங்காக போகும்.


தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தில், எந்த முடிவு எடுப்பதென்றாலும் 5 அல்லது 6 அமைச்சர்கள் கொண்ட குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்ற விதியை போட்டு, புதிதாக டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகளைத் திறந்து வைப்பதைத் தவிர, தன்னிச்சையாக எந்த வேலையையும் ஆ.ராசா செய்ய முடியாத வகையில் நெருக்கடி அளித்து, ராசாவை, “காயடிக்கப் பட்ட காளையாகவே” மன்மோகன் சிங் மாற்றி விட்டார்.




இந்தத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தில் நெருக்கடிகள் வரும் என்றுத் தெரிந்தும், இத்துறைதான் வேண்டும் என்று கருணாநிதி பிடிவாதம் பிடித்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. சுதந்திர இந்தியா சந்தித்த மிகப்பெரிய ஊழல், எந்த நாளிலும் விசாரணைக்கு வரும் என்பது, ஊழலிலே ஊறித் திளைத்த கருணாநிதிக்கு தெரியாததல்ல. அதனால், மீண்டும் தொலைத்தொடர்பு அமைச்சகத்தை பெற்று, ஸ்பெக்ட்ரம் ஊழல் நடைபெற்றது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் அழிப்பதுதான் கருணாநிதி மற்றும் ராசாவின் திட்டம்.


வல்லவனுக்கு வல்லவன் வைகயகத்தில் உண்டல்லவா ? இத்திட்டத்தை அறிந்த மன்மோகன் சிங், ஆ.ராசா அமைச்சராக இருக்கும் போதே, ராசாவின் துறையில், சிபிஐ யை விட்டு சோதனை நடத்தினார். இச்சோதனையில் ஏராளமான ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியது. இந்த ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ வசம் உள்ளதால், எப்போது வேண்டுமானாலும், வழக்கு பதிவு செய்து, ராசாவுக்கு பெரிய ஆப்பாக வைக்க காங்கிரஸ் தயாராகவே இருக்கிறது.



ஆனாலும், சிபிஐ தன்னிச்சையாக செயல்படும் அமைப்பாக காட்டிக் கொள்ள பகீரத பிரயத்தனம் செய்தாலும், சீக்கிய கலவரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் காரர்கள் மீது நடவடிக்கை எடுத்ததிலும், அல்லி ராணியின் நெருங்கிய குடும்ப நண்பர், ஒட்டோவியோ கொட்டரோச்சியை வெளிநாட்டுக்கு தப்ப விட்டு, அவரது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை அவர் எடுக்க வசதி செய்து கொடுத்ததிலெல்லாம் சிபிஐயின் பாரபட்சமற்ற நடவடிக்கையை அனைவரும் அறிவார்கள் என்பதால், தானாக சிபிஐயை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வைக்காமல், டெல்லி உயர்நீதிமன்றமும், டாக்டர் சுப்ரமணியன் சுவாமியும் தொடுத்திருக்கம் வழக்கில் ஏதாவது உத்தரவு கிடைத்தால் இதுதான் சாக்கென்று, உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட காங்கிரஸ் தயாராகவே இருக்கிறது.


இந்நிலையில், டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, கடந்த வாரம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ஆ.ராசா மீது வழக்கு தொடுக்க இரண்டு வாரங்களுக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தில் அனுமதி வழங்க ஆணை பெறுவேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.


இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கை, திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க ஒரு ஆயுதமாக காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது என்பதே உண்மை. ஏனெனில், தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான முடிவுகள் எடுக்கப் பட்டாலும், இதையறிந்த பிரதமர் என்று வேண்டுமானாலும் தலையிட்டு இதைத் தடுத்திருக்க முடியும். அப்படி செய்யாமல், ராசாவும், கருணாநிதியும், இப்படி ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளிக் குவிக்கையில் வாய் மூடி மவுனியாக இருந்த, அல்லி ராணியின் அடிமைக்கம் இந்த ஊழலில் பெரும் பங்கு உள்ளது.


இது தவிர, இன்னும் ஒரு பெரிய ஊழலில், திமுக பெரும் புள்ளிகள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன. சென்னை துறைமுகத்தையும், மதுரவாயலையும் இணைக்கும், மேம்படுத்தப் பட்ட சாலை அமைக்கும் திட்டத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப் பட்டது. முதலில் இத்திட்டத்திற்கு மதிப்பீடு தந்தது L&T Ramboll என்ற நிறுவனம். இந்நிறுவனம், இத்திட்டத்திற்கு ரூபாய் 500 கோடி செலவாகும் என்ற மதிப்பீட்டை வழங்கியிருந்தது.

சில நாட்கள் கழித்து, இந்த மதிப்பீட்டைக் கணக்கில் கொள்ளாமலேயே, அமெரிக்காவைச் சேர்ந்த Willbur Smith Associates என்ற ஒரு நிறுவனம், ரூபாய் 1500 கோடி செலவாகும் என்ற திருத்திய மதிப்பீட்டை வழங்கியது. இந்த வில்பர் ஸ்மித் என்ற நிறுவனத்தின் சார்பாக, இந்த மதிப்பீட்டை வழங்கியது, ஆ.ராசாவின் பினாமி நிறுவனம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பெயரளவில் Willbur Smith மதிப்பீடு வழங்கினாலும், இம்மதிப்பீட்டையெல்லாம் தயாரித்து வழங்கியது, ஆ.ராசாவின் மனைவி இயக்குநராக உள்ள Greenhouse நிறுவனம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.





இதுபோன்ற வேலைகளில் ராசா தன்னிச்சையாக இறங்கும் அளவுக்கு தைரியம் இல்லாதவர் என்பதும், ராசாவின் ஒவ்வொரு அசைவின் பின்னணியிலும் கருணாநிதி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறான ஊழல்களில் திமுக இப்போது இறங்குவதற்கான காரணம் இருக்கிறது.


கடந்த யுபிஏ அரசாங்கத்தில், கப்பல் மற்றும் தரைப் போக்குவரத்து டி.ஆர்.பாலு வசம் இருந்ததால், இந்தியா முழுவதும் கட்டப் படும் சாலைகள் மற்றும், பாலங்கள் கட்டுமானத்தில் பெரும் தொகையை கையாடுவது சிரமம் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போதைய யுபிஏ அரசாங்கத்தில், இந்த சாலைப் போக்குவரத்து, திமுக வசம் இல்லை. தொலைத்தொடர்புத் துறையில் எந்த ஊழலும் செய்ய முடியாத அளவுக்கு கடுமையான கட்டுப் பாடுகள் இருக்கின்றன.

ஜவுளித் துறையில் பெரிய அளவில் ஊழல் ஏதும் செய்ய முடியாது. மேலும், தயாநிதி மாறனை, முன்பு போல முழுமையாக நம்ப கருணாநிதி தயாராக இல்லை.


ரசாயனம் மற்றும் உரத் துறைக்கு அமைச்சராக இருக்கும் அழகிரி, பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் அழும் குழந்தை போல, மதுரையில், காதுகுத்து, கபடிப் போட்டி, பூப்பூ நீராட்டு விழா போன்ற விழாக்களில் கலந்து கொள்வதில் பிசியாக இருப்பதால் அந்தத் துறையிலும் ஒன்றும் காசு பார்க்க முடியவில்லை.


அதனாலேயே இது போல, தமிழ்நாட்டில் நடக்கும் எந்தத் திட்டங்களாக இருந்தாலும், எந்தத் துறையாக இருந்தாலும், அதில் காசு பார்ப்பது என்று கருணாநிதி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும், இதிலும் ராசாவுக்கு ஆப்பு காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வில்பர் ஸ்மித் நிறுவனம் வழங்கியிருந்த திட்ட மதிப்பீட்டை கப்பல் போக்குவரத்துத் துறையும் சாலைப் போக்குவரத்துத் துறையும் நிராகரித்து விட்டன. மேலும் கடந்த ஜனவரி மாதத்தில், சென்னை க்ரீம்ஸ் சாலையில் இருந்த, ஆ.ராசாவின் பினாமி அலுவலகத்தில், டெல்லியைச் சேர்ந்த சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டு, இந்த மதிப்பீடு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் கைப்பற்றிச் சென்று விட்டதாகவும் தெரிகிறது.


இந்நிலையில், இந்த சென்னைத் துறைமுகம், மதுரவாயல், மேம்படுத்தப் பட்ட இணைப்புச் சாலைத் திட்டத்தையே சுத்தமாக கைவிட்டு விட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில், நேற்று (20.03.2010) இந்த சென்னைத் துறைமுகம் மதுரவாயல் மேம்படுத்தப் பட்ட இணைப்புச் சாலை தொடர்பாக சிபிஐ முழுமையான விசாரணை நடத்த சிபிஐக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிடப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஸ்பெக்ட்ரம், மதுரவாயல் சாலை போன்ற திட்டங்களில் சிபிஐ விசாரணையை முடுக்கி விட்டதன் மூலம், சட்டமன்றத் தேர்தலில் திமுகவோடு கூட்டணி வைக்கும் பட்சத்தில் 100க்கும் அதிகமான இடங்களும், துணை முதல்வர் பதவியோடு, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ் வைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கு திமுக மசியா விட்டால், கூட்டணியை முறித்துக் கொண்டு, திமுக மத்தியில் செய்த ஊழல்கள் தொடர்பாக விசாரணையைத் தீவிரப் படுத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதையெல்லாம் நன்கு அறிந்த தள்ளுவண்டித் தனயன், காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் தனியே தேர்தலை சந்தித்தால் என்ன வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்று உளவுத் துறையை முடுக்கி விட்டு, சர்வே நடத்திக் கொண்டிருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல்லிராணியின் அடிமையும் தள்ளு வண்டித் தனயனும் நடத்தும் இந்த கீரி பாம்பு சண்டையால், வேடிக்கைப் பார்க்கும் நமக்குத் தான் நஷ்டம் என்பதுதான் வேதனை.


சவுக்கு

Monday, March 15, 2010

கருணாநிதி பேசுவதை கேளுங்கள் முட்டாள்களே… …




கருணாநிதி பேசுவதையும், கடிதமாகவும், கேள்வி பதில் அறிக்கைகளாகவும், அவராகவே இலக்கியம் என்று கருதிக் கொண்டு எழுதும் கவிதைகளாகவும் கொட்டப்படும் விஷமத்தனமான உளறல்களை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தொலைக்காட்சி ஊடகங்களும், செய்தி ஊடகங்களும், உங்கள் முகத்தில் அறைவது போல கொண்டு வந்து சேர்த்தே தீரும்.

கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்கள், கட்டண கழிப்பிடத்தை திறந்து வைத்தாலும், அது முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிடப்படும். கருணாநிதி பெங்களுரில் உள்ள மகள் செல்வி வீட்டுக்குச் சென்று தனக்கு மிகவும் பிடித்த நாட்டுக் கோழியை விரும்பி உண்டதை செய்தியாக நக்கீரன் வெளியிடுகிறது.

தேவைக்கு அதிகமாக, பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல், சமூகம் அங்கீகரித்திருக்கம் ஒழுக்க கோட்பாடுகளை மீறி, நெருக்கடியின் காரணமாக இரண்டாவது திருமணம் செய்து, அக்குடும்பத்தை மக்கள் வரிப்பணத்தில் பராமரித்து வரும் சிஐடி காலனிக்கு கருணாநிதி இரண்டு நாட்கள் செல்லவில்லை என்றால் அதையும் செய்தியாக வெளியிடும் ஊடகங்கள் இருக்கின்றன.

கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தின் செய்திகள் அவர்களுக்கு பொழுது போக்கு. ஆனால் லட்சக்கணக்கான தமிழக மக்கள், தங்களின் பிரச்சினைகள் செய்தியாக வேண்டும் என்று தவம் இருக்கிறார்கள்.


ஆனால் இந்த ஊடகங்கள் அதைக் கண்டு கொள்வதில்லை. இந்த ஊடகங்களின் கவனத்தை திருப்பவாவது ஏதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்பில் தான் அவ்வப்போது, ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும், கருத்தரங்கங்களும் நடத்த முனைகிறார்கள்.

உண்ணாவிரதமோ, ஆர்ப்பாட்டமோ, கருத்தரங்கமோ, எதுவாக இருந்தாலும், அதை நடத்துவதில் எத்தனை சிரமம் என்பது அந்நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மட்டுமே அறிவார்கள்.

நிகழ்ச்சிக்கு இடத்தை தேர்வு செய்வதில் இருந்து, அந்நிகழ்ச்சிக்கு துண்டறிக்கை தயார் செய்வது, போஸ்டர் தயார் செய்வது, மைக் ஏற்பாடு செய்வது, விழாவுக்கு வருபவர்களுக்கு தேநீர் அல்லது மதிய உணவு ஏற்பாடு செய்வது, பேச்சாளர்களை அழைப்பது, அழைப்புக் கடிதம் கொடுப்பது, போலீஸ் அனுமதி பெறுவது என்று ஒரு நிகழ்ச்சியினுள் பொதிந்திருக்கும் பணிகள் ஏராளம். இப்படி எல்லா ஏற்பாடுகளையும், ஒரு பொது தேவைக்காகவும், பரந்து பட்ட உழைப்பாளி மக்களின் தேவைகளுக்காகவும், சமூக ஆர்வம் உள்ள அனைவரும் செய்தே வருகிறார்கள்.


இப்படி எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்தவுடன் நிகழ்ச்சி நடக்கும் நாளன்று காலையில் காவல்துறை, உங்கள் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப் படுகிறது என்று அனுமதி மறுக்கும் கடிதத்தை வழங்கினால் எப்படி இருக்கும் ?


கடந்த வாரத்தில் மட்டும் இது போன்ற மூன்று நிகழ்வுகள். முதல் நிகழ்வு. ஈழத் தமிழர்களை, தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி வதை முகாம்களுக்குள் அடைத்து வைப்பதை எதிர்த்து 13.03.2010 அன்று மாலை சென்னை மெமொரியல் ஹால் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப் பட்ட நிலையில் முதல் நாள் இரவு, அனுமதி மறுக்கப் பட்ட கடிதத்தை காவல்துறை வழங்கியது.

அடுத்த நிகழ்வு, சென்னையில் குடிசைப் பகுதி மக்களை சென்னை நகரை அழகு படுத்துகிறோம் என்ற பெயரில் சென்னையை விட்டு அவர்களை விரட்டியடிக்க திட்டமிட்டு அரசு நடத்தும் அராஜக நடவடிக்கைகளை கண்டித்து, உண்ணாவிரதம் இருக்க திட்டமிடப்பட்டு, விழாவுக்கு சீமான், திருமாவளவன் போன்றோரை அழைத்து, எல்லா ஏற்பாடுகளும் செய்து முடிக்கப் பட்டு நிகழ்ச்சி தொடங்கும் நாளன்று காலை, நிகழ்ச்சி தொடங்க 10 நிமிடங்கள் இருக்கும் போது, காவல்துறை அனுமதி மறுக்கப் பட்டது என்ற கடிதத்தை கொடுத்தது. நிகழ்ச்சி தொடங்க 10 நிமிடங்கள் இருக்கும் போது அனுமதி மறுத்தால் என்ன செய்வீர்கள் ? விழா தொடங்குகிறது என்ற அறிவிப்பு வெளியிடச் சென்ற தோழர் உட்பட 50க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தது காவல்துறை.

மூன்றாவது நிகழ்வு. சேலத்தில் காவல்துறையின் சித்திரவதைகளுக்கும், வன்முறைகளுக்கும், போலி மோதல் படுகொலைகளுக்கும் எதிராக இன்று (செவ்வாய்) நடைபெற இருந்தது. சேலம் சுபிக்ஷா அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற இருந்த கருத்தரங்கில் கொளத்தூர் மணி, வழக்கறிஞர் பொ.ரத்தினம், ப.பா மோகன், புகழேந்தி மற்றும் பலர் கலந்து கொள்ள இருந்தனர். இந்நிகழ்ச்சிக்காக ஏறக்குறைய ஒரு மாத காலம் ஆராய்ச்சி செய்து காவல்துறையின் சித்திரவதை மற்றும் அராஜகங்களைப் பற்றிய ஒரு அறிக்கையை புகழேந்தி தயார் செய்து, சென்னையிலிருந்து சேலம் புறப்பட்டுச் சென்றார்.


சுபிக்ஷா அரங்க உரிமையாளரை மிரட்டி, அரங்கை பூட்டி, சாவியை எடுத்துச் சென்று விட்டது காவல்துறை என்று இன்று காலை தொலைபேசி வாயிலாக தகவல் தெரிந்தது.

நியாயமான ஜனநாயக வழியிலான போராட்டங்கள் எதையுமே நடத்த விடாமல் காவல்துறை இப்படி தடுப்பது கருணாநிதிக்கு தெரியாமலா நடக்கிறது என்கிறீர்கள் ? அப்படி தெரியாமல் நடந்தாலும், இப்படிப்பட்ட பொறுக்கி காவல்துறை அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு செயலிழந்த முதலமைச்சர் எதற்கு நமக்கு ?

உண்மை என்னவென்றால், கருணாநிதிக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது, மக்களின் நிலை என்னவென்பதெல்லாம் பற்றி துளியும் அக்கறை இல்லை.

இருந்தால் ஒரு முதல்வர், பிரியாணி பொட்டலம் விநியோகித்துக் கொண்டிருக்கும் அவலத்தை கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? உழைப்பாளி மக்களின் உழைப்பை கவுரவப்படுத்தும் விதமாக அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப் படுவதை சவுக்கு வரவேற்கவே செய்கிறது என்றாலும், இந்தப் பிரியாணி பொட்டலத்தை வழங்க, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அவசியமா ?

இதில் கலந்து கொண்ட இன்னொரு பெரும்புள்ளி, இந்து ராம். கருணாநிதியிடம் “இந்நிகழ்ச்சியில் இந்திப் பாடல்கள் ஒலிபரப்பப்ட்டனவே” என்று கேட்டதற்கு, பாட்டுக்கு இந்தி நன்று, ஆனால் நாட்டுக்கு தேவையில்லை என்று பதில் அளித்து, அதை தலைப்புச் செய்தியாகவும் ஆக்கிய கருணாநிதியை என்னவென்று சொல்வீர்கள்.


கருணாநிதியை திட்டி, விமர்சித்து பதிவு எழுதுவதற்கு சவுக்குக்கே சலிப்பு ஏற்பட்டாலும் என்ன செய்வது, மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லையே…

கருணாநிதி கக்கூஸ் போனாலும் அது செய்தியாக வேண்டும். அதை நாம் படிக்க வேண்டும். ஆனால் உழைப்பாளி மக்களின் பிரச்சினைகளைப் பற்றி யாரும் எங்கேயும் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கும் ஒரு அவல நிலை என்றுதான் மாறப்போகிறதோ.. ..


கருணாநிதியின் குடும்பம் பல துண்டுகளாக உடைந்து சிதறி, திமுக என்ற கட்சியும் பல்வேறு துண்டுகளாக சிதறி, கருணாநிதி மனம் புழுங்க வேண்டும், கண்ணீர் விட வேண்டும் என்று சவுக்கு சபிக்கிறது.

சவுக்குக்கு சாபங்களில் நம்பிக்கை இல்லை என்றாலும், கையறு நிலையில் மனம் அங்கலாய்ப்பதை வேறு என்ன சொல்லி ஆற்றுவது ?


சவுக்கு

Saturday, March 13, 2010

குழந்தைக்கு லாலிபாப். கிழவனுக்கு ?



வயது ஆக ஆக, மூளையின் செல் வளர்ச்சி அறவே நின்று போய் முதியவர்கள் குழந்தைகளைப் போல நடந்து கொள்வார்கள் என்பது அறிவியல் உண்மை. இது போல, முதிர்ந்த, தள்ளாத வயதில் இருக்கும் ஒருவரிடம், ஒரு மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தால் என்ன ஆகும் என்பதை தமிழகம் அனுபவித்து வருகிறது.

ஆயிரக்கணக்கான கோடி மக்கள் பணத்தை நிர்வகிக்கும் ஒருவர் ஒரு குழந்தையைப் போல பிடிவாதத்தோடு நடந்து கொண்டால் என்ன நடக்கும் என்பதன் விளைவுதான் புதிய தலைமைச் செயலகம்.



முதலில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அவசியம் என்ன ? ஜெயலலிதா ஆட்சியில், ராணி மேரிக் கல்லூரியை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவேன் என்ற அறிவிப்பை எடுத்து, மாணவர்கள் மற்றும் திமுகவினரின் போராட்டங்களாலும், மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறையால் அனுமதி மறுக்கப் பட்டதாலும், அத்திட்டம் கைவிடப் பட்டது. அப்போது, புதிய தலைமைச் செயலகத்துக்கான அவசியம் ஏதும் இல்லை, தற்போதைய கட்டிடமே நன்றாக இருக்கிறது என்று கூறிய கருணாநிதி, இப்போது, புதிய தலைமைச் செயலகத்தை கட்டி அதற்கு திறப்பு விழா நடத்த இருக்கிறார்.




தற்போதைய தலைமைச் செயலகம், பிரிட்டிஷாரால் கட்டப் பட்டது. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இன்னும் உறுதியாகவும், அழகாகவுமே உள்ளது. இந்நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டியே தீர வேண்டும் என்பதற்கான அத்தியாவசிய காரணங்கள் ஏதும் இல்லாத நிலையில் மக்கள் பணம் 500 கோடிக்கும் மேல் செலவு செய்து இக்கட்டித்தை கட்ட வேண்டிய அவசியத்திற்கு கருணாநிதியின் பிடிவாதத்தைத் தவிர வேறு ஏதும் காரணம் இருக்க முடியாது.

அரசியல்வாதிகளுக்கு, வரலாற்றில் தங்கள் பெயர் இடம் பெற வேண்டும் என்ற தணியாத ஆசை உண்டு. அதற்கு, மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி, கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தில் வாழ யாரும் முயற்சிப்பதில்லை. அதற்கு பதிலாக, புதிய கட்டிடங்களின் திறப்பு விழாவில் இக்கட்டிடத்தை திறந்து வைத்தவர் என்று தங்கள் பெயரை பொரித்துக் கொள்வதில் முனைப்பு காட்டுகிறார்கள். இந்தப் பெயர் பலகையில் தங்கள் பெயர் இருப்பதால், வரலாற்றில் இடம் பிடித்ததாகவும் இறுமாந்து கொள்கிறார்கள்.




எத்தனை பாலங்கள், எத்தனை கட்டிடங்கள், எத்தனை வீடுகளைத் திறந்து வைத்து, தன் பெயரை பொரித்துக் கொண்டாலும், ஈழத்தமிழரை கொன்று குவித்த, சிங்களக் காடையனுக்கு துணை போன துரோகியாகவே கருணாநிதி வரலாற்றில் கருதப் படுவார். தமிழ் மொழி, தமிழ் இனம் உள்ள வரை கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள இந்த அவப்பெயர் மாறவே மாறாது.

விலைவாசி உயர்வு கடுமையாக மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதைக் கண்டிக்காமல் மன்மோகனுக்கும் சோனியாவுக்கும் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. ஈழத் தமிழர் விவகாரத்தில் இவர் எழுதிய கடிதங்கள் பிரியங்காவின் மகள் மலத்தை துடைக்க பயன்பட்டது போலவே இந்தக் கடிதங்களும் பயன்படுத்தப் படும் என்பதை கருணாநிதி அறியாதவர் அல்ல. ஆனால் அதற்காக எதிர்த்துக் குரல் கொடுத்தால் புதிய தலைமைச் செயலக கட்டிடங்கள் போல, அடிக்கல் நாட்டு விழாவுக்கும் திறப்பு விழாக்களுக்கும் சென்று, அவர் பெயரை கல்லில் பொரித்துக் கொள்ள முடியாதே … … மேலும், இவரே தள்ளு வண்டியில் செல்வதால், பெட்ரோல் டீசல் விலை ஏறினால் என்ன இறங்கினால் என்ன என்று நினைத்திருப்பார்.

புதிய தலைமைச் செயலகத்தில் கருணாநிதியின் படம் வைக்கப் படப் போகிறது என்று அறிவிப்பு வேறு. இறந்தவர் படங்களைத்தானே வைப்பார்கள். கருணாநிதி உயிருடன் தானே இருக்கிறார் ? கருணாநிதியே தன்னை ஒரு நடை (தள்ளு வண்டி) பிணம் என்று முடிவு செய்து விட்டார் போலிருக்கிறது. கருணாநிதியின் படம் வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜெயலலிதா அறிக்கை விட்ட உடனேயே, அவரது ஜால்ரா கோஷ்டிகளான தங்கபாலு, திருமாவளவன் ஆகியோர் படம் வைப்பதை ஆதரித்து அறிக்கை விட ஏற்பாடு செய்தார் கருணாநிதி.

ராணி மேரி கல்லூரி இடிக்கப் படப் போகிறது என்ற உடனேயே, வரிந்து கட்டிக் கொண்டு போராட்டத்தில் இறங்கினார் கருணாநிதி. கல்லூரி இடிக்கப் பட்டால் கூட வேறு இடத்தில் கட்டிக் கொள்ளலாம். மாணவர்கள் பெரும் அளவில் பாதிப்பு அடையப் போவதில்லை. ஆனால் இந்த புதிய தலைமைச் செயலக வளாகத்தால், பேச்சிலர்கள் தங்கும் திருவெல்லிக்கேணி பகுதியில் கடும் நெருக்கடி கொடுத்து, பலரை தங்க விடாமல் நெருக்கடி கொடுப்பதாக விடுதி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யப் படும் ரிச்சி தெருவில் உள்ள கடைகள் அனைத்தையும் காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

ரிச்சி தெருவில் கடை வைத்திருக்கும் முதலாளிகளை விடுங்கள். அங்கு பணியாற்றும் ஏழைத் தொழிலாளர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் கருணாநிதி ? ஒரு நாளைக்கு 15 கோடிக்கு வியாபாரம் நடக்கும் ரிச்சி தெருவில் உள்ள கடைகளால் தங்கள் வாழ்க்கையை ஓட்டும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் கருணாநிதி ?



இந்த லட்சணத்தில் இந்தத் திறப்பு விழாவுக்கு கமலஹாசனும் ரஜினிகாந்தும் சிறப்பு அழைப்பாளர்களாம். அரசு விழாவில் சினிமாக்காரனுக்கு என்ன வேலை ? என்ன வேலை என்றால், ஆகா, ஓகோ என்று கருணாநிதியை புகழ்ந்து பேச வேண்டும். மேலும், இவர்கள் இரண்டு பேரும் விழாவுக்கு வந்தால்தானே, கலைஞர் டிவியில் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பி டிஆர்பி ரேட்டிங்கை கூட்ட முடியும்.




இந்த புதிய தலைமைச் செயலக கட்டிடத்தின் வேலைகளை கருணாநிதி 115 முறை நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன. ஜெயலலிதா கோப்புகளை பார்க்காமல் தாமதம் செய்திருக்கிறார் என்று வண்டி வண்டியாக அறிக்கை விட்ட கருணாநிதி, இப்படி கட்டிட வேலைகளை மேற்பார்வையிட்டும், சினிமா விழாக்களில் கலந்து கொண்டும் நேரத்தை வீணடிப்பது மட்டும் முதலமைச்சருக்கு அழகா ?

புதிய சட்டமன்றத்தின் மேற்கூரை இன்னும் கட்டி முடிக்கப் படாத நிலையில், 2 கோடி ரூபாய் மக்கள் பணத்தை செலவிட்டு, மேற்கூரையை சினிமா செட்டாக போட்டிருக்கிறார் என்றால் கருணாநிதியின் விளையாட்டின் விபரீதத்தை பாருங்கள்.

கிழவன் உருவில் இருக்கும் குழந்தை இன்று தலைமைச் செயலகம் கட்டி மக்கள் பணத்தை வீணாக்குகிறது. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ ?
.





சவுக்கு

Saturday, March 6, 2010

எனக்கு வேற வழி தெரியல….




எனக்கு வேற வழி தெரியல…. என்ன பண்றது சொல்லுங்க. நான் எப்பவோ என் கதைய முடிச்சுக்கிட்டிருக்கணும். இந்த அளவுக்கு சந்தி சிரிக்கணும்னு என் தலையெழுத்து. வெளிய தலக்காட்ட முடியல.


என் அப்பாதான் எல்லாத்துக்கும் காரணம்… … … அப்பாவ குறை சொல்லி என்ன பண்ண ? என் புத்தி எங்க போச்சு ?. நானும்தானே இந்தப் புகழுக்கு மயங்கிப் போய் கிடந்தேன்.

”பெரிய டைரக்டர்மா. பாத்துட்டு வந்துடலாம். அவர் பார்வை உன் மேல பட்டாலே நீ ஸ்டார்தாம்மா ” என்று அப்பா என்னிடம் சொல்லியபோது, ஒரே நேரத்தில் பயமும், பரபரப்பும் தான் என்னை தொற்றிக் கொண்டது.

ஏற்கனவே, பள்ளியில் உள்ள தோழிகள், ”நீ அழகா இருக்கடி… சினிமாவுக்கு போனா, இப்போ இருக்க ஹீரோயின்லாம் இருக்க இடம் தெரியாம போயிடுவாங்க” என்று உசுப்பேற்றிய வார்த்தைகள் என் திமிரை பல இன்ச்சுகளுக்கு ஏற்றி வைத்திருந்தன.

அப்பா கோடம்பாக்கத்தின் கனவுலகத்துக்குள் வாய்ப்புத் தேடி, தன் வாழ்க்கையை தொலைத்தவர். தன் கனவை என் மூலம் நிஜமாக்கி, கார், பங்களா என்று வலம் வரலாம் என்று ஆசைப்பட்டார் என்ற விபரம் எனக்கு அப்போது புரியவில்லை.


”எனக்குப் பின்னாடி ஃபீல்டுக்கு வந்தவன்லாம் இன்னைக்கு பெரிய ஸ்டாரா இருக்கான்” என்று அவ்வப்போது தன் துரதிருஷ்டத்தை புலம்பிக் கொண்டே இருப்பார். அப்போது எனக்கு பதினாலு வயசு இருக்கும். ”உன்னை எப்படியாவது ஹீரோயினா ஆக்கிட்டா நம்ம கஷ்டமெல்லாம் போயிடும்மா” என்று சொன்னபோது எனக்கு குறுகுறுப்பு உணர்ச்சிதான் ஏற்பட்டதே ஒழிய, பயம் ஏற்படவில்லை.

ஒரு நாள் அந்த பிரபலமான டைரக்டர் தன் அடுத்த படத்திற்கு ஹீரோயின் தேடிக்கொண்டிருக்கிறார் என்ற செய்தி கேட்டு, அப்பா யார் யாரையெல்லாமோ பார்த்து ஒரு நாள் அப்பாயின்ட்மென்ட் பெற்றார். பதட்டத்தோடுதான் அந்த அலுவலகத்தில் நுழைந்தேன்.
”இதான் உங்க பொண்ணா ? ய்யா. ஷி ஈஸ் குட் லுக்கிங். பட் மேக்கப் டெஸ்ட் பாத்துட்டுத்தான் சொல்ல முடியும். போர்ட்ஃபோலியோ கொண்டு வந்துருக்கீங்களா ? ”
அப்பா பதட்டத்துடன் ஆல்பத்தை எடுத்து நீட்டினார்.


”ஓகே. ஐ வில் கால் யூ” உடனே அருகில் இருந்த பிஏவை அழைத்து, அவர் காதில் ஏதோ சொன்னார்.


”ஓகே. நீங்க கௌம்புங்க. ஐ ஹேவ் இன்ஸ்ட்ரக்டட் மை பிஏ. ” ”அவர்கிட்ட டீடெய்ல்ஸ் கேட்டுக்குங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பி வெளியே போனார்.




கண்ணாடி போட்டுக்கொண்டு, களைப்பாய் தெரிந்த 35 வயது மதிக்கத்தக்க பிஏ என்று அழைக்கப் பட்டவன் அப்பாவிடம் ”சார், நீங்க என்னோட வாங்க” என்று அப்பாவை அழைத்துப் போனான்.
நான் அங்கேயிருந்த நாற்காலியில் அமர்ந்து அப்பாவை எதிர்ப்பார்த்து, அங்கே இருந்த விருதுகளையும் புகைப்படங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன்.

”வாம்மா போலாம்” என்ற அப்பாவின் குரல் கேட்டு எழுந்து அப்பாவை பார்த்தபோது, அவர் முகத்தில் கவலையின் அடையாளங்கள் தெரிந்தன. உடனடியாக நான் நிராகரிக்கப் பட்டதாகத்தான் தோன்றியது. ஆனால், அப்பா என்னை மேக்கப் டெஸ்ட்டுக்கு அழைத்துள்ளார்கள் என்று கூறியபோது இதற்கு எதற்கு அப்பா கவலைப்படுகிறார் என்று ஏற்பட்ட குழப்பம் மறுநாளே தெளிவானது.

மறுநாள் அந்த இயக்குநர் கார் அனுப்பியிருந்தார். அப்பா என் முகத்தை நேராகப் பார்க்காமல், ”டைரக்டர் சொல்றபடி நடந்துக்கம்மா” என்றபோது, லேசாகப் புரிந்தது. ஆனாலும், அப்பாவே சொல்லும்போது, இதில் என்ன இருக்கிறது என்றும் தோன்றியது.




சரியாக காலை 8 மணிக்கு, கார் கிளம்பியது. நான் மேக்கப் டெஸ்ட் என்றவுடன், ஏவிஎம் ஸ்டுடியோவிலோ, வேறு ஏதாவது ஸ்டுடியோவிலே நடக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், கார், சென்னை நகரைத் தாண்டி வெகுதூரம் சென்று, தனிமையாக இருந்த ஒரு பங்களாவுக்குள் நுழைந்தது.


அந்த ஹாலில் அசிஸ்டென்டுகள் போல, நான்கைந்து பேர் எதையோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சேரில் அமரவைக்கப் பட்டேன். அரை மணிநேரம் கழித்து, இயக்குநர் அழைப்பதாக ஒரு அறைக்குள் அனுப்பப் பட்டேன். அந்த அறையில் ஒரு சிறிய மேசையும், பெரிய கட்டிலும், டிவியும் இருந்ததைப் பார்த்துமே இது மேக்கப் டெஸ்ட் இல்லை என்பது புரிந்தாலும், ”டைரக்டர் சொல்றபடி நடந்துக்கம்மா ” என்ற அப்பாவின் குரல்தான் கேட்டது.


”கம் ஹியர். சிட் டவுன்” என்று இயக்குநர் என்னை கட்டிலில் அமரச் செய்தார். ”இதுக்கு முன்னாடி நடிச்சிருக்கியா” என்று கேட்ட கேள்வி சம்பிரதாயமாகத்தான் இருந்தது.
”யூ ஹேவ் ய ஃபோட்டோஜீனிக் ஃபேஸ்” என்று என் முகத்தை பிடித்து, இடமும் வலமுமாக திருப்பினார். ஏசியின் குளிரையும் மீறி வேர்க்கத் துவங்கியது.

”ஜஸ்ட் ரிலாக்ஸ். டோன்ட் பி அப்ரேய்ட்” என்று அந்த இயக்குநர் கூறியபோது, கிராமத்துப் படம் எடுக்கும் இவர் ஏன் இங்கிலீஷிலேயே பேசுகிறார் என்று வியப்பு ஏற்பட்டது.


”படத்துல, கொஞ்சம் க்ளோசா நடிக்கிற மாதிரி ஒரு சீன் வச்சிருக்கேன்” ”கேன் யூ மேனேஜ் ? ” என்று கேட்டபோது, மவுனமாக தலையாட்டினேன்.


”சீ. தட் ஈஸ் ய லவ் சீன். ப்யூட்டிஃபுல் ரொமான்ஸ். ஹீரோ வர்றான். உன் கிட்ட வந்து உன் கண்ண க்ளோசா பாக்குறான். உன் முகத்த ரெண்டு கையாலும் புடிக்கிறான்.” என்று சொல்லியபடி, அவரும் அதையெல்லாம் செய்தார்.





என்னையறியாமல் என் உடலில் வெப்பம் ஏறியதை உணர முடிந்தது. ”நெக்ஸ்ட் அப்பிடியே கட்டிப் புடிக்கிறான் ” என்று சொல்லி கட்டிப் பிடித்தபோது, வேண்டாம் என்று மனதின் ஒரு மூலையில் தோன்றினாலும் என்னையறியாமல் அவரை இறுக்கி கட்டிப் பிடித்தேன். ஆனாலும் 10 நிமிடம் கழித்து உடலில் அருவருப்பு உணர்ச்சியே மேலிட்டது.

திடீரென்று தாங்கமுடியாத வியர்வை நாற்றம் தெரிந்தது. உடனே பாத்ரூமுக்கு சென்று அரை மணி நேரம் குளித்தேன்.


அதற்குப் பிறகு, என் வாழ்க்கை தலைகீழாக புரட்டிப் போடப்பட்டது.
எனக்கு அந்த டைரக்டரின் வழக்கப் படி ”ஆர்” வரிசையில் புதிய பெயர் சூட்டப் பட்டது. ஆனந்த விகடனில் அட்டைப் படத்தில் என் படம் வந்தபோது, இந்த உலகம் என் காலடியின் கீழ் உள்ளது என்று உணர்ந்தேன்.

ஷுட்டிங் நடக்கும் போதே, அப்படத்தின் ஹீரோ, இயக்குநரைப் போலவே ”மேக்கப் டெஸ்ட்” எடுக்க அழைத்த போது, மறுப்பு சொல்ல இயலவில்லை. ஆறு மாதங்கள் கடந்து விட்டிருந்தபடியால், இந்த வேதனை பழகிப் போயிருந்தது. இப்போதெல்லாம் அருவருப்பு உணர்ச்சி வருவதேயில்லை.

பழகியது என் உடலா மனதா என்பதை கண்டுபிடிக்க இயலவில்லை. அருவருப்பான வியர்வையும், விஸ்கி வாசனையும் என் வாழ்வின் ஒரு பகுதியானது. பார்க்கும் ஆண்கள் அத்தனை பேரும், என் மார்பை முறைத்துப் பார்ப்பது பழகிப் போனது.

ஷுட்டிங் முடிந்து, படமும் ரிலீசானது. படம் சுமாராகப் போனாலும் பாடல்கள் சூப்பர் ஹிட். குறைந்தது ஒரு நூறு பேட்டிகளாவது கொடுத்திருப்பேன். வானத்தில் பறந்து கொண்டிருந்தேன். கார், பங்களா என்று வசதிகள் பெருகியது. அப்பா சந்தோஷமாக விஸ்கியில் நீந்திக் கொண்டிருந்தார்.

எல்லா நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு வர வேண்டும் அல்லவா ? அப்படித்தான் என் சிறகுகளும் ஓய்வு எடுத்துக் கொண்டன. புதிய ஹீரோயின்கள் வரத் தொடங்கியதும் என் வாய்ப்புகள் குறைந்தன. தினந்தோறும் ”மேக்கப் டெஸ்டுகள்” நடந்து கொண்டுதானே இருக்கும். நல்லவேளை, சொந்தப் படம் எடுக்கலாம் என்ற அப்பாவின் ஆசையை தடுத்ததால், கடன் இல்லாமல் தப்பித்தேன்.


அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கையில்தான், வசந்தம் மீண்டும் வீசியது. இந்திய ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தபோது உடனடியாக சம்மதம் தெரிவித்தேன்.

எத்தனை மகிழ்ச்சியான காலம் அது ? முதன் முறையாக என் புகழையும் தாண்டி என்னை நேசிக்கும் மனிதர் என்று அவர் மீது அன்பைப் பொழிந்தேன். என் கடந்த காலத்தைப் பற்றி பேசுவதை கவனமாக தவிர்த்தார். ஆறு மாதம் காஷ்மீரில் சொர்க்கத்தை அனுபவித்தேன்.

மிலிட்டரி ஆபீசர்கள் கலந்து கொள்ளும் பார்ட்டிகள் வாரந்தோறும் நடைபெற்றது. விதவிதமான ஆடைகளில் ஹிந்தியில் அரட்டை அடித்துக் கொண்டு ஆபீசர்களின் மனைவிகளோடு சந்தோஷமாகத்தான் போனது.

”நான் ஒன்னு சொன்னா கேப்பியா ? ” என்று அவர் கேட்டபோது, என்ன இது நம்மகிட்ட போய் இப்படி கேட்கிறார் என்ற வியப்பே ஏற்பட்டது. ஆனால் அவர் கேட்டது, வியப்பையும் தாண்டி கோபத்தை ஏற்படுத்தியது.


”எங்க ஆபீசர் உன் மேல ஆசைப்பட்றார். ” ”ஹி வான்ட்ஸ் டு ஷேர் ய நைட் வித் யூ” என்று நாகரீகமான ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தினார். ”ஐ நோ, இட் ஈஸ் நாட் ந்யூ டு யூ” என்று அவர் சொன்னதுதான் வலியை ஏற்படுத்தியது.

இரவு முழுவதும் யோசித்தேன். மறுத்தால், இந்த இனிய வாழ்வில் விரிசல் ஏற்படும்.” அடுத்து என்ன” என்ற கேள்வி பூதாகரமாக பயமுறுத்தியது. ”ஓகே. இஃப் யு வான்ட் இட், இட்ஸ் ஓகே வித் மீ” என்று நான் கூறியதும் அவர் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.

இரண்டு வாரங்களில், புயல் வீசத் தொடங்கியது. இரவுகள் உறக்கமின்றி நீண்டு கொண்டே சென்றன. அவரின் நடவடிக்கைகள் மாறத் தொடங்கியது. அந்த ஆபீசர், மீண்டும் மீண்டும் நச்சரிப்பதும், இவருக்கு என்னை அனுப்ப மனமில்லாமல் போராடுவதும் தெரிந்தாலும், அதற்கு நான் காரணமென்று என் மீது தன் கோபத்தை கொட்டினார்.

ஒரு நாள், இனிமேல் காலம் தள்ள முடியாது என்று இறுதியாக முடிவெடுத்து, சென்னை திரும்பினேன்.

தனியாகத் தங்கியிருந்தாலும், இருக்கும் கொஞ்ச சேமிப்பில் எத்தனை நாள் காலம் தள்ள முடியும் என்று கவலையாக இருந்தது. டிவி சீரியல்களில் வாய்ப்புத் தேடலாம் என்று முயற்சி மேற்கொண்டேன். டிவியில் ஏற்கனவே நடித்துக் கொண்டிருந்த அவள், முக்கியமான சில நபர்களிடம் அறிமுகப் படுத்தினாள். டிவி சீரியல்களில் தலைக் காட்டத் துவங்கி வருமானத்துக்கு குறைவில்லாமல்தான் இருந்தது.

ஆனால் வாழ்க்கை வெறுமையாக இருந்தது. டிவி சீரியல்கள் நடிக்கும் இடத்திலும், கழுகுகள் இருந்தாலும், என்னால் சினிமா ஹீரோயின் என்ற கவுரவத்தினால், தப்பிக்க முடிந்தது.
”ஒருவன் கூடவா என்னை உண்மையாக நேசிக்க மாட்டான் ? எதற்கு இந்த வாழ்க்கை” என்ற விரக்தியில் இருந்த நேரம்.. …

”ஏய். உனக்கு என்ன பிரச்சினைன்னு தெரியும். அமைதியில்லாம அலையிற. இதுக்கெல்லாம் ஒரே வழி தியானம் செய்வதுதான். என் கூட வா” என்று அவள் அழைத்துச் சென்ற இடத்துக்குச் சென்றவோது, உண்மையிலேயே என் மனது அமைதியானது. ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் அமர்ந்து தியானம் செய்வதை கண்டபோது என்னவென்றே அறியாமல் மனது நிம்மதியடைந்ததை உணர்ந்தேன்.

ஒரு சிறிய மேடையில் அமர்ந்து காவி உடை அணிந்த அந்த இளைஞன், வாழ்க்கையின் அத்தனை சிக்கல்களுக்கும் விடை அறிந்தவன் போல அமைதியாக பேசிக்கொண்டிருந்தான். என் மனதில் ஏற்பட்ட அத்தனை குழப்பத்துக்கும் அவன்தான் விடை என்று உணர்ந்தேன்.

”வாடி. ஸ்வாமிஜி கிட்ட போய் பேசலாம்” என்று அழைத்தாள். அவளுக்கு அந்த ஆசிரமத்தில இருந்த செல்வாக்கினால், ஸ்வாமிஜியை தனியாக சந்திக்க முடிந்தது. என்னை அவரிடம் அறிமுகப் படுத்தினாள்.


”உன் மனதில் கலக்கம் இருக்கிறது.” ”உன் மனது அலைபாய்ந்து கொண்டு எதையோ தேடி அலைகிறது” என்று அவர் கூறியவுடனே, அவர் காலில் விழுந்து அழுதேன்.
என் தோளைத் தொட்டுத் தூக்கியவர், என் தலையில் கைவைத்து, ஆசி வழங்கினார். அவர் கரம் பட்டவுடன், என் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. மனதில் இருந்த கஷ்டம் அனைத்தும் விலகிப் போனது போல இருந்தது.

”ஸ்வாமி, இப்போ டிவி சீரியல்ல நடிச்சுக்கிட்டு இருக்கேன். உங்க ஆசிரமத்துலேயே, பர்மனென்ட்டா இருந்துடுறேன் ஸ்வாமி” என்று அவர் காலடியில் அமர்ந்து அவர் முகத்தைப் பார்த்து சொன்னேன்.

”ஆண்டவனின் அருள் நீ செய்யும் பணியிலும் இருக்கிறது. அதைத் தொடர்ந்து செய். என்னை எப்போது வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம். என் அருள் உனக்கு எப்போதும் உண்டு” என்று அருகில் இருந்த தட்டில் இருந்து ஒரு மலரை எடுத்துக் கொடுத்தார்.

”இனி எனக்கென்ன கவலை. என் கவலைகளையெல்லாம் அவர் காலடியில் வைத்து விட்டேன். நான் இனி ஆனந்தப் பறவை. ” மீண்டும் சிறகு விரித்து பறக்கத் தொடங்கினேன்.

ஸ்வாமிஜிக்கு பணிவிடை செய்வதிலேயே என் ஓய்வு நேரம் அனைத்தையும் செய்தேன். ஸ்வாமிஜியின் அனைத்து வேலைகளும் என்னிடம் ஒப்படைக்கப் பட்டது.
இப்படித்தான் ஒரு நாள் ஸ்வாமிஜிக்கு பணிவிடை செய்யும் போது, என்னையும் அறியாமல், ஸ்வாமிஜியின் கரங்களை எடுத்து முத்தமிட்டேன்.





என்னைத் தொட்டுத் தூக்கிய ஸ்வாமி, என் கன்னத்தில் முத்தமிட்டார். ஸ்வாமிஜியை கட்டி அணைத்து, அவர் உதட்டில் முத்தமிட்டபோது, அவர் மறுக்கவில்லை. ஸ்வாமிஜிக்கு என்னை அர்ப்பணம் செய்வது என் கடமை என்றே உணர்ந்தேன். அர்ப்பணமும் செய்தேன்.

அதற்குப் பிறகு ஸ்வாமிஜிக்கு நெருங்கிய பக்தை என்று ஆசிரமத்தில் அறியப்பட்டேன். நான் ஸ்வாமிஜியுடன் இருக்கும் போது, யாரும் உள்ளே வரமாட்டார்கள்.




இப்பிடி சந்தோஷமாத்தானே இருந்தேன். நான் சந்தோஷமா இருந்தாத்தான் அந்த கடவுளுக்குப் பொறுக்காதே. திடீர்னு ஒரு போன்.. ”நானும் ஸ்வாமிஜியும் நெருக்கமா இருக்கிற மாதிரி வீடியோ சன் டிவில ஓடுதாம்” நான் நம்பவே இல்லங்க. இத யாரு வீடியோ எடுத்துருப்பாங்க ? நான் ஸ்வாமிஜி கூட இருக்கப்போ, யாருமே வரமாட்டாங்களே. அப்புறம் எப்படிங்க இப்படி ?

அய்யோ.. வெளில தலக்காட்ட முடியலியே…. இப்பிடி பண்ணிட்டாங்களே… என் மனசு இப்படி கஷ்டப் படுதுன்னா ஸ்வாமிஜி மனசு எப்படி கஷ்டப் படும். படுபாவிங்க. ஸ்வாமிஜி மனச கஷ்டப்படுத்துன இந்தப் பாவிங்க நல்லா இருப்பாங்களா ?

நக்கீரன் பத்திரிக்கைல கலர் படம் எடுத்துப் போட்டு இப்பிடி அநியாயம் பண்றாங்களே ? சிட்டி பூரா போஸ்டர் அடிச்சு ஒட்டிருக்காங்களே.. ... போன்ல பதில் சொல்லி மாள மாட்டேங்குதே... அய்யோ எப்பிடி நான் வாழுவேன் ?


இப்போ சொல்லுங்க. இனிமே நான் எப்படி வாழ முடியும் ? நான் என் கதையை எப்பவோ முடிச்சுகிட்டு இருக்க வேண்டியவள் தானே ? நீங்களே சொல்லுங்க.



சவுக்கு

Wednesday, March 3, 2010

கதவைத் திறந்தாலும், காற்று வராது





கடந்த வாரமும், இந்த வாரமும் நடந்த சம்பவங்கள் மிக முக்கியமானவை. முதல் சம்பவம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காவல்துறையினரின் அதீத தாக்குதலால் பலியான மூன்று மாணவர்கள். இரண்டாவது சம்பவம், சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்த, பத்திரிக்கையாளரின் பார்வையில் ஸ்டாலின் என்ற நூல் வெளியீட்டு விழா. மூன்றாவது சம்பவம், அருள்மிகு ஸ்ரீ நித்யானந்த பரமஹம்ச ஸ்வாமிகள் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம்.



மூன்று சம்பவங்களும், ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாதது போலத் தோன்றும். ஆனால், மூன்றுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், நிறைந்த அரசியல் பின்னணி கொண்டது. கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்குவதை எதிர்த்து, தமிழகத்திலேயே முதல் போராட்டம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில்தான் வெடித்தது. அப்போராட்டத்தை முன்னெடுத்த, உதயக்குமார் மர்மமான முறையில் இறந்ததும், அவர் உடலையே அவர் பெற்றோர்கள் தங்கள் மகன் இல்லை என்று அடையாளம் கூறியதும் வரலாறு.

அந்த அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் கடந்த வாரம் கவுதம் குமார் என்ற மாணவர், சாலை விபத்தில் மரணமடைந்தார். அந்த மாணவருக்கு, சரியான சிகிச்சை அளிக்கப் படவில்லை, சிகிச்சை அளிக்கப் பட்டிருந்தால் அம்மாணவர் காப்பாற்றப் பட்டிருப்பார் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நிர்வாகத்தின் ஆணைப்படி, செயல்பட்ட கருணாநிதி அரசின் காவல்துறை மிருகத்தனமான தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில், சுமித் குமார், ஆசிஷ் ரஞ்சன் குமார், சர்பராஸ் என்ற மூன்று மாணவர்கள் கொல்லப் பட்டனர். இந்தப் பிரச்சினை பூதாகரமான மாணவர் பிரச்சினையாக உருவாகும் தகுதி படைத்தது.



மாணவர்கள் சடலம் எடுத்து வரப்படுகிறது

கொல்லப்பட்ட மாணவர்கள், வட இந்திய மாணவர்கள் ஆதலால், உடனடியாக பெரும் பிரச்சினை கிளம்பவில்லை. ஆனால், வட இந்திய மாணவர்கள், மாணவப் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசி, ஒரு பெரும் போராட்டத்தை நடத்த உத்தேசித்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.




ஒரு மாணவர்கள் சடலம் ஆற்றில் இருந்து எடுத்து வரப்படுகிறது


ஆனால் திட்டமிட்டது போல, இந்த செய்தியை ஊடகங்கள் புறக்கணித்தன. நேற்று இரண்டு மாணவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப் பட்டதும், கடலூல் மாவட்டத்தில் பதற்றம் அதிகரித்தது. இந்த மாணவர்களின் கொலை, தமிழகமெங்கும் பரவும் சூழ்நிலை உருவானது.


அடுத்து இரண்டாவது சம்பவம். நேற்று சென்னையில் துணை முதல்வர் ஸ்டாலினைப் பற்றி, “ஸ்டாலின். மூத்த பத்திரிக்கையாளர் பார்வையில் என்ற நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது. இவ்விழாவில், தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் மனோஜ் குமார் சோந்தாலியா, பெரியார் மடத் தலைவர் வீரமணி, திமுக நிலைய வித்வான் கமலஹாசன், குமுதம் குழும தலைவர் பா.வரதராஜன், தினமலர் குழும உரிமையாளர் ஆர்.ஆர்.கோபால்ஜீ, இந்து நாளிதழின் உரிமையாளர் மற்றும் ஆசிரியர் என்.ராம், விகடன் குழும முதலாளி பா.சீனிவாசன், தினத்தந்தி, மாலைச்சுடர் முதலாளி பாலசுப்ரமணிய ஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டு, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.




இதில் செய்தி என்னவென்றால், தமிழக அரசியல் சூழலை நன்கு புரிந்தவர்கள், பத்திரிக்கையாளர்களும், அதன் முதலாளிகளும், ஆட்சியில் இருக்கும் ஒரு அரசியல் தலைவருக்கான பாராட்டு விழாவில் பங்கு கொண்டு வாழ்த்து தெரிவிப்பது என்பது, இயல்பான ஒரு நிகழ்வு அல்ல. தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் அரசியல் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்.

உண்மையில் அனைத்து பத்திரிக்கையாளர்களையும் அழைப்பது நோக்கமென்றால், ஜெயா டிவி எடிட்டர், நமது எம்ஜிஆர், மாலைச்சுடர், மக்கள் குரல், ந்யூஸ் டுடே ஆகிய பத்திரிக்கையாளர்களை வாழ்த்துச் சொல்ல அழைக்க வேண்டியதுதானே ? ஏன் அழைக்கவில்லை.


ஏன் அழைக்கவில்லை என்றால், திமுகவின் பிடிக்குள் வந்து, திமுகவின் துதிபாடிகளாக ஆன பத்திரிக்கைகள் மட்டுமே இவ்விழாவிற்கு அழைக்கப் பட்டன. மேற்கூறிய பத்திரிக்கைகள் எதிலுமே திமுக அரசுக்கு எதிராக பெரிதாக எந்த செய்திகளும் வருவதில்லை. இந்தப் பத்திரிக்கைகளைத் தவிர, வேறு எந்த பத்திரிக்கைகளும் பிரபலமான மக்களைச் சென்றடையும் பத்திரிக்கைகள் இல்லை என்பதுதான் சாபக் கேடு.



இந்தப் புகைப்படத்தில் இருப்பவர்கள் யாரும், உழைப்பால் உயர்ந்தவர்கள் கிடையாது. அனைவருமே, தங்கள் தகப்பனாரின் உழைப்பில் விளைந்த சொத்துக்களை இன்று அனுபவிக்கும் கூட்டத்தினர்.

தமிழ்நாட்டின் அனைத்துப் பத்திரிக்கைகளும், கருணாநிதியின் கைப்பிடிக்குள் வந்துவிட்டால், பிறகு, நான்காவது தூணுக்கு என்ன வேலை ? நான்காவது தூணுக்கு வேலை இல்லாமல் செய்வதுதான் கருணாநிதியின் வேலை.


பெரும்பாலான பத்திரிக்கைகளை அழைத்து, உங்களுக்கு, பரபரப்பான செய்திகளால் பத்திரிக்கை விற்பனை அதிகரித்தால் உங்களுக்கு என்ன வருமானம் வருமோ, அந்த வருமானத்தை விளம்பரத்தால் உறுதி செய்வதாக ஸ்டாலின் வாக்குறுதி அளித்து, அதைச் செயல்படுத்தியும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதையும் மீறி, தலைமைச் செயலகம் திறக்க இருக்கும் இந்த நேரத்தில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் கொலை பற்றிய செய்திகள் வெளிவந்தால் ? அது சிக்கலை உருவாக்கும் அல்லவா ?


அங்குதான் மூன்றாவது சம்பவம் வருகிறது. சுவாமி நித்யானந்தாவின் படம் நேற்று இரவு அனைத்து தமிழ் காட்சி ஊடகங்களிலும் திட்டமிட்டே ஒளிபரப்பப் பட்டதாகத் தெரிகிறது. இரவு 8.30 மணிக்கு முதன் முறையாக காட்சி ஒளிபரப்பான சில மணி நேரங்களிலேயே இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி போன்ற இந்து அமைப்பினர், உடனடியாக நித்யானந்தாவின் படத்தை கிழித்தும், எரித்தும், போராட்டம் நடத்தியதை, சன் டிவி விரிவாக ஒளிபரப்பியது.


இதற்கு விரிவாக கவரேஜ் கொடுத்த, சன் டிவி, தலித்துகள், இன்னும், ஆலயத்தினுள் நுழைய வராமல் தடுக்கப் படுவதையும், தலித் தெருக்களில் கடவுள் தேரை கொண்டு வர, நீதிமன்றம் வர வேண்டிய அவல நிலை இருப்பதையும் இந்த இந்து மக்கள் கட்சியும், இதர இந்துக் கட்சிகளும் ஏன் கண்டிக்கவோ, போராடவோ தவறுகிறார்கள் என்ற கேள்வியை எழுப்ப மறுக்கிறது.


சுவாமி நித்யானந்தா அப்படி என்ன தவறு செய்து விட்டார் ? நித்யானந்தா ஒவ்வொருவரிடமும் சென்று, எனக்கு பாலியல் உணர்வுகள் கிடையாது என்று சொன்னாரா ? எனக்கு செக்ஸ் ஆசை அறவே கிடையாது என்று தினத்தந்தியில் முதல்பக்க விளம்பரம் கொடுத்தாரா ? நீங்களாக நித்யானந்தாவுக்கு, செக்ஸ் உணர்வு கிடையாது என்று கற்பனை செய்து கொண்டு, இப்படி ஒரு வீடியோ வெளியானதும், நித்யானந்தா நடித்து அனைவரையும் ஏமாற்றி விட்டார் என்று கூறுகிறீர்களே … இது எந்த விதத்தில் நியாயம் ?


நித்யானந்தா கைது செய்யப் பட வேண்டும் என்று இன்று போராட்டம் நடத்தும் இந்து மக்கள் கட்சியினர் இது நடிகை ரஞ்சிதாவிற்கும், நித்யானந்தாவிற்குமான தனிப்பட்ட விஷயம் என்பதை ஏன் உணர மறுக்கிறார்கள் ? யாராவது புகார் கொடுக்க வேண்டும் என்றால் ரஞ்சிதா அல்லவா புகார் கொடுக்க வேண்டும் ?

இரண்டு வயது வந்த நபர்கள், தன் விருப்பத்தோடு உறவு வைத்துக் கொள்வதால் சமுதாயத்தில் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது ?


மேலும், இந்த வீடியோ எடுக்கப் பட்ட ஆண்டு மிகவும் முந்தையது என்று தோன்றுகிறது. வீடியோவில், ரஞ்சிதா, தொடக்கத்தில் கதாநாயகியாக நடிக்கையில் இருந்தது போல இருக்கிறார். இப்போதைய ரஞ்சிதாவிற்கும், வீடியோவில் தென்படும் ரஞ்சிதாவிற்கும் நிறைய வயது மற்றும் தோற்ற வேறுபாடு தெரிகிறது.


பழைய ரஞ்சிதா




தற்போதைய ரஞ்சிதா



எப்போதோ எடுக்கப் பட்ட ஒரு வீடியோ, இப்போது, சிதம்பரம் மாணவர்கள் கொலையை மறைக்கவும், கருணாநிதியின் குடும்பப் பிரச்சினையை மறைக்கவும், தமிழ்நாட்டில் உள்ள இதர பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பி, கிரிக்கெட் உலக கோப்பை நடக்கையில், மக்கள் அனைத்தையும் மறந்து, போதையில் உலவுவது போல், இந்த வீடியோவால் மக்களை போதையில் உலவ விட்டு, தலைமைச் செயலக திறப்பு விழாவை, எவ்வித பிரச்சியையும் இன்றி முடிக்க வேண்டும் என்ற கருணாநிதியின் திட்டத்தை, தமிழக உளவுத்துறை செயல்படுத்தி முடித்து விட்டதோ என்ற அய்யம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.


அதற்கேற்றார்போல, இன்று காலை முதல், டீக்கடை, பத்திரிக்கை கடை, அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், சாலைகள், பேருந்து நிலையங்கள், என்று மக்கள் நடமாடும் அனைத்து இடங்களிலும் நித்யானந்தாவைப் பற்றித்தான் பேச்சு.


இது கருணாநிதியின் திட்டமாக இருந்தால், அவர் மிகப் பெரிய வெற்றியை அடைந்து விட்டார்.
கருணாநிதியின் நயவஞ்சகத்தையும், சூதையும் அறிந்தவர்களுக்கு, இது ஒரு பெரிய ஆச்சர்யமாகத் தோன்றாது.


இப்படிப்பட்ட அரசியல்வாதிகளும், மக்களும், சோரம் போன பத்திரிக்கைகளும் இருக்கையில், எத்தனை கதவுகள் திறந்தாலும், காற்று வரப்போவதில்லை.



சவுக்கு

Tuesday, March 2, 2010

அவர் பெயர் ஞானப்பிரகாசம்


இந்த ஞானப்பிரகாசம் போன்ற நபர்களை நம்மில் பல பேர் சட்டை செய்திருக்க மாட்டோம், இந்த ஞானப்பிரகாசம் கல்லக்குடியில் ரயில் வராத தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தவரில்லை. தமிழாய்ந்த அறிஞர் இல்லை. பல கோடிகளுக்கு அதிபதியும் இல்லை. யார் இந்த ஞானப்பிரகாசம் ?

அது தொண்ணூறுகளின் தொடக்கம். அப்போது வேலைக்குச் சேர்ந்த புதிது. இளம் வயது. அப்போது நண்பருக்கும் திருமணம் ஆகவில்லை என்பதால் மாலை ஆனவுடன், மனைவிக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற கவலையெல்லாம் இல்லாத இன்பமான காலம் அது. மவுண்ட் ரோடிலேயே அலுவலகம் அமைந்து விட்டதால், மாலை 6 மணிக்கு அலுவலகம் முடிந்ததும் ஊரைச் சுற்றுவதுதான் வேலை.

ஜெமினி மேம்பாலம் அருகே அலுவலகம் இருந்தது. சத்யம் தியேட்டர் இப்பொழுது போல் மேல்தட்டு பணக்காரக் களையை கொண்டிருக்கவில்லை. டிக்கெட்டின் அதிகபட்ச விலை 30 ரூபாய். சத்யம், சாந்தம், சுபம் என்ற மூன்றே தியேட்டர்கள் தான். சத்யம் மற்றும் சாந்தம் தியேட்டர்களில் ஆங்கிலப் படங்கள் திரையிடப்படும்.

தமிழ்ப்படம் கட்டாயமாக திரையிடப்பட வேண்டும் என்ற விதியினால், சுபம் தியேட்டரில் மட்டும் தமிழ்ப்படம் ஓடும். “சினிமான்னா அது இங்கிலீஷ் படம்தான்“ என்ற கருத்து கொண்டிருந்த காலம். மாலை அலுவலகம் முடிந்ததும், சத்யம் தியேட்டரில் என்ன ஆங்கிலப்படம் திரையிடப்பட்டாலும் தவறாமல் பார்க்கும் வழக்கம். வசனங்கள் சுத்தமாக புரியாது. இருந்தாலும், உத்தேசமாக ஒரு திரைக்கதையை மனதினுள் கற்பனை செய்து கொண்டு, இதுதான் கதை என்று கற்பனை செய்து கொண்டு என்ன படம் போட்டாலும் பார்க்கும் காலம்.

தொடர்ந்து இரண்டு, மூன்று வாரங்களுக்கு படம் மாற்றா விட்டால், அடுத்து, அலங்கார், தேவி, மெலடி என்று தியேட்டர், தியேட்டராக சுற்றுவதுதான் தலையாய பணி. எல்லாப் படத்தையும் பார்த்து முடித்து விட்டால், ஜெமினி மேம்பாலத்தில் தொடங்கி, க்ரீம்ஸ் ரோடு பஸ் நிறுத்தத்தின் அருகில் இருக்கும் கடையில் வேர்க்கடலை வாங்கிக் கொண்டு கொரித்தபடி சாந்தி தியேட்டர் வரை, நடந்து சென்று, மீண்டும் ஜெமினி திரும்புவதுதான் பொழுது போக்கு.


இப்படி ஒரு சாயங்கால வேளையில்தான் ஞானப்பிரகாசத்தை சந்தித்தேன். ஞானப்பிரகாசம் ஸ்பென்சர் பிளாசா அருகில் கடை வைத்திருப்பவர். ஸ்பென்சர் ப்ளாசா அருகில் என்றதும், ஸ்பென்சர் ப்ளாசாவிற்குள் என்று நினைத்து விடாதீர். ஸ்பென்சர் ப்ளாசா வாசலில், நடை பாதையில் பெல்ட் விற்கும் கடை வைத்திருக்கிறார். என் நினைவு சரியாக இருந்தால், 1992 பிப்ரவரியில்தான் அவரைச் சந்தித்தேன்.



ஞானப்பிரகாசம்


நானும் என் நண்பரும் வழக்கம் போல, வேர்க்கடலை கொரித்தபடி, நடந்து வந்து கொண்டிருந்தபோது, அன்று பெல்ட் வாங்க வேண்டும் என்றார் நண்பர். நாங்கள் வாங்கும் சம்பளத்திற்கு, சினிமா பார்த்தது போக, பெரிய கடைகளிலெல்லாம் சென்று பெல்ட் வாங்க முடியாது. மேலும், பெரிய கடைகளில் ஏமாற்றுவார்கள் என்ற எண்ணம் வேறு. அதனால், ஒவ்வொரு ப்ளாட்பார கடையாக பார்த்துக் கொண்டே வந்தோம்.


ஸ்பென்சர் ப்ளாசா வாசலில், ஞானப்பிரகாசத்தின் கடைக்கு வந்தபொழுது, நல்ல தரமான லெதர் பெல்ட் இருந்ததைப் பார்த்தோம். அப்போது ஒரு பெல்ட், 60 ரூபாய் சொன்னார். முடியவே முடியாது என்று பேரம் பேசி, 50 ரூபாய்க்கு வாங்கினோம். அதற்குப் பிறகு, அவருடனான எங்கள் நட்பு, எங்களுக்குத் தெரிந்த, பெல்ட் வேண்டும் என்று கூறும் அனைத்து நண்பர்களையும், அவரின் வாடிக்கையாளர்களாக்குவதில் சென்று முடிந்தது.

ஞானப்பிரகாசத்தின் பெல்ட்டுகள், தரமானவையாக இருப்பதால், குறைந்தது 3 ஆண்டுகளுக்காவது வரும். மூன்று ஆண்டுகள் கழித்து அவர் கடைக்குச் சென்றாலும், தினமும், நூற்றுக்கணக்கான பேர்களைச் சந்திக்கும் அந்த நபர், நிறைந்த திருமுகத்தோடு, “சார் எப்படி இருக்கீங்க ? வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா ? “ என்று அன்பொழுகக் கேட்பார். பகட்டாகப் பேசி, பகட்டாகப் பழகி, போலி முகமூடிகளைப் போட்டு வாழப் பழகிய மனதுக்கு, அவரின் வெள்ளந்தியான அன்பு, வியப்பையும், உணர்ச்சி ஊற்றையும் ஒரு சேர ஏற்படுத்தும்.


அதன் பிறகு, ஓரளவு விபரம் தெரிந்தபின், அவர் கடைக்குச் செல்லும்போதெல்லாம், பெல்ட் வாங்குகையில் அவர் சொல்வதுதான் விலை. மனதினுள், இந்த ஆள் கொஞ்சம் கூட விலை சொல்லக் கூடாதா என்ற எண்ணம் ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை. ஆனால், அவர், “என்னா சார் ? உங்களுக்கு என்னா வெல சொல்றது ? குடுக்கறத குடு சார்“ என்று இயல்பாகக் கூறுவார்.


இப்படி ஒரு நாள், அவர் கடைக்கு பெல்ட் வாங்கச் செல்லுகையில், திடீரென்று ஒரு மதிப்பெண் சான்றிதழின் நகலை எடுத்து நீட்டினார். அது ப்ளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ். அந்த மதிப்பெண்ணைப் பார்த்தால், 1200க்கு 1019 இருந்தது. “யாருங்க இது ? “ என்று கேட்டதற்கு, “ என் தம்பி பையன் சார். இவன நான்தான் சார் வளக்குறேன். நல்லா படிப்பான் சார். இவனுக்கு நல்ல காலேஜுல சீட் வாங்கனும் சார்“ என்றார். என் மனதில் தோன்றியபடி, இந்த மார்க்குக்கு, எந்த காலேஜுலையும் சீட் கிடைக்கும் கவலைப் படாதீங்க என்று கூறினேன்.

இரண்டு வாரங்கள் கழித்து அவரைச் சந்தித்தபோது, லயோலா கல்லூரியில் தன் தம்பி மகன் ரொனால்ட் ஆன்ட்ரூஸுக்கு பிகாம் சீட் கிடைத்தது என்பதை கண்களில் பெருமை வழியச் சொன்ன போது, அவருடன் சேர்ந்து நானும் மகிழ்ந்தேன். பணம் உதவி ஏதாவது வேணுமா என்று கேட்க வேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை, என்னுடைய சகாவாக இவரைக் கருத வேண்டும் என்ற எண்ணத்தால் அடக்கி விட்டு, ஸ்காலர்ஷிப்புக்கு ட்ரை பண்ணுங்க என்று கூறினேன்.

அவர் “சார், அங்க ஒரு ஃபாதர் இருக்குறார் சார். இவன் படிப்ப நான் பாத்துக்கறேன்னு சொன்னார் சார்“ என்று கூறியபோது, என்னையறியாமல், என் மனது நிம்மதி அடைந்ததை உணர்ந்தேன்.


இரண்டு ஆண்டுகளுக்க முன், பல வேலைகள் இருந்தாலும், கட்டாயம் இதைச் செய்தே ஆக வேண்டும் என்ற உறுதியான நோக்கத்தில், என் திருமணத்திற்கு, அழைப்பிதழ் வைத்தேன். “கண்டிப்பா வரேன் சார். உன் கல்யாணத்துக்கு வராம அத்த விட எனக்கு இன்னா வேலை சார்“ என்றார் ஞானப்பிரகாசம். திருமண வேலைகளில், ஞானப்பிரகாசம் என் நினைவு அடுக்களில் இருந்து தொலைந்து போனார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பணக்காரர்களும், உயர் அதிகாரிகளும் வந்து போன போதும், ஞானப்பிரகாசம் நினைவுக்கு வரவில்லை.

வரவேற்பு முடியும் தருவாயில், அவரிடம் இருப்பதிலேயே, சிறந்து உடை என்று அவர் கருதிய கசங்கிய உடையை அணிந்தபடி, தயங்கித் தயங்கி மேடையேறினார் ஞானப்பிரகாசம். என் அருகே வந்து, ஒரு பார்சலை அளித்தார். திருமண வரவேற்புக்கு எவர் வந்திருந்தபோதும் ஏற்படாத மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. அவரை நெகிழ்ச்சியோடு பார்த்து, “வாங்க, போட்டோ எடுக்கலாம் “ என்று கூறினேன். வெட்கத்தோடு “வேண்டாம் சார்“ என்றார். “வந்து நில்லுங்க“ என்று கண்டிப்பாகக் கூறி, அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

திருமண மேடையில் இருந்து இறங்கிச் சென்று, அவரை சாப்பிட அமர வைக்க வேண்டும் என்ற ஆவல், யதார்த்தத்தின் கட்டாயத்தால் இயலாமல் போனது.


திருமண பரபரப்புகள் முடிந்ததும், பரிசுப் பொருட்களை பிரித்துப் பார்க்கத் துவங்கிய போது, முதலில் பிரித்தது ஞானப்பிரகாசத்தின் பார்சலைத் தான். அந்த பார்சலுள், ஒரு லெதர் பெல்ட், எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதால், ஒரு பெண்களுக்கான பர்ஸ், எனக்கு ஒரு பர்ஸ் இருந்தது. என் மனது நெகிழ்ந்தது. ஒரு வியாபாரி, அவன் கஸ்டமர் என்பதைத் தாண்டி, எங்களுக்கள் ஒரு ஆழ்ந்த நட்பு இருந்ததை நான் எப்போதோ உணரத் தொடங்கினாலும், அந்நட்பு மேலும் இறுக்கமானதை உணர்ந்தேன்.

இரண்டு ஆண்டுகள் கழித்து, திருமணம் கசந்து போனாலும், ஞானப்பிரகாசத்தின் அன்பளிப்பு இனிமையாகவே இருக்கிறது.


அந்த ஞானப்பிரகாசத்தின் வரலாற்றில் தென்றல் தீண்டவேயில்லை. அவர் வாழ்க்கை தொடங்கியது முதல், வறுமை, வறுமை, வறுமை. ஆனாலும், உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற பிடிவாதம், தன் தொழிலின் மீது உள்ள பக்தி, அனைவரின் மீதும் காட்டும் வெள்ளந்தியான அன்பு, இவைதான் மனிதத்தின் சிகரம்.


சென்னை, சிந்தாதிரிப்பேட்டைதான் ஞானப்பிரகாசத்தின் பூர்வீகம். ஒரு அக்கா, ஒரு தம்பி. கூட்டுக் குடும்பம். இவர் தந்தை, பாம்புத் தோலில், பர்ஸ், பெல்ட்டுகள் செய்து விற்பனை செய்துவர். வனவிலங்குச் சட்டம் கடுமையானவுடன், இந்த லெதர் தொழிலில் இறங்கினர். எஸ்எஸ்எல்சி தேர்வில், பெயிலானவுடன், தன் குடும்பத் தொழில் செய்யலாம் என்று முடிவெடுத்த ஞானப்பிரகாசம், இதே மவுண்ட் ரோடில், தனது 17வது வயதில், இப்போது இருக்கும் இதே ஸ்பென்சர் ப்ளாசா அருகில் கடையைத் தொடங்கினார்.


ஞானப்பிரகாசத்தின் அக்காவுக்கு, 3 மகள்கள் 1 மகன். முதல் மகளுக்கு திருமணமாகவில்லை. ஏன் என்று கேட்டதற்கு, “அது பாக்க கொஞ்சம் குண்டா இருக்கும் சார். பொண்ணு பாக்க வரவங்க எல்லாம், ரெண்டாவது பொண்ணு இல்ல மூணாவது பொண்ணக் கேட்டாங்களா, அதுனால மீதி ரெண்டு பொண்ணுக்கும் நான்தான் சார் கல்யாணம் பண்ணி வெச்சேன். “ என்று எந்தவித வருத்தமும் இல்லாமல் சொன்னார்.“


“நீங்க கல்யாணம் பண்ணிக்கலையா ? “ என்று கேட்டதற்கு, “நான் எப்டி சார் கல்யாணம் பண்றது ? என் தம்பிக்கு மோசமான பழக்கம் உண்டு சார். கஞ்சா அடிப்பான். பவுடர் அடிப்பான். நான்தான் சார் அவனுக்கு, தாஜ் ஹோட்டல் பக்கத்துல கடை வெச்சுக் குடுத்தேன். மதியம் 12 மணிக்கெல்லாம் வர்ற காச எடுத்துட்டு போய் கஞ்சா அடிக்கப் போயிடுவான் சார். அவன் இந்த மாதிரி இருக்கப்போ, நான் எப்டி சார் கல்யாணம் பண்றது ? நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அப்புறம், தம்பி பசங்கள யார் சார் பாக்கறது ? அவங்கள படிக்க வெக்க வேண்டாமா சார் ? இப்போ பாரு சார். தம்பி பையன படிக்க வைச்சேன். அவன் டிசிஎஸ்ல வேலப் பாக்குறான் சார். தம்பி பொண்ணு ஏபிடி பார்சல் சர்வீசுல வேலப் பாக்குது. நான் கல்யாணம் பண்ணிருந்தா, இப்படி படிக்க வெச்சுருக்க முடியுமா சார் ?“ என்று எவ்வித கழிவிரக்கமும் இல்லாமல் சொன்னார்.


தன் வாழ்கையையே குடும்பத்திற்காக அர்பணித்து, தன்னை அழித்து பிறரை வாழச் செய்து வருகிறோம் என்ற எவ்வித பெருமித உணர்ச்சியையோ, என் வாழ்க்கை வீணாகப் போய் விட்டது என்ற எவ்வித சுயபச்சாதாபமோ ஞானப்பிரகாசத்திடம் துளியும் இல்லை. “வியாபாரம் எப்பிடிங்க இருக்கு ? “ என்றதற்கு “புதுசா செக்ரேட்ரியட் கட்றாங்களாம் சார். அதுனால கடை வெக்கக் கூடாதுன்னு ஒரே கெடுபிடி சார். டிசம்பர் மாசம் பூரா கடையே வெக்கல சார். அப்பப்போ போலீஸ் வந்து தொந்தரவு பண்ணுவாங்க சார். அதுனால ஒண்ணும் இல்ல சார். நமக்கு கிடைக்கறத யாராலும் தடுக்க முடியாது சார். ஆண்டவன் சும்மாவா உட்ருவான் ? “ என்று மிக இயல்பாகச் சொன்னார் ஞானப்பிரகாசம்.


இரண்டு பெல்ட் வாங்கி விட்டு, அவர் மீதம் தர வேண்டிய 50 ரூபாயை, வேண்டாம் என்று சொன்னால் தவறாக நினைப்பார் என்று, “அடுத்த வாரம் வரேன், இன்னும் ரெண்டு பெல்ட் வேண்டும், அதுக்கு அட்வான்சா வெச்சுக்குங்க“ என்று கூறி விட்டு புறப்பட்டேன்.


பளீரென்ற புன்னகையுடன், “போய்ட்டு வா சார். அடிக்கடி வந்து போ சார். உன் தோஸ்த கேட்டதா சொல்லு சார்“ என்றார்.



ஞானப்பிரகாசம்


நடைபாதையில் கடை வைத்துக் கொண்டு இன்றோ, நாளையோ என்று புதிய தலைமைச் செயலகத்தில் தனது விதியை அடகு வைத்துக் கொண்டு நம்பிக்கையோடு காத்திருக்கும் ஞானப்பிரகாசத்தோடு, பிடிவாதமாக, குடியே முழுகினாலும், புதிய தலைமைச் செயலகம் கட்டி, அதைத் திறந்தே தீருவேன் என்று, காடு அழைக்கும் காலத்தில், பிடிவாதம் பிடிக்கும் நபரை ஒப்பிடுவதை தவிர்க்க முடியவில்லை.




சவுக்கு