Thursday, April 29, 2010

உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட் என்னை எதிரியாகப் பார்க்கிறார் ஏ.கே.விஸ்வநாதன்



உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட், எனக்கு எதிரி. என் மீது பத்திரிக்கைகளில் தவறான செய்திகள் வருவதற்கு அவர்தான் காரணம் என்று ஐஜி ஏ.கே.விஸ்வநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 2009ல், ஏ.கே.விஸ்வநாதன், மத்திய அமைச்சர் அழகிரியின் செயலராக நியமிக்கப் படுவதாக பேச்சு எழுந்தது. இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு விஸ்வநாதன் சிறப்பு ஆணையராக நியமிக்கப் பட்டார். மத்திய அமைச்சர்களின் அனைத்து செயலர்களின் நியமனங்களுக்கும் ஒப்புதல் தரும் பிரதமரிடம், விஸ்வநாதன் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வந்ததையடுத்து, விஸ்வநாதன் நியமனத்திற்கு தடை விதித்தார் பிரதமர். இதையடுத்து, டெல்லி உறைவிட ஆணையராகவே தொடர்ந்து வந்த விஸ்வநாதன், தற்போது ஒரு ஆண்டு விடுப்பில் சென்றுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த புகழேந்தி என்பவர், தலைமைச் செயலாளருக்கு திரு ஏ.கே.விஸ்வநாதன் காஞ்சிபுரம் ஒட்டியம்பாக்கம் கிராமத்தில் 2 கோடி மதிப்புள்ள 5.24 ஏக்கர் நிலம், பள்ளிக்கரணையில் 1.5 கிரவுண்ட் நிலம், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி கிராமத்தில் 522 ஏக்கர் நிலம் என 25 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை குவித்துள்ளார். இச்சொத்துக்கள், இவரது வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் ஆகும். இதனால், வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை வாங்கியுள்ள காவல்துறை அதிகாரியான விஸ்வநாதன் மீது, லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அனுப்பியிருந்தார்.

இப்புகார் மீது, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தன் மீது நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை ஒரு டிஎஸ்பி விசாரிக்கிறார். தான் ஒரு ஐஜி என்றும், வழக்கறிஞர் காவல்துறையினர் மோதலில், ராதாகிருஷ்ணன் தான் தடியடி நடத்த உத்தரவிட்டது என்று தான் அபிடவிட் தாக்கல் செய்தவுடன் தான் தன் மீது உள்நோக்கத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்றும் தனது மனுவில் கூறியிருக்கிறார்.

மேலும் அவர், தன் மீதான விசாரணை குறித்து பத்திரிக்கைகளில் பார்த்த பிறகுதான் தெரிந்து கொண்டேன் என்றும், விசாரணை தொடர்பான எந்த கடிதமும் தனக்கு வழங்கப் படவில்லை என்றும் 18.01.2010 அன்று பொதுப் பணித்துறையின் பொறியாளர்களால் தனது வீடு ஆய்வு செய்யப் படும் என்று கடிதம் வந்ததாகவும், அந்த பொதுப்பணித்துறையின் அறிக்கை தனக்கு வழங்கப் படவில்லை என்றும், லண்டனில் உள்ள தனது நண்பருக்கு இந்த வழக்கை விசாரித்து வரும் புலனாய்வு அதிகாரி வழக்கு தொடர்பாக கேள்விகள் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தன்னைப் போன்ற உயர் அதிகாரிகளின் மீது, சட்ட விரோதமான விசாரணைக்கு உத்தரவிட்டால், நிர்வாகமே ஸ்தம்பித்து விடும் என்றும் மற்ற உயர் அதிகாரிகள் விருப்பு வெறுப்பின்றி தங்களது பணியை செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரும், லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பியும் எந்த அடிப்படையில் தன் மீது விசாரணை நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த விசாரணையே மர்மமாக இருக்கிறது. என் மீது, காவல்துறையின் அதிகாரம் தவறான முறையில் உள்நோக்கத்தோடு பயன் படுத்தப் பட்டு வருகிறது. இந்த விசாரணை நடைபெறும் முறையே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தற்பொழுது உளவுத் துறை ஐஜியாக இருக்கும் எம்.எஸ்.ஜாபர் சேட் எனக்கு எதிரியாய் உள்ளார். என்னைப் பற்றி தவறான செய்திகள் வரக் காரணமாக உள்ளார். தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், விஜிலென்ஸ் கமிஷனர் ஆகியோர் என் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக 30.08.2009 அன்று நாளேடுகளில் வந்த செய்தி எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை என்றும் தன் மனுவில் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கு நீதிபதி பால் வசந்த குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விஸ்வநாதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வராஜின் வாதங்களைக் கேட்ட நீதிபதி, அரசு வழக்கறிஞருக்கு, நாளை விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

சவுக்கு


Monday, April 26, 2010

கமிஷனர் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு.


சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல் எழுந்துள்ளது. நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில், திமுகவினர் வந்து அமைதியான முறையில், அங்கே கருப்புக் கொடி காட்டிய வழக்கறிஞர்களை தாக்கிக் கொண்டிருந்த போது அதைத் தடுத்ததாகவும், அந்த தாக்குதலை படம் பிடிக்க முயன்றதாகவும் திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது.

மேலும், படமெடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்களை திமுகவினர் அமைதியாக தாக்கிக் கொண்டிருந்த போது அதைத் தடுக்க முயன்றதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதனால், திமுக நிர்வாகி வி.எஸ்.பாபு அளித்த புகாரின் பேரில், ரவுடிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, ரவுடிகள் மீது வன்முறையை பிரயோகித்தது, ரவுடிகளின் பணிகளில் இடையூறு செய்தது, ரவுடிகளுக்கு பாதுகாப்புத் தர மறுத்தது, என்ற பிரிவுகளின் கீழ் கமிஷனர் ராஜேந்திரன் மீது புகார் தரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

திமுகவினர் கமிஷனர் மீது இவ்வாறு புகார் தரக் காரணம், அம்பேத்கர் சிலை திறப்பு விழாவின் போது, பத்திரிக்கையாளர்கள் தாக்கப் பட்டதைக் கண்ட ராஜேந்திரன், அவர்களை பாதுகாக்க முயற்சித்ததைக் கண்ட, திமுகவினர் கடும் கோபம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

இது குறித்து பேட்டியளித்த வி.எஸ்.பாபு, தலைவர் ஆட்சி நடக்கையிலேயே, இவ்வாறு காவல்துறையினருக்கு கழக கண்மணிகளை தடுக்க துணிவிருக்கிறதென்றால் இது மிக ஒரு மோசமான சம்பவம். இதனால்தான் ராஜேந்திரன் மீது புகார் கொடுத்திருக்கிறோம். இந்த விழாவிலே பங்கேற்ற டிஜிபி லத்திக்கா சரண் முன்னிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதனால், லத்திக்கா சரண் மீதும் புகார் கொடுக்கலாமா என்று யோசித்து வருகிறோம் என்று கூறினார். பிறகு சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதோடு முடித்துக் கொண்டார்.


கமிஷனர் ராஜேந்திரன் வட்டாரங்களிடம் பேசிய போது, விழாவிற்கு வந்திருந்தவர்கள், திமுகவினர் என்று தெரியாமல் அவர்களைத் தடுக்க முற்பட்டதாகவும், தெரிந்திருந்தால், தன்னுடைய காரிலேயே அவர்களை அனுப்பி வைத்திருப்பேன் என்றும், இப்போது கூட, தன்னுடைய கமிஷனர் பதவிக்கு ஆபத்து எதுவும் வந்து விடாமல் இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதாகவும், வி.எஸ்.பாபு விரும்பினால், நேரில் வந்து அவரிடம் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாவும் கூறப்பட்டது.

இப்படியும் நடக்கலாம் !!!! ????? இதெல்லாம் திமுக ஆட்சிலே நடக்காதுன்னு நெனைக்காதீங்க. சீக்கிரம் நடக்கும்

சவுக்கு


Sunday, April 25, 2010

நளினி செல்போன். நடந்தது என்ன ?



கடந்த 20.04.2010 அன்று பத்திரிக்கைகளில் வேலு£ர் பெண்கள் சிறையில் 19 ஆண்டுகளாக இருந்து வரும், நளினியின் அறையில் செல்போன் கைப்பற்றப் பட்டதாக பத்திரிக்கைகளில் தகவல் வெளிவந்தது. இதையடுத்து, தமிழக சட்டப் பேரவையிலும் இச்சம்பவம் விவாதிக்கப் பட்டு, சிறைத் துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த வாரம் இது தொடர்பாக பேசியிருக்கிறார்.

தமிழக சிறைகளில் செல்போன்களும், சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப் படுவது இது முதல் முறை அல்ல. அக்டோபர் 2009ல் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஷ்யாம்சுந்தர், கடந்த 100 நாட்களில் மட்டும் 75 செல்போன்களும், 45 சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
அப்போதெல்லாம் இதை பெரிய அளவில் பரபரப்புக்குள்ளாக்கி விவாதிக்காத தமிழக அரசு, நளினி அறையில் இருந்து செல்போன் எடுக்கப் பட்டது என்றதும் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரனை விட்டு கேள்வி கேட்க வைத்து, தானாக முன்வந்து அறிக்கை தாக்கல் செய்வது போல நளினியிடம் பறிமுதல் செய்யப் பட்ட செல்போன் தொடர்பாக விரிவாக சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் செய்கிறது. முதல் நாள் இரண்டு சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப் பட்டன என்று அவையில் தெரிவித்த அமைச்சர், மறு நாள் ஒரு சிம் கார்டின் அழைப்பு விபரங்களை மட்டும் அவையில் தாக்கல் செய்கிறார்.

ஒரு மாதத்துக்கு முன்னால், தமிழ்நாட்டின் முக்கியப் பிரமுகர்களின் செல்பேசிகள் ஒட்டுக் கேட்கப் படுகின்றன என்றும், இந்த சட்ட விரோத ஒட்டுக் கேட்பை செய்து வருவது, தமிழக உளவுத் துறையின் தலைமை அதிகாரி ஜாபர்சேட் என்றும், இந்த ஒட்டுக் கேட்பு, அவுட்சார் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனத்தின் மூலமாக நடைபெற்று வருகிறது என்றும் தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் தமிழக உள்துறைச் செயலருக்கு புகார் அனுப்பப் பட்டது. இந்தப் புகார் மீது ஒரு மாத காலம் ஆகியும், எவ்வித விசாரணைக்கும் உத்தரவிடாத தமிழக அரசு எந்த அதிகாரி மீது சட்டவிரோத ஒட்டுக் கேட்பு புகார் அனுப்பப் பட்டதோ அந்த அதிகாரியிடமே நளினியிடம் இருந்து கைப்பற்றப் பட்டதாகக் கூறப்படும் செல்போனையும், சிம் கார்டையும் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது எங்களுக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தங்கள் கட்சியின் எம்.பி. ஜெயந்தி நடராஜனின் செல்போன் ஜாபர் சேட் என்ற அதிகாரியால் சட்ட விரோதமாக ஒட்டுக் கேட்கப் படுகிறது என்ற புகார் அளிக்கப் பட்டு பத்திரிக்கைகளில் செய்தியாக வந்த போது அப்பிரச்சினையை அவையில் எழுப்பாத வேலு£ர் எம்எல்ஏ ஞானசேகரன், நளினியிடம் செல்போன் பறிமுதல் செய்யப் பட்டது என்ற தகவல் வந்தவுடன் மட்டும் உடனடியாக அவையில் இத்தகவலை எழுப்புவதும், எதிர்க்கட்சிகள் முக்கியமான எந்தப் பிரச்சினைகள் வந்தாலும் சட்டப்பேரவையில் எழுப்ப வாய்ப்பு அளிக்காத, பேரவைத் தலைவர், ஞானசேகரன் நளினி செல்போன் விவகாரத்தை கேள்வி நேரத்தில் எழுப்பியவுடன் மட்டும் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு அவருக்கு அனுமதி அளித்துள்ளதும், அவரது கேள்விக்கு தொடர்ந்து அமைச்சர் விரிவான பதில் அளித்துள்ளதும், நளினியின் முன் விடுதலையை தடை செய்ய வேண்டும், 19 ஆண்டுகளாக சிறையில் நன்னடத்தையோடு உள்ள நளினியை சிறைக் குற்றம் செய்தவர் என்ற பழியை சுமத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடே, இந்த சம்பவம் நடந்திருப்பதாக சந்தேகிக்கிறேன்.

சம்பவம் நடந்ததாக கூறப்படும், 20.04.2010 அன்று, வழக்கமாக காலை 6 மணிக்கு லாக்கப்பில் இருந்து திறந்து விடப்படும் கைதிகள், அன்று காலை 9.30 மணிக்கே திறந்து விடப் பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் எனக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மற்ற கைதிகள் வழக்கம் போல காலை 6 மணிக்கே திறந்து விடப்பட்டிருந்தால், நளினியிடம் சோதனை செய்து பறிமுதல் செய்யப் பட்டதாக கூறப்படும் சம்பவத்தின் போது, அவர்கள் சாட்சிகளாக இருந்திருக்க முடியும். ஆனால், வசதியாக மற்ற கைதிகள் காலை 9.30 மணிக்கு திறந்து விடப்பட்டிருப்பதால், இந்தச் சோதனையில் போது, சிறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மட்டுமே இருந்திருக்க நேரிட்டுள்ளது. இதனால், இச்சம்பவத்தின் போது தனிப்பட்ட முறையில் சுதந்திரமான சாட்சிகள் ஒருவர் கூட இல்லாதவாறு, திட்டமிட்டு தடுக்கப் பட்டுள்ளது.

செல்போன் பறிமுதல் செய்யப் பட்டதாக முதலில் சிறைத்துறை டிஜிபி ஷ்யாம் சுந்தர் பத்திரிக்கையாளர்களிடம் தகவல் சொல்கையில்

The Economic Times. 20 April 2010
ADGP (prisons) K R Shyam Sundar said: "Following a tip-off, we monitored Nalini's cell in Vellore for more than three days. On Tuesday morning, teams raided her cell. They recovered a new Nokia mobile phone and it was switched on and active."

The Hindu 20 April 2010
Additional Director-General of Police (Prisons) K.R. Shyamsundar said the possession of a mobile phone was an offence under the provisions of the Manual.
“Under Section 298, the mobile phone is listed under the contraband articles. Section 300 prescribes major and minor punishments. If found guilty, the major punishments include hard labour, forfeiture of remission and reduction to lower class. Nalini is presently lodged in an ‘A' class cell,” Mr. Shyamsundar told The Hindu here on Tuesday. He added that the phone seized from Nalini was “active.”

The New Indian Express 22 April 2010

Confirming reports that a mobile phone and two sim cards were seized from the cell of Rajiv Gandhi assassination convict Nalini at Vellore Prison, Law Minister Durai Murugan on Wednesday said they have been sent for examination. He said jail authorities have been advised to be alert to avert such crimes. “The jail authorities found a mobile phone hidden in a cloth bag. Besides, two sim cards were recovered. Nalini snatched it and threw it into a nearby toilet. However, the instrument were recovered and sent for analysis. Only after we get the report, we can say whether she had made calls to London and Canada using that phone.’’ Durai Murugan said while replying to the issue in the State Assembly.

சிறைத்துறையின் ஏடிஜிபி, செல்போன் புதிய செல்போன் என்றும், நல்ல நிலையில் இயங்கிக் கொண்டு இருந்தது என்றும் கூறுகிறார். மறுநாள் அமைச்சர் அதிகாரிகள் சோதனைக்கு வருகையில் நளினி செல்போனை கழிவறையில் வீசியதாகவும், செல்போன் ஆய்வுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும், இரண்டு சிம் கார்டுகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

அதற்கு மறுநாள் அமைச்சர், அவையில், யாரோ ரவி என்ற பெயரில் சிம் கார்டு வாங்கப் பட்டுள்ளதாகவும், அந்த எண்ணிலிருந்து லண்டன், இலங்கை உள்ளிட்ட இடங்களுக்கு அழைப்புகள் சென்றிருப்பதாகவும் கூறுகிறார்.

துணிப்பையில் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்டது என்ற ஒரு செய்தி. கழிவறையில் இருந்து கைப்பற்றப் பட்டது என்று ஒரு செய்தி. அனைத்து கழிவறைகளும் சந்திக்கும் கழிவுநீர் தொட்டியில் இருந்து எடுக்கப் பட்டது என்று ஒரு செய்தி. தண்ணீர் பக்கெட்டில் இருந்து எடுக்கப் பட்டதாக ஒரு செய்தி. செல்போன் நல்லநி¬லையில் இயங்கிக் கொண்டிருந்தது என்று ஒரு செய்தி. இயங்கவில்லை, பழுதாகி விட்டது என்று ஒரு செய்தி.

மொத்தத்தில், இந்த செல்போன் பறிமுதல் சம்பவமே, ஒரு திட்டமிட்ட ஜோடிக்கப் பட்ட, மோசமாக அரங்கேற்றப் பட்ட ஒரு நாடகமாக தெரிகிறது.

இந்த செல்போன் பறிமுதல் தொடர்பாக, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, தடயங்களை அழித்தது, அரசு ஊழியர் பணி செய்கையில் வன்முறையை பிரயோகித்து பணி செய்ய விடாமல் தடுத்தது என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யச் சொல்லி, பாகாயம் காவல் நிலைய ஆய்வாளரிடம் நிர்பந்தித்ததாகவும், அவர் அந்தப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தால் தனக்கு சிக்கல் வரும் என்று மறுத்ததும், சிறைத்துறை ஏடிஜிபி ஷ்யாம் சுந்தர், அந்த ஆய்வாளரிடமும், வேலு£ர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுசெல்வத்திடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மிரட்டி, வழக்கு பதிவு செய்யச் சொல்லி நிர்பந்தித்ததாகவும் எனக்கு தகவல் வந்துள்ளது.

12.04.2010 அன்று நளினி, வேலு£ர் பெண்கள் சிறையில் கஞ்சா, புகையிலை போன்ற தடை செய்யப் பட்ட பொருட்கள் சிறை நிர்வாகத்தின் துணையுடன் சிறையில் விற்கப்பட்டு வருவதாக அளித்த புகாரின் மீது, இது வரை நடவடிக்கை இல்லை என்பதும், நளினியின் உறவினர்களையும் வழக்கறிஞர்களையும் நளினியை பார்க்க விடாமல் தடுத்ததாகவும் அளித்த புகாரின் மீது இது வரை நடவடிக்கை இல்லை என்பதும் சிறைத் துறையினர், தங்கள் ஊழல்களை மறைப்பதற்காகவும், நளினி நீதிமன்றங்கள் மூலம் எவ்வித நிவாரணமும் பெறக் கூடாது என்பதற்காகவே இந்த செல்போன் பறிமுதல் சம்பவம், திட்டமிட்டு நடத்தப் பட்டுள்ளதாக நம்புகிறேன்.

நன்னடத்தை அதிகாரி 30.07.2009 அன்றே, நளினியை விடுதலை செய்யத் தகுதியானவர் என்றும், நளினியை விடுதலை செய்வதால் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாது என்று அறிக்கை அளித்த பிறகு, 19.08.2009 அன்று, எந்த அதிகாரியிடமும், எந்த நபரிடமும் அறிக்கை பெற்று, யாரையும் விடுதலை செய்யலாமா வேண்டாமா என்ற முடிவை தமிழக அரசு எடுக்கலாம் என்ற சிறை விதித் திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளதே, நளினியை விடுதலை செய்யக் கூடாது என்பதில் தமிழக அரசு எப்படித் தீர்மானமாக இருக்கிறது என்பதை தெளிவு படுத்துகிறது.

ஏழு ஆண்டுகள் தண்டனை முடித்த 1405 ஆயுள் கைதிகளை 2008ம் ஆண்டில் விடுதலை செய்கையில், எந்த ஆய்வாளரிடமும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றி அறிக்கை எதுவும் கேட்காமல் விடுதலை செய்த தமிழக அரசு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற காரணத்தை காட்டி நளினியை விடுதலை செய்ய மறுத்ததை, நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாமல், நளினியை விடுதலை செய்ய இருக்கும் வாய்ப்பை பறிப்பதற்காகவே, இந்த செல்போன் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக ஒரு திட்டமிட்ட கட்டுக் கதை பரப்பப் பட்டு வருவதாக நம்புகிறேன்.


சட்டவிரோதமாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்பேசிகளையும், ஈமெயில்களையும், இடைமறித்து படிக்கவும், கேட்கவும் தேவையான தொழில்நுட்பத்தை கொண்ட தமிழக உளவுத்துறை நளினி, லண்டன், இலங்கை மட்டுமல்ல, உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பேசியுள்ளார் என்பதற்கான ஆவணங்களையும் போலியாக தயார் செய்யக் கூடிய திறமை பெற்றது என்றே நான் கருதுகிறேன். இவ்வாறு பல்வேறு ஆவணங்களை தயார் செய்து, பத்திரிக்கைகளில் வெளியிட உளவுத் துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

தமிழக அரசின் இந்தச் சதியையும், வருங்காலங்களில் செய்ய உள்ள சதித் திட்டங்களையும் நீதிமன்றங்களின் துணையோடு எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்.

பா.புகழேந்தி
நளினியின் வழக்கறிஞர்

Saturday, April 24, 2010

உளவுத்துறை ஐஜி ஜாபர்சேட்டுக்கு பகிரங்கக் கடிதம்




“ஆளெல்லாம் ஸ்டைலா சினிமா ஆக்டர் மாதிரி இருக்காரு.... ஆனா புத்தி சரியில்லையே.... “


அன்பார்ந்த திரு.ஜாபர்சேட் அவர்களே,

வழக்கமாக அரசியல்வாதிகளுக்குத்தான் பகிரங்கக் கடிதம் எழுதுவார்கள், என்ன இது அதிகாரிக்கு, அதுவும் காவல்துறை அதிகாரிக்கு பகிரங்கக் கடிதமா என்று உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல் வாதிகளுக்கும் கடிதம் எழுதுவதை விட, உங்களுக்கு கடிதம் எழுதி, ஒரு வேளை, அந்த கடிதத்தில் உள்ளதை நீங்கள் பரிசீலித்தீர்கள் என்றால், தமிழ்நாட்டின் அநேக பிரச்சினைகள் தீரும் என உறுதியாக நம்புகிறேன். ஏனேனில், நீங்கள் அரசியல்வாதிகளுக் கெல்லாம் அரசியல்வாதி. உங்களை மாக்கியவல்லியோடும், சாணக்கியரோடும் ஒப்பிட்டால் தப்பே இல்லை. அந்த அளவுக்கு, அரசியலில் நீங்கள் கை தேர்ந்தவர் என்பதாலேயே, உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் படிக்கும் போதும் சரி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் போதும் சரி, நீங்கள் ஒரு மிகுந்த அறிவார்ந்த மாணவராகவே இருந்ததாக உங்களுடன் படித்த நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். உங்களோடு, ஜமால் முகம்மது கல்லூரியில் படித்தவர்களிடமும், உங்களோடு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தவர்களிடமும் பேசியபோது, உங்களால் தமிழ்நாட்டில் இத்தனை பிரச்சினைகள் என்று சொன்னால் நம்ப மறுக்கிறார்கள். படிக்கும் காலத்தில் அப்படி நல்லவராக இருந்தீர்கள் என்று சொல்கிறார்கள்.

படிக்கும் காலத்தில் நல்லவர்களாக இருந்தவர்களெல்லாம், தமிழக காவல்துறைக்கு வந்ததும் சீரழிந்தது தானே வரலாறு. ஆனால், நீங்கள் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றுதான் உங்கள் நண்பர்கள் இன்றும் சொல்கிறார்கள்.

1996ம் ஆண்டு முதல்வரின் பாதுகாப்பை கவனிக்கும் டிஐஜியாக நீங்கள் இருந்தீர்கள். அன்று உங்களால், முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியாக முதல்வரின் இல்லத்துக்குச் சென்ற பாண்டியன் இன்று உங்களின் அதி தீவிர விசுவாசியாகவும், முதல்வர் இல்லத்தில் என்ன நடக்கிறது, முதல்வரை யார் சந்திக்கிறார்கள், முதல்வரின் குடும்பத்தில் என்ன நடக்கிறது, முதல்வரின் உதவியாளர் சண்முகநாதனை முதல்வர் எப்படியெல்லாம் திட்டுகிறார், முதல்வரை சந்திக்கும் அதிகாரிகளிடம் முதல்வர் என்ன பேசுகிறார், என்று, முதல்வர் இல்லத்திலேயே உளவு பார்க்கும் வேலையை பாண்டியனை வைத்து செய்து வருகிறீர்கள். உங்களால் வளர்த்து விடப்பட்ட பாண்டியன், இன்று பல லட்சக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாகவும், போலீஸ் அதிகாரிகளுக்கு, போஸ்டிங் வாங்கித் தரும் ப்ரோக்கராகவும் இருந்து, கோடிகளை குவித்துக் கொண்டிருக்கிறார் என்பது நீங்கள் அறியாததா ?


1996ல் முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த நீங்கள், கருணாநிதியோடு ஏற்பட்ட நெருக்கத்திற்கு விசுவாசமாக இருந்தீர்களா ?

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப் பட வேண்டும் என்று திட்டமிடப்பட்ட போது, அந்தப் பொறுப்பு, கருணாநிதியின் பாதுகாப்பை கவனித்தவர் என்ற முறையில் உங்களிடம் அல்லவா ஒப்படைக்கப் பட்டது. கருணாநிதி செல்லும் அனைத்து இடங்களையும் அறிந்தவராதலால் நீங்கள் அல்லவா, டிசிக்கள் தலைமையிலான எட்டு குழுக்களை அமைத்து, கோபாலபுரம், சிஐடி காலனி, ஸ்டாலின் வீடு, முரசொலி மாறன் வீடு, அறிவாலயம், என்ற பல்வேறு இடங்களுக்கு அனுப்பினீர்கள். அத்தனை குழுக்களும், எங்கு செல்கின்றன, என்ன முன்னேற்றம் என்ற விபரங்களை மைலாப்பூர் காவல் நிலையத்தில் அமர்ந்து உடனுக்குடன் தொலைபேசி மூலம் வாங்கி, அன்று சர்வ வல்லமை பொருந்திய அதிகாரியாக இருந்து முத்துக்கருப்பனுக்கு தகவல் சொன்னது நீங்கள் அல்லவா ? கருணாநிதி கைதில் சம்பந்தப்பட்ட, காவல்துறை அதிகாரிகள் ஜார்ஜ் மற்றும் கிரிஸ்டோபர் நெல்சன் போன்றோர், இன்று தண்ணீர் இல்லாத காடுகளில் பணியாற்றுகையில், அவர்களை விட முக்கியப் பங்கு வகித்த நீங்கள், இன்று தமிழ்நாட்டின் சர்வவல்லமை படைத்த, ஆக்கவும், அழிக்கவும் வல்ல கடவுளுக்கு நிகராக இருக்கையில், உங்களை மாக்கியவல்லியோடும், சாணக்கியரோடும் ஒப்பிடுவதில் என்ன தவறு ?

திமுக ஆட்சிக்கு வந்ததும் உளவுத்துறை ஐஜியாக நீங்கள் நியமிக்கப் பட்டதும், உங்களுக்கு உயர் அதிகாரியாக வந்தவர்களையெல்லாம் ஏதாவதொரு புகாரைச் சொல்லி மாறுதலில் அனுப்பி விட்டு, சக்கரவர்த்தி போல, தமிழ் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் தங்கள் திறமையைக் கண்டு வியப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ?

மிகவும் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த அனூப் ஜெய்ஸ்வால் என்ற அதிகாரியை உளவுத்துறையில் இருந்து மாற்றி விட்டு, திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார் என்று அவர் மீது அபாண்ட பழி சுமத்தியது உங்களின் சாணக்கியத்தனம் அல்லாமல் வேறு என்ன ?



2008ல் காலியான ராஜ்யசபா எம்பி பதவிக்கு, உளவுத்துறை எஸ்பியாகவும், யூனிபார்மோடு கருணாநிதி காலில் விழுந்து தன் விசுவாசத்தை காட்டியவருமான சந்திரசேகரின் மனைவி தமிழச்சிக்கு எம்.பி பதவி கிடைக்க இருந்த சூழலில், அவர் எம்.பியாக ஆனால் உங்கள் அதிகாரம் குறையும் என்று, ஏராளமான புகார்கள் இருந்தும் வசந்தி ஸ்டான்லியை எம்.பியாக ஆக்கியது உங்கள் சாணக்கியத்தனம் அல்லாமல் வேறு என்ன ?


தமிழ்நாடு அரசிடம் இருந்து அண்ணாநகரில் வீட்டு மனை பெற்று, அதில் ஆடம்பர பங்களாவை கட்டி முடித்து, பல லட்சங்களுக் விற்று விட்டு, மீண்டும் சட்ட விரோதமாக வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து திருவான்மியூரில் வீட்டு மனை முதல்வரின் கோட்டாவில் ஒதுக்கீடு பெற்றது தங்களின் அசாத்திய திறமை அல்லவா ?


மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய சங்கர் ஜிவால் என்ற அதிகாரி, போதை மருந்து கடத்துபவர்களைக் கண்காணிக்கவும், அவர்கள் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கவும், டி3டி டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனத்தின் உதவியை பெற்றதும். சங்கர் ஜிவால் தமிழக உளவுத்துறைக்கு டிஐஜியாக வந்ததும், அந்த டி3டி டெக்னாலஜிஸ் நிறுவனத்தை, தமிழகத்தின் அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், தொழில் அதிபர்கள் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கவும், மின்னஞ்சல்களை இடைமறித்துப் படிக்கவும் பயன்படுத்தி, அவர்களுக்கு “ஒட்டுக்கேட்பு கட்டணமாக“ தமிழக மக்களின் வரிப்பணத்தில் வழங்கப் பட்டுள்ள ரகசிய நிதியை அளித்து, யாருமே கேள்வி கேட்காமல் செய்தது தங்களின் பிரத்யேகத் திறமை அல்லாமல் வேறு என்ன ?
2008ம் ஆண்டில், உளவுத்துறையின் இந்த சட்டவிரோத ஒட்டுக் கேட்பு பத்திரிக்கைகளில் வெளியாகி பரபரப்பாக, இது தொடர்பாக எந்த ஒரு விசாரணையும் நடைபெறாமல் சாதுர்யமாக சமாளித்து இன்று வரை ரகசிய நிதி செலவிடப்படும் விதம் பற்றி தகவல் வெளியாகாமல் பாதுகாத்து வரும் கலை வேறு யாருக்கு உண்டு ?


இவ்வாறு சட்டவிரோதமாக அனைவரின் தொலைபேசிகளையும் ஒட்டுக் கேட்பதால், 2008ம் ஆண்டில் மருத்துவர் ராமதாசுக்கு போன் செய்தால், பல்வேறு புதிய புதிய எண்களில் அவர் பேசினார் என்பது உங்களுக்கு தெரியாததல்ல. எத்தனை புதிய எண்கள் மாற்றினாலும், அத்தனை எண்களையும் ஒட்டுக் கேட்கும் வல்லமை தங்களுக்கு உண்டு என்பது மருத்துவர் அய்யாவுக்கு தெரியாது போலும்.


மருத்துவர் அய்யாவின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டு அவருடைய மிக முக்கியமான அந்தரங்கங்களை நீங்கள் அறிந்து கொண்ட கோபத்தில்தான், உங்களை பெயரிட்டு, நீங்கள்தான் ஒட்டுக் கேட்பு செய்கிறீர்கள் என்று நேரடியாக குற்றம் சாட்டினார். அவரின் அறிக்கையை பத்திரிக்கைகளிள் பின்னுக் தள்ளுவதற்காகவே, திருச்சியில் “பாம் பாலாஜி“ என்ற ஒரு சாதாரண குற்றவாளியை பெரிய ரவுடி போல சித்தரித்து என்கவுண்டரில் சுட்டுத் தள்ள ஏற்பாடு செய்தீர்கள்.



ஏப்ரல் 2008ல், டெக்கான் க்ரோனிக்கிள் நாளிதழ் திரிபாதி, உபாத்யாய் இடையிலான உரையாடலை வெளியிட்டு, உளவுத்துறைதான் இந்த ஒட்டுக் கேட்பை வெளியிட்டது என்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தியவுடன், அந்த செய்தியை வெளியிட்ட, நிருபர் வி.பி.ரகுவையும், அந்த நாளிதழையும் மிரட்டி, இன்று வரை அந்த நாளிதழ் அரசுக்கு எதிராகவும், உங்களுக்கு எதிராகவும் எந்தவொரு செய்தியும் வெளியிடாமல் தடுத்து வைத்திருக்கும் திறமை, தமிழகத்தில் எந்த அரசியல்வாதிக்கும், எந்த அதிகாரிக்கும் இல்லை.

இது மட்டுமல்லாமல், தந்திரமாக, இந்த விவகாரத்தில் எந்த சம்பந்தமும் இல்லாத பத்திரிக்கையாளர்கள் மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு ஆணையம் அறிக்கை கொடுத்ததும், இந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட பத்திரிக்கை யாளர்களை மிரட்ட தாங்கள் பயன்படுத்திக் கொண்டதும், பத்திரிக்கையாளர்கள் பணிந்தார்கள் என்று தெரிந்ததும், ஏதோ பெருந்தன்மையாக அரசே வழக்கு பதிவு செய்யாமல் விட்டு விட்டது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தியதும் உங்கள் கைங்கர்யம் அல்லாமல் வேறு என்ன ?
நீங்களும், ஒரு பாதிரியும், குற்றம் குற்றமே என்னும் பத்திரிக்கையின் முக்கியப் புள்ளியும் சேர்ந்து ஈழத் தமிழர்களுக்கு எதிராக செய்த சதிகள் ஒன்றா இரண்டா ?


ஒரு பக்கம் போலிப் பாதிரி பிரபாகரனை விட ஈழத் தமிழர்களுக்காக பாடுபட்டவன் நான்தான் என்று கட்டுரை எழுதுவதும், இன்னொரு பக்கம் அந்தப் பத்திரிக்கை அட்டையில் பிரபாகரன் படத்தைப் போட்டு கொள்ளை லாபம் சம்பாதிப்பதும், அதற்கு நேர் எதிராக நீங்கள், தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்கள் மீது வழக்கு மேல் வழக்காகப் போட்டு, செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் அவர்களை அடைத்து வைத்து வதைப்பதும், உங்கள் மூவர் கூட்டணி எவ்வளவு தந்திரமானது என்பதை விளக்குகிறது.

சமீபத்தில், புகழேந்தி என்ற வழக்கறிஞர், டி3டி டெக்னாலஜிஸ் போலவே, அவுட்சார் டெக்னாலஜிஸ் என்ற புதிய நிறுவனத்தின் மூலம், சட்டவிரோத ஒட்டுக் கேட்பு நடைபெறுகிறது என்றும், அந்த ஒட்டுக் கேட்பை செய்வது நீங்கள்தான் என்றும், உடனடியாக அந்த நிறுவனத்தின் மேலும், உங்கள் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். அவர் மீது வழக்கு தொடரப்போகிறேன் என்று பத்திரிக்கையாளர்களிடம் பேசினீர்கள். உங்கள் சார்பில், ஒரு வக்கீல் நோட்டீஸ் தம்புச் செட்டித் தெருவின் ஒரு அலுவலகத்தில் தயார் செய்யப் பட்டது. ஆனால், இது வரை புகழேந்தியின் புகார் மீதும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. நீங்கள் புகழேந்தி மீது எந்த ஒரு வழக்கும் போடவில்லை.

உங்களை இப்படி அதிகார பீடத்தின் உச்சியில் அமரவைத்துள்ள கருணாநிதிக்காவது தாங்கள் விசுவாசமாக இருக்கிறீர்களா ? அதுவும் இல்லை. உங்களின் விசுவாசியான திருச்சி எஸ்பி கலியமூர்த்தி மூலமாக, போயஸ் கார்டனுக்கும் தாங்கள் தகவல் சொல்கிறீர்கள் என்பது கலியமூர்த்தியோடு பணியாற்றுபவர்களும் போயஸ் கார்டன் வட்டாரங்களும் சொல்லும் தகவல்.

கருணாநிதிக்கும் விசுவாசமாக இல்லை. ஜெயலலிதாவுக்கும் விசுவாசமாக இல்லை. உங்கள் சமூகத்துக்காவது விசுவாசமாக இருக்கிறீர்களா என்றால் அதுவும் இல்லை. நீங்கள் உளவுத்துறை ஐஜியாக ஆன பின்புதான் இஸ்லாமியர்கள் மீது, ஏராளமான பொய் வழக்குகள் போடப்பட்டன என்று இஸ்லாமிய தோழர்கள் சொல்கிறார்கள்.
தமிழகத்தில் எவ்வளவோ ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கையில், உங்கள் மீது மட்டும் ஏன் இவ்வளவு புகார்கள் ஜாபர் சேட் அவர்களே ? நெருப்பில்லாமல் புகையாது என்ற உண்மை என்று நீங்கள் அறியாததா ?

உங்களோடு பணியாற்றுபவர்களே உங்களை வெறுக்கிறார்கள் என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள் ஜாபர் சேட் அவர்களே. டி3டி டெக்னாலஜிஸ் பற்றியும், அவுட்சார் டெக்னாலஜிஸ் பற்றியும் வெளி உலகிற்கு சொன்னது உங்களோடு இருப்பவர்கள்தான் என்பதை தாங்கள் அறிவீர்களா ?

உங்களைப் பற்றியும், உங்கள் தொடர்புகள் பற்றியும் இன்னும் எங்களுக்கு தகவல்கள் சொல்லிக் கொண்டிருப்பது உங்கள் உடன் இருப்பவர்கள் என்பது தங்களுக்கு தெரியுமா ?
கருணாநிதியிடம் வேலைப் பார்த்துக் கொண்டு, கருணாநிதியையே நீங்கள் உளவு பார்க்கையில், உங்களிடம் வேலை பார்த்துக் கொண்டு, உங்களை உளவு பார்க்க ஒருவன் இல்லாமலா போய் விடுவான் ? வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு ஜாபர் சேட் அவர்களே.


நீங்கள் கருணாநிதிக்கும் விசுவாசமாக இருக்க வேண்டாம். ஜெயலலிதாவுக்கும் விசுவாசமாக இருக்க வேண்டாம். இஸ்லாமியர்களுக்கும் விசுவாசமாக இருக்க வேண்டாம். 14.12.1986 அன்று ஐபிஎஸ் அதிகாரியாக பதவி ஏற்கையில் உறுதி மொழி ஏற்றுக் கொண்டீர்களே… … இந்திய அரசியல் அமைப்பின் பால், உண்மையாகவும், உள்ளார்ந்த பற்றுடனும் என்று. அந்த அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும், நீங்கள் வாங்கும் சம்பளத்திற்காக, உழைத்து உழைத்து தன் வியர்வையால் வரியாகக் கட்டுகிறானே, சாமான்யன்…. … அவனுக்கும் விசுவாசமாக இருங்கள் என்பதுதான் உனது வேண்டுகோள்.


நன்றி நம்தினமதி நாளேடு
சவுக்கு

Friday, April 16, 2010

யானும் இட்ட தீ மூள்கமூள்கவே





முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே




கருணாநிதியின் துரோகங்களுக்கு அளவேயில்லாமல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. உலகத் தமிழர் வரலாற்றிலேயே, மிகப் பெரும் அவமானச்சின்னமாக கருணாநிதி உருவெடுத்து இருக்கிறார். ஆனால் வெட்கமேயில்லாமல் தன்னை இன்னும் தமிழினத் தலைவன் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்

முதல் துரோகம்.

செங்கல்பட்டில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் ஒன்று உள்ளது. பெயருக்குத்தான் முகாமே தவிர, அது ஒரு கொடுஞ்சிறை. இந்தியத் தமிழர்களையும், ஈழத் தமிழர்களையும், கொடுமைக்கு ஆளாக்குவதற்காகவே, தமிழ்நாட்டிலுள்ள ஒரு காவல்துறை பிரிவுதான் க்யூ ப்ரான்ச். ஈழத் தமிழர்கள் மீது ஏராளமான பொய் வழக்குகளைப் போட்டு, அந்த வழக்குகளில் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யாமல் அவர்களை செங்கல்பட்டு கொடுஞ்சிறையில் அடைத்து வேடிக்கை பார்க்கும் க்யூ பிரிவு காவல்துறையின் தலைவர் கருணாநிதியே.




செங்கல்பட்டிலுள்ள ஈழ ஏதிலிகள் தங்களை வேறு முகாம்களுக்கு மாற்றுங்கள் என்றும், வழக்குகளில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யுங்கள் என்றும் உண்ணாவிரதம் இருந்தனர். இவ்வாறு அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்தவர்களை, பிப்ரவரி மாதத்தில் 150 காவல்துறையினரை விட்டு, கடுமையாக தாக்கி, அவர்கள் மீது பொய் வழக்கும் போட்டு, சிறையில் அடைத்தவர், தமிழினத் தலைவர் கருணாநிதி.


இரண்டாவது துரோகம்

அடுத்த நிகழ்வு நளினி தொடர்பானது. சிறை விதிகளின் படி, ஆண்டுதோறும், பத்தாண்டுகள் சிறைத் தண்டனை முடித்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக ஆலோசனைக் குழுமம் அமைக்கப் பட வேண்டும். ஆனால் நளினி விஷயத்தில் 2006ம் ஆண்டுக்குப் பிறகு ஆலோசனைக் குழுமம் அமைக்கப் படவேயில்லை. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு வேறு வழியில்லாமல் 2009ல் ஆலோசனைக் குழுமம் அமைக்கப் பட்டது.

இக்குழுமத்தில் உள்ள ஏறத்தாழ அனைவருமே, நளினி முன் விடுதலைக்கு தகுதியானவர் என்று அறிக்கை அளித்து விட்டனர். குறிப்பாக நன்னடத்தை அதிகாரி, 31.07.2009 நாளிட்ட தனது அறிக்கையில் நளினி விடுதலைக்குப் பிறகு ராயப்பேட்டையில் உள்ள தனது தாயாரோடும், தம்பியோடும் வசிக்கப் போகிறார். அவர் அவ்வாறு வசிப்பதால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது, எனவே நளினி முன் விடுதலைக்கு பரிந்துரை செய்வதாக தனது அறிக்கையில் கூறியுள்ளார். இந்த அதிகாரியை மிரட்டி வேறு வகையில் அறிக்கை கொடுக்க வைக்க இயலாத கருணாநிதி நளினியை விடுதலை செய்யாமல் இருக்க வேறு ஒரு தந்திரத்தை கையாண்டார்.






அது என்னவென்றால், திடீரென்று 19.08.2009 அன்று சிறை விதிகளில் ஒரு புதிய திருத்தத்தை வெளியிட்டார். அத்திருத்தத்தின் படி, ஒரு சிறைக் கைதியை முன் விடுதலை செய்வது தொடர்பாக அரசு, எந்த அதிகாரியிடமோ, எந்த நபரிடமோ அறிக்கை பெற்று விடுதலை தொடர்பான முடிவை எடுக்கலாம். எளிமையாகக் கூறினால், நளினியை விடுதலை செய்யலாமா கூடாதா என்பது குறித்து, கருத்துக் கூறும்படி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன், சுதர்சனம், ஞானசேகரன் போன்றோரிடமோ, அல்லது, கோபாலபுரத்தில் கொய்யாப் பழம் விற்பவரிடமோ, நளினியை விடுதலை செய்யலாமா கூடாதா என்று அறிக்கை கேட்கலாம்.




தன்னுடைய ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காகவும், தன்னுடைய பிள்ளைகள் மற்றும் பேரக் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காகவும், தன்னுடையதும், தமிழர்களுடைய மானத்தையும், காங்கிரஸ் காலடியில் அடமானம் வைத்துள்ளார் கருணாநிதி.

மூன்றாவது துரோகம்

நேற்று (வெள்ளி) தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அவர்கள் சிகிச்சை எடுக்கும் பொருட்டு, இந்தியாவுக்கு முறையான விசா பெற்ற பின் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.




80 வயதாகி படுத்த படுக்கையாக உள்ளவர் அவர். பக்கவாத நோயினால் பாதிக்கப் பட்டுள்ளார். சென்னை விமானநிலையத்தில் வந்து இறங்கிய அவரை இந்தியாவிற்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது காவல்துறை. இது மத்திய அரசு முடிவாயிற்றே. இதற்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழக்கூடும். கருணாநிதியின் கண்ணசைவு இல்லாமல், தமிழ்நாட்டில் ஒருவன் சிறுநீர் கூட கழிக்க முடியாது என்பது யதார்த்தம்.




விமான நிலையத்திற்குச் சென்று அவரைக் காண முயற்சி எடுத்த அய்யா பழ.நெடுமாறன் மற்றும், வைகோ ஆகிய இருவரையும், கருணாநிதியின் காவல்துறை கடுமையாக பிடித்துத் தள்ளி வதை செய்திருக்கிறது. இருந்தும், தள்ளு முள்ளோடு விமான நிலைய பார்வையாளர் பகுதி வரை சென்றவர்களை, தேசியத் தலைவரின் தாயாரை கடைசி வரை காண முடியாமலேயே சென்று விட்டனர். இதைக் கண்டித்து பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்த சம்பவங்கள் அத்தனைக்கும் கருணாநிதியே காரணம் என்று கூறியிருக்கிறார்.





இத்தனை துரோகங்கள் இழைத்தும், இத்தனை தாய்மார்களின் வயிற்றெரிச்சலையும், சாபங்களையும் பெற்று, சக்கர நாற்காலியில் ஒரு புழுவைப் போல, நகர்ந்து வரும் கருணாநிதியை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது. ஏசுவை காட்டிக் கொடுத்த யூதாசை விட, மோசமான ஒரு துரோகியாகவே கருணாநிதி வரலாற்றில் பதிவு செய்யப் படுவார்.



சவுக்கு

Tuesday, April 13, 2010

லஞ்ச ஒழிப்புத் துறையில் நூதன ஊழல். பகீர் குற்றச் சாட்டு


தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் உள்ள ஊழல்களைக் களையவும், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், முறைகேடுகளை கண்டறியவும் ஏற்படுத்தப் பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே, நூதனமாக முறையில் ஊழல் நடைபெற்று வருவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஊழல், அதிகார மட்டத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்தே நடக்கிறது என்பதும், ஒரு வகையில் சட்டபூர்வமான ஊழலாக இது நடைபெற்று வருகிறது என்ற தகவலும் அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது.

அரசு ஊழியர்கள் அலுவலக நிமித்தமாக பயணம் மேற்கொள்கையில் அவர்களுக்கு பயணப்படி வழங்கப் படுவது வழக்கம். ஆனால் எந்தவிதமான பயணமும் மேற்கொள்ளாமலேயே, ஆண்டுதோறும் 1.3 கோடிக்கும் மேல், லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர்களுக்கு பயணப்படியாக, அதிகாரிகள் ஒத்துழைப்போடு வழங்கப் பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2007-2008 ஆண்டுக்கு, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு 1,31,60,000 ரூபாய் பயணப்படி கணக்கில் வழங்கப் பட்டது. இந்தப் பயணப்படித் தொகை பெரும்பாலும், எவ்வித பயணமும் மேற்கொள்ளாமலேயே இத்துறை ஊழியர்களால் பெறப்படுகிறது என்று கூறப் படுகிறது. அலுவல் சார்ந்த பயணம் என்றால், எந்த வழக்கு குறித்து பயணம் மேற்கொள்கிறார்கள் என்ற விபரம் பயணம் மேற்கொள்ளும் முன் அனுமதி பெறுகையில் குறிப்பிட வேண்டும்.

ஆனால், அனைத்து பயணப்பட்டியல்களிலும், “ரகசிய அலுவல்” என்ற காரணத்தைக் எழுதி, பயணப் பட்டியல்கள் தயாரிக்கப் படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
உதாரணத்திற்கு, லஞ்ச ஒழிப்புத் துறை தலைமையகத்தில் நிர்வாக டிஎஸ்பியாக பணியாற்றும் கிருஷ்ணாராவ் என்பவருக்கு விசாரிப்பதற்காக எந்த வழக்குகளும் வழங்கப் படவில்லை.

இவருடைய பணி, தலைமையகத்தில் நிர்வாகப் பணிகளை பார்ப்பது மட்டுமே. ஆனால், இவர், வழக்கு விசாரணை தொடர்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, பயணம் மேற்கொண்டதாக மாதந்தோறும் பயணப் பட்டியல் தயாரித்து, பணம் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரைப் போன்றே, தலைமையகத்தில் பணியாற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், நிர்வாக ஆய்வாளர், சுதாகர் போன்றோரும், இவ்வாறான போலிப் பயணப் பட்டியல் தயாரித்து மாதந்தோறும் பணம் பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


லஞ்ச ஒழிப்புத் துறையின் கட்டுப் பாட்டு அறையில், தொலைபேசி ஆப்பரேட்டர்களாக பணியாற்றும், காவலர்களும், டிஜிபி, ஐஜி, எஸ்.பிக்கள் ஆகியோருக்கு, “வெயிட்டிங் பிசி“ க்களாக பணியாற்றும் காவலர்களுக்கு சென்னையை விட்டு வேறு எங்கும் செல்ல வேண்டிய பணிகள் கிடையாது. ஆனால், இவர்களும், மாதந்தோறும் போலிப் பயணப் பட்டியல் தயாரித்து பணம் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு போலி பயணப் பட்டியல் தயாரித்து பணம் பெறுவது, அரசு உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலும் தெரிந்தே நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டம் ஒழுங்கு போன்ற காவல் துறையின் மற்ற பிரிவுகளில், ஏராளமான மேல் வருமானம் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்.

அதனால், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பணியாளர்களை விருப்பத்தோடு வர வைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறான போலி பயணப்பட்டியல்கள் தயாரிப்பது சட்டபூர்வமாகவே நடைபெற்று வருவதாக, காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


ஆனாலும், மற்ற அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை என்ற பெயரில் பல்வேறு முறைகேடுகளைக் கண்டறியும் லஞ்ச ஒழிப்புத் துறை தன்னுடைய துறையிலேயே, இது போன்ற போலி பயணப்பட்டியல் தயாரிக்கும் முறைகேடுகளில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயம் என்று லஞ்ச ஒழிப்புத் துறையால் பாதிக்கப் பட்ட அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இத்துறைக்கு காவல்துறையினர் விருப்பத்தோடு வர வேண்டும் என்பதற்காக, மக்களின் வரிப்பணம் 1.31 கோடி ரூபாயை, சட்டபூர்வமான லஞ்சமாக இத்துறை ஊழியர்களுக்கு வழங்குவது முறையா என்றும் கேள்வி எழுகிறது. மேலும், மற்ற துறை ஊழியர்களுக்கு இல்லாத சலுகையாக லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர்களுக்கு, அடிப்படை ஊதியத்தில் 15% சிறப்பு ஊதியமாக வழங்கப் படும் நிலையில், இந்தப் பயணப்படி மோசடி எதற்கு என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.

போலிப் பயணப்பட்டியல் தயாரிப்பது ஒரு வகை மோசடி என்றால், அனைத்து காவல்துறை பிரிவுகளிலும் நடைபெறும், “ரகசிய நிதி“ தொடர்பான மோசடிக்கு லஞ்ச ஒழிப்புத் துறையும் விதிவிலக்கல்ல.


ஆண்டு தோறும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, ரகசிய நிதியாக ரூபாய் 45 லட்சம் வழங்கப் படுகிறது. காவல்துறையினருக்கு ரகசிய நிதியாக வழங்கப் படும் பணம், ஊழலைப் பற்றி ரகசியமாக தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானமாக வழங்கப் படுவதற்காக அரசால் கொடுக்கப் படும் நிதியாகும்.

ஆனால், இந்நிதியில் சல்லிக் காசு கூட, தகவல் அளிப்பவர்களுக்கு வழங்கப் படுவதில்லை என்றும், இந்நிதி, லஞ்ச ஒழிப்புத் துறையின் கீழ்மட்ட ஊழியரிலிருந்து இயக்குநர் வரை பங்கு பிரித்துக் கொள்ளப் படுகிறது என்பது அடுத்த அதிர்ச்சித் தகவல்.


தொடக்கத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றும் காவல்துறையினருக்கு மட்டும் இத்தொகை பங்கிடப்பட்டு வழங்கப் பட்டு வந்தது. அமைச்சுப் பணியாளர்கள் இது தொடர்பாக தங்கள் புலம்பலை வெளியிடத் தொடங்கியதும், இவர்கள் வாயை மூட, கடந்த 8 ஆண்டுகளாக அவர்களுக்கும் பங்கு வழங்கப் பட்டு வருகிறது என்று தகவல்கள் கூறுகின்றன.
மாதந்தோறும் எஸ்.பி அந்தஸ்திலான அதிகாரிக்கு ரூபாய்.5000 வழங்கப் படுவதாகவும், டிஎஸ்பிக்கு 1500 ரூபாய் என்றும், இன்ஸ்பெக்டர்களுக்கு, 1000 ரூபாய் என்றும், காவலர்கள் தலைமைக் காவலர்களுக்கு 500 முதல் 750 ரூபாய் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அமைச்சப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 100 முதல் 500 வரை வழங்கப் படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி ஆண்டு இறுதியான மார்ச் மாதத்தில், இந்த ரகசிய நிதி மொத்தமாக எடுக்கப் பட்டு, இத்துறை பணியாளர்களுக்கு மொத்தமாக பகிர்ந்தளிக்கப் படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, மாதந்தோறும் வழங்கப் படும் தொகை, மார்ச் மாதத்தில் மட்டும் இரட்டிப்பாக வழங்கப் படுகிறது என்றும் தெரிகிறது.

அரசு அலுவலகங்களில் துறைத் தலைவருக்கு மட்டுமே தனது அறையில் குளிர்சாதன வசதி செய்து கொள்ளும் உரிமை உண்டு. ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிகாரிகள் அனைவர் அறைகளிலும் ரகசிய நிதியிலிருந்து வாங்கப் பட்ட குளிர்சாதனப் பெட்டிகள் பொருத்தப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, குளிர்சாதன வசதிக்கு தகுதியில்லாத, சட்ட ஆலோசகர், மேற்கு சரக எஸ்பி லலிதா லட்சுமி, மத்திய சரக எஸ்பி லட்சுமி, மேற்கு சரக எஸ்பி ஏ.டி.துரைக்குமார், சிறப்பு புலனாய்வுக் குழு எஸ்பி ஜோஷி நிர்மல், சிறப்பு அதிகாரி நல்லமா நாயுடு, இணை இயக்குநர் சுனில் குமார், ஐஜி துக்கையாண்டி, ஆகிய அனைவர் அறையிலும், “ரகசிய நிதி“ யிலிருந்து வாங்கப் பட்ட குளிர்சாதன பெட்டிகள் பொருத்தப் பட்டு அதற்காக மின் கட்டணம் அரசுக் கணக்கில் செலுத்தப் படுவதாகவும் தெரிகிறது.

இன்று சென்னை மாநகரில் சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக இருக்கும் வி.ஏ.ரவிக்குமார் 2002ம் ஆண்டில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பொழுது, அவரது அலுவலக அறையில் அவர் நண்பர் வாங்கிக் கொடுத்த ஏ.சி மெஷினை பொருத்தியிருந்தார். இது தொடர்பாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் (DE 126/2002/POL/HQ) அரசு அனுமதி பெறாமல் ஏ.சி மெஷின் பொருத்தி அரசு செலவில் மின் கட்டணம் செலுத்தியதால், கூடுதலாக ஏற்பட்ட மின் கட்டணத்தை ரவிக்குமாரின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்ய பரிந்துரை செய்தது இதே லஞ்ச ஒழிப்புத் துறைதான். இதைத்தான் “மாமியர் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி“ என்கிறார்களோ ?

இவ்வாறான நூதன ஊழலில் ஈடுபடும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடிவாளம் கட்டுவது யார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் ஊசலாடுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையை நினைத்தால் லஞ்சம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட புதுக்கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

“வாங்கினேன். கைது செய்தார்கள்
கொடுத்தேன் விடுதலை செய்தார்கள். “



நன்றி நம்தினமதி நாளேடு
சவுக்கு

Monday, April 12, 2010

ஐஏஎஸ், ஐபிஎஸ் என்றால் கண்டு கொள்ளாத லஞ்ச ஒழிப்புத் துறை


லஞ்ச ஒழிப்புத் துறை லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை மறைந்திருந்து, பாய்ந்து சென்று கையும் களவுமாக கைது செய்தது என்று செய்திகளில் படித்திருப்பீர்கள். ஆனால், இப்படி கையும் களவுமாக கைது செய்யப் படுபவர்களில், கீழ்மட்ட அரசு ஊழியர்கள்தான் அதிக அளவில் மாட்டிக் கொள்கிறார்கள் உதாரணத்திற்கு, கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர், காவலர்கள், தலைமைக் காவலர்கள், இளநிலை உதவியாளர்கள், மின்சார வாரிய பில் கலெக்டர்கள் போன்ற பதவிகளில் உள்ளவர்கள் மீதுதான் அதிக அளவில் வழக்குகள் போடப்பட்டு வருகிறது.


ஆனால், உயர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்வதில், லஞ்ச ஒழிப்புத் துறை பாரபட்சமான நடந்து கொள்கிறது என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கீழ்மட்ட அரசு ஊழியர்களின் மீது வழக்கு தொடர்கையில், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கே அதிகாரம் உள்ள நிலையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் மீது வழக்கு தொடர்கையில் தலைமைச் செயலாளர் தலைமையிலான மூன்று நபர் கொண்ட குழு மட்டுமே எவ்வித விசாரணைக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று விதி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், ஒரு புகாரின் மீது, ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரியின் மீது விசாரணை தொடங்க லஞ்ச ஒழிப்புத் துறை அனுமதி கேட்கும் பட்சத்தில், தலைமைச் செயலாளர் தலைமையிலான மூன்று நபர் குழு அனுமதி அளிக்கும் முன்னரே சம்மந்தப்பட்ட நபர், தலைமைச் செயலகத்திலேயே இந்த அனுமதி கிடைக்காமல் செய்து விடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான மூன்று நபர் குழு லஞ்சஒழிப்புத் துறை விசாரணைக்கு அனுமதி அளிக்கும் வழக்கம், வினீத் நாராயண் என்ற வழக்கில் வழங்கப் பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பத்து ஆண்டுகளாக ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளில், ஒரு வழக்கில் கூட துறை ரீதியாக கூட, ஒரு அதிகாரிக்கு கூட தண்டனை வழங்கப் படவில்லை என்பதே, இந்த உயர் அதிகாரிகள் எப்படி செல்வாக்காக உள்ளனர் என்பதை காட்டுகிறது. உதாரணத்திற்கு லஞ்ச ஒழிப்புத் துறை ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மீது தொடர்ந்த வழக்குகள் சில

DE 147/2008/POL/HQ
சி.கே.காந்திராஜன் ஐபிஎஸ்

DE 136/2006/TPT/HQ
பி.சண்முகம் ஐஏஎஸ்

PE 81/2001/MISC/HQ
உஜகார் சிங், ஐஏஎஸ்

DE 269/2004/POL/HQ
எஸ்.ராஜேந்திரன், ஐபிஎஸ்

PE 62/2003/PUB/HQ
பி.சிவசங்கரன், ஐஏஎஸ்

DE 160/2006/POL/HQ
பி.சிவனாண்டி, ஐபிஎஸ்

PE 41/2002/POL/HQ
கே.என்.சத்தியமூர்த்தி, ஐபிஎஸ்

DE 137/2001/POL/VL
அறிவுசெல்வம் ஐபிஎஸ்

DE 126/2002/POL/HQ
வீ.ஏ.ரவிக்குமார் ஐபிஎஸ்

DE 90/2002/POL/HQ
கே.சண்முகவேல் ஐபிஎஸ்

RC 63/2003/POL/HQ
முத்துக்கருப்பன் ஐபிஎஸ்

DE 145/2008/POL/HQ
ஐ.ராஜா ஐபிஎஸ்

DE 45/88/POL/HQ
ஜி.திலகவதி, ஐபிஎஸ்

DE 102/2004/POL/HQ
ஜி.திலகவதி, ஐபிஎஸ்

DE 52/2001/PUB/HQ
எஸ் மாலதி ஐஏஎஸ்
சி.பி.சிங், ஐஏஎஸ்
சாந்தா ஷீலா நாயர், ஐஏஎஸ்
ஜோதி ஜகராஜன் ஐஏஎஸ்

DE 24/2007/SUGAR/HQ
ஆர்.எஸ்.கண்ணா ஐஏஎஸ்

DE 118/2001/PUB/HQ
பி.ஆர்.பிந்துமாதவன், ஐஏஎஸ்

RC 63/2001/SUGAR/HQ
செல்வம் ஐஏஎஸ்

RC 64/2001/SUGAR/HQ
பாண்டியன் ஐஏஎஸ்

RC 65/2001/SUGAR/HQ
சுகுமாறன் ஐஏஎஸ்

PE 87/2006/HD/HQ
சுதீப் ஜெயின் ஐஏஎஸ்

RC 34/96/POL/HQ
ஆறுமுகம் ஐபிஎஸ்

DE 158/2006/POL/HQ
ஆறுமுகம் ஐபிஎஸ்

மேற்கூறிய 23 வழக்குகளும் ஒரு சிறு துளி மட்டுமே. இதுபோல இன்னும் நூற்றுக்கணக்கான வழக்குகள் லஞ்ச ஒழிப்புத் துறையால் உயர் அதிகாரிகளுக்கு எதிராக தொடரப்பட்டிருந்தாலும், இந்த அதிகாரிகள், அதிகார மட்டத்தில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்காலும், அரசியல் செல்வாக்காலும், மேற்கூறிய அனைத்து வழக்குகளையும் எவ்வித நடவடிக்கையும் இன்றி முடித்து விடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது போல உயர் அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கையில் சுணக்கம் இருந்தாலும், தங்களுக்கு வேண்டாத அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை முடுக்கி விடுவதில், அரசும் அதிகாரிகளும் தீவிரமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதாரணத்திற்கு, ஏ.கே.விஸ்வநாதன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் காவல்துறை மோதலில் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அபிடவிட் தாக்கல் செய்ததை அடுத்து, ஒரே நாளில் விஸ்வநாதனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு மூன்று நபர் குழு முடிவெடுத்து, ஆணையிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்தர் பால் சிங் ஆகிய இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள், லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றுகையிலேயே, குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு உரிய மதிப்பெண் பெறாத தங்கள் பிள்ளைகளுக்கு, அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் சீட் பெற்றதாக பேராசிரியர் கல்யாணி தொடர்ந்த புகாரை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்துக் கொண்டிருக்கையிலேயே, தற்போதைய தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, லஞ்ச ஒழிப்புத துறை இயக்குநர் உபாத்யாய்க்கு தொலைபேசியில் இந்த விசாரணையைத் தொடர வேண்டாம் என்று உத்தரவிட்டது உரையாடலாக பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இதுபோல, ராதாகிருஷ்ணன் மீது விசாரணையை நடத்தாமலும், விஸ்வநாதன் மீது, உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டதும், லஞ்ச ஒழிப்புத் துறையின் பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு ஒரு உதாரணம் என்று விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் 2005-06ம் ஆண்டில், மொத்தம் 750 வழக்குகளைத் தொடர்ந்த லஞ்ச ஒழிப்புத் துறை, அவற்றுள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வெறும் 6 வழக்குகளையே தொடர்ந்துள்ளது இதே போல 2006-07ம் ஆண்டில், தொடரப்பட்ட மொத்தம் 488 வழக்குகளில் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வெறும் 19 வழக்குகள். அதே போல 2007-08ம் ஆண்டில் மொத்தம் 588 வழக்குகள். இவற்றுள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வெறும் 15 வழக்குகள் மட்டுமே என்று, லஞ்ச ஒழிப்புத் துறையின் இணையத் தளமே தெரிவிக்கிறது.

கீழ்நிலை ஊழியர்கள் மட்டும்தான் லஞ்சம் வாங்குகிறார்களா ? உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது இல்லையா ? பிறகு கீழ்நிலை ஊழியர்கள் மீது மட்டும் ஏன் இந்த பாரபட்சமான நடவடிக்கை என்று பொதுமக்கள் எழுப்பும் கேள்விக்கு, லஞ்ச ஒழிப்புத் துறைதான் பதில் சொல்ல வேண்டும்.

சவுக்கு


நன்றி நம்தினமதி நாளேடு

Saturday, April 10, 2010

காங்கிரஸ் கட்சியை விஞ்சும் தமிழக காவல்துறை




தமிழக காவல்துறைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா ? இருக்கிறது. கோஷ்டிகளை வளர்த்து மோதிக்கொள்வதில், தமிழக காங்கிரஸ் கட்சியை விஞ்ச ஒருவரும் கிடையாது. தற்போது காங்கிரஸ் கட்சியையும் விஞ்சும் வகையில், தமிழக காவல்துறையில் கோஷ்டி மோதல்கள் தலைவிரித்து ஆடுகின்றன. இந்த கோஷ்டி மோதலில் பலிகடா சட்டம் ஒழுங்குதான்.


தமிழக காவல்துறையில் கோஷ்டி மோதல் உச்ச கட்டத்தை அடைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த காவல்துறை வழக்கறிஞர்கள் மோதலைத் தொடர்ந்து, காவல்துறையில் ஒரு கட்டுக் கோப்பான ஒற்றுமை உணர்வு காணப்பட்டது.

ஆனால் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்துக்குச் சென்று, மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதும், இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா மற்றும் பானுமதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. இவ்வழக்கில் அரசு மற்றும் கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் சார்பாகவும், உச்ச நீதிமன்ற் வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஆஜரானார். இவ்வழக்கிற்காக ராஜீவ் தவானுக்கு ஒரு நாள் விவாதத்திற்கு ரூ.ஐந்து லட்சம் கட்டணமாக அரசு செலவில் வழங்கப் பட்டது.




இவ்வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில், சென்னை மாநகர கூடுதல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன், மத்திய அமைச்சர் அழகிரியின் சிறப்புச் செயலராக நியமிக்கப் படுவதற்காக டெல்லி உறைவிட ஆணையராக மாற்றப் பட்டார். இந்நியமனத்தை பிரதம மந்திரி தலைமையிலான குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த ஒப்புதல் அளிக்கும் முன்பு, பிரதமருக்கு, ஏ.கே.விஸ்வநாதன் மீதான ஊழல் புகார்கள் பற்றிய ஆவணங்களும் ஆதாரங்களும் பிரதமர் பார்வைக்கு வைக்கப் பட்டதைத் தொடர்ந்து பிரதமர், அழகிரியின் சிறப்புச் செயலராக ஏ.கே.விஸ்வநாதனை நியமிப்பதற்கு தடை விதித்தார். பிரதமர் பார்வைக்கு இந்த ஊழல் தொடர்பான ஆதாராங்கள் கிடைத்ததற்கு, கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணனும், உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட்டும் காரணம் என்று ஏ.கே.விஸ்வநாதன் கருதினார்.

இதனால் ஆத்திரமடைந்த ஏ.கே.விஸ்வநாதன் வழக்கறிஞர் காவல்துறையினர் மோதல் தொடர்பான வழக்கில் அபிடவிட் தாக்கல் செய்கையில் தடியடி நடத்த உத்தரவிட்டது ராதாகிருஷ்ணன்தான், அவர் அவ்வாறு உத்தரவிடவில்லையெனில், அன்று கலவரமே நடைபெற்றிருக்காது என்று அந்த அபிடவிட்டில் தெரிவித்தார்.




ஏ.கே.விஸ்வநாததின் இந்த அபிடவிட்டால், ஒற்றுமையாக இருந்த காவல்துறை கூடாரம் கலக்கமடைய ஆரம்பித்தது. இந்த அபிடவிட்டால், ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணனும், ஜாபர்சேட்டும், உள்துறை செயலாளர் மாலதிக்கு நெருக்கடி கொடுத்து, ஏ.கே.விஸ்வநாதன் மீது, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை அடுத்து, ஏ.கே.விஸ்வநாதன் ஒரு வருட விடுப்பில் சென்றார். இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நான்கு காவல்துறை அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது.




இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மீண்டும் ஒரு அபிடவிட் தாக்கல் செய்த ஏ.கே.விஸ்வநாதன், அந்த அபிடவிட்டில் தன் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு காரணமே ராதாகிருஷ்ணன் தான் என்றும், ராதாகிருஷ்ணனை பாதுகாக்க பல செய்திகள் வேலை செய்கின்றன என்றும், ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அபிடவிட் தாக்கல் செய்தால், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை வரும் என்று அதிகாரிகளை மிரட்டுவதற்காகத்தான் தன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இது தவிர, லத்திக்கா சரணை காவல்துறை தலைமை இயக்குநராக தமிழக அரசு நியமித்துள்ளது, பல பேரின் புருவத்தை உயர்த்தியுள்ளது தவிரவும் பல பேரின் மன வருத்தத்துக்கு காரணமாகியுள்ளது. ஏனெனில், 1971ம் ஆண்டு ஐபிஎஸ் தொகுதியை சேர்ந்த கே.பி.ஜெயின் விடுப்பில் சென்றதற்கும் காரணம் சட்டவிரோத தொலைபேசி ஒட்டுக் கேட்பு தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றிவேல் என்ற காவல் உதவி ஆய்வாளர், நடு சாலையில், அமைச்சர்கள் முன்னிலையில் துடி துடிக்க இறந்தது குறித்து, அமைச்சர்களின் செயலிழந்த நிலை குறித்து, தொலைபேசியில் கே.பி.ஜெயின் தனது வருத்தத்தை சிறிது கடுமையான வார்த்தைகளால் பகிர்ந்து கொண்டதாகவும், இந்த உரையாடல் டேப் செய்யப் பட்டு முதல்வருக்கு காண்பிக்கப் பட்டதாகவும், அதனாலேயே, முதல்வர் ஜெயினை விடுப்பில் செல்லச் சொன்னதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும், சமீபத்தில் வெளியான தொலைபேசி ஒட்டுக் கேட்பு பட்டியலில் பல காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் இருந்ததனால் பல காவல்துறை அதிகாரிகள் உளவுத்துறையின் உயர் அதிகாரி மீது ஏக கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

லத்திக்கா சரணை விட பணியில் மூத்த என்.பாலச்சந்திரன், நட்ராஜ், கே.விஜயக்குமார் ஆகிய அதிகாரிகள் இருக்க, செப்டம்பர் 2009ல் டிஜிபி யாக பதவி உயர்வு பெற்ற லத்திக்கா சரணுக்கு டிஜிபி பதவி உயர்வு வழங்கியது பல பேருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நியமனம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று இதை எதிர்த்து, டிஜிபி நட்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய போது, நீதிபதிகள் டி.முருகேசன் மற்றும் சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு, லத்திக்கா சரணின் நியமனம் இந்த ரிட் பெட்டிஷனின் முடிவைப் பொருத்ததே என்று ஆணையிட்டுள்ளனர்.

மேலும், நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்த, உபாத்யாய் தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் சிக்கி, தன் மீதான துறை விசாரணையில் குற்றமற்றவர் என்று விசாரணை அதிகாரி அறிக்கை கொடுத்தும், அவரை விட பணியில் இளையவரான லத்திக்கா சரணுக்கு டிஜிபி பதவி உயர்வு அளித்து விட்டு, உபாத்யாய்க்கு பதவி உயர்வு வழங்காமல் இருப்பது வேறு, நேர்மையான அதிகாரிகள் மத்தியில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் அதிகாரிகளுக்குள் இவ்வாறு பல்வேறு குழுக்களாக பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதால், கீழ் நிலையில் பணியாற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களை கட்டுப் படுத்த உயர் அதிகாரிகள் சரிவர கவனம் செலுத்தாதனால், கீழ் மட்டத்தில் பல்வேறு அதிகாரிகள் கடுமையான தவறுகளை செய்வதாகவும் கூறுகிறார்கள். கடந்த வாரத்தில் மட்டும் பல்வேறு ஊழல் வழக்குகளில் மூன்று ஆய்வாளர்கள் பணி இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத் தகுந்தது.




பணியில் மூத்தவர்கள் இருக்க, லத்திக்கா சரண் போன்ற இளையவர்களுக்கு பதவி உயர்வு அளித்து, விதிகளை மீறியும் வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பாரபட்சம் பார்த்தும் பதவிகளை வழங்குவதால், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே தங்களுக்குள் அடித்துக் கொள்வதால், சமூகத்துக்கே கேடு. என்று விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.



சவுக்கு

Sunday, April 4, 2010

விடுதலை கேட்பது நளினியின் உரிமை, சலுகை அல்ல: கவிஞர் தாமரை









நளினி விடுதலை, அரசியல் சிக்கலும், சட்டச் சிக்கலும் என்ற தலைப்பில், நளினி விடுதலையை பல்வேறு கோணங்களில் அலசும் ஒரு கருத்தரங்கை, கீற்று டாட் காம் இணைய தளம் ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கில் எழுத்தாளர் பூங்குழலி, இதழாளர் அருள் எழிலன், கவிஞர் தாமரை, விடுதலை ராசேந்திரன், வழக்கறிஞர் சுந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.







வழக்கறிஞர் சுந்தரராஜன்




வழக்கறிஞர் சுந்தரராஜன் தனது உரையில் நளினியின் விடுதலை குறித்து மக்களிடம் பரவலான கருத்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், இன்று சிறையில் இருப்பது நளினியாக இருக்கலாம். நாளை இதுவே நம் ஒவ்வொருவருக்கும் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது.









வழக்கறிஞர் சுந்தரராஜன்




ஆகையால் நளினி விடுதலையை, இச்சமூகத்தை பாதிக்கும் ஒரு பிரச்சினையாகவே பார்க்க வேண்டும். இப்பிரச்சினையில் தனக்கு சம்பந்தம் இல்லை என்பது போல, பரந்துபட்ட சமூகம் இருக்கிறது. ஆனால், இந்தப் போக்கை மாற்றுவதற்கான வேலையில் நாம் இறங்க வேண்டும், அதுதான் நளினிக்கு நலம் பயக்கும் என்று கூறினார்.







அருள் எழிலன்




இதழாளர் அருள் எழிலன் பேசுகையில், நளினி விடுதலை குறித்த விவாதங்களின் போது எப்போதுமே ராஜீவ் கொலை மட்டும் தான் பேசுபொருளாக இருக்கிறது.







அருள் எழிலன்






ஆனால் அமைதிப்படையின் அட்டூழியங்கள் வசதியாக மறைக்கப் படுகின்றன. அமைதிப்படையால் பல ஆயிரம் உயிர்கள் பறிக்கப் பட்டதைப் பற்றி யாருமே பேசவில்லை. சாத்தானின் படைகள் என்று அமைதிப்படை வர்ணிக்கப் பட்டதே ? அந்தச் சாத்தான் யார் என்பதை யாரும் பேச முற்படுவதில்லை.



நளினி யாரிடமும் கருணை கேட்கவில்லை. அவரது விடுதலை சட்டம் அவருக்கு வழங்கியுள்ள உரிமை. இது வரை தமிழ்நாட்டில் எத்தனை கொலைகாரர்கள் விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள் ? நளினி மீது மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என்று கூறினார். மேலும் நளினி விடுதலைக்காக ஒரு பெரிய இயக்கம் கட்டப் பட வேண்டும். போராட்டம் ஒன்றே நளினியை விடுதலை செய்யும் என்று கூறினார்.



கவிஞர் தாமரை தனது உரையில், நளினிக்காக நான் கையெழுத்து இயக்கம் நடத்தினேன். சாதாரண மக்கள் கையெழுத்து இட்டால், அது அரசின் கவனத்தை ஈர்க்காதோ என்று முக்கிய நபர்களிடம் கையெழுத்து இட்டேன். இந்த இயக்கத்தை எடுக்கும் முன் இவ்வழக்கு தொடர்பான அவ்வளவு ஆவணங்களையும் விரிவாக படித்தேன். அண்ணா நூற்றாண்டில் கைதிகளை விடுவிக்கப் போகிறார்கள் என்ற காரணத்தால் விரைவாக வாங்கினேன். கனிமொழி மூலமாக முதல்வரைச் சந்திக்க அனுமதி வாங்கி, நான், கவிஞர் க்ருஷாங்கிணி, தியாகு ஆகியோர் கருணாநிதியை சந்தித்தோம்.







கவிஞர் தாமரை






அப்போது கருணாநிதி “எனக்கு நளினியை விடுதலை செய்வதில் ஆட்சேபம் எதுவும் இல்லை. ஆனால் சோனியாவுக்கு ஆட்சேபம் இல்லையா என்பது எனக்குத் தெரியாது. சோனியா சரி என்றால் எனக்கு விடுதலை செய்வதில் தடையேதும் இல்லை“ என்று கூறினார். அப்போது நான் கருணாநிதியிடம் “அய்யா அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161 ன் படி, இது மாநில அரசின் அதிகாரம். நீங்கள் மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டியதில்லை என்றும் எடுத்துக் கூறினேன். ஆனால் அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன.



இதுவரை எந்த மாற்றமும் இல்லை. மத்திய அரசைக் கேட்க வேண்டும், மத்திய அரசைக் கேட்க வேண்டும் என்ற காரணத்தைக் கூறியே 19 ஆண்டுகளாக நளினியை சிறையில் அடைத்துள்ளார்கள்.



முன் விடுதலையை கைதி உரிமையாகக் கோர முடியாது என்று கூறுகிறார்கள். ஆனால், மற்ற கைதிகளைப் போல என்னை சமமாக நடத்து என்பதற்கு அனைத்துக் கைதிகளுக்கும் உரிமை உண்டு. ஆலோசனைக் குழுமம் என்பது ஒரு சடங்கு. விடுதலை செய்ய முடியாது என்பதற்காக அந்தக் குழுமம் கூறியுள்ள காரணங்கள் நகைச்சுவையானவை.



மேலும் நளினி விடுதலைக்கு எதிராக கூறப்படும் மற்றொரு காரணம், நளினி தேசத்திற்கெதிரான குற்றத்தை புரிந்துள்ளார் என்பது. எது தேசத்திற்கெதிரான குற்றம் ?







கவிஞர் தாமரை




1984ம் ஆண்டு, போபாலில் விஷவாயுவைக் கசிய விட்டு ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்ததே யூனியன் கார்பைடு நிறுவனம்…. அது தேசத்திற்கெதிரான குற்றம். அந்தக் குற்றத்திற்கு காரணமான வாரன் ஆண்டர்சனை இன்று வரை கைது செய்யாமல் இருக்கிறதே அரசாங்கம் ? யூனியன் கார்பைடு நிறுவனம், வேறு ஒரு நிறுவனத்தால் வாங்கப் பட்டு அந்த நிறுவனமும் இன்று இந்தியாவில் கால் பதித்துள்ளதே !



அது தேசத்திற்கெதிரான குற்றம் இல்லையா ? இந்தியாவில் அணு விபத்து ஏற்பட்டால், அதற்கான நஷ்ட ஈட்டை அதற்கு காரணமான நிறுவனங்கள் ஏற்க வேண்டாம் என்ற Nuclear Liability Bill கொண்டு வரப்பட்டுள்ளதே. அதற்கு காரணமான மன்மோகன் சிங் தேசத்திற்கெதிரான குற்றத்தை புரியவில்லையா ?



தீவிரவாதம், தீவிரவாதம் என்கிறார்களே. உச்சநீதிமன்றமே ராஜீவ் கொலை வழக்கில், தடா சட்டப் பிரிவில் இக்கொலை வழக்கு விசாரிக்கப் பட்டது செல்லாது என்று தீர்ப்பளித்ததை ஏன் அனைவரும் வசதியாக மறந்து விட்டார்கள் ? தடா சட்டம் இவ்வழக்கில் செல்லாது என்று எப்போது உச்சநீதிமன்றம் முடிவெடுத்ததோ, அப்போதே இவ்வழக்கு சாதாரண, குற்றவியல் நடைமுறைச் சட்டங்களின் கீழ், மீண்டும் விசாரிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், இவ்வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் துர்பாக்கியசாலிகள்.



அதனால், தடா சட்டம் செல்லாது என்றாலும், அச்சட்டத்தின் கீழ் நடைபெற்ற வழக்கு விசாரணை மட்டும் செல்லும் என்று முடிவு செய்யப் பட்டது.





எத்தனை புலம்பினாலும் ராஜீவ் மரணத்தை மாற்ற முடியாது. அதனால், அதை விட்டு நகர்ந்து முன் செல்ல வேண்டும். நளினி படித்துப் பட்டம் பெற்றார் என்ற காரணத்தால் அவரை விடுதலை செய்ய முடியாது என்று கூறுகிறார்களே, நளினி படிக்காமல் சிறையில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தால் மட்டும் விடுதலை செய்திருப்பார்களா ?





இது போன்ற காரணங்களைக் கூறியதற்காக தமிழக அரசு வெட்கப் பட வேண்டும். இந்தக் காரணங்களை நீதிமன்றங்கள் தூக்கி எறியும் நாள் வெகு தொலைவில் இல்லை. இது நளினியின் உரிமை. சோனியா கருணாநிதியின் முடிவு அல்ல என்று பேசினார்.





விடுதலை ராசேந்திரன் பேசுகையில், கையெழுத்து இயக்கம் தொடர்பாக கருணாநிதியை சந்திக்க கனிமொழி நேரம் வாங்கிக் கொடுத்தபோதே அவர் டெல்லியில் மனு கொடுங்கள் என்று தாமரையிடம் கூறியிருக்கிறார். தாமரைதான் சரியாக புரிந்து கொள்ளவில்லை. நம் எல்லோரையும் விட, கனிமொழிக்கு தனது தந்தையை நன்கு புரியும் அல்லவா. அதனால்தான் டெல்லிக்கு மனு கொடுங்கள் என்று கூறியுள்ளார். தாமரைதான் கருணாநிதியை புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பார்ப்பை வளர்த்துக் கொண்டுள்ளார்.







விடுதலை ராசேந்திரன்




நளினி விடுதலை குறித்து, இடதுசாரிகள் கூட குரல் கொடுக்கத் தயாராக இல்லாத போது, பொது மக்கள் கருத்தை நளினிக்கு ஆதரவாக உருவாக்குவது மிக மிக அவசியம். தனி ஈழத்தை அமைத்தே தீருவேன் என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பேசிய செல்வி.ஜெயலலிதா கூட, ஒரு பெண் என்ற வகையில் கூட நளினி விடுதலை குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.





நளினி குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை, என்று கூறுகிறார்களே, நளினி நான்தான் கொன்றேன், என்று கழுத்தில் ஒரு போர்டையா மாட்டிக்கொண்டு சுற்ற முடியும் ?



தேர்தலில் தோற்கும் அரசியல் கட்சிகள், குறைந்த பட்சம் நாங்கள் மக்கள் ஆதரவை இழந்து விட்டோம் என்பதை ஒப்புக் கொள்கிறார்களா ? குறைந்தபட்ச இந்தத் தார்மீக பொறுப்பு கூட இல்லாத பொழுது நளினி மட்டும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது எந்தவகையில் நியாயம்.

ராஜீவ் கொலை வழக்கின் புலனாய்வு அதிகாரி, டி.ஆர்.கார்த்திக்கேயன் தான் எழுதிய புத்தகத்தில் எழுதியுள்ளதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன். அவர் இந்த வழக்கில் தடா சட்டம் மட்டும் இல்லையென்றால் இவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்திருக்க முடியாது என்று கூறியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.





ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப் பட்ட ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப் பட்ட போது, அந்த அறிக்கையில் திமுகவினருக்கு ராஜீவ் கொலை வழக்கில் பங்கு இருக்கிறது என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இதன் காரணமாக அப்பாது பதவியில் இருந்த ஐ.கே.குஜ்ரால் அரசாங்கத்துக்கான ஆதரவை வாபஸ் பெற்றது, இதே காங்கிரஸ் அல்லவா ? அதற்கு பயந்துதான் இன்று தமிழனின் மானத்தை திமுக காங்கிரஸ் காலடியில் அடகு வைத்துள்ளதா ?





இங்கே, நீதிமன்றத் தீர்ப்புகளைக் கூட அரசியல் தீர்மானிக்கும் அவல நிலை நிலவி வருகிறது. ராஜீவ் படுகொலை என்ற பெயரில், எத்தனை தமிழர்களின் உயிர் பறிக்கப் பட்டிருக்கிறது ? கோடியக்கரை சண்முகம் என்பவரை அடித்தே கொன்றிருக்கிறார்களே, ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில். இந்திய அமைதிப் படை வெளியேற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் 12 நாட்கள் தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்து உயிரை விட்டாரே… அவர் உயிரை பறித்தது இந்திய அரசாங்கம் அல்லவா ?







கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு பகுதியினர்




பிரியங்கா நளினியைச் சந்தித்ததால் அவர் கருணை காட்டினார் என்கிறார்களே… அதற்குப் பிறகுதானே, ஈழத்தில் போர் தீவிரமடைந்தது ? மே 21 ராஜீவ் இறந்தார் என்றால் அதற்கு முன் பிரபாகரனை கொலை செய்ய வேண்டும் என்பதற்காகத் தானே, மே 20 முள்ளிவாய்க்காலில், பிரபாகரன் போன்ற ஒரு உடலைக் காட்டினார்கள். நளினியின் விடுதலை நம் அனைவரின் பொறுப்பு. அதற்காக நான் ஒவ்வொருவரும் குரல் கொடுப்போம் என்று பேசினார்.







சவுக்கு

Friday, April 2, 2010

நளினியால் கருணாநிதி உயிருக்கு ஆபத்து ?




என்ன இது ? பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா ? பைத்தியக்காரத்தனமாக தோன்றினாலும், இவ்வாறுதான் கருணாநிதி தலைமையிலான அரசு, நளினி முன் விடுதலை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

19 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, தன்னை முன் விடுதலை செய்யுங்கள் என்று கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் அடிப்படையில் தமிழக அரசு, மிகுந்த தாமதத்துக்குப் பிறகு, சிறை விதிகளின் படி ஒரு ஆலோசனைக் குழுமத்தை அமைத்தது. அந்த ஆலோசனைக் குழுமத்தில் அனைவரும், கருணாநிதியின் அடிவருடிகளாக இருந்தாலும், மனசாட்சி உள்ள சில அதிகாரிகள் நியாயமான அறிக்கையைத் தரவே செய்திருக்கிறார்கள்.

ஆலோசனைக் குழுமத்தின் ஒரு உறுப்பினரான ப்ரோபேஷன் ஆபீசர், விடுதலை ஆன பின் நளினி, தனது, தாயார், தம்பி, மற்றும் தம்பி மனைவி ஆகியோரோடு தங்குவார், அவர் அவ்வாறு தங்குவதால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு எந்த பிரச்சினையும் ஏற்படாது என்பதையே, நளினியை முன் விடுதலை செய்ய பரிந்துரை செய்வதற்கான காரணமாக குறிப்பிட்டிருக்கிறார் அந்த அதிகாரி. இந்த ஆலோசனைக் குழுமத்தின் மற்றொரு உறுப்பினரான உளவியல் ஆலோசகர், எவ்வித தீர்மானமான முடிவையும் வழங்கவில்லை என்று அரசாணை குறிப்பிடுகிறது. உளவியல் ஆலோசகர், நளினி சரியான மனநிலையில் உள்ளாரா இல்லையா என்று மட்டும் தானே அறிக்கை தர இயலும் ? தீர்மானமான முடிவை அவர் எப்படி வழங்க முடியும் ?


ப்ரோபேஷன் ஆபிசர் தனது அறிக்கையை ஜுலை 2009ல் அளித்திருக்கிறார். இந்த அறிக்யை பெற்ற பின்னர் கருணாநிதி, நளினியை விடுதலை செய்தால் இத்தாலிக் கோமகளின் மனது கோணும் என்ற ஐயத்தில் ராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளரிடமிருந்து ஒரு அறிக்கையை பெறுகிறார்.

அந்த அறிக்கையில், கருணாநிதி கூறியபடி அறிக்கை தந்த அந்த ஆய்வாளர், நளினி விடுதலை பெற்ற பின், ராயப்பேட்டையில் உள்ள தனது தாயார் வீட்டில் தங்குவார். அந்தப் பகுதி, அமேரிக்க தூதரகம் மற்றும், மிக மிக முக்கிய பிரமுகர்களும், மிக முக்கிய பிரமுகர்களும் வசிக்கும் பகுதி, ஆதலால், நளினி அங்கு தங்கினால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று தெரிவித்திருக்கிறார்.

அப்பகுதியில் வசிக்கும் மிக மிக முக்கியப் பிரமுகர் யார் ? அமேரிக்க தூதரகத்தின் பின்புறம் தனது பல வீடுகளில் ஒரு வீட்டை வைத்துள்ள கருணாநிதியைத் தவிர வேறு யார் ? கண்டிப்பாக ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டைப் பற்றி கருணாநிதி கவலைப் பட்டிருக்க மாட்டார்.




நளினியை விடுதலை செய்ய மறுக்கும் இந்த அரசாணையின் மற்ற அம்சங்களைப் பார்ப்போம்.
முதல் காரணம், நளினி புரிந்த குற்றம் மிகப் பயங்கரமானது. ராஜீவ் கொலையில் முக்கிய குற்றவாளிகளோடு பழகியது மட்டுமல்லாமல், அக்குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த குற்றத்தை நளினி செய்திருக்கிறார். ராஜீவ் படுகொலைப் பற்றி நளினிக்கு முன்பே தெரியும்.

நளினியில் கணவர், இக்கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றிருக்கிறார்.
ஒரு கொலை பயங்கரமான கொலை வழக்காக இருந்தால், அக்கொலை வழக்கில் தண்டனை பெற்றவர், எந்தக் காலத்திலும் விடுதலை செய்யப் படவே கூடாது என்று எந்தச் சட்டம் சொல்கிறது. திமுக அரசை எதிர்த்து, மதுரை மாமன்றத்தில் அரசியல் செய்தார் என்பதற்காக, மதுரை கவுன்சிலர் லீலாவதியை அவரது தெருவிலேயே வெட்டிக் கொன்றார்களே .. …

அது பயங்கரமான குற்றம் இல்லையா ?

அந்தக் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள், ஏழு ஆண்டுகளுக்குள் விடுதலை பெற்று, இன்று, மதுரையில் அஞ்சாநெஞ்சனின் கரத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்களே ?


உச்சநீதிமன்ற நீதிபதி, கே.டி.தாமஸ் தனது தீர்ப்பில், ராஜீவ் படுகொலை, நளினிக்கு, மே 21 அன்று ஸ்ரீ பெரும்புதூருக்கு கிளம்பும் போதுதான் தெரியும். முருகன் மீது ஏற்பட்ட காதலால், நளினி, இக்குற்றத்தில், தன்னையறியாமல் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார், அவர் வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு இக்குற்றத்தில் பங்கெடுத்தார் என்று சொல்ல இயலாது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுருக்கிறாரே … .. ! இந்த உச்ச நீதிமன்ற நீதிபதி முட்டாளா ?


அடுத்த காரணம், நளினி, சிறையில் கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொண்டார் என்பதால் அவர் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார் என்று பொருளல்ல. இப்போது கூட அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது அடுத்த காரணம்.

குற்றத்தை ஒப்புக் கொண்டு, கருணாநிதி காலில் விழுந்து மன்றாட வேண்டுமா ? நளினியை சிறையில் சந்தித்த பிறகு, டெல்லியில் ஒரு பேட்டியின் போது, ராஜீவ் மகள் பிரியங்கா என்ன கூறினார் தெரியுமா ?


“நளினியை மன்னிக்க வேண்டும் என்றுதான் அவரை சிறையில் சந்திக்கச் சென்றேன். ஆனால், அவரை சந்தித்த பிறகுதான், அவரை மன்னிக்க நான் யார் என்று உணர்ந்தேன். நான் அனுபவித்த கஷ்டங்களை விட நளினி பல மடங்கு கஷ்டத்தை அனுபவித்திருக்கிறார். “ என்று கூறினார்.

பாதிக்கப் பட்ட ராஜீவின் மகளே, நளினியை மன்னிக்கையில், நளினி, தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற கேள்வி எங்கிருந்து வருகிறது. இந்தக் காரணம், கருணாநிதியின் கயமை என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ?


2008ல் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை முடித்த, பல்வேறு கொலை வழக்குகளில் தண்டனை பெற்ற, 1408 கைதிகளை கருணாநிதி விடுவித்தாரே .. … .. அந்த 1408 பேரும், குற்றத்தை ஒப்புக் கொண்டு, கருணாநிதியின் காலில் விழுந்து மன்றாடினார்களா ? வருத்தம் தெரிவித்தார்களா ? என்ன அயோக்கியத்தனமான வாதம் இது ?

அடுத்த காரணம், நளினி விடுதலைக்குப் பின், அவரை தங்கவைத்து பாதுகாக்க, அவரின் தாயார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். நளினியில் தாயாரும், தம்பியும், இவ்வழக்கில் கைது செய்யப் பட்டு பின்பு விடுதலை செய்யப் பட்டவர்கள். அதனால், நளினியை விடுதலை செய்ய இயலாது.




அஞ்சா நெஞ்சன் அழகிரி கூடத்தான், தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் கைது செய்யப் பட்டு விடுதலை செய்யப் பட்டார். அதனால், கருணாநிதி அவர் வீட்டில் தங்க மாட்டாரா ? கருணாநிதி கூடத்தான், ஊரான் சொத்தை அடித்து உலையில் போட்ட ஊழல் வழக்குக்காக பல முறை கைது செய்யப் பட்டுள்ளார். இப்போது அவர் என்ன காட்டிலா தங்கியுள்ளார் ?




மேலும், உச்சநீதிமன்றம், நளினியின் தாயையும், தம்பியையும் விடுதலை செய்த பிறகு, இந்தக் கேள்வியை எழுப்ப இவர்கள் யார் ?

ராயப்பேட்டை இன்ஸ்பெக்டரின் அறிக்கை என்ற அபத்தமான காரணத்தை ஏற்கனவே பார்த்து விட்டோம். அடுத்த காரணம், நளினி தனது 20.01.2010 நாளிட்ட மனுவில், தான் ஒரு பெண் குழந்தைக்கு தாயார் என்பதால் விடுதலை செய்யப் பட வேண்டும் என்ற காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு பெண் குழந்தை என்பதால் ஏற்றுக் கொள்ள மாட்டார்களா ?

கருணாநிதியைப் போல, மூன்று மனைவிகள், முப்பது பிள்ளைகள் இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா ? சிறையில் பிறந்து, தாய் தந்தை அரவணைப்பு இல்லாமல் வளர்ந்த அந்த அப்பாவி பெண் குழந்தையின் நலனுக்காக என்னை விடுதலை செய்யுங்கள் என்ற நளினியின் அவலக் குரல், அரக்கர்களுக்கு எங்கே புரியப் போகிறது ?

அடுத்த காரணம், மேற்கூறிய அனைத்துக் காரணங்களையும் பரிசீலித்து, 18 ஆண்டுகளாக சிறையில் இருந்தாலும் ஒரு தேசத்திற்கு எதிரான குற்றத்தை புரிந்ததற்காக நளினியை முன் விடுதலை செய்ய இயலாது, என்று காரணம் கூறுகிறது அந்த அரசாணை.


ஜுலை 2009ல் நளினி தன் தாயாரோடு தங்குவதால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என்று அறிக்கையளித்த ப்ரோபேஷன் அதிகாரி, ஜனவரி 2010ல் ராயப்பேட்டை ஆய்வாளரின் அறிக்கையை பரிசீலித்தவுடன் தன் கருத்தை மாற்றிக் கொண்டு, ‘ஆமாம், நளினியை விடுதலை செய்தால் சட்டம் ஒழுங்கு கெடும்‘ என்று ஒத்து ஊதுகிறார்.

ராஜீவ் உயிர் மட்டும் தான் உயிரா ? கருணாநிதியால் ஏழு ஆண்டுகளில் விடுதலை செய்யப் பட்ட 1408 கைதிகளால் இழந்த உயிர்கள் எல்லாம் மயிரா ? லீலாவதி கொலை வழக்கில் கருணாநிதியால் விடுதலை செய்யப் பட்ட, நல்லமருது, அஞ்சா நெஞ்சன் இருக்கும் தைரியத்தில், இன்னும் தனது ரவுடித்தனத்தை மதுரை மாநகரில் அரங்கேற்றி வருகிறாரே, இதனால் சட்டம் ஒழுங்கு கெடவில்லையா ?

நல்லமருது, 2008ம் ஆண்டில் விடுதலை செய்யப் பட்டபோது, மதுரை மாநகரில் ஒட்டப் பட்ட போஸ்டர்கள் என்ன தெரியுமா ?

"மேகச் சிறை கிழித்து மேலெழும்பும் `தியாகச்’ சூரியனே!’, `மருதுவை எங்களுக்கு மீட்டுத்தந்த மகத்தான தலைவா! ’ "

2001ல் கட்சியை விட்டு நீக்கப் பட்ட ஒரே காரணத்துக்காக, 8 அரசு பேருந்துகளை அழகிரியின் அடியாட்கள் எரித்தனரே.. ?

குண்டர் சட்டத்தில் அடைக்கப் பட வேண்டியவரல்லவா அழகிரி ?

2001ல் சிறையில் அடைத்திருந்தால், 2007ல் மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று அப்பாவி உயிர்கள் பலியாயிருக் காதே ? தா.கிருஷ்ணன் உயிரை விட்டிருக்க மாட்டாரே ?

19 ஆண்டுகளாக, தன் வாழ்வின் முக்கியமான இளமைப் பகுதியை சிறையில் கழித்த நளினியை விடுதலை செய்தால், இத்தாலிக் கோமகளின் மனம் கோணும் என்று, கருணாநிதி நளினியை அவமானப் படுத்துவது போல, இப்படி ஒரு அரசாணையை வெளியிட்டிருப்பது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அல்லாமல் வேறு என்ன ?

ராஜீவ் தமிழ்நாட்டுக்கு, காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்ய வருகையில் இறந்தார். அவரோடு, இறந்தவர் அனைவரும் போலீஸ் காரர்களும், பொது மக்களும் தானே ? தமிழ்நாடு மாநில காங்கிரஸ்காரர்கள் எங்கே போனார்கள் என்ற கேள்வி மக்கள் மனதில் இன்று வரை ஊசலாடிக் கொண்டிருக்கிறதே ?




இதற்கு என்ன பதில். “ஆப்டவனுக்கு அஷ்டமத்துல சனி. ஓடுனவனுக்கு ஒன்பொதுல குரு“ என்ற பழமொழிக்கு ஏற்ப, மாட்டிக் கொண்டதால் நளினி தலையில் இக்குற்றத்தின் பெரும் பகுதி கட்டப் பட்டது என்பதுதானே உண்மை.

ராஜீவ் கொலை வழக்கில், உண்மைக் குற்றவாளிகள் இன்று வரை கண்டுபிடிக்கப் படவில்லை என்பதால்தானே Multi Disciplinary Monitoring Agency (MDMA) என்ற அமைப்பை ஏற்படுத்தி, 1998 முதல் இன்னும் ராஜீவ் கொலை வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கிறேன் என்ற பேரில், இது வரை சிபிஐ அதிகாரிகள் 12 முறை வெளிநாட்டுக்கு சுற்றுப் பயணம் போயிருக்கிறார்கள் என்பது தெரியுமா ?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த MDMA இது வரை 1998 முதல் 2009 வரை, ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்க 12 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிட்டிருக்கிறது என்பது தெரியுமா ?

ஆனால், இது வரை உருப்படியாக எந்த முன்னேற்றமும் இல்லை என்பதுதான் உண்மை. அப்படியிருக்க நளினி என்ன பாவம் செய்தார் ?

புதிதாக திருமணம் ஆன பெண், திருமணம் ஆன முதல் வாரத்தில், தான் எது செய்தால் கணவருக்குப் பிடிக்கும், எது செய்தால் பிடிக்காது என்று அறியாமல் திணறுவது போல, நளினி விஷயத்தில் என்ன செய்தால் சோனியாவுக்குப் பிடிக்கும், என்ன செய்தால் பிடிக்காது, ஏதாவது செய்து அவர் மனம் கோணுமோ என்ற கற்பனையிலேயே நளினியை சிறையில் வாட விட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

இத்தனை பேர் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்ட கருணாநிதிக்கு என்ன தண்டனை என்பதை காலம்தான் முடிவு செய்யும்.


சவுக்கு