விக்கி லீக்குக்கும் வின்னர் வடிவேலுவுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா ? விக்கிலீக் இணைய தளம் வெளியிடும் ரகசிய ஆவணங்கள், சம்பந்தப் பட்ட நபர்களை “வேண்டாம்….. வலிக்குது… அப்புறம் அழுதுடுவேன். “ என்று சொல்ல வைக்கும் தன்மை படைத்தன.
விக்கிலீக் இணையதளம், சமீபத்தில் தனது இணைய தளத்தில் அப்கான் டைரிகள் என்ற அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டன. இந்த ஆவணங்கள், ஆப்கான் போரில் அமேரிக்க ராணுவம் சந்தித்த இழப்புகள் மட்டுமல்லாமல், அமெரிக்க ராணுவத்தினர், கண்மூடித்தனமாக எத்தனை அப்பாவிகளை சுட்டுக் கொன்றிருக்கின்றனர் என்ற உண்மைகளை பட்டவர்த்தனமாக வெளியிட்டிருக்கின்றன.
இந்த ஆவணங்கள் பற்றிய தனது கருத்தை தெரிவித்த அமெரிக்க அதிபர் ஓபாமா, இது ஒன்றும் புதிய விஷயமில்லை என்று கூறியிருக்கிறார். புதிய விஷயமில்லை என்றால் ஏற்கனவே வெளியிட்டிருக்க வேண்டியதுதானே ?
இந்த இணைய தளம் 2007ம் ஆண்டு முதல் செயல் பட்டு வருகிறது. இந்த இணைய தளம் உருவான வரலாறு தெரியுமா ? இணையத்தில் உலவும் பல்வேறு தன்னார்வர்கள் உலகின் வறுமைக்கும் பஞ்சத்திற்கும், மக்களின் துன்பத்திற்கும் காரணம் அரசுகளின் ஊழலே என்று முடிவெடுத்தனர். இந்த ஊழலை சரி செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்தபோது உருவானதுதான் விக்கிலீக்.
உலகெங்கும் மனசாட்சி உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். (ஜாபர் சேட் கூடவே இருந்து, சவுக்குக்கு ஆவணங்களை தருவதில்லையா ? அதுபோலத்தான்) 1971ம் ஆண்டு அமெரிக்காவில் வியட்நாம் போர் தொடர்பாக டேனியல் எல்ஸ்பெர்க் என்ற அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணியாற்றிய ஒருவர் வியட்நாம் போர் தொடர்பான 7000 பக்க ஆவணங்களை நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ்களில் தொடராக வெளியிடக் காரணமாக இருந்தார்.
இந்த ஆவணங்களை வெளிவரக் காரணமாக இருந்த டேனியல் எல்ஸ்பெர்க் என்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி இந்த ஆவணங்களை வெளியிட்டது குறித்து என்ன கூறினார் தெரியுமா ?
“ஒரு அமெரிக்க குடிமகனாக, இந்த தகவலை மறைப்பதில் இனியும் நான் பங்கு வகிக்க முடியும் என்று நான் கருதவில்லை. இந்தக் காரியத்தை (ஆவணங்களை வெளியிட்டது) எனக்கு ஆபத்து என்று அறிந்தே, இதற்கான விளைவுகளை சந்திக்க தயாராகவே இந்தக் காரியத்தை செய்கிறேன். “
இந்த ஆவணங்களை வெளியிடக் கூடாது என்று அமெரிக்க பகீரத பிரயத்தனம் செய்தது. நீதிமன்றத்தில் சென்று தடை உத்தரவு பெற்றது. இந்த ஆவணங்களை பதிப்பிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இந்த வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது.
அமெரிக்க உச்சநீதிமன்றம் 9க்கு 3 என்ற பெரும்பான்மை தீர்ப்பில் இந்த ஆவணங்களை வெளியிடலாம் என்று தீர்ப்பளித்து, அரசாங்கங்கள் செய்யும் தவறுகளை வெளியிடுவது பத்திரிக்கைகளின் கடமை என்று தெரிவித்தது.
உலகெங்கும் உள்ள அரசாங்கங்கள், மக்களுக்கு விரோதமாக செய்யும் நடவடிக்கைகளை மக்களிடமிருந்து மறைத்தே வந்துள்ளனர். இவ்வாறு மறைப்பதை தேசத்தின் பாதுகாப்பு என்ற காரணத்தைக் கூறி மழுப்புவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆனால், எப்படியாகிலும், என்றாவது ஒரு நாள் உண்மை வந்துதானே தீரும் ?
தமிழகத்தை பொறுத்தவரை, அரசு அலுவலகங்களில் இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகள் மற்றும் ஊழல்களின் ஆவணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அரசு ஊழியர்களில் பெரும்பாலானோல், ஒன்று அந்த ஊழல்களின் பங்குதாரர்களாக உள்ளனர். அல்லது பணிப்பாதுகாப்பு காரணமாக பயப்படுகின்றனர்.
அரசு கேபிள் கார்ப்பரேஷன் என்ற ஒன்றை அமைத்து, அதற்கான மக்கள் வரிப்பணம் 700 கோடி ரூபாய் வீணாகிறதே என்று வருத்தப் பட்டு நடவடிக்கை எடுத்ததற்காகத் தானே உமாசங்கர் இன்று பணி இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளார் ?
சரி குடும்பம் ஒன்று சேர்ந்து விட்டது. இனி அரசு கேபிள் கார்ப்பரேஷனுக்கு மூடு விழா நடத்தலாம். 700 கோடி ரூபாய் வீணாகப் போனால் என்ன ? மக்கள் பணம்தானே என்று அலட்சியமாக இருந்தால், இன்று தலைமைச் செயலகத்தில், கருணாநிதியின் அலுவலகத்தில் கூட பணியாற்றிக் கொண்டிருந்திருப்பார்.
இது விழிப்புப் பணி இணை ஆணையராக பணியாற்றிக் கொண்டிருந்த போது உமாசங்கர் வெளிக் கொண்டு வந்ததுதான், சிஸ்கோ பங்குகளை சகாய விலைக்கு விற்ற ஊழல்.
இப்போது ஜாபர் சேட் சர்வ வல்லமை படைத்து கோலோச்சுவது போலவே 2001-2006 அதிமுக ஆட்சியில் கோலோச்சியவர் என்.நாராயணன். இவர் அதிமுகவின் இறுதி காலத்தில் தலைமைச் செயலாளராக இருந்தார். லட்சுமி ப்ரானேஷ் தலைமைச் செயலாளராக இருந்த போது நிதித் துறைச் செயலாளராக இருந்த நாராயணன், சர்வ வல்லமை படைத்தவராக இருந்தார்.
1996ல் உமா சங்கர் இணை ஆணையராக இருந்த போது அவரது பார்வைக்கு வந்த ஒரு கோப்பு சிஸ்கோ கப்பல் கட்டும் நிறுவனத்தின் (தமிழக அரசுக்கு சொந்தமான நிறுவனம்) பங்குகளை TIIC எனப்படும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் வைத்திருந்தது. இந்தப் பங்குகளை ஸ்பிக் அதிபர் ஏ.சி.முத்தையாவுக்கு விற்பது என்று முடிவெடுக்கப் பட்டது.
என்ன விலைக்கு விற்பது.
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 600 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தது. 600 ரூபாய்க்கு விற்கப் பட்ட ஒரு பங்கு ரூபாய் 2075 வரை விலை போனது. ஆனால் இந்தப் பங்கை 375 ரூபாய்க்கு விற்க ஏதுவாக, அப்போது நிதித் துறை செயலாளராக இருந்த என்.நாராயணன் ஒரு அரசாணையை வெளியிட்டார். இப்போது தகவல் ஆணையராக உள்ள எஸ்.ராமகிருஷ்ணன், நாராயணனுக்கு ஒத்து ஊதி, இந்தப் பங்குகளை 375 ரூபாய்க்கு ஸ்பிக் நிறுவனத்திற்கு விற்று விட்டனர்.
இந்த நேர்வில் 170 கோடி ரூபாய்க்கு மேல் (1996ல இது பெரிய அமவுண்ட் சார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வந்ததும், எல்லாமே சின்ன அமவுண்ட்டா ஆயிடுச்சு) அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உமாசங்கர் தெரிவித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு பரிந்துரை செய்கிறார்.
இவர் பரிந்துரையின் படி, ஒரு விரிவான விசாரணைக்கு உத்தரவிடப் படுகிறது. இந்த வழக்கை, இன்று லஞ்ச ஒழிப்புத் துறையில் எஸ்பி யாக உள்ள எம்.ஜெயபாலன் என்பவர் கையாள்கிறார். இந்நிலையில் நெல்லை ஜெபமணி என்பவர் இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த அரசு, விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், விரைவில் எப்ஐஆர் தாக்கல் செய்யப் படும் என்றும் தெரிவிக்கிறது.
இந்நிலையில், எப்ஐஆர் தாக்கல் செய்யும் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்குள், அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்து விடுகிறது.
தன் மீது உள்ள எல்லா வழக்குகளையும் 2001 முதல் 2006 முதல் முடிவுக்கு கொண்டு வந்த நாராயணன், இந்த வழக்கை மட்டும் முடிக்க முடியவில்லை. நெல்லை ஜெபமணி தாக்கல் செய்திருந்த வழக்கு இன்னும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததே அதற்கு காரணம். எப்ஐஆர் தாக்கல் செய்யப் போகிறோம் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விட்டு, வழக்கை எப்படி முடிப்பது என்று குழப்பத்தில் இருக்கிறார் நாராயணன்.
2006ம் வந்து விட்டது.
ஜனவரி மாதம் முதலே, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு எழுகிறது. இந்நிலையில் தன் மீதுள்ள இந்த வழக்கை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று முயற்சி செய்யும் நாராயணன், அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த நாஞ்சில் குமரனிடம் இது குறித்துப் பேசுகிறார். நாஞ்சில் குமரன், இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று ஒரு அறிக்கை அனுப்புவதாகவும், அதன் அடிப்படையில் வழக்கை முடித்து விடலாம் என்றும் ஆலோசனை கூறுகிறார்.
இதற்கு பலி கடாவாக, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த கே.பாலன் என்ற டிஎஸ்பி யிடம் இது தொடர்பான அறிக்கை கேட்கப் படுகிறது. பாலன், அவ்வாறே அறிக்கை அனுப்புகிறார்.
இவ்வாறு அனுப்பப் பட்ட அறிக்கை அரசை அடைவதற்குள், தேர்தல் அறிவிக்கப் பட்டு விடுகிறது. தேர்தல் முடிந்து திமுக பதவியேற்ற இரண்டாவது நாள்.
நாஞ்சில் குமரன் செய்த முதல் காரியம், பச்சை நிறத்தில் இருந்த லஞ்ச ஒழிப்புத் துறையின் பெயர்ப் பலகையை இரவோடு இரவாக நீல நிறத்தில் மாற்றுகிறார். தனக்கு கீழ் பணியாற்றும் திமுக வோடு தொடர்பு இருக்கிறது என்று கருதப்படும் அதிகாரிகளை மீட்டிங் என்று அழைத்து, எங்கள் குடும்பமே திமுக குடும்பம் என்று புளுகுகிறார்.
நாஞ்சில் குமரன், ராதாகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும், திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளைப் பார்த்திருக்கிறோமே எப்படி இந்த ஆட்சியில் நல்ல பதவியை வாங்குவது என்று யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
நாஞ்சில் குமரன், லஞ்ச ஒழிப்புத் துறையில் உதவி மேலாளராக இருந்த ஜெயஸ்ரீ என்பவரை அழைக்கிறார். அவர் கையில் ஒரு அரசாணையை எடுத்துக் கொடுக்கிறார். அந்த அரசாணையில் சிஸ்கோ ஊழல் தொடர்பான வழக்கில், தலைமைச் செயலாளர் நாராயணன் மீதான குற்றச் சாட்டுகள் அனைத்தும் கைவிடப் பட்டன என்று உள்ளது.
இதை அந்த ஜெயஸ்ரீயிடம் அளித்து, இந்த கடிதம் இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்தது போலவும், இதன் நகலை புலனாய்வு அதிகாரிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே அனுப்பியது போலவும் கோப்பை தயாரித்து கொண்டு வருமாறு கூறுகிறார். அப்போது கூடுதல் டிஜிபி கே.ராதாகிருஷ்ணனும் உடன் இருக்கிறார்.
அந்த ஜெயஸ்ரீ உதவி மேலாளரல்லவா ? தனக்குக் கீழ் பணியாற்றும் உதவியாளரிடம் இது போல பழைய தேதியிட்டு கோப்பை தயாரித்து வருமாறு சொல்ல, அந்த உதவியாளர் “மேடம். இது சட்ட விரோதம். தப்பு. அதிகாரிங்க பேச்சக் கேட்டு தப்பு பண்ணாதீங்க“ என்று கூறுகிறார். அதற்கு ஜெயஸ்ரீ டைரக்டர் சொல்லும் போது கேட்டுத் தானே ஆகணும் என்று கூறுகிறார். “டைரக்டர் சொன்னா நீங்களே செய்யுங்க. நான் செய்ய மாட்டேன்“ என்று கூறுகிறார்.
இதைக் கேட்டவுடன், உதவியாளர் எழுதாமல் நாமே கோப்பை தயாரித்தால் சிக்கலாகுமே என்று தயங்குகிறார்.
இந்நிலையில் ராதாகிருஷ்ணனிடமிருந்து ஜெயஸ்ரீக்கு அழைப்பு வருகிறது. கோப்பு தயாராயிற்றா என்று கேட்கிறார். இவர் இல்லை என்றதும் உடனடியாக தயார் செய்யுங்கள் என்கிறார் ராதாகிருஷ்ணன். ஜெயஸ்ரீ நாளை தயார் செய்கிறேன் என்கிறார்.
இந்நிலையில், முன் தேதியிட்டு கோப்பை தயாரிக்க மாட்டேன் என்று மறுத்த அந்த ஊழியர், எப்படியோ, முதலமைச்சர் அலுவலகத்துக்கு இந்த கோப்பு விவகாரத்தை தெரிவிக்கிறா.
மறுநாள் காலை 6.00 மணிக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து அழைப்பு.
சம்பந்தப் பட்ட கோப்போடு வரும்படி நாஞ்சில் குமரனுக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் முதல்வரின் செயலாளரிடமிருந்து அழைப்பு வருகிறது.
இரண்டு பேருக்கும் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. திருடனுக்கு தேள் கொட்டியது போல விழிக்கிறார்கள். (திருடர்கள் போல என்ன.. திருடர்கள் தானே) உடனடியாக 6.30 மணிக்கு ஜெயஸ்ரீயை அழைக்கிறார்கள். கோப்போடு மூவரும் முதல்வரின் செயலாளரை காணச் செல்கிறார்கள்.
கோப்பை திருத்த ஏன் முயற்சித்தீர்கள் என்று கடுமையான வசவு விழுகிறது. தொங்கிய முகத்தோடு வெளியில் வந்த இரு அதிகாரிகளும் அமைதியாக அலுவலகம் திரும்புகிறார்கள்.
காலை 11.30 மணிக்கு இது எப்படி முதல்வர் அலுவலகத்திற்கு தெரிந்தது என்று தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஜெயஸ்ரீயும் உடன் இருக்கிறார்.
யார் இதைப் பற்றிச் சொல்லியிருப்பார் என்று பேசிக் கொண்டிருக்கையில், ஜெயஸ்ரீ தனது உதவியாளரின் பெயரைச் சொல்லி “சார் அவர் கூட என்னை கையெழுத்து போட வேண்டாம்னு சொன்னார் சார். Don’t sail in a sinking ship ன்னு சொன்னார் சார் “ என்று கூறுகிறார்.
நீங்கள் போய் அந்த ஊழியரை வரச் சொல்லுங்கள் என்று கூறுகிறார் நாஞ்சில் குமரன்.
அந்த ஊழியர் இயக்குநர் அறைக்குள் செல்கிறார்.
“என்னய்யா நெனச்சுக்கிட்டு இருக்கே உன் மனசுலே ? “ “பெரிய இவன்னு நெனப்பா ? நாங்க சீனியர் ஆபீசர்ஸ் ஏதாவது ஒரு காரணத்தோட செய்வோம் (என்ன காரணம் குமரன் சார் ? நாராயணன் கிட்ட பெரிய அமவுன்ட்ட வாங்கிட்டீங்களா ?) கையெழுத்துப் போடாதீங்கன்னு மேனேஜரையே மெறட்ரியாமே ? தொலைச்சுப் புடுவேன் தொலைச்சு. ஜாக்ரதை என்று கூறுகிறார்.
ஒரு படத்தில் வடிவேலு, “இவன் அடிச்சது பத்தாதுன்னு, மச்சான் ப்ரீயா இருக்கியா .. ? ஒருத்தன் சிக்கிருக்கான். அனுப்பி வைக்கிறேன்“ என்று சொல்வாரே.. ? அது போலவே நாஞ்சில் குமரன் ஐஜி ராதாகிருஷ்ணனை போய் பார்க்கும் படி சொல்கிறார்.
ராதாகிருஷ்ணன் லண்டனுக்குப் போய் ராணி விருதெல்லாம் வாங்கியவர் அல்லவா ? அதனால் வசவு ஆங்கிலத்தில்.
What do you think in your mind ? You have the guts to threaten the manager ? I fill finish your career. Be careful. என்று கூறி விட்டு, அந்த ஊழியர் ஏதோ சொல்ல வந்ததும் “ஏய். உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது.. கெட் அவுட்“ என்றார்.
அந்த ஊழியர் எது நம்மை தாக்கியது என்று புரியாமல் அலுவலகம் திரும்பினார். அடுத்த அரை மணி நேரத்தில் நாஞ்சில் குமரனும், ராதாகிருஷ்ணனும் லஞ்ச ஒழிப்புத் துறையை விட்டு மாற்றம் என்ற தகவல் வருகிறது.
திமுக பதவியேற்ற பிறகு கூட, வழக்கு ஆவணங்களை திருத்த முயன்ற, நாஞ்சில் குமரனுக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் கருணாநிதி கொடுத்த தண்டனை என்ன தெரியுமா ? இருவருக்கும் சென்னை மாநகர காவல் ஆணையர் பதவி.
ஆற்காடு வீராச்சாமி மேல் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வந்த ப்பி.வி.தாமஸ் என்ற டிஎஸ்பியை இந்த இருவரும் அணுகி, ஆற்காட்டாரிடம் சொல்லி நல்ல பதவி வழங்குமாறு கேட்டு நல்ல பதவியை பெற்றதாக காவல்துறை வட்டாரங்கள் சொல்கின்றன.
இந்த ஜெயஸ்ரீயைப் பற்றி மற்றொரு பிரசித்தமான கதை உண்டு.
2005ம் ஆண்டில் ஜுனியர் விகடன் இதழ், ஒரு ஸ்டிங் ஆபரேஷனை செய்தது. என்னவென்றால், ப்ரோக்கர்களிடம் காசு கொடுத்து, ஒரு உடல் ஊனமுற்றவர், அமைச்சர், ஒரு எம்எல்ஏ ஆகிய மூவர் பெயரில் போலியாக ஓட்டுனர் உரிமம் பெற்றது.
பணத்தை வாங்கிக் கொண்டு கச்சிதமாக யார் எவரேன்றெல்லாம் பார்க்காமல் மூன்று பேருக்கும் ஓட்டுநர் உரிமத்தை வழங்கியது ஆர்டிஓ அலுவலகம். இந்த போலி உரிமம் வழங்கிய ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, ஜுனியர் விகடன் குழு, லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் ஒன்றைத் தருகிறது.
விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த அப்போதைய எஸ்பி மஞ்சுநாதா, உடனடியாக அரசுக்கு அனுப்ப அறிக்கை ஒன்றை தயார் செய்யுமாறு உதவி மேலாளர் ஜெயஸ்ரீக்கு உத்தரவிடுகிறார். அப்போது மணி 5.45.
அந்த வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்ட ஜெயஸ்ரீ “சார். மணியாகி விட்டது. நான் வீட்டுக்குச் சென்று அடித்து விட்டு நாளை காலையில் எடுத்து வருகிறேன் “ என்று கூறுகிறார். மஞ்சுநாதாவும், இயல்பாக சரி என்கிறார்.
ஜெயஸ்ரீயும் மஞ்சுநாதா கேட்டது போலவே அறிக்கையை தயார் செய்து அளிக்கிறார்.
இதன் நடுவே மறு நாள், அந்த போலி உரிமங்களில் கையெழுத்திட்ட அதிகாரிகள் தங்களை ஏமாற்றி போலியாக உரிமம் பெற்று விட்டதாக ஆதாரங்களுடன் சென்னை மாநகர காவல்துறையில் சென்று புகார் தெரிவிக்கின்றனர்.
போலி உரிமத்தில் கையெழுத்திட்டவர்களுள் ஒருவர் பெயர் ராணி. அவர் கண்காணிப்பாளராக ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அவர்கள் புகார் கொடுக்கையில் அவர்களிடம், லஞ்ச ஒழிப்புத் துறை தயார் செய்த அறிக்கையின் நகல் இருந்தது.
அறிக்கை அரசுக்கு செல்லும் முன்பே, எப்படி குற்றவாளிகளின் கைக்குச் சென்றது என்று லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் தலையை பிய்த்துக் கொண்டனர்.
பிறகுதான் தெரிந்தது அந்த ராணி வேறு யாருமல்ல. லஞ்ச ஒழிப்புத் துறையின் உதவி மேலாளர் ஜெயஸ்ரீயின் சொந்த சகோதரி என்றும், ஜெயஸ்ரீயின் எதிர் வீட்டிலேயே ராணியும் குடியிருக்கிறார் என்பதும் தெரிய வந்தது.
சரி இப்போது இவர்கள் மூவரும் எங்கே இருக்கிறார்கள் ?
நாஞ்சில் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையாளராக இருந்து ஓய்வு பெற்று விட்டார். கே.ராதாகிருஷ்ணன், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருக்கிறார். (இப்போ லண்டன்ல இருக்கார்)
ஜெயஸ்ரீ லஞ்ச ஒழிப்புத் துறையின் ரகசியப் பிரிவின் தலைவர் பதவியான “ரகசியப் பிரிவு மேலாளராக“ இருக்கிறார்.
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்து விட்டு, திமுக ஆட்சியில் அந்தர் பல்டி அடிக்கும் அதிகாரிகளை புரிந்து கொள்ளாமல், யார் யாரோ சொல்கிறார்கள் என்று அதிகாரத்தை கொடுத்து அழகு பார்க்கும் கருணாநிதியின் பலவீனமே இந்த அதிகாரிகள் தான்.
இந்த கே.ராதாகிருஷ்ணன், ஜெயலலிதா ஆட்சியில் அவர் மீதான வழக்கை மூடி விட்டு, மதிப்பெண் பெறாத தன் மகன் சந்தீப்புக்கு முதல்வர் கோட்டாவில் அவரிடமே அண்ணா பல்கலைகழகத்தில் இடம் பெறுகிறார். திமுக அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்த பின், ஆதாரங்களே இல்லை என்ற வழக்குகளில் கூட குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட ராதாகிருஷ்ணன், இன்று திமுகவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.
ஆட்சிக்கு ஆட்சி நிறம் மாறும் பச்சோந்திகளான இந்த அதிகாரிகளை இன்னும் புரிந்து கொள்ளாமல் கருணாநிதி இவர்களை நம்பி அடுத்த தேர்தலை சந்திக்கச் செல்கிறார்.
இது போன்ற திருட்டுத்தனங்களை செய்யும் அதிகாரிகளின் முகத்திரையை கிழிக்க தமிழகத்தில் பல விக்கிலீக்குகள் உருவானால் தான் இது போன்ற அதிகாரிகளை வின்னர் வடிவேலு போல ஆக்க முடியும்.
சவுக்கு