Wednesday, August 20, 2014

பான்டிட் குயின்.


பான்டிட் குயின் என்று அழைக்கப்பட்ட பூலான் தேவிதான் இறந்து விட்டாரே..... இப்போது அவரைப் பற்றி எதற்கு என்று யோசிப்பீர்கள்.  இது இறந்து போன பான்டிட் குயின் பூலான் தேவி பற்றியது அல்ல.  பூலான் தேவி இந்த சமூகத்தால் ஒடுக்கப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, துப்பாக்கி மட்டுமே நமக்கு பாதுகாப்பைத் தரும் என்று, வேறு வழியில்லாமல் கொள்ளையடிக்கத் தொடங்கினார்.  

ஆனால் ஐஏஎஸ் படித்து விட்டு, கொள்ளையடிக்கும் பூலான் தேவிகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அப்படி ஒரு பூலான் தேவியின் கொள்ளை குறித்த கட்டுரைதான் இது. 

ராமச்சந்திரா மருத்துவமனை.  இந்த மருத்துவமனையின் வரலாறு தெரியாதவர்களுக்கு ஒரு சிறு குறிப்பு.  ராமசாமி உடையார் என்ற சாராய அதிபர் தொடங்கிய கல்லூரி இது.  இவர் மறைந்த எம்.ஜிஆரின் பினாமி.   இன்று தமிழகத்தில் உள்ள தனியார் கல்லூரிகள் மற்றும் கல்வித் தந்தைகளுக்கெல்லாம் முன்னோடி.   முதன் முதலில் தனியார் கல்லூரிகளைத் தொடங்கிய ராமசாமி உடையாரும், ஜேப்பியாரும் சாராயத் தொழிலில் ஈடுபட்டவர்கள் என்பது ஒரு சுவையான ஒத்திசைவு. 



இந்த ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி எம்ஜிஆரின் பணத்தால் தொடங்கப்பட்டாலும், எல்லா அயோக்கியர்களையும் போலவே, இவர் கருணாநிதியோடும் மிகுந்த நெருக்கமாக இருந்தார்.  கொள்ளையடிப்பவர்கள், ஊழல் பெருச்சாளிகளுக்கு எந்த கட்சி ஆட்சியில் இருந்தால் என்ன ?

நாளடைவில், எம்ஜிஆரோடு நெருக்கமாக இருந்ததை விட, கருணாநிதியோடு மிகுந்த நெருக்கமானது ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி நிர்வாகம். இந்த நெருக்கம் எந்த அளவுக்கான நெருக்கம் என்றால், பிப்ரவரி 2009ல், ஈழம் தொடர்பான போராட்டங்கள் தமிழகத்தில் உச்சத்தில் இருந்தபோது, வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டு, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது, முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை என்று ராமச்சந்திரா மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார் கருணாநிதி.   அவருக்கு முதுகுத்தண்டே இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், அவர் அரசியல் சிக்கல்களை சமாளிக்கவே அவ்வாறு சென்று படுத்துக் கொண்டார் என்பதும், அவருக்கு அறுவை சிகிச்சை எதுவுமே நடைபெறவில்லை என்பதுமே உண்மை. இது போன்ற நாடகங்களையெல்லாம் நடத்த முழுக்க ஒத்துழைப்பு கொடுக்கக்கூடிய அளவுக்கு ராமச்சந்திரா நிர்வாகமும், கருணாநிதியும் நெருக்கம். 

அறுவை சிகிச்சை முடித்த கருணாநிதிக்கு ஆறுதல் சொல்லும் மாலடிமை மற்றும் கோ.க.மணி
1990ம் ஆண்டு, திருவான்மியூரில் அருகாமை வீட்டு வசதித் திட்டம் என்று ஒரு திட்டத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தொடங்குகிறது.  அந்த இடத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் தனியார் நிலங்களையும் கையகப்படுத்தி, வீட்டு வசதி வாரியம் மூலமாக விற்பனை செய்வதுதான் திட்டம்.  

அப்படி கையகப்படுத்தி விற்பனை செய்து, விற்காமல் அரசு கையிருப்பில் வைத்திருந்த எஞ்சிய நிலங்களைத்தான் நக்கீரன் காமராஜ், ஜாபர் சேட் போன்றோர் ஆட்டையைப் போட்டனர்.  

இப்படி குடியிருப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டு மனைகளை மொத்தமாக 7.44 ஏக்கரை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு கருணாநிதி அரசு 1998ம் ஆண்டு ஒதுக்கீடு செய்து ஒரு அரசாணையை வெளியிடுகிறது.  அதே ஆண்டில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், அரசுக்கு எழுதிய கடிதத்தில், அப்போது, 1998ல் இருந்த விலை நிலவரத்தின்படி, ஒரு கிரவுன்டு 7.50 லட்சத்துக்கு ராமச்சந்திராவுக்கு கொடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதுகிறது. அதற்கு கருணாநிதி அரசின் வீட்டு வசதித் துறை செயலர், பதில் கடிதம் எழுதுகிறார்.   பெசன்ட் நகர் விரிவாக்கத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துகையில் ஒரு கிரவுன்டு 6.01 லட்சத்துக்குத்தான் கையகப்படுத்தப்பட்டது.  அதனால் ராமச்சந்திராவுக்கும் அதே விலைக்குத்தான் வழங்க வேண்டும் என்று அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் கடிதம் எழுதுகிறார்.  

அந்த அரசாணை

இந்த விபரத்தை அறிந்து கொண்ட, ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர், 30.10.1998 அன்று அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில், 6.01 லட்சம் விலை என்பது, நிலத்தை மேம்படுத்தப்பட்டால் (Land development charges) மட்டுமே கொடுக்க வேண்டிய விலை.  வீட்டு வசதி வாரியம் அந்த இடத்தில் எந்த மேம்படுத்தலும் செய்யவில்லை. ஆகையால், விலையை குறைத்து நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.   (காசே இல்லாத ஏழையல்லவா உடையார் ? )

22.12.1998 அன்று எந்த காரணத்துக்காக நிலம் ஒதுக்கப்பட்டதோ, அதற்கேற்றவாறு, வீட்டு வசதி வாரியமே நிலத்தின் விலையை நிர்ணயம் செய்யலாம் என்று அரசு, வீட்டு வசதி வாரியத்துக்கு கடிதம் எழுதுகிறது.  அப்போது ஏதோ நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குநராக இருந்திருக்கிறார் போலும்.  வணிகப்பகுதி கட்டிடங்களுக்கு தற்போது உள்ள சந்தை விலையின்படி, வளர்ச்சிக் கட்டணம் நீங்கலாக, ஒரு கிரவுன்டுக்கு 17.70 லட்சம் விலை நிர்ணயிக்கலாம் என்று பரிந்துரை செய்து, ஒரு விரிவான கடிதத்தை அரசுக்கு 7 செப்டம்பர் 1999 அன்று எழுதுகிறார்.  

அதற்குப் பிறகு இந்தக் கோப்பு என்ன காரணத்தாலோ அப்படியே கிடப்பில் போடப்படுகிறது.  மீண்டும் 2005ல், இக்கோப்பு மீண்டும் உயிர் பெறுகிறது.  ஆறு ஆண்டுகள் கழித்து, உயிர்பெறும் இக்கோப்பில் அரசு வீட்டு வசதித் துறை செயலாளர், மீண்டும் வீட்டு வசதி வாரியத்துக்கு கடிதம் எழுதுகிறார்.  அந்தக் கடிதத்தில் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி வணிக ரீதியாக எந்தச் செயலையும் செய்யவில்லை.   அவர்கள் வெறுமனே ஆராய்ச்சிப் பணிகள் மட்டுமே செய்கிறார்கள்.  (கருணாநிதிக்கு முதுகுத்தண்டு இருக்கிறதா இல்லையா என்பது போன்ற ஆராய்ச்சி) ஆகையால் அவர்களுக்கு 6.01 லட்சத்துக்கே நிலத்தை வழங்கலாம் என்று வீட்டு வசதி வாரியத்துக்கு கடிதம் எழுதப்படுகிறது. ஆனால், இதற்கிடையே, சோற்றுக்கே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள், ஒரு கிரவுண்டை 4.38 லட்சத்துக்கே தர வேண்டும் என்று அரசை கெஞ்சிக்கெஞ்சிக் கேட்கிறார்கள். 

சர்ச்சைக்குரிய அந்த நிலம்

இதற்கிடையே மத்திய தணிக்கையாளரின் தணிக்கை நடைபெறுகிறது.  அவர்கள் தங்கள் தணிக்கை அறிக்கையில், ஒதுக்கப்பட்ட நிலம் ஏற்கனவே ராமச்சந்திரா கல்லூரியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.  ஆனால், நிலத்துக்கான விலை இது வரை அக்கல்லூரியிலிருந்து பெறப்படாமலேயே உள்ளது.  இதனால், வீட்டு வசதி வாரியத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பு எழுதினார்கள்.  இந்த தணிக்கை ஆண்டு 2002-2003. 

இதைக் காரணமாக காட்டி, அடுத்து மீண்டும் திமுக ஆட்சி வந்ததும்,  அந்த நிலத்தில் ஒரு கிரவுன்டின் விலை வெறும் 6.01 லட்சம்தான் என்று அரசு உத்தரவிடுகிறது.   உத்தரவிட்டு, 3 மார்ச் 2007 அன்று, நிலத்தை 6.01 லட்சம் என்று கணக்கிட்டு, 1998ம் ஆண்டு முதல் வருடத்துக்கு 9.5% விகித வட்டியில் நிலத்தின் விலையை நிர்ணயம் செய்து, உடனடியாக நிலத்துக்கான தொகையை பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிடப்படுகிறது. 

ஆனால், திமுக ஆட்சி முடிந்த மே 2011 வரை, இந்த உத்தரவு செயல்படுத்தப்படவேயில்லை.     

வழக்கமாக திமுக ஆட்சியில், ராமச்சந்திராவுக்கு சாதகமாக வேலைகள் வேக வேகமாக நடப்பது சகஜமே.  ஆனால் அதிமுக ஆட்சியில் மின்னல் வேகமாக வேலைகள் நடந்துள்ளது என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். 

இந்த இடத்தில்தான் கதையின் ஹீரோயினான பான்டிட் குயின் நுழைகிறார். இது ஒரு ஆன்டி ஹீரோயின் கதை.  ஆன்டி ஹீரோயின் கதை என்றதும் ஹீரோயின் ஆன்டியா என்று அதிகப்பிரசங்கித்தனமாக கேட்கக் கூடாது. 

கருணாநிதி ஆட்சியில் செய்ய முடியாத வேலையை, ஜெயலலிதா ஆட்சியில் சர்வ சாதாரணமாக செய்து முடித்துள்ளார் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் தாளாளர் வெங்கடாச்சலம். அப்படி அவர் செய்து முடிக்க உதவியவர்தான் இக்கதையின் ஹீரோயின். 

கருணாநிதியின் வசனத்தில் வந்த பிரபலமான திரைப்படம் மனோகரா. இத்திரைப்படத்தில் வரும் வில்லியான வசந்தசேனையை சித்தரிக்க வசனம் எழுதியிருப்பார் கருணாநிதி. "வட்டமிடும் கழுகு, வாய் பிளக்கும் ஓநாய், காலை சுற்றி வளைக்கும் மலைப்பாம்பு" என்று. அந்த வசனம் முழுமையாக யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ...  இந்தக் கதையின் கதாநாயகிக்கு முழுமையாக பொருந்தும். 

போதும்டா உன் பில்டப்.  ஹீரோயின் என்ட்ரி என்று வாசகர்கள் துடிப்பது தெரிகிறது. அந்த ஹீரோயின் வேறு யாருமல்ல.  தமிழக அரசில் தலைமைச் செயலாளராக இருந்து, தற்போது தலைமைச் செயலாளரை விட உயர்ந்த பதவியில் உள்ள ஷீலா பாலகிருஷ்ணன்தான் அந்த பான்டிட் குயின் மற்றும் வசந்தசேனை. 

ஷீலா பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் (ஓய்வு)
தலைமைச் செயலாளராக இருப்பவர்கள் ஓய்வு பெறும் தருவாயில் வழக்கமாக பதவி நீட்டிப்பு அளிப்பார்கள்.  ஆனால் பான்டிட் குயின் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு, பதவி நீட்டிப்புக்கு பதிலாக, புதிதாக ஒரு பதவியை உருவாக்கி, அந்தப் பதவியில் உட்கார வைத்து அழகு பார்த்து வருகிறார் ஜெயலலிதா.  தலைமைச் செயலாளர் பதவி என்பது, ஒரு மாநிலத்தின் உயர்ந்த பதவி.  ஐஏஎஸ் அதிகாரிகளுக்கெல்லாம் தலைவர் அந்தப் பதவி. ஆனால், அந்தப் பதவிக்கு மேலாக ஆலோசகர் என்ற பதவியை உருவாக்கி வைத்துள்ளார் ஜெயலலிதா.  அந்த ஆலோசகர் பதவியில் அமர்ந்து கொண்டு, ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஆண்டு கொண்டிருக்கிறார் ஷீலா.  

கூழைக் கும்பிடு போடுவதில் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு நிகரே கிடையாது. ஓ பன்னீர் செல்வமே பிச்சை வாங்க வேண்டும். அவர் இடுப்பை வளைத்து கூழைக் கும்பிடு போடும் அழகே தனி.  இவர் ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் இப்படி கூழைக் கும்பிடு போடுகிறார் என்றில்லை.  



திமுக ஆட்சியில் ஒரு சாதாரண அமைச்சராக இருந்த கீதா ஜீவனுக்கு எப்படி கூழைக் கும்பிடு போடுகிறார் என்று பாருங்கள்.  திமுக ஆட்சி காலத்தில், அமைச்சர்கள் துரை முருகன் மற்றும், ஆற்காடு வீராச்சாமி ஆகியோருக்கு ஷீலா மிகுந்த நெருக்கமானவர்.  இந்த விஷயங்களையெல்லாம் அறியாமல், இந்த ஷீலா பாலகிருஷ்ணன் சொல்வதையெல்லாம் கேட்டு ஆடிக்கொண்டிருக்கிறார்.  


ஷீலா மற்றும் பாலகிருஷ்ணன் தம்பதியினருக்கு இரு மகன்கள். அதில் ஒரு மகன் பெயர் நாராயணன் பாலகிருஷ்ணன். மற்றொரு மகன் அமெரிக்காவில் உள்ளான்.  

பாலகிருஷ்ணன் மற்றும் அவரது இரு மகன்கள்
சென்னையில் உள்ள மகனான நாராயணன் பாலகிருஷ்ணன், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார்.   மன்னிக்கவும். முடிக்கவில்லை.   எம்பிபிஎஸ் படித்துக் கொண்டே இருந்தார்.  இறுதி ஆண்டில், பல பேப்பர்களில் அரியர்கள்.   இப்படி அரியரோடு இருந்தால் எப்படி மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் ஆக முடியும் ?   சாதாரணமான பெற்றோர்களுக்கு பிறந்திருந்தால், படித்துத்தான் பாஸாக முடியும். ஆனால் ஷீலா பாலகிருஷ்ணன் போன்ற பான்டிட் குயினின் மகனாக பிறந்திருந்தால் எதற்காக படிக்க வேண்டும் ?  இல்ல தெரியாமத்தான் கேக்கறேன்.... எதற்காக படிக்க வேண்டும் ?

மருத்துவர் நாராயணன் பாலகிருஷ்ணன்
பெயிலான தன் மகனை முதுகலை படித்து அறுவை சிகிச்சை நிபுணராக்க வேண்டும் என்று விரும்பிய பாலகிருஷ்ணன் மற்றும் ஷீலா தம்பதியினர், நான்கு மாதங்களுக்கு முன்னால் நேரடியாக ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தர் வெங்கடாச்சலத்தை சந்திக்கின்றனர்.  சந்தித்து தங்கள் மகன் குறித்த விபரங்களை பேசியதும், இது உங்கள் கல்லூரி.  உங்கள் மகன் மருத்துவராகா விட்டால் வேறு யார் ஆக முடியும் என்று, நிகர் நிலை பல்கலைக்கழகம் ஆதலால், உடனடியாக எம்பிபிஎஸ்ஸில் பாஸ் போட்டு, முதுகலை கண் மருத்துவ அறுவை சிகிச்சைக்கான சீட்டில் இலவசமாக படிக்க வைக்கிறார் வெங்கடாச்சலம்.   

பல்வேறு பரிமாணங்களில் கண் மருத்துவர் நாராயணன் பாலகிருஷ்ணன்

அம்மாவின் கார் மீது மகன்கள்

சில மாதங்கள் கழித்து, நாராயணன் படிப்பை தொடங்கியதும், ஷீலாவை சந்தித்து தன்னுடைய பிரச்சினையை எடுத்துச் சொல்கிறார் வெங்கடாச்சலம். மிக மிக கடுமையான வறுமைச் சூழலில் இருக்கும் தனக்கு சேர வேண்டிய 7.44 ஏக்கர் நிலத்தை திமுக அரசு பத்திரப் பதிவு செய்து தராமல் எப்படி ஏமாற்றி வயிற்றில் அடித்தது என்ற விபரங்களை கூறுகிறார்.  வெகுண்டெழுந்த ஷீலா உடனடியாக இதை நான் முடித்துத் தருகிறேன் என்கிறார்.   

உடனடியாக களத்தில் இறங்குகிறார் ஷீலா.  ஷீலா, ஜெயலலிதாவை விட அதிக அதிகாரத்தோடு செயல்பட்டுக் கொண்டு வருகிறார்.  தமிழக அரசின் தலைமைச் செயலாளராக உள்ள மோகன் வர்கீஸ் சுங்கத், ஷீலா பால கிருஷ்ணனை ஒரு நாளைக்கு 10 முறைக்கு மேலாக சென்று, அவர் அறையில் பார்த்து, அறிவுரை பெறுகிறார்.   ஒரு ஓய்வு பெற்ற அதிகாரியின் கீழ் வேலை பார்க்கும் இந்த துர்பாக்கிய நிலை, தமிழகத்தில் ஒரு நாளும் எந்த அதிகாரிக்கும் வந்தது கிடையாது.  



இப்படி நிழல் முதல்வராகவும், ஜெயலலிதாவின் கண்களும், காதுகளுமாகவும் செயல்படும் ஷீலா சொன்ன பிறகு எதிர் கேள்வி கேட்பதற்கு தமிழகத்தில் யாராவது உள்ளனரா என்ன ?  

ஷீலா பாலகிருஷ்ணன் சொன்னதும், உடனடியாக, தமிழக வீட்டு வசதி வாரியக் கூட்டம் 1 ஜுலை 2014 அன்று கூட்டப்படுகிறது. 1998ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி, வெறும் ஆறு லட்ச ரூபாய்க்கு 7.44 ஏக்கரை ராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளைக்கு கிரையம் செய்து, விற்பனைப் பத்திரம் வழங்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்படுகிறது. 

வீட்டு வசதி வாரிய தீர்மானம்

14 ஜுலை 2014 அன்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ அறக்கட்டளையின் பெயருக்கு 7.44 ஏக்கர் நிலத்தை 33 கோடியே 46 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. 

விற்பனை பத்திரம்

7.44 ஏக்கரில் மொத்தம் 744 சென்டுகள். ஒரு கிரவுன்ட் ஐந்தரை சென்ட் என்று கணக்கிட்டால், 135.2 கிரவுண்டுகள் வருகின்றன. 33.46 கோடியை 35.2ஆல் வகுத்தால், ஒரு கிரவுன்டின் விலை 24 லட்சத்து, 75 ஆயிரத்து 436 ரூபாய் வருகிறது. 

14 ஜூன் 2012 அன்று திருவான்மியூரிலேயே உள்ள கெங்கையம்மன் நகரில் 513 சதுர அடி மனை ஒன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.   அந்த 513 சதுர அடி வீட்டு மனைக்கு கொடுக்கப்பட்ட விலை 23 லட்சத்து 83 ஆயிரத்து 500 ரூபாய்.   இந்த விலையை ஒரு உதாரணத்துக்காக அளவுகோளாக கொண்டால், ஒரு சதுர அடியின் விலை, 2012ம் ஆண்டு உள்ளபடி, ஒரு சதுர அடி 5818 ரூபாய் வருகிறது.  ஒரு சதுர அடி 5818 ரூபாய் என்று வைத்துப் பார்த்தால் கூட, ஒரு கிரவுன்ட் ஒரு கோடியே 39 லட்சத்து 63 ஆயிரத்து 200 ரூபாய் வருகிறது.   


அப்படிப் பார்த்தால், 135.2 கிரவுண்டுகளுக்கு எவ்வளவு வாங்கியிருக்க வேண்டும் ? 188 கோடியே 78 லட்சத்து 24 ஆயிரத்து 640 ரூபாய் வாங்கியிருக்க வேண்டும்.  இப்படி சலுகை விலையில் எதற்காக வெங்கடாச்சலத்துக்கு இந்த நிலத்தை ஷீலா பாலகிருஷ்ணன் அவசர அவசரமாக விற்க வேண்டும் ? அரசு விதித்துள்ள மதிப்பின்படியே வைத்துக் கொண்டாலும் இந்த நிலம் குறைந்தபட்சம் 189 கோடிக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.  

2008ல் ராமச்சந்திராவுக்கு ஒதுக்கப்பட்ட அதே பகுதியில் அமைந்துள்ள 4756 சதுர அடி வீட்டு மனை முன்னாள் உளவுத் துறை கூடுதல் டிஜிபி ஜாபர் சேட்டின் மனைவி பர்வின் ஜாபர் பெயருக்கு வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.   அதற்காக அவர்கள் செலுத்திய தொகை 1 கோடியே 15 லட்சத்து 9 ஆயிரத்து 520 ரூபாய்.  இந்த 2008 கணக்கின் படி எடுத்துக் கொண்டால் கூட ஒரு கிரவுன்டின் விலை 58 லட்சம் ஆகிறது.  அப்படி இருக்கையில் ராமச்சந்திரா கல்லூரிக்கு, 24 லட்சத்துக்கு (1998 முதல் வட்டியுடன் சேர்த்து, வட்டி சேர்க்காவிட்டால் ஒரு கிரவுன்ட் வெறும் 6 லட்சம் மட்டுமே) எதற்காக விற்பனை செய்யப்பட வேண்டும் ?

ஜாபர் சேட் மனைவிக்கு வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்பட்ட டிதம்

எதற்காக 150 கோடியை தள்ளுபடி செய்து விட்டு, இத்தனை அவசரமாக இந்த நிலத்தை விற்பனை செய்தார் ஷீலா ?  

ஷீலா இப்படி மலிவு விலையில் 7.44 ஏக்கர் நிலத்தை வழங்கிய ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் வேந்தர் வெங்கடாச்சலம் எவ்வளவு பெரிய ஏழை தெரியுமா ?
வெங்கடாச்சல உடையார்
கடந்த ஆண்டு வெங்கடாச்சலத்தின் வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், வெங்கடாச்சலத்தின் வீட்டில் இருந்து கீழ் கண்ட வெளிநாட்டுக் கார்கள் நிற்பதை கண்டறிந்தனர்.
TN 07 BP 3999    BMW (3301)
TN 07 AK 3999   Jaguar Silver Grey (S Type)
TN 06 A 3999    PRADO WHITE LAND CRUISER
TN 28 AX 3999   SKODA
TN 09 AQ 5      BMW Dark Cream colour
TN 07 AM 3999   S 329 Mercedes Benz
KL 03 D 9010     S 600 Mercedez Benz
TN 07 BM 3999   BMW Light Brown
TN 06 B 3999    Mercedes Benz Silver Grey
TN 22 CT 3999   Mahindra XUV
TN 20 S 3999    Toyota Qualis    

இவற்றில் வெளிநாட்டுக் கார்களை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர்.

இப்படிப்பட்ட ஒரு பரம ஏழைக்குத்தான் மலிவு விலையில் 7.44 ஏக்கரை சுத்த விக்கிரக் கிரயம் செய்து தந்திருக்கிறார் ஷீலா.

இந்த அவசர பேரத்தை தொடக்கம் முதலே நடத்தி முடித்தது ஷீலா மற்றும் பாலகிருஷ்ணன் தம்பதியினர்.    வீட்டு வசதித் துறை செயலர், வீட்டு வசதி வாரியம், அதன் மேலாண் இயக்குநர் ஆகிய அனைவருக்கும் சொல்லப்பட்ட செய்தி, முதல்வர் இதை முடிக்கச் சொன்னார் என்பது மட்டுமே.   இந்த அதிகாரிகள் ஜெயலலிதாவிடம் நேராகச் சென்று இதை சரிபார்க்கவா முடியும்.  அப்படி எளிதாக அதிகாரிகளை சந்திப்பவரா ஜெயலலிதா ?  இந்த துணிச்சலில்தான் பான்டிட் குயின் இந்த பேரத்தை நடத்தி முடித்துள்ளார். 

அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை செய்ததில், ஒரு விஷயத்தை மட்டும் உறுதி செய்கிறார்கள்.    இந்த பேரத்தில் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு ஒரு வீட்டு மனைக்கு 6 லட்சம் வீதம்,  கொடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.  வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கத்துக்கு ஒரு மனைக்கு 12 லட்சம் வீதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்,  இந்தத் தொகையை வைத்தியலிங்கம் மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் உதயக்குமாரும் பிரித்துக் கொண்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.  இது தவிர கட்சி நிதியாக தனியாக ஒரு தொகை பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிகாரிகளுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு என்னவென்றால், இந்த விவகாரம் ஜெயலலிதாவுக்கு தெரிந்து நடந்துள்ளது என்று ஒரு தரப்பும், இல்லை, பான்டிட் குயின் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் இதைச் செய்துள்ளார் என்று இன்னொரு தரப்பும் இருவேறு கருத்துக்களை கூறுகிறார்கள். 

ஆனால், ஜெயலலிதா இன்று இருக்கும் நிலையில், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடிய நிலையில் இல்லை என்பதே உண்மை.   அவரது செயலாளர் வெங்கட்ரமணன், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் சொல்வதே வேதவாக்கு என்ற நிலைக்கு தள்ளப்பட்டு கூண்டுக்கிளியாக உள்ளார் அவர். 

வெங்கட்ரமணனும் ஒரு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி.  அவருக்கு ஐந்தாண்டு பணி நீட்டிப்பு அளித்து பதவியில் அமர்த்தியுள்ளார் ஜெயலலிதா. வெங்கட்ரமணன், ஜெயலலிதாவின் செயலர்களில் ஒருவர்.  ஆனால் இவர்தான் அதிகாரம் மிக்கவர். 

இந்த வெங்கட்ரமணன், ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் டிஜிபி ராமானுஜம் ஆகிய மூவரும்தான் தமிழகத்தையே ஆட்டிப் படைக்கிறார்கள் என்கிறார்கள் அதிகாரிகள்.   இதில் மூன்று பேருமே ஓய்வு பெற்று பணி நீட்டிப்பில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   கிட்டத்தட்ட அரசு நிர்வாகம் ஒரு முதியோர் இல்லம் போல மாறியுள்ளது என்றால் அது மிகைச்சொல் அல்ல. 


காவல்துறை வட்டாரங்களில், ஷீலா பாலகிருஷ்ணனுக்கு ராமானுஜமே பயப்படுகிறார் என்றே கூறுகின்றனர்.  சென்னை மாநகர ஆணையாளர் ஜார்ஜின் மீது பல்வேறு புகார்கள் இருந்தாலும், சென்னையில் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், ஜார்ஜ் மாற்றப்படாமல் இருப்பதற்கு ஒரே காரணம், இந்த பான்டிட் குயின்தான் என்கிறது காவல்துறை வட்டாரம்.  ஷீலா பாலகிருஷ்ணனும் ஒரு மலையாளி என்பது குறிப்பிடத்தக்கது.   ஜார்ஜ் குட்டி மலையாளி என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  

இந்த ஷீலா பாலகிருஷ்ணன், ஜார்ஜுக்கு ஆதரவாக, டிஜிபி ராமானுஜத்தையே மிரட்டுகிறார் என்றும், ராமானுஜம் யதார்த்த நிலவரத்தை புரிந்து கொண்டு நடந்து கொள்கிறார் என்பதும் கூடுதல் தகவல்கள்.   ஷீலா தவறு செய்கிறார் என்று ராமானுஜம் நாளைக்கே ஒரு அறிக்கை அனுப்பினாலும், அந்த அறிக்கை ஷீலாவின் கண்களைத் தாண்டி ஜெயலலிதாவை அடைய முடியாது.  அப்படி ஒரு அறிக்கையை அனுப்பி விட்டு, ராமானுஜம் அந்தப் பதவியில் இருக்க முடியாது என்பது முகத்தில் அறையும் உண்மை. 

நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயா டிவி ஆகிய இரண்டு மட்டுமே ஊடகங்கள் என்று தன்னுடைய அறிக்கைகளையும், தன்னுடைய படங்களையும் பார்த்துப், பார்த்து புளகாங்கிதம் அடையும் ஜெயலலிதாவின் கண்களுக்கு உண்மை நிலவரத்தை கூறிப் புரிய வைக்க, தமிழகம் முழுக்க ஒரு நாதியும் இல்லை என்பதே வேதனையான உண்மை. 

ஜெயலலிதா மணலில் முகம் புதைத்துள்ள நெருப்புக் கோழியாக இருக்கும் வரை, ஷீலா பாலகிருஷ்ணன் போன்ற பான்டிட் குயின்களின் கொள்ளைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். 

Monday, August 11, 2014

வேட்டி கட்டிக்கொண்டு கொள்ளையடியுங்கள்

வேட்டி பிரச்சினை பூதாகாரமாக ஆக்கப்பட்டு இப்போது சட்டமும் வந்தாகிவிட்டது.  தமிழ் இந்து செய்தி இணைப்பு



இவ்வாறாக தமிழ் மரபுகளைக் காத்துவிட்ட புரட்சித் தாய் ஜெயலலிதாவிற்கு பல தரப்பினரும் வாழ்த்துப்பா பாடிய வண்ணமிருக்கின்றனர்.

உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் வேட்டி கட்சிச் சென்றதால், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில் எழுந்த சர்ச்சையை ஒட்டி, 61 பேர் இறந்த முகலிவாக்கம் சம்பவத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் வசதியாக புறந்தள்ளி விட்டு, வேட்டியின் புகழ் பாடி, ஒரு வாரத்துக்கு வேட்டி புராணம் பாடியவண்ணம் இருந்தன.  அந்த ஒரு வாரத்துக்கு சமூக வலைத்தளங்களிலும், தமிழக அரசியல் களங்களிலும், வேட்டியே பிரதான இடத்தைப் பிடித்தது.  

வேட்டி அணிந்த கனம் கோர்ட்டாரை மட்டுமா வெளியில் நிறுத்துகிறது? நீதியையும் கூட தங்களது கட்டிடத்திற்கு வெளியே நிறுத்திவிடும் வல்லமை அதற்குண்டு.

ரசிகர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் முடிவுகளை முன் கூட்டியே இப்படித் தான் இருக்கவேண்டும் என தீர்மானிப்பது, அந்த ஒரு ஆற்றலை வைத்துக்கொண்டு என்ன முடிவு, எத்தனை ரன், எப்போது விக்கெட் என்பதை ஒட்டி சூதாட்டம் இப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பெயர் உலகின் மூலை முடுக்கெங்கும் நாறிப்போனது.
வாரியத்தின் தலைவர் இண்டியா சிமெண்ட்சின் நிர்வாக இயக்குநர் என்.ஸ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனே சிக்கிக்கொண்டார். ஒரு கட்டத்தில், இந்திய உச்சநீதிமன்ற உத்திரவின்பேரில் ஸ்ரீனிவாசன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தே தற்காலிகமாக விலக நேர்ந்தது.

குருநாத் மெய்யப்பன் 

இப்போதோ அவர் அகில உலக கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவராகவே ஆகிவிட்டார், என்னய்யா சுப்ரீம் கோர்ட் ஜூஜூபி என்கிறார் அவர்.

அவரைப் பற்றிய சில செய்திக்குறிப்புக்கள்



எத்தனை ஊழல் புகார் வந்தாலும் அசராமல் உடும்புப் பிடியாய் பதவிகளைத் தக்கவைத்துக்கொள்வதில் ஸ்ரீனிவாசனுக்கு இணை ஸ்ரீனிவாசன்தான்.
டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆங்கில நாளேடு வளைத்து வளைத்து அவரைத் தாக்கி எழுதியது


ஆனால் இறுதியில் இவர்களே வாலைக் குழைத்துக்கொண்டு சென்று அவர் முன் மண்டியிட்டு  டைம்ஸ் நௌ


டைம்ஸ் ஆஃப் இண்டியா


என மானாவாரியாகப் பேட்டிகள்.

இப்படி உச்சநீதிமன்றம், பெரும் மீடியாக் குழுமங்களையே அசரவைக்கும் ஆற்றல் படைத்த ஸ்ரீனிவாசனுக்கு தமிழக அரசு எம்மாத்திரம்?



அவர் திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கம் என்பது மட்டுமே பலருக்குத் தெரியும். ஆனால் ஜெயலலிதா உட்பட அனைத்து அரசியல் புள்ளிகளும் அவரது கோட் பைக்குள் என்றால் மிகையாகாது.

வேட்டி பிரச்சினையில் இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் வண்ணம் முழங்கிய புரட்சித் தலைவி பல கோடிக்கணக்கான ரூபாய்களை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தாரை வார்த்திருக்கும் கதையைத் தான் நீங்கள் இப்போது படிக்கவிருக்கிறீர்கள்.

கட்டுமரம், ஜெஜெ என முதல்வர் மாறினாலும் கிரிக்கெட் முதலைகளின் ஆதிக்கம் தொடர்கிறது, இன்னமும் வலுப்பெறுகிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 1860ம் ஆண்டு, கூட்டுறவு பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கம். 1 மே 1953 அன்று இச்சங்கம் பதிவு செய்யப்பட்டது. 



இச்சங்க பதிவு ஆவணங்களின்படி, இதன் நோக்கம், தமிழகத்தில் கிரிக்கெட்டை கட்டுப்படுத்துவது, கிரிக்கெட் தொடர்பான முடிவுகளை எடுப்பது, கிரிக்கெட் விளையாட்டை பரப்புவது, கிரிக்கெட் ஆட்டங்களை நடத்துவது, கிரிக்கெட் விளையாட்டின் நலனை உயர்த்துவது ஆகியன.   இந்த சங்கத்தின் பயன்கள், சாதி, இன, பாலின மற்றும் மொழி பாகுபாடு இன்றி அனைத்து பொதுமக்களுக்கும் பயன்படும்.

இந்த அடிப்படையில்தான் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை கிரிக்கெட் கிளப் ஆகிய இரண்டு அமைப்புக்களுக்கும் சேர்த்து 1965ம் ஆண்டு முதல், தற்போது உள்ள சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் குத்தகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.  இந்த இடத்தின் மொத்த அளவு 12 ஏக்கர் 23 கிரவுண்டுகள் மற்றும் 2053 சதுர அடி ஆகும்.



இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் ஒருவர், "அறுபதுகளின் தொடக்கத்தில் முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு, மகளிருக்காகவே வெள்ளையர்களால் கட்டப்பட்ட கோஷா மருத்துவமனை என்ற கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கனவு இருந்தது.   பெருகிக் கொண்டு போகும் இந்த மக்கள் தொகைக்கு ஈடு செய்யும் வகையில், ஆசியாவிலேயே பெரிய மருத்துமனையாக கோஷா மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தார்.  கோஷா மருத்துவமனையின் பின்புறம் இருந்த 12 ஏக்கர் நிலத்திலும், மிகப்பெரிய மருத்துவமனை கட்ட வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது.

அவருக்கு பின் முதலமைச்சராக இருந்த பக்தவச்சலமும் காமராஜரின் திட்டத்தை நிறைவேற்ற முனைந்தார்.  அந்த நேரத்தில், கிரிக்கெட் விளையாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் முழுமையாக வைத்திருந்த பார்ப்பனர்கள், காமராஜரை அணுகி, வெள்ளைக்காரனின் விளையாட்டை நாம் விளையாடினால்தான் அவர்களுக்கு நிகராக நாம் வளர முடியும். அவ்வாறு அவர்களுக்கு நிகராக வளர, இந்த இடத்தை ஒதுக்கினால், உலகத்தரத்தில் ஒரு மைதானம் அமைத்து, கிரிக்கெட் பயிற்சி அளிக்கலாம் என்றனர்.

அவர்களை நம்பிய காமராஜரும், பக்தவச்சலத்திடம், இந்த நிலத்தை அவர்களுக்கு ஒதுக்கித் தரும்படி கூறியதன் அடிப்படையிலேயே அந்த இடம் ஒதுக்கப்பட்டது.  ஆனால், அப்படி விளையாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இன்று மது விடுதி நடத்தி, அரை குறை ஆடைகளில் மகளிரை ஆட விட்டு வேடிக்கை பார்க்கின்றனர்" என்று வேதனைப்பட்டார் 

அரசு நிலங்களை அரசு நிலங்களை வணிகமல்லாத நோக்கத்துக்கு வழங்க வேண்டுமென்றால் அந்த நிலத்தின் சந்தை மதிப்பில் ஏழு சதவிகிதத்தை ஆண்டொன்றுக்கு குத்தகைத்தொகையாக செலுத்த வேண்டும். 

1965ம் ஆண்டு முதல், குத்தகை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.  அந்த அடிப்படையில், சராசரியாக ஆண்டுக்கு ரூ 50 ஆயிரம் என்ற அளவில் 06.06.1995 நாளிட்ட அரசாணை எண் 512 மூலமாக, தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் மற்றும், சென்னை கிரிக்கெட் கிளப்புக்கு குத்தகை புதுப்பிக்கப்படுகிறது.   இந்த குத்தகையின் படி, 20.04.1995 முதல் 19.04.2015 வரை, 20 ஆண்டுகளுக்கு இந்த அரசு இடம் கிரிக்கெட்டுக்காக இரண்டு அமைப்புகளுக்கும் வழங்கப்படுகிறது. 



குத்தகைத் தொகை 20.04.1995 அன்று உள்ளபடி, ரூபாய் 50 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டு குத்தகை புதுப்பிக்கப்படுகிறது.   அந்த அரசாணை "இந்த குத்தகை தொகை முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நடப்பில் இருக்கும் என்றும், அதன் பின்னர் மறுபரிசீலனை செய்யப்படும் என்ற சிறப்பு நிபந்தனையின் கீழ் புதுப்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கிறது.   

அதன்படி குத்தகைத் தொகை எப்போது மறு பரிசீலனை செய்யப்பட்டிருக்க வேண்டும் ? 19.04.2000ல்.   குத்தகையை 20 ஆண்டுகளுக்கு  நீடித்தது ஜெயலலிதா.  குத்தகையைத் தொகையை 2000ம் ஆண்டில் மறுபரிசீலனை செய்திருக்க வேண்டியது கருணாநிதி. 

மீண்டும் 2005ம் ஆண்டில் குத்தகைத் தொகையை மறுபரிசீலனை செய்திருக்க வேண்டியது ஜெயலலிதா.    2010ல் மீண்டும் ஆட்சியில் இருந்தது கருணாநிதி. 
ஆனால், இன்று வரை, இந்த குத்தகைத் தொகை மறுபரிசீலனை செய்யப்படவேயில்லை.  1993ம் ஆண்டு முதல் 2014 வரை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் எவ்வளவு சம்பாதித்திருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை.  

ஆனால், "நான் இருக்கும் வரை வேட்டி இருக்கும்"  என்று வீர முழக்கமிடும் ஜெயலலிதாவுக்கோ, "அய்யகோ... வேட்டிக்கு அவமானமா..... " என்று அரற்றும் கருணாநிதிக்கோ, அரசு நிலத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்களே... அதற்கான வாடகையையாவது குறைந்தபட்சம் மறுபரிசீலனை செய்து உயர்த்த வேண்டும் என்று துளியும் அக்கறை இல்லை.

சரி.   இப்படி மலிவான விலையில் அரசு நிலத்தை கையகப்படுத்தி வைத்திருக்கும் கிரிக்கெட் சங்கத்தினர், அரசுக்கு வருமான வரியாவது ஒழுங்காக செலுத்துகிறார்களா ? அதுவும் கிடையாது.  

2003ம் ஆண்டு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வருமான வரிச்சட்டம் 1961 பிரிவு 12AAன்படி, வருமான வரித்துறையில் பதிவு செய்து கொள்கிறது.  பரோபகார பணிகளில் (Charitable purposes) ஈடுபடும் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளிக்கும் பிரிவு இது.   1984ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு சுற்றறிக்கையின்படி,

“ ‘charitable purpose’ includes relief of the poor, education, medical relief and the advancement of any other object of general public utility.”

பரோபகார பணிகள் என்றால், ஏழைகளுக்கு உதவுவது, கல்விக்கு உதவுவது, மருத்துவ உதவிகள் செய்வது மற்றும் பொது நன்மைக்கான விஷயங்களில் ஈடுபடுவது. 

இந்தப் பிரிவில் உள்ள "any other object of general public utility" என்பதற்கான புதிய விளக்கம் 01.04.2009ம் ஆண்டு ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம் கொண்டு வரப்படுகிறது. அந்த திருத்தத்தின்படி, வியாபாரம், வணிகம், தொழில் அல்லது இது தொடர்பான பணிகளில் ஈடுபடுவது, பொது நன்மைக்கான பணிகளில் அடங்காது என்று விளக்கம் அளிக்கப்படுகிறது.  

இந்த புதிய விளக்கத்தை அடுத்து, வருமான வரித்துறை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை வரி கட்டுமாறும், பரோபகார பணிகளில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஈடுபடுகிறதா என்று வருமானவரித் துறை விரிவான ஆய்வை மேற்கொள்கிறது.

ஆய்வின் இறுதியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பரோபகார பணிகள் எதையும் மேற்கொள்ளவில்லை, மாறாக வியாபாரத்தில் மட்டுமே ஈடுபடுகிறது என்று முடிவெடுத்து, பரோபகாரப் பணிகளின் கீழ் இருந்த விதிவிலக்கை என்ற பதிவை ரத்து செய்து உத்தரவிடுகிறது.  இதை எதிர்த்து வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கிறது கிரிக்கெட் சங்கம்.

மேல் முறையீட்டின் போது, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு அளித்த 26 கோடி ரூபாயை வருமானமாக கருதக்கூடாது, மாறாக அது கிரிக்கெட் வளர்ச்சிக்காக அளிக்கப்பட்ட மான்யம் என்றும், வேறு பல காரணங்களையும் முன்வைக்கிறார்கள்.

வருமான வரித்துறையின் சார்பில், 'தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், போட்டிகள் நடக்கும் சமயங்களில் டிக்கெட் விற்பனை மூலமாக கணிசமான லாபத்தை சம்பாதிக்கிறது, ஐபிஎல் ஆட்டங்களிலும் ஏராளமான வருமானம் வருகிறது.  இது தவிரவும் விளம்பரங்களின் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது,’ என்று வாதிட்டனர். 



எந்தெந்த மாநிலங்களில் போட்டி நடைபெறுகிதோ, அந்தந்த  மாநிலங்களின் கிரிக்கெட் சங்கத்துக்கு, மத்திய கிரிக்கெட் வாரியம், பங்கு பிரித்துத் தருகிறது.
தவிரவும் பெரும்பாலான வருமானம், விளம்பரம் மூலமாகவும், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பதன் மூலமாகவும் வருகிறது.   

ஐபிஎல் என்ற விளையாட்டே முழுக்க முழுக்க வியாபாரம்.  அதில் விளையாடும் வீரர்கள் ஏலம் எடுக்கப்படுகிறார்கள்.  அந்த அணிகள் பல கோடிகள் கொடுத்து வீரர்களை வாங்குகின்றன.  மேலும் வருவாயை பெருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, விளையாட்டைத் தவிர்த்து மற்ற பல வேலைகளிலும் இச்சங்கம் ஈடுபடுகிறது, விளையாட்டை வளர்ப்பதற்காக என்று தொடங்கப்பட்ட இந்த சங்கம், அந்தப் பணிகளைத் தவிர மற்ற எல்லாப் பணிகளையும் செய்கிறது என்று இடித்துரைத்த வருமானவரித் துறை, ஐபிஎல் அழகிகள் ஆட்டத்தை எடுத்துக்காட்டாகவும் கூறுகிறது.  

2008-2009ம் ஆண்டில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மொத்த வருமானம் ரூ 34.25 கோடி.  இதில் ரூ 26.82 கோடி, இந்திய கிரிக்கெட் சங்கம் வழங்கியது.    இதில் ஐபிஎல் நடத்தியதற்காக வழங்கப்பட்ட ரூ 10 கோடியும் அடக்கம்.  ஐபிஎல் 1 நடத்தியதில் கிடைத்த லாபம் ரூ 2.90 கோடி.   அந்த ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வட்டியாக பெற்ற தொகை மட்டும் ரூ 3.47 கோடி.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த தீர்ப்பாயம் -

"ஐபிஎல் ஆட்டங்கள் வெறும் வணிகமே என்பதில் சந்தேகம் இல்லை.   ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் மிகப்பெரும் தொழில் அதிபர்களாகவும், சினிமா நட்சத்திரங்களாகவும் உள்ளனர். அவர்கள் ஏலத்தின் மூலம் வீரர்களை வாங்குகின்றனர். சிறந்த வீரருக்கு அதிகபட்ச விலை தரப்படுகிறது.  ஒவ்வொரு அணியும், சிறந்த வீரரை அதிக விலை கொடுத்து வாங்குகிறது.  இந்த அணிகளில் முதலீடு செய்யும், உரிமையாளர்கள், விளம்பரங்கள் மூலமாகவே தங்கள் மூலதனத்தை மீட்டு எடுக்கிறார்கள்.  ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறுவதே, முதலீட்டாளர்கள் லாபத்தை அறுவடை செய்வதற்காகத்தான்.  ஐபிஎல் விளையாட்டு, பொது நன்மைக்கான பரோபகாரம் என்பதை எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.  ஐபிஎல் விளையாட்டு, பெரும் பணம் புழங்கும் விளையாட்டு.  இன்னும் சொல்லப்போனால், திரைத்துறையைப் போல, அது ஒரு பொழுதுபோக்குத் தொழில். 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஐபிஎல் ஆட்டங்களைத் தவிரவும், நட்சத்திர கிரிக்கெட் நடத்துகிறது.   அதில் திரை நட்சத்திரங்கள் பங்கு பெறுகிறார்கள். இந்த நட்சத்திர கிரிக்கெட்டில் எந்த பொது நன்மையும் இல்லை.   இந்த நடவடிக்கைகள் எல்லாமே, புகழுக்காகவும் பணத்துக்காகவும் நடத்தப்படுவதே. 

வெளிப்படையாக சொன்னால், சிறு வட்டித் தொகை மற்றும் வாடகையை தவிர்த்தால் பெரும்பாலான வருமானம் விளம்பரம் மூலமாக மட்டுமே வருகிறது.    இந்த ஆட்டங்களுக்கான டிக்கெட் விலை மிக மிக அதிகம்.  சாதாரண குடிமகன் டிக்கெட் வாங்கி ஆட்டத்தை பார்ப்பதை நினைத்துப் பார்க்க முடியாத விலையில் விற்கப்படுகிறது.  பொது நன்மை என்பதை, ஏழை மக்களை ஒதுக்கி விட்டு பார்க்க முடியாது.  

பொது நன்மை என்று கூறுகிறீர்களே இந்த கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை சேரிகளில் வாழும் ஏழை மக்களுக்கு வழங்கினீர்களா என்று கேட்டதற்கு, அவர்களுக்கு வழங்குவதில்லை.  ஆனால், சமுதாயத்தின் மிக முக்கிய பிரமுகர்களுக்கு, உரிய வரியை செலுத்திய பிறகு இலவசமாக டிக்கெட் வழங்குகிறோம் என்று பதில் கூறினர். இந்த பதிலில் இருந்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயல்பாடு, பொது நன்மைக்கானது இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.


இன்னும் சொல்லப்போனால், அதிக லாபம் சம்பாதிக்க வேண்டுமென்பதற்காக, சியர் லீடர்கள் என்று கூறப்படும் பெண்களை ஆடவைத்து அதிக விளம்பரப்படுத்தி லாபம் சம்பாதிக்கிறது இச்சங்கம்." என்று கூறிய தீர்ப்பாயம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை வரி செலுத்துமாறும், எந்த சலுகையும் கிடையாது" என்றும் உத்தரவிடுகிறது.

இத்தீர்ப்பின் மூலம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்துக்காக செயல்படவில்லை என்பதும், இதன் செயல்பாடுகள் வணிக நோக்கத்திலேயே என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது. 

அதன்பிறகாவது தமிழக அரசு குத்தகையை மறுபரிசீலனை செய்து, வாடகையை உயர்த்த வேண்டுமா இல்லையா ?  இல்லையே. 2008-2009ம் ஆண்டில் வட்டியாக மட்டும் 2.90 கோடியை சம்பாதித்த ஒரு சங்கத்துக்கு, 12 ஏக்கர்களை வருடத்துக்கு 50 ஆயிரம் வாடகைக்கு வழங்கும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

அரசு நிலங்களை குத்தகைக்கு வழங்குவது குறித்த விதிகள், வருவாய் நிலை ஆணை 24A ல் கூறப்பட்டுள்ளது.  அதன்படி, வணிக நோக்கத்துக்காக இருந்தால் 14 சதவிகிதமும், வணிகமல்லாத நோக்கத்துக்கா இருந்தால் 7 சதவிகிதமும் குத்தகை தொகை வசூலிக்கப்பட வேண்டும் என்றும் அவ்விதி கூறுகிறது.   இந்த விதிகளெல்லாம் வருவாய்த் துறையில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரியாதா ?      அல்லது வருவாய் அமைச்சருக்கு   தெரியாதா  ?  அல்லது   ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும்தான்    தெரியாதா ?

வருவாய் நிலை ஆணை

அமெரிக்க துணைத் தூதரகத்தின் சார்பில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் சர்வதேச பள்ளி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.  இந்தப் பள்ளிக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியது.  இந்த நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட மொத்த பரப்பு  12.42 ஏக்கர்கள்.   முழுவதும் ஒரே இடத்தில் இல்லை.  சென்னை, மயிலாப்பூர், கொட்டிவாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் என வெவ்வேறு இடங்களில் உள்ளது.   அவ்வாறு பிரித்துப் பிரித்துக் கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஆண்டு குத்தகைத் தொகை எவ்வளவு தெரியுமா ?  ரூ 16.25 லட்சம்.  

2000ம் ஆண்டு ஒரு லட்சம் ரூபாயாகவிருந்த குத்தகைத் தொகை,  2005ம் ஆண்டு முதல் 1 லட்சத்து 25 லட்சமாக உயர்த்தப்பட்டது. 

அமெரிக்க நிறுவனத்துக்கு நிலம் வழங்கப்பட்ட அரசாணை

இந்த நிறுவனத்துக்கு இல்லாத சலுகை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதற்காக ?   

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிககள் யார் தெரியுமா ?  தலைவர் என்.சீனிவாசன்.  துணைத்தலைவர்கள் கல்பாத்தி எஸ்.அகோரம், யு.பிரபாகர் ராவ், எஸ்.ராகவன், மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்.

இதில் யு.பிரபாகர் ராவ் மற்றும் எஸ்.ராகவன் ஆகியோர் யாரென்று தெரியாது. கல்பாத்தி எஸ்.அகோரம் திரைப்படத் தயாரிப்பாளர்.   பி.எஸ்.ராமன் வழக்கறிஞர்.  இவர்களுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன தொடர்பு ?



ஆனால், இப்படி ஒரு சங்கர மடம் போலத்தான் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தப்பட்டு வருகிறது என்பது முகத்தில் அறையும் உண்மை. 

உச்சநீதிமன்றமே, கிரிக்கெட் லாபியிடம் மண்டியிடும் அளவுக்கு கிரிக்கெட் மாஃபியா இன்று அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் இருந்துகொண்டு உள்ள ஒரு நபர், அந்த வாரியமே நடத்தும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளும் ஒரு அணியின் உரிமையாளராக இருப்பது ஒரு மிகப்பெரிய மோசடி என்பது குழந்தைக்குக் கூட தெரியும். இதை எதிர்த்து ஏ.சி முத்தையா வழக்கு தொடர்ந்தார்.  அந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜேஎம்.பன்சால் மற்றும் கியான் சுதா மிஷ்ரா ஆகியோர் விசாரித்தனர்.    நீதிபதி பன்சால், சீனிவாசன் தலைவராக தொடர்வதில் தவறே இல்லை என்று தீர்ப்பு எழுதினார்.  க்யான் சுதா மிஷ்ரா, தவறு என்று எழுதினார்.  இதையடுத்து, இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. இது நடந்தது செப்டம்பர் 2011.   ஆனால், இன்று வரை அந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரிக்கவே தொடங்கவில்லை.



என்.சீனிவாசனின் மருமகன் ஐபிஎல் போட்டிகளில் பெட்டிங்கில் ஈடுபட்டு சிக்கியபோதே, தார்மீக அடிப்படையில் சீனிவாசன் பதவி விலகியிருக்க வேண்டும்.  ஆனால், சற்றும் கூச்ச நாச்சமில்லாமல், பதவியில் தொடர்கிறார் சீனிவாசன்.   அதன் பிறகும், அவர் தொடரக்கூடாது, அவர் உரிமை வகிக்கும் அணி மீது பெட்டிங் புகார்கள் இருக்கின்றன என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படுகிறது.  உச்சநீதிமன்றம், ஐபிஎல் போட்டிகளுக்கு மட்டும் வேறு தலைவர் என்று சுனில் கவாஸ்கரை தலைவராக நியமித்து ஒரு வினோதமான தீர்ப்பை வழங்குகிறது.

ஆனால், இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நபரான சீனிவாசன், சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவராகிறார்.  ராய்ட்டர்ஸ், பிபிசி போன்ற ஊடகங்களின் விளையாட்டு நிருபர்களிடம், என்னை பற்றி எழுதினால், இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்களை நீங்கள் பார்க்க அனுமதி மறுப்பேன் என்கிறார்.  அந்த அளவுக்கு அகங்காரத்தோடு நடந்து கொள்கிறார். இந்த மோசடியை உச்சநீதிமன்றமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றால், கிரிக்கெட் எத்தகைய விஸ்வரூப வளர்ச்சி எடுத்து, அரசியல், அதிகாரம் மற்றும் நீதித்துறையையே ஆட்டி வைக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

என்.சீனிவாசனோடு, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை விவாதிக்கிறார். உயர்நீதிமன்ற நீதிபதிகளோ, சீனிவாசனை பகைத்துக் கொண்டால், கிரிக்கெட் போட்டிகளுக்கு இலவச பாஸ் கிடைக்காது என்பது போன்ற அற்ப காரணங்களுக்காக, சீனிவாசனை மயிலிறகால் வருடிக் கொடுக்கின்றனர். 

எனவேயே 500 ஆண்டுகளானாலும் சேப்பாக்கம் மைதான குத்தகைத் தொகை உயர்த்தப்படப்போவதில்லை, என்ன வருமானம், யார் அனுபவிக்கிறார்கள் என்ற கேள்விமுறையெல்லாம் கிடையாது. விஐபிகளுக்குத் தொடர்ந்து பாஸ் கிடைத்துக்கொண்டிருக்கும், மானாட மயிலாடவுக்கு ஒரு மாற்றாக சியர் லீடர்சை அனைவரும் கண்டு களிக்கலாம்.

இப்பிரச்சினை தொடர்பான ஆவணங்களனைத்தையும் அளித்தும், எந்த பத்திரிகையும் இச் செய்தியினை வெளியிட முன்வரவில்லை. இந்நிலையில் எங்களாலியன்றது தமிழ்கூறு நல்லுலகுக்கு.

என் ஸ்ரீனிவாசன் அவர்களே உங்களுக்குக் கோபம் வந்தால் அது நியாயமானதே. இந்திய கிரிக்கெட்டின் மாண்பினை உலகெங்கும் எடுத்துச் செல்கிறீர்கள் என்பதால் எங்களுக்கும் தமிழன் என்ற முறையில் பெருமைதானே, பாசம்தானே. கட்டுமர விசுவாசத்தில் ஓரளவாவது எங்களுக்கிருக்க வேண்டாமா?


எனவே அறச்சினத்தில் கட்டுரை எழுதிவிட்டோம். ஆனால் உங்களுக்கு உதவவேண்டுமெனவும் நினைக்கிறோம். நீங்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ளவேண்டிய நபர் மேதகு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம்.
எப்படியாவது சவுக்கை ஒழித்துவிடவேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார். இதுவரை அந்த உயரிய நோக்கம் நிறைவேறவில்லை. உங்களுக்குத் தான் எல்லா வழிகளும் தெரியுமே.

நீங்கள் இருவரும் இயற்கையான கூட்டாளிகள். எனவே ஒன்று சேர்ந்து, ஆலோசித்து சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்யுங்கள்.

கட்டுரையையும், இந்தத் தளத்தையும் தடை செய்ய நீங்கள் அணுக வேண்டிய முகவரி.  சவுக்கு தொடர்பான அனைத்து கட்டப்பஞ்சாயத்துகளையும் கவனிப்பவர் இவர் ஒருவரே. 

சிரில் தாமரைச் செல்வம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை 600 104

பின்னால் உள்ள படத்தில், Law என்ற வார்தை தவறுதலாக வந்துள்ளது.

கருணாநிதி ஒரு நேர்மையாளர்.

நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள், தன்னுடைய இளையதளத்தில், கருணாநிதியின் சொத்துக்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பியிருந்தார். 




அந்த கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை விட்டு, பதில் கேள்வி கேட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. 

மார்கண்டேய கட்ஜுவின் அறிக்கைக்கு
கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்!

திரு.மார்கண்டேய கட்ஜு அவர்கள், கழகத் தலைவர் கலைஞர் அவர்களை, தனிநபர் விமர்சனமாக சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்தக் கேள்விகளைக் கேட்பதற்கு முன்பு, இந்தக் கேள்விகளை கேட்க திரு.கட்ஜுக்கு எள் முனையளவாவது தகுதி உண்டா? என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு பொது அமைப்பான நீதிமன்றத்தின் நீதிபதியாய் இருந்து ஓய்வு பெற்று, இன்று பத்திரிக்கை சுதந்திரத்தையும், உண்மைத் தன்மையும் காக்க வேண்டிய இடத்தில் இருந்துகொண்டு, வருணாசிரம தர்மத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரித்து பாகுபாடு பார்த்து அவதூறு சேற்றைக் கொண்டு தனிநபர் தாக்குதலில் நீங்கள் ஈடுபடலாமா ?



கழகத் தலைவர் கலைஞர் அவர்கள், "நீதிபதியின் பதவி குறித்து எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்று தாங்கள் கூறிய கருத்தை விவாதப்பொருளாக ஆக்க விரும்பவில்லை" என்று கூறியதற்குக் காரணம் - நீங்கள் வகித்த மேன்மைதங்கிய பொறுப்புகளே ஆகும். ஆனால் அந்த மேன்மைதங்கிய பொறுப்புகளில் இவ்வளவு கீழ்த்தரமான சிந்தனை கொண்ட ஒரு மனிதர் இருந்துள்ளார் என்று நினைக்கும்பொழுது உள்ளபடியே வெட்கப்படுகிறோம்.

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரை, தமிழினத்தின் பாதுகாவலரை, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் அரணாய் விளங்கும், தலைவர் கலைஞரைப் பார்த்து கேள்வி கேட்கும் நீங்கள் உங்கள் வீட்டுக் கண்ணாடி முன் நின்று நீங்கள் கேட்ட கேள்விகளை உங்களுக்கு பொருத்திப் பாருங்கள்.

தி.மு.கழகமும், அதன் தலைமையும் தெளிவாக தங்கள் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த பின்பும், திரும்பத் திரும்ப கழகத் தலைவர் குறித்த தனிமனித தாக்குதலை ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது. தனக்கு கோபாலபுரம் இல்லத்தைத் தவிர வேறு சொத்துகள் இல்லை என்றும், தன் காலத்துக்கு பிறகு தன் குடும்பத்தாரின் ஒப்புதலோடு அதனை பொதுமருத்துவமனையாக மாற்ற விருப்பம் தெரிவித்து அதனை மக்களுக்கு எழுதி வைத்து விட்டேன் என்று பதில் கூறியதற்கு பின்னரும், இப்படி தனிநபர் தாக்குதலை தொடுப்பது தரமற்ற, உள்நோக்க செயல். நீங்கள் கேட்டுள்ள எல்லாக் கேள்விகளுக்கும், வருமான வரித்துறை தெளிவான பதிலையும் விளக்கத்தையும் தரும் என்ற அளவோடு, நீங்கள் குற்றம்சாட்டியுள்ள தலைவரின் பிள்ளைகள், பொது வாழ்வில் சிறப்போடு  செயல்பட்டு வரும் நபர்கள். அவர்கள் வருடந்தோறும் வருமான வரி செலுத்தி, அவர்களுக்கான வரும் வருமானத்திற்கான வரியை மிக சரியான நேரத்தில் செலுத்தி, ஒரு நல்ல குடிமகன்களாக செயல்பட்டு வருகின்றனர்.

ஒரு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பொது வாழ்வில் உள்ள தலைவர்கள் மீது இப்படி அடிப்படை அறிவு கூட இல்லாமல் தனிநபர் தாக்குதலில் ஈடுபவது ஏன் ?

மீண்டும் மீண்டும் தலைவர் கலைஞர், "தங்களின் கருத்தை விவாதப் பொருளாக மாற்ற வேண்டாம்" என்று கூறியதற்குப் பிறகும் நீங்கள் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது எதற்காக? உங்களை தூண்டிய சக்தி எது? அதற்காக நிர்ணயிக்கப்பட்ட விலை என்ன?

1) தாங்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபொழுது உங்கள் மீது வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு இன்னமும் பதில் கூற முற்படவில்லை.

2) சாதி ரீதியிலான அடக்குமுறை, பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உங்களால் இன்று வரை பதில் கூற முடியவில்லை.

3) நீங்கள் நீதிபதியாக இருந்தபொழுது உங்கள் சொத்துக் கணக்கு என்ன?

4) தற்பொழுது வகித்துவரும் பிரஸ் கவுன்சில் சேர்மன் பொறுப்பில் இருக்கும் தங்களின் சொத்து மதிப்பு என்ன?

5) உங்கள் தாத்தா கைலாஷ்நாத் கட்ஜுவின் சொத்து மதிப்பு என்ன ?

6) உங்கள் தந்தை எஸ்.என். கட்ஜுவின் சொத்து மதிப்பு என்ன ?

7) உங்கள் மனைவி ரூபா அவர்களின் சொத்து மதிப்பு என்ன ?

8) உங்கள் மகள் மற்றும் மருமகனின் சொத்து மதிப்பு என்ன ?

9) உங்கள் மகன் மற்றும் மருமகளின் சொத்து மதிப்பு என்ன ?

10) நீங்கள் சென்னைக்கு அடிக்கடி வந்து போகும் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பண்ணை இல்லத்தின் சொத்து மதிப்பு என்ன ?

11) உங்கள் பண்ணை இல்லத்தில் நடப்பது என்ன? பக்கத்திலேயே வேறு ஒரு பெண்ணுக்கு பண்ணையில்லம் வாங்கிக் கொடுத்ததாக சொல்லப் படுகிறதே! அந்த சொத்தின் மதிப்பு என்ன? தங்களின் அறிக்கைகளின் பின்னணி அந்தப் பெண்தான் என்பது உண்மையா ?

12) நீங்கள் புதுடில்லி நீதிமன்றத்திற்கு சென்றபொழுது சென்னையில் இருந்து ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு போய் வேறு காரணங்கள் சொல்லி அவரை உங்களோடு இரண்டு மாதம் தங்க வைத்ததாக சொல்லப்படுகிறதே !
அதற்கான செலவை யார் செய்தது ? உங்களை ஆட்டிப் படைக்கும் அரசியல் சக்தியா ?

மேலும் உங்கள் மாமா திரு. பி.என்.கட்ஜு அவர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்பு அவருக்கு இருந்த சொத்துக்கள் எவ்வளவு? இப்பொழுது உங்கள் குடும்பத்திற்கு உங்கள் மாமா மற்றும் உங்கள் உறவினர் சசிதரூரின் முன்னாள் மனைவியின் குடும்ப சொத்துகள் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? இப்படி பல கேள்விகளை உங்கள் முன் வைக்கிறோம்.

திரு. கட்ஜு அவர்களே நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன ?
தலைவர் கலைஞர் குறித்து தாங்கள் கூறியவற்றை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதற்காக நீங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.
திரும்பத் திரும்ப தலைவர் கலைஞர் அவர்களின் மீது தனிநபர் தாக்குதல் தொடுத்தும் அவதூறு கருத்துகள் பேசியும் வந்தால் உங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கிறேன்.

"அண்ணா அறிவாலயம்" ஆர்.எஸ். பாரதி,
சென்னை - 18. அமைப்புச் செயலாளர்,
நாள் : 11-8-2014. தி.மு.க.