Friday, August 20, 2010

சொந்த வேலைக்கும் ரகசிய நிதியா ?


ஜாபர் சார். நீங்க திருந்தவே மாட்டீங்களா ?

எத்தனை வாட்டி சார் உங்களுக்கு சொல்றது ?

உங்க சொந்த வேலைக்கு திண்டுக்கல் போறதுக்கு கூட ரகசிய நிதியிலேர்ந்தா டிக்கட் வாங்குவீங்க ?



மதுரையிலேயோ, திண்டுக்கலிலோ அரசுப் பணி எதுவும் கிடையாது. அலுவல் ரீதியான கூட்டமும் கிடையாது. முதலமைச்சர் கிட்டக் கூட சொல்லாம அப்படி என்ன சார் உங்களுக்கு திண்டுக்கல்லுல வேலை ?

சரி நீங்க பெரிய அதிகாரி. நாலு எடத்துக்கு போறது வழக்கம் தான். உங்க சொந்த வேலையா போகும் போதாவது சொந்தக் காசை செலவழிக்க மாட்டீங்களா ?

நீங்க ரகசிய நிதிய ஆட்டையப் போடுறத சாக்கா வைச்சு, ராஜ்குமார் டிஎஸ்பி என்ன பண்ணிக்கிட்டு இருக்கார் தெரியுமா ? யார் கிட்ட என்ன பேசிகிட்டு இருக்கார் தெரியுமா ? அந்த ஆள கூப்புட்டு கேளுங்க.

ஆமா பணத்தை சேத்து சேத்து வச்சு திங்கவா சார் போறீங்க ? அடிக்கடி ப்ளைட்டுல டெல்லிக்கு போறீங்களே ? ஒரு நாள் ப்ளைட் ஆக்சிடெண்ட் ஆனா மொத்தமா போயிடும் சார். “காதற்ற ஊசியும் வாராது கண் கடைவழிக்கே“ ன்ற பாட்ட நீங்க படிச்சதே இல்லையா ?

கொள்ளை அடிங்க. அதுக்கு ஒரு அளவு வேணாமா ? திங்கற சோறு, ரகசிய நிதி. உடுத்துற துணி ரகசிய நிதி. ஊருக்கு போறதுக்கு டிக்கெட்டு ரகசிய நிதி. தொண்டாமுத்தூர் ரேவ் பார்ட்டிக்கு நீங்க செலவு பண்ணல. அது ஓசி. சம்பளம், சம்பளம்னு ஒன்னு கொடுக்கறாங்களே அரசாங்கத்துல. அதை என்னதான் சார் செய்வீங்க ?



உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

என்று குரானில் கூறப்பட்டிருக்கிறதே இதை படித்தீர்களா ஜாபர் சேட் சார் ? கடவுள் நம்பிக்கை இருக்கா இல்ல சவுக்கு மாதிரி நாத்தீகரா ?

கடவுளுக்கு உண்மையா இல்லை. உங்கள் மனைவிக்கு உண்மையாக இல்லை. நெருங்கிய நண்பர் காமராஜுக்கு உண்மையா இல்லை. உங்களை இப்படிப்பட்ட இடத்தில் வைத்து தமிழ்நாட்டையே குட்டிச் சுவராக்கிக் கொண்டு இருக்கும் கருணாநிதிக்கும் விசுவாசமாக இல்லை.

யாருக்குத்தான் விசுவாசமாக இருப்பீர்கள் ஜாபர் ?

நீங்க செலவு பண்ற ரகசிய நிதியின் ஒவ்வொரு பைசாவும், சாலையில் குப்பை வாருபவனும், கழிவறையை சுத்தம் செய்பவனும், முடி திருத்துபவனும், சாலையில் கடை வைத்திருப்பவனும் கட்டும் வரிப்பணம் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் ஜாபர். அது மக்கள் பணம். நீங்கள் உல்லாசமாக இருக்க வழங்கப் பட்டது இல்லை.

இனிமேலாவது உங்க சொந்த வேலையா போகும் போதாவது, பாக்கெட்லேர்ந்து பணத்தக் கொஞ்சம் எடுங்க சார்.

அனானியாக வந்து கெட்ட வார்த்தையில திட்டியெல்லாம் கமெண்ட் போடாதீங்க சார். நான் பப்ளிஷ் பண்ண மாட்டேன். பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கங்க. என்ன ?

நீங்க பெரிய மனுஷன் இல்லண்னு சிபி.சிஐடில பேசிக்கறாங்களாமே சார் தெரியுமா ?

ஏன் சார் ? ஏற்கனவே மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லி ஒரு பொய் கேசு போட்டீங்க. அதுவே தப்பு. அப்புறம் ஏன் சார் சிபி.சிஐடி ஏடிஜிபி அர்ச்சனா ராமசுந்தரத்துக்கிட்ட பேசி, சைபர் க்ரைம் செல்ல வச்சு சவுக்கு மேல இன்னொரு கேசு போடுங்கன்னு சொன்னீங்க ? உங்களுக்காக ரிஸ்க் எடுக்க அந்த அம்மா என்ன மதுரவாயல் இன்ஸ்பெக்டர் தமிர்வாணன் மாதிரி லூசா ?

உங்களப் பத்தி என்ன கமென்ட் அடிச்சாங்களாம் தெரியுமா ? What happened to IG Intelligence ? Why is he picking up unnecessary fights like this ? Is he out of his mind ? ன்னு சொன்னாங்களாம் சார். போன வாட்டி கோர்ட்டுக்கு வந்தப்போ, சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தான் சொன்னாரு. சிபி.சிஐடி பூரா இதுதான் பேச்சாம்.

ஏன் சார் உங்களுக்கு இந்த வேலை ?

அப்புறம் சார். டென்ஷன்ல நெறய்ய சிகரெட் புடிக்கிறீங்க போலருக்கு. கொறச்சுக்கங்க சார். உடம்புக்கு கெடுதி. டென்ஷன் ஏறாம இருக்கணும்னா சவுக்கு படிக்காதீங்க. டென்ஷன் ஏறாது. ஆயிரம்தான் இருந்தாலும், சவுக்குக்கு உங்க மேல ஒரு பாசம் உண்டு சார்.

அடுத்த பதிவுல சந்திக்கலாம் சார். வர்றேன் சார். உடம்ப பாத்துக்கங்க சார்.
சவுக்கு

பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா.



ஏறக்குறைய அனைத்து தலைப்புகளிலும் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தி முடித்து விட்டதால் இப்பொழுது கருணாநிதியை எதற்காக பாராட்டுவது என்று “கருணாநிதியை பாராட்டும் துறையின்“ அமைச்சர் ஜெகதரட்சகனும், துணை அமைச்சர் துரை முருகனும் உட்கார்ந்து யோசிக்கின்றனர்.




திடீரென்று அவர்களுக்கு தோன்றிய யோசனை, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த டெண்டுல்கரை பாராட்டிய கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தினால் என்ன என்று யோசனை செய்ததும், அருமையான ஒரு யோசனையாக தோன்ற, உடனடியாக விழா ஏற்பாட்டில் இறங்கினர்.

விழாவுக்கு டெண்டுல்கரை அழைப்பது என்று முடிவெடுக்கப் பட்டது. டெண்டுல்கரை அழைக்கும் பொறுப்பு வி.சி.குகநாதனிடம் ஒப்படைக்கப் பட்டது. ஆஸ்திரேலியாவில் ஒரு நாள் தொடரில் இருந்த டெண்டுல்கர் வர இயலாது என்று தெரிவித்ததும், சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரேயைத் தொடர்பு கொண்டு, டெண்டுல்கரை விழாவுக்கு அழைத்ததும், டெண்டுல்கர் உடனடியாக ஒப்புக் கொண்டார். இனி விழா காட்சிகள்.

விழாவுக்கு, வழக்கமான ஜால்ரா கம்பேனிகளான ரஜினிகாந்த், கமலஹாசன், ஜெகதரட்சகன், துரைமுருகன், வாலி, வைரமுத்து, ஆகியோர் வருகை தந்திருந்தனர். டெண்டுல்கர் ஒன்றுமே புரியாமல் பேந்த பேந்த விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.




முதலில் விழாவுக்கு தலைமையேற்று, ஜெகதரட்சகன் பேசினார்.



“திருப்புகழை பாடப்பாட வாய் மணக்கும் என்பார்கள். அது பொய் வாக்கு. என் தலைவனை பாடப் பாட வாய் மட்டுமல்ல, என் உடலே மணக்கிறது.

எங்கோ தெருவில் ஏழையாய் ஒரு இன்ஜினியரிங் காலேஜும், மெடிக்கல் காலேஜும் நடத்திக் கொண்டிருந்த என்னை இன்று மந்திரியாக்கி அழகு பார்தது என் தலைவன் தான்.
இந்தியாவிலே எங்கேயாவது ஒரு இடத்திலாவது முதலமைச்சரின் தொகுதியிலே கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கிறதா ?

ஆனால் என் தலைவனின் தொகுதியிலே கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கிறது. இருபதுக்கு இருபது கிரிக்கேட் போட்டி நடைபெறும் நாட்களில் என் தலைவன், சட்டமன்றத்துக்கு செல்வதைக் கூட தவிர்த்து விட்டு டிவி முன்னால் உட்கார்ந்திருப்பார் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ?


செம்மொழி மாநாடு நடைபெறும் கொடீசியா அரங்கிலே மாநாட்டு தொடங்கும் முன், அங்கே ஒரு கிரிக்கெட் போட்டியை நடத்தி விட்டுத்தான் மாநாட்டை தொடங்க வேண்டும் என்பதை இன்றைய தினத்திலே என் தலைவனிடம் கோரிக்கையாக வைக்கிறேன். அந்த விழாவிலே மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆடும் நாட்டிய நங்கைகளை அரங்கத்திலே கிரிக்கெட் போட்டி நடைபெறும் வேளையில் ஆட அனுமதிக்க வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கிறேன். “


அடுத்து துரை முருகன். “ அப்போல்லாம், இந்தி எதிர்ப்பு போராட்ட காலம். நானு, தலைவரு எல்லாம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துலே கலந்து கிட்டு சிறையிலே இருந்தப்போவே, சிறைக்குள்ளேயே கிரிக்கெட் விளையாடியிருக்கோம் என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.



கழகத்தில், இளைஞர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி போல, கிரிக்கெட் அணியும் ஒன்று உருவாக்க வேண்டும் என்பதை இந்த நேரத்திலே வேண்டுகோளாய் வைக்கிறேன். அந்த கிரிக்கெட் அணிக்கு துணை முதல்வரே தலைமை தாங்க வேண்டும் என்பதையும் வேண்டுகோளாய் வைக்கிறேன்.

தலைவருக்கு கிரிக்கெட் விளையாட்டில் இருந்த ஆர்வத்தின் காரணமாகவே, சட்டசபை கலவரத்தில், பட்ஜெட் புத்தகங்கள் அவர் மீது தூக்கி வீசப்பட்ட போதெல்லாம் அருமையாக கேட்ச் பிடித்து தன் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் படித்தாலும் தலைவர் கிரிக்கெட் விளையாட்டில் சூரர்.

ஆனால் கான்வென்ட்டில் படித்த சில திமிர் பிடித்தவர்களுக்கு, கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியுமா ? டெண்டுல்கர் இரட்டைச் சதம் அடித்தாலும் என் தலைவரைப் போல இரண்டு மனைவிகள் உண்டா அவருக்கு. என் தலைவரின் சாதனைகளுக்கு முன்னால் டெண்டுல்கரின் இரட்டைச் சதம் ஜுஜுபி என்று சொல்லிக் கொள்கிறேன்.“ (இதைக் கேட்டதும் கருணாநிதி விழுந்து விழுந்து சிரிக்கிறார்.)

அடுத்து வாலிபக் கவிஞர் வாலி.




“ கிரிக்கெட்டு கிரிக்கெட்டு
உன் குடும்ப பிரச்சினைய நீ சரிக்கட்டு !

நீ நடந்தாலே ஜல்லிக்கட்டு
தேர்தல்ல நீ நடத்துவ மல்லுக்கட்டு

உன் விழாவுக்கு நான் வந்திருக்கேன் மெனக்கெட்டு..
உன்னைப் பார்த்ததும் என் மனசு ஓடுது தறிக்கெட்டு

அரசியல் உனக்கு ஒரு விளையாட்டு
உனக்காக நான் பாடுறேன் தமிழ்ப்பாட்டு

புடவைக்கு மேச்சிங் ஜாக்கெட்டு
உன்னால நிரம்புது என் பாக்கெட்டு

தேர்தல்ல நீ எடுத்த பல விக்கெட்டு
உன்னை எதுத்தவங்க உடைஞ்ச பக்கெட்டு

கிரிக்கெட்டு கிரிக்கெட்டு
உன் குடும்ப பிரச்சினைய நீ சரிக்கட்டு ! “


அடுத்து வைரக் கவிஞர் வைரமுத்து.




“ டெண்டுல்கருக்கு வாழ்த்து தெரிவித்த சிவப்புச் சூரியனே
உன்னைக் கண்டு ஓடுவான் கைபர் கணவாய் ஆரியனே

நீ டெண்டுல்கருக்கு தெரிவித்தது வாழ்த்து அல்ல… …
நீ தெரிவிக்காதது எதுவுமே வாழ்த்தும் அல்ல

உன் பெயரைச் சொன்னாலே பிட்ச் அதிரும்
ஸ்டெம்பு எகிரும் மைதானம் நடுநடுங்கும்

எல்லோரும் மேட்ச் ஃபிக்சிங்தான் செய்வார்கள்
நீ மைதானத்தில் உள்ளவர்களுக்கு கவர் கொடுத்து
மைதானத்தையே ஃபிக்ஸ் செய்தாய்.

மொத்தத்தில் நீ ஒரு புலிக்குட்டி
உனக்கு முன்னால் டெண்டுல்கள் ஒரு எலிக்குட்டி

அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.




கலைஞர்ஜி இன்னக்கி நீங்க டெண்டுல்கருக்கு வாழ்த்து சொல்லிருக்கீங்க. அதை நான் வரவேற்கிறேன். ஏன்னா நான் உங்களுக்கு வாழ்த்து சொல்றேன். நான் எப்போ வாழ்த்து சொல்வேன், எதுக்கு வாழ்த்து சொல்வேன்னு எனக்கே தெரியாது. ஆனா உங்களுக்கு டெய்லி நூறு வாழ்த்தாவது வரும்.

பாபாஜி கூட இமயமலேல்ல கிரிக்கெட் விளையாடுவார். நான் அடிக்கடி இமயமலேக்கு ஏன் போறேன்னு நெறய பேருக்கு தெரியாது. அங்கே கிரிக்கெட் விளையாடத்தான் நான் போறேன். நான் இமயமலைலே கிரிக்கெட் விளையாடும்போது கூட கலைஞர்ஜி எனக்கு போன் போட்டு கேம் எப்படிப் போகுதுன்னு கேட்பார்.

கலைஞர்ஜிக்கு கிரிக்கெட் மேலே இருக்க ஆர்வத்த பாத்து நான் கூட எந்திரன் படத்துல ரோபோ கிரிக்கெட் விளையாடுற மாதிரி ஒரு சீன் வெக்கலாம்னு யோசிச்சுருக்கேன். கிரிக்கெட் கேமே இந்தியாலேர்ந்து போனதுதான். நம்ம வேதத்துலேயும், உபநிஷத்துக்கள்ளேயும், கிரிக்கெட் பத்தி நெறய செய்தி இருக்கு.

கலைஞர்ஜிக்கு ஆண்டவனோட அருள் இருக்கறதாலத்தான் இன்னைக்கு டெண்டுல்கர பாராட்டிருக்கார்.

அடுத்து கமலஹாசன்.




மதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள், டெண்டுல்கருக்கு பாராட்டு தெரிவித்ததை பாராட்டுவதற்காக இன்று ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. இந்த விழா ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விழா. இந்த விழாவை நாங்கள் எங்கள் பேரப்பிள்ளைகளிடம் ஒரு தமிழன் எப்படி இன்னொரு கிரிக்கெட் வீரனை பாராட்டினான் என்று கூறி பெருமை படத் தக்கதொரு நிகழ்வு.


மராட்டிய மண்ணில் பிறந்த ஒரு வீரனை பாராட்டும் பண்பு கலைஞருக்கு இருக்கிறது. அதற்காக நானும் தமிழன் என்ற முறையில் கர்வம் கொள்கிறேன்.

நான் பராசக்தி படம் பார்த்து தமிழ் கற்றுக் கொண்டேன். அந்தப் படத்தில் ஒரு வசனம் வரும். நான் தென்றலைத் தீண்டியதில்லை. தீயைத் தாண்டியிருக்கிறேன் என்று. தாண்டியிருக்கிறேன் என்ற சொல்லாடலை கலைஞர் பயன்படுத்தியதே விரைவாக ரன் எடுக்கையில் க்ரீசை தாண்டுவதைத்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ?


இந்தத் தமிழனின் பண்பை கண்டு நான் வணங்குகிறேன். கலைஞர் மட்டும் அரசியலுக்கு வராமல் கிரிக்கெட் விளையாடப் போயிருந்தால், 50 ஓவர்கள் மட்டுமல்லாமல், 100 ஓவர்களையும் இவரே விளையாடி 4 சதங்கள் அடித்திருப்பார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

கருணாநிதி ஏற்புரை

என் அருமைத் தம்பி துரை முருகன் அவர்களே, அன்பு இளவல் ஜெகதரட்சகன் அவர்களே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே, கலைஞானி கமலஹாசன் அவர்களே, “கிரிக்கெட்டின் கில்லி” டெண்டுல்கர் அவர்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே.

இந்த விழா, இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என்று நான் எதிர்ப்பார்க்கவேயில்லை. நேற்று கூட, அமைச்சரவைக் கூட்டத்தை பாதியிலேயே முடித்து விட்டு, தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளை பார்த்து விட்டு இந்த விழா நடக்கும் அரங்கை பார்வையிட வந்தேன். அப்பொழுது, நாளை மாலைக்குள் இந்த வேலைகள் முடிவு பெறுமா என்ற அய்யம் எனக்கு இருந்தது.


ஆனால் தம்பி உடையான், படைக்கு அஞ்சான் என்ற வாக்கிற்கேற்ப என் தம்பிகள் இவ்விழாவை சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். எனக்கு பாராட்டு விழா என்பதே பிடிக்காது. அந்த நேரத்திலே, வீட்டில் உட்கார்ந்து ”ராணி 6, ராஜா யாரு ? ” அல்லது எனக்கு மிகவும் பிடித்த ”மானாட மயிலாட” பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன்.

ஆனால், அந்த நிகழ்ச்சிகளில் இருக்கும் அனைத்து நடனங்களும் இந்த நிகழ்ச்சியிலும் நடைபெறும் என்று என் அன்புத் தம்பிகள் அளித்த வாக்கிற்கிணங்கவே இவ்விழாவில் கலந்து கொள்ளச் சம்மதித்தேன்.


எனக்கா இப்படி பாராட்டு ? ஒரு கிரிக்கெட் வீரருக்கு வாழ்த்து தெரிவித்ததற்காக ஒரு பாராட்டு விழாவா என்று சில அறிக்கை வீராங்கனைகள் அறிக்கை வெளியிடக் கூடும். அவ்வாறு அவர்கள் அறிக்கை வெளியிடுவார்களேயானால் அது, நான் தமிழனாக, பிற்பட்ட சமுதாயத்தில் பிறந்தேன் என்பதை சுட்டிக் காட்டுவதற்காகவன்றி வேறு எதற்காக ? ஆனால் அதையெல்லாம் கண்டு துவள மாட்டான் இந்தக் கருணாநிதி.

அறிஞர் அண்ணா எதையும் தாங்கும் இதயம் வேண்டும் (மானங்கெட்டவன், சூடு சுரணை இல்லாதவன் என்பதற்கு வேறு வார்த்தைகள்) என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறார்.

டெண்டுல்கர் இரட்டைச் சதம் அடித்தவுடன் அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். அதைக் கண்ட என் அன்புத் தம்பிகள் துரை முருகனும் ஜெகதரட்சகனும் இதற்கு ஒரு விழா எடுக்க வேண்டும் என்றார்கள். நான் வேண்டாம், மக்கள் பணி இருக்கிறது என்று சொன்ன போதும் மிகவும் வற்புறுத்தினார்கள்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற அய்யன் வள்ளுவனின் வாக்கை ஏற்று இவ்விழாவிலே கலந்து கொள்ள சம்மதித்தேன்.

என் தம்பிகள், இவ்விழாவிற்கு, இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள அனைத்து வீரர்களையும், அம்பயர்களையும் அழைக்க வேண்டும் என்ற அவாவினை தெரிவித்தனர். அனைவரும் பொறாமைத் தீயில் கனன்று போவார்கள். இந்தத் தமிழனுக்கா இவ்வளவு அங்கீகாரம் என்று சினந்து போவார்கள் என்பதாலேயே தம்பி டெண்டுல்கரை மட்டும் அழைத்தால் போதும் என்று தன்னடக்கத்துடன் தெரிவித்தேன்.

தம்பி விஜய் கில்லி படத்தில் எதிரிகளை துவம்சம் செய்தது போல, தம்பி டெண்டுல்கர், எதிராளிகளின் பந்து வீச்சை துவம்சம் செய்ததாலேயே, அவரை ”கிரிக்கெட் கில்லி” என்று அழைத்தேன்.

அடுத்து, ஹாக்கி விளையாட்டு வீரர்களை பாராட்டலாம் என்று உத்தேசிக்கும் போதே, என் தம்பிகள் அடுத்த விழாவுக்கு தயாராவது எனக்குப் புரிகிறது. என் தம்பிகளின் அன்புக்கு தடை விதிக்க நான் யார் ?

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

விழா ஹைலைட்.

விழா நாயகன் கருணாநிதிக்கு தங்கத்தாலான பேட்டும், தங்கத்தாலான மூன்று ஸ்டெம்ப்புகளும் வழங்கப் பட்டன.

டெண்டுல்கருக்கு,


சமத்துவபுரத்தில் ஒரு வீட்டு மனையும்,

25 கிலோ 'ஒரு' ரூபாய் அரிசியும்,

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும்,

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினர் அட்டையும்

வழங்கப் பட்டது.



பின் குறிப்பு.

கலைஞர் நூறு கோப்புகளில் கையொப்பம் இட்டதை பாராட்டும் விதமாகவும், 100 நாட்கள் தலைமைச் செயலகம் சென்றதை பாராட்டும் விதமாகவும், பிரதமருக்கு ஒரு லட்சம் கடிதம் எழுதியதை பாராட்டும் விதமாகவும், அடுத்தடுத்து விழாக்கள் நடைபெற உள்ளதால், விழா மேடையை பிரிக்க வேண்டாம் என்று உத்தரவிடப் பட்டது.

தமிழ்மணம் நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதை ஒட்டி, இது ஒரு மீள் பதிவு


சவுக்கு

Thursday, August 19, 2010

சட்டம் மற்றும் ஒழுங்கீனம்.


இது என்ன சட்டம் மற்றும் ஒழுங்கீனம் என்று பார்க்கிறீர்களா ? சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் டிஜிபியின் ஒழுங்கீனத்தைப் பற்றி எழுதும் போது இந்த தலைப்பு பொருத்தம் தானே ?

சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி கே.ராதாகிருஷ்ணன் பற்றித்தான் இந்தப் பதிவு. இந்த ராதாகிருஷ்ணன் கழுவும் மீனில் நழுவும் மீன். பெரிய தில்லாலங்கடி.



இவரைப் பற்றி குறிப்பிடும் அதிகாரிகள் ஸ்னூக்கர் விளையாட்டோடு இவரை ஒப்பிடுவார்கள். ஸ்னூக்கர் விளையாட்டில், குச்சியால் வெள்ளைப் பந்தை தட்டினால், அது மற்றொரு பந்தை தட்டுமே அது போல தன்னுடைய எதிரியை இவர் தாக்கினால், பாதிக்கப் பட்டவர் இவரிடமே சென்று முறையிடுவது போல இருக்கும் இவர் நடவடிக்கைகள் என்று கூறுவார்கள்.

இந்த ராதாகிருஷ்ணன் மிகவும் கவலைப் படுவது தனது இமேஜுக்கு. இந்த இமேஜுக்காக ரொம்பவும் மெனக்கெடுவார். தன்னை ஒரு மிகச் சிறந்த அறிவாளியாகவும், சிந்தனையாளர் போலவும் காட்டிக் கொள்வார்.

1983ம் ஆண்டு நேரடி நியமனத்தில் யுபிஎஸ்சியால் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப் படுகிறார் ராதாகிருஷ்ணன். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புதூர் தான் இவரது சொந்த ஊர். நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர்.

இவருக்கு முனியசாமி மற்றும் கோவிந்தராஜ் என்று இரண்டு தம்பிகள். இவர்கள் தம்பிகள் அல்ல, தங்கக் கம்பிகள்.

பணியில் சேர்ந்த புதிதில், இந்த ராதாகிருஷ்ணன் போட்ட சீன் சொல்லி மாளாது. இவர் எஸ்பியாக இருக்கும் போது காவல் நிலையத்திற்கு ஆய்வுக்கு செல்வார். அப்போது அந்த காவல்நிலையத்தில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார். ஏன் என்று கேட்டால், அந்த காவல்நிலையத்தில் தண்ணீர் குடித்தால் அந்த காவல்நிலையத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்ட முடியாது என்பதாலாம். எப்பூடி…. ?
இதுதான் இவரது இஷ்டைல். செங்கல்பட்டு மாவட்டத்தில் எஸ்பியாக பணியாற்றும் போது இரவு நேரத்தில் எஸ்பி பங்களாவுக்கு வெளியே ஒரு லுங்கி அணிந்து கொண்டு வெறும் உள் பனியனோடு பொதுமக்கள் பார்க்கும் வகையில் பைல் பார்த்துக் கொண்டிருப்பார். அந்த பனியன் ஓட்டை ஓட்டையாக இருக்கும். இது எதற்கென்றால் “அய்யா எவ்ளோ எளிமையானவரா இருக்காரு ? “ என்று பொதுமக்களும், காவலர்களும் பேச வேண்டும். இது போன்ற வெற்றுத் தற்பெருமைகளுக்கு ராதாகிருஷ்ணன் பெயர் போனவர்.

இவரைப் பற்றிய ஒரு கண்றாவியான துணுக்கு செய்தி ஒன்று உண்டு. இவர் தென் மாவட்டம் ஒன்றில் எஸ்பியாக பணியாற்றிய போது, ஒரு காவலரை அனைவர் முன்பும் மிகுந்த அவமானப் படுத்தி விடுகிறார். அவமானப் படுத்தியதோடல்லாமல், அவருக்கு மெமோவும் கொடுத்து விடுகிறார். அவர் சாதாரண காவலர். நேரடி நியமனத்தில் வந்த ஐபிஎஸ் அதிகாரியை பகைக்க முடியுமா ? அந்த காவலர் என்ன செய்கிறார்… அலுவலகத்துக்கு மற்ற ஊழியர்கள் வரும் முன்பு வந்து ராதாகிருஷ்ணன் மேசையில் மலத்தை வைத்து விடுகிறார். ராதாகிருஷ்ணனுக்கு செய்தது யார் என்று தெரிந்தாலும் வெளியில் சொல்ல முடியாமல் மூடி மறைக்கிறார்.

ராதாகிருஷ்ணன் தனது மாமூல் வாழ்க்கையை துவக்கியது செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாக இருக்கையில். அங்கே சிறப்பு பிரிவு ஆய்வாளர் மூலமாக முதன் முதலாக வசூல் தொடங்குகிறது. பிறகு திருச்சியில் டிஐஜியாக மாறுதலில் செல்கிறார். அதன் பிறகு, இந்தயாவையே உலுக்கிய கோவை குண்டு வெடிப்பு நடக்கிறது.

இந்த குண்டு வெடிப்பை அடுத்து, ராதாகிருஷ்ணன் கோவை மாநகர ஆணையாளராக நியமிக்கப் படுகிறார். நியமிக்கப் பட்டவுடன், இந்த மாவட்டத்திற்கு எனக்கு வேண்டிய அதிகாரிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை வேண்டும் என்று முதல்வரிடம் கூற, அதற்கு ஒப்புதல் அளிக்கப் படுகிறது. இவருக்கு இரண்டு திறமையான, நேர்மையான எஸ்பிக்கள் நியமிக்கப் படுகின்றனர். இந்த இரண்டு எ ஸ்பிக்களும், ஏறக்குறைய நான்கு மாதங்கள், தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்கி கடுமையாக பணியாற்றி கோவை நகரை அமைதிக்கு கொண்டு வருகின்றனர். கோட்டை மேடு உள்ளிட்ட இடங்களில் பதுக்கப் பட்டிருந்த ஆயுதங்கள் மற்ற பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப் பட்டு, கோவை நகரம் குண்டு வெடிப்பை மறந்து சகஜ நிலைக்கு திரும்புகிறது.

இந்த இரண்டு எஸ்பிக்களும் இவ்வாறு பணியாற்றிக் கொண்டிருந்த போது ராதாகிருஷ்ணன் என்ன செய்து கொண்டிருந்தார் ? அவர் தமிழகத்திலேயே முதன் முறையாக “வார மாமூலை“ அறிமுகப் படுத்தி வசூல் செய்து கொண்டிருந்தார். அதற்கு முன், கோவை மாநகரில் பணி நியமனங்கள் ராதாகிருஷ்ணனின் தேர்வு என்று ஆகிவிட்டதால், இரண்டு தங்க கம்பிகள் பற்றிச் சொன்னேன் அல்லவா ? அந்த இரண்டு கம்பிகளும் கோவையில் ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் போஸ்டிங்குக்கு இவ்வளவு ரேட் என்று ஏலம் விட்டு வசூலை குவிக்கின்றனர். இந்த போஸ்டிங்குகள் அனைத்தும் மதுரையில் இருந்து நடத்துகின்றனர். போஸ்டிங் தேவைப்படும் ஆய்வாளர்களும், டிஎஸ்பிக்களும் மதுரை சென்று இவர்களுக்கு தேவையான தொகையை கொடுத்த பின், கோவையில் கோப்பு கையெழுத்தாகும்.

விருதுநகரில் ஒரு சாதாரண பிலிம் டிஸ்டிரிப்யூட்டராக இவர்கள் இருவரும் இருந்தனர். சினிமா விநியோகம் என்றால் பெரிய அளவில் இல்லை. பழைய எம்ஜிஆர் படங்கள், சிவாஜி படங்கள் போன்றவற்றை டூரிங் டாக்கீசில் வெளியிடும் விநியோகஸ்தர்கள். ராதாகிருஷ்ணன் கோவை ஆணையராக ஆன ஒரு வருடத்தில், ஷங்கரின் இந்தியன் படத்தை மதுரை நகரம் முழுவதும் வெளியிடும் உரிமையை வாங்கும் அளவுக்கு வளர்கின்றனர். 98ம் ஆண்டு வரை இவர்கள் இருவரும் வருமானவரி கட்டும் அளவுக்கு வளரவில்லை. ஆனால் 98க்கு பிறகு பெரிய தொழில் அதிபர்களாக ஆகின்றனர்.

கோவையிலிருந்து தொழில் அதிபர்கள், மில் முதலாளிகள், கோவையிலிருந்து மதுரை சென்று மாமூலை கட்டி விட்டு வருவார்கள். மாமூல் கொடுப்பதல்லாமல், இதை மதுரை வரை சென்று வேறு கொடுத்து விட்டு வர வேண்டுமே என்று அவர்கள் பல பேரிடம் புலம்புவது உண்டு.

இந்த வசூல் வேட்டையை முடித்த ராதாகிருஷ்ணன் சென்னை வடபழனியில் தனது மாமனார் பெயரில், பெரிய பங்களாவை வாங்குகிறார்.

கோவையில் கமிஷனராக ராதாகிருஷ்ணன் பணியை மெச்சி கருணாநிதி சட்டப் பேரவையில் “ராதாகிருஷ்ணன் போன்ற அதிகாரிகள் இருப்பதால்தான் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று பேசினார். இதுதான் ராதாகிருஷ்ணன் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருக்கிறது.

கருணாநிதியின் இந்தப் பேச்சுக்கு பிறகு ராதாகிருஷ்ணனின் தோரணையே மாறிப் போகிறது. மிகுந்த ஆணவம் கொண்டு அனைவரையும் சகட்டு மேனிக்கு எடுத்தெறிந்து பேசத் தொடங்குகிறார். கருணாநிதியின் இந்தப் பேச்சுக்கு பின்னால், உயர் அதிகாரிகளே ராதாகிருஷ்ணனைப் பார்த்து பம்முகிறார்கள். இதனால் ராதாகிருஷ்ணனின் ஆணவம் கூடுகிறது.

ஒரு முறை தனது இரண்டு துணை ஆணையர்களோடும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கும் போதும், வழக்கம் போல ஊழலை ஒழிக்க வேண்டும், காவல்துறையில் லஞ்சம் அறவே கூடாது என்று பெரிய லெக்சர் அடிக்கிறார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த துணை ஆணையர்களில் ஒருவர் “என்ன சார். நீங்க லஞ்சம் வாங்கக் கூடாதுன்னு சொல்றீங்க. ஆனா உங்க பேரச் சொல்லி உங்க தம்பிங்க ஊரு பூரா வசூல் பண்ணிக்கிட்டு இருக்காங்க“ என்று நேரடியாக சொல்லி விடுகிறார். அவ்வளவுதான். அந்த துணை ஆணையருக்கு மெமோ மீது மெமோ. தினமும் ஐந்து மெமோ. வேறு வழியின்றி இரண்டு துணை ஆணையர்களும் மாறுதல் பெற்று கோவையை விட்டு வெளியேறுகின்றனர்.




ராதாகிருஷ்ணன் கோவையில் சம்பாதித்ததே இரண்டு தலைமுறைக்கு போதும் என்கிறார்கள்.

அதிமுக ஆட்சிக்கு வருகிறது. வந்ததும் ராதாகிருஷ்ணன் ட்ரெயினிங் டிஐஜியாக இருக்கிறார். சிறிது காலம் கழித்து ராதாகிருஷ்ணன் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஐஜியாக மாறுதலில் வருகிறார்.

பல ஆண்டுகளாக ஒழுங்காக பணியாற்றிக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத் துறை நாசமாகப் போனது ராதாகிருஷ்ணன் வந்த பிறகுதான். இது பற்றியும், இப்போது ராதாகிருஷ்ணனும் இரண்டு தங்க கம்பிகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற விபரங்களும், இவர் ஜாபர் சேட்டுக்கே எப்படி அல்வா கொடுத்தார் என்ற விபரமும் விரைவில், சவுக்கு வாசகர்களுக்காக எக்ஸ்க்ளுசீவ்.
சவுக்கு

Wednesday, August 18, 2010

காக்கி உடையில் காட்டுமிராண்டிகள்.




மீண்டும் காக்கி உடை தனது கோர முகத்தை காட்டியிருக்கிறது. கருணாநிதி ஆட்சியாக இருந்தாலும் சரி. ஜெயலலிதா ஆட்சியாக இருந்தாலும் சரி. காவல் துறை எப்போதும் காட்டுமிராண்டித் துறையாகவே இருந்து வந்திருக்கிறது. பிடிக்காதவர்கள் மீது பொய் வழக்கு போடுவதானாலும் சரி, பிடித்தவர்கள் வீட்டில் சட்டி கழுவுவதானாலும் சரி, மனித உரிமை ஆர்வலர்ளை தீவிரவாதிகள் போல சித்தரித்து, சமயம் கிடைக்கும் போது, அவர்களை பொய் வழக்குகளில் சிக்க வைப்பதானாலும் சரி, அவ்வாறு சிக்கியவர்களை அடித்துத் துவைப்பதானாலும் சரி. இரண்டு ஆட்சிகளிலுமே காவல்துறையினர் காட்டுமிராண்டிகளாகத்தான் இருந்து வருகிறார்கள்.

அதற்கு முக்கிய காரணம், ஆட்சியாளர்களுக்கு இந்த காட்டுமிராண்டித்தனம் தேவைப் படுவதுதான். ஜெயலலிதாவுக்கு, கருணாநிதியை நள்ளிரவில் கையை முறுக்கி கைது செய்ய காட்டு மிராண்டிகள் தேவை. கருணாநிதிக்கு, ஈழத் தமிழர்களையும், அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களையும் அடித்துத் துவைக்க காட்டுமிராண்டிகள் தேவை.

அதனால், இரண்டு திராவிட கட்சிகளுமே காக்கிச் சட்டைகளை கையைக் காட்டினால் கடிக்கும் வேட்டை நாய்களாகவே உருவாக்கி வைத்திருக்கின்றன.

அந்த வேட்டை நாய்களுக்கு இரையானவர்தான் தோழர் இனியன். இவரின் இயற்பெயர் அஷோக் குமார். தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர். பெயருக்கேற்றார் போல இனியவர். சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.




சவுக்கு முதன் முதலாக இனியனை சந்தித்து இரண்டு ஆண்டுகள் இருக்கும். ஒடிசலாக ஐந்தடி உயரத்தில் ஒரு உருவம். தமிழக மக்கள் உரிமைக் கழக அலுவலகத்தில் தான் இனியனை சவுக்கு சந்தித்தது. அமைதியாக இருப்பார். அலுவலகத்துக்கு வந்தால் எதுவுமே பேச மாட்டார். சவுக்கு அவரிடம் பேசி கலாட்டா செய்தால் கூட, மென்மையாக ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு அமைதியாகத் தான் இருப்பார்.

மிக மிக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வருபவர். மதியம் உணவு உண்ண காசு இருக்காது. மதியம் கல்லூரி தொடங்கும் என்பதால், சவுக்கும் நண்பர்களும் உண்ணச் செல்லும் போது, அவரை கட்டாயம் அழைத்துச் செல்வோம். வழக்கறிஞர் புகழேந்தி அவரை காலை நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் தலைமை நீதிபதி நீதிமன்றம் சென்று, அங்கே நடக்கும் வழக்கு விவாதங்களை பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்ன அறிவுரையை ஏற்று, ஒரு வாரம் சென்றார். அங்கே ஆங்கிலத்தில் படித்த துரைகள் வாதாடுவதை கண்டு ஒன்றும் புரியாமல், பிறகு அலுவலகத்திலேயே இருப்பார். ஏதாவது வேலை சொன்னால் புன்னகையோடு செய்வார்.

இதுதான் இனியவன். அவர் படிப்பை தொடர, அமைப்பு பொருள் உதவி செய்து வந்தது. பிறகு சில நாட்கள் கழித்து, அமைப்பிடம் பொருள் உதவி பெறுவதற்கு சங்கடப் பட்டுக் கொண்டு, நான் வேலை பார்த்துக் கொண்டே படிக்கிறேன் என்று கூறி விட்டார்.

அமைதியாக இருந்த இனியவனின் மற்றொரு முகம் செங்கல்பட்டு அகதிகள் முகாமில், ப்ரேம் ஆனந்த் சின்கா என்ற எஸ்பியும், சேவியர் தன்ராஜ் என்ற உதவி எஸ்.பியும், சேர்ந்து நடத்திய நள்ளிரவு தாக்குதலுக்குப் பிறகு தெரிந்தது. தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் செங்கல்பட்டில் நடத்தப் பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பம்பரமாய் சுற்றி வேலை பார்த்தார். போஸ்டர் ஒட்டுவது முதல் ஆர்ப்பாட்டத்திற்கான அத்தனை வேலைகளையும் முன் நின்று செய்தார். செங்கல்பட்டு அகதிகள் மீதான காவல்துறையினரின் கொடிய தாக்குதல், அவரை கடுமையாக பாதித்திருக்கிறது என்பதை பார்க்க முடிந்தது.

இப்படி பம்பரமாகச் சுற்றி அவர் செய்த வேலையே அவருக்கு வினையாக முடிந்தது காலத்தின் கோலம் தானே… ?

செங்கல்பட்டு அகதிகள் மீதான தாக்கதலில் முன் நின்று தாக்குதலை நடத்தியவர் அப்போது செங்கல்பட்டு காவல்நிலைய ஆய்வாளராக இருந்த ஆல்பர்ட் வில்சன் என்பவர்.

நேற்று மாலை 6 மணியளவில் இனியன் பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கும் வேற்று மொழிக்காரர் ஒருவருக்கும் வாய்த் தகராறு ஏற்படுகிறது. இந்த தகராறு வலுக்க, ஓட்டுநர் பேருந்தை திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்திற்கு ஓட்டுகிறார். அங்கே தகராறு செய்த இருவரும் இறக்கி விடப் படுகிறார்கள். சட்டக் கல்லூரி மாணவர்தானே… நம்மை என்ன செய்யப் போகிறார்கள் என்று காவல் நிலையம் செல்கிறார்.

அங்கே இனியனை விசாரித்துக் கொண்டிருக்கும் போது குப்புசாமி என்ற காவலர், உதவி ஆய்வாளரிடம் “சார் இவன் மனித உரிமை இயக்கத்துல இருக்கான் சார். எப்போ பாத்தாலும் கூட்டம் போட்டு நம்மைத் திட்டுவான் சார்“ என்கிறார். உதவி ஆய்வாளர் “என்னடா எஸ்.சியா “ என்று கேட்கிறார். இனியன் ஆமாம் என்றதும் அருகில் இருந்த காவலர் குப்புசாமி பளாரென்று இனியன் கன்னத்தில் அறைகிறார். இனியன் “விசாரிக்காம அடிக்காதீங்க சார்“ என்கிறார்.

அப்போது அங்கே வந்த ஆல்பர்ட் வில்சன் “பறத் தேவிடியாப் பையனுக்கு என்ன திமிரு பாத்தீங்களா ? “ என்று உரத்தக் குரலில் கூறி, இனியனை ஷூ காலால் நெஞ்சில் எட்டி உதைக்கிறார். “இவன் துணிய அவருங்கையா ? ஹ்யூமர் ரைட்ஸா பேசறான் ? அடிக்கிற அடியில இந்தத் தேவடியாப் பையன் பேசவே கூடாது“ என்று சொல்லி முடிக்கும் முன்பே, அருகில் இருந்த காவலர்கள் சத்தினசாமி, நட்ராஜ், முனுசாமி, குப்புசாமி, பார்த்திபன், சௌந்தர்ராஜன், ராஜேந்திரன் உள்ளிட்ட காவலர்கள், இனியனின் உடைகளை அவிழ்க்க பொறுமை இல்லாமல் கிழித்து எரிகின்றனர். நிர்வாணமாக நின்ற இனியன் இரண்டு கைகளையும் வைத்து தன்னை மறைத்துக் கொள்ள “என்னடா பொட்டையா நீ“ “எதுக்குடா மறைக்கிற “ என்று மறைத்த கைகளின் மேல் லத்தியால் அடித்திருக்கின்றனர்.

பிறகு ஒரு மணி நேரத்திற்கு சரமாரி அடி. பிறகு நிர்வாணமாகவே லாக்கப்பில் போட்டு அடைத்திருக்கிறார்கள். இனியன் நினைவிழக்கும் நிலையில் இருந்த போது, வாளியில் தண்ணீரை பிடித்து லாக்கப்புக்குள் ஊற்றியிருக்கிறார்கள்.

இரவு 3.30 மணி அளவில் இனியனின் உறவினர்கள் வந்து இனியனை செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வைத்திருக்கின்றனர். அனைவரும் கண்ணயர்ந்த நேரம் மருத்தவமனையிலிருந்து வெளியேறிய இனியன், வீட்டுக்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். ஒரு பத்து நிமிடங்கள் கழித்து, குற்றுயிரும், குலை உயிருமாக இனியனை இறக்கி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

நீங்கள் செய்த காரியத்தை மன்னிக்க முடியாது தோழர் இனியன். உங்களை நிர்வாணப் படுத்தி அடித்த ஆய்வாளர் ஆல்பர்ட் வில்சன் மற்றும் உதவி ஆய்வாளர் சரவணின் சங்கை அறுத்திருந்தீர்களென்றால் பாராட்டியிருக்கலாம். ஆனால், நீங்கள் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றதை சவுக்கு ஒரு போதும் மன்னிக்காது.

இனியன் தற்கொலை முயற்சி செய்தி, காற்றிலே வதந்தியாக மாறி, இனியன் இறந்து விட்டார் என்று சட்டக் கல்லூரி வளாகங்களிலே பரவுகிறது. தகவல் அறிந்த சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் உடனடியாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையை மறிக்கிறார்கள். காலை 11 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மற்ற எல்லா போராட்டங்களையும், காவல்துறையை விட்டு ஒடுக்க முயற்சிக்கும் கருணாநிதி, இந்த மாணவர்களின் எழுச்சியை பார்த்து பம்மினார். காவல்துறை கைது செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இணை ஆணையர் சேஷசாயி மாணவர்களிடம் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்று பேச்சு வார்த்தை நடத்துகிறார். செங்கல்பட்டு ஆர்.டி.ஓ பத்மஜா தேவிதான், பனையூர் இரட்டை கொலைவழக்கில் குற்றம் சாட்டப் பட்டு காவல் நிலையத்தில் இறந்த ராஜன் மரணத்தையும், திண்டுக்கல் பாண்டி என்கவுண்ட்டரையும் விசாரித்தது. அந்த அதிகாரி எப்படி அறிக்கை கொடுப்பார் என்று தெரியாதா ?

ஆனால் மாணவர்கள் மசியவில்லை. எந்த பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை. சம்பந்தப் பட்ட காவல்துறையினரை இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

இதற்கு நடுவே, மக்கள் வழக்கறிஞர் சங்கரசுப்பு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் ஆஜராகி, மாணவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதையும், மாணவர்கள் போராட்டம் நடத்தவதையும் பற்றி முறையிட்டார். அவரை ஒரு அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்ட நீதிபதிகள், அதையே ரிட் மனுவாக கருதி, மாலை 5 மணிக்கு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் இறுதியில் பாதிக்கப் பட்ட மாணவர் உடனடியாக சென்னை அப்போல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப் பட்டு அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

இனியன் கொடுத்த புகார் மனுவின் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கை டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறையாத ஒரு அதிகாரி விசாரணை செய்ய வேண்டும்.

மூன்று வாரத்துக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவின் விபரங்களை வழக்கறிஞர் சங்கரசுப்பு, மாலை 6.00 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் இருந்த மாணவர்களிடம் சொன்னார். விபரங்களை கேட்டறிந்த மாணவர்கள் பலத்த கரகோஷத்தோடு கலைந்து சென்றார்கள்.

நீதிமன்ற உத்தரவுப் படி காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. என்ன தெரியுமா ? ஒரே ஒரு பிரிவு தான். 323. இது என்ன தெரியுமா ? லேசான காயத்தை ஏற்படுத்தவது. இது பிணையில் வரக்கூடிய பிரிவு என்பது முக்கிய அம்சம்.
ஏதோ ஒரு வகையில் இந்த அளவுக்காவது நிவாரணம் கிடைத்ததே என்ற வகையில் மகிழ்ச்சி.

இந்த போராட்டத்தில் இருந்த முக்கிய செய்தி என்னவென்றால், காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை மாநகரின் ஒரு முக்கிய சந்திப்பை மாணவர்கள் மறித்து எந்த வாகனத்தையும் நகர விடாமல் நிறுத்தி வைத்துள்ளார்களே ? இதனால் பொதுமக்கள் எவ்வளவு சிரமப் படுவார்கள் என்ற அக்கறை துளியும் காவல்துறையினருக்கோ, கருணாநிதிக்கோ இல்லை. ஏழு மணி நேரமாக அந்த சாலைகள் மறிக்கப் பட்டே கிடந்தன. இரு சக்கர வாகனங்களை கூட மாணவர்கள் அனுமதிக்கவில்லை.

இது போல பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கி நடக்கும் ஒரு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறையினரை எங்காவது கண்டிருக்கிறீர்களா ?

இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது என்ன செய்து கொண்டிருந்தார் சென்னை மாநகர காவல் ஆணையாளர் ? ஏழு மணி நேரம் நகரத்தின் முக்கிய சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறதே…. என்ன செய்து கொண்டிருந்தார் ராஜேந்திரன் ? என்ன செய்து கொண்டிருந்தார் என்பது யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் ராஜேந்திரன்.

அவர் உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட்டோடு இரண்டு மணி நேரம் எட்டு நிமிடங்கள், ஜாபர் சேட் மனைவி பர்வீன் மீது அவருக்கு வந்திருக்கும் மோசடி புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எப்படி மூடுவது, புகார் கொடுத்தவர் நீதிமன்றம் போனால் அதை எப்படி சமாளிப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தார்.

இப்படிப் பட்ட ஒரு மோசமான நிர்வாகத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா ?

போராட்ட காட்சிகள்














சவுக்கு

Tuesday, August 17, 2010

கருணாநிதிக்கு சின்ன கருணாநிதி கடிதம்.



அது என்ன சின்னக் கருணாநிதி என்று பார்க்கிறீர்களா ? கடிதத்தை படித்தீர்கள் என்றால் விபரமாகப் புரியும். கருணாநிதிக்கு நிகராக, சின்னக் கருணாநிதி என்ற பட்டத்தை பெற தகுதியான ஒரே நபர் என்று சவுக்கால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர், தொல்.திருமாவளவன் தான். இனி அவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதம், சவுக்கு வாசகர்களின் அன்பு பார்வைக்கு.

அன்புள்ள கலைஞர் அவர்களே… மன்னிக்கவும் டாக்டர் கலைஞர் அவர்களே… மீண்டும் மன்னிக்கவும். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களே.

எனது பிறந்த நாளில், எனக்கு இருக்கும் ஒரே ஆசையை தாங்கள் நிறைவேற்றித் தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால்தான் நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

நீங்கள் பிற்பட்ட சமூகத்தில் பிறந்தவர். நான் தாழ்த்தப் பட்ட சமூகத்தில் பிறந்தவன். நீங்கள் தமிழர்களை ஏய்த்து முன்னுக்கு வந்தவர். நான் தலித்துகளை ஏய்த்து முன்னுக்கு வந்தவன். மொத்தத்தில் ஏய்த்துப் பிழைப்பதில் நான் எந்த வகையிலும் உங்களுக்கு சளைத்தவனில்லை என்பதை இந்த நேரத்திலே சொல்லிக் கொள்ளுகிறேன்.



எனது வாழ்வை சென்னை பல்கலைகழகத்தில் தொடங்கும் போது நானும், உங்களைப் போலவே ஏழ்மையைச் சந்தித்தவன். புறக்கணிப்பை சந்தித்தவன். கல்லூரியில் நடக்கும் சிம்போசியத்தில் கலந்து கொள்ள நல்ல செருப்பு இல்லாமல், நண்பர்களின் செருப்பை வாங்கிப் போட்டுக் கொண்டு சிம்போசியத்தில் கலந்து கொண்டவன். ஆனால், இன்று உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவு வசதி வாய்ப்போடு இருக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால், தலித்துகளை ஏய்க்கும் கலையில் நான் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று என் கோரிக்கையெல்லாம் ஒன்றுதான். முத்தமிழறிஞராகிய நீங்கள் என்னை “சின்னக் கருணாநிதி“ என்று அறிவிக்க வேண்டும். அதற்கு நான் தகுதியானவனா என்பதற்கு உங்களுக்கு விளக்கம் அளிக்கவே இந்தக் கடிதம்.

இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலையில் ஏற்பட்ட கொடுமைகளால் இறந்தவர்களில் சிட்டிபாபுவின் கல்லறை ஈரம் கூட காயாத நிலையில் இந்திராவோடு கை கோர்த்தவர் நீங்கள்.

ஜெயலலிதாவோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். நீங்கள் வாக்குறுதி கொடுத்தது போல வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கினீர்கள். உடனே, வாய் கூசாமல், நான் பேசினேன் ஞாபகம் இருக்கிறதா ? “பெரிய டிவி கொடுப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஒரு கையகல டிவி கொடுத்து ஏமாற்றி விட்டார்கள்“ என்று பேசினேன். “கேபிள் இணைப்பு கொடுத்தீர்களா ? “ என்று கேட்டேனே. கடந்த மூன்று வருடங்களாக கேபிள் இணைப்பை பற்றியோ, கையகல டிவி என்பது பற்றியோ பேசினேனா ?

நீங்கள் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு அந்தர் பல்டி அடித்தது போல நான் அடிக்கவில்லையா ?

“அடங்க மறு, அத்து மீறு“ என்ற வெற்று முழக்கங்களை இன்று அறிவாலய கழிப்பிடத்திற்குள் ஓரமாக வைத்து விட்டு உங்கள் பின்னால் நிற்கவில்லையா ?

மற்றவற்றையெல்லாம் விடுங்கள். நீங்கள் நாலு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்ததை போல, நான் நாலு நாட்கள் உண்ணாவிரதம் இருக்கவில்லையா ?



நீங்கள் வெற்று விளம்பரம் செய்து கொள்வதைப் போல, நான் அனைத்து காலை மற்றும் மாலை நாளிதழ்களில் நான் படுத்துக் கொண்டிருப்பது போல போஸ் கொடுத்து புகைப்படத்தோடு விளம்பரம் கொடுக்க வில்லையா ? அந்த விளம்பரங்களில் “தலைவர் உயிரைக் காப்பாற்றுங்கள்“ என்று யாரிடம் மன்றாடுகிறோம் என்பதே தெரியாமல் சிறுத்தைகள் விளம்பரம் தரவில்லையா ?



அந்த மேடையில், இனி சாகும் வரை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று முழங்கி விட்டு, தேர்தல் வந்ததும், கல்லெறிந்தால் இரண்டு கால்களுக்கிடையே வாலை மடக்கிக் கொண்டு ஓடும் நாய் போல உங்கள் பின்னே ஓடி வரவில்லையா ?

இதையெல்லாம் விடுங்கள். இலங்கை சென்ற நான் நடத்திய நாடகத்தைப் பார்த்து நீங்களே அசந்து போயிருப்பீர்கள். இங்கே தமிழகத்தில் இருந்த வரை, கொலைகார ராஜபக்ஷே என்றும், தமிழர்களின் ரத்தத்தை குடித்தவன் என்றும் ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும், ஊர்வலங்களும் நடத்தி விட்டு எம்.பிக்கள் தூதுக்குழுவினரோடு இலங்கை சென்று ராஜபக்ஷேவை சந்தித்ததும், மாமூல் கேட்கும், கோர்ட் ப்யூன் போல பல்லிளித்துக் கொண்டு வரவில்லையா ?

இலங்கை சென்ற எம்பிக்கள் குழு டெல்லி சென்று பிரதமரை சந்திக்கச் சென்ற போது என்னை வேண்டுமென்றே புறக்கணித்தீர்களே ? ஒரு மூச்சு விட்டிருப்பேனா நான் ?

இலங்கை சென்று ராஜபக்ஷேவுடன் கைகுலுக்கி, விருந்துண்டு, அவரின் விருந்தோம்பலை மனம்விரும்பி ஏற்று, மகிழ்ந்து, மனமார இளைப்பாறி விட்டு தமிழகம் திரும்பியவுடன், ராஜபக்ஷே சகோதரர்களை போர்க்குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டும் என வாய் கூசாமல் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை ?



சென்னை மெமோரியல் ஹால் சுவர்களைக் கேட்டால் சொல்லுமே என் இரட்டை நாக்கை.

இலங்கை சென்ற போதும் ராஜபக்ஷேவுடன் மட்டுமா அளவளாவினேன் ? சென்னை சூளை மேட்டில் திருநாவுக்கரசு என்ற வழக்கறிஞர் ஆக விரும்பிய ஒரு தலித் இளைஞரை பட்டப் பகலில் ஒரு தீபாவளி நாளில் சுட்டுக் கொன்று விட்டு, வழக்கை சந்திக்காமல் இலங்கைக்கு தப்பி ஓடிய கயவன் டக்ளஸ் தேவானந்தாவுடன் விருந்துண்டு மகிழவில்லையா ?



அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை பெருமையாக அறிவிக்கவில்லையா ?



கொல்லப்பட்டவன் ஒரு தலித் இளைஞன், அந்தக் குடும்பம் ஒரு விளிம்பு நிலைக் குடும்பம் கொலைகாரன் அமைச்சனாக, இலங்கையின் அதிகார பீடத்தில் உட்கார்ந்திருக்கிறானே என்று கொஞ்சமாவது ரோஷப்பட்டேனா நான் ?



விடுதலைப் புலிகளை அன்றும் ஆதரிப்பேன், இன்றும் ஆதரிக்கிறேன், என்றும் ஆதரிப்பேன் என்று வீர வசனங்கள் பேசிய நான், புலிகளும், தமிழ் மக்களும் அழித்து ஒழிக்கப் பட்ட போது நீங்கள் நடத்திய உண்ணாவிரத நாடகத்தின் முதல் பார்வையாளனாக இருக்க வில்லையா ?

ஈழம் சென்று பிரபாகரனுடன் படம் எடுத்துக் கொண்டு அதை பெருமையாக என்னுடன் இருக்கும் இளைஞர்களை ஆகர்ஷிக்க பயன் படுத்திக் கொண்ட நான், பிரபாகரனின் நெருக்கடியான நேரத்தில், அவருக்கு உதவாமல், அவரை அழித்தொழிக்க முயற்சித்த சிங்களக் காடையர்களுக்கு உங்களுடன் சேர்ந்துதானே உதவினேன் ?

“எழும் தமிழ் ஈழம்“ என்ற தலைப்பில், சோர்ந்து போயிருக்கும் எனது சிறுத்தைகளை உசுப்பேற்றுவதற்காக புல்லா அவென்யூவில் ஒரு மாநாடு நடத்தப் போகிறேன் என்று அறிவித்தேன். ஈழம் என்ற வார்த்தையே ஒரு பாவச் சொல் என்பது போல, உங்கள் காவல்துறையினர், இரவோடு இரவாக, பிரபாகரனின் படம் இருந்த பேனர்களையும், ஈழம் என்ற வார்த்தையின் மேல் தாளை ஒட்டி அதை மறைத்தும் நடவடிக்கை எடுத்த போது ஒரு வார்த்தை பேசினேனா ?



ஈழம் என்ற வார்த்தை என்ன அப்படி ஒரு பாவச் சொல்லா என்று வெகுண்டெழுந்தேனா ? அந்தச் சூழலில் கூட, கொஞ்ச நஞ்சம் சூடு சொரணை இருப்பது போல நடந்து கொண்டேனா ?



சென்னை நூறடி சாலையில், கட்டப் பஞ்சாயத்து செய்யும் போது அபகரித்த ஒரு கட்டிடத்தில் சிறுத்தைகள் அலுவலகம் வைத்து நடத்தி வந்து கொண்டிருந்தேன். திடீரென்று நீதிமன்றம் அந்த அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட போது, கட்டப் பஞ்சாயத்து செய்து அபகரித்த இடமாயிற்றே என்று கொஞ்சமாவது தயங்கினேனா ? மீண்டும் நீதிமன்றத்தை அணுகி, தடை உத்தரவு பெற வேண்டும் என்றும், கட்டப் பஞ்சாயத்து செய்து வந்த இடம் கை விட்டுப் போய் விடக் கூடாது என்றும் எத்தனை முறை நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கியிருப்பேன். ?

ஒரே ஒரு காடுவெட்டி குருவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ததற்காக பாட்டாளி மக்கள் கட்சியுடனான கூட்டணியே உடைந்தது.

விடுதலைச் சிறுத்தை தொண்டர்கள் ஈழ ஆதரவு போராட்டங்களின் போது கைது செய்யப் பட்டனர். கைது செய்யப் பட்ட 16 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை போட்டு, அன்னை சோனியாவை திருப்தி படுத்தினீர்களே ? ஏதாவது கேட்டேனா ? தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் இருந்த அந்த 16 பேரின் குடும்பங்கள் என்ன ஆயிற்று என்று கவலைதான் பட்டிருப்பேனா ?

நான் எப்போதும் அரசியல் முடிவுகள் எடுக்கும் போது என்னுடன் கடற்கரையில் கலந்து ஆலோசிக்கும் எனது பல ஆண்டு கால நெருங்கிய நண்பர் என்னை பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு போகச் சொல்லியும் கூட, ஜெயலலிதாவை விட மோசமான தமிழினத் துரோகி நீங்கள் தான், அதனால் உங்களுடன் தான் கூட்டணி என்று இறுதி முடிவு எடுக்கவில்லை ? அதனால் அந்த நண்பர் இன்று வரை என்னடன் பேசவில்லை என்றாலும் கூட, நான் என்ன நட்பை இழந்ததற்காக கவலைப் பட்டேனா ?

அந்த நண்பரை விட, என்னை உங்களோடு இணைத்து வைத்த ஆருயிர் நண்பர் காமராஜ் தானே இப்போது எனக்கு முக்கியமாக இருக்கிறார் ? காமராஜோடு நட்பாக இருப்பதை விடவும், எனக்கு உங்கள் வாரிசாக இருக்க வேறு என்ன தகுதி வேண்டும் ?

பாராளுமன்றத் தேர்தலில் இரண்டு இடங்கள் விடுதலைச் சிறுத்தைகளுக்கு கொடுக்க பட்ட போது நான் ஒரு இடத்தின் நின்றேன். இன்னோரு இடத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆரம்பகாலம் முதல் என்னோடு உழைத்து இயக்கத்துக்காக பாடு பட்டவர்களுக்கா கொடுத்தேன் ? வேலாயுதம் என்ற மோசடி பேர்விழிக்குத் தானே கொடுத்தேன் ?

தலித் சமுதாயத்திற்காக பாடு படுகிறேன் என்று அரசியலுக்கு வந்து விட்டு உங்களைப் போலவே சினிமாவில் நடிக்கிறேன் என்று சில காலங்கள் கூத்தடித்துக் கொண்டிருக்கவில்லையா நான் ?

நீங்கள் நினைத்திருந்தால் எனக்கு ஒரு துணை அமைச்சர் பதவியையாவது வாங்கித் தந்திருக்க முடியும் என்றாலும், நீங்கள் மாற்றான் வீட்டுப் பிள்ளை போல என்னை கண்டு கொள்ளாமல் இருந்தும், ஒரு முறையாவது ரோஷப் பட்டுக் கேட்டிருப்பேனா உங்களிடம் ? தலைவர் கொடுத்தார். நான்தான் வேண்டாம் என்று விட்டேன் என்றல்லவா ஊர் முழுக்க சொல்லிக் கொண்டு திரிகிறேன்.

தலித்துகளுக்கு இதயத்தில் இடம் இருக்கிறது என்று நீங்கள் சொல்லும் கட்டுக் கதையை நம்பிக் கொண்டு, தலித் சமுதாயத்தினருக்கு உங்கள் அரசு இழைக்கும் கொடுமைகளை கண்டும் காணாமல் இருக்கவில்லையா நான் ?

இப்போத பணி இடை நீக்கம் செய்யப் பட்டிருக்கும் உமாசங்கர் தலித்தாக இருந்தும், தமிழ்நாட்டில் உள்ள அத்தனை தலித் அமைப்புகளும் அவருக்கு ஆதரவாக திரண்டுள்ள நிலையில், இன்று வரை ஒரு வார்த்தை பேசியிருப்பேனா நான் ?



இப்போது சொல்லுங்கள். உங்கள் வாரிசாக என்னை விட தகுதியானவன் யார். அதனால், எனது பிறந்த நாளான இன்று முதல், என்னை “சின்னக் கருணாநிதி“ என்று அழைக்குமாறு உங்கள் கழக உடன்பிறப்புகளுக்கு கட்டளையிட்டீர்கள் என்றால், இதை விட எனக்கு சிறந்த பிறந்த நாள் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை.
சவுக்கு

Monday, August 16, 2010

தலைமைச் செயலகத்தில் ஏலம் போடப்படும் அரசுப் பணியிடங்கள்.



தமிழ்நாடு அரசின் மற்ற துறைகள் எங்கும் இல்லாத வண்ணம், தமிழக சட்டப் பேரவைத் துறையில் மட்டும் அலுவலக உதவியாளர்கள் எனப்படும் ஓ.ஏ பணியிடங்களுக்கான நியமனம் எந்த விதிமுறைக்கும் உட்படாமல் அதிகார மையங்களில் உள்ளவர்களின் மன விருப்பத்திற்கு ஏற்ப நடைபெறுவதாக திடுக்கிடும் தகவல் எழுந்துள்ளது.

அரசுப் பணிக்கு ஊழியர்களை தேர்ந்தெடுப்பதற்க இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்த ஆட்களைத் தேர்வு செய்வது, மற்றொன்று வேலைவாய்ப்பகம் மூலமாக பட்டியல் பெற்று, அப்பட்டியலில் உள்ளவர்களுக்கு நேர்காணல் நடத்தி தேர்வு செய்வது.

தமிழக சட்டமன்ற அலுவலகத்துக்கு, இந்த இரண்டு முறைகளும் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் நியமித்துக் கொள்ளலாம் என்ற புதிய விதிமுறை கடைபிடிக்கப் பட்டு, இதன் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக திடுக்கிடும் தகவல் எழுந்துள்ளது.

1991ல் ஜெயலலிதா அரசாங்கத்தில், அவைத்தலைவராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா. இந்த ஆட்சிக் காலம் முடிவடையும் தருவாயில், அவரிடம் நீண்ட நாட்கள் பணியாற்றிய ஒரு நான்கு பேருக்கு, சட்டசபையில் அலுவலக உதவியாளர் நியமனம் செய்வதற்காக விதிகளை தளர்த்தி நான்கு பேரை நியமிக்கிறார். அடுத்து வந்த திமுக ஆட்சி காலத்தில் பிடிஆர்.பழனிவேல்ராஜன் அவைத் தலைவராக இருந்த போது 20 நபர்கள் அலுவலக உதவியாளர்களாக நியமிக்கப் படுகின்றனர்.

மீண்டும் அதிமுக ஆட்சி வந்ததும், காளிமுத்து அவைத் தலைவராகிறார். இவர் அவைத்தலைவர் ஆனதும், பிடிஆர்.பழனிவேல் ராஜனால் நியமிக்கப் பட்ட 20 அலுவலக உதவியாளர்களை பணி நீக்கம் செய்துவிட்டு, புதிதாக 12 நபர்களை நியமிக்கிறார்.

2006ல் மீண்டும் திமுக ஆட்சி வந்ததும், பணி நீக்கம் செய்யப் பட்ட 20 நபர்கள் மீண்டும் பணி வழங்கப் பட வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவு பெறுகின்றனர். அவர்களுக்கு மீண்டும் நியமனம் வழங்கப் படுகிறது.

இப்போது சட்டமன்ற பேரவைச் செயலராக உள்ள செல்வராஜ் காளிமுத்துவால் பணி நியமனம் செய்யப் பட்ட 12 நபர்களை பணி நீக்கம் செய்கிறார். செய்து விட்டு 2006 முதல் இது வரை 40 நபர்களுக்கும் மேல் அலுவலக உதவியாளராக நியமனம் செய்திருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.

அலுவலக உதவியாளருக்கான கல்வித் தகுதி 8வது பாஸ் செய்திருக்க வேண்டும், 10வது பெயில் ஆகியிருக்க வேண்டும். ஆனால், 2006 முதல் அலுவலக உதவியாளராக நியமனம் செய்யப் பட்டிருக்கும் அனைவரும் பட்டதாரிகள் அல்லது முதுநிலை பட்டதாரிகள் என்று தகவல்கள் கூறுகின்றன. இவர்களில் ஒருவர் கூட வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்தவர்கள் அல்ல என்றும், அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வும் எழுதியவர்கள் அல்ல என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இவ்வாறு நியமிக்கப் பட்டவர்கள் அனைவரும் அதிகார மையங்களுக்கு நெருக்கமானவர்கள் என தெரிகிறது. சமீபத்தில் வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடு சர்ச்சையில் சிக்கிய முதலமைச்சரின் செயலர் ஒருவரின் மூன்று உறவினர்கள் இது போல அலுவலக உதவியாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். இது தவிர ஒரு பெண் அமைச்சரின் தம்பி ஒருவரும் இப்படி அரசுப் பணியாளராக நியமிக்கப் பட்டுள்ளார். அதிகார மையங்களுக்கு நெருக்கமானவர்கள் தவிர, இவ்வாறு நியமனம் செய்யப் பட்டவர்கள் அனைவரும் சராசரியாக இப்பதவிக்கு இரண்டு முதல் நான்கு லட்சம் லஞ்சமாக கொடுத்து பணியில் சேர்ந்திருக்கின்றனர்.

இதோடு இந்தக் கதை முடியவில்லை. அலுவலக உதவியாளர்களாக பணியில் சேர்ந்தவர்கள் ஒரிரு ஆண்டுகளில், உதவியாளர்களாகவோ, தட்டச்சர்களாகவோ பதவி உயர்வு பெறுகின்றனர். இவ்வாறு பதவி உயர்வு அளிப்பது, தேர்வாணையம் மூலம் நேரடி நியமனம் செய்யப் படும் இளைஞர்களின் உரிமையை பாதிக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும் இது போன்ற நியமனங்களில் இட ஒதுக்கீடு முறையும் பின்பற்றப் படுவதில்லை என்றும் கூறப் படுகிறது.

தட்டச்சர்களாகவோ, உதவியாளர்களாகவோ பதவி உயர்வு பெற்றவர்கள், ப்ரோபேஷன் எனப்படும் தகுதிகாண் பருவம் முடிவதற்க முன்பாகவே, அசிஸ்டன்ட் செக்ஷன் ஆபீசர் எனப்படும் உதவி பிரிவு அலுவலர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். சில நேர்வுகளில், தட்டச்சராகி ஒரே வாரத்தில் பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பல ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பலருக்கு, இது போன்ற புறவழி மூலம் பதவி உயர்வு பெறும் செல்வாக்கு படைத்த நபர்களின் பதவி உயர்வுகள் கடும் மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது மட்டுமல்லாமல், 2006 முதல் நியமனம் செய்யப் பட்ட பல்வேறு அலுவலக உதவியாளர்கள் வருகைப் பதிவேட்டில் கூட கையொப்பம் இடுவதில்லை என்றும், அதர் ட்யூட்டி எனப்படும் ஓடி என இவர்கள் பெயருக்கு நேராக வருகைப் பதிவேட்டில் குறிப்படப் படுகிறது என்றும், இவ்வாறு காணாமல் இருப்பவர்கள், அமைச்சர்கள் வீட்டில் பணி புரிவதாக கூறிக் கொள்கிறார்கள் என்றும், உண்மையிலேயே அமைச்சர்கள் வீட்டில் பணி புரிகிறார்களா, அல்லது எங்கும் பணி புரியாமலேயே ஊதியம் பெறுகிறார்களா என்பது யாருக்கும் தெரியாது என்று கூறப் படுகிறது.

அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களிள் பதிவு செய்து விட்டு காத்திருக்கும் லட்சக் கணக்கான இளைஞர்கள் இருக்கையில் அவர்களின் வாய்ப்பை பறிக்கும் வகையில் நடக்கும் இது போன்ற நியமனங்கள் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடையே படும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் பதவி உயர்வு கிடைக்காமல் காத்திருக்கும் தலைமைச் செயலக பணியாளர்கள் மத்தியிலும் இந்த மோசடி நியமனங்களும் பதவி உயர்வுகளும் பெரும் மனக்குமைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வரின் நேரடி மேற்பார்வையில் வரும் சட்டமன்ற துறையிலேயே நடக்கும் இந்த பெரும் மோசடி முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி: நம்தினமதி நாளிதழ்

சவுக்கு

Saturday, August 14, 2010

எந்திரன் திரை விமர்சனம்.




திருக்குவளை பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆக்டோபஸ் குடும்பத்தின் மேற்பார்வையில் வெளிவந்திருக்கும் படம்தான் எந்திரன்.

மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப் பட்டிருக்கிறது என்ற ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பை படம் கிளப்பியிருக்கிறது. ஆனால் தியேட்டருக்கு சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. திருட்டு விசிடியில் பார்க்கக் கூட இந்தப் படம் லாயக்கில்லை என்று தியேட்டரை விட்டு வெளியே வரும் பார்வையாளர்களின் முணுமுணுப்பை வெளிப்படையாக கேட்க முடிந்தது.

படத்தின் ஹீரோ ரோபோ, ஹீரோவா வில்லனா என்பது கடைசி வரை புரியாத வகையில் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது.

திருக்குவளையில், முத்துவேல் ரோபோ தயாரிப்பு கம்பேனியில் ஒரு பிற்பட்ட ஏழை வகுப்பில் உருவான கருணா ரோபோ எப்படி தமிழ்நாட்டுக்கே நம்பர் ஒன் ரோபோவாக மாறுகிறது என்பதுதான் கதையின் சாரம்.

தொடக்கத்தில் விறுவிறுப்பாக தொடங்குகிறது படம். ஆரம்பக் கட்டத்தில் திருக்குவளையில் இருக்கும் கருணா ரோபோ, திமுக என்ற கம்பெனியில் தனது பாதத்தை மட்டும் எடுத்து வைக்கிறது. பாதத்தை மட்டும் வைத்த ரோபோ, ஒட்டகம் கூடாரத்தில் நுழைந்த கதையாக, மொத்த கம்பெனியையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், தனது குட்டி ரோபோக்களை வைத்து, அந்தக் கம்பெனியில் உள்ள மற்ற ரோபோக்களை காலி செய்வது கதையில் விறுவிறுப்பை கூட்டுகிறது.



மற்ற ரோபோக்களைப் போல அல்லாமல், கருணா ரோபோவுக்கு அசாத்திய பேச்சுத் திறமை. மற்ற ரோபோக்கள் தங்கள் பேச்சுக் கலையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கையிலேயே, திமுக கம்பேனியை உருவாக்கிய அண்ணா ரோபோவிடம் நெருக்கமாகிறது கருணா ரோபோ. ஆனால் கருணா ரோபோவுக்கு அண்ணாவிடம் இருக்கும் செல்வாக்கைப் போலவே, எம்ஜிஆர் ரோபோவும், அண்ணா ரோபோவிடம் நெருக்கமாக இருக்கிறது. இது கதாநாயக கருணா ரோபோவுக்கு அறவே பிடிக்கவில்லை.

எம்ஜிஆர் ரோபோவை எதிர்க்கலாம் என்று பார்த்தால், அந்த ரோபோவுக்கு மற்ற ரோபோக்களிடம் இருக்கும் செல்வாக்கு பிரமிக்க வைக்கிறது. சரி வேறு வழியில்லை, உறவாடிக் கெடுக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறது கருணா ரோபோ.


எம்ஜிஆர் ரோபோவிடம் நெருக்கமாக உறவாடி, தன்னை திமுக கம்பேனியின் தலைமைப் பதவிக்கு பரிந்துரைக்குமாறு கருணா ரோபோ கேட்டுக் கொண்டதை எம்ஜிஆர் ரோபோ நம்பி, கருணா ரோபோவை தலைமை பொறுப்புக்கு கொண்டு வருகிறது. ஆனால், கருணா ரோபோ, ஏற்கனவே திட்டமிட்டுருந்தது போல, எம்ஜிஆர் ரோபோவிடம் பேட்டரிகள் எண்ணிக்கை குறைகிறது என்று கணக்கு கேட்டு குற்றம் சாட்டுகிறது. இருக்கும் அத்தனை பேட்டரிகளையும், கருணா ரோபோவிடம் கொடுத்திருந்தும், தன்னிடம் கணக்கு கேட்டதைக் கண்டு அதிர்ச்சியான எம்ஜிஆர் ரோபோ, திமுக கம்பேனியை உடைத்து, அதிமுக என்ற தனிக் கம்பேனியை ஆரம்பிக்கிறது.




இதற்கிடையே இந்திரா என்ற தலைமை ரோபோ, இந்தியா முழுவதும் ரோபோக்களின் நடமாட்டத்தை தடை செய்யும் வகையில், நெருக்கடி நிலை ஒன்றை செயல்படுத்துகிறது. இதையடுத்து, கருணா ரோபோ, இந்திரா ரோபோவுடன் மோதல் போக்கை கடைபிடிக்கிறது.

இந்த நெருக்கடி நிலை சமயத்தில், கருணா ரோபோ, ரோபோ தயாரிப்பில் பேட்டரிகள், சிப்புகள், ஐசிக்கள் வாங்குவதில் முறைகேடு செய்து விட்டதாக, சர்க்காரியா என்ற நீதிபதி ரோபோவை விசாரிக்க உத்தரவிடுகிறார். அந்த சர்க்காரியா ரோபோ, ரோபோக்களுக்கே உரிய நேர்த்தியுடன் கருணா ரோபோ, விஞ்ஞான முறையில் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டுகிறார்.

இந்த நீதிபதி ரோபோவின் தொல்லையிலிருந்து விடுபட, இந்திரா ரோபோவிடம், தனது பேட்டரியை கழற்றி காலில் வைத்து மன்னிப்பு கேட்கிறது கருணா ரோபோ. இந்திரா ரோபோவும், போனால் போகிறது என்று நீதிபதி சர்க்காரியா ரோபோ கொடுத்த விசாரணை அறிக்கையை, கழுதை ரோபோக்களுக்கு தின்னக் கொடுத்து விடுகிறார்.

இதற்கிடையே கருணா ரோபோ, ஒரு மூன்று பெண் ரோபோக்களை துணைக்கு சேர்த்துக் கொண்டு ஏகப்பட்ட குட்டி ரோபோக்களை தயாரித்து தமிழகமெங்கும் அனுப்புகிறது. அந்த குட்டி ரோபோக்கள் செய்யும் அட்டூழியங்கள் கடைசியில் கருணா ரோபோவுக்கே வினையாக வந்து முடிகிறது.

எம்ஜிஆர் ரோபோ, பிரிந்து தனிக் கம்பேனி தொடங்கியதும், கருணா ரோபோ, திமுக கம்பேனியை நடத்த முடியாமல் கடும் சிரமப் படுகிறது. எப்படியாவது, எம்ஜிஆர் ரோபோவை ஒழித்து விட வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்கிறது. ஆனால் எம்ஜிஆர் ரோபோவுக்கு இருக்கும் மக்கள் ஆதரவு கருணா ரோபோவை மண்ணைக் கவ்வச் செய்கிறது.

எம்ஜிஆர் ரோபோவுக்கு முக்கியமான இரண்டு சிப்புகளும் பழதடைந்து ரிப்பேர் செய்வதற்காக அமேரிக்காவில் உள்ள ப்ரூக்ளின் ரோபோ ரிப்பேர் கம்பேனிக்கு செல்கிறது. கருணா ரோபோ இந்த கேப்பில் கடா வெட்ட முயற்சி செய்கிறது. ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறாமல் கருணா ரோபோ மண்ணைக் கவ்வுகிறது.




இந்நிலையில் எம்ஜிஆர் ரோபோ மிகவும் ரிப்பேராகி, இனி சரிசெய்ய முடியாது என்ற நிலையில் பேட்டரி தீர்ந்து போய் செயலிழந்து விடுகிறது.

இந்த நிலையில் தான் கதையில் இடைவேளை. இடைவேளை முடிந்ததும் எம்ஜிஆர் ரோபோ செயலிழந்து விட்டதால், கருணா ரோபோவுக்கு ரோபோ தலைவர் பதவி கிடைக்கிறது. இனிமேல் கருணா ரோபோவுக்கு எதிரிகளை கிடையாது என்று நினைக்கும் வேளையில், எம்ஜிஆர் ரோபோ கம்பேனியில் இருந்து ஜெயலலிதா என்ற பெண் ரோபோ திடீரேன்று கிளம்பி, கருணா ரோபோவுக்கு பெரும் தலைவலியாக உருவாகிறது.




ஜெயலலிதா ரோபோவுக்கு பின் மற்ற ரோபோக்கள் அணி திரள, கருணா ரோபோ திகைக்கிறது. அகில இந்திய ரோபோக்களின் தலைவன் ஒரு விபத்தில் இறந்ததால் ஏற்பட்ட அனுதாப அலையில் ஜெயலலிதா ரோபோ ரோபோக்கள் தலைவராகிறது. ஆனால் தலைவரானதும், ஜெயலலிதா ரோபோவின் போக்கு மிக மிக மோசமாக இருப்பதால், கருணா ரோபோவுக்கு மீண்டும் அடிக்கிறது யோகம். இப்போது கருணா ரோபோவுக்கு பதவி வந்ததும் ஜெயலலிதா ரோபோவை, கோடவுனில் அடைக்கிறது கருணா ரோபோ. ஜெயலலிதா ரோபோவை சிறையில் அடைப்பது மட்டுமல்லாமல், அந்த ரோபோவுடன் இருக்கும் மற்ற அல்லு சில்லு ரோபோக்களையும் சிறையில் அடைக்கிறது கருணா ரோபோ. ஜெயலலிதா ரோபோ, இவ்வாறு கோடவுனின் அடைத்ததை மறக்காமல், ஐந்து ஆண்டுகள் கழித்து தனக்கு மீண்டும் தலைவர் பதவி கிடைத்ததும், கருணா ரோபோவை நள்ளிரவில் பிடித்து கோடவுனின் அடைக்கிறது. இது கருணா ரோபோவை மிகவும் அதிர்ச்சி அடைய வைக்கிறது. அவ்வாறு கோடவுனில் அடைக்கையில், கருணா ரோபோ “அய்யோ கொலை பண்றாங்க, அய்யோ கொலை பண்றாங்க“ என்று கதறுவது பெண் பார்வையாளர்களை உருக்குகிறது.

இந்தப் போக்கு இப்படியே தொடரும் நிலையில், கருணா ரோபோவுக்கு மீண்டும் தலைவர் பதவி கிடைக்கிறது. கிடைத்த வாய்ப்பை கருணா ரோபோ மிக சாதுர்யமாக பயன்படுத்திக் கொள்கிறது. தலைவர் பதவி கிடைத்ததும், கருணா ரோபோவின் குட்டி ரோபோக்கள் தமிழகமெங்கும் செய்யும் அட்டூழியங்களை கருணா ரோபோ கண்டு கொள்ளாமல் இருப்பது, கதையின் ஹீரோ கருணாநிதி ரோபோவை வில்லன் போலச் சித்தரிக்கிறது.

இந்த முறை தலைவர் பதவி கிடைத்ததும், கருணா ரோபோ, ஜாபர் சேட் என்ற ஒரு ரோபோவை உருவாக்குகிறது. இந்த ஜாபர் சேட் ரோபோ, மற்ற ரோபோக்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டு கருணாநிதி ரோபோவிடம் சொல்வது போல் அமைந்துள்ள காட்சி மிகவும் புதுமையானது.




உலகில் எந்த ரோபோவும் செய்யாத புதுமையை கருணா ரோபோ செய்கிறது. மற்ற ரோபோக்கள் படும் துன்பத்தை பார்த்து மனம் வருந்தி, உண்ணாவிரதம் இருக்கிறது, மனிதச் சங்கிலி நடத்துகிறது, போராட்டம் நடத்துகிறது. ஆனால் இது எதுவுமே எடுபடாததால் மிகவும் மனம் வருந்துகிறது கருணா ரோபோ.

இந்த வருத்தத்தில் இருந்து விடுபட, ஒரு புதிய கம்பேனியை உருவாக்குகிறது கருணா ரோபோ. அந்த கம்பேனியின் வேலையே, கருணா ரோபோவை பாராட்டுவதுதான். இந்த பாராட்டு மழையில் நனைந்து மற்ற எல்லாவற்றையும் மறந்து ஆனந்தமாக இருக்கிறது கருணா ரோபோ. அந்த பாராட்டு கம்பெனியின் தலைவராக ஜெகதரட்சகன் ரோபோவை நியமிக்கிறது கருணா ரோபோ. அந்தக் கம்பெனியின் மற்ற ரோபோக்கள், துரைமுருகன் ரோபோ, தமிழச்சி ரோபோ, சுப.வீரபாண்டியன் ரோபோ, கமலஹாசன் ரோபோ, ரஜினிகாந்த் ரோபோ, வாலி ரோபோ, வைரமுத்து ரோபோ. இந்த பாராட்டு கம்பேனி ரோபோக்கள் அடிக்கும் கூத்துக்கள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கின்றன.

கமலஹாசன் ரோபோ, ரோபோவை கண்டுபிடித்ததே கருணா ரோபோதான் என்று பேச, ரோபோவுக்கு தமிழ் கற்றுத் தந்ததே கருணா ரோபோதான் என்று பேச, வாலி ரோபோ, தமிழ் மட்டுமல்ல, எல்லா மொழிகளையும் கற்றுத் தந்ததே கருணா ரோபோதான் என்று பேச, தியேட்டரில் உள்ள பார்வையாளர்கள், சிகரெட் பிடிக்க கூட்டம் கூட்டாக வெளியே செல்வதை பார்க்க முடிந்தது.

இந்த நிலையில், ஜெயலலிதா ரோபோவின் கதை முடிந்து விட்டது என்று நினைக்கும் வேளையில், ஜெயலலிதா ரோபோ, கோயம்பத்தூரிலும், திருச்சியிலும், ரோபோக்களின் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தி கருணா ரோபோவின் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்.

இந்த இரு ரோபோக்களுக்கும் நடக்கும் போட்டியின் கிளைமாக்ஸ் 2011ல் நடக்கிறது. இதில் யார் வெற்றி பெறுகிறார் என்பதை திரையில் காண்க.

கருணா ரோபோவுக்கு பத்மாவதி ரோபோ, தயாளு ரோபோ, ராசாத்தி ரோபோ என்று மூன்று ஹீரோயின்கள். இந்த மூன்று ஹீரோயின்களில் பத்மாவதி ரோபோவின் பேட்டரி படத்தின் தொடக்கத்திலேயே செயலிழந்து விடுகிறது. மற்ற இரண்டு ஹீரோயின் ரோபோக்களும், திரையில் பெரும் பங்கு வகிக்கவில்லை என்றாலும், கருணா ரோபோ எடுக்கும் முடிவுகளிலும், நடவடிக்கைகளிலும் இவர்களின் பெரும் பங்கு இருக்கிறது என்பதை பார்வையாளர்களால் எளிதாக உணர முடிகிறது.

கருணா ரோபோ, “நான் நின்னா தமிழ், நடந்தா பாரசீகம், பேசுனா உருது, பாடுனா வங்காளம், மொத்தத்துல நான் கலைக்களஞ்சியம்டா“ என்று பேசும் பன்ச் டயலாக்குகள் எடுபடவில்லை.

படத்தின் ஒளிப்பதிவு அழகிரி ரோபோ. வெளிச்சம் பத்தாத இடங்களில், பத்திரிக்கை அலுவலக ஊழியர்களை எரித்து லைட்டிங் எஃபெக்ட் கொடுக்கிறார். ஆடியோ மற்றும் லைட்டிங் ஆற்காடு ரோபோ. பல நேரங்களில் ஆடியோ மந்தமாகவும், லைட்டிங் பற்றாமல், இருட்டில் பல காட்சிகள் எடுக்கப் பட்டிருக்கின்றன.


மொத்தத்தில் எந்திரன், எந்திரிக்காதவன்.

சவுக்கு