Friday, December 18, 2009

லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி மீது லஞ்சப் புகார்



லட்சுமி, காவல் கண்காணிப்பாளர்




லட்சுமி.. … மங்களகரமான பெயர். பிறக்க ஒரு ஊர். காவல்துறையில் இருப்பதனால் பிழைக்க பல ஊர்.


சட்டம் படித்து பெரிய வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற ஆசையில், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்தார் லட்சுமி.


அதற்குப் பிறகு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வின் மூலம் நேரடி டிஎஸ்பியாக தேர்ச்சி பெற்று, திருவண்ணாமாலையில் நெடுங்காலம் டிஎஸ்பியாக பணியாற்றினார்.


இவரது கணவர் குமரன் தற்போது திருவண்ணாமலையில் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார்.
தற்போது, லட்சுமி தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்புத் துறையில் மத்திய சரக காவல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இதற்கு முன், தியாகராய நகர், திருவெல்லிக்கேணி போன்ற இடங்களில் துணை ஆணையராகவும் பணியாற்றி உள்ளார்.


லஞ்ச ஒழிப்புத் துறையில் தற்போது பணியாற்றி வரும் லட்சுமி மீதுதான் திடுக்கிடும் ஊழல் புகார் எழுந்துள்ளது.


“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே” என்ற பாடல் வரி போல, பணியில் சேர்ந்த பிறகு நன்றாகத்தான் இருந்தார் லட்சுமி.
மற்ற காவல்துறை அதிகாரிகள் போலவே, சென்னை மாநகரில் பணியாற்றியவுடன், காவல்துறை அதிகாரிகளுக்கு வரும் அதிகார போதை லட்சுமியையும் பிடித்துக் கொண்டது.


தி.நகர் மற்றும் திருவெல்லிக்கேணியில் பணியாற்றியவுடன், லட்சுமியின் நடவடிக்கையில் பல மாற்றங்கள் வரத் தொடங்கின.


திருவண்ணாமலை மாவட்டத்தில் லட்சுமி, டிஎஸ்பியாக பணியாற்றி வந்த போது, அவரிடம் ஒரு புகார் வந்தது. சுகுமார் ஜெயசிங் என்பவர், வீடு கட்டித் தருகிறேன் என்று உத்தரவாதம் அளித்து, பொது மக்களிடம் பல கோடி ரூபாய்களை சுருட்டியதாக புகார் வந்தது.


வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டிய லட்சுமி திருவண்ணாமலையில் வழக்கறிஞராக உள்ள தன் கணவர் குமரன் தூண்டுதலின் பேரில் “கட்டப் பஞ்சாயத்து“ செய்து, புகாரை பதிவு செய்யாமல் பொது மக்களுக்கு பணத்தை திருப்பி தருகிறேன் என்று குற்றவாளி சுகுமார் ஜெயசிங்கிடம் இருந்து 11.10.2000 அன்று ஒரு கடிதத்தை பெற்றுக் கொண்டு விட்டு விட்டார்.
ஆனால் குற்றவாளி ஜெயசிங் எழுதிக் கொடுத்த படி பொது மக்களுக்கு பணத்தை திருப்பித் தரவில்லை.


மனுதாரர் ராஜ்மோகன் சந்திரா மேலதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் மனுக்களை அனுப்பியதன் பேரில், திருவண்ணாமலை டவுன் காவல் நிலையத்தில் குற்ற எண் 438/2002 என்ற வழக்கு பதிவு செய்யப் பட்டது. ஆனால், வழக்கு வதிவு செய்யப் பட்டும் கூட குற்றவாளி கைது செய்யப் படவில்லை.

வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.
புகார்தாரர், வழக்கு பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆன பின்னும் கூட எவ்வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி வழக்கை விரைவாக முடிக்க ஆணை வேண்டினார். உயர்நீதிமன்றம் 27.09.2007 அன்று 6 மாதங்களுக்குள் இவ்வழக்கின் புலன் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.


ஆனால், லட்சுமியின் தலையீட்டினால், உயர்நீதிமன்ற ஆணை கூட காற்றில் பறக்க விடப் பட்டதாக மனுதாரர் தெரிவிக்கிறார்.


மேலும் மனுதாரர் அளித்த புகாரின் பேரில், லட்சுமி மீது கூட்டுச் சதி, அரசு ஊழியர் லஞ்சம் பெறுவது, அரசு ஊழியர் சட்டத்தை மீறுவது, குற்றவாளிக்கு அடைக்கலம் தருவது, குற்றவாளியை காப்பாற்றுவதற்காக அன்பளிப்பு பெறுவது, குற்றவாளியின் சொத்தை பாதுகாப்பதற்காக சட்டத்தை மீறுவது, வேண்டுமென்றே குற்றவாளியை காப்பாற்றுவதற்காக சட்டத்தை மீறுவது, என்ற இந்தியச் தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் குற்ற எண் 651 மற்றும் 655 ஆகிய இரு வழக்குகள், திருவண்ணாமலை டவுன் காவல்நிலையத்தில் பதிவு செய்யப் பட்டன.


லட்சுமியின் கணவர் குமரன் மீது திருவண்ணாமாலை தாலுகா காவல் நிலையத்தில் நில அபகரிப்பு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.


மனுதாரர் லட்சுமி மீது 10.07.2008, 10.09.2008, 20.08.2009 மற்றும் 31.07.2009 ஆகிய நாட்களில் மேலதிகாரிக்கு அனுப்பிய புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்று தெரிவிக்கிறார்.


இதனால், லட்சுமி மீதான புகார்களுக்கு வழக்கு பதிவு செய்து, துறை நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கேட்டு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.


தற்போது பணியாற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சுப் பணியாளர்களை ஏக வசனத்தில் ஏசுவது, அகங்காரத்தோடு நடந்து கொள்வது, நீண்ட காலம் பணியாற்றியவர்களை மரியாதை குறைவாக நடத்துவது என்று லஞ்ச ஒழிப்புத் துறை பணியாளர்கள் லட்சுமி மீது படிக்கும் புகார் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.


குறிப்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றும், அனுபவம் வாய்ந்த டிஎஸ்பிக்களையும், இன்ஸ்பெக்டர்களையும் மரியாதைக் குறைவாக பேசுவதாக, பலர் தெரிவிக்கின்றனர்.
இப்படி லஞ்சப் புகாருக்கு ஆளான ஒரு அதிகாரி, லஞ்ச ஒழிப்புத் துறையில் உயர் அதிகாரியாக இருப்பது அத்துறையின் நேர்மையையே சந்தேகிக்க வைக்கிறது.


இது மட்டுமன்று. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், துஷ்பிரயோகம் செய்யப் பட்டு வரும் இரண்டு வாகனங்களைப் பற்றிய விபரங்களை கேட்டு ஒருவர் மனு செய்திருந்தார். அந்த மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது என்று பதில் அளித்தார் லட்சுமி.


லஞ்ச ஒழிப்புத் துறை விலக்கு அளிக்கப் பட்டுள்ளதாக அரசு ஆணை வெளியிடப் பட்ட பின்னர், வி.வி.சோமசுந்தரம் என்பவருக்கு பதில் வழங்கப் பட்டது. இந்த விபரத்தை சுட்டிக் காட்டி, தகவல் ஆணையத்தில் வழக்காடப் பட்டது.

மனுதாரர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், ஒருவருக்கு தகவல் வழங்கியும், ஒருவருக்கு வழங்காமலும் பாரபட்சமாக, பொதுத் தகவல் அலுவலர் செயல்படுவதால் அவருக்கு அதிகபட்ச அபராதமாக ரூ.25,000/- அபராதம் விதிக்க வேண்டுமென வாதிட்டார்.


இரு தரப்பு வாதங்களையும் கேட்ட ஆணையம், வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
இது போல, பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் லட்சுமி, இன்னும், லஞ்ச ஒழிப்புத் துறையில் தொடர்ந்து வருகிறார்.


ஊழல் புகாருக்கு ஆளாகியுள்ள காவல் கண்காணிப்பாளர் லட்சுமியை, உடனடியாக வேறு துறைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, உள் துறை செயலாளருக்கும், காவல்துறை தலைமை இயக்குநருக்கும், தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் புகார் மனு அளிக்கப் பட்டுள்ளது.


நடவடிக்கை எடுப்பாரா உள் துறைச் செயலாளர் ?



சவுக்கு

No comments:

Post a Comment