
ஜோதி பாசு. சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், கட்சி பேதங்களைக் கடந்து, எல்லாருடனும் நேச உணர்வுடன் பழகிய ஒரு தலைவன் ஜோதி பாசு.
சிபிஎம் கட்சியை வெறுக்க பல காரணங்கள் இருந்தாலும், இதையெல்லாம் தாண்டி ஜோதி பாசு அனைவராலும் நேசிக்கப் பட்டவர். இன்று மேற்கு வங்கத்தில் சிங்கூர், நந்திகிராம் என்று பல மக்கள் விரோத நடவடிக்கைகள் இன்றைய மேற்கு வங்க அரசால் எடுக்கப் பட்டு வருகிறது. மக்கள் அன்னியமாகிப் போய் உள்ளனர்.

இன்றைய சிபிஎம் முதலமைச்சர் புத்த்தேவ் பட்டாச்சார்யா போல தரகு முதலாளியாக ஜோதி பாசு என்றைக்குமே செயல்பட்டது கிடையாது. ஜோதி பாசு முதலமைச்சராக இருந்த வரை, சிங்கூர், ந்ந்திகிராம் லால்கர் போன்ற பிரச்சினைகள் பெரிய அளவில் எழவில்லை என்பதும் குறிப்பிடத் தகுந்த்து.

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி போல பதவிக்காக கட்சியை தூக்கி எரிந்தவர் அல்ல ஜோதி பாசு. கட்சிக்காக பதவியை தூக்கி எறிந்தவர். 1996ல் பிரதமர் பதவி ஜோதி பாசுவை தேடி வந்த்து. இப்பதவி இவருக்கு வந்த்து சிபிஎம் என்ற கட்சிக்காக அல்ல.

ஜோதி பாசு என்ற மனிதரின் ஆளுமைக்கும் நேர்மைக்கும் கிடைத்த பதவி. ஆனால், கட்சியை மீறி செயல்படமாட்டேன் என்று பிடிவாதமாய் பிரதமர் பதவியை உதறித் தள்ளியவர் பாசு.

எந்த நிலையிலும் கட்சிக் கட்டுப்பாட்டை மீற மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தவர் பாசு. கட்சியின் கொள்கைகள் குறித்த விமர்சனங்களைக் கூட கட்சி கூட்டத்தில் மட்டுமே செய்தவர் பாசு. தன்னுடைய மிகப் பெரிய ஆளுமையை தன்னுடைய சுயநலத்துக்கு ஒரு போதும் பயன்படுத்தாதவர் ஜோதி பாசு.

பாசு போன்ற தலைவரின் மறைவு இந்திய ஜனநாயகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பே.

பாசு போன்ற தலைவர்கள் இல்லாத நிலையில், சிபிஎம், ஒரு முழுமையான முதலாளித்துவ நலன் பேணும் கட்சியாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

ஜோதி பாசு என்ற மகத்தான மனிதனுக்கு, மக்கள் தலைவனுக்கு “சவுக்கு” தனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.
சவுக்கு
No comments:
Post a Comment