Saturday, March 6, 2010

எனக்கு வேற வழி தெரியல….




எனக்கு வேற வழி தெரியல…. என்ன பண்றது சொல்லுங்க. நான் எப்பவோ என் கதைய முடிச்சுக்கிட்டிருக்கணும். இந்த அளவுக்கு சந்தி சிரிக்கணும்னு என் தலையெழுத்து. வெளிய தலக்காட்ட முடியல.


என் அப்பாதான் எல்லாத்துக்கும் காரணம்… … … அப்பாவ குறை சொல்லி என்ன பண்ண ? என் புத்தி எங்க போச்சு ?. நானும்தானே இந்தப் புகழுக்கு மயங்கிப் போய் கிடந்தேன்.

”பெரிய டைரக்டர்மா. பாத்துட்டு வந்துடலாம். அவர் பார்வை உன் மேல பட்டாலே நீ ஸ்டார்தாம்மா ” என்று அப்பா என்னிடம் சொல்லியபோது, ஒரே நேரத்தில் பயமும், பரபரப்பும் தான் என்னை தொற்றிக் கொண்டது.

ஏற்கனவே, பள்ளியில் உள்ள தோழிகள், ”நீ அழகா இருக்கடி… சினிமாவுக்கு போனா, இப்போ இருக்க ஹீரோயின்லாம் இருக்க இடம் தெரியாம போயிடுவாங்க” என்று உசுப்பேற்றிய வார்த்தைகள் என் திமிரை பல இன்ச்சுகளுக்கு ஏற்றி வைத்திருந்தன.

அப்பா கோடம்பாக்கத்தின் கனவுலகத்துக்குள் வாய்ப்புத் தேடி, தன் வாழ்க்கையை தொலைத்தவர். தன் கனவை என் மூலம் நிஜமாக்கி, கார், பங்களா என்று வலம் வரலாம் என்று ஆசைப்பட்டார் என்ற விபரம் எனக்கு அப்போது புரியவில்லை.


”எனக்குப் பின்னாடி ஃபீல்டுக்கு வந்தவன்லாம் இன்னைக்கு பெரிய ஸ்டாரா இருக்கான்” என்று அவ்வப்போது தன் துரதிருஷ்டத்தை புலம்பிக் கொண்டே இருப்பார். அப்போது எனக்கு பதினாலு வயசு இருக்கும். ”உன்னை எப்படியாவது ஹீரோயினா ஆக்கிட்டா நம்ம கஷ்டமெல்லாம் போயிடும்மா” என்று சொன்னபோது எனக்கு குறுகுறுப்பு உணர்ச்சிதான் ஏற்பட்டதே ஒழிய, பயம் ஏற்படவில்லை.

ஒரு நாள் அந்த பிரபலமான டைரக்டர் தன் அடுத்த படத்திற்கு ஹீரோயின் தேடிக்கொண்டிருக்கிறார் என்ற செய்தி கேட்டு, அப்பா யார் யாரையெல்லாமோ பார்த்து ஒரு நாள் அப்பாயின்ட்மென்ட் பெற்றார். பதட்டத்தோடுதான் அந்த அலுவலகத்தில் நுழைந்தேன்.
”இதான் உங்க பொண்ணா ? ய்யா. ஷி ஈஸ் குட் லுக்கிங். பட் மேக்கப் டெஸ்ட் பாத்துட்டுத்தான் சொல்ல முடியும். போர்ட்ஃபோலியோ கொண்டு வந்துருக்கீங்களா ? ”
அப்பா பதட்டத்துடன் ஆல்பத்தை எடுத்து நீட்டினார்.


”ஓகே. ஐ வில் கால் யூ” உடனே அருகில் இருந்த பிஏவை அழைத்து, அவர் காதில் ஏதோ சொன்னார்.


”ஓகே. நீங்க கௌம்புங்க. ஐ ஹேவ் இன்ஸ்ட்ரக்டட் மை பிஏ. ” ”அவர்கிட்ட டீடெய்ல்ஸ் கேட்டுக்குங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பி வெளியே போனார்.




கண்ணாடி போட்டுக்கொண்டு, களைப்பாய் தெரிந்த 35 வயது மதிக்கத்தக்க பிஏ என்று அழைக்கப் பட்டவன் அப்பாவிடம் ”சார், நீங்க என்னோட வாங்க” என்று அப்பாவை அழைத்துப் போனான்.
நான் அங்கேயிருந்த நாற்காலியில் அமர்ந்து அப்பாவை எதிர்ப்பார்த்து, அங்கே இருந்த விருதுகளையும் புகைப்படங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன்.

”வாம்மா போலாம்” என்ற அப்பாவின் குரல் கேட்டு எழுந்து அப்பாவை பார்த்தபோது, அவர் முகத்தில் கவலையின் அடையாளங்கள் தெரிந்தன. உடனடியாக நான் நிராகரிக்கப் பட்டதாகத்தான் தோன்றியது. ஆனால், அப்பா என்னை மேக்கப் டெஸ்ட்டுக்கு அழைத்துள்ளார்கள் என்று கூறியபோது இதற்கு எதற்கு அப்பா கவலைப்படுகிறார் என்று ஏற்பட்ட குழப்பம் மறுநாளே தெளிவானது.

மறுநாள் அந்த இயக்குநர் கார் அனுப்பியிருந்தார். அப்பா என் முகத்தை நேராகப் பார்க்காமல், ”டைரக்டர் சொல்றபடி நடந்துக்கம்மா” என்றபோது, லேசாகப் புரிந்தது. ஆனாலும், அப்பாவே சொல்லும்போது, இதில் என்ன இருக்கிறது என்றும் தோன்றியது.




சரியாக காலை 8 மணிக்கு, கார் கிளம்பியது. நான் மேக்கப் டெஸ்ட் என்றவுடன், ஏவிஎம் ஸ்டுடியோவிலோ, வேறு ஏதாவது ஸ்டுடியோவிலே நடக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், கார், சென்னை நகரைத் தாண்டி வெகுதூரம் சென்று, தனிமையாக இருந்த ஒரு பங்களாவுக்குள் நுழைந்தது.


அந்த ஹாலில் அசிஸ்டென்டுகள் போல, நான்கைந்து பேர் எதையோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சேரில் அமரவைக்கப் பட்டேன். அரை மணிநேரம் கழித்து, இயக்குநர் அழைப்பதாக ஒரு அறைக்குள் அனுப்பப் பட்டேன். அந்த அறையில் ஒரு சிறிய மேசையும், பெரிய கட்டிலும், டிவியும் இருந்ததைப் பார்த்துமே இது மேக்கப் டெஸ்ட் இல்லை என்பது புரிந்தாலும், ”டைரக்டர் சொல்றபடி நடந்துக்கம்மா ” என்ற அப்பாவின் குரல்தான் கேட்டது.


”கம் ஹியர். சிட் டவுன்” என்று இயக்குநர் என்னை கட்டிலில் அமரச் செய்தார். ”இதுக்கு முன்னாடி நடிச்சிருக்கியா” என்று கேட்ட கேள்வி சம்பிரதாயமாகத்தான் இருந்தது.
”யூ ஹேவ் ய ஃபோட்டோஜீனிக் ஃபேஸ்” என்று என் முகத்தை பிடித்து, இடமும் வலமுமாக திருப்பினார். ஏசியின் குளிரையும் மீறி வேர்க்கத் துவங்கியது.

”ஜஸ்ட் ரிலாக்ஸ். டோன்ட் பி அப்ரேய்ட்” என்று அந்த இயக்குநர் கூறியபோது, கிராமத்துப் படம் எடுக்கும் இவர் ஏன் இங்கிலீஷிலேயே பேசுகிறார் என்று வியப்பு ஏற்பட்டது.


”படத்துல, கொஞ்சம் க்ளோசா நடிக்கிற மாதிரி ஒரு சீன் வச்சிருக்கேன்” ”கேன் யூ மேனேஜ் ? ” என்று கேட்டபோது, மவுனமாக தலையாட்டினேன்.


”சீ. தட் ஈஸ் ய லவ் சீன். ப்யூட்டிஃபுல் ரொமான்ஸ். ஹீரோ வர்றான். உன் கிட்ட வந்து உன் கண்ண க்ளோசா பாக்குறான். உன் முகத்த ரெண்டு கையாலும் புடிக்கிறான்.” என்று சொல்லியபடி, அவரும் அதையெல்லாம் செய்தார்.





என்னையறியாமல் என் உடலில் வெப்பம் ஏறியதை உணர முடிந்தது. ”நெக்ஸ்ட் அப்பிடியே கட்டிப் புடிக்கிறான் ” என்று சொல்லி கட்டிப் பிடித்தபோது, வேண்டாம் என்று மனதின் ஒரு மூலையில் தோன்றினாலும் என்னையறியாமல் அவரை இறுக்கி கட்டிப் பிடித்தேன். ஆனாலும் 10 நிமிடம் கழித்து உடலில் அருவருப்பு உணர்ச்சியே மேலிட்டது.

திடீரென்று தாங்கமுடியாத வியர்வை நாற்றம் தெரிந்தது. உடனே பாத்ரூமுக்கு சென்று அரை மணி நேரம் குளித்தேன்.


அதற்குப் பிறகு, என் வாழ்க்கை தலைகீழாக புரட்டிப் போடப்பட்டது.
எனக்கு அந்த டைரக்டரின் வழக்கப் படி ”ஆர்” வரிசையில் புதிய பெயர் சூட்டப் பட்டது. ஆனந்த விகடனில் அட்டைப் படத்தில் என் படம் வந்தபோது, இந்த உலகம் என் காலடியின் கீழ் உள்ளது என்று உணர்ந்தேன்.

ஷுட்டிங் நடக்கும் போதே, அப்படத்தின் ஹீரோ, இயக்குநரைப் போலவே ”மேக்கப் டெஸ்ட்” எடுக்க அழைத்த போது, மறுப்பு சொல்ல இயலவில்லை. ஆறு மாதங்கள் கடந்து விட்டிருந்தபடியால், இந்த வேதனை பழகிப் போயிருந்தது. இப்போதெல்லாம் அருவருப்பு உணர்ச்சி வருவதேயில்லை.

பழகியது என் உடலா மனதா என்பதை கண்டுபிடிக்க இயலவில்லை. அருவருப்பான வியர்வையும், விஸ்கி வாசனையும் என் வாழ்வின் ஒரு பகுதியானது. பார்க்கும் ஆண்கள் அத்தனை பேரும், என் மார்பை முறைத்துப் பார்ப்பது பழகிப் போனது.

ஷுட்டிங் முடிந்து, படமும் ரிலீசானது. படம் சுமாராகப் போனாலும் பாடல்கள் சூப்பர் ஹிட். குறைந்தது ஒரு நூறு பேட்டிகளாவது கொடுத்திருப்பேன். வானத்தில் பறந்து கொண்டிருந்தேன். கார், பங்களா என்று வசதிகள் பெருகியது. அப்பா சந்தோஷமாக விஸ்கியில் நீந்திக் கொண்டிருந்தார்.

எல்லா நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு வர வேண்டும் அல்லவா ? அப்படித்தான் என் சிறகுகளும் ஓய்வு எடுத்துக் கொண்டன. புதிய ஹீரோயின்கள் வரத் தொடங்கியதும் என் வாய்ப்புகள் குறைந்தன. தினந்தோறும் ”மேக்கப் டெஸ்டுகள்” நடந்து கொண்டுதானே இருக்கும். நல்லவேளை, சொந்தப் படம் எடுக்கலாம் என்ற அப்பாவின் ஆசையை தடுத்ததால், கடன் இல்லாமல் தப்பித்தேன்.


அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கையில்தான், வசந்தம் மீண்டும் வீசியது. இந்திய ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தபோது உடனடியாக சம்மதம் தெரிவித்தேன்.

எத்தனை மகிழ்ச்சியான காலம் அது ? முதன் முறையாக என் புகழையும் தாண்டி என்னை நேசிக்கும் மனிதர் என்று அவர் மீது அன்பைப் பொழிந்தேன். என் கடந்த காலத்தைப் பற்றி பேசுவதை கவனமாக தவிர்த்தார். ஆறு மாதம் காஷ்மீரில் சொர்க்கத்தை அனுபவித்தேன்.

மிலிட்டரி ஆபீசர்கள் கலந்து கொள்ளும் பார்ட்டிகள் வாரந்தோறும் நடைபெற்றது. விதவிதமான ஆடைகளில் ஹிந்தியில் அரட்டை அடித்துக் கொண்டு ஆபீசர்களின் மனைவிகளோடு சந்தோஷமாகத்தான் போனது.

”நான் ஒன்னு சொன்னா கேப்பியா ? ” என்று அவர் கேட்டபோது, என்ன இது நம்மகிட்ட போய் இப்படி கேட்கிறார் என்ற வியப்பே ஏற்பட்டது. ஆனால் அவர் கேட்டது, வியப்பையும் தாண்டி கோபத்தை ஏற்படுத்தியது.


”எங்க ஆபீசர் உன் மேல ஆசைப்பட்றார். ” ”ஹி வான்ட்ஸ் டு ஷேர் ய நைட் வித் யூ” என்று நாகரீகமான ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தினார். ”ஐ நோ, இட் ஈஸ் நாட் ந்யூ டு யூ” என்று அவர் சொன்னதுதான் வலியை ஏற்படுத்தியது.

இரவு முழுவதும் யோசித்தேன். மறுத்தால், இந்த இனிய வாழ்வில் விரிசல் ஏற்படும்.” அடுத்து என்ன” என்ற கேள்வி பூதாகரமாக பயமுறுத்தியது. ”ஓகே. இஃப் யு வான்ட் இட், இட்ஸ் ஓகே வித் மீ” என்று நான் கூறியதும் அவர் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.

இரண்டு வாரங்களில், புயல் வீசத் தொடங்கியது. இரவுகள் உறக்கமின்றி நீண்டு கொண்டே சென்றன. அவரின் நடவடிக்கைகள் மாறத் தொடங்கியது. அந்த ஆபீசர், மீண்டும் மீண்டும் நச்சரிப்பதும், இவருக்கு என்னை அனுப்ப மனமில்லாமல் போராடுவதும் தெரிந்தாலும், அதற்கு நான் காரணமென்று என் மீது தன் கோபத்தை கொட்டினார்.

ஒரு நாள், இனிமேல் காலம் தள்ள முடியாது என்று இறுதியாக முடிவெடுத்து, சென்னை திரும்பினேன்.

தனியாகத் தங்கியிருந்தாலும், இருக்கும் கொஞ்ச சேமிப்பில் எத்தனை நாள் காலம் தள்ள முடியும் என்று கவலையாக இருந்தது. டிவி சீரியல்களில் வாய்ப்புத் தேடலாம் என்று முயற்சி மேற்கொண்டேன். டிவியில் ஏற்கனவே நடித்துக் கொண்டிருந்த அவள், முக்கியமான சில நபர்களிடம் அறிமுகப் படுத்தினாள். டிவி சீரியல்களில் தலைக் காட்டத் துவங்கி வருமானத்துக்கு குறைவில்லாமல்தான் இருந்தது.

ஆனால் வாழ்க்கை வெறுமையாக இருந்தது. டிவி சீரியல்கள் நடிக்கும் இடத்திலும், கழுகுகள் இருந்தாலும், என்னால் சினிமா ஹீரோயின் என்ற கவுரவத்தினால், தப்பிக்க முடிந்தது.
”ஒருவன் கூடவா என்னை உண்மையாக நேசிக்க மாட்டான் ? எதற்கு இந்த வாழ்க்கை” என்ற விரக்தியில் இருந்த நேரம்.. …

”ஏய். உனக்கு என்ன பிரச்சினைன்னு தெரியும். அமைதியில்லாம அலையிற. இதுக்கெல்லாம் ஒரே வழி தியானம் செய்வதுதான். என் கூட வா” என்று அவள் அழைத்துச் சென்ற இடத்துக்குச் சென்றவோது, உண்மையிலேயே என் மனது அமைதியானது. ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் அமர்ந்து தியானம் செய்வதை கண்டபோது என்னவென்றே அறியாமல் மனது நிம்மதியடைந்ததை உணர்ந்தேன்.

ஒரு சிறிய மேடையில் அமர்ந்து காவி உடை அணிந்த அந்த இளைஞன், வாழ்க்கையின் அத்தனை சிக்கல்களுக்கும் விடை அறிந்தவன் போல அமைதியாக பேசிக்கொண்டிருந்தான். என் மனதில் ஏற்பட்ட அத்தனை குழப்பத்துக்கும் அவன்தான் விடை என்று உணர்ந்தேன்.

”வாடி. ஸ்வாமிஜி கிட்ட போய் பேசலாம்” என்று அழைத்தாள். அவளுக்கு அந்த ஆசிரமத்தில இருந்த செல்வாக்கினால், ஸ்வாமிஜியை தனியாக சந்திக்க முடிந்தது. என்னை அவரிடம் அறிமுகப் படுத்தினாள்.


”உன் மனதில் கலக்கம் இருக்கிறது.” ”உன் மனது அலைபாய்ந்து கொண்டு எதையோ தேடி அலைகிறது” என்று அவர் கூறியவுடனே, அவர் காலில் விழுந்து அழுதேன்.
என் தோளைத் தொட்டுத் தூக்கியவர், என் தலையில் கைவைத்து, ஆசி வழங்கினார். அவர் கரம் பட்டவுடன், என் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. மனதில் இருந்த கஷ்டம் அனைத்தும் விலகிப் போனது போல இருந்தது.

”ஸ்வாமி, இப்போ டிவி சீரியல்ல நடிச்சுக்கிட்டு இருக்கேன். உங்க ஆசிரமத்துலேயே, பர்மனென்ட்டா இருந்துடுறேன் ஸ்வாமி” என்று அவர் காலடியில் அமர்ந்து அவர் முகத்தைப் பார்த்து சொன்னேன்.

”ஆண்டவனின் அருள் நீ செய்யும் பணியிலும் இருக்கிறது. அதைத் தொடர்ந்து செய். என்னை எப்போது வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம். என் அருள் உனக்கு எப்போதும் உண்டு” என்று அருகில் இருந்த தட்டில் இருந்து ஒரு மலரை எடுத்துக் கொடுத்தார்.

”இனி எனக்கென்ன கவலை. என் கவலைகளையெல்லாம் அவர் காலடியில் வைத்து விட்டேன். நான் இனி ஆனந்தப் பறவை. ” மீண்டும் சிறகு விரித்து பறக்கத் தொடங்கினேன்.

ஸ்வாமிஜிக்கு பணிவிடை செய்வதிலேயே என் ஓய்வு நேரம் அனைத்தையும் செய்தேன். ஸ்வாமிஜியின் அனைத்து வேலைகளும் என்னிடம் ஒப்படைக்கப் பட்டது.
இப்படித்தான் ஒரு நாள் ஸ்வாமிஜிக்கு பணிவிடை செய்யும் போது, என்னையும் அறியாமல், ஸ்வாமிஜியின் கரங்களை எடுத்து முத்தமிட்டேன்.





என்னைத் தொட்டுத் தூக்கிய ஸ்வாமி, என் கன்னத்தில் முத்தமிட்டார். ஸ்வாமிஜியை கட்டி அணைத்து, அவர் உதட்டில் முத்தமிட்டபோது, அவர் மறுக்கவில்லை. ஸ்வாமிஜிக்கு என்னை அர்ப்பணம் செய்வது என் கடமை என்றே உணர்ந்தேன். அர்ப்பணமும் செய்தேன்.

அதற்குப் பிறகு ஸ்வாமிஜிக்கு நெருங்கிய பக்தை என்று ஆசிரமத்தில் அறியப்பட்டேன். நான் ஸ்வாமிஜியுடன் இருக்கும் போது, யாரும் உள்ளே வரமாட்டார்கள்.




இப்பிடி சந்தோஷமாத்தானே இருந்தேன். நான் சந்தோஷமா இருந்தாத்தான் அந்த கடவுளுக்குப் பொறுக்காதே. திடீர்னு ஒரு போன்.. ”நானும் ஸ்வாமிஜியும் நெருக்கமா இருக்கிற மாதிரி வீடியோ சன் டிவில ஓடுதாம்” நான் நம்பவே இல்லங்க. இத யாரு வீடியோ எடுத்துருப்பாங்க ? நான் ஸ்வாமிஜி கூட இருக்கப்போ, யாருமே வரமாட்டாங்களே. அப்புறம் எப்படிங்க இப்படி ?

அய்யோ.. வெளில தலக்காட்ட முடியலியே…. இப்பிடி பண்ணிட்டாங்களே… என் மனசு இப்படி கஷ்டப் படுதுன்னா ஸ்வாமிஜி மனசு எப்படி கஷ்டப் படும். படுபாவிங்க. ஸ்வாமிஜி மனச கஷ்டப்படுத்துன இந்தப் பாவிங்க நல்லா இருப்பாங்களா ?

நக்கீரன் பத்திரிக்கைல கலர் படம் எடுத்துப் போட்டு இப்பிடி அநியாயம் பண்றாங்களே ? சிட்டி பூரா போஸ்டர் அடிச்சு ஒட்டிருக்காங்களே.. ... போன்ல பதில் சொல்லி மாள மாட்டேங்குதே... அய்யோ எப்பிடி நான் வாழுவேன் ?


இப்போ சொல்லுங்க. இனிமே நான் எப்படி வாழ முடியும் ? நான் என் கதையை எப்பவோ முடிச்சுகிட்டு இருக்க வேண்டியவள் தானே ? நீங்களே சொல்லுங்க.



சவுக்கு

2 comments:

  1. தோழர்.பின்னிடீங்க..என்ன அருமையான விவரிப்பு,கற்பனையாஉண்மையா புரிந்து கொள்ளமுடியாத திணறல்,யாருமே கவலைபடாத அந்த நடிகையின் மறுபக்கதில் இவ்வளவு வேதனைகளா.பணதுக்க்காகவும் புகழுக்காகவும் தன்னையே விற்கும் பெண்கள் அதை சாக்காக வைத்து பெண்ணுடலை விழுங்கும் ஆண்கள்,சினிமா உலகின் சுயரூபத்தை அருமையாக கிழித்து காட்டி விட்டீர்கள்..(என்ன படங்கள் தான் கொஞ்சம் ஓவர்)தயவு செய்து வேலைய ராஜினாமா செஞ்சுட்டு முழு நேர எழுத்தாளரா வாங்க,விருதுகளுக்கு விலை போகாத,உண்மைகளை எவர்க்கும் அஞ்சாமல் எழுதுகிற எழுத்தாளர்களை தமிழகம் தேடி கொண்டிருக்கிறது.

    ReplyDelete