Tuesday, July 29, 2014

வாய்க்கால் தகராறும், வழிதவறிய நீதியும்.


(திராவிட இயக்கச் செம்மல்களில் ஒருவரது வாரிசு இன்று அவ்வியக்கத்தின் எஞ்சியிருக்கும் நற்பெயரையும் அழித்தே தீருவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார். திராவிடமே, தந்தை பெரியாரே உயிர்மூச்சு என பசப்பிக்கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கட்கும் அவர்களின் சொம்புகளுக்கும் இக்கட்டுரை அர்ப்பணம்.)

ஏ.டி.பன்னீர் செல்வம் என்று அழைக்கப்பட்ட அன்னாசாமி தாமரைச் செல்வம் நீதிக்கட்சியின் மிகப்பெரிய தலைவராக இருந்தார். இங்கிலாந்தில் பார் அட் லா பட்டம் பெற்று, சென்னை மாகாணத்தில் நிதி மற்றும் உள்துறை அமைச்சராக இருந்தார்.    

தஞ்சாவூர் மாவட்டத்தில் மிகப் பெரிய மிராசு குடும்பம் என்றால் அவருடையது என்றால் அது மிகையாகாது.  1888ம் ஆண்டு பிறந்த அவர், அமைச்சர் பதவிகளையெல்லாம் வகித்தவர், 1940ம் ஆண்டு, ஒரு விமான விபத்தில் இறந்தார்.  


மிராசு குடும்பம் என்றால் எவ்வளவு சொத்து இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அப்படி ஏராளமான சொத்துக்கள் இருந்தன.   ஏ.டி.பன்னீர் செல்வம், பாப்பா பன்னீர் செல்வம் தம்பதியினருக்கு லூயிஸ் ஜார்ஜ் செல்வம், எட்வர்ட் தாமரை செல்வம் மற்றும் ஆல்பர்ட் அருள் செல்வம் என்று மூன்று மகன்களும், மேரி ஸ்டானிஸ்லாஸ், டெய்ஸி ராயப்பன் மற்றும் மேரி விக்டோரியா ஆகிய மூன்று மகள்களும் இருந்தனர்.   மகள்கள் சொத்தில் ஆர்வம் காட்டாத காரணத்தால், மூன்று மகன்களும் 1953ம் ஆண்டு, சொத்துக்களை பங்கு பிரித்துக் கொள்கின்றனர்.   சொத்துக்கள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டாலும், பிரிக்கப்படாமல் ஒரு சில சொத்துக்கள் விடுபட்டுப் போகின்றன.   


1959ம் ஆண்டில் விடுபட்ட சொத்துக்கள், மீதமுள்ள சொத்துக்களும் பாகம் பிரிக்கப்படுகின்றன.   

இந்த மூன்று சகோதரர்களும் தங்கள் வாரிசுகளுக்கு இந்த சொத்துக்களை பின்னாளில் பிரித்துக் கொடுத்து விடுகின்றனர்.   இவர்களின் பெரும்பாலான வாரிசுகள், டெல்லி, மும்பை, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற இடங்களுக்கு சென்று நிரந்தரமாக தங்கி விடுகின்றனர்.   

இந்த வாரிசுகளில் ஆல்பர்ட் அருள்செல்வத்தின் வாரிசுகள் பாத்திமா மற்றும் சி.டி.செல்வம் ஆகியோர் மட்டும்  அவர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர்.   இதில் சி.டி.செல்வம் என்பவர், வேறு யாரும் அல்ல.  இந்தக் கதையின் கதாநாயகன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிரில் தாமரை செல்வம்தான். 


மீதமுள்ள அனைத்து நிலங்களையும், எட்வர்ட் தாமரை செல்வத்தின் மகன் மார்ட்டின் செல்வம் பராமரித்து விவசாயம் செய்து வருகிறார்.  இது கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது.   இந்த நிலங்களில் நெல், உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விதைத்து அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. 

எல்லா நிலங்களையும் தானே விவசாயம் செய்து வந்த மார்ட்டின், 2005ம் ஆண்டு முதல், பெரும்பகுதி நிலங்களை குத்தகைக்கும் விடுகிறார்.   

இந்த விவசாயமெல்லாம் சுமூகமாக போய்க்கொண்டிருந்த நிலையில், 2011 நவம்பர் மாதத்தில், ஏ.டி.பன்னீர் செல்வத்தின் மகள் டெய்சி ராயப்பனின் மகன்கள் ஜெரோம் ராயப்பன்  மற்றும் அலெக்சாண்டர் ராயப்பன் ஆகியோர், திடீரென்று தஞ்சை வந்திறங்கி, எங்கள் நிலங்களையெல்லாம் உடனே திரும்ப கொடுங்கள் என்று மார்ட்டினிடம் கேட்கின்றனர்.  மார்ட்டின், நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன, உடனே நிலத்தை கையகப்படுத்த முடியாது.  மேலும் பத்து ஆண்டுகளாக இல்லாமல் திடீரென்று வந்து நிலத்தை கேட்கிறீர்கள்.  இத்தனை ஆண்டுகளாக இந்த நிலங்களில் மரங்கள் நட்டு, விவசாயம் செய்து ஏராளமாக செலவு செய்திருக்கிறேன். எனவே, அவற்றை பராமரித்த எனக்கு உரிய நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கேட்கிறார்.  

மார்ட்டின் இந்த நிலத் தகராறு குறித்து, நன்னிலம் முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கிறார்.   இதுதான் இந்த விவகாரத்தின் முன்கதை. 

இதைத் தொடர்ந்து, மார்ட்டினுக்கு தொல்லை கொடுக்க காவல்துறையில் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்படுகின்றன.   ஜெரோம் ராயப்பன் அளித்த புகாரில் முன்ஜாமீன் பெறுகிறார் மார்ட்டின்.   முன்ஜாமீன் பெற்றதும், அதே புகாரை, ஜெரொம் ராயப்பனின் தம்பி அலெக்சாண்டர் ராயப்பன் அளிக்கிறார். 
அதிலும் முன்ஜாமீன் பெறுகிறார் மார்ட்டின்.  

மீண்டும் அதே புகாரை, ஜெரோம் ராயப்பனின் சகோதரி அளிக்கிறார்.  இது இப்படி தொடர்ந்து கொண்டே இருந்ததும், மார்ட்டின் காவல்துறை உயர் அதிகாரிகள், முதலமைச்சர் தனிப் பிரிவு உள்ளிட்டவற்றில் புகார் அளிக்கிறார்.  
ஜனவரி 2013ல் இரு தரப்பும் மாறி மாறி புகார் அளித்துக்கொண்டிருக்கும்போதே பயிர் அறுவடைக்குத் தயாராகிறது. ஆனால் யார் அறுவடை செய்வது? .   மார்ட்டினோ, இதை விதைத்தது நான்தான், வளர்த்தது நான்தான்.  ஆகையால் பழம் எனக்குத்தான் என்கிறார்.   ஜெரோம் ராயப்பனோ, நிலமே என்னுடையது. ஆகையால் பழம் எனக்குத்தான் என்கிறார்.  

விவகாரம் ஆர்டிஓ விசாரணைக்கு செல்கிறது.  வருவாய் கோட்ட அலுவலர். தாசில்தார் முன்னிலையில் அறுவடை செய்து, பயிர்கள் அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் விற்பனை செய்யப்பட்டு, தகராறு தீரும் வரை, அதற்கான தொகை அரசு கருவூலத்தில் வைத்திருக்கப்படும் என்று உத்திரவிடுகிறார். இந்த உத்திரவை எதிர்த்து ஜெரோம் ராயப்பன் உயர்நீதிமன்றம் செல்கிறார்.  

உயர்நீதிமன்றம் ஒரு வழக்கறிஞரின் முன்னிலையில் இந்தப் பயிர்கள் அறுவடை செய்யப்பட வேண்டும். உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது. 

வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவுப்படி தாசில்தான் முன்னிலையில் அறுவடை நடந்தால், பணம் முழுவதும் அரசுக் கணக்கில் செலுத்தப்படும் என்பதை உணர்ந்த ஜெரோம் ராயப்பன், ஆர்டிஓ உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றம் செல்கிறார்.  இந்த விபரம் மார்ட்டின் செல்வத்துக்கு தெரியாது.  

ஜெரோம் ராயப்பனின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், நீதிபதி சி.டி.செல்வத்தின் நண்பரும், 2014 அரக்கோணம் தொகுதி பாராளுமன்ற வேட்பாளருமான என்.ஆர்.இளங்கோ என்பது குறிப்பிடத்தக்கது.  
இது தெரியாத மார்ட்டின், ஆர்டிஓ உத்தரவின்படி, தாசில்தார் முன்னிலையில் அறுவடை நடக்கும் என்று நம்பிக் கொண்டு இருக்கிறார்.  

26,01.2013 அன்று மார்டின் வீட்டுக்கு செல்லும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சுவாமிநாதன், அவர் இல்லாத காரணத்தால், மார்ட்டினை தொலைபேசியில் அழைத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்திரவுகளை தெரிவிக்கிறார்.  அங்கேயே இருங்கள், நான் வருகிறேன் என்று மார்ட்டின் கூறிவிட்டு வேக வேகமாக கிளம்பி வீட்டுக்கு சென்றால், சுவாமிநாதன் நீதிபதி சி.டி.செல்வத்தை பார்த்து விட்டு வருவதாக சொல்லி விட்டு  மார்ட்டின் வருவதற்கு முன்னதாகவே சென்று விடுகிறார். 

மார்ட்டினுக்கோ அதிர்ச்சி.   நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதை நம்மிடம் அளிக்காமல் எதற்காக சி.டி.செல்வத்தை பார்க்கச் செல்லவேண்டும். மெல்ல மெல்ல விஷயங்கள் தெளிவாகின்றன அவருக்கும், நமக்கும் ! 

29.01.2013 அன்று உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி நெல் அறுவடை செய்யப்படுகின்றது.  

ஆர்டிஓ பிறப்பித்த உத்தரவை நீதிமன்றத்திடமிருந்து மறைத்து ஜெரோம் உயர்நீதிமன்றதில் இப்படி ஒரு உத்தரவை பெற்று இருப்பதாகவும்,  சர்ச்சையில் உள்ளது மொத்தம் 11.2 ஏக்கர் மட்டுமே என்றும், ஆனால் காவல்துறை மற்றும் நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞரின் உதவியோடும் தான் விவசாயம் செய்த 78 ஏக்கர் நிலத்திலும், ஜெரோம் அறுவடை செய்து விட்டார்,  சர்ச்சையில் வெறும் 11.2 ஏக்கர்கள் இருந்தாலும், மொத்தமாக 78 ஏக்கரிலும் நிலத்தையும் ஆட்டையை போட்டு விட்டார்களே என்று உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு மூலமாக முறையிடுகிறார் மார்ட்டின். 

இதற்குப் பிறகு இந்த விவகாரத்தில் என்ன நடந்துள்ளது மார்ட்டின் தொடர்ந்து விசாரிக்கிறார். அப்படி விசாரிக்கையில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் அவருக்கு தெரிய வருகின்றன.  12.01.2013 அன்று நீதிபதி சி.டி.செல்வம் நேரடியாக தஞ்சாவூர் சென்று, சேலம் ஆத்தூரில் இருந்து அறுவடை இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்து, காவல்துறையின் துணையோடு,  78 ஏக்கர் நிலங்களையும் அறுவடை செய்ய முயற்சி செய்ததும், அறுவடை இயந்திரம் நிலத்தில் சிக்கிக் கொண்டதால், அந்த அறுவடை முயற்சியை கைவிட்டு விட்டு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று விட்டதும் மார்ட்டினுக்கு தெரிய வருகிறது.  

மேலும் தஞ்சாவூரில் அறுவடை நடந்த 29.01.2013 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் இருந்த சி.டி.செல்வம், காலை எட்டு மணி முதல் தொடர்ந்து நீதிமன்ற தொலைபேசி வழியாக ஜெரோம் ராயப்பனோடு தொடர்பில் இருந்த விவகாரமும் மார்ட்டினுக்கு தெரிய வருகிறது.   

மதுரை உயர்நீதிமன்றக் கிளை தொலைபேசி எண்  0452-2433237 மற்றும் 0452-243328 ஆகிய எண்களில் இருந்து ஜெரோம் ராயப்பனின் செல்பேசிக்கு 15 ஜனவரி 2013 முதல் 31.01.2013 வரை, தொடர்ந்து அழைப்புகள் சென்றிருப்பதும், அறுவடை நடந்த 29.01.2013 அன்று சி.டி.செல்வம் பல முறை பேசியிருப்பதும் தெரிய வருகிறது மார்ட்டினுக்கு.   

ஆக ஜெரோம் ராயப்பன் வெறும் பொம்மை என்பதையும், அவரை பின்னால் இருந்து இயக்குவது நீதிபதி சி.டி.செல்வம் என்பதையும் மார்ட்டின் புரிந்துகொள்கிறார்.  இனி மூடி மறைத்து பேசினால் பயனில்லை என்று முடிவெடுத்து, விஷயத்தை அம்பலப்படுத்துவது என்று முடிவெடுக்கிறார்.  நமது 78 ஏக்கர் நிலத்தில் விளைந்த நெற்பயிர்களை திருட்டுத்தனமாக எடுத்துக் கொண்டார்களே என்ற ஆத்திரம் அவருக்கு. 

இந்நிலையிலேயே மார்ட்டின் சி.டி.செல்வத்தை எதிர் மனுதாரராக சேர்த்து, மதுரை உயர்நீதிமன்றக் கிளை தொலைபேசி எண்  0452-2433237 மற்றும் 0452-243328 ஆகியவற்றின் கால் ரெக்கார்டுகளை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி ஒரு மனுவை தாக்கல் செய்கிறார். இவ்வாறு அவர் மனு தாக்கல் செய்த நாள் 28 ஏப்ரல் 2014.  


உயர்நீதிமன்ற நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து வழக்கு தொடுத்தால் அதற்கு எப்படி எண் வழங்கப்படும் ?   இதனால், இந்த வழக்கை தலைமை நீதிபதியிடம், இதற்கு எண் வழங்கலாமா வேண்டாமா என்று உத்தரவுக்காக வைக்கப்படுகிறது.  தலைமை நீதிபதியின் உத்தரவின் பேரில், எண் வழங்கலாமா வேண்டாமா என்பதை நீதிபதி நாகமுத்து விசாரிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு, நீதிபதி நாகமுத்துவிடம் இந்த வழக்கு 29 ஏப்ரல் 2014 அன்று விசாரணைக்கு வருகிறது   அதற்கு மறுநாள் ஒரே ஒரு நாள் மட்டுமே வேலை நாள்.  அதன் பின்னர் கோடை விடுமுறை.  மீண்டும் ஜுன் முதல் வாரத்தில்தான் நீதிமன்றம் திறக்கும். 

நீதிபதி நாகமுத்து, இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் வழக்கை கோடை விடுமுறைக்குப் பிறகு தள்ளி வைக்கிறார். இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டியது நீதிபதி நாகமுத்து மட்டுமே விசாரிக்க இயலும். ஏனென்றால், தலைமை நீதிபதியின் உத்தரவுப்படி இந்த வழக்கு நீதிபதி நாகமுத்துவிடம் விசாரணைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.   

ஆனால் அன்றைய தினமே, 29 ஏப்ரல் 2014 அன்றே, நீதிபதி சி.டி.செல்வம், வேறு யாருமல்ல, தஞ்சாவூர் சென்று திருட்டுத்தனமாக அறுவடை செய்ய முயற்சி செய்த குற்றச்சாட்டுக்குள்ளாயிருக்கும் அதே சி.டி.செல்வம்தான், தன் மீதே புகார் செய்யும் தம்பி மார்ட்டினின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறார்.   

போர்ட்ஃபோலியோ மாற்றப்பட்டும் பெருந்தகை கர்ணன் வைகுந்தராஜன் மீதான வழக்கினை தான் தான் விசாரிக்கப்போவதாக அடம்பிடித்தது நம் வாசகர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வரவேண்டுமே..... நமது உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அதிகாரம் அப்படிப் பட்டது...... வானத்தை எட்டி....... அதனையும் தாண்டி...

ஆக திராவிடக் குல திலகம் ஜூன் 29 அன்று தனக்கெதிராக பிஎஸ் என் எல்லிடமிருந்து அழைப்பு விவரங்களைக் கோரும் தம்பி மார்ட்டினின் மனுவை விசாரணைக்கு எடுத்துகொண்டு, அவர் நீதிமன்ற அவமதிப்பு செய்துவிட்டதாகவும் கண்டறிந்து, அன்றே ஓர்  உத்திரவு பிறப்பிக்கிறார்.  அதன்படி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் புரிந்த  மார்ட்டின் மறுநாளே, 30 ஜுன் அன்று, நேரில் ஆஜராக வேண்டும். 


மறுநாள் மார்ட்டின் சார்பாக அவரது வழக்கறிஞர் செல்வராஜ் ஆஜராகிறார். தனது கட்சிக்காரர் தஞ்சை மாவட்டத்தில் வேறு வழக்குக்காக மற்றொரு நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டி இருந்ததால், அன்று ஆஜராக இயலாது என்று தெரிவிக்கிறார். 

நீதிமன்ற அவமதிப்புச் சட்டப் பிரிவு 17ன் படி, நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை புரிந்தவருக்கு, நோட்டீஸ் நேரடியாக வழங்கப்பட வேண்டும்.  முதல் நாள் நோட்டீஸ் வழங்கி அது சேர்ந்ததா இல்லையா என்பது பற்றிக் கூட கவலைப்படாமல், உடனே அவரை வரச் சொல்ல நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது என்றும் மார்ட்டினின் வழக்கறிஞர் வாதாடுகிறார். அதை காதில் வாங்கிக் கொள்ளாத செல்வம், 10 ஜுலை 2014 அன்று மார்ட்டின் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடுகிறார். 

கோடை விடுமுறைக்குப் பிறகு மார்ட்டின் செல்வம் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு பதில் மனு தாக்கல் செய்கிறார்.  தனது மனுவில் நீதிபதி நாகமுத்து முன்பு விசாரணைக்கு இருந்த இந்த வழக்கு எப்படி நீதிபதி செல்வம் முன்பாக, தலைமை நீதிபதி உத்திரவின்றி விசாரணைக்கு வந்தது என்பது புரியவில்லை. 

ஒருவர் சிவில் கன்டெம்ப்ட் குற்றம் புரிந்திருக்க வேண்டுமென்றால், நீதிமன்றத்தின் ஏதாவது ஒரு உத்தரவை வேண்டுமென்றே மீறியோ, நிறைவேற்றத் தவறியோ இருக்க வேண்டும்.  இந்த நேர்வில் நான் அது போல எந்தத் தவறையும் செய்யவில்லை.  கிரிமினல் கன்டெம்ப்ட் நடவடிக்கை ஒருவர் மீது எடுக்க வேண்டுமென்றால், நீதிமன்ற அவமதிப்பு விதிகள் இவ்வாறு கூறுகிறது "Where a Judge of a High Court considers that any matter that might have come to his notice in any way require initiation of proceedings in contempt against any person, the papers relevant thereto together with the direction of the Judge shall be placed before the Chief Justice for consideration as to whether the matter may be forwarded to the Advocate General".

அதாவது, ஒருவர் மீது நீதிமன்ற அவமதிப்பு (Criminal Contempt) எடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி அது குறித்த உத்தரவோடு, தலைமை நீதிபதிக்கு சம்பந்தப்பட்ட வழக்கு கட்டை அனுப்பி உத்தரவு பெற வேண்டும். அதன் பின் அரசு தலைமை வழக்கறிஞருக்கு அந்த வழக்கை அனுப்பி வைக்க வேண்டும். 

இது போல எந்த நடவடிக்கையும் என் மீதான வழக்கில் எடுக்கவில்லை.   ஆகையால், இந்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கூறுகிறார் மார்ட்டின். 

நீதி நியாயம் நெறிகள் இதைப்பற்றி செல்வமா கவலைப்படப்போகிறார் ?. தம்பியின் மனு செல்வம் முன்பாக அடுத்து 4 ஜுலை 2014 அன்று விசாரணைக்கு வருகிறது.  அந்த மனு குறித்து வாதாட எழுந்த வழக்கறிஞர் செல்வராஜை பேசவே விடாமல், ஒரேயடியாக மனுவை தள்ளுபடி செய்தார் செல்வம்.  

10 ஜுலை 2014 அன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.  அப்போது மார்ட்டின் சார்பாக ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்படுகிறது.  

"இந்த நீதிமன்றத்துக்கு தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கவோ, மனுதாரரை நேரில் வரவைக்க சம்மன் அனுப்பவோ அதிகாரம் இல்லை.  இது வரை நடந்த அனைத்து நடவடிக்கைகளும், செல்லாது" இவ்வளவுதான். 


எப்படி இருக்கும் செல்வத்துக்கு.... ?  வந்ததே கோபம்....  பிறப்பித்தார் ஒரு நீண்ட உத்தரவை.   மனுதாரரை ஜாமீனில் விடுவிக்க முடியாத பிடியாணையில் கைது செய்ய உத்தரவிடுகிறேன் (Non Bailable Warrant).   என் மீது மனுதாரர் சொல்லயிருக்கும் புகார்கள் அனைத்தையும் தொகுத்து என் முன்பாக வைக்குமாறு உத்தரவிடுகிறேன். 


உலகத்தில் எங்காவது இப்படி ஒரு உத்தரவை கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? "என் மீதான புகார்களை தொகுத்து, என் முன்னாலே வைக்க வேண்டுமாம்"
சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு இந்த உத்தரவை அனுப்பினார் செல்வம்.  

nemo debet esse judex in propria sua causa

இது ஒரு லத்தீன் வாக்கியம்.  நீதித்துறை மற்றும் இயற்கை நீதியின் அடிப்படை நாதம்.  விதி.  தன்னுடைய வழக்கில் தானே நீதிபதியாக இருக்கக் கூடாது என்பதே இதன் பொருள்.   இந்த வழக்கில் நெருங்கிய உறவினர் மனுதாரர் என்பது மட்டுமல்ல.   தானே எதிர் மனுதாரராக இருக்கும் ஒரு வழக்கை, தானே விசாரிக்கும் போக்கு ஒரு நீதிபதிக்கு அழகா ?

ஆர்.விஸ்வநாதன் மற்றும் அப்துல் வஜீத் என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் இவ்வாறு கூறுகிறது. AIR 1963 1 p 61

" The rule of law about judicial conduct is as strict as it is old. No judge can be considered to be competent to hear a case in which is directly or indirectly interested. A proved interest in a judge not only disqualifies him but renders his judgment a nullity."

நீதிபதிகளின் ந‘டத்தை குறித்து சட்டம் மிகவும் பழமையானது என்பதால், உறுதியானது.   நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள நீதிபதி அந்த வழக்கை விசாரிக்க தகுதியில்லாதவர் ஆகிறார்.  அப்படி அவருக்கு அந்த வழக்கில் உள்ள உறவு நிரூபிக்கப்பட்டால், அவரை தகுதியிழக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல், அவரது தீர்ப்பை செல்லாததாகவும் ஆக்குகிறது.  

ஆந்திரப்பிரதேச போக்குவரத்துக் கழகம் மற்றும் சத்தியநாராயணா போக்குவரத்து என்ற வழக்கில் (1965 AIR(SC) 1303) தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு பின்வருமாறு கூறியுள்ளது. 

If a person has a pecuniary interest in the case brought before him, that is an obvious case of bias which disqualifies him to try the cause. If a person is hostile to a party whose cause he is called upon to try, that again would introduce the infirmity of bias and could disqualify him from trying the cause. In dealing with cases of bias, it is necessary to remember that no one can act in a judicial capacity if his previous conduct gives round for believing that he cannot act with an open mind"

ஒரு நபருக்கு பொருளாதார உறவு உள்ள ஒரு வழக்கு அவர் முன்னிலையில் விசாரணைக்கு வருமேயானால் அந்த வழக்கை விசாரிக்க அவர் தகுதியில்லாதவர் என்பது வெளிப்படையான உண்மை.   ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டவரோடு பகைமை இருக்கும் ஒரு வழக்கு அவர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தாலும், அந்த வழக்கையும் அவர் விசாரிக்க முடியாத வகையில் தகுதியிழக்கிறார்.  இது போன்ற வழக்குக்களை விசாரிக்கையில், ஒருவர் இத்தகைய வழக்குக்களை விசாரிக்கையில் இதற்கு முன்னர் எப்படி நடந்து கொண்டுள்ளார், என்பதை கருத்தில் கொண்டால் அவர் வெளிப்படையான, பாரபட்சமில்லாத நீதிபதியாகவே நடந்து கொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

சி.டி.செல்வத்தைப் பற்றி சவுக்கில் அத்தனை கட்டுரைகள் வந்திருந்தும், அவர் தொடர்ந்து இத்தளத்தை தடை செய்வதில் எத்தகைய முனைப்பு காட்டினார் என்பதும், தொடர்ந்து முடக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பதும் இவர் கடந்த கால நடவடிக்கை.   

ராமாயணத்தில் ஒரு குறுங்கதை வரும்.  ராமன் ஒரு மரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். தனது கால்களை புல் தரையில் வைத்திருந்தார்.   சிறிது நேரம் கழித்து கால்களை எடுத்தபோது காலில் ரத்தம் இருந்ததைக் கண்டார்.  கீழே பார்த்தால் அவர் கால் வைத்ததால்  ஒரு அணில் நசுங்கி துடித்துக் கொண்டிருந்தது.  பதறிப் போன ராமர் நான் கால் வைக்கையில் ஏன் நகரவோ கத்தவோ இல்லை என்று கேட்டதற்கு அணில் பதில் கூறியது.  தேவனே, வேறு யாராவது இதை செய்திருந்தால் நான் உங்களிடம் புகார் கூறுவேன்.   நீங்களே இதை செய்தால் நான் யாரிடம் போவேன் ?   நீங்கள் தேவனாக இருப்பதால், உங்களின் ஒவ்வொரு காலடியும் கவனமாக எடுத்து வைப்பீர்கள் என்று நம்பி இருந்தேன் என்று கூறியது. 

இவ்வாறுதானே நீதிபதிகள் பார்க்கப்படுகிறார்கள்.  அதனால்தானே அவர்களை தேவனே என்று அழைக்கிறார்கள் ?

இப்படி அழைக்கப்பட சிரில் தாமரைச் செல்வத்துக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. 

தனது தனிப்பட்ட கோபத்துக்காக ஆயிரக்கணக்கானோர் படிக்கும் இணையதளத்தை தடை செய்தவர், பகிரங்கமாக  தான் சார்ந்திருந்த கட்சி வழக்கறிஞர்களுக்கு சாதகமான உத்தரவுகளை அள்ளி அள்ளித் தருபவர் என்பது வரலாறு. 

இன்று தனது சொந்தப் பகையைத் தீர்த்துக் கொள்ளவும் நீதிபதி என்ற தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்.  சிரில் தாமரை செல்வத்தின் தம்பி மார்ட்டின் செல்வம் சிவில் கன்டெம்ப்ட் நடவடிக்கைக்கு உள்ளாக எந்த தீர்ப்பையும் மீறவில்லை.   கிரிமினல் கன்டெம்ப்ட் நடவடிக்கைக்கு ஆளாக, நீதிமன்றத்தை அவமதிக்கும் எந்த குற்றத்தையும் செய்யவில்லை.   

தனது அபகரிக்கப்பட்ட சொத்துக்கு நீதி கேட்டு நீதிமன்றத்தை நாடி வருகிறார். தனக்கெதிராக உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் சதி செய்திருக்கிறார் எனவும் அந்த நபர் குற்றஞ்சாட்டுகிறார். அவ்வாறு குற்றஞ்சாட்டப்படும் நீதிபதியே  நீதி கேட்டு வந்தவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கும் அவலம் உலகில் வேறெங்காவது நடக்குமா ?

சுயமரியாதை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர் ஏ.டி.பன்னீர்செல்வம்.   அவரின் பேரனான சிரில் தாமரை செல்வத்துக்கும் சுயமரியாதைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்ன ? நீதிக்கட்சித் தலைவரின் வாரிசு எப்படியெல்லாம் நீதியை நிலை நாட்டுகிறார்? புல்லரிக்கவில்லை? 

சரி பிடியாணை நிறைவேற்றப்பட்டதா, நீதிபதி நாகமுத்துவோ, தற்காலிகத் தலைமை நீதிபதி அக்னிஹோத்ரியோ, செல்வத்தின் திருவிளையாடல்களைக் கண்டுகொண்டனரா? சுவை மிகுந்த திருப்பங்கள் கொண்ட இந்த அநீதிக் கதையில் அடுத்து என்ன? தொடர்ந்து சவுக்கைப் படியுங்கள். எல்லாம் தெரியவரும் !

சர் ஏ.டி.பன்னீர் செல்வம் சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடித் தலைவர். அவர் பெயரால் தமிழகத்தில் ஒரு மாவட்டமே அமைக்கப்பட்டது.



அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன் ? 

2 comments:

  1. CT Selvam pathi padika padika, i lose all the respect for Indian Judiciary...

    ReplyDelete
  2. அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன் ?

    ReplyDelete