எதற்கு ஒரு வருடம் முடிந்து விட்டது என்கிறீர்களா ? 14.04.2008 அன்று டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில் முன்னாள் தலைமைச் செயலாளர் திரிபாதி அவர்களுக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை முன்னாள் இயக்குநர் உபாத்யாய் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் உரையை வெளியிட்டது. அந்த உரையாடலில் திரிபாதி உபாத்யாவிடம் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் கணக்கு விபரங்களை வருமானவரித் துறையிடமிருந்து வாங்குமாறும், அவ்வாறு வாங்கி பரிசீலித்தால் ஜெயலலிதா எப்படியும் வழக்கில் சிக்குவார் என்றும் கூறுகிறார். அவ்வாறு ஆதாரம் கிடைக்க வாய்ப்பில்லை என்று பதிலளித்த உபாத்யாவை அதிகார தோரணையுடன் தான் சொல்வது போல் செய்யுமாறும் தன்னை நேரில் வந்து சந்திக்குமாறும் வலியுறுத்தினார் திரிபாதி.
உரையாடல் வெளியானதும் பதறியது அரசாங்கம்... அன்று மதியமே அப்படி ஒரு உரையாடல் நடைபெறவில்லை, அந்நாளிதழின் மீது வழக்கு தொடுக்கப் போகிறோம் என மறுப்பு வெளியிடப்பட்டது. அன்று இரவு மக்கள் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகளில் அந்த உரையாடல் ஒலிபரப்பப் பட்டது. மறுநாள் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் சட்டவிரோத ஒட்டுக்கேட்பு என்று புகார் கூறி அமளியை கிளப்பின. முதலமைச்சர் சட்டவிரோத ஒட்டுக்கேட்பு எதுவும் நடைபெறவில்லை, இதுபற்றி ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரிக்கப்படும் என அறிவித்தார். அன்று இரவே விஜிலென்ஸ் ஆணையர் ஸ்ரீபதி ஊழல் வழக்கில் சிக்கிய தற்போதைய சென்னை கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திரபால் சிங் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகள் மீதான விசாரணையை நடத்தக் கூடாது என உபாத்யாய்க்கு உத்தரவிட்ட உரையாடல் தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பானது. விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்த பின் 16.04.2008 அன்று இரவு டிஐஜி சங்கர் ஜிவால் தலைமையிலான உளவுத்துறையினர் உபாத்யாய் அலுவலகத்தை சோதனை செய்தனர். வீட்டுக்குச் சென்ற உபாத்யாய் மீண்டும் அலுவலகத்துக்கு வரவழைக்கப் பட்டு அவர் லேப்டாப் பறிமுதல் செய்யப் பட்டது. அவர் அலுவலகத்திலிருந்து பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. Êவிசாரணை ஆணையம் அமைக்கப் பட்டபின் வேறு ஒரு விசாரணை நடைபெறக் கூடாது என்ற விதியை மீறி இச்சோதனைகள் நடத்தப் பட்டன. 20 நாட்கள் கழித்து டி3டி டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனம் உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட் உத்தரவின்படி சட்டவிரோதமாக தொலைபேசி ஒட்டுக் கேட்பை செய்து வருவதாகவும் இதற்கு பிரதிபலனாக ஜாபர்சேட்டுக்கு சட்டவிரோதமாக திருவான்மியூரில் வீட்டு மனை ஒதுக்கப் பட்டுள்ளதாகவும், டி3டி நிறுவனத்தில் டிஐஜி சங்கர் ஜிவால் மனைவி மம்தா சர்மா இயக்குநர் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.
சண்முகம் கமிஷன் தனது விசாரணையைத் துவக்கியது. உபாத்யாய் கமிஷன் முன்பு ஆஜராகி உரையாடல்களை பதிவு செய்து வைத்தது தாம்தான் என்று ஒப்புக் கொண்டார். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கையிலேயே டாக்டர் சுப்ரமணியன் சுவாமி பத்திரிக்கையாளர் சந்திப்பில் உபாத்யாய் மற்றும அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை இடையே நடைபெற்ற உரையாடலை வெளியிட்டார். அந்த உரையாடலில் அமைச்சர் பூங்கோதை ரூ.30,000/- லஞ்சம் வாங்குகையில் கையும் களவுமாக பிடிபட்ட தனது உறவினர் ஜவகர் என்பவர் மிகவும் பாவம் (!) என்றும், அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்காமல் துறை நடவடிக்கை எடுக்குமாறும் ஜவகர் குடும்பமே அவர் சம்பாதிப்பதை (?) வைத்துதான் வாழ்கிறது என்றும் பேசினார்.
மறுநாள் சட்டசபையில் இப்பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் கருணாநிதி அமைச்சர் பூங்கோதை இவ்வாறு பேசியது குறித்து தாம் மிகவும் வேதனைப் படுவதாகவும் (இப்படி மாட்டிக் கொண்டாரே என்றா ?) சண்முகம் கமிஷனிடம் இந்த பூங்கோதை உரையாடலையும் விசாரணைக்கு கொடுக்கலாமா என்று அரசு பரிசீலிக்கும் என்று கூறினார். ஆனால் விசாரணை கமிஷன் முடியும் வரை முதல்வரின் நீண்ட பரிசீலனை முடியவேயில்லை.
நாடகத்தின் அடுத்த கட்டம் துவங்கியது. பூங்கோதை உரையாடலை சண்முகம் கமிஷனிடம் விசாரணைக்கு அளிக்க அரசு ஆணை எதையும் வெளியிடாத நிலையிலேயே சண்முகம் கமிஷனால் நியமிக்கப் பட்ட போல¦ஸ் பூங்கோதை உரையாடலை வெளியிட்ட பத்திரிக்கையாளர்களை அழைத்து விசாரித்தது. டி3டி நிறுவனத்தின் உரிமையாளர் நாராயண யாதவ் மற்றும் டிஐஜி சங்கர் ஜிவால் ஆகியோரும் விசாரிக்கப் பட்டனர். பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றி வந்த சங்கர் என்பவர் உபயோகப்படுத்தியதாக கூறப்பட்ட ஒரு மொபைல் போனில் பேசிய பத்திரிக்கையாளர்களை ஒவ்வொருவராக கமிஷன் போலீஸ் விசாரித்தது. அந்த விசாரணை சர்வதேச தீவிரவாத செயலில் ஈடுபட்ட நபர்களை விசாரிப்பது போல் மிக மிக ரகசியமாகவும் மிரட்டும் தொணியிலும் இருந்தது. அந்த விசாரணையை நடத்திய கபில்குமார் என்ற இளம் ஐபிஎஸ் அதிகாரி உண்மையை வெளிக்கொண்டு வருவதைவிட அதை மூடி மறைப்பதில் மிகவும் மும்முரமாக இருந்தார் என அவ்விசாரணையில் பங்கேற்றவர்கள் கூறுகின்றனர். மேலும் விசாரணையில் ஏற்படும் முன்னேற்றங்களை மணிக்கொரு முறை உளவுத்துறை ஐஜி ஜாபர் சேட்டிடம் போன் மூலமாகவும் நேரில் சந்தித்தும் தகவல் அளித்து வந்தார் என செய்திகள் வெளியாயின. சங்கர் வைத்திருந்தாக கூறப்பட்ட அந்த மொபைல் போனில் பேசியிருந்த ஒரு சில பத்திரிக்கையாளர்களையும் ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்களையும் விசாரணைக்கு கடைசி வரை அழைக்கவேயில்லை என்று கமிஷனில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் கூறுகிறார். இந்த டேப் விவகாரம் குறித்து எந்த செய்தியையுமே வெளியிடாத டெகல்கா இதழின் நிருபரும் விட்டுவைக்கப் படவில்லை. நீதிவிசாரணை நடைபெறுகையில் இப்பிரச்சினையின் சூத்திரதாரியான திரிபாதியை அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப் பட்டபோது, அந்த வழக்கறிஞரை தன் சேம்பருக்கு அழைத்து திரிபாதியை மட்டும் அழைக்காதீர்கள் என்று சண்முகம் சொன்னதாகவும் கூறப்படுகிறது. திரிபாதியை அழைத்தால் அவர் எதற்காக கொடநாடு வழக்கு பற்றி பேசினார், யார் சொல்லி அவ்வாறு பேசினார் என்ற உண்மை வெளி வந்துவிடுமோ என்பதாலா, அவ்வாறு வந்தால் செல்வி.ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சத்தாலா என்பது நீதிபதி சண்முகத்துக்கே வெளிச்சம்.
பத்திரிக்கையாளர்களுக்கு சம்மன் அனுப்பப் பட்டு ஒரு பத்திரிக்கையாளரை தவிர அனைவரும் சாட்சியம் அளித்தனர், குறுக்கு விசாரணையின் போது உபாத்யாவிடம் நீங்கள் உங்கள் தொலைபேசி உரையாடலை பதிவு செய்து வைக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏன் ஏற்பட்டது என்ற கேள்விக்கு நீதிபதி அனுமதி மறுத்தார். விசாரணை அவசர அவசரமாக நடத்தி முடிக்கப் பட்டு 13.07.2008 அன்று சண்முகம் தனது அறிக்கையை அரசிடம் அளித்தார்.
நாடகத்தின் மூன்றாவது கட்டம் தொடங்கியது. லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய ஊழியர் சங்கர் சிபி.சிஐடி போல¦சால் கைது செய்யப் பட்டார். கைது செய்யப் பட்டபின் ஒரு அரசியல் தலைவருக்கெதிராகவும் சில நேர்மையான உயர் போல¦ஸ் அதிகாரிகளுக்கெதிராகவும் வாக்குமூலம் அளிக்கச் சொல்லி கடுமையாக சித்திரவதை செய்யப் பட்டதாகவும் கூறப் படுகிறது. உபாத்யாய் சஸ்பென்ட் செய்யப் பட்டார். செப்டம்பர் மாதத்தில் சண்முகம் கமிஷன் அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப் பட்டது. அறிக்கையில் சங்கர் மீது கிரிமினல் வழக்கும், உபாத்யாய் மற்றும் சிலர் மீது துறை நடவடிக்கையும், பத்திரிக்கையாளர்கள் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்ய கமிஷன் பரிந்துரை செய்தது. கமிஷன் சம்மன் அனுப்பி சாட்சியம் அளிக்க ஆஜராகாத பத்திரிக்கையாளர்கள் மீது எவ்வித பரிந்துரையும் செய்யாத நீதிபதி சண்முகம் விசாரணைக்கு ஒத்துழைத்து சாட்சியம் அளித்த பத்திரிக்கையாளர்கள் மீதும், சம்பந்தமே இல்லாத டெகல்கா இதழின் நிருபர் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்தார். என்ன ஒரு நீதி பரிபாலனம் .. .. .. ?
ஆனால் கமிஷனின் பரிந்துரையை ஒரு பாதி ஏற்ற அரசு பத்திரிக்கையாளர்கள் மீதான கமிஷனின் பரிந்துரையை பெருந்தன்மையாக (?) ஏற்கவில்லை.
சட்டமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப் பட்ட சில நிமிடங்களிலேயே விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர் இரவிக்குமார் விசாரணை கமிஷனின் வரம்புக்குள் வரவில்லை என்று தெரிந்தும் பூங்கோதை பற்றி கமிஷன் அறிக்கையில் எதுவும் சொல்லப் படவில்லை, அவர் மிகவும் திறமையானவர் (!) அவருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என்றும் பேசினார். பூங்கோதை ரொம்பபப நல்லவர் என்று தெரிந்த இரவிக்குமாருக்கு பத்திரிக்கையாளர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யச் சொல்லி அளித்த பரிந்துரையை கண்டிக்க தெரியவில்லை.
நீதிபதி சண்முகம் சிறப்பான முறையில் நீதி பரிபாலனம் (! ?) செய்ததால் நீதி வழங்க அவரே பொருத்தமான நபர் என்று சட்டக் கல்லு£ரி மாணவர்கள் மோதல் தொடர்பான விசாரணைக்கும் அவரே நீதிபதியாக நியமிக்கப் பட்டுள்ளார். இவ்விசாரணை இன்னும் முடிவடையவில்லை. இவ்விசாரணை முடிந்திருந்தால் 19/2 வழக்கறிஞர் தாக்குதல் பற்றி விசாரித்து உண்மைகளை (?) கண்டறிந்து சொல்ல தமிழக அரசு நீதிபதி சண்முகத்தைத்தான் நியமித்திருக்கும். மும்பையிலிருந்து ஒருவர் வர நேர்ந்திருக்காது.
ஒரு வருடம் முடிவடைந்து விட்டது. நாடகத்தின் க்ளைமாக்ஸ் என்ன என்கிறீர்களா ?
பூங்கோதை மீண்டும் தகவல் தொழில் நுட்ப அமைச்சரானார்
(ஒட்டுக் கேட்பில் சிக்காமல் இருப்பது எப்படி என்பதை அறிய)
உபாத்யாய் மாநகர போக்குவரத்து கழகத்தின் விஜிலென்ஸ் அதிகாரி ஆனார்
(மாநகர பேருந்துகள் ஓடும் சத்தங்களை பதிவு செய்ய)
திரிபாதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார் !
(ஓய்வு பெற்று வந்த பணத்தில் கொடநாட்டுக்கு அருகில் எஸ்டேட் வாங்க)
ஸ்ரீபதி தலைமைச் செயலாளர் ஆனார் !
(ஊழல் வழக்கில் சிக்கியுள்ள இதர உயர் அதிகாரிகளை காப்பாற்ற)
ஜாபர் சேட் உளவுத்துறை ஐஜியாகவே உள்ளார் !
(சட்ட விரோத ஒட்டுக்கேட்பை தொடர)
சங்கர் ஜிவால் பதவி உயர்வு பெற்று உளவுத்துறையிலேயே உள்ளார் !
(தன் மனைவி பெயரில் இன்னும் சில ஒட்டுக் கேட்பு நிறுவனங்களை தொடங்க)
லஞ்ச ஒழிப்புத் துறையின் மூன்று ஊழியர்கள் இன்னும் சஸ்பென்டிலேயே உள்ளனர். இவர்களுக்கு ஏன் பதவி வழங்கப் படவில்லை ? அட.. இவர்கள் நாடகத்தின் துணைக் கதாபாத்திரங்கள் தானே !
நாடகத்தின் தலைப்பு என்ன என்று கேட்கவேயில்லையே நீங்கள் ?
நெஞ்சுக்கு நீதி ( ????? !!!!!!)
No comments:
Post a Comment