Thursday, July 30, 2009

லஞ்ச ஒழிப்புத் துறை லஞ்சத்தை ஒழிக்கிறதா ? வளர்க்கிறதா ?



தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை என ஒரு துறை செயல்பட்டு வருகிறது என்பது “லஞ்சம் வாங்கிய விஏஓ கைது, லஞ்சம் வாங்கிய உதவியாளர் கைது, லஞ்சம் வாங்கிய காவலர் கைது“ என்று வரும் செய்திகளை வைத்து ஓரளவு தெரிந்து கொள்கிறோம்.

ஆனால், தமிழ்நாட்டில், விஏஓ, உதவியாளர் போன்ற அரசின் கடைநிலை ஊழியர்கள் மட்டும்தான் லஞ்சம் வாங்குகிறார்களா ? வேறு உயர் அதிகாரிகள் யாருமே லஞ்சம் வாங்குவதில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. உயர் அதிகாரிகளும் வாங்குகிறார்கள், ஆனால், அவர்கள் “உயர் அதிகாரிகள்“ என்பதனால், அவர்களைப் பார்த்து லஞ்ச ஒழிப்புத் துறை பம்முகிறது.


லஞ்ச ஒழிப்புத்துறையின் இணையத் தளத்தில் உள்ள பட்டியலின்படி 2004-2005ல் 534, 2005-2006ல் 750, 2006-2007ல் 488 மற்றும் 2007-2008ல் 683 வழக்குகள், லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பதிவு செய்யப் பட்டுள்ளது. இவற்றில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகள் எவ்வளவு தெரியுமா ? 2004-2005ல் 7, 2005-2006ல் 6, 2006-2007ல் 19 மற்றும் 2007-2008ல் 15. ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கெதிராக இவ்வளவு குறைவாக வழக்குகள் பதிவு செய்யப் பட்டதன் காரணம், அதிகாரிகள் அவ்வளவு நேர்மையாக இருக்கிறார்கள் என்பதா ? இல்லை. அதிகாரிகள் தங்களுக்கெதிராக எந்த ஒரு விசாரணையும் நடத்த விடாமல் தடுக்கிறார்கள் என்பதுதான் உண்மை.


ஐநூறும் ஆயிரமும் லஞ்சமாக வாங்குவதும் சட்டப் படி குற்றம்தான் என்றாலும், லட்சத்திலும் கோடியிலும் லஞ்சம் வாங்கிக் குவிக்கும் அதிகாரிகளும் அமைச்சர் பெருமக்களும், அரசியல்வாதிகளும் மகிழ்ச்சியாக திளைத்துக் கொண்டிருக்கையில், கடைகோடி ஊழியர்களை மட்டும் குறி வைத்து லஞ்ச ஒழிப்புத் துறை பிடிப்பது எந்த வகையில் நியாயம் ?


இன்று “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்“ நாளிதழில் வந்துள்ள ஒரு செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அனிதா ராதாகிருஷ்ணன் என்ற எம்.எல்.ஏ, கடந்த வாரம் அதிமுக வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப் பட்டுள்ளார். நீக்கப் பட்டதை தொடர்ந்து கருணாநிதியையும், ஸ்டாலினையும் வியாழன் அன்று இரவு சந்தித்து, திமுக வில் சேரப்போவதாக அறிவித்துள்ளார். இதன் பின்னணியைப் பற்றித்தான் அச்செய்தி விரிவாக விளக்குகிறது. கடந்த செப்டம்பர் 2006ல் ஓ.பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், செ.ம.வேலுச்சாமி உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப் பட்டது. இவ்வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகவே, அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவில் சேரப்போவதாக தகவல் வந்துள்ளது. இச்செய்தியை உறுதி செய்யும் வகையில், ஒன்றாக வழக்கு பதிவு செய்யப் பட்டாலும் ஓ.பன்னீர்செல்வம் மீது மட்டும் குற்றப் பத்திரிக்கை புதன் அன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.


இது தவிர மேலும், இதுபோல் ஜெனிபர் சந்திரன், கண்ணப்பன், கு.ப.கிருஷ்ணன், ஆலடி அருணா, இந்திரா குமாரி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளும், ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றார்போல், லஞ்ச ஒழிப்புத் துறையால் ஓரங்கட்டப் பட்டன என்றும் தகவல் அப்பத்திரிக்கையில் வெளியிடப் பட்டுள்ளது.


நேர்மையான நடந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கு சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே நடந்த ஒரு சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம். உபாத்யாய் என்ற லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர், தனக்கு பணி தொடர்பாக தொடர்ந்து நெருக்கடிகள் வந்ததால், தனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை பதிவு செய்து வைத்தார். அவ்வாறு பதிவுசெய்து வைத்த உரையாடலில் ஒன்று பத்திரிக்கையில் வெளியானது. அவ்வுரையாடலில், தலைமைச் செயலாளர் திரிபாதி ஜெயலலிதா மீது, எப்படியாவது வழக்கு பதியச் சொல்லி உபாத்யாவை வற்புறுத்துகிறார். இவ்வுரையாடல் வெளியானதைத் தொடர்ந்து, உபாத்யாய் பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப் படுகிறார். திரிபாதி மீது நடவடிக்கை இல்லை.


இச்செய்திகளையெல்லாம் பார்க்கையில், நேர்மையாக, மனசாட்சிக்குப் பயந்து, விதிகளின்படி நடக்கும் அதிகாரிகள் அறுகி விட்டார்கள் என்பதும், நேர்மையாக இருந்தால் கடுந்துன்பங்களைச் சந்திக்க நேரிடும் என்பதும்தான் விளங்குகிறது.


லஞ்ச ஒழிப்புத் துறையும், சுதந்திரமாக செயல்படாமல், எதிரிகளை பழிவாங்க ஆட்சியாளர்கள் கையில் கிடைத்த ஒரு ஆயுதமாகத்தான் செயல்பட்டு வருகிறது.

/ஒப்பாரி/


No comments:

Post a Comment