முத்துக்கருப்பன், IPS
2001ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், மிகவும் போட்டிகள் அதிகம் இருக்கும் சென்னை மாநகர காவல் ஆணையாளராக நியமிக்கப் பட்டார் முத்துக்கருப்பன் IPS. கூடுதல் டிஜிபி தரத்திலான அதிகாரிகள் தான் சென்னை மாநகரத்தின் காவல் ஆணையாளராக நியமிக்கப் படுவது வழக்கம். ஆனால், ஐஜி அந்தஸ்த்திலான முத்துக்கருப்பன் நியமிக்கப் பட்டது அப்போதே பலரது புருவங்களை உயர்த்தியது.
கருணாநிதியின் நள்ளிரவு கைது
முக்கிய பதவிக்கு வந்த முத்துக்கருப்பன், ஆட்சிக்கு விசுவாசமாக இட்ட கட்டளையை நிறைவேற்றினார். 2001 ஜுன் 21 அன்று நள்ளிரவு, கருணாநிதியை வீட்டுக் கதவை உடைத்து, வலுக்கட்டாயமாக கைது செய்தார் முத்துக் கருப்பன். அப்போது, மத்தியில் ஆட்சியில் இருந்து பிஜேபி அரசில் மூன்று கேபினெட் மந்திரிகளை வைத்திருந்தார் கருணாநிதி. அவர் கொடுத்த நெருக்கடியில், ஏறக்குறைய அதிமுக அரசு டிஸ்மிஸ் செய்யும் அளவுக்கு நெருக்கடிக்கு உள்ளானது.
ஜார்ஜ் IPS
க்ரிஸ்டோபர் நெல்சன் IPS
முத்துக்கருப்பன், IPS
பிஜேபி அரசில் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, உடனடியாக கருணாநிதி, கைது நடவடிக்கையில் தொடர்புடைய க்ரிஸ்டோபர் நெல்சன், முத்துக் கருப்பன், ஜார்ஜ் ஆகிய மூன்று அதிகாரிகளையும் மத்திய அரசுப் பணிக்கு மாற்ற வைத்தார். ஆனால் இந்த மூவரும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர்.
அதிகாரம் கைக்கு வந்தவுடன் தலைகால் தெரியாமல் ஆடினார் முத்துக் கருப்பன். சென்னை அண்ணா நகரில் ஒரு இடம் தொடர்பாக இரு நபர்களுக்கு இடையே மோதல் இருந்து வந்தது. இது தொடர்பாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் வழங்கப் பட்டது. இதில் ஒரு தரப்புக்கு சாதகமாக முத்துக் கருப்பன் செயல்பட்டார். 30.08.2001 அன்று காங்கிரஸ் தலைவர் மூப்பனார் இறந்து அவரது உடல் அஞ்சலிக்காக காமாராஜர் அரங்கில் வைக்கப் பட்டிருந்தது. சென்னை நகரில் பல காவர்கள் பாதுகாப்பு பணிக்காக காமராஜர் அரங்கில் குவிக்கப் பட்டிருந்தனர்.
இதைப் பயன்படுத்தி, முத்துக் கருப்பன் ஏறக்குறைய 30 காவலர்களை போலீஸ் வேனில் ஏற்றி அண்ணா நகருக்கு அனுப்பி அங்கு தற்காலிகமாக கட்டப் பட்டிருந்த குடிசையை பிரித்து எரிந்து, இந்த இடம் இன்னாருக்கு சொந்தமானது என்று ஒரு பெயர்ப்பலகையை வைத்தார்.
சம்பந்தப்பட்ட நபரிடம், அந்த இடத்தை ஜெயலலிதா வாங்க விரும்புகிறார் என்று மிரட்டியுள்ளார் என்ற தகவலை அறிந்த உடனடியாக முத்துக் கருப்பனை கமிஷனர் பதவியிலிருந்து மாற்றி, தற்காலிக பணிநீக்ககம் செய்தார்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்கு ஒன்று பதிவு செய்யப் பட்டது. மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், ப்யூரிட்டா மினரல் வாட்டர் என்ற நிறுவனமும், ஒரு பால் பண்ணையும் நடத்தியதாகவும், அதற்காக ஏறக்குறைய 20 காவலர்களை வேலை வாங்கியதாகவும் ஒரு விசாரணையும் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப் பட்டது.
ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு மேல் பணி இடை நீக்கத்தில் இருந்தார் முத்துக் கருப்பன். ஜெயலலிதா இருக்கும் வரை பணிக்கு வரவே முடியவில்லை.
இந்நிலையில், திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், அக்டோபர் 2007ல் பணி இடை நீக்கம் ரத்து செய்யப் பட்டு, பணி வழங்கப் பட்டது. இது போக கடந்த வாரம், அவர் மீது இருந்த வழக்குகள் அனைத்திலும் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்த முத்துக் கருப்பன், மீண்டும் திமுக ஆட்சியிலேயே செல்வாக்கு பெறுவது என்பது அதிகாரிகள் எப்படியெல்லாம் சமரசம் செய்து கொண்டு சோரம் போவார்கள் என்பது தானே.
கைது செய்யப் பட்ட கருணாநிதி சிறை வாசலில்
இதே நள்ளிரவு கைதில் தொடர்புடைய க்ரிஸ்டோபர் நெல்சன் தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் ஒரு இன்ஸ்பெக்டர் பதவியில் உள்ளார். ஜார்ஜ் தற்போது, நாகர்கோயில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ளார்.
ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும், இந்த அதிகாரிகள் காட்டில் எப்போதும் மழைதான். இவர்களுக்கு எந்த சட்டமும் பொருந்தாது.
ஒப்பாரி
No comments:
Post a Comment