ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ்
தமிழகத்தில் ஐஜி அந்தஸ்தில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரியான ஏ.கே.விஸ்வநாதன் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது. சிபிஐன் ஊழல் ஒழிப்புப் பிரிவில் 5 ஆண்டுகள் எஸ்பியாகவும், டிஐஜியாகவும் பணியாற்றி, பின்னர், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் இணை இயக்குநராகவும் பின்னர் சென்னை மாநகர கூடுதல் ஆணையாளராக பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன் மீது, திடுக்கிடும் ஊழல் புகார் எழுந்துள்ளது.
பிப்ரவரி 19ல் நடந்த வழக்கறிஞர்கள் மீதான கொடும் தாக்குதலில் பங்கேற்று, பல வழக்கறிஞர்கள் படுகாயமடைய காரணமாக இருந்த ஏ.கே.விஸ்வநாதன், கடந்த ஜூன் மாதத்தில், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக இருக்கும் அழகிரிக்கு சிறப்புச் செயலாளராக நியமிக்கப் படுவதாக தகவல்கள் வந்தன.
இந்த நியமனத்திற்கு பிரதமர் தலைமையிலான நியமனக் குழுவின் ஒப்புதல் வேண்டும் என்பதால், அதன் முதற்படியாக டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின் உறைவிட ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் மாற்றப் பட்டார்.
பிரதமர் தலைமையிலான நியமனக் குழு ஏ.கே.விஸ்வநாதன் மீது, ஏராளமான நிலங்கள் வாங்கிக் குவித்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து, விஸ்வநாதன் நியமனத்தை தள்ளுபடி செய்தது. உடனடியாக ஏ.கே.விஸ்வநாதன் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலாளர் புகழேந்தி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு ஏ.கே.விஸ்வநாதன் மீது வருமானத்திற்கு அதிகமாக ஏறக்குறைய 25 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளதாகவும், அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தார்.
இப்புகாரை ஏற்று, தலைமைச் செயலாளர், விழிப்புப் பணி ஆணையர் மற்றும் உள்துறை செயலாளர் அடங்கிய உயர்நிலைக் குழு, ஏ.கே.விஸ்வநாதன் மீது, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆணையிட்டுள்ளதாக, காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசாரணையின் பின்னணியாக காவல்துறையில் நடைபெற்று வரும் கடும் பனிப்போர் காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலுக்கு அப்போதைய ராதாகிருஷ்ணன்தான் பொறுப்பு என்று ஏ.கே.விஸ்வநாதன் மனுத் தாக்கல் செய்த நிலையில், காவல் துறையில் பல அதிகாரிகள் விஸ்வநாதனுக்கு எதிராக திரும்பியுள்ளதாகவும், காவல் அதிகாரிகள் மீதான இன்னும் பல ஊழல் புகார்கள் வெளிவரும் என்றும் விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்பனிப்போரில் வெற்றி பெற வேண்டும் என்று நோக்கத்தில், தங்களுக்கு சாதகமான அதிகார மையங்களை இந்த அதிகாரிகள் அணுகி காய் நகர்த்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பனிப்போரின் விளைவாக இந்த அதிகாரிகள் மாற்றி மாற்றி குற்றம் சொல்வதிலிருந்து, இந்த அதிகாரிகள் யாரும் யோக்கியம் இல்லை, அனைவருமே கறை படிந்த கரங்கள் கொண்டவர்கள் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும் பல தகவல்களோடு, மீண்டும் தங்களை சந்திக்கிறேன்.
/ஒப்பாரி/
No comments:
Post a Comment