Saturday, October 17, 2009

நக்சலைட்டுகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா ?





நேற்று மன்மோகன் சிங் பேசிய இரு விஷயங்கள் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியன. ஞாயிற்றுக் கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த தேசத்தின் மிகப்பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல் நக்சலைட்டுகளே, வரக்கூடிய காலங்களில், நக்சலைட்டுகளுக்கெதிரான போரில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறினார். இதற்கு அடுத்து மன்மோகன் சிங் கருத்து கூறிய விஷயம், இந்தியாவில் சிஇஓக்கள் எனப்படும் தனியார் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளின் ஊதியத்தை குறைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. இந்தக் கருத்து கம்பெனி விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷீத் கடந்த வாரம், தனியார் நிறுவனங்களுக்கான தலைமை அதிகாரிகளுக்கான ஊதியம் பற்றி பாராளுமன்ற நிலைக் குழு பரிசீலிக்கும் என்று கருத்துக் கூறினார்.

இக்கருத்து வெளியிடப்பட்டதும், தனியார் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் பெரும் அச்சமடைந்து, இவர்களின் சம்பளம் குறைக்கப் பட்டால் இந்தியாவில் ஏதோ பெரும் பிரளயம் நடைபெற்று விடும் என்பது போல், பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும், ப்ரைம் டைம் எனப்படும் முக்கிய நேரத்தில், அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. இதையொட்டியே, மன்மோகன் சிங்கிடம் இக்கேள்வி கேட்கப் பட்டு, அதற்கு, அரசிடம் அப்படி ஒரு திட்டம் இல்லை என்று பதிலுறுத்தார்.




நக்சலைட்டுகளைப் பற்றிய கேள்விக்கு இத்தேசத்தின் மிகப்பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல் நக்சலைட்டுகளே. அவர்களை ஒடுக்க ராணுவம் பயன்படுத்தப் பட போவதில்லை, ஆனால் துணை ராணுவம் பயன்படுத்தப் படும் என்று கூறியுள்ளார்.




மன்மோகன் சிங் ஒரே நாளில் தெரிவித்த இந்த இரு கருத்துக்களும் மிகவும் ஆராயப்பட வேண்டியவை. நக்சலைட்டுகள் வன்முறையைப் பற்றி பிறகு பார்ப்போம். தனியார் நிறுவன தலைமை அலுவலர்களின் ஊதியம் என்ன தெரியுமா ? மாதம் குறைந்தது 50,000 முதல் பல கோடிகள் வரை. சமீபத்தில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, சல்மான் குர்ஷீத் வேண்டுகோளை ஏற்று, தான் பெறும் ஊதியத்தில், மூன்றில் இரண்டு பங்கை குறைத்துக் கொண்டதாக அறிவித்தார். இரண்டு பங்கு குறைத்தவுடன், ஆண்டுக்கு இவர் ஊதியம் எவ்வளவு தெரியுமா ? 15 கோடி. குறைப்பதற்கு முன் ஆண்டுக்கு இவர் ஊதியம் எவ்வளவு தெரியுமா ? 44 கோடி.


இவர்களின் ஊதியத்தைக் குறைக்க வேண்டும் என்ற பேச்சு இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது ஏன் எழுந்துள்ளது ? உலகெங்கும் பொருளாதார நெருக்கடி கடுமையாக இருக்கிறது. உலகெங்கும் பல பெரிய தனியார் நிறுவனங்கள் கடும் சரிவைச் சந்தித்து திவாலாகும் நிலையில் இருக்கின்றன. இதன் தாக்கம் இந்தியாவையும் சேர்த்தே பாதித்துள்ளது.

இதன் வெளிப்பாடாகத்தான், விமானத்திலும், ரயிலிலும் சாதாரண வகுப்பில் பயணம் செய்து சிக்கன நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் இது போன்ற ஸ்டண்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில்தான் தனியார் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களின் ஊதியத்தை குறைக்க வேண்டும் என்ற இந்த விவாதம். இதைத் தொடர்ந்து தான் மன்மோகன் சிங் தனியார் நிறுவனங்களுக்கு, தலைமை அதிகாரிகளின் ஊதியத்தை குறைக்க சட்டம் கொண்டு வரும் திட்டம் இல்லை என்று உத்தரவாதம் அளித்துள்ளார்.
நக்சலைட்டுகளின் வன்முறையை பற்றி அவர் கூறிய கருத்தும் விவாதத்துக்கு உரியது தான்.

இந்த தேசத்தின் மிகப்பெரிய உள்நாட்டு பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் நக்சலைட்டுகள் என்றால், இத்தகைய சூழ்நிலைகளை உருவாக்கியது யார் ?
சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாகியும், இத்தேசத்தில் வறுமை இன்னும் தலைவிரித்து ஆடுகிறதே !



ராஜீவ் பிரதமராக இருந்த போது ஏழை மக்களுக்கான திட்டங்களில் ஒரு ரூபாயில் 16 பைசா மட்டுமே அவர்களை சென்றடைகிறது, மீதமுள்ள தொகை அனைத்தும் ஊழல் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களால் களவாடப்படுகிறது என்று கூறினார்.

கடந்த வாரம் திட்டக்குழுவின் துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ராஜீவ் தெரிவித்த கருத்து இன்னும் உண்மைதான் என்று கூறினார். இந்த சூழ்நிலை மாறாமல் இருப்பதற்கு யார் காரணம் ?



நக்சலைட்டுகள் யாரை எதிர்த்துப் போராடுகிறார்கள் ? ஊழலில் புரையோடிப் போயிருக்கும் இந்த அதிகார வர்க்கத்தை எதிர்த்துதானே ?


எந்த ஒரு ஆயுதப் போராட்டமும், மக்கள் ஆதரவு இல்லையென்றால், நெடுநாள் தாக்குப் பிடிப்பது இயலாத காரியம். வட மாநிலங்களிலும், ஆந்திராவிலும் வேர் பிடித்துள்ள நக்சல் இயக்கம், தமிழ்நாட்டிலும், இதர சில மாநிலங்களிலும் வலுவாக வளராததே இதற்கு ஒரு உதாரணம்.

சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா, மகாராஷ்டிரம், ஆந்திரா, பீகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், நக்சலைட்டுகள் மிகுந்த பலத்தோடு வளர்ந்து நிற்பதற்கு யார் காரணம் ?

நக்சல் இயக்கம் வளர்வதற்கு அடிப்படை காரணத்தை ஆராயாமல், சல்வா ஜுடும் என்ற ஆதிக்க சாதியினரின் கூலிப்படையை அரசே அமைத்து, அவர்களுக்கு ஆயுதம் வழங்கி, தலித்துகள் மீதும் மலைவாழ் மக்கள் மீதும் கடும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது இந்த அரசு.

இதன் எதிர்வினையே மக்கள் நக்சல் இயக்கங்களைத் தேர்ந்தெடுத்தது.
“இந்தியாவின் மீது போர்” என்று வட இந்திய ஊடகங்கள், நக்சல் இயக்கங்கள் தாக்குதல் நடத்தும் போதெல்லாம் கூப்பாடு போடுகின்றன.


இந்தியாவின் அண்டை நாடான இலங்கை 1983ம் ஆண்டு முதல் ஏறக்குறைய 400 தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றிருக்கிறது. விடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் முடிந்தவுடன் கூட, மீனவர்கள் மீதான தாக்குதல் அன்றாடம் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. இந்திய கடலோர பாதுகாப்புப் படையும், இந்தியக் கடற்படையும், இதைக் கண்டுகொள்ளாமல் பாராமுகமாய் இருந்து வருகின்றன. இதைத் தடுக்க வேண்டிய மத்திய அரசும் மாநில அரசும், தங்களுக்குள் கடிதம் எழுதி உரையாடிக் கொண்டிருக்கின்றன.


இந்நிலையில், தமிழக மீனவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஆயுதம் தூக்கினால் அதில் என்ன தவறு இருக்க முடியும் ? இதைத்தான் தலித்துகளும், மலைவாழ் மக்களும் செய்கிறார்கள். தங்களது வாழ்வாதாரங்களையும், தங்களது உயிரையும் பாதுகாக்காத, இந்த அரசுகளை எதிர்த்து ஆயுதம் தூக்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு என்ன வழி இருக்கிறது ?

பாபர் மசூதி இடிக்கப் பட்டு 17 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அதற்காக ஒருவர் கூட தண்டிக்கப் படவில்லை என்றால், இசுலாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் மனநிலை எப்படி இருக்கும் ?

1984 சீக்கியருக்கெதிரான கலவரத்தில் 4000 சீக்கியர்கள் படுகொலை செய்யப் பட்டதற்கு ஒருவர் கூட இது வரை தண்டிக்கப் படவில்லை என்றால் சீக்கியனின் மனநிலை எப்படி இருக்கும் ?


இப்பிரச்சினையின் வேரை ஆராய்ந்து அதைக் களையாமல் இன்னும் லட்சக்கணக்கான ராணுவத்தை கொண்டு வந்து இந்த அரசாங்கங்கள் மக்கள் மீதான ஒடுக்கு முறையை கையாளுமேயானால், இந்த இயக்கங்கள் மேலும் தீவிரமாக வளருமே தவிர குறையாது.

இத்தேசத்தின் மிகப்பெரிய உள்நாட்டு பாதுகாப்புக்கான அச்சுறுத்தல், இந்த அரசியல்வாதிகள்தானே தவிர நக்சரைட்டுகள் அல்ல ! இந்த அரசியல்வாதிகள் தான், இத்தேசத்தை இத்தகைய மோசமான நிலையில் வைத்திருப்பதன் காரணம்.



ஒப்பாரி

1 comment:

  1. காங்கிரசு தடை செய்யப்படவேண்டிய கட்சி:
    மற்றபடி மஞ்சல் துண்டு காவடி எடுப்பதும் மாபெரும் குற்றம்!

    ReplyDelete