Sunday, October 4, 2009

தமிழக அரசே செங்கல்பட்டு பூந்தமல்லி வதை முகாம்களை இழுத்து மூடு !



செங்கல்பட்டு பூந்தமல்லி (அகதி) முகாம்களை இழுத்து மூட வலியுறுத்தி கோட்டை முன் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில், ஈழ அகதிகளுக்காக சிறப்பு முகாம் இயங்கி வருகிறது. நடைமுறையில் இது அகதிகள் முகாம் அல்ல ! இது சிறைச்சாலையே ! இந்த முகாம்களில் இருப்பவர்களைக் காண வழக்கறிஞர்கள் கூட காவல்துறை மற்றும் வட்டாட்சியர் அனுமதியோடுதான் காண இயலும். இம்முகாம்களில் இருப்பவர்கள் மருத்துவமனைக்குச் செல்வதென்றால் கூட, காவல்துறையினரின் பாதுகாப்போடுதான் செல்ல இயலும்.

செங்கல்பட்டு முகாமில் தற்பொழுது 58 பேர் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். பூந்தமல்லி முகாமில் 12 பேர் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். இலங்கையில் உள்ள வதை முகாம்களை மூட வேண்டும், தமிழர்கள் விடுவிக்கப் படவேண்டும் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் தமிழக அரசு, தனது கட்டுப்பாட்டில் உள்ள ஈழத் தமிழர்களை கடும் பாதுகாப்போடு, இந்த வதை முகாம்களில்தான் அடைத்து வைத்துள்ளது.

இந்த இரு முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களின் ஒரே கோரிக்கை, தமிழகத்தின் மற்ற முகாம்களில் உள்ள தங்கள் குடும்பத்தினரோடும் உறவினர்களோடும் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் இவர்கள் மீது வழக்கு நிலுவையில் இருக்கிறது என்ற காரணத்தைக் காட்டி தமிழக அரசு இவர்களை இந்த சிறப்பு முகாமை விட்டு வெளியில் விட மறுத்து வருகிறது. இந்த கோரிக்கைக்காக கடந்த ஜுலை மாதம் 23ம் தேதி முதல் 8 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதையடுத்து, ஒரு சிலரை வேறு முகாம்களுக்கு மாற்ற அனுமதித்த அரசு ஒரு மாதத்துக்குள் மற்றவர்களின் வழக்குகளை விரைவாக முடித்து, திறந்தவெளி முகாம்களுக்கு மாற்றுவதாக உறுதியளித்தது.

ஆனால் இந்த உத்தரவாதத்தை தமிழக அரசு வசதியாக மறந்து விட்டது. இதையடுத்து, இங்குள்ள அகதிகள் செப்டம்பர் மாதம் 20ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வாறு உண்ணாவிரதம் இருப்பவர்களை ஏறக்குறைய 15 நாட்களாக கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருகிறது.

இந்த முகாம்களில் இருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு 45 ரூபாய் வழங்கப் படுகிறது. இந்த 45 ரூபாயை வைத்துக் கொண்டு இந்த அகதிகள் என்ன செய்வார்கள் ? இந்த இரு முகாம்களிலும் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இப்படி இந்த வதை முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்து தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இந்த வதை முகாம்கள் உடனடியாக இழுத்து மூடப்படவேண்டும்.

இதை வலியுறுத்தி, வரும் 07.10.2009 புதன்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு தலைமைச் செயலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இம்மாநாட்டில் பங்குபெற்று கண்டன முழக்கம் நிகழ்த்த இருப்பவர்கள்....

தோழர் கொளத்தூர் மணி. பெரியார் திராவிடர் கழகம்

புதுக்கோட்டை பாவாணன், தமிழர் கழகம்

தோழர் பெ.மணியரசன், தமிழ் தேசப் பொதுவுடமை கட்சி

தோழர் தியாகு, தமிழ் தேசிய விடுதலை இயக்கம்

தோழர் தமிழ்நேயன், தமிழக ஒடுக்கப் பட்டோர் விடுதலை இயக்கம்

தோழர் வெங்கடாச்சலம், அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு

தோழர் பாலன், முத்துக்குமார் எழுச்சி இயக்கம்

தோழர் காமராசு, நாம் தமிழர் இயக்கம்

தோழர் பா.புகழேந்தி, தமிழக மக்கள் உரிமைக் கழகம்


அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்

No comments:

Post a Comment