Friday, May 21, 2010

லைலாவுக்கெல்லாம் லைலா




அது என்ன லைலாவுக்கெல்லாம் லைலா? கோடையின் கடும் வெம்மையில், காதலியின் குளிர்ச்சியான பார்வையும், வார்த்தைகளுமே வறண்டு போய் எரிச்சலை உண்டு பண்ணும் வேளையில், இனிய தென்றலாய், நமக்கெல்லாம், அரிதிலும், அரிதான மழையை தந்து, நம்மை ஒரு நாள் கட்டாய ஓய்வு எடுக்க வைத்ததற்கு லைலாவுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும். அட, அதாங்க லைலா புயல்!

இதுபோல பெயரிடுவதற்கு காரணம், புயலுக்கு இவ்வாறு பெயர் வைத்தால், எளிதாக தகவல் சொல்வதற்கும், அபாய எச்சரிக்கைகள் வழங்குவதற்கும் ஏற்ற வகையில் இருக்கும் என்பதால் தான் லைலா, பாண்டெல்லாம் புயலுக்கே பெயர் சூட்டும் கலாசாரம் வந்திருக்கிறது.

சரி, புயலுக்கு இப்படி பெயரிடும் வழக்கம் எப்போது வந்தது தெரியுமா? ஆரம்பத்தில், இவ்வாறு பெயரிடுவதை ஒழுங்குபடுத்தும் வரையில், அந்தந்த நாடுகள் அவர்களுக்கு தகுந்தாற்போல புயலுக்கும் பெயரிட்டு வந்தன.

2000-ம் ஆண்டு மஸ்கட்டில் நடந்த வானியல் அமைப்புகளுக்கான மாநாட்டில் வங்காள விரிகுடா மற்றும் அரேபியக் கடலில் ஏற்படும் புயல்களுக்கு பெயரிடுவது என்று ஒத்தக் கருத்துக்களின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, செப்டம்பர் 2004-ம் ஆண்டு முதல் புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் தொடங்கி விட்டது.

இதற்காக, ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளெல்லாம் ஒருங்கிணைந்து ஒரு அட்டவணை தயாரித்து, புதிதாக உருவாகும், ஒவ்வொரு புயலுக்கும், இந்த அட்டவணையின் படி பெயரிட்டு வருவதை வாடிக்கையாக்கி இருக்கிறார்கள். இப்படி அட்டவனைப் பட்டியலில் வந்ததுதான் லைலா. அதான் நம்ம சென்னையை குளிர்வித்து சென்றிருக்கிறதே, அதே லைலாதான்..

சரி, லைலா தென்றலாய் வந்து கோடையின் சூட்டைத் தணித்து விட்டுப் போயிருப்பது ஒருபக்கம் இருக்கட்டும், தமிழ்நாட்டை தினசரியும் தாக்கும் புயல்களுக்கு தமிழக அரசியல் தலைவர்களின் பெயரைச் சூட்டினால், அந்தப் புயல்களின் தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும், இது குறித்த வானிலை எச்சரிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தமாஸாக சிந்தித்தன் விளைவு - மேலே படிங்க...

’ராமதாஸ்’ புயல்:


தமிழ்நாட்டின் வடமாவட்டங்களின் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை பெற்றது என்று உத்தேசிக்கப்பட்ட இந்தப் புயல், குறுகிய இடமான தைலாபுரத்தில் மட்டுமே நீண்ட நெடுங்காலம் மையம் கொண்டதன் விளைவு, விரைவிலேயே வலுவிழந்து போனது. கடந்த 2009-ம் ஆண்டு இந்த ராமதாஸ் புயல், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், அந்தப் புயலால் ஒரு குடிசையையும் பெயர்த்துப் போடமுடியவில்லை. வந்த சந்தடி தெரியாமல் போனது. இனிமேல், இந்த ராமதாஸ் புயல் வந்தால் எவ்விதமான பாதிப்பும் இருக்காது என்ற காரணத்தால், வானிலை நிலையத்தில் எச்சரிக்கை செய்வதையே விட்டுவிடப் போகிறார்களாம்.

அவ்வப்போது ராமதாஸ் புயல் மையம் கொண்டுள்ளது என்ற தகவல் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டால், அது ஒரு ’டம்மி பீசு’ என்று மீனவர்கள் கண்டு கொள்ளாமல் வழக்கம் போல, கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுவிடுகிறார்கள் என்பதைக் கேட்டு, தைலாபுரம் கொதித்திக் கிடக்கிறதாம்.

’வைகோ’ புயல்:

முதன்முதலில் இந்தப் புயல் எச்சரிக்கை வந்தபோது, அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வானிலை மையம் ஏகத்துக்கும் எச்சரிக்கை மணியை ஓங்கி ஒங்கி அடித்தது. அதற்கேற்பவே இந்தப் புயல், ’புரட்சிப் புயல்’ என்றும் அழைக்கப்பட்டது.

ஆனால், வந்த சில நாட்களிலேயே, இந்தப் புயல், பெரிய அளவு தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. வெகு வேகமாக மையம் கொண்ட இந்தப் புயல், சில நாட்களாக, வேலூர் அருகே, ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் மையம் கொண்டிருந்தது. பிறகு, டெல்லியில் ஏற்பட்ட சில வானிலை மாற்றங்கள் காரணமாக, நெடுநாட்களாக மையம் கொண்டிருந்த வேலூரிலிருந்து வடக்கே நகர்ந்து, சென்னை போயஸ்தோட்டம் பகுதியில் மையம் கொண்டிருக்கிறது.

இப்போதைக்கு இந்தப் புயல், போயஸ்தோட்டம் பகுதியை விட்டு நகர வாய்ப்பில்லை என்றும், நகர்ந்தாலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால், இந்தப் புயல் குறித்து பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை என்றும் வானியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

விஜயகாந்த் புயல்:

கோடம்பாக்கத்தில் வெகு நாட்களாக மையம் கொண்டிருந்த புயல், திடீரென்று அரசியல் அரங்குக்கு நகர்ந்து வந்தபோது, வானிலை ஆய்வாளர்களே அசந்து போனார்கள். இந்தப் புயலும், வந்த சில காலத்துக்கு, மற்ற புயல்களை வலுவிழக்கச் செய்யும் பணியை செய்து வந்தது. வானியல் ஆய்வர்களும் இந்தப் புயல்... அடுத்து எந்த திசையை நோக்கி நகரும் என்பதில் குழப்பத்தில்தான் இருந்தனர்.

அடுத்தடுத்து, இந்தப் புயல் தமிழ்நாட்டை தாக்கியபோதும், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தததால், இப்போது இந்தப் புயல் எந்த திசையை நோக்கி நகரும் என்று ஓரளவுக்கு அனுமானிக்க முடிகிறது என்று வானியல் ஆய்வர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக திடீரென்று ஏற்படும் புயல் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றாலும், இந்தப் புயல் குழப்பத்தை ஏற்படுத்தாமல், தானே குழம்பி நிற்பது தான் விந்தையிலும் விந்தை என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். இதை புயல் என்று சொல்வதை விட, ஒரு வறண்ட வயல் என்பது பொருத்தமாக இருக்கும் என்றுச் சொல்லியும் சிரிக்கிறார்கள் அவர்கள்.

ஜி.கே.வாசன் புயல்:

இதைப் புயல் என்பதை விட, ஒரு சிறிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனேன்றால், இந்தப் புயல் வானியல் மாற்றங்களால் உருவானதல்ல. இதற்கு முன்பு, டெல்லியில் ஏற்பட்ட வானியல் மாற்றங்களால், தமிழ்நாட்டில் இருந்த ஒரு புயலின் பின்னால் உருவான ஒரு குட்டிப் புயல் இது. அந்தப் பெரிய புயல் இல்லாவிட்டால், இந்த குட்டிப் புயல் உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை என்று இந்தப் புயல் பற்றிய பூர்வீகத்தை வாசிக்கிறார்கள் வானியல் ஆய்வாளர்கள்.

அந்தப் பெரிய புயலைப் போலவே, இந்தப் புயலும், எப்போது வருகிறது, எங்கே நகருகிறது என்று யாராலும் புரிந்து கொள்ள முடியாது. இந்தப் புயல் உண்மையில் புயலா, இல்லை வெறும் பயலா என்று புரியாமல் பல வானியல் ஆய்வாளர்கள் இன்றளவ்விலும் குழம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், இந்த வகைப் புயல்கள், தமிழ்நாடு மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் நகர்வதால், இந்தப் புயல்களை தேசியப் புயல் என்று வானியல் ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர்.

இந்த தேசிய வகைப் புயல்கள், எப்போதுமே பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் சிறு சிறு புயல்களாக இருக்கும் தன்மை கொண்டவையாம். இந்த சிறு சிறு புயல்கள், ஒன்றோடு ஒன்று மோதி, எந்த வகையிலும் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் கடைசியில் வலுவிழந்து போகக்கூடிய தன்மை பெற்றவை.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் புயல்:

இந்தப் புயல், அவ்வப்போது, பெரும் காற்றை எழுப்பி சத்தமிடும். ஆனால், சத்தத்தை உண்டுபண்ணும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஏன், இது ஒருபோதும் கடலை கடந்ததில்லை என்பது இதன் வரலாறு. அதனாலேயே இதனால் பாதிப்பு இல்லை என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.

இந்தப் புயல் அவ்வப்போது, தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய ‘காமராஜ் புயலை’ நினைவுபடுத்தும். ஆனால் காமராஜ் புயலுக்கும் இதற்கும் கடுகளவு கூட சம்பந்தம் கிடையாது என்பதை தன்னுடைய நடவடிக்கைகளில் இருந்து அப்பட்டமாக வெளிப்படுத்திவிடும்.

அவ்வப்போது, சூறைக் காற்றுடன் பெரும் ஓசை எழுப்பவில்லை என்றால், தன்னை வானிலை ஆய்வாளர்களும் பொதுமக்களும் கண்டுகொள்ளவில்லை என்கிற நினைப்பிலேயே இது, அவ்வப்போது பெரும் சத்தத்தை கிளப்பும். 2009-ல் இந்த ’ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்’ என்ற புயலை, ’முத்துக்குமார்’ என்ற ஒரு பெரும் புயல் இருந்த இடம் தெரியாமல் செய்ததும் அப்படியே சந்தடியில்லாமல் அடங்கிக்கிடக்கிறது.

ராஜ்யசபா என்ற சக்தியைக் கொண்டு தன்னை டெல்லியில் மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ளலாமா என்று, இந்தப் புயல் மீண்டும் லேசாக தலைதூக்கி இருக்கிறது. இருந்தாலும், கூடவே இருக்கும் மற்றப் புயல்கள் இதன் தலையில் கருணாநிதி புயல் மூலமாக கல்லைத் தூக்கிப் போட, சத்தமில்லாமல் மீண்டும் அடங்கி விட்டதாம் இந்தப் புயல்.

தமிழக சி.பி.எம். புயல்:

தமிழ்நாட்டின் மிக மிக பழமையான புயல்களில் இதுவும் ஒன்று. இது ஒரு பலமான புயல் என்று தோற்றத்திற்கு தோன்றினாலும், இந்தப் புயல், மேற்கு வங்கம் மற்றும் கேரள கரையோரமே பெரும்பாலான நேரங்களில் மையம் கொண்டிருக்கும். அவ்வப்போது இடியுடன் கூடிய மழையை வர வைத்தாலும், இந்தப் புயல் பெரும்பாலான நேரங்களில் தமிழ்நாட்டில் வலுவிழந்தே இருந்திருக்கிறது.

இந்தப் புயலால் அவ்வப்போது லேசான சாரலை வரவைக்க முடிந்திருக்கிறதே தவிர, வேறு கடுமையான பாதிப்புகளளை ஏற்படுத்தியதே இல்லை. இந்தப் புயல் வலுவாக மையம் கொண்டிருந்த மேற்கு வங்கத்தில் கூட, ’மம்தா’ என்ற புதிய புயல் சமீபத்தில் தாக்குதல் நடத்த, பெட்டிப் பாம்பாக கடலுக்குள்ளேயே அடங்கியிருக்கிறதாம் இந்தப் புயல். இனி இந்தப் புயல், மேலெழும்பி வர வேண்டும் என்றால், புதிய சக்தி ஏதேனும் தேவைப்படும் என்கிறார்கள் வானியல் ஆய்வாளர்கள்.

தமிழக சி.பி.ஐ. புயல்:

இதுவும், தமிழகத்தின் பழமையான புயல்களுள் ஒன்றுதான். இந்தப் புயல், மிகப் பழமையான புயல்களுள் ஒன்றாய் இருந்தாலும், ’தமிழக சி.பி.எம்’ என்ற புயலுக்கு எப்போதும் துணைப் புயலாகவே இருந்து வந்திருக்கிறது.

இந்தப் புயல், ’தமிழக சி.பி.எம்’ என்ற புயலுக்கு, துணைப் புயல் அல்ல என்று காட்டிக் கொள்வதற்காக, பெரும் பிரயத்தனம் செய்தாலும், இது சி.பி.எம்-மின் வால்ப் புயலாகவே, வானியல் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

கருணாநிதி புயல்:

தமிழகத்தை மிக மிக மோசமான பாதிப்புக்குள்ளாக்கியதில், இந்தப் புயல் மிக மிக முக்கியமான புயல். தஞ்சை அருகே, திருக்குவளை என்ற இடத்தில் இந்தப் புயல் உருவானதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முதலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, மெல்ல மெல்ல வலுவடைந்து, இன்று தமிழகம் முழுவதையும் இந்தப் புயல் ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் போயஸ் தோட்டம் பகுதியிலிருந்து கருத்து தெரிவிக்கிறார்கள்.

திருக்குவளையில் உருவாகி, மெல்ல, மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து, இன்று வங்காள விரிகுடாவின் அருகே, மையம் கொண்டிருக்கிறது. இந்தப் புயல், தன்னுடைய அசாத்திய வலிமையால், தமிழ்நாட்டில், ஜனநாயக சக்திகள் என்று அழைக்கப்படும் அனைத்தையும், அனைத்து பத்திரிகைகளையும்கூட எளிதாக வளைத்து, தன்னுள் போட்டுக் கொண்டதாக இதுகுறித்து புகார் பட்டியல் வாசிக்கிறது இதன் உடன்பிறவா இன்னொரு புயலான வைகோ புயல்.

இந்த ’கருணாநிதிப் புயல்’ சென்னையில் மையம் கொண்டிருந்த போதே, தன்னுடன் பலப் பல குட்டிப் புயல்களை உருவாக்கியது. இந்தக் குட்டிப் புயல்கள், ’கருணாநிதிப் புயலை’ விட, தமிழகத்துக்கு அதிக சேதம் விளைவித்தன என்று போயஸ் தோட்டத்துப் புயல் அவ்வபோது அழுது அரற்றுவதை தடுக்க முடியவில்லையாம். பல்வேறு குட்டிப் புயல்களும் சேர்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியையும், அதிக சேதத்தையும் விளைவித்துள்ளன என்று இடியோசையாக முழங்குகிறார்கள் வானிலை ஆய்வார்கள், தாயகத்தில் ஒதுங்கியபடியே.

இந்தப் புயல் எப்போது கரையைக் கடக்கும், எப்போது நமக்கெல்லாம் விமோசனம் பிறக்கும் என்று, தமிழக மக்கள் வேண்டாத நாளில்லை என்கிறது ஜெயலலிதா புயல். ஆனாலும், இந்தப் புயல் இப்போதைக்கு கரையை கடக்காது என்று வானியல் ஆய்வர்கள் அடித்து ஆரூடம் சொல்கிறார்கள்..


மற்ற புயல்களுக்கு இல்லாத ஒரு குணம் இந்தப் புயலுக்கு உண்டு. மற்ற புயல்கள் வந்து, மையம் கொண்டு, போதுமான சேதாரங்களை விளைவித்து விட்டு நகர்ந்து விடும். ஆனால், இந்தப் புயல், தமிழகத்தில் உள்ள பல்வேறு வானியல் ஆய்வறிஞர்களான, ஜெகதரட்சகன், கமலஹாசன், ரஜினிகாந்த், வாலி, வைரமுத்து, போன்றவர்கள் எப்போதும் இந்தப் புயலைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பும் தன்மை கொண்டதாக இருப்பதால், இந்தப் புயலைச் சுற்றியே இந்த வானிலை ஆய்வாளர்கள் திரிந்து கொண்டிருப்பதை வாடிக்கையாக்கி இருக்கிறார்களாம்.


இப்படிப்பட்ட வானிலை ஆய்வாளர்களையெல்லாம் தொடர்ந்து தன்னகத்தே வைத்துக் கொள்வதற்காக மேலவை என்ற ஜால்ரா புயல் அரங்கத்தை விரைவில் அமைத்துக் கொள்ளவும், இந்த கருணாநிதி புயல் படாதபாடு படுவதாக தெரிவிக்கிறது போயஸ் தோட்டத்து வானிலை ஆய்வு மையம்.


இதனால் இந்தப் புயல், வாரத்தில் ஏழு நாட்களும் நேரு உள்விளையாட்டு அரங்கம், வள்ளுவர் கோட்டம், காமராஜர் அரங்கம், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டிடம் போன்ற இடங்களில் மாலை நேரங்களிலும், காலையில், புதிய தலைமைச் செயலக கட்டிட வளாகத்திலும் மையம் கொண்டிருப்பதை வழக்கமாக்கி விட்டதாம்.

அடுத்த மாதம் இந்தப் புயல்... வடக்கு நோக்கி நகர்ந்து, கோவை கொடீசியா அரங்கில், ஒரு வார காலம் மையம் கொண்டிருக்கும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை இருந்தை விட, கடந்த 2006-ம் ஆண்டிலிருந்து இந்தப் புயலும், இதனுடன் இருக்கும் குட்டிப் புயல்களும் விளைவித்த சேதம் அதிகம் என்பதால், எப்போது இந்தப் புயல் கரையைக் கடக்கும் என்பதில் தமிழக மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு இருப்பதாக போயஸ் தோட்டம் பகுதியில் ஒதுங்கிய வானிலை ஆய்வாளர்கள் அங்கலாக்கின்றனர்.


ஜெயலலிதா புயல்:

இந்தப் புயல், 1991-ம் ஆண்டு, முதன் முதலில் தமிழகத்தை பலமாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் தமிழகம் அடைந்த சேதத்துக்கு அளவே இல்லை. 1991-ம் ஆண்டு, தமிகத்தில் மையம் கொண்டிருந்த இந்தப் புயல், ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு பலத்த சேதத்தை உருவாக்கியது.


இந்தப் புயலின் சிறப்பம்சம், துணைப் புயல் இல்லாமல் கடலை விட்டு வெளியே வரவே வராது. 1991-ம் ஆண்டிலிருந்து, 1996-ம் ஆண்டு வரை, இந்தப் புயல் விளைவித்த சேதங்களை விட, இதன் உடன் இருக்கும் துணைப் புயலும், அந்தத் துணைப் புயலுக்கு, துணையான மற்ற புயல்களும் விளைவித்த சேதமே மிக அதிகம் என்று ஆய்வாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.


1996-ம் ஆண்டு, ’கருணாநிதிப் புயல்’ வந்து, இந்தப் புயலை வலுவிழக்கச் செய்தது. வலுவிழக்கச் செய்ததும், இந்தப் புயல், மீண்டும் தமிழகத்தை தாக்க வாய்ப்பே இல்லை என்று வானியல் ஆய்வர்கள் தெரிவித்த கருத்தை பொய்யாக்கும் விதமாக, மீண்டும் பலமாக தமிழகத்தை 2001-ம் ஆண்டு தாக்கியது. அந்தத் தாக்குதலில், ’கருணாநிதிப் புயல்’ நிலை குலைந்து போனது. 2001-ம் ஆண்டு மீண்டும் தமிழகத்தில் மையம் கொண்ட ஜெயலலிதா புயல், அரசு ஊழியர் குடியிருந்த பகுதிகளில் பலத்த சேதத்தை விளைவித்ததால், கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்க தொடங்கியது. 2006-ம் ஆண்டு, ’கருணாநிதிப் புயல்’ மீண்டும் இந்தப் புயலை வலுவிழக்கச் செய்து, தமிழகத்தில் இடியுடன் கூடிய பலத்த சேதத்தை ஏற்படுத்தத் தொடங்கி, இன்றுவரை இடியை கிளப்பிக் கொண்டே இருக்கிறது..


இந்த ’ஜெயலலிதா புயல்’ மீண்டும் தமிழகத்தில் மையம் கொள்ள வாய்ப்பு இருப்பதாக பெசண்ட் நகர் ஏரியாவிலிருந்து வானியல் ஆய்வாளர்கள் ஆசையை வெளிப்படுத்துகிறார்கள். 1996-ல், இந்தப் புயல் மீண்டும் தமிழகத்தை தாக்க வாய்ப்பே இல்லை என்ற அறிஞர்களின் கூற்றை பொய்யாக்கி, தமிழகத்தை 2001-ல் தாக்கியது போலவே மீண்டும் நடக்கக்கூடும் என்றும் நடராஜராக நர்த்தனமாடி தங்கள் கருத்தைத் தெரிவிக்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.


இந்தப் புயல்,பெரும்பாலான நாட்களில், கொடநாடு போன்ற மலைப் பிரதேசங்களில் மையம் கொண்டிருப்பதோடு, அவ்வபோது சிறுதாவூரிலும் மையம் கொள்வதால், சட்டென வலுவிழந்து தமிழகத்தை தாக்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறது என்றும் புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்தப் புயல், மீண்டும் பெரும் புயலாக வந்து, ’கருணாநிதிப் புயலை’ வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்றால், கூட இருக்கும் சக புயல்களை அனுசரிப்பதோடு, தாக்கவேண்டும் என்கிற ஒரே இலக்கோடு கடலிலிருந்து புறப்பட்டு வந்து கடலைக் கடக்க வேண்டும் என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். அது நடந்தால், இந்தப் புயலுக்கு ‘லைலாவுக்கெல்லாம் லைலா...’ என்று பெயர் சூட்டுவோம் என்றும் சொல்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.



சவுக்கு

1 comment:

  1. ஒரு புயல் விடுபட்டு விட்டது. அது சவுக்கு புயல். அதைப் பற்றி நான் எழுதலாம் என்று இருக்கிறேன். (சும்மா தமாஷ்)

    ReplyDelete