Saturday, May 29, 2010

வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம்….





வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம்…. கத்தாழ முள்ளு கொத்தோட வந்துச்சாம் என்று எங்கள் ஊரில், பெண்கள், புடவையை தூக்கி சொருகிக் கொண்டு சண்டையிடும்போது சொல்வார்கள். இதற்கு பொருள் என்னவென்றால், “என்னடி கதை விடுற…. நீ சொல்ற கதை தெரியாதா ? “ என்பதுதான் அர்த்தம்.

சென்னை பாஷையில் சொல்வதானால், “எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுதுன்னா, கேக்கறவன் கேனப் பயலா“ என்பதுதான் அர்த்தம். தெற்கே, இன்னும் பிரபலமான பழமொழி, “கேழ்வரகுல நெய் வடியுதுன்னா, கேப்பாருக்கு மதியெங்கே போச்சு“ என்பது.
இது போல பழமொழிகளை இப்போது குறிப்பிடக் காரணம் எதுவும் இல்லாமல் இல்லை. இருக்கிறது.


கருணாநிதியைப் பற்றி பதிவுகள் எழுதி, எழுதி, சவுக்குக்கு கை வலித்ததுதான் மிச்சம். கருணாநிதியும் விடுவதாய் இல்லை. சவுக்கும் விடுவதாய் இல்லை.

மரம் ஓய்வை விரும்பினாலும், காற்று விடுவதில்லை
கரை ஓய்வை விரும்பினாலும், அலைகள் விடுவதில்லை
ஓடி ஓடி ஒளிந்த போதும், வாழ்க்கை விடுவதில்லை…. விடுவதில்லை
என்று ஒரு கவிஞன் சொன்னான்.

இதோடு, சவுக்கு, சுருட்டி வைக்கப் பட்டாலும், கருணாநிதி விடுவதில்லை என்பதை சேர்த்துக் கொள்ளுங்கள்.


சவுக்கும் என்னதான் செய்வது ? சரி, செவனேன்னு இருக்கலாம்னு பாத்தா, கருணாநிதி விடமாட்டேங்குறாரு….


நேத்து, ஆர்.எம்.வீரப்பன் பொண்ணு கல்யாணத்துல, கருணாநிதி பேசின பேச்ச கேட்டதுக்கப் புறம், “சவுக்கு“ எப்படி சும்மா இருக்க முடியும் ?

ஜெயலலிதா சும்மா இருக்கலாம். ஏன்னா… யாராவது, ஸ்டேட்மென்ட் எழுதி குடுத்து, அதப் படிச்சதுக்கப்புறம், அதுல கையெழுத்துப் போடலாமா, வேண்டாமான்னு முடிவு செய்யறதுக்கே, ரெண்டு வாரம் ஆயிடும். சவுக்கு நியாயத்தப் பேசுற ஆள் இல்லையா ? நியாயம்னா, சூட்டோட பேசுனாத்தானே ? லேட்டா பேசுனா, அது அரசியல் ஆயிடும் இல்லையா ?



அதுனாலத்தான், சவுக்கு, உடனடியா சுழற்றப் படுது.




கருணாநிதி பேசியது என்ன ?

“மறைந்தும் மறையாத என் ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆரின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக விளங்கியவர் ஆர்.எம்.வீ. 1945ல் பெரியாரின் குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியராக பணியாற்றச் சென்ற காலந்தொட்டு எனக்கும் ஆர்.எம்.வீ.க்கும் நட்பு தொடர்கின்றது. அவர் என்னை எதிர்ப்பதாக காட்டிக் கொண்ட காலத்திலேயும் என்னிடத்தில் கள்ளக் காதல் கொண்டவர். தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையில் சில பிரச்னைகள் தோன்றும் போதெல்லாம் ஆர்.எம்.வீ.யிடமிருந்து எனக்கு ரகசிய கடிதம் வரும்.

எங்களிடையே பிரிவு ஏற்படக்கூடிய சூழல் 1971ல் ஏற்பட்ட போது என் இல்லத்திற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசி, நீங்கள் பிரியக் கூடாது, ஒன்றாக இயங்கவேண்டும்; பிரிக்கிறவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும், நீங்கள் ஒன்றுபட்டு தமிழகத்திற்காக பணியாற்றுங்கள் என்று கவலை தெரிவித்தவர் ஆர்.எம்.வீ. எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் இடையில் பிணக்கு விளைந்த போதெல்லாம், அதை சரி செய்ய பாடுபட்டவர் ஆர்.எம்.வீ. ஏன் அவருக்கு அந்தக் கவலை என்றால், நாங்கள் இருவரும் இணைந்து உழைத்த இடம் பெரியாரின் குருகுலம். எவ்வளவுதான் அரசியல் மாறுபாடுகள், வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அடிப்படை உணர்விலிருந்து பதவிக்காக எங்களை நாங்கள் மாற்றிக் கொண்டதில்லை.

ஆர்.எம்.வீ.க்கு பதவி கொடுங்கள் என்று திருநாவுக்கரசு சொன்னார். பதவிகளை பல பேருக்கு கொடுக்கிற இடத்தில் இருந்தவர் ஆர்.எம்.வீ. அவருக்கு நான் பதவி கொடுப்பது என்பதல்ல. அவர் பதவிகளை பகிர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டியவரே தவிர கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டியவர் அல்ல. அந்த அளவிற்கு இந்த இயக்கத்தினுடைய ஆணிவேராக இருந்தார். இன்றைக்கும் இருப்பவர்.

கோவை மாநாட்டு பணிகளை ஆய்வு செய்ய செல்கிறோம், அங்கிருந்து உதகமண்டலம் சென்று ஓரிரு நாட்கள் ஓய்வு பெறலாமே என்று எண்ணினேன். ஆனால் இந்த திருமண நினைவு சாட்டையாக விழுந்தது.

ஆர்.எம்.வீ. இல்லத் திருமணத்திற்கு செல்லாமல் ஓய்வு ஒரு கேடா என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டு இங்கே வந்திருக்கிறேன் என்றால் அது நட்பின் ஆழத்தை உணர்த்தக் கூடிய ஒன்று. “

வரலாற்றை சற்றே திரும்பிப் பார்ப்போம். 1981ம் ஆண்டு. அப்போது எம்.ஜி.ஆர் முதலமைச்சர். இப்போது கலைஞரை ஆதரிக்கும் ஆர்.எம்.வீரப்பன் அற நிலைய அமைச்சர். திருச்செந்தூர் கோயில் விடுதியில் கோவில் அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

உண்டியல் பணத்தை அவர் திருடி மாட்டிக் கொண்டதாகவும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஆர்.எம்.வீ முதல் அ.தி.முகவினர் எல்லாரும் பிரசாரம் செய்தார்கள். கலைஞர் கருணாநிதியும் தி.முகவும் இதை மறுத்தார்கள். உண்டியலில் இருந்த வைர வேலைத் திருடிக் கொண்டது வீரப்பன்தான் என்றும் அதைத் தட்டிக் கேட்ட நேர்மையான அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை கொலை செய்யப்பட்டதாகவும் தி.மு.க குற்றம் சாட்டியது.

உடனே விசாரணைக் கமிஷன் போட்டார் எம்.ஜி.ஆர். நீதிபதி சி.ஜெ.ஆர்.பால் அறிக்கையைக் கொடுத்துவிட்டு அடுத்த விமானத்தில் ஒரேயடியாக அமெரிக்கா சென்று செட்டிலாகிவிட்டார். கோவில் அதிகாரியின் மரணம் தற்கொலை அல்ல என்றும் கொலை என்றே சந்தேகிக்க இடமிருப்பதாகவும் அவர் அறிக்கை தெரிவித்தது. எம்.ஜி.ஆர் இந்த அறிக்கையை சட்டசபை முன்பு வைக்க மறுத்துவிட்டார். கலைஞர் கருணாநிதி அறிக்கையின் பிரதியைக் கைப்பற்றி 24.11.1981 அன்று நிருபர்களிடம் வெளியிட்டார்.

நீதி கேட்டு நெடிய பயணமாக மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு 150 கிலோ மீட்டர் நடந்து சென்றார்.


அரசு ரகசியமான பால் கமிஷன் அறிக்கையை வெளியிட்டதாக எம்.ஜி.ஆர் குற்றம் சாட்டினார். அதற்காக அரசு அதிகாரிகள் சதாசிவம் (மொழி பெயர்ப்புத் துறை), இப்போதும் கலைஞரின் செயலாளராக இருக்கும் அன்றைய அரசு அதிகாரி சண்முக நாதன் இருவர் மீதும் எம்.ஜி.ஆர் அரசு கடும் நடவடிக்கை எடுத்தது.

இன்று கருணாநிதியால் பாராட்டப் படும் இந்த ஆர்.எம்.வீரப்பன் யார் தெரியுமா ?

எம்.ஜி.ஆர் நோய் வாய்பட்டு, ப்ரூக்ளின் மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று, திரும்பும் வரையில், தமிழ்நாட்டின், உளவுத்துறை ஐஜியாக இருந்தவர், மோகன்தாஸ். இவர் உட்பட, அனைவருக்கும், எம்ஜிஆருக்கு ஏற்பட்டிருக்கும் நோய், குணமாக்கக் கூடியதல்ல என்று ஒரு கருத்து. 1984ம் ஆண்டுகளிலேல்லாம், சிறுநீரகப் பழுது, இன்று போல, எளிதாக குணமாக்கும் ஒரு நோய் அல்ல. இந்நிலையில், ஆர் எம் வீரப்பன், தமிழ்நாட்டின் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டார். தமிழ்நாட்டில் தனக்கென்று ஒரு கோஷ்டியை வளர்த்து எடுத்தார்.


அப்போதெல்லாம் பெரிய அளவில் இன்று திருநாவுக்கரசர் ஆகியிருக்கும், திருநாவுக்கரசு அரசியல் ரீதியாக வளரவில்லை. ஆக, ஆர்.எம்.வீரப்பனுக்கு, அரசியல் ரீதியாக கட்சியில் எதிரி என்றால், அது ஜெயலலிதா தான்.

எம்.ஜி.ஆர், அமேரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பி வருகையில், அப்போது உளவுத்துறை ஐஜியாக இருந்த, மோகன்தாசிடம் சொல்லி, விமான நிலையத்தில், ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை பார்க்கக் கூடாது என்று ஆர்.எம்.வீரப்பன் உத்தரவு பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில், ஒரு டிஎஸ்பி, ஐந்து இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழு ஒன்று, ஜெயலலிதாவை, எம்ஜிஆர், இந்த நுழைவாயிலில் அல்ல, இன்னொரு நுழைவாயிலில் வழியாக வருகிறார் என்று நம்ப வைத்து, அழைத்துச் சென்றது. எம்.ஜி.ஆர். விமான நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்றதும், ஜெயலலிதாவை போயஸ் தோட்ட இல்லம் வரை பத்திரமாக கொண்டு சென்று விட்டு விட்டு வர வேண்டும் என்பது, இந்த ஆர்.எம்.வீரப்பன் அன்றைய போலீசாருக்கு வழங்கிய உத்தரவு.


அதன்படியே, போலீசார், ஜெயலலிதாவை, விமான நிலையத்தில், எம்ஜிஆரை பார்க்க விடாமல், பத்திரமாக வேறு வழி வழியாக ஏமாற்றி, போயஸ் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றனர். ஏமாற்றம் அடைந்த ஜெயலலிதா, கோபப் படாமல், அவரை ஏமாற்றி அழைத்துச் சென்ற போலீசார் அனைவருக்கும் காபி கொடுத்து, உபசரித்து, என்னை ஏமாற்றி விட்டீர்களே என்று வருத்தத்தோடு, சொல்லி விட்டு அறை உள்ளே சென்றதாக அப்போது, உளவுத் துறையில் பணியாற்றிய போலீசார் சொல்கின்றனர்.


இதுதான் இன்று கருணாநிதி பாராட்டும் இந்த ஆர்.எம்.வீரப்பன். இன்று கருணாநிதி, ஆர்.எம்.வீரப்பனை பாராட்டக் காரணம், நன்றி உணர்ச்சிதான்.





வேறு ஒன்றும் இல்லை. 1996ம் ஆண்டு, “பாட்சா“ பட, வெள்ளி விழாவில் பேசிய, ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வளர்ந்து விட்டது என்று, எப்போதும் போல, வாய்க்கு வந்ததை பேசிச் செல்ல, அது தமிழ்நாட்டில் ஒரு பெரிய புயலை கிளப்ப, 1996ல் ஆட்சிக்கு வருவதற்கு, கருணாநிதிக்கு, ஆர்.எம்.வீரப்பன் நடத்திய அந்த விழா உதவியது என்பதற்கான நன்றிதான், இந்த பாராட்டும், அடுத்து, “மேலவை உறுப்பினர் பதவி“ என்ற வாக்குறுதியும்.
ஆனால், கருணாநிதி தெரிவித்தது போலவே, அவருக்கும், ஆர்.எம்.வீரப்பனுக்கும் இருப்பது, “கள்ளக் காதல்“ தான்.

ஏனென்றால், தன்னை வாழவைத்த, எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்கு விசுவாசமாக இல்லாமல், கருணாநிதிக்கு ரகசியமாக கடிதம் எழுதினார் என்ற செய்தியும், எம்ஜிஆர் உயிரோடு இருக்கையிலேயே, நிழல் முதலமைச்சராக செயல்பட்டார் என்பதிலும், அவர் எம்ஜிஆருக்கு விசுவாசமாக இல்லாமல், கருணாநிதியோடு, “கள்ளக் காதல்“ கொண்டிருந்தார் என்பதை, கருணாநிதியே இன்று, வெளிப்படையாக சொல்லி விட்டார்.

இந்த லட்சணத்தில், 2006ம் ஆண்டுக்கான அண்ணா விருது, ஆர்.எம்.வீரப்பனுக்கு வழங்கப் பட்டது. அண்ணாவுக்கு, கருணாநிதி போலவோ, வீரப்பன் போலவோ, கயமை தெரியாது என்றாலும், அண்ணா விருதை வீரப்பனுக்கு வழங்கியதன் மூலம், அண்ணாவின் தம்பி என்று சொல்லிக் கொள்ளும் கருணாநிதி, அண்ணாவை இதை விட பெரிய அவமானத்துக்கு எப்படி உள்ளாக்க முடியும் ?




இவ்வாறு, கணவருக்கு விசுவாசமாக இல்லாமல், கள்ளக் காதலனுக்கு விசுவாசமாக இருந்ததற்கான பரிசுதான், நாளைக்கு ஆர்.எம்.வீரப்பனுக்கு கிடைக்கப் போகும், “மேலவை உறுப்பினர்“ பரிசு.


இவ்வாறு, கருணாநிதியும், ஆர்.எம்.வீரப்பனும், இன்றைய தலைமுறைக்கு தெரியாது என்று வாய்க்கு வந்த பொய்யை அவிழ்த்து விடலாம். ஆனால், வரலாறு வரலாறுதானே. அதை மாற்ற முடியுமா என்ன ?


சவுக்கு

5 comments:

  1. பல தெரியாத விஷயங்கள் வெளிவருகின்றன, நன்றி.

    ReplyDelete
  2. சவுக்கடி சரிதான்.

    ReplyDelete
  3. பச்சோந்தி பயலுக சார், இந்த அரசியல்வாதிகள் ..

    நல்ல சவுக்கடி..

    ReplyDelete
  4. MGR then managed both this Jeya / Veearapan EGOs by naming buses as 'V' / 'J' services (Eg: Bus # 18-V / 18-J.

    ReplyDelete
  5. சவுக்கை சுழற்றும் அந்த கவ்பாய் போட்டோ சூப்பர்.சவுக்கு தளத்துக்கு அதையே பயன்படுத்தலாமே.பிரபாகரனுக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு.

    ReplyDelete