Wednesday, June 30, 2010

அனாதையாக 560 பேர் .. .. ..




தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்ற புகார் எழுந்தபோது, டக்ளஸ் தேவானந்தா சொன்ன பதில், 1987ல் ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனேவும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் படி, அனைத்துக் குற்றவாளிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப் பட்டு விட்டது என்பதுதான்.

இவரின் கூற்றுப் படி அனைத்துக் குற்றவாளிகளும் மன்னிக்கப் பட்டு விட்டார்களா ?

560 இலங்கைத் தமிழர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக இலங்கைச் சிறைகளில் விசாரணைச் சிறையாளிகளாக இருந்து வருகிறார்கள் என்று சவுக்குக்கு பிரத்யேகமாக தகவல்கள் வந்துள்ளது.

இலங்கையில் மட்டக்களப்பு, திரிகோணமலை, யாழ்ப்பாணம், அனுராதபுரம், பபுல்லா, கண்டி போகாம்பரா ஆகிய இடங்களில் சிறைச்சாலைகள் உள்ளன. இது தவிர, கொழும்பு நகரில் மட்டும், வெளிக்கடை, நியூ மேகசின் மற்றும், விசாரணைச் சிறை என்று மூன்று சிறைகள் உள்ளன.

இந்தச் சிறைச்சாலைகளில் 560 தமிழர்கள், விசாரணைச் சிறையாளிகளாக எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப் பட்டுள்ளனர். இந்த 560 தமிழர்களைப் பற்றியும், வெளியுலகம் அறியாது. இவர்கள், சமாதான காலங்களில் கைது செய்யப் பட்டவர்கள். விடுதலைப் புலிகளாகவோ, போராளிக் குழுக்களைச் சேர்ந்தவர்களாகவோ இருந்தால், இவர்கள் எப்போதோ இலங்கை ராணுவத்தாலும், உளவுப் படையாலும் கொன்றழிக்கப் பட்டிருப்பார்கள்.




இவர்கள் அனைவரும், தேநீர்க் கடைகளிலும், உணவு விடுதிகளிலும், தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போதும், கைது செய்யப் பட்டவர்கள். “ஆள் பாக்க கடினமாக இருந்தால் கூட பிடித்துக் கொண்டு போவான்“ என்று கூறுகிறார்கள். ஒரு நபரின் தோற்றம் சற்று கரடு முரடாக இருந்தால் கூட பிடித்துக் கொண்டு போய் விடுவார்களாம். சிங்களம் பேசத் தெரியவில்லை என்பதற்கெல்லாம் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

கொழும்பில் உள்ள நியூ மேகசின் சிறையில் 100 கைதிகள் உள்ளனர். இவர்களைத் தவிர 51 பெண்கள் இந்தச் சிறையில் உள்ளனர். இந்த பெண்களில் ஆறு பேருக்கு குழந்தைகள் உள்ளன. இவற்றுள் 6 மாதக் குழந்தையும், ஒரு வயதுக் குழந்தையும் உண்டு. இந்தப் பெண்களுள் குண்டு வீச்சில் கால்களை இழந்தவர்களும், கைகளை இழந்தவர்களும் உள்ளனர்.


எட்டு ஆண்டுகளாய் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருக்கும் இவர்கள் மீது, இலங்கை காவல்துறை இது வரை எந்தக் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்ய வில்லை. 14 நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்றம் சென்று நீதிபதி முன்பு இவர்களின் காவல் நீட்டிக்கப் படுகிறது.



ஒவ்வொரு முறையும் காவல் நீட்டிப்பு செய்யப் படும் போதும், காவல்துறை, வழக்கின் புலனாய்வு இன்னும் முடியவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிப்பதை, நீதிபதியும் ஏற்றுக் கொண்டு, விசாரணை நீட்டிப்புச் செய்து வருகிறார். இந்தக் கைதிகள், நீதிபதியிடம் எட்டு ஆண்டுகளாய் புலனாய்வு முடியவில்லை என்று காவல்துறை வேண்டுமென்றே சிறையில் அடைத்து தங்களை அலைக்கழிப்பதாக இவர்கள் கூறும் புகார்களுக்கு, உங்களை விடுவிக்க எனக்கு அதிகாரம் இல்லை என்பதையே காரணமாக கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



மே 2009ல் போர் முடிந்தவுடன், இலங்கை அதிபர் ராஜபக்ஷே சிறையில் உள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு என்றும், பிணையில் விடுவிக்கப் படுவார்கள் என்றும் கூறுவது, இந்த 560 நபர்களுக்கு பொருந்தாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த 560 பேரின் உறவினர்கள், பெரும்பாலும் போரில் இறந்து விட்டதாலும், மீதம் உள்ளவர்கள் முள்வேலி முகாமுக்குள் அடைக்கப் பட்டு விட்டதாலும், சிறையில் உள்ள இவர்களைப் பார்ப்பதற்கு யாருமே வருவதில்லை. பார்க்க யாரும் வராததால், இரண்டு ஆண்டுகளாய் ஒரே துணியை உடுத்தியுள்ளனர்.


31 வயதான ஒரு இளைஞரின் தந்தை ஒரு காலை இழந்தவர். இவரின் தாயார், இறந்த போது இறுதிச் சடங்கு செய்வதற்கு கூட இவர் அனுமதிக்கப் படவில்லை. நான்கு ஆண்டுகளாய் இச்சிறையில் இருக்கும் ஒருவரின் மனைவி இறந்த போது, அவரும் இறுதிச் சடங்குகள் செய்ய அனுமதிக்கப் படவில்லை. இவரின் ஒரு மகன் முள்வேலி முகாமில் அடைக்கப் பட்டுள்ளார். மகள், உறவினர் ஒருவரின் பராமரிப்பில் ஒரு ஹாஸ்டலில் தங்கியுள்ளார்.



லண்டனைச் சேர்ந்த புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் ஒருவர் தங்களது உறவினரை பார்ப்பதற்காக இலங்கைக்கு வந்துள்ளார். இவரையும் சந்தேகப் பட்டு, இந்த நியூ மேகசின் சிறையில் அடைத்து வைத்துள்ளது இலங்கை காவல்துறை. பிரித்தானிய குடிமனான இவரை சிறையில் இருந்து மீட்டெடுக்க இங்கிலாந்து தூதரகமும் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்பதுதான் சோகம்.


தங்கள் குடும்ப உறுப்பினர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்ற விபரமும் தெரியாமல், சிறையை விட்டு வெளியே வருவோமா இல்லையா என்ற விபரமும் தெரியாமல் அலைக்கழிக்கப் பட்டு, மிகுந்த மனவேதனையில் இருக்கிறார்கள்.
இலங்கை காவல்துறை இந்தச் சிறையாளிகளின் வழக்கை விசாரித்து முடிக்காமல் தொடர்ந்து இழுத்தடிப்பதற்கான நோக்கம், காவல்துறையிடம் எவ்வித ஆதாரங்களும் இல்லை என்பதுதான் என்று கூறுகிறார்கள்.


இவர்களுக்காக புலம் பெயர்ந்த தமிழர்கள், ஏதாவது செய்ய வேண்டும் என்பதே இவர்களின் வேண்டுகோள்.


இந்த பதிவை படிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள், தங்கள் நாடுகளில் உள்ள வழக்கறிஞர்கள் மூலமாகவோ, ஏதாவது அமைப்பு மூலமாகவோ, இந்த 560 அனாதைகளுக்காக குரல் கொடுக்கவும், சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு இந்த அப்பட்டமான மனித உரிமை மீறலை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே சவுக்கின் வேண்டுகோள்.



சவுக்கு

1 comment:

  1. தமிழ் (ஈ)இன தலைவர்கிட்ட சொல்லுங்கள்... இதற்க்கும் கடிதம் எழுதுவார்

    ReplyDelete