Monday, June 21, 2010

இரு வழக்குகள்..


இந்த இரு வழக்குகள், மீரட் சதி வழக்கோ அல்லது லாகூர் சதி வழக்கோ அல்ல. தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் இரு வழக்குகள். இந்த வழக்குகளில் சம்பந்தப் பட்டவர்கள் இரு பெண்கள். ஒருவர் கைம்பெண். ஒருவர் விவாகரத்து பெற்றவர். ஒருவர் அரசு அலுவலகத்தில் சாதாரண இளநிலை உதவியாளர். மற்றொருவர் ஐபிஎஸ் அதிகாரி. இருவருமே லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றியவர்கள்.

இந்த இரு பெண்களின் மீதான வழக்குகளின் தன்மையையும், இந்த வழக்குகளை அரசு எப்படி கையாண்டது என்பதுதான் இன்று மிக மிக வருத்தத்திற்குரிய விஷயம். அதிகாரம் மிக்க அரசு இயந்திரம் வேண்டியவர்களை ஒரு மாதிரியாகவும், வேண்டாதவர்களை ஒரு மாதிரியாகவும் நடத்தும் என்பதற்கு, பார்வதி அம்மாள் விமானத்தை விட்டு இறங்காமல் திருப்பி அனுப்பப் பட்டதும், தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா, அரசு விருந்தினராக உபசரிக்கப் பட்டு நீதிமன்றத்தில் பொது நல வழக்கு நிலுவையில் இருக்கும் போதே பத்திரமாக திருப்பி அனுப்பப் பட்டதும் ஒரு சிறந்த உதாரணம். இது போல பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இதைப் போலவே அப்பட்டமாக, அநியாயமாக இரு பெண்களில் ஒருவர் எப்படி பாரபட்சமான நடத்தப் படுகிறார், அரசு அதிகாரம் எப்படி வேண்டாதவர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது என்பதை பார்ப்போம்.

இதில் கைம்பெண்ணாக இருப்பவரின் கணவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் கான்ஸ்டபிளாக வேலைப் பார்த்து வந்த போது, திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் கருணை அடிப்படையில் இவருக்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் இள நிலை உதவியாளர் பதவி வழங்கப் பட்டது. சென்னையில் ஒரு அரசு குடியிருப்பில் இருந்து கொண்டு தனது ஒரு மகளையும், மகனையும் படிக்க வைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்.

லஞ்ச ஒழிப்புத் துறையை தலைகீழாக புரட்டிப் போட்ட, “தொலைபேசி ஒட்டுக் கேட்பு“ விவகாரம், இவரையும் விட்டு வைக்க வில்லை. இவர் செய்த குற்றம், தொலைபேசி ஒட்டுக் கேட்பில் கைது செய்யப் பட்டிருந்த சங்கர் என்ற லஞ்ச ஒழிப்புத் துறை பணியாளருக்கு, தொலைபேசியில் ஆறுதல் சொன்னதுதான். அந்தப் பெண்ணின் கணவர் இறந்தவுடன், வேலை பெறுவதில் இருந்த சிக்கல்களை தீர்க்கவும், விரைவாக வேலை கிடைக்கவும், கைதான லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர் செய்த உதவியை மறக்க முடியாமல் நன்றி உணர்ச்சியோடு அந்தப் பெண் இருந்தது மிகப் பெரிய குற்றம் அல்லவா ?

அந்த ஊழியர் கைது செய்யப் பட்டவுடன், 18 ஆண்டுகளாக அவர் பணியாற்றி லஞ்ச ஒழிப்புத் துறையின் அத்தனை நண்பர்களும் பேச மறுத்த நிலையில், அந்த ஊழியரால் பல்வேறு உதவிகளை பெற்றவர்கள், அந்த ஊழியரால் பல்வேறு ஆபத்துகளில் இருந்து காப்பாற்றப் பட்டவர்கள், இன்று அந்த ஊழியரோடு, தொலைபேசியில் பேசி, “எப்படி இருக்கிறாய்“ என்று கேட்க மறுத்த நிலையில் இந்தப் பெண், தொலைபேசியில் அந்த ஊழியரோடு பேசி “சார் நன்றாக இருக்கிறீர்களா..? உங்களுக்காக நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.

கண்டிப்பாக உங்கள் துன்பங்கள் யாவும், விரைவில் விலகிச் செல்லும்“ என்று, மாதத்திற்கு ஒரு முறையாவது ஆறுதல் சொல்லியது சாதாரண குற்றமா ?

இது சாதாரண குற்றம் இல்லை என்றுதான் அரசு பார்த்தது. ஆபீசில் அத்தனை பேரும் அவனோடு பேச அஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில் இவளுக்கென்ன அப்படி ஒரு திமிர் என்று கறுவியது அதிகார வர்க்கம்.

விளைவு, இரண்டு சிறிய பிள்ளைகளை வைத்துக் கொண்டு சென்னையில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த அந்தப் பெண், தூத்துக்குடிக்கு மாற்றப் பட்டார். மாற்றப் பட்டவுடன், அந்தப் பெண் நீதிமன்றத்தை அணுகி தடையாணை பெற்றார். நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கும் அளவுக்கு தமிழக அரசும், ஐபிஎஸ் அதிகாரிகளும் அவ்வளவு இளித்த வாயர்களா என்ன ? தடையாணை பெற்றால் என்ன, உன்னை வேறொரு அலுவலகத்திற்கு மாற்றுகிறேன் பார் என்று, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையின் பிரிவுக்கு மாற்றம் செய்து ஆணையிடுகின்றனர். அத்துறையில் டிஎஸ்பியாக இருக்கும் சரஸ்வதி என்ற அதிகாரியிடம் சென்று பணியாற்ற வேண்டும் என்று உத்தரவு.


இந்தப் பெண்ணும் புதிய அலுவலகத்தில் சென்று பணியேற்கிறார். அந்த அலுவலகத்தில் இவருக்கு என்ன வேலை தெரியுமா ? அலுவலகத்தின் வாசலில் உள்ள ஒரு பென்ச்சில் உட்கார்ந்திருக்க வேண்டும். ஆமாம். வேறு ஒன்றுமே வேலையில்லை. அலுவலகத்தில் உள்ள ஒருவரும் இவருடன் பேசக் கூடாது என்று உத்தரவு. இந்த அலுவலகம், சென்னை நந்தனத்தின் மேல் அண்ணா சாலையிலேயே அமைந்துள்ளது. சாலையின் இடது புறமே இவ்வலுவலகம் இருப்பதால், மதியம் ஆனதும் வெயில் நேரடியாக ஜன்னல் வழியாக அடிக்கும். இவர் அமர்ந்திருக்கும் அந்த பென்ச்சில் வெயில் சுள்ளென்று அடிக்கும்.

அதற்காக இவரை கூப்பிட்டு ஆபிசின் உள்ளுக்குள் அமர வைக்கும் அளவுக்கு சாதாரண குற்றத்தையா புரிந்திருக்கிறார் இவர் ? ஒருவரோடும் பேசாமல், லைப்ரரியில் இருந்து எடுத்துச் சென்ற புத்தகங்களை படித்துக் கொண்டு அமைதியாக ஒரு மாதம் அந்த அலுவலகத்துக்கு சென்று வருகிறார் இவர்.

இந்த நேரத்தில் தான் உறவினர் வடிவில் இவருக்கு சிக்கல் வந்து சேர்கிறது. இவரின் சொந்த அக்காவின் லாரி, பேத்திக்குப்பம் வணிக வரி செக் போஸ்டில் நிறுத்தி வைக்கப் பட்டது. அந்த லாரியை விடுவிக்க, ரூபாய் 3000 லஞ்சம் கேட்கிறார்கள் என்று அவர் அக்கா போன் செய்து உதவி செய்யுமாறு கேட்கிறார்.

தன்னை சின்ன வயதிலிருந்து பார்த்துக் கொண்ட, தனக்கு தாய் போன்ற அக்கா கேட்கும் போது என்ன நெருக்கடி இருந்தாலும் உதவி செய்யாமல் மறுக்கும் அளவுக்கு இந்தப் பெண் அப்படி ஒரு கல் மனம் படைத்தவர் இல்லையே. அதனால் உடனடியாக அந்தப் பிரிவில் இருந்த மற்றொரு டிஎஸ்பியான அலிபாஷா என்பவரிடம் சென்று உதவி கேட்கிறார். அந்த அலி பாஷா வணிகவரி செக்போஸ்டின் தொலைபேசி எண் இல்லை என்ற காரணத்தால், எண் கிடைத்ததும் பேசுவதாக உறுதி கூறுகிறார்.


இந்தப் பெண், இவர் பணியாற்றும் டிஎஸ்பி சரஸ்வதி இல்லை என்பதால் அங்கே இருக்கும் ஜீவானந்தம் என்ற இன்ஸ்பெக்டரிடம் புகார் கூறுகிறார். அந்த ஜீவானந்தம் எனக்கு தெரியாது, டிஎஸ்பியிடம் கூறுங்கள் என்று கூறி விடுகிறார். டிஎஸ்பி சரஸ்வதி வந்ததும் “மேடம் இது போல லஞ்சம் கேட்டு லாரியை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்“ என்று புகார் கூறுகிறார்.

லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர் மேல் சட்டப் படி நடவடிக்கை எடுக்க கடமைப் பட்டவரான டிஎஸ்பி சரஸ்வதி, “இதுக்கு நாங்க ஒன்ணும் பண்ண முடியாது“ என்று பதில் கூறுகிறார். சரி வேறு என்ன செய்வது என்று தன் அக்காள் மகனை தொடர்பு கொண்ட பெண், இன்னும் இந்த லாரி விடுவிக்கப் படவில்லை என்று தெரிந்து கொண்டு வேறு வழியின்றி வீடு திரும்புகிறார்.


வீடு திரும்பியதும் அன்று இரவு, அக்காள் மீண்டும் தொடர்பு கொண்டு அந்த செக்போஸ்டில் உள்ள அலுவலரின் தொலைபேசி எண்ணை தருகிறார். இவர் உடனடியாக டிஎஸ்பி அலிபாஷாவை தொடர்பு கொண்டு இந்த எண்ணை தருவதற்கு முயற்சி செய்கிறார். இரவு 10.30 மணிக்கு, தன் மனைவியை விட்டு, போனை எடுக்க வைத்த அலி பாஷா, தான் வீட்டில் இல்லை என சொல்லச் சொல்கிறார்.


வேறு வழியின்றி இவரே அந்த செக்போஸ்ட் அலுவலரை தொடர்பு கொண்டு “சார் நான் இது போல இந்த அலுவலகத்தில் வேலை செய்கிறேன். என்ன சார் பிரச்சினை “ என்று கேட்கிறார். அந்த அலுவலர், ரூபாய் 3000 கட்டணமாக கட்ட வேண்டும் என்று சொல்கிறார். பேசும் போது அந்த அலுவலர் நல்ல போதையில் இருக்கிறார். “சார் கொஞ்சம் உதவி பண்ணுங்க சார் “ இவர் கேட்கவும், “மேடம், வண்டிய நிறுத்தி 24 மணி நேரத்துக்கு மேல ஆனதுனால, நான் வண்டிய விட முடியாது.

பணத்த கட்டிட்டு வண்டிய ரிலீஸ் பண்ணிட்டு போங்க“ என்று கூறுகிறார். வேறு வழியின்றி, பணத்தைக் கட்டி விட்டு வண்டி ரிலீஸ் செய்கிறார்கள். 3000 பணம் பெற்றுக் கொண்டு 1500 ரூபாய்க்கு ரசீது தருகிறார். இதுதான் சம்பவம்.


நான்கு நாட்கள் கழித்து, உறவினருக்காக வணிக வரித்துறை செக்போஸ்டில் உள்ள அலுவலருக்கு போன் செய்து மிரட்டி, அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்காக இந்தப் பெண் சஸ்பெண்ட் செய்யப் படுகிறார். இந்தப் பெண் உயர்நீதிமன்றத்தை அணுகிய போது, யாரை வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் ஒருவரை சஸ்பெண்ட் செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு என்று, இடது சாரி என்று கருதப் படும் ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார்.


இந்தப் பெண் மீது துறை விசாரணை தொடங்குகிறது. ராஜேந்திரன் என்ற டிஎஸ்பி விசாரணை அதிகாரி. டிஎஸ்பி சரஸ்வதி முதல் சாட்சி. இந்தப் பெண் தன்னுடைய உறவினர் வண்டி செக்போஸ்டில் மாட்டிக் கொண்டது தொடர்பாக தன்னிடம் எப்போதுமே பேசியது இல்லை என்று கூறுகிறார். இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், அன்று முழுவதும் தான் அலுவலகத்தில் இருந்ததாகவும் தன்னிடம் வந்து அந்தப் பெண் எந்த உதவியும் கேட்கவில்லை என்று கூறுகிறார்.

அந்த வணிகவரித்துறை அலுவலர் அடுத்த சாட்சி. தன்னிடம் போன் செய்து பேசியது உண்மை என்றும், ஆனால் மிரட்டவில்லை என்றும், உதவி செய்யுமாறு கேட்டதாகவும், தான் நடைமுறைகளை எடுத்துச் சொன்னதாகவும் கூறுகிறார். அடுத்து டிஎஸ்பி அலிபாஷா. இது தொடர்பாக தன்னிடம் அந்தப் பெண் பேசவேயில்லை என்றும், இது பற்றி தனக்கு எந்தத் தகவலும் தெரியாது என்றும் கூறுகிறார்.

இதைக் கேட்டதும் இந்தப் பெண் அழுது விடுகிறார். அழுததைக் கண்டதும், அலி பாஷா, இதை பதிவு செய்ய வேண்டாம் Off the record என்று விசாரணை அதிகாரியிடம் கூறி விட்டு, அந்தப் பெண் தன்னிடம் அன்று காலையிலேயே வந்து உதவி கேட்டது உண்மை என்றும் ஆனால் இதைப் பதிவு செய்ய வேண்டாம் என்றும் கூறுகிறார்.

இந்த அலிபாஷா, சமீபத்தில் தான் புனித ஹஜ் யாத்திரைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குரானும், அல்லாவும், பொய் சொல்லவா அறிவுறுத்துகிறார்கள் ? கடவுள் என்பது மனதில் அல்லவா இருக்க வேண்டும். மனதுக்கு நேர்மையாக நடக்காத நபர், ஹஜ்ஜுக்கு சென்றால் புனிதப் பட்டுவிடுவாரா என்ன ?


இவர்கள் அத்தனை பேரும் பொய் சாட்சி சொல்லும் காரணம் என்ன ? இவர்கள் அத்தனை பேரும் கூட்டுக் கொள்ளையர்கள். பொய்யாக பயணப்படி பெற்று, அரசுப் பணத்தை கையாடல் செய்பவர்கள். அரசின் ரகசிய நிதியை மாதந்தோறும் பங்கு போட்டுக் கொள்பவர்கள். இவர்களின் இந்தப் பொய்ப் பயணப்பட்டியலில் கையொப்பமிடும், மாதந்தோறும் ரகசிய நிதி வழங்கும், “கட்டப் பஞ்சாயத்து“ புகாருக்கு உள்ளான மத்திய சரக எஸ்பி லட்சுமியின் உத்தரவின் பேரிலேயே இவர்கள் இது போல பொய் சாட்சி சொல்கிறார்கள். இந்த வழக்கின் விசாரணை அதிகாரி மட்டும் நேர்மையானவரா என்ன ? இவர், இந்தக் குற்றச் சாட்டுகள் அனைத்தும் உண்மை, தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளது என்றே அறிக்கை கொடுக்கப் போகிறார்.


அடுத்த வழக்கு ஐபிஎஸ் அதிகாரி பற்றியது. இது ஒன்றும் ஏற்கனவே சொன்னது போல மிக கடுமையான குற்றம் ஒன்றும் கிடையாது. மிகச் சாதாரணமானது தான்.
முதல் குற்றச் சாட்டு. தர்மபுரி மாவட்டத்தில் எஸ்பியாக இருந்தபோது, அரசு அம்பாசிடர் வாகனத்தில் இருந்த என்ஜினை எடுத்து, தன்னுடைய தகப்பனார் ஓட்டும் டூரிஸ்ட் காரில் பொருத்தியது ஒரு குற்றச் சாட்டு.

தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டதாக பயணப் பட்டியல் பெற்று விட்டு, அந்த நாளில் அலுவலகத்தில் இருந்ததால், அரசுப் பணத்தை கையாடியதான குற்றச் சாட்டு. மூன்றாவது குற்றச் சாட்டு மிகச் சாதாரணமானது. தன்னுடைய முதல் திருமணத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு, தான் இரண்டாவதாக தலித் சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்த பின், அந்த குழந்தைக்கு எஸ்.சி என்று சாதிச் சான்றிதழ் பெற்றது.

இதன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடக்கிறது. இறுதியில் விசாரணை அதிகாரி, கார் என்ஜினை மீண்டும் பொருத்தி விட்டதாலும், பயணப் பட்டியல் பெற்றாலும் அந்த நாட்களில் அவர் அலுவலகப் பணிதான் பார்த்துக் கொண்டிருந்தார் என்பதாலும், எஸ்சி என்று போலிச் சாதிச் சான்றிதழ் வாங்கியிருந்தாலும் அந்தச் சான்றிதழால் எந்தப் பயனும் அனுபவிக்கவில்லை என்பதாலும், குற்றச் சாட்டு நிரூபிக்கப் படவில்லை என்று கூறி குற்றச் சாட்டுகளை கைவிட்டார்.


இதே அதிகாரி மீது இரண்டாவது வழக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் டிஐஜியாக இருந்த போது ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டார் என்பதும், தனது மகன் சினிமா எடுக்க அதிகார துஷ்பியரேயோகம் செய்தார் என்பதும். இந்த குற்றச் சாட்டும் நிரூபிக்கப் பட்டாலும், இறுதியாக விசாரணை அதிகாரி போதுமான ஆதாரங்கள் இல்லை என்று வழக்கை மூடினார்.
இந்த அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப் படுகிறார். (எப்படி இருக்கிறது கூத்து) “ஆடுற காலும், பாடுற வாயும் சும்மா இருக்குமா“ என்பது உண்மை என்று இந்த அதிகாரி நிரூபிக்க வேண்டாமா ?

சி.கே.காந்திராஜன் என்று ஒரு டிஐஜி இருந்தார். இவர் செங்கல்பட்டு டிஐஜியாக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு. (DE 13/2003/POL/HQ) இதை விசாரித்த அதிகாரி இவ்வழக்கில் எப்ஐஆர் போட போதுமான ஆதாரங்கள் உள்ளது என்று தெரிவித்தார். அந்த உயர் பெண் அதிகாரி காந்திராஜனிடம் இருந்து ஒரு கடிதத்தை பெறுகிறார். அந்தக் கடிதத்தில் காந்திராஜன், தன் மீது தொடரப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்று கூறுகிறார். இதை விசாரணை அதிகாரிக்கு அனுப்ப, அவர் அடுத்த நாளே, காந்திராஜன் உண்மையிலேயே காந்தி, குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் படவில்லை என்று அறிக்கை தருகிறார்.


பாஸ்கரன் என்று ஒரு எஸ்பி. அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நிலுவையில் இருக்கிறது. இவருக்கு பதக்கம் வழங்குவதற்காக இவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளதா என்று டிஜிபி அலுவலகத்தில் இருந்து கேட்கப் படுகிறது. வழக்கு முடிக்கப் பட்டது, நிலுவையில் இல்லை என்று கடிதம் கொடுக்கிறார்.

லஞ்ச ஒழிப்புத் துறையில் இயக்குநராக இருந்து இருபது நாட்களுக்கு முன் டிஜிபியாக ஆன பி.பி.நெயில்வால், இந்த வழக்கைப் பற்றி அறிந்ததால், மீண்டும் பாஸ்கரன் மீது உள்ள வழக்கு பற்றிக் கேட்டு கடிதம் எழுதுகிறார். அந்தப் பெண் அதிகாரி மீண்டும் பாஸ்கரன் மீதான வழக்கு மூடப்பட்டது, நிலுவையில் ஏதும் இல்லை என்று கூறுகிறார்.
மேற்கூறிய இந்த இரண்டு நிகழ்வுகள் தவிர, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் இருந்த வி.ஏ.ரவிக்குமார் என்ற எஸ்பியிடம் இருந்து இரண்டு சூட்கேஸ்கள் நிறைய பட்டுப் புடவைகள் வாங்கியதும், தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அனைத்திலும் இவர் எழுதிய புத்தகங்களை கட்டாயமாக விற்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவிட்டதற்காகவும், இவர் மீது ரகசிய விசாரணை நடத்தப் பட்டு குற்றச் சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கப் பட்டு துறை விசாரணைக்கு உத்தரவிடப் படுகிறது.

மீசை பெரிதாக வைத்துள்ள ஆர்.நட்ராஜ்தான் விசாரணை அதிகாரி. அந்தப் பெண் அதிகாரி அப்பழுக்கற்றவர் என்று இவர் அறிக்கை கொடுக்க, இப்போது இந்தப் பெண் அதிகாரிக்கு அடுத்த பதவி உயர்வு வழங்கப் படப் போகிறது.


சமீபத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் இந்தப் பெண் அதிகாரி, அம்ருதா பதிப்பகம் என்ற இரட்டை ஸ்டாலை நடத்தி, அந்த ஸ்டாலை கண்காட்சி நடந்த அத்தனை நாட்களிலும் பார்த்தக் கொள்ள, அரசு ஊதியம் பெறும் காவலர்களையும் தலைமைக் காவலர்களையும் நியமித்திருந்தார். இதுதான் இந்த அதிகாரியின் நேர்மை.


இப்போது இந்த இரண்டு வழக்குகளையும் ஒப்பிட்டு தீர்ப்பு சொல்லுங்கள். தன்னுடைய சொந்த அக்காவிற்கு உதவி செய்வதற்காக, ஒரு அரசு அலுவலரை போனில் அழைத்து, உதவி செய்யுங்கள் சார் என்று கேட்டதற்கு சஸ்பென்ஷன்.


போலி சாதிச் சான்றிதழ் பெற்று, அரசுப் பணத்தை கையாடல் செய்து, அரசு கார் என்ஜினை திருடி, லஞ்சமாக பட்டுப் புடவை பெற்று, அதிகார துஷ்பிரயோகம் செய்தவருக்கு பதவி உயர்வு.

என்ன இருந்தாலும் இவர் ஐபிஎஸ் அதிகாரி இல்லையா ? அவர் சாதாரண இள நிலை உதவியாளர் தானே ?


நன்றி: நம்தினமதி நாளேடு

சவுக்கு

No comments:

Post a Comment