Saturday, June 13, 2009

ஊருக்கு உபதேசம் செய்யும் சிபிஎம் ..






இந்தியாவில், பெரிய அளவில் ஊழல் புகார்கள் ஏதும் இல்லாமல், தொடர்ந்து இந்தியாவின் படித்த நடுத்தர வர்க்கத்தின் மன சாட்சியாக செயல்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கட்சி, அதன் வரலாற்றில் மிகப் பெரிய தோல்வியை சந்தித்து இன்று சுயபரிசீலனை செய்து வருகிறது.

இந்தியாவில் எந்த மிகப் பெரிய அலை அடித்தாலும், அந்த அலையால் பாதிக்கப் படாமல், தன் வாக்கு வங்கியை மிகப் பத்திரமாக பல ஆண்டுகளாக பாதுகாத்து வந்த சிபிஎம் கட்சி இன்று மக்கள் தந்துள்ள இந்த படு தோல்வியை ஜீரணிக்க முடியாமல் நிலை குலைந்து உள்ளது.

மேற்கு வங்கத்தில் சிபிஎம் ன் மிகப் பெரிய வாக்கு வங்கியாக விவசாயத் தொழிலாளர்கள் தொடர்ந்து இருந்து வந்துள்ளார்கள். இத்தொழிலாளர்கள் இவர்களுக்கு தந்த ஆதரவுக்கு காரணம், சிபிஎம், தங்கள் கட்சி என ஒவ்வொரு தொழிலாளியும் நினைத்ததுதான் காரணம். மேற்கு வங்கத்தில் முதன் முதலில் சிபிஎம் ஆட்சிக்கு வருகையில், நிலச்சுவான்தார்களின் பிடியில் பெரும்பாலான விவசாய நிலங்கள் இருந்தன. பெரும்பான்மை மக்கள் விவசாயக் கூலிகளாக நிலச்சுவான்தார்களின் ஏவலுக்கு கட்டுப் பட்டு இருந்தனர்.




ஆட்சியைப் பிடித்தவுடன், நிலச்சுவான்தார்களின் பிடியிலிருந்து நிலங்களை விடுவித்து, நிலமில்லாத விவசாயிகளுக்கு நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் மூலம், அனைவரையும் நில முதலாளிகளாக உருவாக்கியது சிபிஎம் ன் மிகப் பெரிய சாதனை. இச்சாதனைக்காகத்தான், தொடர்ந்து இந்த உழைப்பாளி மக்கள் ஆதரவு நல்கி வந்தார்கள்.





ஆனால் இன்றைய சிபிஎம் என்ன செய்கிறது ? ரத்தன் டாடாவுக்கு விசுவாசமாக விவசாய நிலங்களை மக்களிடமிருந்து பிடுங்கி முதலாளிக்கு அளிக்கிறது. இதை எதிர்த்து போராடிய மக்களை காவல் துறையை விட்டும், சிபிஎம் ரவுடிகளை விட்டும் கடுமையாக தாக்கியது. எந்த உழைப்பாளி மக்களின் உரிமைகளை பாதுகாக்க சிபிஎம் பாடுபட்டு வந்ததோ, அந்த உழைப்பாளி மக்கள், சந்தர்ப்பவாத அரசியல்வாதியான மம்தாவின் பின் அணி திரள வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தது. நந்திகிராமிலும், சிங்கூரிலும் நேர்ந்த மிகப் பெரிய வன்முறையை, நக்சலைட்டுகளால் நேர்ந்த வன்முறை என்று சமாளிக்கப் பார்த்தது. அவ்வளவு வன்முறைகளுக்குப் பிறகும் கூட, சுயபரிசீலனை செய்ய மறுத்தது. அதன் விளைவுகளை இன்று தேர்தலில் சந்தித்துள்ளது.


ஊழல் இத்தேசத்தின் மிகப் பெரிய சாபக்கேடாக இருந்து வருகிறது. ஆனால் சிபிஎம் கட்சிக்கு மட்டும், இந்த ஊழல் மற்ற கட்சிகளைப் போலவே, வசதியாக தேர்தலுக்குத் தேர்தல் பயன்படும் ஒரு ஆயுதமாகவே இருந்து வருகிறது. ஐக்கிய முன்னணி வெற்றி பெற்று விபிசிங் பிரதமாரான தேர்தலில், ராஜீவ் காந்தி போபர்சில் ஊழல் செய்தார் என்று கூப்பாடு போட்ட சிபிஎம், லாலு பிரசாத் யாதவ் தீவன ஊழலில் பல கோடிகளை சுருட்டியதாக குற்றச் சாட்டு எழுந்தபோது மவுனம் காத்தது. இதற்கெல்லாம், சிபிஎம் சொல்லும், வசதியான காரணம், மதவாதத்தை எதிர்க்க வேண்டியுள்ளதால் என்று. மற்ற கட்சிகளைப் போலவே மூன்றாந்தர அரசியல் கட்சியாக சிபிஎம் மும் மாறி வருவதையே இது காட்டுகிறது.

2007ம் ஆண்டிலேயே, லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் இருந்து 2 கோடி ரூபாயை மார்க்சிஸ்ட் நாளிதழ் தேசாபிமானி நன்கொடையாக பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


தற்போது, கேரளாவில் மின் துறை அமைச்சராக இருந்த பினரயி விஜயன் மீது எழுந்த புகார். மத்திய அரசின் ஆடிட்டர் ஜெனரல் அளித்த அறிக்கையில் மாநில அரசுக்கு மிகப் பெரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து, சட்டசபையில் எழுந்த பெரிய அமளியை பொருட்படுத்தாமல், சிபிஎம், இந்த குற்றச்சாட்டை உதாசீனப்படுத்தியது. 16.01.2007 அன்று கேரள உயர்நீதிமன்றம், இந்த ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஜனவரி 2009ல், கேரள உயர்நீதிமன்றத்தில் சிபிஐ அளித்த அறிக்கையில் பினரயி விஜயனை 9வது குற்றவாளியாக சேர்த்தது.





சிபிஎம் ன் அமைச்சரவை கூடி, பினரயி விஜயன் மேல் நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்க மறுத்தது.
கடந்த வாரம், கேரள ஆளுனர் பினரயி விஜயன் மேல் வழக்கு தொடர பூர்வாங்க ஆதாரம் இருப்பதாகக் கூறி வழக்கு தொடர அனுமதி அளித்தார்.
இந்த உத்தரவை வழங்கிய ஆளுனரை எதிர்த்து போராட்டத்தை நடத்துவதுதான் சிபிஎம் ன் உச்சக் கட்ட அயோக்கியத்தனம். இன்று தமிழகம் முழுவதும், ஆளுனர் அனுமதி அளித்ததற்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது சிபிஎம்.

இதில் வினோதம் என்னவென்றால் கேரள மாநில முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், ஆளுநர் அனுமதி கொடுக்கும் முன் பரிசீலித்துதான் கொடுத்திருப்பார் என்று சொல்கிறார்.

சிபிஐ ஒன்றும், வானத்திலிருந்து குதித்து வந்த நேர்மையானவர்ளை மட்டுமே கொண்டதல்ல. மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று ஊழியர்கள் எரித்துக் கொல்லப்பட்டவுடன் கருணாநிதி உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதிலிருந்தே தெரிகிறது, சிபிஐ ன் யோக்கியதை. இருப்பினும், கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஊழல் புகார் வருகையில், அதை நேர்மையாக எதிர்கொள்வது தானே சரியாக இருக்கும்.

ஊழல் புகாரில் சிக்கிய தன் கட்சிக்காரர்களை காப்பாற்றுவதற்காக தன் கட்சி ஊழியர்களை அழைத்து ஆளுனருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் சிபிஎம் இன்னும் தேர்தல் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

/ஒப்பாரி/




2 comments:

  1. ஆளுனர் வழக்கு தொடர அனுமதிதான் அளித்துள்ளார். தண்டனை அளித்து போல் ஆர்ப்பாட்டம் தேவையில்லைதான். நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. எல்லா கட்சிகளிலும் நல்லவர்கள், நியாயவாதிகள் போய் சேர்ந்து விட்டார்கள். இப்போது பாதி/முழு அயோக்கியர்கள்தான் மிச்சமிருக்கிறார்கள். இனி எந்த கட்சியிலும் நியாயம் என்பதை எதிர்ப்பார்க்க முடியாது.

    ReplyDelete
  2. மற்ற கட்சிகளைப் பற்றி நமக்கு ஒரு தெளிவான பார்வை உள்ளது. மற்றவர்களை பூர்ஷ்வா கட்சி என்று குற்றம் சாட்டும் சிபிஎம், இவ்வாறு செயல்படுவது தான் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    ஸ்பெக்ட்ரம் ஊழலில், ராஜாவை பதவி விலகக் கோரிக்கை எழுப்பிய சிபிஎம், இன்று அதைப் பற்றி வாயே திறக்காமல் இருப்பதும், இவர்கள் உள்நோக்கத்தை சந்தேகிக்க வைக்கிறது.

    ReplyDelete