Saturday, June 6, 2009

இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது … ?

"There is enough in this world for everybodys need, but not enough for peoples' greed"
மகாத்மா காந்தி



நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் நாட்டில் ஏறத்தாழ எல்லா தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப் பட்டது என்ற செய்தி வெளிவந்தது. பல இடங்களில், எதிர்க்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கையிலேயே கையும் களவுமாக பிடித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த தகவல்களும் காட்சி ஊடகங்கள் அச்சு ஊடகங்கள் வாயிலாகப் பார்த்தோம்.

ஜனவரி மாதம் நடந்த திருமங்கலம் தேர்தலில் இதேபோன்று வாக்காளர்களுக்கு வெகு தாராளமாக பணம் பட்டுவாடா செய்யப் பட்டு எதிர்க் கட்சியான அ.தி.மு.க அந்த பண வெள்ளத்தின் முன் நீச்சலடிக்க முடியாமல் திணறியதையும் பார்த்தோம். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பு, பொது மக்களிடம் பரவலாக உள்ள தி.மு.க ஆட்சிக்கு எதிரான அதிருப்தி உணர்வின் உரைகல்லாக திருமங்கலம் தேர்தல் முடிவுகள் அமையும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் 39,266 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் லதா அதியமான் வெற்றி பெற்றது மாற்றத்தை விரும்பிய பலருக்கு ஏமாற்றத்தை தந்தது.

திருமங்கலம் என்பது ஒரு சட்டமன்றத் தொகுதி, அதில் வாக்காளர்களுக்கு பணம் அளித்தது போல் பாராளுமன்றத் தேர்தலில் பணத்தை அள்ளி இறைக்க முடியாது ; பாராளுமன்றத் தேர்தலில் எவ்வளவு பணம் செலவு செய்தாலும், ஓரளவுக்கு மக்கள் நியாயமாக வாக்களிப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்தது.

ஆனால் தேர்தல் முடிவுகளைப் பார்க்கையில் எல்லா எதிர்ப்பார்ப்புகளையும் பொய்யாக்கி பணம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதைக் காண முடிகிறது. இந்த தேர்தலில், பணம் படுத்திய பாடு, வாக்கு சதவிகிதங்களை வைத்து, பல தேர்தல்களில் வெற்றிக் கூட்டணியாக கணிக்கப் பட்ட கூட்டணிகளை மண்ணைக் கவ்வ வைத்துள்ளது.

தனிப்பட்ட முறையில் வாக்காளர்கள் பணம் பெற்றுள்ளார்கள் என்பதை எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டாலும் கூட, நேரடியாக மக்களிடம் நேர்மை உணர்ச்சி குறைந்து விட்டது, லஞ்சம் பெற்றுக் கொண்டு மக்கள் வாக்களிக்கிறார்கள் என்ற விமரிசனத்தை வைக்க எந்த எதிர்க்கட்சியும் தயாராக இல்லை. ஏனெனில், அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபொழுது நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் வாக்காளருக்கு பணம் கொடுக்கப் பட்டதாக எழுந்த குற்றச் சாட்டுகளை மறக்க இயலாது.

தமிழக மக்களிடம் இயல்பாக எப்பொழுதும் இருக்கக் கூடிய இரக்க உணர்சியைக் கூட, பணம் துடைத்து எறிந்து விட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோதும், கார்கில் போரின் போதும், இந்தியாவின் எந்த மாநிலத்தையும் விட அதிகமாக தமிழ்நாட்டில் நிதி வசூல் செய்யப் பட்டு வழங்கப் பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட இரக்க குணம் படைத்த தமிழர்களா ஈழத் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப் பட்டுக் கொண்டிருக்கையில் பாராமுகம் காட்டியது … …. ? நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் உண்மை இது தானே ?

1991ம் ஆண்டு இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்து அறிமுகப் படுத்திய தாராளமயமாக்கல் கொள்கை கடந்த 18 ஆண்டுகளில் இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் மனநிலையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாதது.

வளர்ந்த நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் பொருட்களை விற்க இந்தியாவை ஒரு பெரிய சந்தையாக கருதி, பல்வேறு நுகர்வுப் பொருட்களை இந்தியாவில் வந்து குவித்ததன் பலன் மக்களின் மனதில், எப்பாடு பட்டாவது, எந்த வழியிலாவது, இப்பொருட்களை வாங்கியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

90களின் தொடக்கத்தில், இந்தியாவுக்குள் புகுந்த கம்பிவடத் தொலைக்காட்சி (கேபிள் டிவி), ஒவ்வோரு வீட்டு வரவேற்பறையிலும் சென்று, இதை வாங்கு, அதை வாங்கு என்று ஆசையையும், பேராசையையும் வளர்த்து நடுத்தர மக்களை பேராசைப் பிடித்து அலையும் கூட்டமாக மாற்றி வைத்துள்ளது. தானும் ஊழலில் ஈடுப்பட்டாவது, திருடியாவது, பணக்காரனாக வேண்டும் என்று சாமானியனையும் நினைக்கத் தூண்டுவதால் தன்னை ஆளும் அரசியல்வாதி ஊழலில் ஈடுபடுவதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.


1989ம் ஆண்டு நடந்த தேர்தலை திரும்பிப் பாருங்கள். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தான் பலம் வாய்ந்த கட்சி. பி.ஜே.பி இன்றைக்கு உள்ள அளவுக்கு பெரிய கட்சி அல்ல. அன்றைய தேர்தலில் ஒரே விவாதப் பொருள் போபர்ஸ் பீரங்கிப் பேர ஊழல் மட்டும் தான்.

தமிழகத்திலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் பீரங்கி கட்அவுட்களும், பேனர்களும் வைக்கப் பட்டிருந்தன. அந்த தேர்தலில் ராஜீவ் காந்தி தோற்றதற்கான ஒரே காரணம் போபர்ஸ் ஊழல்தான் என்று உறுதியாகச் சொல்ல இயலும். அந்த போபர்ஸ் ஊழலின் மொத்த தொகை எவ்வளவு தெரியுமா ?

வெறும் 66 கோடி ரூபாய்தான்.

ஆனால், இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலை நினைத்துப் பாருங்கள். ஊழலின் மொத்த தொகை அறுபதாயிரம் கோடி ரூபாயிலிருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. பத்திரிக்கைகளும் காட்சி ஊடகங்களும் இதைப் பற்றி ஏராளமாக எழுதின. ஆனால் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு காரணகர்த்தாவான ஆ.ராசா தேர்தலில் எவ்வித அச்சமும் இன்றி போட்டியிட்டு 76,010 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மீண்டும், அதே தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆகியுள்ளார் என்பது எதைக் காட்டுகிறது ? லஞ்சமும் ஊழலும், நம் வாழ்வின் இயல்பான ஒரு பகுதியாக ஆகிவிட்டதையும், ஊழல் ஒரு பொருட்டே அல்ல என்பதையும், மிக மோசமான சமரசவாதிகளாக நாம் ஆகிவிட்டதையும், யார் ஊழலில் ஈடுபட்டாலும் அதில் நமக்கு பங்கு கிடைக்குமா என்ற மனப்பான்மையையுமே இது காட்டுகிறது.

2005ம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தை இங்கே நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். அந்த ஆண்டு சென்னை நகரம் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப் பட்டது. இன்னும் ஆறு மாதத்தில் வரப்போகும் தேர்தலுக்கு இது பயன்படட்டும் என்று, அன்றைய முதல்வர் ஜெயலலிதா பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.2000 நிவாரணத் தொகை என்று அறிவித்தார். இரண்டொரு நாளில் இந்த அறிவிப்பு ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் நிவாரணம் என்று பரவியது. இதைப் பயன்படுத்தி, பாதிக்கப் பட்டவர்கள், படாதவர்கள், வசதி உள்ளவர்கள், இல்லாதவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த நிவாரணத் தொகையைப் பெற போட்டா போட்டி போட்டனர்.

06.11.2005 அன்று நள்ளிரவில் சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர்.அம்பேத்கர் அரசுக் கல்லூரியில் வெள்ள நிவாரணம் பெற ஏற்பட்ட கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உயிரிழந்தனர். 18.12.2005 அன்று சென்னை கே.கே.நகரில் நள்ளிரவில் வெள்ள நிவாரணம் பெறுவதற்காக கூடியிருந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 22 பெண்கள் உட்பட 42 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவருக்கும் 1 லட்சம் நிவாரணம் வழங்கி அரசு ஆணையிட்டது. இது தொடர்பாக விசாரிக்க ராமன் கமிஷனை அமைத்தது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த அனைவரும், அன்றாடம் உணவுக்கு வழியில்லாத விளிம்பு நிலை மக்கள் அல்ல. அனைவரும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள். ஓரளவு வருமானம் உள்ள கீழ் நடுத்தர வகுப்பு மக்களே. இறந்தவர்களில் ஒருவர் தலைமைச் செயலக ஊழியர் ! நள்ளிரவில் இனாமாகத் தரப்படும் பணத்தைப் பெற வேண்டும் என்று உயிரை விட்டவர்களின் குடும்பத்தினர், அரசு தந்த ஒரு லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு, ராமன் கமிஷன் முன்னால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். மக்களின் சிந்தனை எந்த அளவுக்கு மாறி இருக்கிறது பார்த்தீர்களா ?

இந்த மக்களும், இவர்கள் நம்பி உள்ள இந்த ஜனநாயகமும் எங்கே போகிறது என்ற அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்லை… …

ஒப்பாரி


1 comment:

  1. தெளிவான உணர்ச்சி வெளிப்பாடு..

    ஆங்கில திரை படத்தில் வருவது போல நம் சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாய் பணம் குடிக்கும் ரத்த காட்டேரிகளாய் மாறி கொண்டிருக்கிறது ..

    ReplyDelete