Sunday, November 15, 2009

பத்திரிக்கைகள் மிகைப்படுத்தி செய்தி வெளியிடுகின்றதா ?

குறிப்பு: சற்றே பெரிய பதிவு. பொறுமையாக படிக்கவும்.





கருணாநிதி கடந்த 15ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் “பத்திரிக்கைகள் செய்திகளை மிகைப்படுத்தி வெளியிடுவதாக“ அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் அந்த அறிக்கையில் “பத்திரிக்கைகளுக்கு அரசின் வாயிலாக எத்தகைய அடக்கு முறைகள் தொடரப்பட்டாலும் அந்த நேரத்தில் எல்லாம் அவர்களுக்காக வாதாடியிருக்கிறேன், போராடியும் இருக்கிறேன்.

அதே நேரத்தில் பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் எழுதலாம், எப்படி வேண்டுமானாலும் படம் போடலாம், யாரை வேண்டுமானாலும் அவர்களுக்குரிய மானம், மரியாதைக்கு மாசு ஏற்படும் வகையில் எழுதாலம், பேசலாம் என்று எவர் ஒருவரும் கருதிக் கொண்டு “என் வழி இதுதான்“ என்று வழி மீறுவார்களானால், அது பற்றிய முறையீடு பாதிக்கப்பட்டவர்களால் தெரிவிக்கப் படும் பொழுது அதை எந்தவொரு அரசும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்க முடியாது.

அப்படிப்பட்ட நேரத்திலே கூட இந்த அரசினால் எடுக்கப் படுகின்ற நடவடிக்கைகள் பத்திரிகைகளை எதிர்த்து மூர்த்தன்யமாகவோ, முரட்டுத்தனமாகவோ, இதுவரை எடுக்கப்பட்டதாக யாரும் கூற முடியாது. என் இத்தகைய மென்மைனாய அணுகுமுறையை, இரு சாராருக்கிடையயே பகை பரவிடக்கூடாது என்ற பரந்த நோக்கத்தோடு எச்சரிக்கையாக கையாளும் அணுகுமுறையை, என் மீது வேண்டுமென்றே குறை கூற விரும்புவோர் கடுமையாக விமரிசிப்பதையும் நான் புரிந்து கொள்ளாமல் இல்லை.



பத்திரிக்கையாளர்களுக்கு நான் நண்பன் என்பதால்தான் அவர்கள் எழுப்புகின்ற கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றி வந்திருக்கிறேன்.

மழையினால் தகர்ந்த சாலைகள் சரி செய்யப் பட்டு விட்டது, மீண்டும் போக்குவரத்து தொடங்கி விட்டது, இயல்பான வாழ்க்கை அமைந்து விட்டது என்ற செய்திகள் வந்தும் கூட இன்னும் சில ஏடுகளில் அங்கே நிவாரணப் பணிகள் நடக்கவில்லை என்பதைப் போல சிலர் விடுத்துள்ள அறிக்கைகள் பெரிய அளவில் பிரசுரிக்கப்பட்டிருப்பதைக் காணுகிறேன்“ என்று அந்த அறிக்கையிலே தெரிவித்துள்ளார்.

கருணாநிதி அவ்வப்போது போடும் வேஷங்களிலே ஒன்று “நானும் பத்திரிக்கையாளன்தான், நான் பத்திரிக்கையாளர்களின் நண்பன்“ என்பது.

உண்மையில் தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் தவிர, வேறு யார் மீதும் கருணாநிதிக்கு உண்மையான அக்கறை கிடையாது என்பதை நாடறியும்



முதலில் கருணாநிதி பத்திரிக்கையாளர்களின் உண்மையான நண்பனா என்பதை பார்ப்போம். கடந்த ஏப்ரல் 2008ல் முன்னாள் தலைமைச் செயலாளர் திரிபாதி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாய் ஆகியோருக்கிடையே நடைபெற்ற உரையாடல் “டெக்கான் க்ரானிக்கிள்“ நாளிதழில் வெளியாகி, அது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப் பட்டது.



நீதியரசர் (??????) சண்முகம்

அந்த கமிஷனில் இந்த உரையாடல் தொடர்பாக செய்தி வெளியிட்ட பல பத்திரிக்கையாளர்கள் விசாரிக்கப்பட்டனர். இதற்குப் பிறகு லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய சங்கர் என்பவர் விசாரிக்கப் பட்டார்.

சங்கர் வைத்திருந்த செல்பேசியில் பேசினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக “மக்கள் டிவி“ நிருபர் ரவிச்சந்திரன், “டெகல்கா“ நிருபர் வினோஜ், “டெக்கான் க்ரானிக்கிள்“ நிருபர் அருண் குமார் மற்றும் “ஜூனியர் விகடன்“ இதழின் இணை ஆசிரியர் விகேஷ் ஆகியோர் கமிஷனால் பல முறை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்பப் பட்டனர்.

சண்முகம் கமிஷன் சுதந்திரமாக செயல்பட்டது என்று ஊருக்காக “கதை“ சொன்னாலும், சலுகை பெறுவதற்காக, கருணாநிதியின் விருப்பத்திற்கிணங்கவே சண்முகம் செயல்பட்டார் என்பது, அவர் அளித்த அறிக்கையிலும், அதற்கு அடுத்த விசாரணை கமிஷனுக்கு சண்முகமே நீதிபதியாக நியமிக்கப் பட்டதிலும் தெரிய வந்தது.



சண்முகம் கமிஷன், மேற்கூறிய 4 பத்திரிக்கையாளர்கள் மீதும், கிரிமினல் வழக்கு பதிவு செய்யப் படவேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஆனால், கருணாநிதி அரசு பெருந்தன்மையாக பத்திரிக்கையாளர்களின் நண்பன் போல வேடமிட்டு, பத்திரிக்கையாளர்களின் மீதான பரிந்துரையை மட்டும் நிராகரித்தது.


அடுத்த நிகழ்வு, “தினமலர்“ தொடர்பானது. தினமலர் நாளேடு, நடிகைகளைப் பற்றி மிகவும் அவதூறாக எழுதியதை யாரும் நியாயப் படுத்த முடியாது. ஆனால், அதற்கு பாதிக்கப் பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் தேடுவதுதான் சட்டப் படியான வழி.


ஆனால் என்ன செய்தார் கருணாநிதி ? நடிக நடிகையர் கூட்டம் போட்டு கூச்சல் போட்டவுடன் “பெண்களுக்கெதிரான வன்கொடுமைச் சட்டத்தின்“ கீழ், அந்நாளேட்டின் செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப் பட்டார். வழக்கமாக அவதூறு செய்திகள் தொடர்பாக ஒரு நாளேட்டின் ஆசிரியர் மற்றும், பதிப்பாளர் ஆகியோர்தான் நடவடிக்கைக்கு ஆளாவார்கள்.


தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப் படுகையில்


ஆனால், இந்நிகழ்வில், வினோதமாக செய்தி ஆசிரியர் கைது செய்யப் பட்டார். அது, முதலாளிகளோடு கருணாநிதி செய்து கொள்ளும் சமரசம்.


மறுநாள் பத்திரிக்கையாளர்கள் சாலை மறியல் மற்றும் பல போராட்டங்களில் இறங்கியவுடன், லெனினின் பிணை மனுவுக்கு அரசு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவிக்காமல் உடனடியாக பிணையில் வெளி வர ஏதுவாக நடவடிக்கை எடுத்த கருணாநிதியின் நடத்தை, “பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும்“ காட்டுவதல்லாமல் வேறு என்ன ?

அடுத்த நிகழ்வு, “நெற்றிக்கண் மணி“ பற்றியது. நெற்றிக்கண் மணி, ஒரு நேர்மையான பத்திரிக்கையாளரா இல்லையா என்பது பற்றிய விவாதம் வேறு.

ஆனால் என்ன செய்தி வெளியிட்டார் என்பதற்காக அவர் கைது செய்யப் பட்டார் என்பதுதான் முக்கியம். நவீன நெற்றிக்கண் இதழில், சமீபத்தில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, காண்டிராக்டர் சுரேஷ் ஆகியோர் குறித்த செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் சாலை காண்டிராக்ட் பணியில் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. காண்டிராக்ட் கொடுக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட சதவீதத் தொகையை கமிஷனாகத் தர வேண்டும் என வற்புறுத்தப்பட்டதாகவும், அதேபோல தென் மாவட்டங்களில் காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுரேஷ் பரிந்துரைக்கும் நபர்களே இடம் பெறுவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.


இதையடுத்து நெற்றிக்கண் ஆசிரியர் மீது சுரேஷ் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அக்டோபர் 25ம் தேதி ஆசிரியர் மணி கைது செய்யப்பட்டார். பின்னர் மதுரை கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்த பொட்டு சுரேஷ் யார் தெரியுமா ? திமுகவின் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணனின் கொலை செய்யப் பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி. இவரைப் பற்றி “நெற்றிக் கண்“ பத்திரிக்கையில் எழுதியதற்காகத் தான் இவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

எப்படி இருக்கிறது கருணாநிதியின் பத்திரிக்கை தர்மம் ?

இதோடு முடியவில்லை. சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தை, உளவுத் துறையின் உதவியோடு இரண்டாக உடைத்துள்ளார். இதனால், பத்திரிக்கையாளர்கள், முழுமையாக ஒன்றுபட இயலாமல், குழுக்களாக செயல்பட்டுக் கொண்டுள்ளனர்.

இதெல்லாவற்றையும் விட, கருணாநிதியின் கோபம், அவரது அறிக்கையின் கடைசி பத்தியில் உள்ளது.

“இயல்பான வாழ்க்கை அமைந்து விட்டது என்ற செய்திகள் வந்தும் கூட இன்னும் சில ஏடுகளில் அங்கே நிவாரணப் பணிகள் நடக்கவில்லை என்பதைப் போல சிலர் விடுத்துள்ள அறிக்கைகள் பெரிய அளவில் பிரசுரிக்கப்பட்டிருப்பதைக் காணுகிறேன்“

என்ன கோபம் என்பது தெரிகிறதா ? ஜெயலலிதாவின் அறிக்கையை பெரிய அளவில் பத்திரிக்கைகள் பிரசுரித்ததுதான் கருணாநிதியின் கோபத்திற்கு மிகப் பெரிய காரணம்.


கருணாநிதியின் அறிக்கைகளை பிரசுரிப்பதற்கு, முரசொலி, Rising Sun, தினகரன், மற்றும் வார இதழ்கள், குங்குமம், மற்றும் காட்சி ஊடகங்கள், கலைஞர் டிவி, கலைஞர் செய்திகள், சன் டிவி, சன் நியூஸ் ஆகிய ஊடகங்கள் இருக்கிறது. ஆனாலும், ஜெயலலிதாவின் அறிக்கையை, சில பத்திரிக்கைகள் பெரிதாக போட்டு விட்டால், கருணாநிதிக்கு வருகிறதே கோபம் !


இந்தக் கோபத்திற்கு காரணம்,
கருணாநிதியின் அகம்பாவமும் திமிருமேயன்றி வேறு இல்லை.
தான்தான் தமிழ், தான்தான் தமிழ்நாடு, என்று அவர் அருகிலிருந்து தொடர்ந்து துதிபாடும் பிச்சைக் காரர் கூட்டம் போலவே, தமிழ்நாடு முழுவதும் அவர் பேச்சைக் கேட்டு ஆடவேண்டும் என்ற ஆணவம் தான் காரணம்.

“வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு“ என்பதை கருணாநிதி மறந்து விட்டார் போல.


சவுக்கு

6 comments:

  1. என்னத்த சொல்றது....ம்ம்ம்ம்

    ReplyDelete
  2. kaamaalai kannuuku kandethellam manjalaakathaan theriyum.karunanidhuyai ethirkka vendum endru ore kurikkoludan irukkum ungalai pondravarkalidam irunthu varum vaanthikal ippadithaan irukkum.makkal madaiyarkal alla athanaal thaan karunanidhiyaal atchikku vara mudithathu.

    ReplyDelete
  3. makkal madayargal allar aanal sindhitthu vakkalippathai arivathillai!!!!!

    ReplyDelete
  4. யாரு சொன்னது அவருதான் தமிழன்னு கூட இருக்க அல்ல கைகள் சொல்கிறது....... இது சுய தம்பட்டம்....

    ReplyDelete
  5. உனக்கு ஏனப்பா அரிக்கிறது? தமிழனுக்கு நீ என்ன புது வரையறை வைத்திருக்கிறாயா? தமிழ் நாட்டில் பிறந்தாலே அவன் தமிழன் தானே, அதை அவர் சொன்னால் உமக்கு என்னய்யா கோபம்?

    ReplyDelete
  6. அநானி அவர்களே, தமிழன் என்று சொல்வதால் எனக்கு கோபம் இல்லை. தமிழினத்திற்கு ஒரே தலைவன் தான்தான் என்று சொல்லிக் கொள்வதுதான் தவறு என்று கூறுகிறேன். எனக்கு அரிக்கவில்லை. ஈழத் தமிழரை காப்பாற்றாமல் விட்டு விட்டாரே என்று வயிறு எரிகிறது.

    ReplyDelete