Sunday, November 8, 2009

அட கோமாளிகளா !!!!!





ரெட்டி vs யெட்டி.

கர்நாடக அரசியலில், கடந்த 15 நாட்களாக நடந்த சம்பவங்கள், விறுவிறுப்பான மசாலா படத்தை விஞ்சும் வண்ணம் இருந்தன. நகைச்சுவை, சென்டிமென்ட், த்ரில் என்று எதற்கும் பஞ்சம் இல்லை.

ஒகெனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்த்து, படகில் தமிழகம் வந்து, இனவெறியைத் தூண்டி, ஆட்சியைப் பிடித்த எடியூரப்பாவுக்கு, இந்த தலைவலி தேவைதான்.

கர்நாடக தேர்தல் முடிந்தவுடன், 6 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால்தான் முழு மெஜாரிட்டி என்ற நிலையில், 6 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி எடியூரப்பாவின் நாற்காலியை காப்பாற்றியவர்கள் தான் இந்த ரெட்டி சகோதரர்கள்.


யார் இந்த ரெட்டி சகோதரர்கள் ? இவர்களின் வளர்ச்சி அண்ணாமலை படத்தில் ரஜினியை விட வேகமான வளர்ச்சி.


ஆந்திராவைச் சேர்ந்த இந்த ரெட்டி சகோதரர்களின் தந்தை ஒரு சாதாரண தலைமைக் காவலராக இருந்து ஓய்வு பெற்றவர். 2000 ஆண்டில், “Ennoble India“ என்ற சீட்டுக் கம்பெனி நடத்தி மக்கள் 200 கோடி மக்கள் பணத்தை ஏப்பம் விட்டவர்கள் தான் இவர்கள்.


கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி ஆகிய மூன்று சகோதரர்கள் போக, ஸ்ரீராமுலு என்று அவர்கள் குடும்பத்தின் அங்கமாகவே கருதப்படும் 4 பேரும் தான் இன்று கர்நாடகாவை ஆட்டிப் படைக்கிறார்கள். 1999ல் பெல்லாரி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட சுஷ்மா சுவராஜுக்கு ஆதரவாக களம் இறங்கினார்கள் ரெட்டி சகோதரர்கள். அதிலிருந்தே, பெல்லாரி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில், பிஜேபியை வெற்றி பெறச் செய்வதில் இவர்களின் பங்கு குறிப்பிடத் தகுந்தது.


ரெட்டி சகோதரர்களின் வளர்ச்சி, இரும்பு தாது சுரங்கத்தில்தான் தொடங்கியது. “ஓபாலபுரம் சுரங்க நிறுவனம்“ என்று தொடங்கி, கர்நாடக மாநிலத்தின் எல்லை அருகே ஆந்திராவில் இரண்டு லைசென்ஸுகள் பெற்று உள்ளனர் ரெட்டி சகோதரர்கள்.

2005ம் ஆண்டில் ஆண்டுக்கு 5 லட்சம் டன்களுக்கு முதலில் லைசென்ஸ் பெற்றவர்கள், குறுகிய காலத்திலேயே 60 லட்சம் டன்கள் எடுக்க உரிமம் பெற்றார்கள். இது எப்படி சாத்தியமாகியது என்பது புரியாத புதிர். தோராயமாக கணக்குப் பார்த்தால் ஒரு டன் 3000 ரூபாய் விற்கும் நிலையில், ஒரு நாளைக்கு 20,000 டன்கள் எடுக்கும் ரெட்டி சகோதரர்களின் ஒரு நாளைய வருவாய் 6 கோடி. ஆண்டுக்கு 1800 கோடி.

இந்த வருமானத்தில்தான், திருப்பதி வெங்கடாசலபதிக்கு 45 கோடி செலவில் கிரீடம் வாங்கி காணிக்கை செலுத்தினர் ரெட்டி சகோதரர்கள்.

இந்த ரெட்டி சகோதரர்கள் தான் இன்று கர்நாடகாவில் எல்லாமே. இவர்கள் அன்றி ஒரு அணுவும் அசையாது.


தென் மாநிலங்கள் முழுக்க வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட நிலையில் 15 நாட்களாக ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தை ஸ்தம்பிக்கச் செய்து, டெல்லியில் “கட்டப் பஞ்சாயத்து“ நடத்தி வந்திருக்கின்றனர். முதலில் கட்டப் பஞ்சாயத்து செய்த ராஜ்நாத் சிங் கின் பஞ்சயாத்தின் படி, ரெட்டி சகோதரர்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறப்படும் ஷோபா மற்றும் சில அதிகாரிகளை நீக்கம் செய்ய வேண்டும் என்ற சமரசம் எட்டப் பட்டது.

தன்னுடைய நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள இதற்கு சம்மதித்த எடியூரப்பா அதற்கு பின்பு அளித்த டிவி பேட்டியில், முதலைக் கண்ணீர் வடித்து,

என்னை நம்பியவர்களை மோசம் செய்து விட்டேன், வெள்ள நிவாரணப் பணிகளை பார்க்காமல் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தியது தவறு, ஆண்டவன் என்னை மன்னிக்க மாட்டார் என்று அரற்றி விட்டு, அப்போதும் கர்நாடக மாநிலத்திற்கு திரும்பி வெள்ள நிவாரணப் பணிகளைப் பார்க்காமல், தன் நாற்காலியைக் காப்பாற்றியதற்காக, காஷ்மீர் மாநிலத்திலுள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் சென்று நன்றி செலுத்தினார்.


இதற்குப் பிறகாவது, படம் முடிந்து விட்டதா என்றால் இல்லை. பிரச்சினை முடிந்து விட்டது என்று எடியூரப்பா பேட்டி அளித்தார். முடியவில்லை, எடியூரப்பாவை நீக்குவதுதான் ஒரே தீர்வு என்று ரெட்டி பேட்டியளிக்கிறார்.

பார்வையாளர்களின் குழப்பம் அதிகரித்துக் கொண்டே போனது. இந்த நிலையில்தான், களத்தில் இறங்குகிறார் சுஷ்மா சுவராஜ். பிஜேபி தலைவர்களாலேயே முடியாக ஒரு விஷயத்தை, தான் முடித்துக் காட்டுவதன் மூலம், கட்சியில் தன் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள, ரெட்டி சகோதரர்களையும், எடியூரப்பாவையும் தன் வீட்டுக்கு அழைத்து சமாதானம் செய்து வைத்தார்.


இதற்குப் பிறகு நடந்த க்ளைமாக்ஸ் இருக்கிறதே. அடடா…. எடியூரப்பா ரெட்டிக்கு கேக் ஊட்டும் அந்தக் காட்சி இருக்கிறதே. காணக் கண் இரண்டு போதாது.



ஆனால், எந்த அடிப்படையில் சமாதானம் எட்டப் பட்டது என்று விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
15 நாட்களுக்கும் மேலாக, மாநிலத்தையே முடக்கிப் போட்ட இவர்களின் லட்சணத்தை என்னவென்று சொல்வது.


ஜின்னாவை பாராட்டி எழுதிவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக கட்சியிலிருந்து ஜஸ்வந்த் சிங்கை நீக்கிய பிஜேபி, இன்று ரெட்டி சகோதரர்களின் காலை நக்கிக் கொண்டு இருக்கிறது. இதிலிருந்தே, பிஜேபி எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது. பிஜேபி போன்ற ஒரு மதவாதக் கட்சி பலவீனமாவது நல்லது தான் என்றாலும், பிஜேபிக்கு சற்றும் குறைவில்லாத, காங்கிரசின் பலத்தில் இது முடிகிறது என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்.



சமாதானம் பேசி, சிரித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் ரெட்டியும், எட்டியும், சுஷ்மாவும், கர்நாடக மக்களைப் பார்த்து “அடக் கோமாளிகளா !!“ என்று சொல்வது போலில்லை ?

சவுக்கு

3 comments:

  1. வெட்கங்கெட்டவர்கள். என்ன வார்த்தை சொல்லி திட்டினாலும் இந்த அரசியல் வியாதிகள் திருந்தமாட்டார்கள். எந்தக் கட்சியானாலும், நிறைய பேரு இப்படித்தான்.

    ReplyDelete
  2. அரசியல் விபச்சாரிகள்

    ReplyDelete
  3. அருமையான பதிவு
    நன்றி

    எல்லாத்தையும் விட நம்ம தலைவர் படம் மிக அருமை

    ReplyDelete