Sunday, November 29, 2009

விசாரணை கமிஷன்களால் என்ன பயன் ?



பாப்ரி மசூதியின் உட்புறத்தோற்றம்


தற்போது 1992ம் ஆண்டு, பாபர் மசூதி இடிக்கப் பட்ட விவகாரம் தொடர்பாக அமைக்கப் பட்ட லிபரான் கமிஷன் வெளியாகி, பாராளுமன்றத்தில் கடும் அமளியை கிளப்பி, அதனால் பாராளுமன்றம், இரண்டு நாட்கள் செயல்பட முடியாமல் போனது. இந்த அமளி, லிபரான் அறிக்கை “இந்தியன் எக்ஸ்பிரஸ்“ நாளேட்டில், வெளியான லிபரான் கமிஷன் அறிக்கையின் சில பகுதிகளால் உருவானது.

அரசு அலுவலகங்கள் எப்படி இயங்குகின்றன என்ற விபரங்களை அறிந்தவர்களுக்கு, இந்த அறிக்கை தானாக பத்திரிக்கையை சென்றடைய வாய்ப்பே இல்லை என்பது தெரியும். ஒரு விசாரணை கமிஷனின் அறிக்கை என்பது, பாராளுமன்றத்திலோ, சட்டசபையிலோ வைக்கப் படும் வரை, மிக ரகசியமாக பாதுகாக்கப் படும்.

அதனால், லிபரான் அறிக்கை பத்திரிக்கைளில் வெளியானது, கண்டிப்பாக மத்திய அரசின் உளவுத் துறையால் தான். மேலும், இந்த அறிக்கையில், நரசிம்மராவ் அரசுக்கு லிபரான் நற்சான்றிதழ் அளித்த காரணத்தினாலும், அறிக்கை பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.

சிபிஎம் எம்.பி சீதாராம் எச்சூரி, அறிக்கை பத்திரிக்கையில் வெளியானது, அவையின் உரிமை மீறல் பிரச்சினை என்று கூறினார். செல்வி.ஜெயலலிதா தனது அறிக்கையில், அறிக்கை வெளியானதற்கு பொறுப்பேற்று, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார்.

ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் கருணாநிதி, சிதம்பரம் ஏன் பதவி விலக வேண்டும் ? என்று பதிலறிக்கை வெளியிட்டார். ஜெயலலிதா சிதம்பரத்தை பதவி விலக வேண்டும் என்றால், கருணாநிதிக்கு ஏன் துடிக்கிறது ?

லிபரான் அறிக்கை வெளியாகி, எதிர்க்கட்சிகளின் கவனம் இதன் மேல் திரும்பியதால், ஸ்பெக்ட்ரம் பிரச்சினை பாராளுமன்றத்தில் வரவில்லை அல்லவா ? அதனால் கருணாநிதியும் பலனடைந்துள்ளார் அல்லவா ? அதனால்தான் தான் ஆடாவிட்டாலும், சதை ஆடுகிறது.

ஏன் இந்த அறிக்கை பத்திரிக்கைகளில் வெளியிடப் பட வேண்டும் ?
இந்த அறிக்கையின் பகுதிகள் பத்திரிக்கையில் வெளியாவதற்கு முன், பாராளுமன்றத்தில் என்ன நடந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசுக்கு பல்வேறு வகையில் பெரும் தலைவலியை உருவாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. குறிப்பாக, கரும்பு கொள்முதல் விலை தொடர்பான பிரச்சினை, மது கோடா மீதான ஊழல் புகார் குறித்த பிரச்சினை, ஸ்பெக்ட்ரம் ராஜா தொடர்பான பிரச்சினை, சீனா சென்ற அமெரிக்க அதிபர், காஷ்மீர் பிரச்சினையில், மூன்றாவது நாட்டின் தலையீடு வேண்டும் என்று கூட்டு அறிக்கை வெளியிட்ட பிரச்சினை போன்ற பல பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் விவகாரமாக்க திட்டமிட்டுருந்தன.

அதே போல, முதல் இரண்டு நாட்கள், கரும்பு பிரச்சினையால், இரு அவைகளும், நாள் முழுவதும் ஒத்தி வைக்கப் பட்டன. விவசாயிகளுக்கு எதிராக நிலை எடுத்திருப்பதால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், காங்கிரஸ் அரசு மேல் கடும் கோபம் கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவானது.

இந்த பிரச்சினையின் தீவிரம் உணர்ந்து, ராகுல் காந்தியே, கரும்பு விலை பற்றிய அவசர சட்டத்தை பிரதமர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பேசக் கூடிய நிலை உருவானது.



மறுநாள் மீண்டும் இப்பிரச்சினையை அவையில் கிளப்பலாம் என்று எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்த நிலையில், லிபரான் கமிஷனின் சில பகுதிகள் செய்தித் தாள்களில் வெளியாயின.

இந்த வெளியீடு, காங்கிரஸ் அரசு எதிர்பார்த்தது போலவே, எதிர்க்கட்சிகளை பிளவு படுத்தின. கரும்பு பிரச்சினை மற்றும் இதர பிரச்சினைகளில் ஒன்று பட்டு குரல் கொடுத்த எதிர்க்கட்சிகள், லிபரான் கமிஷன் அறிக்கையில் பிளவு பட்டுப் போயின.



பாராளுமன்றம் நடத்த ஒரு நிமிடத்திற்கு ஆகும் செலவு என்ன தெரியுமா ? ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 34,500/-. ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 20.7 லட்சம். ஒரு நாளைக்கு 1.55 கோடி. எப்படி நமது வரிப்பணம், விழழுக்கிறைத்த நீராக ஆகிறது கண்டீர்களா ?


சரி, விவாதிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்க, இப்படி அவையை ஒத்தி வைக்கக் கூடிய அளவுக்கு லிபரான் கமிஷன் அறிக்கை அவ்வளவு முக்கியமா ?
டிசம்பர் 6 அன்று பாப்ரி மசூதி இடிக்கப் பட்டது.



நீதிபதி லிபரான்


16 டிசம்பர் 1992ம் ஆண்டு, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப் பட வேண்டும் என்ற கால அளவோடு தொடங்கப் பட்ட லிபரான் கமிஷன், 42 கால நீட்டிப்பும், 17 ஆண்டுகள் காலத்தையும், இந்திய மக்களின் வரிப் பணம் ரூபாய் 8 கோடியையும் விழுங்கி விட்டு இன்று 1029 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. சராசரியாக லிபரான் அறிக்கையின் ஒரு பக்கம் ரூபாய்.77,745.38 ஆகிறது.



22 டிசம்பர் 1949ல் சில இந்து விஷமிகள், இரவோடு இரவாக, மசூதிக்குள் புகுந்து ராமர் சிலைகளை நிறுவினர். இந்தத் தகவலை அறிந்த அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு, உத்திரப்பிரதேச முதலமைச்சர் கோவிந்த வல்லப பந்தை அழைத்து, உடனடியாக அந்த சிலைகளை அகற்றுமாறு உத்தரவிட்டார்.


நேரு தனது பேரன் ராஜீவுடன்


முதல்வரும், உத்திரப்பிரதேச தலைமைச் செயலாளர் பகவான் சகாய் மற்றும் ஐஜி வி.என்.லாகிரி ஆகிய இருவருக்கும், பிரதமரின் உத்தரவை நிறைவேற்றுமாறு கூறினார். ஆனால், ஃபைசாபாத் மாவட்ட நீதிபதி கே.கே.நாயர், இந்துக்களின் எதிர்ப்பு பலமாக இருக்கும் என்ற காரணத்தைக் கூறி, நேருவின் உத்தரவை கே.கே.நாயர் நிறைவேற்றத் தவறினார்.




பாப்ரி மசூதி இடிக்கப் படும் முன்



1950ல் இப்பிரச்சினை நீதிமன்றத்திற்கு சென்று, நீதிமன்றம், இந்து, முஸ்லீம், இரு பிரிவினரும் மசூதிக்குள் செல்லக் கூடாது என்று தீர்ப்பளித்தது. 35 ஆண்டுகள் அமைதியாக இருந்த இந்தப் பிரச்சினை, 1984ல் விசுவ இந்து பரிஷத் மூலமாக மீண்டும் விசுவரூபம் எடுத்தது.

விசுவ இந்து பரிஷத் அமைப்பு, பூட்டுக்கள் திறக்கப் படவேண்டும், ராமரை வழிபட வேண்டும் என்று இயக்கம் எடுத்தது. 1 பிப்ரவரி 1986 அன்று, ஃபைசாபாத் அமர்வு நீதிமன்றம் பூட்டுக்களை திறந்து இந்துக்கள் வழிபட அனுமதி அளித்தது. இதற்குப் பிறகும், இந்தப் பிரச்சினை பெரிய அளவில் வடிவம் பெறவில்லை.



9 நவம்பர் 1989ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி சர்ச்சை இல்லாத இடத்தில் “பூமி பூஜை“ நடத்த அனுமதி அளித்த போதுதான், ஒரு பெரும் கலவரத்துக்கான விதை ஊன்றப்பட்டது.


சோனியாவுடன் ராஜீவ்


போபர்ஸ் ஊழலில் சிக்கி, தன் நம்பகத்தன்மையை இழந்த ராஜீவ் காந்தி, பெரும்பான்மை இந்துக்களின் ஓட்டை பெற வேண்டும் என்ற குறுகிய எண்ணத்துடன், கொடுத்த அனுமதி நாட்டை மத ரீதியில் பிளவு படுத்தவும், இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள், அந்நியமாக உணர்வதற்குமான ஆரம்பப் புள்ளியாக உருவானது.

25 செப்டம்பர் 1990ல் பிரதமர் ஆகும் கனவுடன் மீண்டும் ஒரு இந்துப் புரட்சியை உருவாக்குவேன் என்ற சபதத்துடன் தேர் போல அலங்கரிக்கப் பட்ட ஒரு “டொயோட்டா“ வாகனத்தில் தனது ரத யாத்திரையை தொடங்கினார் அத்வானி. அத்வானியின் ரத யாத்திரை பீகார் மாநிலம் சமஸ்தீப்பூர் மாவட்டத்திற்குள் நுழைகையில் தடை செய்யப் பட்டது.



இந்த ரத யாத்திரையை தடை செய்தால் தனது பதவி பறிபோகும் என்று தெரிந்தும், பிஜேபி யின் ஆதரவில் ஆட்சியில் இருந்த வி.பி.சிங் என்ற மாமனிதர், அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தினார். எதிர்பார்த்தது போலவே, பிஜேபி தனது ஆதரவை வாபஸ் வாங்க, வி.பி.சிங்கின் ஆட்சி கவிழ்ந்தது.



அதற்குப் பிறகு நடந்த ராஜீவ் மரணத்திற்குப் பின் ஏற்பட்ட அனுதாப அலையினால் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்து, நரசிம்ம ராவ் பிரதமாரானார். அதற்கு பிறகு மதவாதத்தைத் தூண்டி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் செயல்பட்ட அத்வானி உள்ளிட்ட சங் பரிவார் குழுவினரால், கர சேவைக்கு நாள் குறிக்கப் பட்டது.

இந்தியா முழுவதும் இருந்து சங் பரிவார் அமைப்பினர் திரட்டப் பட்டனர். ரயில்களிலும், பஸ்களிலும் இந்து வெறியர்கள் அயோத்தியாவை நோக்கித் திரண்டு வந்த போதிலும், “மவுனச் சாமியார்“ நரசிம்ம ராவ், வேடிக்கை பார்த்தபடி, அமைதியாக இருந்தார். பிஜேபி ஆதரவில் அரசு நடத்திக் கொண்டு பதவி போனாலும் பரவாயில்லை, நாடு மதவாதிகளால் துண்டாடப் படுவதை அனுமதிக்க மாட்டேன் என்று விபி.சிங் முடிவெடுத்தது போலல்லாவிட்டாலும், பிஜேபி யின் தயவு தேவைப்படாத நிலையிலும், லஞ்சம் கொடுத்து பல எம்.பிக்களை விலைக்கு வாங்கி, தனி மெஜாரிட்டி பெற்று விட்ட நரசிம்ம ராவ், இஸ்லாமியர்களின் இதயத்தில் தீராத காயத்தை ஏற்படுத்திய பாப்ரி மசூதி இடிப்புக்கு அமைதியாக இருந்து தனது சம்மதத்தை தெரிவித்தார்.



மார்க்சிஸ்ட் கட்சியின் “பீப்பிள்ஸ் டெமாக்ரசி“ வார இதழில் கட்டுரை எழுதிய மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதி பாசு, பிஜேபி யின் நடவடிக்கைகளை பார்த்தால், மசூதிக்கு ஆபத்து ஏற்படும் போல தோன்றுகிறது, ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுங்கள் என்று கேட்டதற்கு இணங்க 23 நவம்பர் 1992ல் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப் பட்டது என்றும், அக்கூட்டத்தில், மசூதியை காப்பாற்றுவதற்காக அரசியல் சட்டப் பிரிவு 356ஐ பயன்படுத்தி கல்யாண் சிங் அரசை டிஸ்மிஸ் செய்யுங்கள் என்ற கோரிக்கை உட்பட நரசிம்மராவிடம் எப்பாடு பட்டாவது மசூதியை காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கை வைக்கப் பட்டது. ஆனால், நரசிம்ம ராவ், அமைதியாக சட்டத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப் படும் என்று உறுதி அளித்தார்.


மேலும், ஜோதி பாசு, அந்தக் கட்டுரையில் 1992 டிசம்பர் 4ம் தேதி, நரசிம்மராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கரசேவகர்கள், அயோத்தியாவை நோக்கித் திரண்டு கொண்டிருக்கிறார்கள், உடனே நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டதற்கு, காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி சூழ்நிலையை ஆராயும் என்று பதிலுறுத்ததாக தெரிவிக்கிறார்.
ஆனால் 1992 டிசம்பர் 6 அன்று “கரசேவை“ என்ற பெயரால், மசூதி இடித்துத் தள்ளப் பட்டது. உலக அரங்கில் இந்தியா தீராத அவப்பெயரை தேடிக் கொண்டது. இது என் வாழ்விலேயே மிகவும் வருத்தத்திற்குரிய நாள் என்று வாஜ்பாய் நீலிக் கண்ணீர் வடித்தார்.



மசூதி இடிப்பிற்குப் பிறகு நரசிம்மராவ் “கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்“ என்று, உத்திரப் பிரதேச அரசாங்கம் உள்ளிட்ட 4 மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தார்.



கரசேவையை நடத்திய அத்வானி உள்ளிட்ட சங் பரிவார் அமைப்பினரை விட, அவர்களை சர்ச்சைக்குரிய இடத்தில் கரசேவை நடத்த அனுமதி அளித்து, மசூதி இடிக்கப் படும் வரை வேடிக்கைப் பார்த்த நரசிம்மராவ் பெருங்குற்றவாளி இல்லையா ? அமைதியாக இருந்த ஒரு பிரச்சியையை, “பூமி பூஜை“ நடத்த அனுமதி அளித்ததன் மூலம், மத வெறியை தூண்ட வழி கோலிய ராஜீவ் காந்தி பெருங்குற்றவாளி இல்லையா ? இந்த இருவரைப் பற்றி, லிபரான் கமிஷன் அறிக்கையில் எந்தக் குற்றச் சாட்டும் இல்லை என்பதுதான் விசித்திரத்திலும் விசித்திரம்.




“போலி மிதவாதிகள்“ என அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் வாஜ்பாயை குறிப்பிடும் லிபரான், ஒரு ஜனநாயகத்தில் இது போன்றதொரு துரோகமும் குற்றமும் மன்னிக்க முடியாதது அதனால், இந்தப் போலி மிதவாதிகளின் குற்றங்களுக்காக அவர்களை கண்டிப்பதில், இந்தக் கமிஷனுக்கு எந்த தயக்கமும் இல்லை“ என்று கூறுகிறார்.


வாஜ்பாய், அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி போலி மிதவாதிகள் என்றால், இவர்களின் அக்கிரமங்களுக்கு அனுமதி கொடுத்து அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நரசிம்மராவ் தீவிரவாதி அன்றோ ? இது லிபரான் கண்ணுக்கு எப்படி தெரியாமல் போனது ?




மக்கள் வரிப்பணம் 8 கோடி ரூபாயை முழுங்கி ஏப்பம் விட்டு விட்டு, நீதிபதி லிபரான் கொடுத்திருக்கும் இந்த அறிக்கை வைக்கப் பட வேண்டிய இடம் பாராளுமன்றம் அல்ல.




இதுதான்


தமிழில் “கல்லைப் போடு இல்லைன்னா கமிஷனைப் போடு“ என்று ஒரு வழக்கு உண்டு. விசாரணை கமிஷன்கள் என்றாலே, விஷயத்தை ஆறப் போட்டு, மூடி மறைக்கக்தான் என்பதை பல விசாரணைக் கமிஷன்கள் தெளிவாக்கியுள்ளன.
தமிழகத்தில் சமீபத்தில் போடப்பட்டுள்ள கமிஷன்களைப் பார்த்தால், இவ்விஷயம் தெளிவாக விளங்கும்.

1999ம் ஆண்டு, மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் 17 பேர் காவல்துறையால் படுகொலை செய்யப் பட்டதை விசாரிக்க போடப்பட்ட ராமன் கமிஷன், காவல்துறை மீது எந்த குறையும் இல்லை என்று அறிக்கை சமர்ப்பித்தது. சம்பவத்தில் தொடர்புடைய ஒரு காவல்துறை அதிகாரி கூட தண்டிக்கப் படவில்லை. இது தொடர்பாக எடுக்கப் பட்ட “ஒரு நதியின் மரணம்“ என்ற ஆவணப் படம் கூட திரையிட அனுமதிக்கவில்லை கருணாநிதி. இந்த விசாரணை கமிஷனின் நீதிபதி, ராமன் மேலும் பல விசாரணைக் கமிஷன்களுக்கு தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

2001ல் சட்டக் கல்லூரி விடுதிக்குள் காவல்துறை புகுந்து தாக்கியதை விசாரிக்க பக்தவச்சலம் கமிஷன் அமைக்கப் பட்டது இந்தக் கமிஷனும், காவல்துறை அதிகாரிகள் மீது தவறில்லை என்று அறிக்கை அளித்தது.

அடுத்து, கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப் பட்டதை விசாரிக்க ராமன் கமிஷன் அமைக்கப் பட்டது. இதுவும் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

கருணாநிதியின் நள்ளிரவு கைதை கண்டித்து, ஆகஸ்ட் 2001ல் நடந்த பேரணியில் ஐந்து பேர் இறந்ததையும், வன்முறை சம்பவங்களையும் விசாரிக்க பக்தவச்சலம் கமிஷன் அமைக்கப் பட்டது. இந்த கமிஷனும், காவல்துறை மீது எந்தத் தவறும் இல்லையென்றே அறிக்கை அளித்தது.

அடுத்து 1,70,241 அரசு ஊழியர்கள் “டிஸ்மிஸ்“ செய்யப் பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவத்தை மூன்று ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளான கே.சம்பத், பி.தங்கவேல் மற்றும் மலை சுப்ரமணியன் ஆகியோர், விசாரித்தனர். இந்த மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகளும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை குளிர்விக்க வேண்டும் என்று, போட்டி போட்டுக் கொண்டு, ஆம்னி பஸ்களுக்கு ஆள் பிடிக்க பேருந்து நிலையங்களில் “சார் திருச்சியா ? மதுரையா ? “ என்று கூவிக்கொண்டு அலையும் ப்ரோக்கர்களை விட கேவலமாக, எப்படி தங்கள் பதவிக் காலத்தை நீட்டிக்க முடியும் என்று தங்களுக்குள் அடித்துக் கொண்ட கேவலமான சம்பவங்களும் நடந்தது.

கருணாநிதியின் ஆட்சியில் தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பாக அமைக்கப் பட்ட “சண்முகம்“ கமிஷன் எப்படி நடந்து கொண்டது என்று சவுக்கில் ஏற்கனவே எழுதப் பட்டுள்ளது.



அடுத்த கமிஷன், மீண்டும் சண்முகம் தலைமையிலேயே, சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக நடைபெற்றது. இந்தக் கமிஷன், உயர் அதிகாரிகளை குற்றம் சுமத்தாமல், கீழ்மட்ட அதிகாரிகளான டிஎஸ்பியையும், இன்ஸ்பெக்டரையும் குற்றம் சுமத்தி, அரசுக்கு விசுவாசமாக நடந்து கொண்டது.

இந்திய அளவில் எடுத்துக் கொண்டால், இன்னும் மோசம். 1984ம் ஆண்டு, சீக்கியர்கள் படுகொலையை பற்றி விசாரிக்க அமைக்கப் பட்ட 10 விசாரணை கமிஷன்களும் பாதிக்கப் பட்ட மக்களுக்கோ உருப்படியாக எதுவுமே செய்யவில்லை. இது பற்றியும் சவுக்கில் ஏற்கனவே எழுதப் பட்டுள்ளது.

1985 ம்ஆண்டு ஏர் இந்தியா விமானம் வெடித்தது பற்றிய சதித் திட்டத்தை விசாரிக்க அமைக்கப் பட்ட பி.என்.க்ரிபால் கமிஷன், உலகின் பல நாடுகளை சுற்றிப் பார்த்து விட்டு, ஒருவரையும் தண்டிக்க இயலாத ஒரு அறிக்கையை அளித்தது.

பீகாரில், ரண்வீர் சேனா மற்றும் அரசியல் வாதிகளைப் பற்றிய தொடர்புகளை விசாரிக்க அமைக்கப் பட்ட அமீர் தாஸ் கமிஷன், 8 ஆண்டுகள் விசாரணை நடத்திய பின்னும் அறிக்கை சமர்ப்பிக்கப் படாததால் மூடப்பட்டது.

1989 பகல்பூர் கலவரத்தை விசாரிக்க சின்ஹா மற்றும் சம்சூல் கமிஷன் அமைக்கப் பட்டது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு 1995ல் இக்கமிஷன் தன் அறிக்கையை சமர்ப்பித்தது. அடுத்து வந்த அரசு இதே விஷயத்தை மீண்டும் விசாரிக்க நீதிபதி என்.என்.சிங் தலைமையில் ஒரு கமிஷனை அமைத்தது. இந்தக் கமிஷன் என்ன ஆனது என்பது ஒரு மர்மம்.



2002 குஜராத் கலவரத்தை விசாரிக்க அமைக்கப் பட்ட “நானாவதி கமிஷன்“ குஜராத் அரசு மீது எந்தத் தவறும் இல்லை என்று நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியது.



“டெகல்கா“ இதழ் அம்பலப் படுத்திய ஆயுத பேர ஊழலை விசாரிக்க அமைக்கப் பட்டது “பூகான் கமிஷன்“. இதன் நீதிபதி பூகான், ராணுவ தளவாடங்கள் வாங்கிய ஊழலைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டசும் குற்றச் சாட்டுக்கு ஆளாகி, இக்கமிஷனின் விசாரணை வரம்பில் வருபவர்தான். நீதிபதி பூகான், தனது குடும்பத்தினருடன் ஊரைச் சுற்றிப் பார்க்க தனக்கு தகுதியில்லாத வரம்பை மீறி ராணுவ விமானத்தில் ஊரைச் சுற்றிப் பார்த்தார்.

ராஜீவ் மரணத்தில் உள்ள சதித் திட்டத்தை விசாரிக்க அமைக்கப் பட்ட ஜெயின் கமிஷன், பல ஆண்டுகள் விசாரித்தபின், இன்னொரு ஏஜென்சியை நியமித்து இன்னும் விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை அளித்தது.

அதன்படி, சிபிஐல் இன்னும் 19 ஆண்டுகள் கழித்து ஜெயின் கமிஷன் பரிந்துரையின் படி MDMA (Multi Disciplinary Monitoring Agency) என்ற அமைப்பை ஏற்படுத்தி இன்னும் “விசாரித்து ??????“ வருகிறார்கள். ராகுல் காந்தியின் மகன் இந்தியப் பிரதமராக பதவி ஏற்கையிலாவது இந்த MDMA விசாரணை முடியுமா என்பது தெரியவில்லை.




அனைவரும் அறிந்த சர்காரியா கமிஷனைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. “விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவர் கருணாநிதி“ என்று அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்ட பின்பும், கருணாநிதி இன்று முதல்வராகத்தானே உள்ளார்.


இப்போது அறிக்கை சமர்ப்பித்திருக்கும் லிபரான் கமிஷன் அறிக்கையின் லட்சணத்தைப் பற்றி விரிவாக விவாதித்து விட்டோம்.


விசாரணை கமிஷன்களின் அதிகாரம் மற்றும் உபயோகம் பற்றி 1987 ஃபேர்பேக்ஸ் நிறுவனம் பற்றி விசாரிக்க அமைக்கப் பட்ட ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நடராஜன்-தக்கர் தலைமையிலான கமிஷன் தனது அறிக்கையில் கூறியுள்ளது. “விசாரணை கமிஷன் சட்டம் 1956 அதிகாரமில்லாத சட்டம், இதை வைத்து ஒருவரை சாட்சி சொல்ல வேண்டும் என்று கட்டாயப் படுத்தக் கூட வழியில்லை“ என்று கூறியுள்ளனர்.


உண்மையை வெளிக் கொணர வேண்டும் என்று விசாரணை கமிஷன் அமைத்தால் தானே, கமிஷனுக்கு அதிகாரம் அளிப்பார்கள். உண்மையை புதைக்க வேண்டும் என்பதற்காகவே விசாரணை கமிஷன் அமைத்தால் கமிஷனுக்கு என்ன அதிகாரம் வழங்கப் படும் ?


நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பின், ஓய்வூதியத்தை வைத்து, நிம்மதியாக வாழ்க்கையை ஓட்ட மறுத்து, மீண்டும் அதிகார வெளி கொண்டு,

“திருவிழா அன்று கோயில் வாசலில் நிற்கும் பிச்சைக் காரர் கூட்டத்தை“

போல, ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருப்பதால் தான் அரசியல்வாதிகள், “விசாரணை கமிஷன்“ என்ற கல்லை கட்டி, உண்மையை கடலில் போடுகிறார்கள்.


1956ம் ஆண்டு விசாரணை கமிஷன் சட்டத்தை குழி தோண்டிப் புதைக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. இனியும் மக்கள் வரிப் பணத்தை ஓய்வு பெற்ற நீதிபதிகளின் பொழுது போக்குக்கு செலவு செய்யாமல், இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

சவுக்கு



1 comment:

  1. /////////////சரி, விவாதிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்க, இப்படி அவையை ஒத்தி வைக்கக் கூடிய அளவுக்கு லிபரான் கமிஷன் அறிக்கை அவ்வளவு முக்கியமா ?
    ///////////////////////////////////////////////////உண்மையில் மதசார்பற்ற நாடு என்று பெருமை பேசும் அயோக்கியர்கள் பள்ளிவாசலை முஸ்லிம்களிடம் ஒப்படைத்ஹு விட்டு அப்புறம் வெட்டி பாராளுமன்றத்தில் இஷ்டம் போல் விவாதிக்கட்டும்.இந்த அறிக்கையை வெளியிட கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி கொண்டிருந்தனர் இந்த நாட்டில் இன்னும் மாவோ இச்டுகளை போல் ஆயுதத்தை தூக்காமல் அரசியல்வாதிகளையும் நீதி மன்றத்தையும் நம்பி கொண்டு இருக்கும் முஸ்லிம் அமைப்புகள்.இப்போது மூட்டை அவிழ்ந்து விட்டது உள்ளே இருப்பது என்ன என்று தெரிந்து விட்டது. பாபர் பள்ளிவாசல் நூறு நாட்களுக்குள் கட்டி தரப்படும் என்று சொன்ன நரசிம்ம ராவின் வாக்குறுதி என்ன ஆச்சு. நாட்டு மக்களுக்கு குற்றவாளிகள் யார் யார் என்று தெளிவாக தெரியும் .அனால் அவர்கள் தண்டிக்க படுவதை விட பள்ளி வாசல் முஸ்லிம்களிடம் ஒப்படைக்க பட வேண்டும் என்பதுதான் முதல் கோரிக்கை.அதை நிறைவேற்ற பாரளுமன்றமும் உச்ச நீதி மன்றமும் தயாரா. iniayavan

    ReplyDelete