Monday, May 4, 2009




உடன்பிறப்புக்கு கடிதம்

உடன்பிறப்பே, மருத்துவமனையில் இருந்ததால் சில நாட்களாக கடிதம் எழுதவில்லை. இருப்பினும் ஓய்வெடுக்க வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி சண்முகநாதனின் துணையோடு கடிதம் எழுதுகிறேன். கழக அரசு சொல்வதை செய்யும். செய்வதைத் தான் சொல்லும். இதை அறியாத எத்தர்கள் சிலர் கழக அரசுக்கெதிரான விஷமத்தனமான பிரச்சாரத்தில் இறங்கியிருப்பதை நீ அறிவாய்.
அவர்களுக்கு பதில் கூறும் விதமாகத்தான் இந்தக் கடிதம். பல நாட்களாய் நானே கேள்வி கேட்டு நானே பதில் கூறி அறிக்கைகள் வெளிவந்திருப்பதை நீ அறிவாய். எனக்கு வசதியான கேள்விகளை நானே கேட்டுக் கொண்டு பதில் அளிப்பதால் மக்களின் மனத்தில் கழக ஆட்சி பற்றிய சந்தேகங்கள் எள்முனையளவும் இல்லாமல் செய்வதுதான் அதன் நோக்கம். கழகத்தையே குடும்பமாக நினைத்து வாழவேண்டும் என்று அறிஞர் அண்ணா சொன்னதற்கேற்ப த்தானே நான் நடந்து வருகிறேன். கழகத்தை குடும்பமாக நினைப்பது போலவே குடும்பத்தை கழகமாக நினைத்து வழிநடத்தி வருவது தவறா என்பதை வரலாறுதான் தீர்மானிக்கும். அண்ணா விட்டுச் சென்ற வழித்தடத்தில் அவர் இருந்தால் அவரே மலைக்கும்படி இன்று கழகத்தை வளர்த்திருக்கிறேனா இல்லையா ? அந்த அம்மையார் போல் இன்னொருவர் குடும்பத்தின் பெயரிலா சொத்து வாங்கிக் குவிக்கிறேன் ? என் குடும்பம் நன்றாக இருந்தால்தானே நாளை என்னை விடச் சிறப்பாக கழகத்தை வழிநடத்த முடியும் ? அதனால்தோன என் குடும்பத்தினர் சொத்து வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பதை நானே ஆசி வழங்கி அனுமதித்து வருகிறேன். இது தெரியாத எத்தர்கள் பொறாமையால் என்மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள். அண்ணா பண்படுத்திய இதயம் இது. இதை விட என்ன கேவலம் வந்தாலும் ஆட்சியை மட்டும் இழக்க மாட்டேன். சோனியா காந்தியிடம் காப்பாற்றுங்கள் தாயே என்று என் ஆட்சியை காப்பாற்ற கெஞ்சவில்லையா ? இதைவிட என்ன கேவலம் வேண்டும் ?
புதிதாக பஸ் கட்டணத்தை குறைத்து விட்டேன் என்று கூப்பாடு போடுகின்றனர் சிலர் ! பஸ் கட்டணத்தை ஏற்றும்போது யாருக்காவது சொன்னேனா ? அதேபோல் குறைக்கும்போதும் யாருக்கும் சொல்லாமல் குறைத்து விட்டேன். இது தவறென்று இங்கே மாநிலத்தில் என்னிடமே சம்பளம் வாங்கிக் கொண்டு என்னை இது வரை வந்து பார்க்காத ஒரு தேர்தல் அதிகாரி இருக்கிறாரே அவரும் அந்த அம்மையாருடன் சேர்ந்து கொண்டு புலம்புகிறார். பஸ் கட்டணத்தை குறைத்து விட்டேன் என்று புலம்பும் யாரும் பஸ்சில் போவது இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் உடன்பிறப்பே ! பஸ் கட்டணம் அதிகம் இருப்பதால் அதிக பணத்தை எடுத்துச் சென்று பணிமனையில் கட்ட சிரமமாக இருக்கிறது என்று நடத்துனர்களாய் பணிபுரியும் தொழிலாளத் தோழர்கள் என்னிடம் வைத்த கோரிக்கையை ஏற்றுத் தான் இவ்வாறு கட்டணம் குறைக்கப் பட்டது. பஸ் கட்டண குறைப்பை கண்டிக்கும் அனைவரும் தொழிலாளர் விரோதிகள் என்பதை மறந்து விடாதே உடன்பிறப்பே !
மருத்துவர்கள் கூட அந்த அம்மையாரோடு சேர்ந்து கொண்டு என்னை ஓய்வெடுக்கச் சொல்கிறார்கள். நான் ஓய்வெடுத்தால் கழகம் மற்றும் குடும்பத்தின் நலனை யார் கவனிப்பது. பித்தர்கள் புலம்பலை புறந்தள்ளி விட்டு கழகக் கண்மணிகளாம் அழகிரி, தயாநிதி ஆகியோரின் வெற்றிக்கு பாடுபடு உடன்பிறப்பே ! புறநானூறு கண்ட புலியே ! வாக்குச் சாவடி உனக்கு எம்மாத்திரம் ! வாக்குச் சாவடியை கைப்பற்ற உடனே களம் காண வா ! ஓடோடி வா ! என் குடும்பத்தின் சரித்திரத்தில் உனக்கு என்றென்றும் இடம் உண்டு !

1 comment: