Friday, May 22, 2009

வடக்கு வழங்கவில்லை குடும்பம் செழிக்கவில்லை


உடன்பிறப்பே,

பம்பரமாய்ச் சுற்றி, நாடாளுமன்ற தேர்தலில் நீ ஈட்டித்தந்த வெற்றி தெவிட்டாத தெள்ளமுதாய்ச் நாவில் சுவைக்கும் இவ்வேளையில், அச்சுவையிலே வேம்பைக் கலந்தது போல் கழகக் கண்மணிகளாம் அழகிரி, தயாநிதி, கனிமொழி, பாலு, ராசா ஆகியோருக்கு கேட்ட துறைகளில் அமைச்சர் பதவி அளிக்காமல், வடக்கு வஞ்சகம் செய்துள்ளதை நீ அறிவாயா ?

கப்பல் போக்குவரத்து, தரைவழிப் போக்குவரத்து, தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், ரயில்வே ஆகிய துறைகளைக் கேட்டால், சிறுதொழில், ரசாயனம், ஜவுளி ஆகிய துறைகளை அளிப்போம் என்று ஒரு காலத்திலே எனக்கு சொக்கத் தங்கமாய்த் தெரிந்த அம்மையார் கூறுகிறார்.

சிறுதொழிலையும், ஜவுளியையும், வைத்துக் கொண்டு, பனகல் பூங்காவில் தெருமுனைக் கூட்டம் நடத்தும் செலவுக்குக் கூடத் தேறாது என்பது நான் அறியாததா ?

அறிஞர் அண்ணா அன்றே கூறினார். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று. வடநாட்டார், தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுகிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

கண்ணீரிலும் செந்நீரிலும் தோய்த்தெடுத்த கரணைகளை இணைத் திட்டதும் வனப்பும் வலிவும் மிகுந்ததுமான திராவிட இயக்கமெனும் இந்த அணிகலனைத் தான் அய்யா பெரியாரும், அறிஞர் பெருமான் அண்ணாவும் நம்மிடத்திலே ஒப்படைத்து; நன்கு காத்திடுவோம் என்ற நம்பிக்கையுடன் நம்மை வாழ்த்திச் சென்றுள்ளார்கள்.

அந்த கழகத்தை கட்டிக் காத்திட, அஞ்சா நெஞ்சன் அழகிரிக்கு மந்திரி பதவி வழங்க வேண்டாமா ?

கலங்கரை விளக்காம், நாடார் குலச் செல்வி கண்மணி கனிமொழிக்கு மந்திரி பதவி வழங்க வேண்டாமா ?

பரம ஏழை பத்தரை மாற்றுத் தங்கம் தயாநிதிக்கு பதவி வேண்டாமா ?

சேதுக் கால்வாய்த் திட்டத்தில், பல கோடிகளை அள்ளித் தந்த தேவரினச் சிங்கம் பாலுவுக்கு பதவி வேண்டாமா ?

என் உயிராய் இருந்து என்னை இயக்கிக் கொண்டிருக்கும் கோடானு கோடி தலித் மக்களின் ஒரே பிரதிநிதி, இந்தியாவின் மிகப் பெரிய ஊழலுக்குச் சொந்தக்காரன், அலைக்கற்றை ஆ.ராசாவுக்கு பதவி வேண்டாமா ?

என் செய்வது? உயிருக்கே மிக மிக ஆபத்து என்ற இரண்டு கண்டங்களில் இருந்து; நான் பிழைத்து எழுந்திருப்பதே ஓயாது உழைத்து உழைத்து - ஒரு பெரும் வெற்றியைத் தேடித் தந்துள்ள உன் போன்ற - உடன்பிறப்புகளின் - உற்ற தோழமைக் கட்சி முன்னோடிகளின் - திருக்கரங்கள் பற்றி; ""நன்றி! நன்றி!’’ என நாளெல்லாம் - என் நாத் தழுதழுக்க நன்றிகளைக் குவிக்கத்தானே!

என் குடும்பத்தின் வளத்தை பெருக்கத் தானே ?

" உறவுக்குக் கை கொடுப்போம்; பதவி கொடுப்போம்,

பதவி வேண்டுமென்ற அந்த உரிமைக்குக் குரல் கொடுப்போம்"

என்பது நாம் மறந்து விடாமல் எப்போதும் இருக்கின்ற இலட்சிய முழக்கமன்றோ!

நமது லட்சியத்துக்கு எதிராக உறவுகளுக்கு கேட்கும் பதவி இல்லை என்ற எத்தர்களின் எக்காளத்தைப் பார்த்து, நீ மனம் கொதிப்பாய் என்பதை நான் அறியாமல் இல்லை.

அந்த அம்மையாரைப் பார்த்து, நான் புகழாத புகழ்ச்சியா ? அம்மா......... தாயே........... என்று கெஞ்சவில்லையா ?

அல்லது நான் அந்த அம்மையாருக்கு அடிமை என்பதை வெளிப்படையாகச் சொல்லவில்லையா ?



இதை விட இன்னும் நான் என்னதான் செய்வது ?

கொஞ்சமாக இருந்த முதுகெலும்பு அடிமையாக இருப்பதற்கு இடையூறாக இருந்ததால், மருத்துவர்கள் உதவியுடன் அறுவை சிகிச்சை மூலம் அதையும் அகற்றி விட்டு முழு நேர அடிமையாக மாறிய பின்னும் அமைச்சர் பதவி அளிக்கவில்லை என்றால் காங்கிரசும் சோனியாவும் அரக்க இதயம் படைத்தவர்கள் என்பது தெள்ளத் தெளிவாகவில்லையா ?

மீண்டும் வலியுறுத்திக் கேட்டால், மாநிலத்தில் ஆதரவை வாபஸ் வாங்கி என்னை நடுத்தெருவில் நிறுத்தி விடுவார்கள். பதவி போனால், அறிக்கை அரசியும் சொக்கத் தங்கமும் இணைந்து விடுவார்கள் என்பதும், இணைந்தால் இதயம் கனக்கும், கண்கள் வலிக்கும் என்பதை பல முறை நான் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.

இன்று செயற்குழு கூடுகிறது. இச்செயற்குழுவில், வரலாறு காணாத முக்கிய முடிவு ஒன்றைத் தீர்மானமாக வடித்தெடுக்க வேண்டும்.

பதவி தொடர்பாக முடிவெடுப்பதற்கு எனக்கு மட்டுமே அதிகாரம் என்ற சிறப்பு வாய்ந்த தீர்மானமே அது ! அத்தீர்மானம் நிறைவேறிய உடனே மீண்டும் திருவோடு ஏந்தி டெல்லி சென்று தமிழகத்தின் (குடும்பத்தின்) உரிமையை நிறைவேற்றாமல் இருந்தால் எனக்கு ஓய்வேது ? அண்ணாவின் தம்பி என்ற பெயரேது ?

அன்புடன்

மு.க

/ஒப்பாரி/

No comments:

Post a Comment